எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 19, 2014

சின்ன வெங்காயம்! தேநீர், சோப் தூள்!

நேற்று ராத்திரி மோர் சாதம் தான் டிஃபன்.  பக்ஷணம் இருந்ததால் வயிறு தொந்திரவு வராமல் இருக்க வேண்டி மோர் சாதம். :) தொட்டுக்க ஒண்ணுமே இல்லையா!  ஆவக்காய் ஊறுகாய் (புதிது, இந்த வருஷம் தான் போட்டது) இருந்தது தான்.  ஆனால் நான் ஊறுகாய் போட்டுக்கிறதே இல்லை.  எப்போவானும் ஆசைக்கு!  ஆகவே நேத்திக்குச் சின்ன வெங்காயம் உரித்துத் தொட்டுக் கொண்டேன்.  உடனே அம்மா நினைப்பு வந்துடுச்சு.

சின்ன வயசிலே பழைய சாதம் சாப்பிட போர் அடிச்சாலோ, அல்லது சாதம் மிச்சம் ஆகி ராத்திரிக்கு மோர்சாதம் நிறையச் சாப்பிட வேண்டி இருந்தாலோ அம்மா மாலையே சின்ன வெங்காயத்தை உரிச்சு வால் பகுதியில் லேசாகக் கீறி உப்பு, பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்து வைத்திருப்பாங்க.  அந்த வெங்காயத்துக்குப் போட்டி போட்டுக் கொண்டு மூணு பேரும் அடிச்சுப்போம்.  ஒரு கைப்பிடி வெங்காயத்தைத் தொட்டுக் கொண்டு ஒரு தட்டு மோர்சாதம் சாப்பிட்ட நினைவுகள் அலைமோதின! அந்த மோரின் மணமும், சாதத்தின் சுவையும் இப்போவும் மனதிலே நிற்குது.  என்னோட பாட்டி பிசைந்து கையில் போடும் கல்சட்டிப் பழையது பற்றி ஏற்கெனவே எழுதிட்டேன். :))))  சமயத்தில் சாப்பாட்டில் கூட கறிகாய்கள் இல்லை எனில் சின்னவெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி உப்பு சேர்த்துப் பச்சை மிளகாயோடு தொட்டுக் கொண்டு சாப்பிட்டது உண்டு. ஆனால் இது நல்லது என்றோ இதான் சாலட் என்றோ அப்போ தெரியாது. வடமாநிலங்கள் போய்த் தான் அவை தெரிந்தன என்பதோடு முள்ளங்கியைப் பச்சையாகச் சாப்பிடலாம் என்பதும் அங்கே தான் தெரிந்தது. :)


அதே போல் அப்போல்லாம் குழந்தைங்களுக்குக் காஃபியே ஜாஸ்தி கொடுக்க மாட்டாங்க.  பெரியவங்க குடிக்கிறதை ஏக்கமாப் பார்த்துட்டு இருப்போம். அவங்க குடிக்கிறதிலே கடைசி வாயில் எங்களுக்கும் பங்கு கிடைக்கும்.  ஆனால் எங்க பெரியப்பா வீட்டிலே அனைவருக்கும் காஃபி உண்டு.  இதுக்காகவே பெரியப்பா வீட்டிற்கு ஓடியது உண்டு.  எங்க வீட்டிலே காஃபி குடிக்கச் சொல்லி உபசரித்தார்களெனில் அதில் விளக்கெண்ணெய் கலந்திருக்கும் என்பது புரியப் பத்து வயசாச்சு! :))) அதனாலோ என்னமோ தெரியலை கல்யாணம் ஆனவரை காஃபியே குடிச்சதில்லை. அதுக்கப்புறமாத் தான் காஃபி பழக்கமே.

