எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 02, 2011

மார்கழித் திங்கள், மதி நிறைந்த நன்னாள் 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

ஸ்ரீராமாநுஜர் துறவறம் வாங்கிக் கொண்டதும் தினமும் உஞ்சவ்ருத்தி எடுத்தே உணவு உண்டு வந்தார். தினமும் எல்லாப் பாசுரங்களையும் பாடிக்கொண்டே உஞ்சவ்ருத்தி எடுப்பது வழக்கம். மார்கழி மாதமென்றால் கேட்கவே வேண்டாம். ஆண்டாளின் திருப்பாவைக்குத் தான் முன்னுரிமை. தினந்தோறும் எல்லாத் திருப்பாவைகளையும் பாடினாலும் அந்த அந்த நாளுக்குரிய திருப்பாவையை விஸ்தாரமாக அநுபவித்துப் பாடி வந்தார். அன்றும் அப்படித்தான்,

இந்த" உந்துமதகளிற்றன்" பாடலைப் பாடிக்கொண்டே பிக்ஷைக்கு வந்தார். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு வீடாக பிக்ஷை எடுக்கிறார். அப்போது, "பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட" முடிந்து அடுத்து "செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப" என்னும் அடி பாடிக்கொண்டே ஒரு வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். சந்நியாசிகளுக்கே உரிய நிதானத்தோடும், கண்ணியத்தோடும் குனிந்த தலை நிமிரவில்லை. காதுகளில் சீரார் வளை ஒலிக்கும் சப்தம் கேட்கிறது. மீண்டும் செந்தாமரைக்கையால் சீரார் வளையொலிப்ப எனப் பாடுகிறார். செக்கச் சிவந்த தாமரை வண்ணக் கை ஒன்று கதவைத் திறக்கிறது. கையில் பிக்ஷை போட வைத்திருக்கும் பாத்திரம்.

பதினாறு வயது கூட நிரம்பாத ஒரு அழகிய மங்கை வந்து தன் செந்தாமரைக்கைகளால் சீரார் வளை ஒலிப்ப பிக்ஷை இட வந்தாள். ராமாநுஜர் பார்த்தார். பார்த்த கண்கள் நிரம்பின. பிக்ஷா பாத்திரம் கீழே நழுவிற்று. "என் அம்மா, என் தாயே!" என்றாராம். அப்படியே மூர்ச்சித்துக் கீழே விழுந்துவிட்டார். அந்தப்பெண் பதறிப் போக உள்ளிருந்து வந்தார் அந்தச் சிறுமியின் தந்தை. அவர் வேறு யாரும் இல்லை. திருக்கோஷ்டியூர் நம்பி என்னும் ஸ்ரீராமாநுஜரின் குருவே ஆவார். ஆசாரியர் வந்து பார்த்துவிட்டுச் சீடன் இருக்கும் நிலை புரிந்ததும், புன்னகை புரிந்தார். கூட வந்தவர்களைப் பார்த்து, "உந்து மத களிற்றனில், சீரார்வளை ஒலிப்ப " என்ற வரிகளில் அநுசந்தானமோ?" என்று கேட்டாராம். உடன் வந்தவர்கள் ஆச்சரியத்தால் திகைத்துப் போய் ஆமெனத் தலை அசைக்க, திருக்கோஷ்டியூர் நம்பி விளக்குகிறார்.

"இந்தப் பாடல் ஆண்டாள் ஸ்ரீமஹாலக்ஷ்மியைக் கண்ட நிகழ்வைப் பற்றிப் பாடியது. அதுவும் அவள் தன் பதியோடு சேர்ந்திருக்கும் சமயம் பார்த்து அவள் கருணா கடாக்ஷம் இருந்தாலே நமக்கு உய்வு என்பதை உணர்ந்து பாடியது. கண்ணனை யாசித்த ஆண்டாள் அவனைத் தனக்குத் தரக்கூடிய வல்லமை கொண்டவள் ஸ்ரீயாகிய மஹாலக்ஷ்மித் தாயே என்பதை உணர்ந்து அவளிடம் விடுத்த வேண்டுகோள் இது. அத்தகைய பாடலை உணர்ச்சியோடு பாடி வந்த ஸ்ரீராமாநுஜர் இங்கே என் பெண்ணைப் பார்த்ததும், ஸ்ரீயையே நேரில் கண்ட உணர்வைப் பெற்றிருக்கிறார். அதனால் வந்த மயக்கம் இது." என்று கூறிவிட்டு சீடரை ஆசுவாசப் படுத்தி எழுப்பினாராம். அத்தகைய அபூர்வமான பாசுரம் இது.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!= நப்பின்னைப் பிராட்டி நந்தகோபனுக்கு மருமகள் என்றும் ஏழு எருதுகளை அடக்கிவிட்டுக் கண்ணன் அவளை மணந்தான் என்றும் செவிவழிச் செய்திகள் பல கூறுகின்றன. பாகவதத்திலோ, மற்றக் கண்ணன் கதைகளிலோ இது பற்றிக்குறிப்புகள் இல்லை எனினும் தமிழ்நாட்டு மரபை ஒட்டி ஆண்டாள் நப்பின்னையைப் பற்றிக் கூறி இருக்கிறாள் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். யசோதையின் அண்ணன் ஸ்ரீகும்பன் என்பவரின் மகள் என்றும் சொல்வார்கள். ஸ்ரீமஹாலக்ஷ்மியைக் குறிப்பதாயும் பொருள் கொள்வார்கள்.

