கருடர்களின் மத்தியில் கண்ணன்!
கண்ணனை கருடர்களின் மத்தியில் விட்டுவிட்டு வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. புது இடம், கண்ணன் எப்படி இருக்கானோ? போய்ப் பார்ப்போமா?? அட?? இது கருடர்கள் வசிக்கும் குடியிருப்பு போல் இருக்கே?? நிறையக் குடிசைகள், ஒரு சில கட்டிடங்கள், பெரும்பாலானவை புல்லால் வேயப்பட்டவையே. என்ன குளுமை! என்ன குளுமை! அதோ, தனித்துத் தெரிகிறதே, ஒரு பர்ணசாலை போல்! அது யாரோட குடிசையோ? தெரியலை. சுற்றிலும் உள்ள குடிசைகளில் இருந்து கருடச் சிறுவர்கள், சிறுமிகள் வெளியே வந்து விளையாடிக்கொண்டும், ஆடிப்பாடிக்கொண்டும் இருக்கின்றனர். அதுவும் கண்ணனும், பலராமனும் வந்திருப்பதை வேறு விசேஷமாய்க் கொண்டாடுகிறார்கள் போல் தெரிகிறதே அந்த ஆட்ட, பாட்டத்தின் வேகத்தில். ஆனால், ஆனால், அதோ அந்த வீட்டில் இருந்து யாருமே வரவில்லை போல் இருக்கே? ம்ம்ம்?? கிட்டே போய்ப் பார்ப்போமா? உள்ளே யாரோ இருக்காங்க போல் இருக்கே? ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோமானால் குடிசைக்குள்ளே ஒரு மூலையில் சுருட்டிக் கொண்டு படுத்திருக்கும் ஒரு உருவம் தெரிகிறது.
வெளியே உள்ள கலகலப்பு அதைக் கவரவில்லையோ? உள்ளே போய்ப் பார்ப்போமா? உள்ளே, வைநதேயன் என்றழைக்கப் படும் அந்தக் கருடச் சிறுவன் கருடத் தலைவனின் மகன். அட? தலைவனின் மகனை ஏன் மற்றவர்கள் தங்களோடு சேர்த்துக்கொள்ளவில்லை?? ம்ஹும், அவனால் எழுந்து வரமுடியாது. எதற்கும் பிறர் உதவி வேண்டும் அவனுக்கு. இத்தனைக்கும் அவன் தகப்பனுக்கு இவன் மூத்த மகன் ஆவான். அவன் தாய் விநதையின் பெயரில் இருந்து அவனுக்கு விநதேயன், வைநதேயன் என்ற பெயர் ஏற்பட்டது. அதோ தெரிகிறதே குடிசையின் ஒரு பக்கமாய்ச் சின்னச் சாளரம் அதன் வழியாக வெளியே எட்டிப் பார்க்கிறான் விநதேயன். கொண்டாட்டம் நடக்கிறதே! பெருமூச்சு விட்டான். கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்த்து. ஐந்து வருடம் முன் வரையிலும்……….
ஒரு அழகான, வேகமான கருடச் சிறுவனாக இருந்தான் விநதேயன். அவனின் ஓட்டத்தையும், ஆட்டத்தையும், பாட்டத்தையும் பார்த்து வியக்காதவர் இல்லை. தலைவனின் மகன் என்ற கர்வம் இல்லாமல் விநதேயன் அனைவரிடமும் அன்பாயும் பழகினான். அவனைக் கண்டாலே அனைவருக்கும் நெஞ்சம் கொள்ளாப் பெருமிதம். அனைவரின் முகங்களும் மலரும். ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்கு அநாயாசமாய்த் தாண்டுவான். அவன் பொழுதுபோக்குவதே மலைக்கு மலை தாண்டுவதில் தான். அதில் அவனுக்கு நிகரில்லை என்ற பெயர் பெற்றான். ஒரு நாள்…. ஆஹா, அந்த நாள் தான் அவன் வாழ்க்கையின் கொடிய நாளாகவும் அமைந்துவிட்டது. ஒரு முறை அப்படி ஒரு சிகரத்திலிருந்து பக்கத்துச் சிகரத்திற்குத் தாண்டும்போது மிகவும் மோசமாய்ப் பாதிக்கப் பட்டான் விநதேயன். அதில் படுத்தவன் தான். இன்னும் அவனால் எழுந்து நடமாட முடியவில்லை.
கருட இனத்து மக்கள் மொத்தமும் அவன் பேரில் மிகுந்த நம்பிக்கையும், பெருமையும் கொண்டிருந்தனர். அனைத்தும் வீணாகப்போயிற்று. இப்போது உதவி இல்லாமல் அவனால் எங்கேயும் செல்லமுடியாது. எதிலும் கலந்து கொள்ளவும் முடியாது. அவனைக் கூப்பிடுபவர்களும் இல்லை இப்போது. தனியனாகி விட்டான். ஆம் அவன் யாருக்கும் தேவை இல்லை இனிமேல். கண்களில் இருந்து பெருக்கெடுத்தோடியது கண்ணீர். அப்போது பாதிக்கப்பட்ட அவன் கால்களுக்கு வைத்தியம் செய்தும் முன்னேற்றமும் இல்லை. நாளாக நாளாகப் படுக்கையிலேயே கிடந்தான் விநதேயன். தேவைப்படும்போது மட்டுமே பிறர் உதவியோடு தன் காரியங்களை முடித்துக்கொண்டான்.