எனக்குத் தெரிந்து அப்போல்லாம் தேநீர் எனப்படும் டீ கூட அதிகமாய்க் குடிக்க மாட்டாங்க.  எங்க பெரியப்பா மட்டும் எப்படியோ டீ பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்.  அப்போல்லாம் காலணா, அரையணாவுக்கு டீ பாக்கெட்(இப்போல்லாம் சாஷே என்கிறார்களே அது போல்) கிடைக்கும். குருவி போட்ட டீ பாக்கெட் வாங்குனு சொல்வாங்க.  ஆனால் அந்த டீத்தூள் க்ரானுல்ஸ் எனப்படும் சிறு சிறு மணல் துகளாகவும் இருக்காது.  இலைகளாகவும் இருக்காது.  இப்போதைய டஸ்ட் மாதிரியும் இருக்காது. அதை நீரில் போட்டும் கொதிக்க விடமாட்டார்கள்.  ஒரு பாக்கெட் வாங்கினால் ஒருத்தருக்கு 2 வேளைக்கு வரும்.  ஆகவே அதைப் பிரித்து ஒரு தம்ளரில் போட்டு நீரைக் கொதிக்க வைத்து அதில் ஊற்றி மூடி வைப்பார்கள். பின்னர் சூடாகக் காய்ந்த பாலில் தேநீரை வடிகட்டிச் சேர்த்துச் சர்க்கரை போட்டுக் கொடுப்பார்கள்.  தேநீரின் வாசனை ஊரைத் தூக்கும்.

இந்தத் தேநீரைப்பிரபலப்படுத்துவதற்குக் குறிப்பாகத் தமிழ்நாட்டில் என நினைக்கிறேன்.   தேயிலைக் கம்பெனிகள் வீட்டுக்கு வீடு ஆள் அனுப்பித் தேநீரைப் போட்டுக் காட்டச் சொல்லி, மக்களைக் குடிக்க வைத்துக் கருத்துக் கேட்கும். தேயிலைப் பொட்டலங்களை இலவசமாகக் கொடுப்பார்கள். காஃபியை விட இதற்குப் பால் செலவு குறைச்சல்னு எடுத்துக் காட்டுவாங்க.   அது என்னமோ தேநீர் என்றால் எல்லோரும் சர்க்கரை கூடுதலாகப் போட வேண்டும் என்னும் எழுதா விதியை வைத்திருக்கிறார்கள்.  ஆனால் எனக்கு தேநீருக்கும் சர்க்கரை கம்மியாகத் தான் பிடிக்கும்.  முதல் முதல் ராஜஸ்தான் போகையில் ரயிலில் பாட் டீக்கு ஆர்டர் செய்து வந்ததும்  ரங்க்ஸ் சொல்லிக் கொடுக்க அதைக் கலந்து குடித்த அனுபவம் இனி ஒரு முறை வராது.

முன்பெல்லாம் அதே போல் சோப் தூளுக்கும் வீட்டுக்கு வந்து துணி ஊறவைத்துத் துவைத்துக் காட்டுவாங்க.  இப்போ எல்லாம் தொலைக்காட்சியில்! :))))


நெய்வேலியில் நிலக்கரி எடுக்க ஆரம்பிச்சதும் அந்தக் கரியைக் கொண்டு சமைக்கலாம் என்றும் விளம்பரம் செய்தார்கள்.  கைவண்டியில் நிலக்கரியைக் கொட்டித் தள்ளிக் கொண்டு ஒரு ஆளும், கூடவே ஒரு பெண், ஒரு பையர் வருவார்கள்.  மூட்டுவது கஷ்டம்.  மூட்டிப் பிடித்துக் கொண்டால் சீக்கிரம் சமையல் ஆகும் என்பார்கள்.  ஆனால் இந்த மாதிரி எரிவாயுவுக்கு விளம்பரம் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை.  மண்ணால் ஆன(?) ஒரு குமுட்டி இலவசமாயும் கொடுத்தாங்கனு நினைக்கிறேன்.  ஆனால் அந்தக் கரி அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. :)))))

24 comments:

  1. எனக்கும் மோருஞ்சாதமும் உப்பு,குட்டி வெங்காயம் பச்சைமிளகாய் ரொம்பவே பிடிக்கும். நம்ப ஊர் சின்ன வெங்காயம் இங்க கிடைப்பதில்லை.Shallots தான் .அது சின்ன வெங்காயம் மாதிரி இல்லைனே தோணும். குழம்பு ரசத்தில கிள்ளிப்போட்ட மிளகாயும் கல்லுப்பும் சேத்து சாப்பிட்டா நன்னாவே இருக்கும்.இப்பல்லாம் பாத்துட்டு ஜொள்ளறதொட சரி. காரம் சாப்பிட முடியறதில்லை. கடவுளே எங்க ஊர் யாலபினோ!!! கொன்னுடும். புது ஆவக்காயா? வாசனை இங்கவரை வராதோ? நல்லா சாப்பிடுங்கோ என்னையும் நினைச்சுண்டு.இந்த ப்ரியா ஆவக்காய் , மாங்கா தொக்கு! ஊறுகாயா அது ஒரே வெள்ளைப் பூண்டுகாய் .சரி.ஒருனாள் சும்மார்ல மாங்கா சீசன் ல ஊருக்கு வராமலா போயிடப்போறேன் ? அப்போ சாப்பிடலாம்.

