எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 12, 2014

வந்துட்டோமே வீட்டுக்கு!

நாம் பம்பாய் பயணத்தைத் தொடரலாம். ரொம்பப் பேருக்குச் சந்தேகம் வருது, நான் எப்படி அம்மாதிரியான நிலையில் ஆட்டோவில் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ஏறினேன் என்று. பொதுவாக எங்க வீட்டில் முடிவு எடுப்பது என் கணவர்தான் என்றாலும் அப்போது அவர் இல்லை. நானே முடிவு எடுக்கணும். இங்கே உட்காருவதை விட போரிவிலி போனால் அங்கே போய்ப் பார்க்கலாம் அல்லது ஸ்டேஷனிலேயே வெயிட்டிங் ரூமில் தங்கிக் கொண்டால் மறுநாள் லோக்கல் வண்டியில் அலுவலகம் செல்ல என் மைத்துனர்கள் இருவருமோ அல்லது என் ஓரகத்தியோ அல்லது மூவருமோ வருவார்கள். அங்கே வந்துதான் ஆகணும். லோக்கல் வண்டியில் போய்ப் பார்க்கலாம் என்பதும் ஒரு காரணம். ஆனால் இது எல்லாம் வெளியில் சொல்லிக்கலை.

ஆட்டோ டிரைவர் ரொம்பவே நல்லவராக அமைந்தது எங்கள் அதிர்ஷ்டம். பொதுவாய் அங்கே எல்லாம் அவ்வளவு ஏமாற்ற மாட்டார்கள் என்றாலும் இவர் நன்கு படித்தவர். எம்.ஏ.படித்துவிட்டு மேற்கொண்டு ஆராய்ச்சிப் படிப்புப் படித்துக் கொண்டு இருந்தார். வண்டி மலைப்பாதையில் போவதால் என்பெண்ணை முதலில் கம்பிக்குப் பக்கத்திலும், நான் நடுவிலும் பையரை  ஓரத்திலும் உட்காரச் சொல்லிவிட்டுக் கயிறைக் கொடுத்து இறுக்கிப் பிடித்துக்
கொள்ளச் சொன்னார். கொண்டை ஊசி வளைவுகளில் ஆட்டோ சக்கரம் கார், வான், பஸ் மாதிரி மெதுவாய்ப் போகாது. கொஞ்சம் வழுக்கும் ஆகவே பிடித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துக் கொண்டே வந்தார். வழி சரியான வழிதான் என்று எங்கள் கூட வந்தவர்களின் வண்டி முன்னால் போனதில் இருந்து தெரிந்தது. இருந்தாலும் நான் எனக்குத் தெரிந்த ராமநாமாவையும், கந்த சஷ்டி கவசத்தையும் மாறி மாறி சொல்லிக் கொண்டே வந்தேன்.

