கருடன் விநதேயனின் வருத்தம்!
அட??? அம்மா இன்று சந்தோஷமாய் இருக்கிறாளே? ஆம், விநதேயன் இப்படி ஆனதில் இருந்து அம்மாதான் அவன் தேவைகளை நிறைவேற்ற உதவி வருகிறாள். அதற்காகவே இந்தக் குடிசையின் உள்ளே அவளுக்கென ஒரு அறையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறாள். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்கவேண்டுமே, என்பது அவள் எண்ணம். எனினும் சில சமயங்களில் அவளாலும் முடியவில்லை. அப்போது அவளும் தன் எரிச்சலையும், கோபத்தையும் கட்டுப்படுத்திக்கொள்ளுகிறாள் என்பதும் புரிகிறது. அம்மாவிற்கு அவளே இறந்துவிடலாமோ என்றும் சில சமயங்களில் தோன்றுகிறது என்றாளே? அவனால் குடும்பமே எவ்வளவு வேதனைப் படுகிறது? இதற்கு ஒரு முடிவே இல்லையா?? அம்மா, என் அம்மா! அம்மா நெருங்கிவிட்டாள். அவள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாள் என்று புரிகிறது. பரபரப்பில் இருந்தாள்.
கருடனைப்பார்த்து, உணவளித்துவிட்டு, “குழந்தாய், இன்று இரு இளைஞர்கள் பரசுராமரால் நம் விருந்தினராக வந்துள்ளனர். ஆஹா, என்ன அற்புதமான இளைஞர்கள்? அவர்களில் பெரியவன் பலராமன் என்ற பெயராம். எப்படி இருக்கிறான் தெரியுமா? பார்க்கவே மிக மிகப் பெரியவனாக ஒரு ராக்ஷஸன் போல் காணப்படுகிறான். ஆனால் குழந்தாய், மிகவும் இனிமையானவனே. அவன் சிரித்தால் இடி இடிக்கிறாற்போன்றதொரு சத்தம் வருகிறது. இன்னொருவனை வாசுதேவன் என்று கூப்பிடுகிறார்கள். அவன் நிறத்தைப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது விநதேயா! கடல் நீலமா? விண்ணின் நீலமா? அல்லது இரண்டு கலந்த்தொரு புது நீலமா? அப்படி ஒரு நிறத்தில் எந்த மனிதனையும் இதுவரை நான் கண்டதே யில்லை. அவன் கண்களின் ஒளி! அனைவரையும் வசீகரிக்கிறது. ஆனால் நிலவைப் போன்ற குளுமையான ஒளி தான். மனதுக்கு அமைதியைத்தருகிறது அந்த ஒளி. அவன் சிரிப்பு, சிரித்தாலே நமக்கு ஆநந்தம் பொங்குகிறது. அவன் சிரிப்பினாலேயே அனைவர் உடல், மனது எல்லாவற்றையும் சீராக்கிவிடுவான் போல் தெரிகிறது. அவ்வளவு கருணையுடன் சிரிக்கிறான். எல்லாக் குழந்தைகளையும் தட்டிக் கொடுத்து அன்பு செய்கிறான்.
“விநதேயா, அவன் என்னைப் பார்த்துக் கூடச் சிரித்தான். எனக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்தது தெரியுமா? மனதில் சொல்லத்தெரியாத உற்சாகம். உன் தந்தை அவனைக் கடவுள் என்றே சொல்கிறார். மனித உருவில் பூமிக்கு இறங்கிவந்திருக்கிறாராம். இல்லை எனில் இப்படி ஒரு அசாதாரணமான நிறமோ, அசாதாரணமான காரியங்களோ அவனால் செய்ய முடியாது என்கிறார். அவர்கள் தங்கவென மூன்று அழகான குடிசைகள் கட்டி இருக்கிறோம். அதுவும் மேற்குக் கடலைப் பார்த்த வண்ணம் இருக்குமாறு அமைத்துள்ளோம். இங்கேதானே தங்கப் போகிறார்கள், ஒரு நாள் உன்னிடமும் அழைத்துவருகிறேன், விநதேயா! அவர்களைப் பார், உன் துன்பம் எல்லாம் தீர்ந்துவிடும். “ படபடவென்று இயல்புக்கு மாறான உற்சாகம் பொங்கப் பேசினாள், விநதை.
