எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 29, 2013

ஜோதிடம் பொய்யல்ல!

ஜோசியம் பொய்யல்ல.  ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரஹத்தின் பெயர் வந்த காரணமே அந்த அந்த கிரஹத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்கள் என்பதாலேயே.  இப்படித் தான் ஏழு நாட்கள் வாரத்துக்கு வந்தது என்பதோடு, மிச்சம் உள்ள இரண்டு கிரஹங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் ஒவ்வொரு நாளிலும் அவர்களின் ஆதிக்கம் உள்ள ஒன்றரை மணி நேரத்தை ராகு காலம், எமகண்டம் எனக் கொடுத்திருக்கின்றனர்.  அதே போல் பெளர்ணமி அன்றும் அமாவாசை அன்றும் கடல் அலைகள் உயர எழும்பிக் குதிக்கும்.  ஏனெனில் சந்திரனின் ஆதிக்கம் அன்று அதாவது கதிர் வீச்சு அதிகமாய் இருக்கும் எனப் படித்திருக்கோம் இல்லையா?  அந்த தினங்களில் நம் உடலின் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் என்கின்றனர்.  சந்திரனின் இந்தக் கதிர் வீச்சு மனதோடு தொடர்பு கொண்டது என்பதாலேயே சில மன நோயாளிகளுக்கு அமாவாசை, பெளர்ணமி அன்று மனநோயின் தாக்கமும் அதிகமாய் இருக்கும்.

ஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையே.  இவற்றை உலகுக்கு அளித்ததும் நாமே.  நம் மூலமே நம்முடன் வணிகம் செய்ய வந்த மற்ற நாட்டவருக்கு இவை சென்று பின் உலகம் முழுதும் பரவியுள்ளது எனலாம்.  இவற்றை எல்லாம் கணித்த நம் ரிஷி முனிவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல.  பராசரர், அகத்தியர், புலிப்பாணி சித்தர், இடைக்காடர்  போன்றோர் ஜோதிடம் குறித்த அரிய நூல்களை எழுதியுள்ளனர்.  அகத்திய நாடி மிகவும் சிறப்பானது.  ஆனால் இன்றைய தினம் உண்மையான அகத்திய நாடியைப் படித்துச் சொல்லும் தகுதி வாய்ந்த நபர்கள் இல்லை. இந்த ஜோதிடத்தைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாகவே வைத்து விட்டால் பின்னர் இதில் கலப்படமான வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போவார்கள் என எண்ணுகிறேன்.  ஆனால் இதிலும் கலப்படம் இருப்பதாலேயே பெரும்பாலோர் இதை ஏமாற்று என்கின்றனர்.  இந்தியாவில் ஒரு சில பல்கலைக்கழகங்களிலும் தமிழ்நாட்டில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும் (இப்போ இருக்கா?) , சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும் ஜோதிடம் ஒரு பாடமாக இருந்தது/இருக்கிறது.  http://www.sastra.edu/distanceeducation/AstrologyProgramme.asp காமராஜ் பல்கலைக்கழகத்தில் தமிழில் இருந்தது என எண்ணுகிறேன்.

ஆதிகாலத்தில் கல்வி கற்றுக் கொடுக்கையிலேயே இவை எல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்பப் படிக்க முடிந்தது.  கல்வி கற்றுக் கொடுப்பதும், மருத்துவம் பார்ப்பதும், ஜோசியம் பார்த்துச் சொல்வதும் ஒரு மாபெரும் தர்மமாகவும், இலவசமாகச் சொல்வதுமாகவே இருந்து வந்த நாட்கள் உண்டு. இப்போது இவை பணம் பண்ணும் வியாபாரமாக ஆகிவிட்டன.  வான சாஸ்திரம் குறித்த விஞ்ஞான வளர்ச்சி கடந்த முந்நூறு ஆண்டுகளாய்த் தான் இருந்து வந்திருக்கிறது.  ஆனால் நம் முன்னோர்கள் கோள்களின் சுழற்சியைத் துல்லியமாய் எந்தவிதமான உபகரணங்களின் உதவியும் இல்லாமல் கண்டு பஞ்சாங்கங்களில் கூறி இருக்கிறார்கள்.  ஒவ்வொரு வருஷமும் கிரஹணம் எப்போது வரும் என்று கால நேரத்தோடு சரியான கணிப்பில் பஞ்சாங்கங்களில் பார்க்கலாம்.  இவை குறித்த பல அரிய குறிப்புகள் நிறைந்த ஜோதிடக் குறிப்புகள் நாளந்தா பல்கலைக் கழகத்தில் இருந்ததாகவும் அந்நியப் படையெடுப்புக்களில் தீக்கிரையாக்கப் பட்டது போக எஞ்சியவையே இப்போது இருப்பதாகவும் கூறுகின்றனர்.

அப்பாதுரை கூறி இருப்பது போல் முகத்தைப் பார்த்துச் சரியாகச் சொல்பவர்களை நானும் கண்டிருக்கிறேன்.  அவர்கள் சொல்வது சரியாகவே இருக்கும். எங்கோ ஒரு சிலர் பிழைப்புக்காக ஏமாற்று வேலைகள் செய்வதால் ஒரு அருமையான கலையை ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது சரியல்ல.  உண்மையான ஜோதிடர்கள் இன்றும் இருப்பார்கள்.  அவர்களைக் கண்டறிய வேண்டும்.  ஜோதிடத்தைப் பாடமாக வைக்க வேண்டும்.  கணக்கு நன்கு வரும் மாணாக்கர்கள் ஜோதிடத்திலும், வான சாஸ்திரத்திலும் சிறந்து விளங்குவார்கள்.  என்னைப் பொறுத்த வரையிலும் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜோதிடத்தை நம்பியே இல்லை.  அதே போல் ஏற்கெனவே தெரிந்து கொண்டவை நடப்பதையும் பார்த்து வந்து கொண்டிருக்கிறேன்.  இது என் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் உறவினர், நண்பர்கள் வாழ்விலும் நடக்கிறதைப் பார்க்கிறேன்.  ஆனால் நான் என்னோட ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு ஜோதிடரிடம் இன்றளவும் அலையாய் அலைந்தது இல்லை.  அப்பாதுரை சொல்லி இருப்பது போல் தானாக வந்த தகவல்களே. :))))


Saturday, April 27, 2013

ஜோசியம் பார்க்கணுங்க ஜோசியம்!


