எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 12, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2ம் பாகம்!

கண்ணன் விநதேயனைக் கண்டு கொண்டான்!


யோசித்து யோசித்துக் களைப்படைந்த விநதேயன், எவ்வாறேனும் கண்ணனைக் காண விரும்பினான். நிலவு தன் பூரண ஒளியை அந்த மலைப் பள்ளத்தாக்கில் வாரி இறைத்திருந்த்து. மரத்தின் இலைகளில் நிலவொளி பட்டு மின்னுவது வெள்ளிக் காசுகளைப் போல் தோன்றின. நதிகளில் நிலவொளி பட்டு நதி நீரும் வெள்ளியை உருக்கினாற்போல் தோற்றியது. சற்றே திறந்திருந்த கதவின் வழியாக இவை அனைத்தையும் பார்த்த விநதேயன், நிலவொளியும், காடும், கண்ணனைக் காண உடனே வா, ஏன் தாமதம் என்று கேட்பது போல் உணர்ந்தான். மெல்ல எழுந்து தன் முழங்கால்களால் வஜ்ராசனத்தில் அமர்ந்த நிலையில் உட்கார்ந்தான். தன் பக்கவாதம் வந்த கால் ஒரு பக்கமாய் நழுவ, தன்னிரு கைகளையும் தரையில் ஊன்றி மெல்லக் கீழே இறங்கினான். முன்னிரு கைகளையும் தரையில் ஊன்றிய வண்ணமே மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தான். மெல்ல, மெல்லக் கதவருகில் வந்த விநதேயன், தன்னுடைய நகரும் சப்தங்களால் அம்மா விழித்துக்கொண்டு விடுவாளோ எனப் பயந்தான். சற்று நேரம் பொறுத்துப் பார்த்து எவ்வித சலனமும் இல்லாமையால் அமைதி அடைந்தான்.

வெளியே தெரிந்த நிலவொளி, பொங்குமாங்கடல் போல் பொங்கிய அவன் உள்ளத்தை ஆசுவாசப் படுத்தியது. கொடுமையிலும், கொடுமையாக இளவயதில் இப்படிப் படுக்கையோடு படுக்கையாக ஆக்கிவிட்ட விதியை நினைத்து வருந்தினான். நிலவொளியால் ஊக்கமடைந்தாலும், எப்படி இவ்வளவு தூரத்தைக் கடப்பது என்று யோசனை ஏற்பட்டது. பாதி வழியில் ஏதேனும் ஆகிவிட்டால்?? ஆனால் தான் என்ன?? அந்த அழகான நீல நிற இளைஞனைப் பார்க்காமல் செத்தாலும் நல்லது தானே? அப்புறமாய் என்னுடைய ஆவி எந்தவிதத் தடையும் இல்லாமல் இந்த மலைச் சாரல்களில் ஆநந்தமாய்க் குதித்து ஓடி ஆடி விளையாடுமே. இறந்த பின்னும் என் கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப் படுமா என்ன? ஒருக்காலும் இராது. செத்தாலும் சரிதான். எப்படியேனும் அந்த நீலநிற இளைஞனைப் பார்த்தே ஆகவேண்டும். விநதேயன் தவழ ஆரம்பித்தான்.

காட்டுப் பாதையில் இது வரையிலும் இவ்வாறு தவழ்ந்து சென்று பழக்கமில்லாத அவன் மிருதுவான உள்ளங்கைகள், கீழே இருந்த கற்களும், பாறைகளும், முட்களும், புதர்களும் பட்டுப் புண்ணாகி ரத்தம் கசிய ஆரம்பித்தன. ஒரு புதரில் காட்டு மிருகம் ஒன்று, புலியோ, சிங்கமோ, அவனையே பார்த்துக்கொண்டிருந்த மாதிரித் தோன்றியது அவனுக்கு. அதோ, சற்றுத் தூரத்தில் ஊர்ந்து செல்வது?? பாம்பு, ஆம், பாம்பே தான்! அப்பாடி, எவ்வளவு நீளம்??? நல்லவேளை, நான் சற்றுத் தள்ளியே சென்று கொண்டிருக்கிறேனோ, பிழைத்தேன்! நிமிர்ந்த விநதேயன் கண்களில் மீண்டும் சந்திரன்! ஆஹா, இந்த நிலவுத் தேவதை! தேவனா, தேவதையா? எதுவாய் இருந்தாலும், எனக்காக அந்த வாசுதேவ கிருஷ்ணனிடம் சென்று சொல்லாதா? அல்லது வாசுதேவ கிருஷ்ணனே இந்த நிலவிடம் சொல்லி இருப்பானோ, என்னைக் கவனிக்கச் சொல்லி?? மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க சற்றே ஓய்வெடுத்த விநதேயன் சற்று நேரம் கண்களை மூடி இறைவனைப் பிரார்த்தித்தான். கொடிய காட்டு மிருகத்திடமிருந்தும், விஷ நாகத்திடமிருந்தும் தான் காப்பாற்றப் பட்டதை எண்ணிய அவனுக்கு ஆச்சரியம் மட்டுமின்றி நம்பிக்கையும் வந்தது.

