எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 12, 2011

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தாரே! தொடர்ச்சி!


அன்று கொட்டும் மழையில் கூட பிக்ஷாடனர் வீதிவலம் வந்திருக்கிறார். அதன் பின்னர் மறுநாள் தேரில் ஏறப் போகும் நடராஜருக்குத் தேர் ஓடும் வீதிகள் அனைத்தும் செளகரியமாய் இருக்கானு பரிசோதனையைச் சந்திரசேகரர் நட்ட நடுராத்திரியில் வீதிவலம் வந்து எல்லாத்தையும் செக் பண்ணுகிறார். முழிச்சுண்டு இருந்து அவற்றை எல்லாம் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்த நான் நல்லாத் தூங்கிட்டேன். காலையில் நாலு மணிக்கே கொட்டுக் கொட்டுனு எழுந்த ரங்க்ஸ் லாட்ஜின் பணியாளரிடம் வெந்நீர் போடச் சொல்ல, அவரும் கீசரை ஆன் செய்தார். அந்தச் சத்தத்தில் நான் விழித்துக்கொண்டேன். ரங்க்ஸ் காப்பி சாப்பிட வரியானு கேட்க, இந்த அஜந்தா படியில் ஏறி, இறங்கும் அசெளகரியத்தை நினைத்து நான் காப்பியைத் தியாகம் செய்தேன். ரொம்பச் சொல்லிப் பார்த்துட்டு அவர் மட்டும் காப்பி சாப்பிடப்போனார். நான் அவர் வரதுக்குள்ளே குளிச்சுத் தயாராகலாம்னு நினைச்சால் கதவை யாரோ தட்டறாங்க. யார்னு கேட்டால் லாட்ஜின் பணியாளர். கதவைத் திறக்கலாம்னு பார்த்தா அது தானே பூட்டிக்கொள்ளும் பூட்டு. பூட்டிக்கொண்டிருக்கு போல! அடக் கடவுளே, இப்போ என்ன செய்யறது? சாவியும் உள்ளே இல்லை இருக்கு? உள்ளே இருந்து திறக்கும் முறை தெரியாதே? குழப்பத்துடன் இங்கே இருந்து நான் திறக்க, வெளியே இருந்து அந்த ஆள் திறக்கப் பத்து நிமிடப் போராட்டத்துக்குப் பின் கதவு திறந்தது. என்ன விஷயம்னு கேட்டால் காப்பி வாங்கித் தரவா? சார் போறச்சே சொல்லிட்டுப் போனார் என்கிறார். வந்த கோபத்தில் பேசாமல் கதவைச் சார்த்திக்கொண்டு பூட்டை நீக்கிட்டுத் தான் உள்ளே வந்தேன். எதுக்கும் ரங்க்ஸ் வந்ததுமே குளிக்கப் போலாம்னு உட்கார்ந்திருந்தேன். அவர் வந்ததும் கதவு புராணம் பாடிட்டுக் குளிக்கப் போனேன். அப்புறம் இரண்டு பேரும் குளிச்சுத் தயாரானதும் நாலரை மணி போல் கோயிலுக்குக் கிளம்பினோம்.