சமீபத்தில் நண்பர் ஒருத்தர் பதிவில் ஜோசியம் குறித்து எழுதி இருந்தார்.  ஆபரேஷனுக்குத் தயாராக இருக்கும் நோயாளி ஒருவர் ஜாதகம் பார்ப்பது குறித்த கதை அது. அவர் அதை நகைச்சுவையாகவே எழுதி இருந்தார்.  ஆஸ்பத்திரியில் ஜோசியரை வைத்து நோயாளியின் ஜாதகத்தைப் பார்ப்பதாகவும் ஆபரேஷன் சக்சஸ் ஆகும் என்றாலே அட்மிஷன் என்றும் பொருள்படும்படியாகவும் கடைசியில் உண்மை ஜாதகம் சரிவராமல், பொய்யான ஜாதகத்தைக் கொடுத்து ஆபரேஷனுக்கு அட்மிஷன் வாங்குவதாகவும் கதை முடிந்திருக்கும். ஆனால் உண்மையிலேயே ஆயுர்வேத மருத்துவ முறையில் ஜாதகம் மிகவும் முக்கியம்.  ஒருத்தரின் தோஷங்களை அந்த ஜாதகத்தில் நடக்கும் கிரஹங்களின் போக்குவரத்தை வைத்துக் கணித்து இந்த கிரஹத்தின் காரணத்தால் இந்த தோஷம் எனக் கண்டு பிடித்து அதற்கேற்றாற்போல் மருந்து கொடுப்பார்கள்.  அல்லது ஆபரேஷன் போன்ற பெரிய விஷயங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.

விளையாட்டு இல்லை;  இதை நான் நேரிடையாகவே குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் நடந்து வருவதை அறிந்திருக்கிறேன்.  சில ஆயுர்வேத மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையோடு அவர்களின் ஜாதகத்தையும் கொண்டுவரச் சொல்லி அதையும் பார்த்துவிட்டே மருந்து கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். ஆகவே திருமணத்திலும் ஜாதகம் குழந்தை பிறப்புக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.  மற்ற எந்தப் பொருத்தங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நக்ஷத்திரப் பொருத்தமும், குழந்தை பிறக்குமா, பிறக்காதா என்பதும் முக்கியமாய்ப் பார்க்கப்பட்டது. அதிலும் போன பதிவில் சொன்ன மாதிரி பெண்ணாக இல்லை எனில் ஏமாற்றப்பட்டிருந்தால் என்ன செய்வது? அப்படிப் பட்ட ஏமாற்றங்கள் நிகழாமல் பெருமளவு ஜாதகங்கள் தடுத்து வந்ததாய்த் தெரிய வருகிறது.  பெண்ணிற்கு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு உடல்நலம் இருக்கிறதா என்பதை ஜாதகத்தைப் பார்த்தே கணிப்பார்களாம்.  அந்த நாட்களில் செயற்கை ரசாயனச் சேர்க்கை என்பது இல்லை என்பதாலோ என்னமோ ஆண்களில் மலட்டுத் தன்மை என்பது குறைவாகவே இருந்து வந்திருக்கிறது.  இதனால் தானோ என்னமோ பெண்ணிற்குக் குழந்தை பிறக்குமா என்பதை முக்கியமாய்த் தெரிந்து வைத்துக்கொள்ள ஜோசியத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.

பெண்ணின் மூலமே ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து அவள் மூலமே வளர்க்கப்பட்டு சமூகத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற காரணமாகவும் இருந்திருக்கலாம்.  இப்போது நேற்றைய ஒரு செய்தியில் 29 வயதுப் பெண் ஒருத்திக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது.  அவளுக்கு மாதாந்திரப் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கவே மருத்துவரிடம் போய்ப் பரிசோதனை செய்திருக்கிறாள்.  மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி தரும் தகவல்.  அந்தப் பெண்ணிற்கு மாதவிடாய் முடியும் தருவாயில் இருப்பதாக மருத்துவர் கூற அதிர்ந்து போனாள் அந்தப் பெண்.  இப்போதைய பணி நேர மாற்றங்கள், பெண்கள் செய்யும் பணிகள், மன அழுத்தங்கள், சற்றும் உடல்நலம் பேணாமல் வேலைக்காகக் கண்ட நேரம் கண் விழித்திருந்து சரியாக உணவு உண்ணாமை போன்ற பல காரணங்களால் ஒரு சில பெண்களுக்கு இப்போது நாற்பது வயதைக் கடக்கும் முன்னரே இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம்.  ஆகவே பெண்களின் உடல் நலமும், பூரண ஆரோக்கியமும், குழந்தைப் பிறப்புக்கு ஏற்றவளா என்ற தகுதியும் திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியம்.

இப்போதெல்லாம் குழந்தை பிறக்குமா என்று மட்டும் பார்ப்பதில்லை.  கூடவே Rh-, Rh+ பரிசோதனையும் செய்துவிடுகிறார்கள்.  எங்கள் வீட்டிலேயே என் பிரசவத்தில் ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின்னர் எங்கள் சித்தி பெண்கள், என் மன்னி போன்றோருக்குக் குழந்தை பிறக்கும் முன்னர் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.  இப்போதெல்லாம் திருமணத்தின் போதே பெண் பார்த்து நிச்சயம் செய்யும் முன்னரே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.  எனக்குத் தெரிந்து பெண்ணுக்கு Rh- என்பதால் அந்தப் பெண்ணை நிராகரித்தவர்கள் உண்டு. விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் மனிதர்கள் சிந்தனை பின் நோக்கித்தான்.

Friday, April 26, 2013

காவிரிக்கரையில் கஜேந்திர மோக்ஷம்!


இந்திரத்யும்னன் என்னும் பாண்டிய மன்னன் ஒருவன் வழிபாடுகளில் ஈடுபட்டிருக்கையில் துர்வாசமுனிவர் அவனைக் காண வருகிறார்.  முனிவரை வெகுநேரம் காக்க வைத்துவிடுகிறான் பாண்டியன்.  பாண்டியனுக்கு உள்ளூர தன் பக்தியின் காரணத்தால் ஏற்பட்ட அகம்பாவத்தைப் புரிந்து கொண்ட துர்வாசர் அவன் மதம் கொண்ட யானையாகப் பிறப்பான். பொய்கையில் முதலை பிடித்து ஆட்டி வைக்கும்,  என சாபம் கொடுக்க, மன்னன் பதறுகிறான்.  அப்போது நீ பலகாலம் மஹாவிஷ்ணுவை வேண்டித் துதிக்க உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் எனச் சொல்கிறார் துர்வாசர்.  அதே போல் கந்தர்வன் ஒருவன் குளக்கரைக்கு வரும் முனிவர்களின் கால்களைப் பிடித்து விளையாட தேவலர் என்னும் முனிவர் கோபத்துடன் முதலையாகப் பிறக்கும்படி கந்தர்வனுக்கு சாபம் கொடுத்துவிடுகிறார். கந்தர்வனும் தனக்கு எப்போது விமோசனம் எனக் கேட்க, மஹாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரத்தால் விமோசனம் என்று சொல்கிறார்.  அந்தப்பொய்கையிலேயே முதலையாகப் பிறந்து தனக்கு விமோசனத்துக்குக் காத்திருந்தான் கந்தர்வன். 




.