அந்தக் காட்டின் ஒவ்வொரு மூலை,முடுக்கும், ஒவ்வொரு மலைச்சிகரமும், அதற்குச் செல்லும் வழியும் செல்லும் வழியின் மேடு, பள்ளங்கள் மட்டுமின்றி அங்கே வாழும் மிருகங்களையும், பறவைகளையும் சிறு பக்ஷிகளையும் அவன் அறிவான். இது தான் அவன் வாழ்க்கை. ஆனால் ஒரு காலத்தில் இப்படி இருந்த அவன் வாழ்க்கை இன்று பலரும் பார்த்துப் பரிதாபப் படும்படி ஆயிற்றே? அவன் தந்தை கூட அவனைக் கேவலமாய்ப் பார்ப்பதாய்த் தோன்றியது அவனுக்கு. இந்தக் காட்டில் அலைந்து திரியாத எந்தக் கருடனும், அவன் தந்தை அளவில் இறைவனால் சபிக்கப் பட்டவர்களே. அப்படி எனில் அவன் தந்தையின் மூத்தமகனான தான் இறைவனால் சபிக்கப் பட்டவனா? தாங்க முடியவில்லை கருடன் விநதேயனுக்கு. அவனை ஒரு மாபெரும் தலைவனாக எண்ணி இருந்த அவன் உடன் பிறந்த சகோதரர்கள் கூட இப்போது அவனை வெறுக்கவும், எள்ளி நகையாடவும் தலைப்பட்டனர். ஒரு காலத்தில் மரத்துக்கு மரமும், சிகரத்துக்கு சிகரமும் தாண்டி அவன் தன் நண்பர்களோடும், சகோதரர்களோடும் விளையாடியதெல்லாம் கனவா? ஆம், அப்படித் தான் தோன்றியது அவனுக்கு. அவன் தன் கனவிலேயே இந்த கோமந்தகமலையை விட்டு அருகே இருக்கும் கரவீரபுரத்திற்கு ஒரே தாவலிலேயே சென்றுவிட்டுத் திரும்புவது போல் கனவும் கண்டான். அவர்களுடைய குலதெய்வமான பொன்னிறக் கழுகரசன் சுபர்ணாவைப் பிரார்த்தித்துக் கொண்டான் விநதேயன்.
இம்மாதிரியான ஒரு நிலையில் உயிர்வாழ்வதை விடச் சாவதே மேல் என்றும் எண்ணினான். பரசுராம ரிஷி அந்த மலைக்கு இரு இளைஞர்களை அழைத்து வந்திருக்கும் செய்தியும், இளைஞர்களின் திறமையும், சாகசங்களும் அவனுக்கெதிரில் பேசப்பட்டன. அவன் வெறும் பார்வையாளனாகக் கூட அதில் பங்கு பெறவில்லை. அவன் குடும்பத்தினர் அனைவருமே உற்சாகத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்ந்து போயிருக்கின்றனர். ஏன், அவனும் பரசுராமரைத் தவிர வேற்று மனிதர்கள் வேறு எவரையும் பார்த்தது கூடக் கிடையாதுதான். அதிலும் இவர்கள் அரசகுலத்தினராம். யாதவகுலத் தலைவர்களில் ஒருவன் ஆன வசுதேவனின் குமாரர்களாம். குரு கர்காசாரியாரிடமும், குரு சாந்தீபனியிடமும் பயிற்சி பெற்றவர்களாம். பரசுராமரால் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறார்கள். கொடுத்து வைத்தவர்கள். அவர்களில் இளையவன் கருநிறம் என்று சொன்னாலும், அப்படிப் பட்டதொரு அழகான கருநிறத்தை எவரும் கண்டதில்லையாம். ஆஹா, அவன் செய்த அதிசயங்களைப் பற்றி அப்படிப் பேசுகிறார்களே? அவனால் தனக்கும் உதவ முடியுமா? அவன் அதிசயமானவன் என்கின்றனரே? அவனால் விளையும் அதிசயம் என்னுள்ளும் ஏற்படுமா? ஆனால், ஆனால், அதற்கு நான் முதலில் அவனைப் பார்க்கவேண்டும். அவனும் என்னைப் பார்க்கவேண்டுமே? அது எப்படி நடக்கும்??
எல்லாரையும் போல் வெளியே சென்று அவர்களை வரவேற்கவோ, அல்லது அவர்கள் கொண்டாட்டங்களில் பங்கு பெறவோ அவனால் முடியாது. எத்தகையதொரு பரிதாபமான சூழ்நிலையில் அவன் இருக்கிறான்?? ஆஹா! அவன் தந்தையிடம் சொல்லி அந்தக் கண்ணனை இங்கே வரச் சொல்லலாம் என்றாலோ, அவன் தந்தையே அவனைப் பரிதாபத்தோடு பார்ப்பார். இந்தப் பரிதாபம் அவனை மிகவும் வருத்துகிறது. அவனைக் கண்டு வேறு எவரும் பரிதாபப் படுவதை கருடன் விநதேயன் சற்றும் விரும்பவே இல்லை. வெளியே இருந்து உற்சாக்க் கூச்சல்கள் கேட்கின்றன. அங்கே என்ன நடக்கிறது?? புரியவில்லையே? அதோ, உள்ளே யார் வருவது?? அம்மா, ஆம்… அம்மாதான் வருகிறாள். அவனைப் பெற்ற பாவத்துக்காக அவனுக்கு உணவு அளித்துக் காப்பாற்றுவது அவள் கடமையே! அதை நிறைவேற்ற வருகிறாள்.
No comments:
Post a Comment