இது வரைக்கும் தோழிகளை எழுப்பிக்கொண்டு, பின்னர் நந்தகோபன் அரண்மனைக்கு வந்து வாயில்காப்போனிடம் அநுமதி பெற்று உள்ளே நுழைந்து நந்தகோபனை எழுப்பிப் பார்த்து யசோதையையும் எழுப்பிப் பார்த்தாயிற்று. ம்ஹும், ஒண்ணும் அசையலை. பலராமனுக்கும் அசையவே இல்லை. ஒரே வழி, கண்ணனின் மனைவி காலில் விழுவது தான். நப்பின்னையின் கருணை துளி கிடைத்தால் போதுமே! நம்ம வீட்டிலேயே நமக்கு ஏதானும் வேணும்னா நேரடியா அப்பாகிட்டே கேட்பது வெகுசிலர்தான் இருப்பார்கள். எல்லாருமே அம்மா மூலமாத் தானே அப்பாவிடம் விண்ணப்பம் வைப்போம்.

பலமுள்ள பல களிறுகளை, யானைகளை அடக்கும் தோள்வலிமை கொண்ட நந்தகோபனின் மருமகள் ஆன நப்பின்னைப் பிராட்டியே

கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்= நல்ல நறுமணமுள்ள பூக்களைச் சூடி, வாசனாதித் திரவியங்களைப் பூசிக்கொண்டதால் எப்போதுமே மணம் வீசும் குழலைக் கொண்டவளே, அல்லது எந்நேரமும் கண்ணனைப் பிரியாமல் இருப்பதால் கண்ணனின் அருளாகிய நறுமணம் பூராவும் உன்னிடமும் நிறைந்திருப்பதால் நீயே நறுமணமுள்ளவளாய் இருக்கிறாயே என்றும் கொள்ளலாம். வாசல் கதவைத் திற அம்மா, எனக் கேட்க, அவளோ என்ன அவசரம் விடிந்துவிட்டதா? என்று கேட்கிறாள்.

ஆஹா விடியாமல் என்னம்மா? கோழிகள் கத்துகின்றனவே, தெரியலையா? உன் வீட்டு மாதவிக்கொடி படர்ந்து இருக்கும் மாதவிப் பந்தல் மேல் பலவேறு விதமான தொனிகளில் குரல் கொடுக்கும் குயிலினங்கள் கூவிக்கொண்டிருக்கின்றனவே கேட்கவில்லையா?

பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!= எல்லாம் சொல்லியும், கேட்டுக்கொண்டு இருக்கும் அவளிடமிருந்து பதிலே இல்லை. கொஞ்சம் எட்டிப் பார்க்கிறார்கள். அவள் ஒரு கையில் பந்தை வைத்துக்கொண்டு இன்னொரு கையால் கண்ணனை அணைத்துக்கொண்டு படுத்திருக்கிறாள். அவள் எழுந்து கண்ணனை அனுப்பவேண்டும். கண்ணனும் வரவேண்டும், அவளும் வரவேண்டும். என்ன செய்யலாம்?? பந்தை வைத்துக்கொண்டு கண்ணனோடு விளையாடிக்கொண்டிருந்துவிட்டு அப்படியே தூங்கிட்டாள் போல, "அடி பந்தை வைத்துக்கொண்டிருக்கும் பெண்ணே, உன் மைத்துனன் ஆகிய பலராமன் சிறப்பையும், கூடவே கண்ணனின் சிறப்பையும் பாடவேண்டி, நீ உடனே வா. உன் அழகான செந்தாமரை மலர்போன்ற கைகளால் உன் கைகளில் நீ அணிந்திருக்கும் வளைகள், ஜல் ஜல் என ஒலி எழுப்ப, ஓடி வந்து கதவைத் திறந்தால் நாங்கள் அனைவரும் மகிழ்வோம் அம்மா. உன் கருணா கடாக்ஷம் ஆகிய கதவைத் திற. பகவானின் திவ்ய செளந்தரியத்தில் அதன் அழகில் நாங்கள் எங்களை மறந்து பாடி ஆடுகிறோம்.