இவ்வளவு சீக்கிரமாப் போறோமே, செருப்பு வைக்கும் இடம் திறந்திருக்குமா? கோயிலில் யாரு இருப்பாங்க? தெருவில் நடமாட்டம் இல்லையேனு யோசிச்சுக்கிட்டே போனேன். நாங்க இருந்த பகுதியில் தான் நடமாட்டம் குறைவு. கொஞ்சம் தள்ளிப் போனதும், தேர்முட்டிக்கு முன்னால் ஆரம்பிச்சுச் சாரி சாரியாக மக்கள் கோயிலுக்கு உள்ளே போய்க்கொண்டிருந்தார்கள். அட? இவ்வளவு பேரா போறாங்க? ஆச்சரியமாய் இருந்தது. போகும் வழியிலேயே திறந்திருந்த ஒரு கடையில் காப்பியும் சாப்பிட்டுவிட்டு இருவரும் கீழவாசலுக்குப் போனோம். செருப்பு வைக்கும் இடம் திறந்திருந்தது. அப்போது வரையிலும் செருப்பு ஒரு ஜோடிக்கு ஒரு ரூபாய் தான் வசூலித்துக்கொண்டிருந்தார். ஆனால் இரவு ஒன்பது மணிக்குள்ளாகச் செருப்பை எடுத்துக்கொண்டுவிடவேண்டும். இல்லை எனில் மறுநாள் தான் எடுக்க முடியும். அக்கம்பக்கம் சுற்று வட்டாரமெல்லாம் அன்றும், மறுநாளும் பள்ளி, அலுவலகம் விடுமுறை. போக்குவரத்தெல்லாம் திசை திருப்பப் பட்டிருந்தது. மிகச் சிறப்பான ஏற்பாடுகள் நகராட்சியால் செய்யப் பட்டிருந்தது என்பதை மறுக்கவே முடியாது. முக்கியமாய் முதல்நாள் கோபுரவாசலிலும், சிவகங்கைக்கரையிலும் இருந்த திடீர்க்கடைகளில் போட்ட மிளகாய் பஜ்ஜி, பக்கோடா போன்ற தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அங்கேயே மக்கள் போட்டிருந்த குப்பையை மறுநாள் காலை நாலு மணிக்குள்ளாக அகற்றிச் சுத்தம் செய்ததோடு இல்லாமல் ப்ளீச்சிங் பவுடர், கொசுமருந்து போன்றவை அடித்துச் சுத்தமும் செய்திருந்தனர். எல்லாக் கடைகளும் திறந்து எல்லாக் கடை வாசலிலும் நடராஜரின் படமும், பூரணகும்பமும், ஆரத்தியும் கற்பூர ஆரத்தி, தேங்காய் உடைத்தல் மண்டகப்படி செய்பவர்கள் அதற்கான ஏற்பாடுகள் என்று சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தனர். பெரிய பெரிய மோப்ப நாய்கள், கிட்டத்தட்ட நானூறு போலீஸார் உள்ளே இருந்தனர். மெடல் டிடெக்டர் பொருத்திக்கொண்டிருந்தார்கள். நாங்க பாட்டுக்குப் போனோம். ஒண்ணும் சொல்லலை. வழியைப் போகிறவங்களுக்கு ஒண்ணு, வரவங்களுக்கு எதிர்த்திசைனு பிரிக்கக் கயிறு கட்டிட்டு இருந்தாங்க.

நடராஜர் சித்சபையில் இருந்து வெளியே வரும் கோபுரம் பழங்கள்,காய்களால், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கே போய் நிற்கலாம் என்றால் கூட்டம் அதைத் தாண்டி வந்து விட்டது. ஆயிரங்கால் மண்டபம் செல்லும் வழியெல்லாம் இரண்டு பக்கமும் வழிவிட்டு ஜனங்கள், ஜனங்கள், ஜனங்கள். உள்ளே போகலாமோ என யோசித்தால் எல்லாரும் உள்ளே போகவேண்டாம் நெரிசல் இருக்காதென்றாலும் லேசில் வெளியே வரமுடியாது. ரொம்பக் கஷ்டம் என்றார்கள். எங்கள் தீக்ஷிதரும் அதுதான் சொல்லி இருந்தார். அவர் சொன்னது கீழவாசலுக்கு எதிரே இருக்கும் கிணற்றில் சுற்றிப் போட்டிருக்கும் பெரிய மேடையில் நின்று கொண்டு பார்க்கலாம். உள்ளே இருந்து படிகளில் ஏறிவரும்போதும் பார்க்கலாம். பின்னர் விட்டவாசல் வரை போறதையும் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தார். தீக்ஷிதருக்கு என் கணவர் ஐம்பது வருஷப் பழக்கம் என்றாலும் இந்த விஷயத்தில் தெரிஞ்சவங்க யாராய் இருந்தாலும் முன்னுரிமை கிடையாது. அவங்க குடும்பத்தின் மற்ற நபர்கள் கூட இப்போ நாங்க பார்க்கிறாப் போல் தான் பார்த்தாகணும்.