இங்கே பாண்டியன் யானையாகப் பிறந்து யானைக் கூட்டத்துக்கே தலைவனாக ஆகிறான்.   அவன் தலைமையில் யானைகள் அனைத்தும் பொய்கையில் வந்து நீரருந்தி, மலர்கள் பறித்து எம்பிரானுக்குச் சூட்டி என அனைத்தும் செய்து வருவார்கள்.  இந்நிலையில் ஒரு நாள் பொய்கையில் பெரியதாய் ஒரு தாமரைப் பூ மலர்ந்திருக்க, அதன் மணமும், சுகந்தமும் யானைகளின் கவனத்தைக் கவர்ந்தது.  பூவோ பொய்கையில் நட்ட நடுவில் மலர்ந்திருந்தது.  அதை எப்படிப் பறிப்பது? தலைவனான நம் யானை தானே பறிப்பதாய்ச் சொல்லி விட்டுக் குளத்தில் இறங்கியது.  பூவையும் தன் துதிக்கையால் பிடித்துப் பறித்து விட்டது.  ஆனால் கரையேற முடியவில்லை.  என்ன இது? என்ன ஆயிற்று?  அதன் கால்களை முதலை ஒன்று கவ்வித் தன் பற்களால் அழுத்திப் பிடித்த வண்ணம் இருப்பது அப்போது தான் தெரிந்தது.  கால்களை உதறி முதலையிடமிருந்து விடுவித்துக்கொள்ள கஜேந்திரன் செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.  கரையில் நின்ற மற்ற யானைகள் உதவிக்கு வர அப்போதும் முதலையின் பிடி விடவில்லை.  ஆயிரக் கணக்கான ஆண்டுகள் இரண்டுக்கும் நடுவே இந்தப் போர் நடைபெற்றது.

முதலையோ நீருக்குள் பலம் வாய்ந்தது. யானையோ நிலத்தில் சக்தி வாய்ந்தது.  யானை நிலத்தில் இருக்க, முதலை நீருக்குள் இருக்கச் சுற்றி நின்ற யானைக் கூட்டம் தவிக்க, கஜேந்திரனுக்குத் தன் முற்பிறவியும், தான் பெருமாள் பக்தன் என்பதும் நினைவுக்கு வர, தன் நீண்ட துதிக்கையைத் தூக்கிக் கொண்டு, “ஆதி மூலமே, அபயம்!” என ஓலமிட்டது.

கஜேந்திரன் கூப்பிட வேண்டும் என்பதற்காகவே காத்திருந்த பெருமாள் அவசரம் அவசரமாய்க் கிளம்பினாராம்.  தன் பக்தன் இத்தனை நாட்கள் கஷ்டப் பட வைத்து விட்டோம்.  அவனுக்குத் தன்னுணர்வு வர வேண்டிக் காத்திருக்க வேண்டியதாயிற்று.  இனியும் நேரம் கடத்தக் கூடாது எனக் கிளம்பினார்.  பெருமாளின் நோக்கம் அறிந்த கருடன் தானாகவே போய் பகவான் முன்னர் நின்றானாம்.  பெருமாளும் கருடன் மேல் ஏறிக்கொண்டு கஜேந்திரனை வந்து காப்பாற்றினார்.  முதலையாகிய கந்தர்வன் மேல் தன் சுதர்சனச் சக்கரத்தை எறிந்து அவனுக்கும் மோக்ஷம் கொடுத்து, கஜேந்திரனுக்கும் ஞானம் அளிக்கிறார்.


இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சித்ராபெளர்ணமி அன்றும் ஸ்ரீரங்கம்  கோயிலில் நடைபெறுகிறது.  இவ்வருடமும் அவ்வாறே சித்ராபெளர்ணமி அன்று காலையே நம்பெருமாள் கோயிலை விட்டு வெளிக்கிளம்பி தெற்கு கோபுரம் வழியாக அம்மா மண்டபம் சாலையை அடைந்து அங்கே ஒவ்வொரு மண்டகப்படியாகத் தங்கி மரியாதைகளையும், வரிசைகளையும் பெற்றுக்கொள்கிறார். பின்னர் மதியம் பனிரண்டு மணியளவில் அம்மா மண்டபத்தை அடைகிறார்.  அங்கே நம்பெருமாள் பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கிறார்.  மாலை வரை நம்பெருமாள் அங்கே இருந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்த வண்ணம் இருந்துவிட்டுப் பின்னர் மாலை சந்திரோதயம் ஆகும் சமயம் கோயில் யானை ஆண்டாள் கஜேந்திரனின் பாகத்தை ஏற்றுக் காவிரியில் போய் நின்று பெருமாளைப் பிளிறி அழைக்கப்பெருமாளும் சென்று கஜேந்திரனைக் காப்பாற்றி மோக்ஷத்தை அருளுகிறார்.  கூட்டம் நெரிசல் ஆகையாலும், அன்றைய தினம் விருந்தினர் வருகையாலும் காவிரியாற்றில் நடந்த நிகழ்வைப் பதிவு செய்ய முடியாமைக்கு மன்னிக்கவும்.


கீழுள்ள இந்தப் படம் அம்மாமண்டபத்திலுள்ள காவிரி அம்மன் சந்நிதி. 

.




பி.கு: இது போன வருஷமே எழுதி வைச்ச பதிவும், படங்களும்.  இந்த வருஷம் கஜேந்திர மோக்ஷத்தை நேரிலே பார்த்துட்டு எழுத நினைச்சேன்.  ஆனால் கூட்டம் நெரிசல் காரணமாகவும், பார்க்க வந்திருந்த ஜனங்களைப் பார்க்க விடாமல் தள்ளியதாலும் ஒண்ணும் முடியலை.  அதோடு வெளிச்சம் வேறே பத்தலை.  இன்றைய தினசரிப் பத்திரிகையிலும் ஸ்வாமியைப் பார்க்க ஆஸ்தானத்திலோ, அல்லது காவிரிக்கரையிலோ போதிய வெளிச்சம் இல்லாமல் மக்கள் சிரமப் பட்டதைக் குறிப்பிட்டிருந்தனர். ரொம்பவே மனதை வருந்த வைத்த நிகழ்வாக ஆகிவிட்டது. பலரும் பார்க்க முடியாமல் தவித்தனர். 
இந்த வருஷம் படங்கள் எடுத்தேன்.  ஆனால் வெளிச்சம் இல்லாமையால் தெளிவாக இல்லை.  சரி பண்ண முடியுமானு பார்க்கணும்.  இன்னும் அப்லோடே பண்ணலை! :(

அதே படங்களைப் பெரிதாக்கிப் போட்டிருக்கேன்.  தெரியுதானு சொல்லுங்க யாரானும். :)

Thursday, April 25, 2013

அரங்கனைப் பார்க்கப் போய் மனம் நொந்து வந்தேன்! :(

ஸ்ரீரங்கம் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.  தேதிப் படி நாளையும், கிழமைப்படி நேற்றும் ஒரு வருடம் ஆகி உள்ளது. போன வருடம் இங்கே வந்ததும் பார்த்த முதல் திருநாள் சித்ரா பெளர்ணமியின் கஜேந்திர மோக்ஷம் தான்.  மாலை ஏழு மணி அளவில் காவிரிக்கரையில் கஜேந்திர மோக்ஷம் நடைபெறும்னு சொன்னாங்க.  அவ்வளவு நேரம் இருக்க முடியாததால் வந்துட்டோம்.  இந்த வருடமாவது போய்ப் பார்க்கலாம்னு நினைச்சால் அதுவும் முடியலை.  சரினு நம்பெருமாளையாவது போய்ப் பார்த்துட்டு வந்துடலாம். கிட்டக்க அம்மா மண்டபத்துக்கே வந்திருக்காரேனு காலையிலே வெளியே போக வேண்டி வந்தது;  மதியம் திரை போட்டுடுவாங்க.  ஆகையால் ஐந்து மணிக்குக் கிளம்பிப் போனோம்.