தான் பட்ட சிரமங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைத்தான். அந்த இளம் கடவுளான ஸ்ரீகிருஷ்ண வாசுதேவனால் தான் இவ்வளவும் நடக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. அவன் தான் மானசீகமாக என்னை அழைக்கிறான். உடலில் புதுத் தெம்பு ஊற மேலும் தவழ்ந்தான் விநதேயன். பாறைகளின் சிறு கற்கள் கைகளில் குத்துவதையும், ரத்தம் வழிவதையும் சற்றும் லட்சியம் செய்தான் இல்லை. ஆஹா, இது என்ன?? சந்திரன் மறைகின்றதோ? ஆம், ஆம், அதோ கிழக்கே அருணோதயம் தென்படுகிறதே? எத்தனை சிவப்பு?? செக்கச் சிவந்து காணப்பட்ட அருணோதயத்தைப் பார்த்ததும் விநதேயனின் மனதில் குதூஹலம் தாண்டவம் ஆடியது. அவன் குலத்து உதித்தவனும், அவர்கள் குலதெய்வமும், அவர்களால் பிதாமகனாக மதிக்கப் படுபவனும் ஆன பொன் சிறகுகள் கொண்ட கருடன் என்ற சுபர்ணனுக்கு அண்ணன் அல்லவோ அருணன்?? அருணன் நமக்கும் நன்மையே செய்வான். செங்குத்தான சரிவு ஒன்றில் இறங்கிக் கொண்டிருந்தான் விநதேயன். மேலக் கடலில் இருந்து வந்த இதமான குளிர்காற்று முகத்தில் மோத அந்த மூன்று குடிசைகளையும் அடைந்தே விட்டான் விநதேயன். பரசுராமருக்கெனக் கட்டப் பட்டிருந்த குடிசை காலியாக இருக்கும் என்பது அவன் அறிவான். அந்தச் சரிவில் இருந்த சமவெளிப் பிரதேசத்தை அடைய கருடன் பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தான். சரிவில் இருந்து மேலே ஏறி அதை அடைய வேண்டும். பெரு முயற்சி செய்து பார்த்தான், செங்குத்தான பாறைக்கல் ஒன்றில் கை ஊன்றி மேலே ஏற முயன்றான். ஆனால் என்ன துரதிருஷ்டம்! கீழே இருந்த ஒரு பள்ளத்தில் விழுந்துவிட்டான். துக்கம் மனதைக் கவ்வ, பிரயாசையினால் ஏற்பட்ட உடல் சிரமம் உடலையும் மனதையும் தாக்க, அழ ஆரம்பித்தான் விநதேயன். மெல்ல மெல்லக் கருக்கிருட்டு மறைந்து விடிய ஆரம்பித்துக் கொண்டிருந்தது. ஆஹா, அந்த இளைஞனை என்னால் காணவே முடியாதா? திடீரென ஒரு பெரிய வலிமையான குரல் அந்தப் பள்ளத்துக்குள் கேட்டது. நிமிர்ந்து பார்த்த விநதேயன், ஒரு பெரிய ராக்ஷசன் போன்றவன் அவனுக்குச் சற்றும் புரியாத ஒரு மொழியில் கையில் ஏதோ ஒரு குச்சியை வைத்துக் கத்திக் கொண்டிருந்தது புலப்பட்டது. ஆஹா, அவன் இந்தப் பள்ளத்துக்குள் எப்போ வேண்டுமானாலும் குதித்து என்னைக் கொல்லப் போகிறான். நான் ஏதோ துஷ்ட மிருகம் என்று நினைத்து என்னைக் கொன்று விடுவான். இப்போ என்ன செய்வது?