சித்சபையில் அன்றைய தினம் யார், யாருக்கு வேலை இருக்கிறதோ அவங்களும் நடராஜருக்கு அலங்காரம் செய்யும் எட்டு தீக்ஷிதர்களும், தலைமை ஆசாரியரும், மற்றும் அன்றைய கட்டளைக்காரர்களுமே தான் அருகே இருக்க முடியும். மற்றத் தொண்டர்களில் இயன்றவர்கள் கூடவே செல்கின்றனர். அதுக்குத் தனி பலமும், திறமையும் வேண்டும் என்றாலும் யாரும், யாரையும் தடுப்பது என்னமோ இல்லை. கிட்டப்போய்ப் பார்க்கிறதெல்லாம் நம்ம திறமை, சாமர்த்தியம். ஆனாலும் உள்ளே செல்வதில் உள்ள சில ஆபத்துக்களை நினைத்து அதைத் தவிர்த்தோம். கிணற்று மேடையில் இருந்து எதிரே சித்சபையும் உள்ளே நடக்கும் ஆராதனைகளும், அங்கே ஏற்றி இருந்த தீவட்டி வெளிச்சத்தில் தெரிந்தது. சற்று நேரத்தில் கொட்டுக் கொட்டுவதில் தெரிந்த வித்தியாசமும், ஜனக்கூட்டத்தின் பரபரப்பும் நடராஜர் வெளியே வரும் நேரம் வந்துவிட்டதை உணர்த்தியது. உள்ளே இருந்து வந்த பிள்ளையார் ரொம்பவே வேகமாய் வெளியே போய் அவரோட தேருக்குப் போய் விட்டார். இதே போல் சுப்ரமணியரும்.

கொம்பு வாத்தியத்தின் ஓசையும், எக்காளத்தின் ஓசையும், சங்கின் முழக்கமும் அதிகரித்தது. முதலில் தீவட்டிக்காரர்கள் பெரிய திருவாச்சி போன்ற தீவட்டிகளில் எண்ணெய் ஊற்றி எரிய எரிய அதை எடுத்துக்கொண்டு ஓடி வந்தனர். நடராஜர் சுற்றிலும் நெருப்பின் நடுவே ஆடுகிறார் அல்லவா? அதைச் சுட்டும் விதமாக இது! நடராஜரைச் சுற்றிக் காணப்படும் திருவாச்சியே அக்னி ரூபம் என்பார்கள். கிட்டத் தட்ட அதே மாதிரியில் திருவாச்சியில் தீபங்களை ஏற்றிக்கொண்டு தீவட்டிக்காரர்கள் ஒரு தாளலயத்தோடு ஓடி வர, அம்மன் திருவாச்சிக்கும் அவ்வாறே எடுத்துக்கொண்டு வேறொரு குழு வந்தது. அம்மனோடு சிறியது.

வாத்தியக்குழு அடுத்து வர, பின்னர் வேதகோஷங்கள் முழங்க வேதியர்கள் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் தேவார, திருவாசகங்கள் ஓதும் குழுவினர் வர, பொதுமக்களில் சிலர் ஆடிப்பாடிக்கொண்டு வந்தனர். நடராஜர் சித்சபையில் இருந்து எந்தவாசல் வழியாக இறங்கினார் என்பதை இங்கிருந்தே சொல்ல முடியவில்லை. ஆனால் கூட இருந்த மக்கள் இடப்பக்கமாய் இறங்கிப் பிராஹாரம் சுற்றிக்கொண்டு வெளியே வருவார் என்றனர். ஆகவெ அதுமாதிரியே சுற்றிவருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரத்தில் கூட்டத்தினரின் "ஹாஹா"காரம் உச்சகட்டத்தில் எழுந்தது. பலரும் ஆடிக்கொண்டிருந்தனர். காணக்கிடைக்காத காட்சி. ஆனால் கண்டிப்பாய்க் காமிரா தடை செய்யப் பட்டிருந்ததால் அந்தக் காட்சிகளை எல்லாம் எடுக்க முடியவில்லை. ரொம்பவே வருத்தம்.

கட்டளைக்காரர்கள் அனைவரும் சிறப்பான அலங்காரத்தில் நடராஜரைப் பார்த்த வண்ணமே பாடல்கள் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பின்னாலேயே நடந்து வர, நடராஜரின் பல்லக்கில் ஆட்டமான ஆட்டம்! அது என்ன ஆட்டம், என்ன ஆட்டம்? ஆடிக்கொண்டு நடராஜர் வந்தார்.

மானாட மழுவாட மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட
கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட
வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே!