மின்சாரம் இல்லை.  ஒரே இருட்டில் நம்பெருமாள் காட்சி கொடுத்தார். பட்டாசாரியார்கள் சுறுசுறுப்பாகத் தெரிந்தவர்களை மட்டும் கயிற்றுத் தடுப்புக்கு அந்தப் பக்கம் கூப்பிட்டுப் பிரசாதம், சடாரி, தீர்த்தம் விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.  ஸ்வாமியைப் படம் எடுக்க முடியுமானு பார்த்தால் சும்மாவே பட்டாசாரியார் தலை தான் வரும்.  இன்னிக்கு சுத்தம் வெளிச்சமே இல்லை. :(  என்றாலும் முயன்று பார்த்தேன்.  பாண்டியன் கொண்டையில் நீலப்பட்டாடையில் காட்சி அளித்தான் அரங்கன்.  அவன் என்னமோ எளிமையானவன் தான்.  யார் கூப்பிட்டாலும் உடனே அவங்க இருப்பிடம் தேடிப்போயிடுவான்.  அவ்வளவு எளிமை.  ஆனால் சுத்தி இருக்கிறவங்க பண்ணும் அலட்டல் தான் மனதைக் காயப் படுத்துகிறது.

இன்னிக்கு முடிந்தவரை நம்பெருமாளை நன்கு பார்த்துவிட்டுப்பின்னர் கஜேந்திரனாக நடிக்கப்போகும் ஆண்டாளம்மாவைத் தேடினால் அவங்க அங்கே இல்லை.  எங்கேயானும் போயிருப்பாங்க போல.  மாலை வருவாங்களா இருக்கும்.  சரி, வீட்டுக்குத் திரும்பலாம்னு பார்த்தப்போ ஒரு பட்டாசாரியார், எங்களைப் போன்ற சாமானிய மக்களுக்கும் சடாரி சாதித்துக் கொண்டிருந்தார்.  அவரிடம் போய் சடாரி சாதித்துக் கொண்டு, பின்னர் தீர்த்தம் கொடுக்குமிடம் போனோம்.  எனக்கு முன்னாடி ரங்க்ஸ் வாங்கிக் கொண்டார். அப்புறமா நான் வாங்கிக்கணும். கையை நீட்டிக் கொண்டிருந்தேன்.  அவர் துளசி கொத்தாக இருந்ததை எடுத்து வெளியே போட்டுவிட்டுத் தீர்த்தம் கொடுத்தார்.  அதை வாங்கிக் கொண்டு நகரும் முன்னர் பின்னாலிருந்து ஒருத்தர் வந்து கையை நீட்டிக் கொண்டு என் கையில் இடிக்க தீர்த்தம் கொட்டி விட்டது.  திரும்பக் கேட்டால், அந்த பட்டாசாரியார், நான் ஏதோ பிச்சை கேட்கறாப்போல அலக்ஷியமாக போம்மா, போ, போ, அப்படினு விரட்டிட்டு எனக்குக் கொடுக்கவே மாட்டேன்னு மத்தவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.

நான் விடாப்பிடியாக நின்னுட்டு இருக்க, என்னை இடித்தவர் வந்து, சாமி நான் தான் அந்த அம்மா கையிலே இருந்த தீர்த்தத்தை இடித்துக் கொட்டிட்டேன்.  திரும்பக் கொடுங்கனு சொல்ல, அந்த ஆளை முறைத்துவிட்டுப் பின்னர் ஒரு சொட்டு, சொட்டு என்றால் சொட்டுத்தான். கையில் திட்டமாகச் சொட்டிவிட்டு அந்த தீர்த்தத்தை மத்தவங்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சுட்டார்.  கையிலே இருக்கும் தீர்த்தம் சாப்பிடும் அளவுக்கு  இல்லை.  கையை நீட்டிக் கொண்டே இருந்தேன்.  ஆனால் கையைத் தள்ளி விட்டுட்டுப்போறியா இல்லையானு விரட்டி விட்டார்.  அரங்கா நீயே பார்த்துக்கோ எல்லாத்தையும்னு சொல்லிட்டு, நிஜம்மாவே சொல்லிட்டு வந்துட்டேன்.  மனசு வேதனை தாங்கலை.

தீர்த்தம் கிடைக்காதது கூட வருத்தமில்லை.  அவர் கண்ணெதிரேயே இன்னொருத்தர் என் கையைத் தட்டித் தீர்த்தம்  கொட்டியதைப் பார்த்தும் விரட்டிவிட்டாரே அதான் வருத்தம்.  ஆண்டவன் கண்ணெதிரே எல்லாரும் சமம் சமம்னு சொல்வாங்களே, அது தெரியலையே அவருக்குனு வருத்தம்.   பெருமாள் கோயில்களிலே வைணவர்களுக்கே முதல் மரியாதை என்பது தெரியும் என்றாலும் இது என் தப்பு இல்லையே, வேணும்னு திரும்பக் கேட்கலையே?  ஒரு உத்தரணி தீர்த்தம் மீண்டும் கொடுத்தால் பெருமாள் அவரைக் கணக்குக் கேட்டுவிடுவாரா? புரியலை!