விநதேயனின் கண்களில் கண்ணீர் பொங்கியது. இவ்வளவுச் சிறப்புப் பொருந்திய அந்த இளைஞன் என்னைப் பார்க்க வருவானா? அப்படியே வந்தாலும் என்ன செய்ய முடியும் அவனால்? என் நிலையைப் பார்த்துப் பரிதாபப்படுவான். ஓரிரண்டு வார்த்தைகள் பரிதாபமாகச் சொல்லுவான். அதனால் என்ன நன்மை விளையும்? ஒன்றுமில்லை. நான் அவர்களோடு சேர்ந்து மலையில் ஆடிப் பாடிக் குதிக்கவோ, மரத்துக்கு மரம் தாவிக்குதிக்கவோ லாயக்கில்லாதவன் என்பதைச் சுட்டிக் காட்டும் வார்த்தைகள் அவை. என்னை அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி, என்னை ஒரு கையாலாகதவனாய்க் காட்டப் போகிறது. “எனக்கு யாரையும் பார்க்கவேண்டாம், எவரும் இங்கே வரவேண்டாம்.” கோபமாய்ப் பேச ஆரம்பித்த விநதேயனின் வார்த்தைகள் தொண்டையிலேயே துக்கம் தாங்க முடியாமல் முணுமுணுப்பாக வெளிவந்தன. தன் முகத்தைச் சுவர்ப்பக்கம் திருப்பிக் கொண்டு பொங்கி வந்த கண்ணீரை மறைத்துக்கொண்டான் விநதேயன்.
அம்மா சற்று நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள். அம்மா செல்லும்போதே சூரிய அஸ்தமனம் ஆகிவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் இருட்ட ஆரம்பித்துவிடும். அனைவரும் குடிசைக்குள் புகுந்து கொண்டிருந்தனர். தூங்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். கருடன் விநதேயனும் தூங்க முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை.மனம் தத்தளித்தது. அவன் உள் மனம் அந்த இரு இளைஞர்களையும் பார்க்க மிகவும் விரும்பியது. அவன் குடும்பத்தாரும் அவன் குலத்தாரும் அனைவரும் பார்த்துவிட்டார்கள், கடவுளரைப் போல் தோற்றமளிக்கும் அவ்விரு இளைஞர்களையும் விநதேயன் மட்டுமே பார்க்கவில்லை. ஒன்றும் வேண்டாம். அவனுக்கும் யாரையும் பார்க்கவேண்டாம். அந்த இளைஞர்களைப் பாராட்டுவது போல் அவனைப் பாராட்டியா பேசப் போகிறார்கள்? எதுவும் இல்லை. அவனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவன் யாரோ? அவர்கள் யாரோ, எவரோ? எப்படியோ போகட்டும், தூங்கலாம். ம்ஹும் முடியலை, முடியலை, எப்படியாவது பார்க்க முடியுமா? ஜன்னலைப் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தால் வெளியே இருந்தால் தெரியுமா? முடியாதே? அவனால் பிடித்துக்கொண்டு நிற்க முடியுமா?
முயன்ற விநதேயன் களைத்துப் போய், அந்தக் களைப்பிலே அவனையும் அறியாமல் தூங்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் கண் விழித்தான். அவனுக்கு அந்த வான் நீல இளைஞனிடம் கெஞ்சிக் கேட்கவேண்டும் போல் இருந்தது. எல்லாக் குழந்தைகளையும் தொட்டுத் தடவித் தட்டிக் கொடுத்தானாமே? என்னையும் அப்படிச் செய்வானா? என்னிடமும் நட்புப் பாராட்டுவானா? ம்ஹும் வரமாட்டான்; இங்கே எல்லாம் அவனுக்கு என்ன வேலை? அப்படியே வந்தாலும் என்னையும் தட்டிக் கொடுத்து அன்பு பாராட்டி சமாதானம் செய்தாலும், அதெல்லாம் என்னிடம் உள்ள இரக்கத்தினால் தான் இருக்கும். வேறு காரணம் இருக்காதே? என்னிடம் எவர் நட்புப் பாராட்டுவார்கள்? நான் தான் கடவுளரால் சபிக்கப் பட்டு இப்படி ஆகிவிட்டேன் என்றல்லவோ எல்லாரும் சொல்கின்றனர்? எல்லாரும் நம்புகின்றனர்? கடவுளரால் சாபம் கொடுக்கப் பட்ட ஒருவனுக்கு எப்படி இன்னொரு கடவுளைப் போன்ற இளைஞன் நண்பன் ஆவான்? இயலாத காரியம். ஒரு காலத்தில் அனைவரையும் விடத் திறமைசாலியான கருடனாக இருந்தவன் நான். இன்று? எவர் நம்புவார்கள்?