முதல் நாள் போலவே இன்றைக்கும் கண்ணீர் வந்தது. ஒரு நிமிடம் இந்த ஆட்டத்தை நிறுத்திவிட்டானென்றால் என்ன ஆகும்?? நாம் வாழ, அவன் ஆடுகிறானே? நேற்று நாம் வாழப் பிச்சை எடுத்தான். இன்று நாம் வாழ அவன் ஆடுகின்றான். அந்த ஆட்டத்தில் தானே நம் இயக்கமே இருக்கிறது! கண்ணார, மனமாரக் கண்டோம் காட்சியினை. மெல்ல மெல்ல மெதுவாகத் தான் செல்கின்றார்கள். அதோடு இருபக்கமும் இருக்கும் மக்கள் பார்க்கும் வண்ணம் வசதியாக இப்படியும், அப்படியும், இடமும், வலமும் பல்லக்குத் திரும்பித் திரும்பித்தான் செல்கிறது. விட்ட வாசலுக்குப் போனதும் கூட்டமெல்லாம் தேர்முட்டிக்கு ஓடியது. கூட்டத்தில் செல்லவேண்டாம் என்று நாங்கள் சற்று நேரம் நின்றுவிட்டுப் பின்னர் வெளியே செல்லலாம் என்று தோன்றியபோது வெளியே வந்தோம். என்ன ஆச்சரியம்! அருகே இருந்து பார்க்கமுடியலையே என்ற என் வருத்தத்தைப் புரிந்து கொண்டாற்போல் எங்கள் எதிரே கோபுரவாசலில் இருந்த கடையின் மண்டகப்படியை ஏற்ற வண்ணம் நடராஜர் ஆடிக்கொண்டிருந்தார். ஆஹா, மீண்டும் அதிசயக் காட்சி. அங்கேயே நின்றுவிட்டோம். பின்னர் பத்து நிமிஷம் கழிச்சு நடராஜர் தேருக்குப் போனார். நாங்கள் சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டுக் கூட்டம் குறைந்ததும் தீக்ஷிதர் வீடு நோக்கிப் போனோம்.

தேர் முதலில் அவர்கள் வீடு இருக்கும் பக்கம் தான் வரும் என்றும், பின்னர் தெற்கு வீதி வழியாக மேலவீதிக்குப் போய் வடக்கு வீதிக்கு ஈசான்யமூலைக்கு வரும்போது மாலை நாலு மணிக்கு மேல் ஆகும் என்றும் தீக்ஷிதர் தெரிவித்தார். ஈசான்யமூலையில் தேர் திரும்பும்போது பார்ப்பது நன்மை பயக்கும் என்றும் ,மாலை நாலு மணி அளவில் அங்கே போய்ப் பார்க்குமாறும் கூறினார். மேலும் அப்போது சிறிது நேரம் கழித்து அவர்கள் வீட்டு வாசலில் நடராஜர் மண்டகப்படிக்கு அரை மணி நேரம் நிற்பார் என்றும் தேரை அருகே இருந்து பார்க்கலாம் எனவும், முடிந்தால் வடமும் பிடிக்கலாம் என்றும் கூறினார். ஆகவே அவசரம் அவசரமாய்க் காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டோம். மீண்டும் அறைக்கு மேலே செல்லக் கணவர் விரும்ப நானோ மேலே ஏறமாட்டேன் என்று சொல்லிவிட்டு நிவேதா பதிப்பகம் போட்டிருந்த புத்தகக் காட்சிக்குப் போய்விட்டேன். மேலே போய்விட்டு அங்கிருந்து காமிராவை எடுத்துக்கொண்டு வந்தார். தேர்வரும்பாதையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்மணிகளையும், சிறுவன் ஒருவனையும் படம் எடுக்கப் போனால் தீக்ஷிதர்கள் நாலைந்து பேர் தேர்விழாமல் எடுக்கவேண்டும் என்று சொல்ல, கொஞ்சம் யோசித்துவிட்டு ஒரு மாதிரியாகக் கோலம் போடுவதை மட்டும் எடுத்துக்கொண்டேன். தேர் கொஞ்சம் நகர்ந்திருந்தது. யாரானும் மெதுவா நடந்தா, தேர் மாதிரி ஆடி, அசைந்து வரா பாரும்பாங்க. அது நிஜம் என்பதை நிரூபிப்பது போல் தேரின் தொம்பைகள் ஆட, கொடி பறக்க தேர் குலுங்கக் குலுங்க மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது.

1 comment:

  1. neril senru paarththadhu pola irundhadhu!satru brammippaaga kooda irundhadhu...swami darisanam neril kandadhu pola oru negizhchchi!

    ReplyDelete