கொஞ்ச நேரத்தில் வந்து விடும் என்று நினைத்தால் டிரைவர் 21/2 மணி நேரம் ஆகும் என்றார்.மலைப்பாதை முடியவே ஒரு மணி நேரம் ஆனது. பிறகும் பாதையில் ஏற்ற இறக்கங்கள். எல்லாம் முடிந்து போரிவிலி வருகிறது என்று டிரைவர் சொல்லும்போது அங்கே ஒரு ட்ராஃபிக் போலீஸ்காரர் வந்து எங்கள் வண்டியையும் முன்னால் போன வண்டியையும் நிறுத்தினார்.எங்க ஆட்டோவை நிறுத்தின போலீஸ்காரர் ஆட்டோ டிரைவரிடம் லைசென்ஸ் கேட்டார். லைசென்ஸ் குஜராத் மாநிலத்துக்குள் மட்டுமே ஓட்டக் கூடியதாய் இருந்திருக்கிறது. ஆகவே எங்களை போரிவிலிக்குள் கூட்டிப் போக முடியாது எனத் தெரிவிக்க, நாங்கள் ஸ்டேஷன் பக்கம் இறங்கிக் கொண்டு அனுப்புவதாய்க் கேட்டுக் கொண்டு லெவெல் க்ராஸிங் தாண்டியதும் ஸ்டேஷன் வாசலில் இறங்கிக் கொண்டோம். சாமான்களை இறக்கி நாங்களும் இறங்கி ஆகி விட்டது. ஒரே ஆட்டோக்களும், டாக்ஸிகளுமாய் நின்று கொண்டிருந்தது. ஆனால் விலாசம் தெரியாமல் இனி என்ன செய்வது? பையன் போய் ஸ்டேஷனில் உள்ளே பார்த்து விட்டு வந்தான். ஸ்டேஷன் வெறிச்சோடிக் கிடந்தது. யாரைக் கூப்பிடுவது எனத் தெரியாமல் நாங்கள் தவித்துக் கொண்டு பொது தொலைபேசியில் போய் விலாசங்களைப் பார்த்தால் உறவினர் யாருடைய விலாசமாவது கிடைக்கும். அவங்க யார் கிட்டேயாவது சொல்லலாமான்னு யோசித்தோம். அதைச் செயல்படுத்தலாமா வேண்டாமான்னு எங்களுக்குள் தீவிர விவாதம். அதுக்குள் என் பெண் பக்கத்தில் ஒரு வண்டி கிளம்புவதற்கு யாரோ வருவதைப் பார்த்து விட்டுக்கொஞ்சம் நகர்ந்து இடம் விட்டவள், "சித்தப்பா, அம்மா, சித்தப்பா, அங்கே பாரு சித்தப்பா" என்று கத்தினாள். நான் திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தால் சற்றுத் தூரத்தில் ஒரு வாடகை வண்டி பால்கருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது. நாங்கள் வந்த வண்டி அங்கே நின்றிருக்கும் விஷயம் இவர்களுக்குத் தெரிந்த படியால், நாங்கள் வண்டியிலேயே இருப்போம் என்று நினைத்துப் பால்கர் போய் வண்டியில் அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கூடவே இன்னொருத்தரும் அவர் குடும்பத்தை அழைத்து வர அவர்களுடன் கிளம்பி இருக்கிறார். எங்க சத்தம் கேட்டதும், அல்லது உடனே எங்க பையன் ஓடிப் போய்ச் சித்தப்பாவைக் கட்டிப் பிடித்ததும் அவர்களுக்கு அதிர்ச்சி. நிஜமாவே அவங்க யாரும் எதிர்பார்க்கவே இல்லை, நாங்க தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கோம்னு. கொஞ்ச நேரம் யாருக்கும் பேச்சே வரவில்லை. அப்புறம் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு,நல்ல வேளை நாங்க இறங்கின கிழக்குப் பகுதி (இறங்கும்போது கிழக்கா, மேற்கா தெரியாது , மேற்கே இறங்கி இருந்தால் பார்த்திருக்க முடியாது.)யிலேயே மச்சினர்  வீடும் இருந்தது. வீட்டிற்குப் போய்க் குழந்தையைப் பார்த்த போது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. குழந்தையும் எங்களைப் பார்த்ததும் தெரிந்த மாதிரி சிரித்தான்.


 இந்த மாதிரி நடக்குமா, கதை போல் இருக்கிறதே, நம்ப முடியவில்லையே என்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஏன் என்றால் இப்படித்தான் நடந்தது. இதுதான் நிஜம். என்ன தைரியத்தில் கிளம்பி வந்தோம், அங்கே என் மச்சினரை  அந்த நேரம் பார்த்து யார் கொண்டு விட்டது? இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில்? எல்லாம் வல்ல அந்த ஈசன் தான் காரணம். நான் என்றும் என் நண்பராய்க் கருதும் அந்த விநாயகரும்,அவர் தம் அருமைத் தம்பியும் தான் எங்களுக்குத் துணை இருந்து கொண்டு சேர்த்தார். "காக்க, காக்க, கனகவேல் காக்க' என்று எத்தனை முறை சொல்லி இருப்பேனோ தெரியாது. அந்த வெற்றி வடிவேலன் தான் துணை இருந்தான்.