Monday, April 22, 2013

எப்படியோ கல்யாணம் நடந்தால் சரிதானா? :(

பிள்ளையின் தாய், தந்தை மருமகளைக் கொடுமை செய்வதையும், பெண்ணின் தாய், தந்தையர் போடும் நிபந்தனைகளையும் சென்ற பதிவில் பார்த்தோம்.  இந்தக் காலத்தில் நடப்பதைச் சொல்லிவிட்டு முன் காலத்தில் இதே திருமணங்கள் நடந்த விதத்தை எடுத்துக் காட்டுவதே என் முக்கிய நோக்கம்.  எப்படி ஒரு புனிதமாகவும், வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகவும் கருதப்பட்ட திருமண பந்தம் இன்று எப்படி மாறி இருக்கிறது என்பதைச் சொல்லவே இந்தப் பதிவுகள். அடுத்து இப்போ சொல்லப் போவது குறித்து மிகுந்த மனக்கஷ்டத்துடனேயே சொல்லப் போகிறேன்.  இந்தக் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம்.  அப்படிச் சென்ற சமயத்தில் தான் பெண்ணின் பெற்றோர் எங்களுக்கு முன் கூட்டியே பதினைந்து வருடங்கள் முன்னர் அறிமுகம் ஆனவர்கள் என்பது தெரிய வந்தது.  என்றாலும் இப்படி ஒரு கொடுமையை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

வடமாநிலத்திலேயே தொழில் புரிந்து அங்கேயே வசிக்கும் தொழிலதிபரின்   மனைவிக்கு ஒரு சிறு பெண் குழந்தை நாங்க பார்த்தப்போ இரண்டு அல்லது மூன்று வயதுக்குள்ளாக இருக்கும்.  அதன் பின்னர் நாங்க அந்த ஊரை விட்டே வந்துவிட்டோம். மறந்தும் போயிட்டோம்.  ஆனால் மிகவும் பணக்காரர்களான அந்தப் பெண்ணின் பெற்றோர் பெண்ணுக்குத் திருமணம் செய்ய நினைத்தது சகஜமே. பெண்ணும் நன்றாகப் படித்திருந்தாள்.  கார் ஓட்டுவாள்.  உயர்குலத்தினரின் நாகரிகப் பழக்க, வழக்கங்கள் அனைத்தும் உண்டு.  பெண்ணின் தாய் தென் மாநிலத்தில் குறிப்பாகச் சென்னையில் வசிக்கும் பையராகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தார்.  இதற்கு உதவி செய்தது பெண்ணின் அம்மாவைப் பெற்றவர்.  அவருக்கு எவ்வளவு தூரம் உண்மை தெரியும் என்பது எங்களுக்கு இப்போது யோசித்தாலும் விளங்கவே இல்லை. இந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்த போது தான் பெண்ணின் தாய் எங்களிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு நாங்க ஒரே ஊரில் சில வருடங்கள் வசித்ததையும் எங்க வீட்டு நவராத்திரிக்கு வந்ததையும் குறிப்பிட்டுக் கூறினார்.

கல்யாணம் மிக விமரிசையாக நடக்கப் பிள்ளையின் பெற்றோருக்குத் தலைகால், புரியவில்லை. பெரிய இடத்திலிருந்து மருமகள், ஏற்கெனவே மூத்த மருமகள் இருந்தாலும் இந்த மருமகள் தான் அவங்களுக்கு அருமையாகத் தெரிந்தாள்.  திருமணம் ஆகிப் புக்ககமும் வந்தாச்சு.  பெண்ணின் நடவடிக்கைகள் கொஞ்சம் புதிராக இருந்தாலும் புதிய இடம், புதிய ஊர், முற்றிலும் புதிய வாழ்க்கை என நினைத்தனர்.  திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.  அந்தப் பெண் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள்.  அதுவும் மூன்று ஷிஃப்ட் உள்ள கால் சென்டர் வேலையைத் தேர்ந்தெடுத்தாள். இரவு ஷிஃப்டையே அதிகம் விரும்பினாள்.  கணவன் மதியம் வீட்டில் இருக்கமாட்டான்.  இவள் இரவில் இருக்கமாட்டாள். மதியம் வந்து நன்றாய்த் தூங்கிவிடுவாள்.  ஆரம்பத்தில் தப்பாய்த் தெரியவில்லை என்றாலும் பிள்ளையின் பெற்றோருக்கு ஏதோ உறுத்த ஆறு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டதே, இன்னும் கருத்தரிக்கவில்லையே, ப்ளான் பண்ணிட்டு இருக்கீங்களானு கேட்க, சில நாட்களில் பெண்ணின் அம்மா வருகை.

அவள் புக்ககம் அருகேயே வீடு ஒன்று எடுத்துத் தங்கிய அந்த அம்மா கொஞ்ச நாட்களில் பெண்ணைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு வாரத்தில் அபார்ஷன் ஆகிவிட்டதாய்த் தகவல் தெரிவிக்க, பிள்ளையின் அப்பா, அம்மா வருந்த, பிள்ளைக்கோ சந்தேகம்.  அப்பா, அம்மாவிடம் தாங்கள் இருவரும், கணவன், மனைவியாக ஒரு நாள் கூட வாழவில்லை;  இரவில் தனித்திருந்தாலே ரொம்ப வெட்கப் பட்டுக்கொண்டு விளக்கை அணைக்க மாட்டாள்.  ஒதுங்கியே படுப்பாள் என்று சொல்லப் பிள்ளையின் தாய், தந்தைக்குக்குழப்பம்.  பெண்ணின் நடத்தையில் சந்தேகம் வர சண்டை போட்டிருக்கின்றனர்.  பெண் வீட்டினருக்குக் கோபம்.  அப்போது அந்தப் பையர் சாமர்த்தியமாகப் பெண்ணைப் பார்க்கச் சென்று அவளை ஏதேதோ சொல்லிச் சமாதானமாகத் தனியே அழைத்துச் சென்று பெண் மருத்துவரிடம் காட்டக் கூட்டிச் செல்லப் பெண் பிடிவாதம் பிடிக்க வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று காட்டினார்.  பெண், பெண்ணே இல்லை என்று தகவல்.  மருத்துவர் நல்லவேளையாக அரசாங்க மருத்துவர்.  சான்றிதழே கொடுத்துவிட்டார்.  அதன் பின்னரும் இரு மருத்துவர்களிடம் காட்டிச் சான்றிதழ் பெற்றாகி விட்டது.  அவள் தந்தையும் வந்துவிட்டார்.  எப்படியோ விவாகரத்து என நீதிமன்றம் போகவேண்டாம் எனக் கெஞ்சுகின்றனர்.  விவாகரத்துச் செய்யாமல் வேறொரு கல்யாணம் செய்துக்க முடியாது.  அதற்கு இந்தச் சான்றிதழ் முக்கியம்.  இரு பக்கமும் வாத, விவாதங்கள் சூடு பறக்கிறது.  என்ன நடக்கப்போகிறது எனப் புரியவில்லை.  ஒரே குழப்பம். :((((((

Sunday, April 21, 2013

மாமியாரு, மாமனாரை மதிக்கணும்!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஶ்ரீராமநவமிப் பிரசாதத்துக்கு ஏகக் கூட்டம் வந்திருக்கு! :))) இதுவே மத்தப் பதிவுகளுக்கு இத்தனை வரதில்லை! :P :P

