எழுந்திரு விநதேயா, உன் கால்களில் நில்!
எவ்வளவு நேரம் என்று புரியாத நேரம் கண் மூடி அரை நினைவில் மயங்கிக் கிடந்த விநதேயன் கண் விழித்தபோது அவன் தந்தை, சிறிய தந்தை, மாமா, அவன் தாயார் ஆகியோர் அங்கிருந்தனர். ஸ்ரீகிருஷ்ணன் பேசும் மொழி ஓரளவு தெரிந்த அவன் சிறிய தந்தை அவன் தந்தை கூறுவதை மிகவும் சிரமப் பட்டுக் கண்ணனுக்கு மொழி பெயர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். நடு நடுவில் அவன் தாய் கண்ணீர் ததும்பும் விழிகளோடு, பேசமுடியாமல் தொண்டை அடைக்க ஏதேதோ கூறிக்கொண்டிருந்தாள். விநதேயன் முடமானது அவன் தவறு, அவனுக்கு நேரிட்ட சாபம் என்று அவன் தந்தை கூறுவதையும், முடவன் என்று தன்னை இகழ்ந்து பேசுவதையும் அவன் முடமாய் இருப்பது குலத்துக்கும்,குலத்தின் மற்ற இளைஞர்களுக்கும் ஓர் அவமானம் என்று நினைப்பதையும் விநதேயன் புரிந்து கொண்டிருந்தான். ஆகவே தந்தை தன்னைத் திட்டப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். விநதேயனின் தந்தை அவனைப் பார்த்து, “முட்டாளே, குடிசையில் உன்னைக் காணவில்லை என்று எவ்வளவு பதறினோம் தெரியுமா? எப்படி இங்கே இவ்வளவு தூரம் வந்து சேர்ந்தாய்?” என்று வினவினான். அதே கேள்வியை அவன் சிறிய தந்தையும் கேட்டார். அவன் தாயோ அவன் உடலில் ஏற்பட்டிருந்த காயங்களைக் கண்டு மனம் வருந்தி, “குழந்தாய், உன் உடம்பை இப்படிப் புண்ணாக்கிக் கொண்டுவிட்டாயே?” என்றாள்.
அவ்வளவு நேரமும் கண்ணனைக் கண்டதால் ஏற்பட்டிருந்த களிப்பும், உவகையும் விநதேயன் மனதை விட்டு அகன்றது. ஆஹா, இவர்கள் மீண்டும் நம்மை அந்தக் குடிசையின் மூலைக்குக் கொண்டு சென்று கிடத்தி விடுவார்கள். இதை விட நான் செத்திருக்கலாமே? அங்கே போய் என்று சாவு வரும் என்பதை எதிர்பார்த்துக்கொண்டு ஒவ்வொன்றுக்கும் பிறர் தயவை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டு…………அவனை எழுப்பி உட்கார்த்தி வைக்க முயன்ற தகப்பனின் கைகளைத் தள்ளிவிட்டுத் திரும்பிக் கொண்டான் விநதேயன். ஆஹா, இவர் நம்மை மீண்டும் அந்தக் குடிசைச் சிறையில் அல்லவோ தள்ளப் பார்க்கிறார்?? திரும்பியவன் கண்களில் அவன் சிறிய தந்தை மிகவும் மரியாதையோடும், வணக்கத்தோடும், வாசுதேவ கிருஷ்ணனோடு பேசிக் கொண்டிருந்ததும், அவன் சிரித்த வண்ணம் கேட்டுக்கொண்டிருந்ததும் கண்ணில் பட்டது. கண்ணன் சிரிப்பு மாறாமலேயே விநதேயன் பக்கம் திரும்பினான். அவனையும் பார்த்துச் சிரித்தான். ஆஹா, இது, இதற்காகவன்றோ இத்தனை கஷ்டங்களையும், அவமானங்களையும் பொறுத்துக்கொண்டு அவன் உயிரோடு இருந்திருக்கிறான்? இத்தனை வருஷங்கள் முடவனாக வாழ்ந்த வாழ்க்கையில் ஒருநாள் கூட அவனைக் கண்டு யாரும் இப்படிக் கனிவோடும், அன்போடும், ஆதரவு