பலராமனின் சிந்தனையும் கண்ணனின் கவலையும்
கோமந்தக மலைப்பகுதிக்கு வந்ததில் இருந்தே பலராமனுக்கு அந்த இடம் மிகவும் பிடித்துவிட்டது. சொந்த வீட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தான். சுபாவமாகவே பலராமன் அனைவராலும் எளிதில் அணுக முடிபவனாகவும், எல்லோருடனும் ஒத்துப் போகிறவனாகவும் வெளிப்படையானவனாகவும் இருந்தான். இருப்பான், இன்னும் அப்படியே இருக்கிறான். எதையும், எவரையும் கெடுதலாக நினைக்காமலோ, பார்க்காமலோ இருப்பது அவன் பிறக்கும்போதே கொண்டு வந்த வரமாகவும் அமைந்திருந்தது. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து அதன் சுக, துக்கங்களை அப்படியே அநுபவிக்கவும் விரும்பினான். அப்படியே நடந்தும் வந்தான். கவலைகளோ, கஷ்டங்களோ தன்னைப் பாதிக்காமல் பார்த்துக்கொண்டான். துச்சமெனக் கருதினான் அவற்றை. ஆனால் சிறு வயதில் இருந்தே, குழந்தைப் பருவத்திலிருந்தே தன்னையும், தன் தம்பியான வாசுதேவ கிருஷ்ணனையும் சுற்றிப் பின்னப் பட்டிருந்த தெய்வீக வலையை அவன் புரிந்து வைத்திருந்தான். தன் அருமைத் தம்பியாலேயே தனக்கும் இத்தகையதொரு தெய்வீகத்தன்மை உள்ளவன் என்ற பெயர் கிடைத்தது என்பதில் அவனுக்குச் சந்தேகமும் இல்லை. அவன் வரையில் கண்ணன் தெய்வத்தன்மை வாய்ந்தவன் என்பதிலும் சந்தேகம் இல்லை. கண்ணனை விடப் பெரியவனான தன் மீது கண்ணன் வைத்திருக்கும் பக்தியாலேயும், அன்பாலேயேயுமே அவன் தன்னையும் சேர்த்து இந்த வலையைப் பின்னிக் கொண்டிருக்கிறான் என்றே எண்ணினான். தான் ஒரு சாமானியன் என்பதே அவன் கருத்து. கண்ணனாலேயே தனக்குப் புகழ் என்பதை அவன் உறுதியாக நம்பினான். இருவரையும் எவராலும் பிரிக்கமுடியாமல் அனைத்து சாகசங்களிலும் கண்ணன் பலராமனையும் சேர்த்துக் கொண்டிருந்தான். ஆனால் பலராமனுக்கோ தன் அருமைத் தம்பியான கண்ணனின் புத்தி சாதுர்யத்திலும், வீரத்திலும், தைரியத்திலும், சாகசங்களிலும், அவன் அன்பிலும், கருணையிலும், பாசத்திலும், நேசத்திலும் அபாரமான நம்பிக்கை. பலராமன் வரையில் கண்ணன் ஒரு தெய்வீகமான பிறவி என்றே நம்பினான். தன்னையும் அத்தகையதொரு தெய்வீகத்தில் சேர்ப்பது அவனுக்கு உள்ளூரப் பிடிக்கவில்லை.
