இம்முறை ஊருக்குப் போனப்போ பல வருடங்களுக்கு அப்புறமா முதல்முறையா ரயிலில் போனோம். பேருந்திலோ அல்லது காரிலோ போனால் பகல்வேளையிலே போகவேண்டி இருக்கு. அதோட ரயிலில் போறதுதான் எனக்கு வசதியாகவும் இருக்கு. ராத்திரி நிம்மதியாப்படுத்துத் தூங்கிட்டுப்போனால் காலையிலே ஊர் வந்துடும். அது மாதிரியே இம்முறை போனோம். ஏழே முக்காலுக்குக்கும்பகோணம் போகவேண்டிய வண்டி ஏழு மணிக்கே போயிடும் போல இருந்தது. அப்படி இப்படினு மெதுவாப் போய் ஒருவழியா ஏழேகாலுக்கு இனிமே என்னால முடியாதுனு டிரைவர் கொண்டு சேர்த்துட்டார். ஹோட்டல் அறைக்குப் போய்க் குளிச்சு அபிஷேஹ சாமான்கள் வாங்கித் தயாராகிட்டு வழக்கமான ஆட்டோவிலே கிளம்பினோம். வழியிலே அரசலாற்றைப் பார்த்தால் கண்ணிலே தண்ணி முன்னாடி வரும் ஆடிப்பெருக்கு வெள்ளம் போல் வருது. எவ்வளவு அகலமாய் ஒரு காலத்தில் இருந்த நதி! இன்று வாய்க்கால் போலச் சுருங்கி, ஒரே ஆகாயத் தாமரையும், பார்த்தீனியமுமாக இருக்கும் அகலத்தையும் சுருக்கிக் காட்டிக் கொண்டு பத்தடிக்கு நீர் உள்ளங்கால் நனையும் வண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. படம் இறங்கி எடுத்திருக்கணும். ஆனால் பத்தரைக்குள்ளாக போய்ச் சேரவேண்டும் என்பதால் வழியிலே நிறுத்த முடியலை. ஓடும் போது எடுத்தது முதல் இரு படங்கள்.
அங்கே குலதெய்வத்துக்கு வழிபாடுகளை முடித்துக்கொண்டு பின்னர் இப்போத் திருப்பணி நடக்கும் பெருமாள் கோயிலுக்குப் போனோம். கர்ப்பகிருஹத்தில் வேலை நடந்து கொண்டிருந்தது. இன்னும் கீழே தரை போடவேண்டும். விமானத்தில் சுதை வேலைப்பாடுகள் முடிந்திருக்கின்றன. அடுத்தடுத்து மழை வருவதால் வண்ணம் பூசுவது நிறுத்தி வச்சிருக்காங்க. முன் மண்டபம் செப்பனிடவேண்டும். கருடனுக்குப் புதிய மண்டபம் எழுப்பி இருக்காங்க. சந்நிதியின் உள்ளே இருந்த ஸ்ரீவேணுகோபாலருக்கு வெளியே தனி சந்நிதி. அநுமனும் எப்போவும்போல் தன்னிடத்தில் இருக்கிறார். அர்த்த மண்டபம் வேலை முடிந்துவிட்டது. அடுத்துப் பெரிய வேலை சுற்றுச் சுவர் தான். கிட்டத்தட்ட ஐநூறு வருடங்கள் முந்தைய கோயில் என்பதால் சுற்றுச்சுவரை அகலமும், நீளமுமாக எடுத்திருக்காங்க. இப்போ அதை முடிக்கணுமேனு நினைச்சா மலைப்பா இருக்கு. ஓரளவுக்குக் கொத்திட்டாவது பூசணும். எப்படினு புரியலை. அங்கே ஓரிடத்தில் பெரிய பள்ளம். என்னனு பார்த்தால் அங்கே ஒரு பெரிய கரையான் புற்று இருந்ததாகவும், அதை அழிச்சதில் இவ்வளவு ஆழமும், அகலமுமான பள்ளம் ஏற்பட்டிருப்பதாய்ச் சொன்னாங்க. கரையானை எப்படி ஒழிச்சீங்கனு கேட்டதுக்கு வேடுவனை வரவழைத்துத் தாய்ப்பூச்சியைப் பிடித்துப் போகச் சொன்னோம்னு பஞ்சாயத்துத் தலைவர் ரங்கசாமி கூறினார். எனக்கு இந்தச் செய்தி மிகப் புதியது. கரையானின் தாய்ப்பூச்சியைப் பிடித்துக் கொண்டு போய்விட்டால் மற்றப் பூச்சிகள் போய்விடுமாம். ஆகவே கரையானை ஒழிக்க வேடுவனை அழைக்கவேண்டும் என்பதும் அப்போத் தான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
திருப்பணிக்கான பண உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் திருப்பணிக்காக உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். பல இடங்களிலும் கேட்டிருக்கோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. பெருமாள் தான் தன் இருப்பிடத்திற்கான வேலையை நடத்திக்கொள்ளவேண்டும். இருந்தாலும் இழுத்துப் பிடித்துக்கொண்டு செய்து கொண்டிருக்கிறோம். இங்கே திருப்பணிப்படங்களைக் காணலாம். திருப்பணிப்படங்கள்
hmm padangalai piragu paarkiren. perumaal manathu vaitahl kudamulukiru varugiren
ReplyDelete//கரையானின் தாய்ப்பூச்சியைப் பிடித்துக் கொண்டு போய்விட்டால் மற்றப் பூச்சிகள் போய்விடுமாம்..//
ReplyDeleteகரையான் மட்டுமல்ல, தேனீக்களுக்கும் எறும்புகளுக்கும் இது பொருந்தும். தாய்ப்பூச்சியை ராணி என்றும் சொல்வதுண்டு.
பெருமாள் தன் வேலையைத் தானே நடத்திப்பார். கவலை வேண்டாம் எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்.