    ReplyDelete
  2. வாங்க ஜெயஶ்ரீ, கோகுலாஷ்டமி பக்ஷணம் சாப்பிட வராட்டியும் மோருஞ்சாதத்துக்கும், சின்ன வெங்காயத்துக்கும் வந்ததுக்கு மகிழ்ச்சி. :))) சின்ன வெங்காயம் என்றால் இங்கே தான். ஒரிஜினல் சின்ன வெங்காயம். வாசனை ஊரைத் தூக்குகிறது. நான் கடை ஊறுகாயே வாங்கியதில்லை. எப்போவும் வீட்டில் போடுவது தான். :)) யு.எஸ். போனால் கூட ஃப்ரெஷ் கடையில் அல்லது நம்மூர் உழவர் சந்தை மாதிரி அங்கேயும் இருக்கு. அதில் பையரும், பெண்ணும் ஊறுகாய்க்கு வேண்டிய காய்களை வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். போட்டு விடுவேன். அவசரத்துக்குப் புளி இஞ்சி, காரட், இஞ்சி, புளி மிளகாய் போன்றவை கை கொடுக்கும். :))))

    ReplyDelete
  3. லீக்கோ கரி.... பத்திக்க கொஞ்சம் கஷ்டமா இருந்ததால மக்கள் விரும்பலை. அத்தோட மின்சார உற்பத்திக்கே அதோட ஹை எனர்ஜி அவுட்புட் பயன் ஆனதால அடுப்புக்கரியா விக்கிறதை நிறுத்திட்டாங்க.

    ReplyDelete
  4. நமக்கு வெங்காயம் பச்சையா தின்ன பிடிக்காது! அதே சமயம் தயிரில் துறுவிப்போட்டு சாப்பிடுவேன்! பழுப்பு நிலக்கரி விற்றது எனக்கு தெரியாது புதிய தகவல்! நன்றி!

    ReplyDelete

  5. @ நான் சிறுவனாக இருந்தபோது ஆறு வயது முதல் பத்து வயதுவரை அரக்கோணத்தில் இருந்திருக்கிறோம். அரக்கோணம் நினைவுகள் என்று பதிவு எழுதி இருக்கிறேன். எங்கள் சித்தப்பா எங்களுடன் சில நாட்கள் இருந்தார். அவர் லிப்டன் டீ கம்பனியில் டீ டெமான்ஸ்ட்ரேடராக இருந்தார். வீடு வீடாகப் போய் டீ செய்முறையை விளக்கும் வேலை.

    ReplyDelete
  6. லீக்கோ கரி விளம்பரம் வருவது பத்திரிக்கைகளில் நினைவிற்கு வருகிறது. வோலம்பரத்துடன் நானும் சிறு வயதிற்கு சென்று விட்டேன்.
    பழைய சாதம் , லீக்கோ கரி விளம்பரம்.......அந்த நாளும் வந்திடாதோ........

    ReplyDelete
  7. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் காம்பினேஷன் அப்போல்லாம் ரொம்பப் பிரசித்தம். நாங்களும் சாப்பிட்டிருக்கோம். கல்சட்டிப் பழையதும், கற்சட்டிக் குழம்பும் ரசிச்சிருக்கோம். எங்கள் அம்மா பச்சை மிளகாய்க்கு உப்புக் கூடத் தொட்டுக் கொள்ளாமல் நறுக்கெனக் கடித்துவிட்டுச் சொல்வார், "இப்பல்லாம் பச்சை மிளகாய்ல காரமே இல்ல"

    எனக்குச் சின்ன வயசுலேருந்தே காபி சாப்பிட்டுப் பழக்கம்தான். லட்சரூபாய்த் தேநீர் பற்றி சுரேஷ் குமார் எழுதி இருந்தார். இப்பத்தான் படித்தேன்.

    ReplyDelete
  8. தனியா அம்போன்னு கமெண்ட் போடுவேன்... இன்னிக்கி என்ன இவ்வளவு கூட்டமிங்கே...