தெரியும்படியும் சிரித்ததில்லை. ஒரு சிரிப்பில் இத்தனை அமைதியா? மாட்டேன், மாட்டேன், அந்தச் சிறைச்சாலைக்கு நான் மீண்டும் செல்லமாட்டேன். இங்கேயே இருந்துகொண்டு கண்ணனின் சிரிப்பைப் பார்த்துக்கொண்டே உயிர் வாழ்வேன் அல்லது உயிரை விடுவேன். அந்தக் குடிசை மூலையில் அனைவரும் என்னை வெறுத்துப் பேசும் வண்ணம் போய் அமர மாட்டேன். இது மட்டும் நிச்சயம். சற்றே நகர்ந்து தன் ஒரு கரத்தால் கண்ணனின் கால்களைக் கட்டிக்கொண்டு மேல் நோக்கி எழும்பிய நிலையில் மற்றொரு கரத்தை ஊன்றிய வண்ணம் முறையிடுவது போல் கண்ணனைப் பார்த்தான். கண்ணன் குனிந்து அவனை எழுப்பி அமர வைத்தான். அவனைப் பார்த்து, “கருடா, விநதேயா, உன் தந்தையோடு செல்ல நீ விரும்பவில்லையா?” என்றும் கேட்டான். மொழி புரியாமல் விழித்த கருடனுக்கு அவன் சிறிய தந்தை மொழிபெயர்த்துச் சொல்ல, வேகமாய் மறுத்தான் விநதேயன். தகப்பனோடு செல்ல விரும்பவில்லை என்றும் அங்கேயே கண்ணனோடு இருக்க ஆசைப் படுவதாயும் சொன்னான். அனைவரும் நகைத்தனர். அதைப் பார்த்த விநதேயனுக்கு மீண்டும் துக்கம் தொண்டையை அடைக்கக் கண்ணன் கால்களை இறுகக் கட்டிக்கொண்டான்.
விநதேயனின் சிறிய தந்தை அவன் கூறியதைக் கண்ணனுக்கு மொழி பெயர்த்தார். “வாசுதேவா, அவன் உன்னுடன் இருக்க விரும்புகிறானாம். முட்டாள், ஒரு முடவனை வைத்துச் சமாளிக்க முடியுமா என்று புரியவில்லை, மன்னித்துக்கொள்!” என்று மன்னிப்புக் கேட்கும் குரலில் சொன்னான். கண்ணன் குனிந்து, அன்போடு, விநதேயனைத் தன் கரங்களால் அணைத்தவண்ணம், “அப்படியா? என்னுடன் இருக்க விரும்புகிறாயா?” என்று கேட்டான். சிறிய தந்தை மொழிபெயர்க்க, கருடனோ, “எப்படி, வாசுதேவா? எப்படி? நான் உன்னுடன் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் நானோ முடவன். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? ஆனால், ஆனால் இவ்வுலகத்தில் உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் கதி இல்லை. நீ ஒருவனே எனக்குக் கதி. “ சொல்லும்போதே மனம் உடைந்து அழ ஆரம்பித்தான் விநதேயன். அவன் பேச்சைக் கேட்ட அவன் பெற்றோரும் மற்ற உறவினர்களும் சிரித்தனர். கிருஷ்ணன் அன்போடும், மிருதுவான தொனியிலும், அவனைப் பார்த்து, “நான் உன்னுடையவனே கருடா, இதோ பார் விநதேயா! நீ ஒன்றும் முடமில்லை. எவர் சொன்னது நீ முடவன் என்று?” என்று கேட்டான். மொழிபெயர்த்துச் சொல்லப் பட்ட கண்ணனின் வார்த்தைகளைக் கேட்ட விநதேயன், வாய் பேச முடியாமல் பக்கவாதம் வந்து ஒரு பக்கமாய்த் தொங்கிக் கொண்டிருந்த உணர்வற்ற தன் கால்களைக் காட்டினான். அவன் தலை அவமானம் தாங்க முடியாமல் தொங்கியது. கண்களிலே கார்காலத்து மழை பொழிந்தது.