இந்த முறை சென்னைப் பயணத்தின் போது கல்யாணத்துக்குக் காத்திருக்கும் முதிர் கன்னர்கள் சிலரின் பெற்றோரிடம் பேச நேர்ந்தது.  முதிர்கன்னர்கள் கல்யாணத்துக்குத் தயாராய் இருக்கும் அளவுக்குப் பெண் வீட்டினர் ஆர்வம் காட்டுவதில்லையாம்.  "நீங்க ஜாதகம் அனுப்புங்க;  நாங்க பார்க்கிறோம்." என்ற அளவிலேயே பேசறாங்களாம்.  ஜாதகம் அனுப்பிட்டுக் கேட்டால், பையர்களின் வேலைத் தகுதி, வாங்கற சம்பளம், சொந்தமாய் வீடு வாங்கியாச்சா?  அல்லது வாங்கும் வசதி இருக்கா?  கல்யாணத்துக்கு அப்புறமும் எங்க பொண்ணு வேலைக்குப் போவா.  உடனே எல்லாம் குழந்தை பெத்துக்கச் சொல்லக் கூடாது.  குறைந்தது ஐந்து வருஷங்களாவது ஆகும்.  அப்படிக் குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கும், எங்க பொண்ணுக்கும் சேர்த்து நீங்க தான் செய்யணும். "

"எங்க பெண்ணின் சம்பாத்தியத்தில் இருந்து இத்தனை பங்கு எங்களைச் சேர வேண்டியது.  மாசா மாசம் கரெக்டா வந்துடணும்.  அக்ரிமென்டாகப் போட்டுக் கொண்டாலும் சரி.  பெண்ணை வேலை செய்யலையே என்றெல்லாம் கேட்கக் கூடாது.  செல்லமா வளர்த்திருக்கோம். கோபம் வரும்.  முன் கோபம் ஜாஸ்தி.  நீங்க தான் அனுசரிச்சுக்கணும்.  அவ கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து செலவும் செய்து படிக்க வைச்சிருக்கோம். அதனால் குற்றம், குறை சொல்லக் கூடாது. அவ்வப்போது நாங்களும் வந்து தங்கிப்போம்.  ஆனால் சமையல் வேலை எல்லாம் எங்களால் பார்த்துக்க முடியாது.  நீங்க தான் எங்களுக்கும் சேர்த்துச் செய்து போடணும். "  இது ஒரு பக்கம் நடந்து வருகிறது.  ஆச்சரியமா இருக்கா?  ஆனால் இது உண்மை.  ஏனெனில் பிள்ளை வீட்டுக்காரங்க அனைவரும் எனக்கு நெருங்கிய சொந்தம்.  ஒரு சில பெண்களின் ஜாதகங்களை அவங்களுக்கு வாங்கிக் கொடுத்த விதத்தில் இம்மாதிரிக் கேள்விகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன்.  இதிலே பிள்ளை தொழில் நுட்ப வல்லுநராக இருக்கணும் என்ற எதிர்பார்ப்பே அதிகம்.  வெளிநாட்டு மோகம் குறைஞ்சிருந்தாலும், பெண்களூருக்குக் கூடப்போக மாட்டோம் எனச் சொல்லும் பெண்களையும், அவர்களின் பெற்றோரையும் பார்த்துவிட்டேன்.  இங்கேயே ஸ்ரீரங்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தப்போ அவங்க அப்பா, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கத்துக்குள்ளாக உங்க பையர் வேலை பார்த்துக் கொண்டு வந்தால் எங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை.  சென்னையே எங்களுக்குத்  தொலைவு என்று சொல்லி மறுத்துவிட்டார்.

இப்போ இன்னொரு பக்கத்தையும் பாருங்க.  இதுவும் தெரிஞ்சவங்க தான்.  உறவு தான்.  மூன்று வருஷம் முன்னாடி பெண்ணுக்குக் கல்யாணம் செய்தாங்க.  பிள்ளை வீட்டுக்காரங்களும் எனக்குத் தெரிஞ்சவங்களே. தெரிஞ்சவங்கன்னா ரொம்பவே தெரிஞ்சவங்க.  அவங்க பிள்ளையும் இஞ்சினியர்.  பெண்ணும் ஐடியில் அல்லது இஞ்சினியராக இருக்கிறார்.  நல்ல சம்பாத்தியம்.  பெண்ணுக்கு வேலைக்குப்போக வசதியாக மாம்பலத்தில் வீடு.  காலையில் அந்தப் பெண் தான் எழுந்து எல்லா வேலைகளையும் கவனிச்சுட்டு, மாமியார், மாமனாருக்கு சமைச்சு வைச்சுட்டுப் போகணும்.  மதியம் கையில் கொண்டு போகும் சாப்பாடு தான்.  சாயந்திரம் வீட்டுக்கு வருகையிலேயே ஏழு மணி ஆகிடும்.  மாமியார் சாயந்திரத்துக்குத் தேவையான சமையலைச் செய்து பிள்ளைக்குப் போட்டுவிட்டுத் தானும் சாப்பிட்டு விட்டு சுத்தமாகச் சமையலறையை ஒழிச்சு வைச்சுடுவாங்க.  இன்னிக்கும் அப்படித் தான் நடக்கிறது.  அந்தப் பெண் வந்தால் இருக்கிற கொஞ்சம் சாதத்திலும், (அநேகமா வைக்கிறதில்லை.  ஒவ்வொரு நாட்கள் இருக்குமாம்) தண்ணீரை விட்டு வைச்சுடுவாங்க. சாப்பாடு இல்லையானு அந்தப் பெண் கேட்டால், "உன் இஷ்டத்துக்கு வந்தால் இங்கே சாப்பாடு பண்ணி வைக்க நான் என்ன வேலைக்காரியானு பதில் வருமாம்.  இதிலே மாமனாரின் தூண்டுதல் காரணமாகச் சமைத்த பாத்திரங்கள், காப்பி குடித்த பாத்திரங்கள்னு எல்லாம் தொட்டி முற்றம் நிறைய இருக்கும்.  பசியோடு வரும் பெண் என்னத்தைச் சாப்பிடுவது?

அந்தப் பெண்ணின் பெற்றோர் வீடு அருகேயே இரண்டு தெரு தள்ளி இருப்பதால் அங்கே போய்ச் சொல்லிக் கிடைச்சதைச் சாப்பிட்டு வருவாளாம். நாளாவட்டத்தில் குழந்தையும் பிறந்தாச்சு.  குழந்தையை மாமியாரோ, மாமனாரோ தூக்குவது கூடக் கிடையாது. அந்தப் பெண் தானே பெற்றுக் கொண்டாள்.  ஆகவே அவள் தான் பொறுப்பு.  மீண்டும் பெற்றோர் தான் உதவிக்கு.  காலை அந்தப் பெண் வேலைக்குப் போகும் சமயம் பெண்ணின் தந்தை வந்து குழந்தையைத் தூக்கிச் செல்வார்.  மாலை வேலையிலிருந்து திரும்புகையில் அம்மா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுக் குழந்தையை எடுத்துக் கொண்டு வருவாள் அந்தப் பெண்.  அந்தப் பெண்ணின் கணவனோ தன் பெற்றோரைத் தட்டிக் கேட்பதும் இல்லை.  பெண்ணின் பக்கம் பரிந்தும் பேசுவது இல்லை.  நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக.  இப்போவும் இந்தக் காலத்திலேயும் இப்படியும் அக்கிரமம் நடக்கிறது. ஒவ்வொருத்தர் பிள்ளைக்குக் குழந்தை பிறக்குமா, நாம கையிலே எடுத்துக் கொஞ்சுவோமானு காத்திருக்க, இங்கே நேர்மாறாகக் கிடைத்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை. :(