    :)))

    ReplyDelete
  9. பச்சை வெங்காயம் உடலுக்கு நல்லது சுரேஷ்! அதிலும் இரவு பச்சை வெங்காயம் சாப்பிட்டுப் படுத்தால் தூக்கம் நன்றாக வருமாம். கோடைக்காலத்தில் வரும் நீர்க்கடுப்பைத் தடுக்கும் சக்தி பச்சை வெங்காயத்துக்கு உள்ளது. :)

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார், அரக்கோணம் நினைவுகள் பதிவின் சுட்டி இருந்தால் படிக்கிறேன். :)

    ReplyDelete
  11. வாங்க ராஜலக்ஷ்மி, அந்த நாளும் வந்திடாதோ தான் இங்கேயும். :)))

    ReplyDelete
  12. வாங்க ஶ்ரீராம், நீங்களும் அந்தநாள்க்காரர் தானே! :) லக்ஷரூபாய்த் தேநீரின் சுட்டி கொடுங்க படிக்கலாம்.

    ReplyDelete
  13. ஹிஹிஹி, கண்ணு வைக்காதீங்க! நீங்க இன்னிக்கு லேட்! :)))))

    ReplyDelete
  14. வா.தி. உங்க கருத்தைக் கவனிக்கவே இல்லையே! :) அடுப்புக்கரியா விற்றிருந்தாலும் அதை யார் வாங்கி இருக்கப் போறாங்க? :)))))

    ReplyDelete
  15. @ஶ்ரீராம், ஏழே ஏழு கருத்து வந்ததுக்கே கூட்டமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  16. ம்கும்! அந்த காலத்துல கீஸர் இல்லையே? ஏழெட்டு பேர் குளிக்க தோதா வென்னீர் போட பயன்படுத்தினது ஒரு செப்பு பாய்லர். அதுல சைடுல இந்த லீகோ கரி போட்டு மூட்டிவிட்டா அத்தனை பேரும் குளிச்சுடலாம்!

    ReplyDelete
  17. Where is Gokulashtami post? Bombay saalara nizhal padangal thaane irukku!

    ReplyDelete
  18. //http://sivamgss.blogspot.in/2014/08/blog-post_17.html//

    ஜெயஶ்ரீ, கண்ணன் வந்தான் அப்படிங்கற தலைப்பிலே மும்பைப் படப் பதிவுக்கு முன்னால் பாருங்க. மேலே சுட்டி கொடுத்திருக்கேன். :) பக்ஷணம் கொஞ்சம் தான். ஆகவே சீக்கிரம் போய் எடுத்துக்கவும்.:))

    ReplyDelete
  19. வா.தி. பாய்லர் வெந்நீர் தான் உண்மையான வெந்நீர். கீசரிலே எல்லாம் வரது வெந்நீரா? விளாநீர்! :(

    ReplyDelete
  20. லீகோ கரி சாம்ராஜ்யமே சேலத்தில் சின்னமாமியார் வைத்திருந்தார். அங்கே நல்ல வியாபாரம். எங்கள் வீட்டில் இரும்பு கரியடுப்பில் நானும் லீக்கோ பயன்படுத்தி இருக்கேன். சாதாரண் கரி கொஞ்சம் லீக்கோ கரி நாலைந்து என்று போட்டு ஏற்றினால் குழம்பு,ரசம்,எல்லாம் செய்துவிடலாம். சாம்பல் கூடப் பாத்திரம் தேய்க்க மென்மையாகப் பயன்படும். டீ சாயந்திரவேளையில் அம்மா போடுவார்.அதுவும் கரியடுப்பில். நல்ல நினைவுகளை மீட்டெடுக்கும் கீதாவுக்கு ரொம்பவே நன்றி.

    ReplyDelete
  21. வாங்க வல்லி, அப்படியா? எங்க வீட்டில் இந்த லீகோ கரி வாங்கியதில்லை. அதனால் அதைப் பத்தி எதுவும் தெரியாது. :)

    ReplyDelete

  22. அரக்கோணம் நினைவுகள் பதிவை அனுப்பி இருக்கிறேன் நன்றி

    ReplyDelete
  23. வாங்க ஜிஎம்பி சார், படிச்சுட்டுக் கருத்தும் சொல்லிட்டேனே! :)

    ReplyDelete