என்னைப் போன்றதொரு முடச் சிறுவனால் அந்த அழகான ராஜகுமாரனைப் பார்க்க முடியுமா? ம்ம்ம்ம்ம்??? ஆம், அவன் இங்கே வரமாட்டான் தான். அவனை அழைத்து வருவது கஷ்டமே. முடச் சிறுவனைப் பார்க்கவென்று யார் அழைத்துவருவார்கள்? ஆகையால் நானே போய் அவனைப் பார்த்துவிட்டால்? ஆம் அது தான் சரி, அவன் இங்கே வருவது சரியில்லை; வரவும் மாட்டான்; ஆனால் நான் சென்று அவனைப் பார்க்கலாமே? ஆம், அப்படித் தான் செய்யவேண்டும். என்ன ஆனாலும் சரி, அந்த வான் நீல நிற இளைஞனை நான் பார்த்தே ஆகவேண்டும். கருடன் விநதேயன் தூங்க முயன்றான். அவனால் முடியவில்லை. கண்ணனைப் பற்றி அவன் தாய் வர்ணித்த்தில் இருந்து ஒரு மாதிரியாக அவனைத் தன் கற்பனையில் காண முயன்றான். அவனால் முடியவில்லை. எப்படிக் கற்பனை செய்தாலும் அந்த உருவத்தைக் கொண்டு வர முடியும் எனத் தோன்றவில்லை. பார்க்கவே கடவுளைப் போல் இருப்பானாமே? ம்ம்ம்ம்ம்ம்????? அதிலும் அந்த இனிமையான ஒளி சிந்தும் சிரிப்பு. சிரிப்பில் ஒளியா? ஆம், அவன் அம்மா அப்படித் தானே சொல்கிறாள்???
எப்படி இருக்கும் அந்தச் சிரிப்பு? எப்படியாவது அவனைப் பார்த்தாகவேண்டுமே? இங்கே தானே இருக்கிறான்? கடலைப் பார்த்தவண்ணம் இருக்கும் குடிசையில்?? எப்படியாவது அங்கே போக முடிந்தால்?? யோசித்து, யோசித்துக் களைப்பும், சோர்வும், குழப்பமும் ஆட்கொண்டது விநதேயனுக்கு. ஊர்ந்தோ, தவழ்ந்தோ சென்றால்??? ஆஹா, பல நாட்களாக அவன் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. முதலில் சில நாட்கள் சென்று கொண்டிருந்தான். ஆனால் அந்த அடர்ந்த மலைக்காடுகளில் கூடவே ஊர்ந்து செல்லும் பாம்புகளும், மற்ற விஷ ஜந்துக்களும், கடும் காட்டு மிருகங்களும் இரவில் அதிகம் நடமாடுவதால் அவன் தந்தை தடுத்துவிட்டார். அவனால் அவற்றை எதிர்கொள்ள முடியாதே? ஆனால் எப்படியாவது வாசுதேவ கிருஷ்ணனைச் சந்தித்தே ஆகவேண்டும். அவனைப் போன்றதொரு முடவனால் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அவன் இதயத்தில் இருந்து ஒரு குரல் உரக்கக் கூவிக் கொண்டே இருந்தது. “எப்படியேனும் நீ சென்று அந்த வாசுதேவ கிருஷ்ணனைச் சந்தி, அதனால் உனக்கு நன்மையே பயக்கும். நீ தயங்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கு வீணாகிப் போனதாகும். ஒரு வேளை நாளைக்கே அந்த இளைஞர்கள் இங்கிருந்து சென்று விட்டால்??”” அப்புறம் அவர்களைச் சந்திக்கவே முடியாதே?
மிகவும் சிறப்பாக பதிவு . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபின்னூட்டத்துக்கு நன்றி, பனித்துளி சங்கர் அவர்களே.
ReplyDelete