ஆனால் மதுரா வந்ததுமே முற்றிலும் நிலைமை வேறாகி விட்டிருந்தது. அங்கே அவன் தாய், தந்தையில் இருந்து, பெருமதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய அக்ரூரர் வரை, மற்றும் யாதவத் தலைவர்கள் அனைவருமே, அவ்வளவு ஏன் மதுராவின் சாமானிய மக்கள் வரையிலும் இருவரையும் அவதார புருஷர்களாகவே கருதினார்கள். கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் அவர்கள் செய்த வீர, தீரச் செயல்கள் இங்கே பயபக்தியோடு மெல்ல ரகசியமாகப் பேசப் பட்டன. அவர்கள் இருவரையும் கண்டால் அனைவரும் பக்தியும், மரியாதையும் செலுத்தினார்கள். நட்போடு பழகுவதற்கு எவரும் இல்லை. அவ்வளவு ஏன்? அவர்கள் குரு சாந்தீபனி கூட இருவரையும் அவதார புருஷர்களாகவே மதித்தார். இப்படிப் பட்ட நிலைமையில் தான் மதுராவை விட்டு ஓடும்படி ஆனது. இங்கே இந்த கோமந்தக மலைப்பகுதிக்கு வந்தாயிற்று. இங்கே எதுவும் தடை இல்லை. கருடர்கள் இயல்பாகவே எதையும் எளிதாக எடுத்துக் கொண்டனர். அவர்கள் வாழ்வில் இயல்பாகவே உற்சாகமும், சந்தோஷமும் கலந்திருந்தது. வாழ்க்கையை அதன் போக்கில் வாழத் தலைப்பட்டனர். அவர்கள் நன்கு சாப்பிட்டார்கள், நன்கு குடித்தார்கள், நாட்டியம் ஆடிப் பாட்டுக்கள் பாடிப் பொழுதைக் கழித்தனர். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி சிரித்துக் குதூகலமாய் இருந்தனர். பலராமனுடைய சுபாவத்திற்கு இது தான் ஒத்து வந்த்து. ஆகவே அவனுக்கு இந்த கோமந்தக மலையில் வாழும் வாழ்க்கை பிடித்திருந்தது.
மலையில் அங்கும், இங்கும் தாவிக் குதிப்பதும், ஒரு சரிவில் இருந்து இன்னொரு சரிவிற்குத் தாண்டிக் குதிப்பதும், ஒரு சிகரத்திலிருந்து இன்னொரு சிகரத்திற்குப் பறப்பது போல் குதிப்பதும் அவர்களுக்குக் கைவந்த கலையாக இருந்தது. கருட இனத்துப் பெண்களோ எனில் நடப்பதாய்த் தெரியவில்லை. நடையே நாட்டியமாய் இருந்தது. இவர்கள் வேலையும் அதிகமாய்ச் செய்து தங்களை வருத்திக்கொள்வது இல்லை. மலைக்கு அந்தப் புறம் இருந்த தென்னை மரங்களின் தேங்காய்கள் அவர்களுக்கு அனைத்தையும் கொடுத்தது. உணவு, உடை, இருப்பிடத்திற்குத் தேவையான பொருட்கள், தூங்குவதற்கான பாய், அடுப்பு எரிக்கத் தேவையான எரிபொருட்கள் என அனைத்தையும் கொடுத்தது. பலராமனுக்கு இந்த வாழ்க்கை மிகப் பிடித்திருந்தது. அவன் உணர்வுகளால் கருடர்களோடு கலந்து விட்டான் என்றே சொல்லலாம். அவர்களோடு சேர்ந்து ஆடிப் பாடிப்பொழுதைக் கழித்தான்.காலையில் சூரியோதயம் ஆகி வெகு நேரம் கழித்தே எழுந்திருப்பான். கண்ணன் அவனை இந்த மலையில் நன்கு தேடிப் பார்த்து ஜராசந்தன் வரமுடியாதபடிக்குக் கோட்டை அரண்போன்ற இடத்தைத் தேடலாம் என அழைப்பான். பலராமோ நகைப்பான். கண்ணனுக்கு வாழ்க்கையை அநுபவிக்கத் தெரியவில்லையே என்று அவனிடம் கேலி செய்வான். ஜராசந்தன் இவ்வளவு தொலைவெல்லாம் வரமாட்டான், பயப்படாதே என்பான்.
கண்ணனோ எதற்கும் நாம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும் என்று கூறுவான். பலராமனோ அதை அலட்சியம் செய்தான். கண்ணன் அவனை அவன் போக்கில் விட்டுவிட்டான். ஆனால் அவன் விநதேயன் துணையோடு தனக்குத் தேவையானவற்றைத் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டான். விநதேயன் கண்ணனின் நிழல் போல் செயல்பட்டான். கண்ணன் செல்லும் இடங்களில் எல்லாம் அவனும் சென்றான். அவன் தந்தையோ கண்ணனிடம் மிகவும் பயபக்தியோடும், நன்றியோடும் இருந்தான். கண்ணன் விநதேயனின் துணையோடு அந்த மலைப் பிராந்தியம் பூராவையும் ஒவ்வொரு மூலை, முடுக்கையும் நுணுக்கமாக அறிந்து கொண்டான். ஓய்ந்த பொழுதுகளில் தர்மத்தை எப்படி நிலைநாட்டுவது என்று யோசித்தான். தன் குலத்து முன்னோர்களில் தர்மத்தில் சிறந்தவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தான். மனிதனாகப்பிறந்ததும், க்ஷத்திரியனாக இருப்பதும் அதற்குரிய தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவன்றி வேறு எதற்கும் இல்லை எனத் தெளிந்தான். சில சமயங்களில் விருந்தாவனத்தில் தன்னந்தனியாக இருக்கும் நந்தகோபனையும், யசோதா அம்மாவையும் நினைத்துக்கொள்வான். அவனையும் அறியாமல் ராதையின் நினைவும் வரும். உடனேயே பெற்றெடுத்த தாய் தேவகியின் நினைவும், வசுதேவரின் நினைவும், கம்சனைத் தான் கொன்று அவர்களைக் காப்பாற்றியதும், அதற்காக ஜராசந்தன் தன்னைப் பழிவாங்க நினைப்பதும் நினைவில் வரும். தன் கடமைகள் முன்னே விரியும். தான் செய்யவேண்டிய செயல்களை நினைத்துக்கொள்வான். யாதவ குலமே தன்னை நம்பி இருப்பதை உணர்வான். நாககன்னி ஆஷிகாவின் பிடிகளில் இருந்து தப்பி வந்ததை நினப்பான்.
இத்தனைக்கும் நடுவில் அந்தப் பொல்லாத மனம் சில சமயம் விதர்ப்பநாட்டுக்குப் போகும். அங்கே இருக்கும் விதர்ப்ப இளவரசி ருக்மிணியின் தைரியமான பேச்சுக்களில் நினைவு போகும். அவள் தனக்காகச் செய்த உதவிகளில் மனம் மகிழும். அவள் கண்கள்! அவள் தனக்கு உதவி எதற்காகச் செய்தாள்? ம்ம்ம்ம்?? அவள் கண்கள்! ஆஹா, இந்தப் பொல்லாத மனம் வேண்டாதவற்றை நினைக்கிறதே! நான் இன்னும் அவர்கள் கண்களுக்கு முன்னர் ஒரு இடைச்சிறுவன் தானே! அவளோ ஒரு சக்கரவர்த்தியின் ஒரே குமாரி. காற்றடித்தால் கூடப்பறந்துவிடுமோ என்னும்படியாக மெல்லிய தேகம்! சீச்சீ, இப்படி எல்லாம் நினைக்கக் கூடாது. அவள் அண்ணன் ருக்மி ஜராசந்தனோடு சேர்ந்துவிட்டானாமே! அவள், அந்த ருக்மிணிக்கு அது பிடிக்கவில்லை. என்னோட நட்புப் பாராட்டவேண்டும் என்றே சொல்கிறாள். அதற்காக அவள் அண்ணனோடு சண்டை போட்டிருக்கிறாளே! ம்ம்ம்ம்ம்! ஜராசந்தன் என்று இங்கே தேடிப் பிடித்துக்கொண்டு வருவானோ தெரியாது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யாமல் நான் இப்படி எல்லாம் யோசிக்கிறேனே! அட! உத்தவன்!
அவனை எப்படி மறந்தேன்! வாய்விட்டு எதுவும் பேசுவதில்லை அவன். அவசியம் இருந்தால் தான் ஓரிரு வார்த்தைகள் பேசுகிறான். நான் சொல்லும் வேலைகளைத் தட்டாமல் செய்கிறானே. அவனாகவே என் விருப்பத்தைப் புரிந்து கொண்டும் நிறைவேற்றுகிறானே. ஜராசந்தன் என்னைப் பிடிக்க விரித்து வைத்திருக்கும் வலையைக் கூட இப்போது உத்தவனின் சாமர்த்தியத்தைத் துணைக்கொண்டே அறுக்கவேண்டும். மனதில் இத்தனை எண்ணங்கள் இருந்தாலும் கருடர்களோடு கலந்து பழகுவதிலேயோ, அவர்களின் கொண்டாட்டங்களை ரசிப்பதிலேயே கண்ணன் பின்வாங்கவும் இல்லை. மேலும் அவர்களுக்குத் தனக்குத் தெரிந்த இசையைக் கற்றுக் கொடுத்தான். அவர்களுக்குள் சின்னச் சின்னதாய்ச் சண்டைகள் வரும்போது சமாதானம் செய்வித்தான். இப்படி அவர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் கலந்து கொண்டு தானும் அவர்களில் ஒருவனே என்னும்படியாக நடந்து கொண்டான். அனைத்துக்கும் மேலாகத் தன்னையும், பலராமனையும் ஆயுதபாணியாக்கவேண்டும் என்பதிலும் கண்ணன் உறுதியாக இருந்தான். தக்க ஆயுதங்கள் இல்லாமல் ஜராசந்தனை வெல்வது கடினம் என்பதையும் உணர்ந்திருந்தான். அந்த நாட்களில் சண்டை என்பது படைகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட இருவரின் வெற்றி, தோல்வியிலும் ஒரு ராஜ்யத்தின் நிலைமை நிர்ணயிக்கப் பட்டது. ஆகவே அதை எதிர் கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் ஆயுதங்கள் செய்யும் முறைகளும் கட்டாயமாய்த் தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அவரவர் சொந்த ஆயுதங்களையே பெரும்பாலும் நம்பினர். கண்ணனும், பலராமனும் குரு சாந்தீபனியின் ஆசிரமத்தில் ஆயுதங்கள் தயாரிக்கவும் பயிற்சி பெற்றிருந்தனர். ஆகவே கண்ணன் தனக்கென சொந்தமாய் ஒரு வில், அம்புகளோடு கூடியதாகவும், முட்களோடு கூடிய கதாயுதமும் செய்ய ஆரம்பித்தான். எல்லாவற்றையும் விட அவனுக்குச் சக்கராயுதம் தான் மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அது சுற்றிக்கொண்டே போய் எதிராளியை வீழ்த்திவிட்டுத் திரும்ப அவனிடமே வந்தும் விடும்.
கருடர்களின் தலைவன் உதவியோடும், அநுமதியோடும் கண்ணன் அங்கே இருந்த இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து விநதேயன் தலைமையில் ஒரு சிறு படையை உருவாக்கினான். அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களுக்கு அங்கே கிடைத்த தாமிரத்தை நெருப்பில் இட்டுத் தயாரிக்கச் சொல்லிக் கொடுத்தான். ஒவ்வொன்றும் தயாரிக்கும் முன்னர் அக்னிக்கடவுளை வேண்டிக்கொண்டு அதற்குரிய யாகங்களைச் செய்து, வழிபாடுகளையும் முறைப்படி செய்தான். இளவரசன் விநதேயன் துணையோடு அம்புகளில்பொருத்தும் கூர்நுனிகள், தனக்கென ஒரு சக்கரம், கதாயுதத்திற்கென கூர்மையான மேல்நுனி, கைப்பிடிப் பக்கம் பொருத்தும் நீண்ட பிடி போன்றவற்றையும் தயார் செய்தான். என்றாலும் சாந்தீபனியின் ஆசிரமத்தில் கற்கும்போது கொடுத்த ஆயுதங்களோடு ஒப்பிடுகையில் இவை மிகவும் சுமார் தான். கண்ணனுக்கு அவ்வளவு திருப்தியில்லைதான். என்றாலும் வேறு வழியில்லை. என்றாலும் கண்ணன் தினமும் யாகக்குண்டத்தின் எதிரே அமர்ந்து இந்திரனையும், அக்னியையும் மற்றக் கடவுளரையும் மனதாரப் பிரார்த்தித்தும் வந்தான். தன் கடமை தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை ஒழிப்பது என்றால் அதற்குரிய சக்தியையும், பலத்தையும் தரும்படி அவர்களைப் பிரார்த்தித்தான்.
nice thanks for sharing
ReplyDeleteஹ்ம்ம் சீக்கிரம் அடுத்த பாகம் மாமி
ReplyDelete