ஒரு பக்கம் பெண் வீட்டுக்காரங்களின் நிபந்தனைகள், இன்னொரு பக்கம் பெண்ணைக் கொடுத்து விட்டுத் தவிக்கும் பெற்றோர். அப்பாவிப் பெண்களின் நிலைமை மாறாமல் இருப்பது தான் மிச்சம்.  எங்கே போகிறோம்?  இது தர்ம பூமி, கர்ம பூமி என்றெல்லாம் சொல்வது எதுக்காக?  இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்து நடப்பதற்கா? என்ன நாடு இது?  என்ன மனிதர்கள் இவங்க? எப்போ மாறும் இதெல்லாம்?  நினைக்க நினைக்கக் கொதிக்கிறது!  அந்தப் பெண்ணின் தங்கை திருமணம் செய்து கொள்ளவே மறுக்கிறார்.  அக்காவுக்கு வந்தாப்போல் எனக்கும் அமைந்து விட்டால் என்ன செய்யறது என பயம். :(((  இதெல்லாத்துக்கும் விடிவு எப்போ?  ஆங்காங்கே ஒரு சில பெண்களும், மாமியார்களும் அத்தி பூத்தாற்போல் ஒத்துப் போகிறதும் நடக்கிறது.  என்றாலும் மருமகள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யணும்;  வீட்டிலும் எல்லா வேலையும் செய்யணும்.  நான் மருந்துக்குக் கூட உதவ மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம்? 

Friday, April 19, 2013

ஸ்ரீராம நவமிப் பிரசாதம் வேணுமா?


எங்க வீட்டு ராமர் பிறந்த நாள் அலங்காரத்தில் காட்சி





கீழ்த்தட்டில் உள்ள விக்ரங்கள், ரெண்டையும் சேர்த்து எப்படியானும் எடுக்கணும்.  நிற்க இடம் பத்தலை.  கொஞ்சம் பின்னாடி போகணும்.  அதான் முடியலை.  கஷ்டம்! பார்ப்போம். 




சாதம், பருப்பு, வடை, பாயசம், சுண்டல், வெற்றிலை, பாக்கு, பழம், பானகம், நீர்மோர்

எங்க அம்மா வீட்டில் வடைப்பருப்புனு பாசிப்பருப்பை ஊற வைத்து வடிகட்டி உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கடுகு, மிளகாய் தாளித்து, மாங்காய், வெள்ளரிக்காய் நறுக்கிப் போடுவாங்க.  இங்கே சுண்டலாகச் செய்யணும். :))))

வேணுங்கறவங்க எடுத்துக்குங்க. கொஞ்சமாத் தான் பண்ணி இருக்கேன்.  தீர்ந்துடும். 

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்!

 மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அநியாயம் ஆத்தாடியோ!

மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்னைப் பயணம்.  ஞாயிறன்று கிளம்பிப் போனோம்.  ரயில் ஆடிய ஆட்டத்தில் ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை.  இப்போல்லாம் ரயில் ரொம்பவே ஆடுது;  என்னனு புரியறதில்லை.  கொஞ்சம் பயமாவும், நிறையக் கவலையாவும் கிட்டத்தட்ட சிவராத்திரியாத் தான் போயிடறது. ஒரு வழியா சென்னைக்கு நல்லபடியாக் கொண்டு சேர்த்திட்டாங்க.  மாம்பலத்தில் இறங்கித் தம்பி வீட்டுக்கு (நடந்து போகும் தூரம் தான், ஆனால் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு போக முடியலை) ஆட்டோக்காரரைக் கூப்பிட்டால், ஆட்டோவின் விலையைச் சொன்னார்.  அவ்வளவு விலை கொடுத்துக் கட்டிவராதுனு கொஞ்சம் நடந்து வந்தால், பாதி விலைக்கு ஒருத்தர் வரேன்னு சொல்லவே, நடந்த களைப்புத் தீர ஏறி உட்கார்ந்தோம்.  சரியா உட்காருவதற்குள்ளாக வீடு வந்தாச்சு.  அவங்கல்லாம் நல்லாத் தூங்கினவங்களை எழுப்பி உள்ளே போனோம்.

மவுன்ட் ரோடில் ரங்க்ஸுக்கு அவர் அலுவலகத்தில் வேலை இருந்ததால் அங்கே போனார்.  போய்ப் பார்த்தால் அலுவலகத்தையே காணலையாம்!  ஒரு வருஷத்துக்குள் காணாமல் போனதாகச் செய்தி ஏதும் படிக்கலையேனு வியப்புடன் அங்கே இங்கே தேடிக் கடைசியில் மெட்ரோ ரயில் பாலத்துக்குப் பின்னே ஒளிந்திருந்த அலுவலகத்தைக் கண்டு பிடிச்சுப் போயிட்டு வந்தார்.  வெயில் என்னமோ 95* தான் அப்படினு சொல்றாங்க.  ஆனால் உடல் தெப்பமாக நனைஞ்சு போச்சு.  சென்னையிலேயே  இத்தனை வருஷமா இருந்துட்டு இப்போ என்ன வந்தது உனக்குனு சூரியன் ஒரு கடுமையான பார்வையால் என்னைப் பார்த்தான்.  உடனேயே வீட்டிலே உட்கார்ந்திருந்த எனக்கும் உட்கார்ந்திருக்கிறச்சேயே வெள்ளமாக வியர்வை.  மதியத்துக்கு மேலே மருத்துவரைப் பார்க்கப் போனோம்.  அவர் சொன்ன பரிக்ஷையெல்லாம் செவ்வாய்க்கிழமை எழுதினோம்.  ரங்க்ஸ் டிஸ்டிங்ஷனோடு பாஸ் பண்ண, நான் முயற்சியைப் பாதியில் விட்டுட்டேன்னு எனக்கு நோ மார்க்!  மறுபடி எழுதணுமாம். :P :P :P அங்கே இருந்த இரண்டு நாட்களும் போக்குவரத்திலேயே நேரம் போயிடுச்சு. :(