"வெற்றி வடிவேலன் -அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்:
சுற்றி நில்லாதே போ!-பகையே
துள்ளி வருகுது வேல்!"

  இது மாதிரியான நேரங்களில் தான் இறைவன் இருப்பு கண்ணுக்குத் தெரிகிறது.  அன்று அந்த ஆட்டோ ஓட்டுநர் எங்களை எங்கேயானும் கூட்டி போயிருந்தால்? அல்லது போரிவிலி வந்ததும் யாரானும் எங்களை ஏமாற்றி இருந்தால்?  நாங்கள் வெளி ஆட்கள் யாரையும் யோசனை கேட்கவில்லை என்பது உண்மை என்றாலும் கொஞ்சம் வெளிப்படையாகத் தடுமாற்ற்த்தை நாங்கள் காட்டிக் கொண்டிருந்தாலும் பிரச்னைதான். எல்லாவற்றில் இருந்தும் ஆண்டவன் தான் காப்பாற்றிச் சரியான சமயத்துக்கு மைத்துனருக்கு எங்கள் இருப்பையும் காட்டினான்.  ஒரு ஐந்து நிமிடம் நாங்கள் தாமதமாக வந்திருந்தாலோ அல்லது ஐந்து நிமிடம் முன்னால் அவர்கள் சென்றிருந்தாலோ நிச்சயமாகப் பார்த்திருக்க முடியாது. அதுவும் நாங்கள் இறங்கிய பக்கம் கிழக்குப்பகுதியாகவும் அமைந்ததும் எங்கள் நல்ல காலம் தான்.

9 comments:

  1. பல சமயங்களில் நம் உள்ளுணர்வு நம்மை ஏமாற்றாது. எதைப் பற்றி நினைக்கிறோமோ அதாகவே ஆவோம் என்பது போல யாரைப் பற்றி நினைக்கிறோமோ அவர்கள் அருகிலேயே சென்று விடுகிறோம் போல. சிலிர்ப்பான அனுபவம்தான்.

    ReplyDelete
  2. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதற்கு இது போல் சம்பவங்கள் தான் உதாரணம் என்று சொல்வேன். சில சமயங்களில் உள்ளுணர்வு நம்மை சரியாகவே அழைத்து செல்கிறது. கடவுளின் ஆசீர்வாதம் இருப்பதால் தான் அவர், எல்லா வேலையும் விட்டு விட்டு நம்மைக் காப்பாற்றுகிறார் என்பது நான் அடிக்கடி சொல்லலும் வசனம்.

    ReplyDelete
  3. சில இக்ட்டான தருணத்தில் தெய்வம் போல யாராவது உதவி செய்வார்கள்.
    அவை நம்பமுடியாது போல் இருந்தாலும் அது தான் உண்மை.

    ReplyDelete

  4. மூன்று நான்கு நாட்கள் பயணத்தில் இருந்ததால் வரதாமதம்கடைசி இரண்டு மூன்று பதிவுகளைச் சேர்த்துப் படித்தேன் . இம்மாதிரி அனுபவங்கள் நமக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும் . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உண்மைதான் ஶ்ரீராம், அன்றைய தினம் கடவுளின் இருப்பை எனக்கு நேரடியாகக் காட்டிய தினம் என்றே சொல்லலாம். :)

    ReplyDelete
  6. ஆமாம் ராஜலக்ஷ்மி, உண்மை தான்.

    ReplyDelete
  7. வாங்க கோமதி அரசு, அந்த ஆட்டோ ஓட்டுநர் கூட்டி வரவில்லை எனில் நாங்கள் ஒருவேளை ஜாம்நகருக்கே திரும்பி இருப்போம். :)

    ReplyDelete
  8. வாங்க ஜிஎம்பி சார். உண்மையில் தன்னம்பிக்கையோடு கடவுள் நம்பிக்கையும் அதிகரித்தது. :)

    ReplyDelete
  9. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete