கண்ணனின் கொடியில் கருடன்!
“அப்படியா? எனில் நாம் அனைவரும் தாக்குதலுக்குத் தயாராகவேண்டும்.” என்றான் கண்ணன். பலராமனுக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப் பட்டது. அவன் தன் நண்பர்களைப் புறம் தள்ளிவிட்டுக் குடிசைக்குள் நுழைந்து கண்ணனிடம், “கண்ணா, எங்கே ஆயுதங்கள்? எடு அனைத்தையும்! ஜராசந்தன் இங்கேயும் வருகிறானாமே?” என்று ஆவேசத்தோடு கேட்டான். கண்ணன் அவனைப் பக்கத்துக்குடிசைக்குள் அழைத்துச் சென்று தான் தயாரித்து வைத்திருக்கும் தன் ஆயுதங்களைக் காட்டினான். “அண்ணா, உங்களுக்கு என்ன ஆயுதங்கள் பயன்படும்? உங்கள் ஆயுதங்களை எப்படித் தயாரிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்க, பலராமன் அதைத் தான் பார்த்துக்கொள்வதாய் உறுதியளித்தான். பின்னர் குடிசையை விட்டு வெளியே சென்று ஒரு பெரிய உறுதியான அடிப்பாகம் உள்ள பழைய மரத்தை அவன் கோடரியால் வெட்டிச் சாய்த்தான். அதன் அடிப்பாகத்தினால் தனக்காக ஒரு கதையை நிறைய முட்களோடு கூடியதாய்த் தயார் செய்தான். இரண்டு நாட்கள் தூங்காமல் கண் விழித்து இதை முடித்தான் பலராமன்.
பின்னர் அனைத்து ஆயுதங்களையும் வைத்து ஒரு வழிபாடு செய்யவேண்டும் எனக் கண்ணன் அவற்றிற்கான ஏற்பாடுகளைச் செய்தான். கருட இனத்து மக்கள் அனைவரும் அந்த வழிபாட்டுக்கு அழைக்கப் பட்டனர். கண்ணன் தன் ஆயுதங்களை அங்கே வைத்திருந்தான். பலராமனிடம் அவன் ஆயுதங்களைக் கேட்கவும், “நீ வழிபாட்டை ஆரம்பி, இதோ கொண்டு வருவேன்.” என்ற பலராமன் கண்ணன் தன் வழிபாட்டைத் தொடங்கியதும், வெளியே சென்றான். திரும்பி வரும்போது அவன் தோளில் ஒரு பெரிய ஏர்க்கலப்பை சார்த்தப் பட்டுக்கிடந்தது. சாதாரணமாக நான்கு ஆட்களால் தூக்கவேண்டிய அளவுக்கு அது உறுதியாகவும், வலிமையாகவும் இருந்ததோடு மற்றொரு தோளில் ஐந்தடிக்கு ஒரு பெரிய உலக்கையும் காணப்பட்டது. கண்ணனைப் பார்த்து, “கண்ணா, இதோ என் ஆயுதங்கள். உன்னைப் போல் நாட்கணக்காக உழைத்துக் கொண்டு இருக்கவில்லை. என் ஆயுதங்களை நான் தேர்ந்தெடுத்துவிட்டேன், பார்! “ என்று சொல்லிவிட்டு அவற்றைக் கண்ணனிடம் கொடுக்கக் கண்ணன் ஒரு சிறு சிரிப்போடு அவற்றை வாங்கிக் கொண்டான்.
பின்னர் கண்ணன் பலராமனைப் பார்த்து, “உண்மையிலேயே மிகவும் வலிமையான ஆயுதங்கள் தான் இவை. இருங்கள் அண்ணா, மிகவும் முக்கியமானதும், ஒளிபொருந்தியதுமான இன்னொரு ஆயுதம் எனக்காகத் தயார் செய்துள்ளேன். அதையும் பாருங்கள்.” கண்ணன் அங்கே குவிந்திருந்த இலைக்குவியலை அகற்றினான். அதனடியில் ஒளிவிட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்த்து சக்கராயுதம் ஒன்று. நூற்றுக்கணக்கான கூரிய கம்பிகளால் இணைக்கப்பட்டிருந்தது. கம்பிகளின் முனைகள் சக்கரத்தின் வட்டத்தின் வெளி வரையிலும் நீண்டு இருந்தது. முனைகள் வேல் போன்று கூர்மையாக ஒளிவிட்டன. மேலும் அங்கே மறைத்து வைக்கப் பட்டிருந்த கவசங்கள், தலைக்கவசங்கள் போன்றவற்றையும் காட்டி எல்லாம் அவன் மேற்பார்வையில் கருடர்களால் தயாரிக்கப்பட்டன என்றும் கூறினான். அங்கே ஒரு அழகான கிரீடம் ஒன்றும், மணிகளால் அலங்கரிக்கப் பட்டு ஒளிவிட்டுக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. இளம் கருடன் விநதேயன் கண்ணனுக்கெனத் தான் தனியாக அதைச் செய்ததாகப் பெருமையுடன் கூறினான்.
அவற்றை எல்லாம் பார்த்து வியந்த பலராமன், “சரி, கண்ணா, ஆயுதங்களுக்கு இப்போது பெயர் வைக்கவேண்டுமே? என்ன பெயர் வைக்கலாம்? “என்று வினவினான். அனைவரும் கலந்து ஆலோசித்து பலராமனின் கலப்பைக்கு, “சம்வர்த்தகா” என்ற பெயரும், அவன் உலக்கைக்கு, “செளநந்தா” என்ற பெயரும் வைத்தனர். கண்ணனின் வில்லுக்கு, “சார்ங்கம்” என்ற பெயரும், அவனின் அதி அற்புதமான சக்ராயுதத்துக்கு, “சுதர்சனா” என்ற பெயரும் வைக்கப் பட்டது. மேலும் கண்ணன் அப்போது ஒரு அபூர்வமான அறிவிப்பையும் செய்தான். “இதோ கருடன் ,விநதேயன், இனி எனக்குச் சமமானவன் இவன். என் ஆயுதங்களை மட்டுமின்றி எனக்கும் பாதுகாவலன் இவனே! இந்த ஆயுதங்களைத் தயாரிக்க இவன் எப்படிப் பாடுபட்டுக் கடுமையாக உழைத்தான் என்பதை அனைவரும் அறிவீர்கள். அவன் என் அருகே இல்லை எனில் என் கொடியானது அவன் உருவத்தைத் தாங்கி நிற்கும். அவனும் நானும் ஒன்றே.” என்றான். கருடன் விநதேயன் கண்களில் ஆநந்தக் கண்ணீர் பிரவாகம் எடுத்து ஓட அனைவரும் ஒரு பக்கம் சந்தோஷமாகவும், இன்னொரு பக்கம் ஜராசந்தனை எதிர்பார்த்தும் ஆரவாரம் செய்தனர். ஒருவருக்கொருவர் புஷ்பங்களால் வீசி அடித்துக்கொண்டனர். சந்தனக்குழம்பும், நறுமணத் தைலங்களும் பூசப் பட்டன. ஒருவர் இன்னொருவரின் பலத்தைப் பரிசோதித்தனர். இதற்கு நடுவில் யுத்த பேரிகையும் முழங்கியது.
தம் தம்தம்தம்தம்தம் த்தம்த்தம் த்தம் த்தம், யுத்தம் யுத்தம் யுத்தம் என்றே அது முழங்குவதாக அனைவருக்கும் தோன்றியது.
ஜராசந்தன் வந்தேவிட்டான்.
No comments:
Post a Comment