பலராமன், கண்ணனைப் பார்த்து, “இந்த முடவனை நம்முடனா வைத்துக்கொள்ளப் போகிறோம், கண்ணா?” என்று பெருங்குரலில் கேட்டான். “நிச்சயமாக அண்ணா!” கண்ணனின் இந்த பதிலைக் கேட்ட பலராமன் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு கைகளை விரித்துக் கொண்டான். அதை லக்ஷியம் செய்யாத கண்ணன், கருடனைப் பார்த்து, “நீ முடவன் அல்ல!” என்று சொன்னான். அவன் குரலின் நிச்சயத் தன்மையும் உறுதியும் கண்டு கருடனுக்கே ஆச்சரியம் மிகுந்தது. இவ்வளவு நேரம் குழைவாக இருந்த குரலிலும் இப்போது ஒரு அதிகாரத் தன்மை வந்திருந்தது. தன் மயக்கும் மந்திரக் கண்களினால் கருடனையே பார்த்தான் கண்ணன். கண்ணனுக்கு அந்தக் குரலின் அதிகாரத்திலும், உறுதியிலும் ஆச்சரியம் மிகுந்ததோடு, அவன் நாடி, நரம்புகளில் எல்லாமும் அந்தக் குரலின் ஓசை ஓடுவது போலும் இருந்தது. கண்ணன் குரலின் தொனியால் அவனுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு வழியும் இல்லை என்றே தோன்றியது. கண்ணன் குரலின் தொனியை மாற்றாமலே, “எழுந்திரு, கருடா, விநதேயா, நீ முடவன் இல்லை, எழுந்து உன் கால்களால் நில்!” என்று ஆணையிடும் குரலில் கூறினான்.
விநதேயன் திகைத்தான். சுற்றி இருந்த அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். விநதேயனுக்கு கண்ணனின் வார்த்தைகள் என்னவென்று புரியாவிட்டாலும், அவற்றின் முக்கியத்துவம் தன் கால்களைக் குறித்தே எனப் புரிந்தது. மெல்ல அசைந்தான். என்ன அதிசயம்? அவன் கால்களும் சற்றே அசைந்து கொடுத்தன. வியப்புத் தாங்காமல் கண்ணனைப் பார்த்தான். மந்திரம் கூறுவது போல் கண்ணன், “எழுந்திரு, உன் கால்களால் நில்! நீ முடவன் இல்லை” என்று திரும்பவும் கூறினான். தன் கைகளை அவன் பால் நீட்டினான். அந்தக் கைகளைப் பற்றிக்கொண்டு மாறாத பக்தியும், பரவசமும் முகத்தில் தெரிய கருடன் மெல்ல எழுந்தான். கண்ணனின் குரலில் தெரிந்த அதிகாரத் தொனி அவனுக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுக்கக் கண்ணனின் தோள்களைப் பற்றிய வண்ணம் எழுந்து நின்றான். கண்ணனோ அவன் கைகளைத் தோள்களில் இருந்து அகற்றிய வண்ணம், “என்னைப் பின் தொடர்ந்து வா!”என்று கூறி விட்டுச் செல்ல ஆரம்பித்தான். பக்திபூர்வமான பயத்தோடும், மாறாத ஆச்சரியத்தோடும் அவன் சுற்றத்தாரும் கூட்டத்தாரும் பார்த்துக்கொண்டிருக்க விநதேயன் தன்னையும் அறியாமல் ஒரு அடி எடுத்து வைத்தான். கண்ணன் கைலாகு கொடுக்க மேலும் சில அடிகள் நடந்தான் கருடன். கருடனின் தோள்களைச் சுற்றிக் கண்ணன் தன் கையைப் போட்டு அணைத்திருக்க மெல்ல மெல்ல நடந்தான் கருடன். பல வருடங்கள் கழித்து அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்த விநதை ஓடோடியும் வந்து கண்ணனின் கால்களைத் தன் கண்ணீரால் கழுவினாள்.
ithuthan garudan krishnanidam vantha kathaya
ReplyDeleteமுதல் பதிவை போலவே ரசனை மாறாமல் மீண்டும் ரசிக்க வைத்திருகிறது உங்களின் எழுத்து
ReplyDeleteஅருமை . பகிர்வுக்கு நன்றி
எல்கே,
ReplyDeleteசங்கர் இருவருக்கும் நன்றி.