காலை ஒளி மெல்லப் பரவ ஆரம்பிக்க, அந்த உருவம் ராக்ஷசன் இல்லை என்றும் அவனும் ஒரு இளைஞனே என்றும் ஆனால் உடல் வலுவும், மனவலுவும் நிரம்பப் பெற்றவன் என்றும் புரிந்தது விநதேயனுக்கு. அவன் தன் கையில் இருந்த நீண்ட கழியால் கீழே அவன் விழுந்திருந்த இட்த்தின் புற்களில் துழாவியதையும், அந்தக் கழி தன் உடலில் பட்டதும் தான் வலியில் கத்தியதையும் நினைவு கூர்ந்தான். மீண்டும் அந்த இளைஞன் அதே மாதிரி செய்வதையும் இப்போதும் அந்தக் கழி தன் உடலில் படுவதையும் உணர்ந்த விநதேயன் தன்னை அறியாமல், ஓலமிட்டான். அப்போது மேலே இருந்த இளைஞனின் கரத்தை எவரோ தடுத்து நிறுத்தியதை உணர்ந்தான். அவன் உள் மனம் அது அந்த இளவரசன் தான். வாசுதேவ கிருஷ்ணன் தான் என்று சொன்னது. ஆஹா, கிருஷ்ணா, கிருஷ்ணா, நான் மட்டும் உன்னைப் பார்க்க முடிந்தால்?? விநதேயனுக்கு இவ்வளவு நேரம் பட்ட சிரமங்களினாலும், கீழே விழுந்த அதிர்ச்சியினாலும் ஏற்கெனவே அரை நினைவாக இருந்தவன், இப்போது உணர்ச்சிப் பெருக்கில் முழுதும் நினைவிழந்தான். நினைவு வந்து விழித்த விநதேயனுக்குத் தன் காயங்கள் மருந்து கலந்த நீரால் கழுவப் படுவதும், மெல்லிய, உறுதியான, அதே சமயம் மிருதுவான இரு கரங்கள் மயிலிறகை விட மென்மையாக அவன் உடலின் காயங்களில் மருந்திடுவதையும் உணர்ந்தான். அவன் உடலில் வலிக்காத பாகங்களோ, காயங்கள் இல்லாத இடங்களோ இல்லை என்னும் அளவுக்கு உடலில் வலியும், காயமும். மெல்ல மெல்ல மிகுந்த சிரமத்தோடு தன் கண்களைத் திறந்து பார்த்தான் விநதேயன். ஆஹா, இது யார்?? இப்படி ஒரு நீலநிறமா? மனிதரில் இப்படியும் நிறம் உண்டா? ஆம், ஆம், இவன் அந்தக் கடவுளே தான். வேறு யாரும் இல்லை. இவன் தான் அந்த வாசுதேவ கிருஷ்ணனாக இருக்கவேண்டும், சந்தேகமில்லை.

கண்ணனை விழுங்குவது போல் பார்த்தான் விநதேயன். அந்தச் சிரிப்பு. உணர்ச்சிகள் ததும்பும் அந்தச் சிரிப்பு, மாயச் சிரிப்பு, உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. ஒளி வீசும் அந்தக் கண்கள்! அவற்றில் தெரியும் கருணைப் பெருவெள்ளம்! கண்ணனின் கண்களின் கருணை எல்லாம் அந்தச் சிரிப்பின் மூலமும், அவனிரு கைகளின் மூலமும் விநதேயனின் உடலில் ஓட ஆரம்பித்தன. அந்தக் கருணைப்பிரவாகத்தைத் தாங்க முடியாதவன் போல் விநதேயன் கண்களில் கண்ணீர் வெள்ளம். இது போதும், இது போதும், கண்ணனின் கருணை எனக்குக் கிடைத்துவிட்டதே! இனி நான் செத்தாலும் கவலை இல்லை. எதற்குக் காத்திருந்தேனோ அது எனக்கு இன்று கிடைத்துவிட்ட்து. கண்ணன் என்னை உணர்ந்து கொண்டான். என் பக்தியைப் புரிந்து கொண்டான். அவன் கருணை எனக்குக் கிடைத்துவிட்டது. ஆஹா, என்னை எவ்வளவு அன்பும், ஆதுரமும் தெரியப் பார்த்தான் கண்ணன்? எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் நான்? நொண்டியும், துரதிர்ஷ்டசாலியும் ஆன எனக்கு இன்று கடவுளின் பெருங்கருணைப்பேராற்றில் முழுகிக் குளிக்க முடிந்தது. அதில் இருந்து இனி எழுவேனா? அதிலேயே மூழ்கிப் போய்விடுவேன். ஆம், இனி எனக்கு வேறு எதுவும் வேண்டாம். இனி நான் இறந்தாலும் கவலை இல்லை. தன் கண்களை மூடிக் கொண்டான் விநதேயன். அவனுடைய ரத்தம் தோய்ந்த இரு கைகளும் கண்ணனை நோக்கிக் கூப்பிய வண்ணம் இருந்தன. அவற்றால் இப்போது கண்ணனின் இரு பாதங்களையும் இறுகப் பற்றிக் கொண்டான். அவன் கைகளில் இருந்து பெருகிய ரத்தத்தால் கண்ணனுக்குப் பாத பூஜை செய்தானோ? “ஐயனே, இனி நீ தான் எனக்கு அடைக்கலம்! உன்னைத் தஞ்சமடைந்தேன்!” என்றான். அவன் கண்கள் தானாக மூடிக்கொண்டன.

2 comments:

  1. விநதேயன் மீதான தங்களின் கழிவிரக்க
    உணர்ச்சியை அற்புதமாகவெளிப்படுத்தியிருக்கிறீர்கள் “கண்ணன்வருவான்...”
    என்னும் தங்கள் சிறுகதையில்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. வாங்க கலியுகன், கழிவிரக்கம்னு சொன்னது சிரிப்பைத் தருகிறது. என்றாலும் தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. உங்கள் பதிவுகளை ஒரு கண்ணோட்டம் விட்டேன், :)))))))))))))))))
    முதல் வருகைக்கு நன்றி.

    ReplyDelete