இதை பட்டத்திரி கூறுவது எப்படி எனில், கண்ணனிடம் மாறாத பக்தி பூண்டவன் தனக்குத் தானே துணைவன் ஆவான் என்கிறார்.

க்ஷூத் த்ருஷ்ணா லோபமாத்ரே ஸததக்ருத தியோ ஜந்தவ: ஸந்த்யநந்தா:
தேப்யோ விஜ்ஞாநவத்த்வாத் புருஷ இஹ வரஸ்தஜ்ஜநிர்துர்லபைவ:
தத்ராப்யாத்மாத்மந: ஸ்யாத்ஸூஹ்ருதபி ச ரிபுர்யஸ்த்வயி ந்யஸ்தசேதா:
தாபோச்சித்ருபாயம் ஸ்மரதி ஸ ஹி ஸுஹ்ருத் ஸ்வாத்மவைரீ ததோந்ய:

ஆடு, மாடுகளிலிருந்து எல்லாருக்கும் பசி, தாகம் உண்டு. தாவரங்கள் கூட நீர் ஊற்றினாலோ, எருக்கள் போட்டாலோ தான் பலன் தரும். ஆகவே இந்தப் பசி, தாகம், மற்ற உணர்வுகள் என்று இந்த உலகத்தில் வாழும் அனைத்துவிதமான ஜீவராசிகளும் அதைத் தீர்த்துக்கொள்வதிலேயே முயல்கின்றனர். அவங்க நேரமும், கவனமும் அதிலேயே இருக்கின்றன. இவர்களுக்குள்ளே மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆறாம் அறிவு உண்டு. அந்தப் பகுத்தறிவினால் மனிதன் எது நன்மை, எது தீமை என்பதைப் புரிந்து கொள்கிறானா? இல்லை.

கிடைத்தற்கரிய இந்த மனிதப் பிறவியை மனிதன் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தனக்குத் தானே கேடு விளைவித்துக்கொண்டு தனக்குத் தானே சத்ருவாகிறான். நன்மை செய்துகொண்டால் நண்பனும் ஆகிறான். ஆகவே நாம் பகவானிடம் உண்மையாகவும், ஒரே தியானமாகவும் மனதைச் செலுத்தி, இந்தப் பிறவியாகிய மாபெருங்கடலில் இருந்து அதைக் கடக்கும் வித்தையை, உபாயத்தை ஆலோசித்துக் கேட்டுக்கொண்டு அதன் படி நடந்தால் மனிதன் தனக்குத் தானே துணைவனும் ஆவான். இல்லை எனில் அவனுக்கு அவனே பகைவன்.

6 comments:

  1. ஸ்ரீராமானுஜர் பற்றிய குறிப்பை படித்த போது மேனி சிலிர்த்து கண்கள் பெருகி விட்டன. பொருளை மட்டும் இடாது, தொடர்புடைய செய்திகளுடன் இடுவது உங்கள் தனிச் சிறப்பு. நன்றி அம்மா.

    ReplyDelete
  2. இன்றுதான் இந்தப் பதிவைக் காணப் பெற்றேன். இதையே நானும் போட்டிருக்கிறேன் என்பது இப்போதுதான் தெரிகிறது. சுட்டிக்கு நன்றிகள் கிர் கீதாம்மா.

    ReplyDelete
  3. இந்தச் சுட்டியும், இன்னொரு சுட்டியும் கிடைத்தது. இந்தப் பதிவை இப்போதுதான் படிக்கிறேன். நல்ல விளக்கம்.
    ஸ்ரீராமானுஜர் எப்போதுமே திருப்பாவையை அனுசந்தித்துக்கொண்டே இருப்பாராம். அதனால் அவருக்கு திருப்பாவை ஜீயர் என்று பெயர் என்றும் சொல்லுவார்கள்.

    ReplyDelete
  4. இப்ப தான் இது மாதிரி ஒரு நிகழ்வு நடந்ததை படிக்கிறேன்.

    அத்ருச்யம் அவ்யக்த்ம் என்பது சத்யம்

    நேரடியா பார்க்கறாப்போல் இருக்கிறது வர்ணனை.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.

      Delete
    2. இதிலே திருக்கோஷ்டியூர் நம்பி என்று வரும் இடத்திலே "பெரிய நம்பி" என மாற்றிக் கொள்ள வேண்டும். நேற்றுத் தான் திரு ரிஷபன் அவர்கள் தவறைக் கண்டு பிடித்துத் திருத்தினார். எனக்கு நம்பி என்று தான் நினைவில் இருந்ததால் திருக்கோஷ்டியூர் நம்பி என எழுதி விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும். :(

      Delete