கிளம்பற அன்னிக்கு அவசரம் அவசரமா கால் டாக்சி வைச்சு அம்பத்தூருக்குப் போனோம்.  நான் எங்க வீட்டைப் போய்ப் பார்க்கலை.  ரங்க்ஸ் மட்டும் போயிட்டு வந்தார். எங்கே பார்த்தாலும் மலை மலையாய்க் குப்பை.  தெருக்களில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டிக் கொண்டு எல்லாரும் பச்சைக்குதிரை தாண்டிட்டு இருந்தாங்க.  பக்கத்துத் தெருவில் இருக்கும் அண்ணா வீட்டிற்குப் போகச் சுத்திக் கொண்டு போக வேண்டியதா இருக்கு.  ஜேபிசிக்களும், ரோட் ரோலர்களும், மணலும், சிமென்டும், ஜல்லியும், செங்கற்களும், செங்கற்பொடி பறத்தலும் இன்னமும் நிற்கவில்லை. ஒரு சில தெருக்கள் மட்டும் நல்லாவே போட்டிருக்காங்க.  அந்தத் தெருக்களில் இரு சக்கர, நான்கு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன.  நாம தான் ஒதுங்கணும்.  ஆனால் ஒதுங்க இடம்??? அதான் பெரிய பிரச்னை.  அம்பத்தூர்  பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் அண்ணா வீடு, எங்க வீடு வர ஆட்டோக்காரர் 80 ரூபாயிலிருந்து நூறு வரை கேட்கிறார்.  நாம குறைச்சால், அடிக்காத குறைதான்.

"நானா வரீங்களானு உங்களைக் கூப்பிட்டேன்?  நீங்கதானே ஆட்டோ வேணும்னு கூப்பிடறீங்க?  இந்த வாடகைக்கு வந்தால் வாங்க.  இல்லைனா போங்க."  இதான் அங்கே தாரக மந்திரம்.  மிகச் சிலர் பழைய ரேட்டான ஐம்பது ரூபாய்க்கு வராங்க என்றாலும் அவங்களைப் பேருந்து நிலையத்தில் பிடிக்க முடியாது.  பேருந்து நிலைய ஆட்டோக்காரங்க அவங்களை விட மாட்டாங்க.  ஷேர் ஆட்டோக்களையும் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லையாம். முடியாதவங்களுக்கு வேறே வழியே இல்லை.  கால் டாக்சியில் எழும்பூர் செல்ல முன்னாடி 250 ரூ ஆகிட்டு இருந்தது.  இப்போ ஒரு வருஷத்தில் நூறு ரூபாய் அதிகம்.  ஆட்டோ என்றால் அம்பத்தூர் ஆட்டோக்காரங்க  நானூறு கேட்கிறாங்க.  ரயிலில் டிக்கெட்டின் விலையை விடக் கூட அதிகமாகிடும் போலிருக்கு.  இதுக்கெல்லாம் எப்போ முடிவு?  மொத்தத்தில் கசப்பான பயணம்.

பிகு.:அநாவசியமான மாலை, மரியாதை, சிவப்புக் கம்பள வரவேற்பு, பூத்தூவல், வரவேற்பு பானர், டிஜிடல் ஃப்ளெக்ஸ் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டியே ஒருத்தர் கிட்டேயும் சொல்லாமல் ரகசியமாப் போயிட்டு ரகசியமா வந்து சேர்ந்தேன்.  அங்கே ஒரு சில பேட்டிகள், செய்தி சேகரிப்புகள் என நடந்தது.  நாளாவட்டத்தில் பகிர்கிறேன். :P:P:P:P:P:P

Sunday, April 14, 2013

புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டை ஒட்டி வியாழக்கிழமை வரையிலும் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.  பிழைச்சுக் கிடந்தால் வியாழனன்று பார்ப்போம். அனைவருக்கும் "விஜய" வருடத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Saturday, April 13, 2013

தேங்காய்ப் பாலும் உண்டு; மாங்காய்ப் பாலும் உண்டு! புத்தாண்டு வாழ்த்துகள்.


தமிழ் வருஷப்பிறப்பு சமையலைப் பத்தி மின் தமிழில் சுபாவும், பதிவர் சுப்பு சாரும் கேட்டிருந்தாங்க.  என்னத்தைச் சொல்றது?  என்னென்னமோ பண்ணிச் சாப்பிட்டுட்டு இப்போப் பாயசம் வைக்கவே யோசனை. :))) என்னோட பிறந்த வீட்டிலே நிபந்தனைகள் எதுவும் இல்லை.  எந்தச் சமையலும் ஓகே.  சில சமயங்களில் அவியல், சாம்பார் இருக்கும்.  பெரும்பாலும் பிட்லை, மோர்க்குழம்பு இருக்கும்.  பிட்லையை மதுரைப் பக்கம் கொஞ்சம் கெட்டியாகக் கூட்டும் இல்லாமல் குழம்புனும் சொல்ல முடியாமல் நிறையக் காய்களைத் தானாகப் போட்டுப் பண்ணுவாங்க.  முக்கியமாப்பாகற்காய் அல்லது கத்திரிக்காய்.  எப்போவானும் சேனைக்கிழங்கும், காராமணிக்காயும் போட்டுச் செய்வதுண்டு.  மற்றவற்றில் பிட்லை செய்வதில்லை.  பிட்லை செய்தால்   மோர்க்குழம்பு முக்கியமா வேணும்.  அப்புறமா வடை முப்பருப்பு வடை தான் தென் மாவட்டங்களிலேயே பிரபலம்.  வேப்பம்பூவைப் புதிதாகப் பறித்து வந்து நெய்யில் பொரித்து, (அப்ப்பா என்ன மணம் வீசும்) மாங்காய்ப் பச்சடி செய்து அதில் போடுவாங்க.  அதோடு கடலைப்பருப்பு, தேங்காய் சேர்த்தோ வெறும் தேங்காயிலோ அல்லது பால் போளியோ எதுவோ ஒண்ணு கட்டாயம் இருக்கணும்.  பாயசம்னா அது தேங்காய்ப் பால் விட்டுச் செய்யும் பாயசம் தான் அநேகமா.  செய்முறை தனியாத் தரேன்.

இதிலே யுகாதி வேறே அப்பா வீட்டிலே கொண்டாடும் வழக்கம் உண்டா!  அன்னிக்கும் போளி இருக்கும்.  யுகாதிக்குப் பால் போளின்னா சித்திரை வருஷப் பிறப்புக்குக் கடலைப்பருப்பு, தேங்காய் அல்லது வெறும் தேங்காய் மட்டுமே போட்ட போளி இருக்கும். முப்பருப்பு வடைக்கு து.பருப்பு, க.பருப்பு, உபருப்பு மூணையும் ஊற வைச்சு அரைப்பாங்க.



து.பருப்பு ஒரு கிண்ணம், க.பருப்பு அரைக்கிண்ணம், உ.பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் .  மூணையும் நல்லாக் களைஞ்சு ஊற வைக்கணும்.  ஊறினால் எண்ணெய் குடிக்கும்னு பயமே வேண்டாம்.  எண்ணெயெல்லாம் குடிக்காது.  நான் உறுதிமொழி கொடுக்கிறேன்.  அப்புறமா ஊற வைச்ச பருப்பை நீரை வடிகட்டிவிட்டு மி.வத்தல், நான்கு, ப.மிளகாய் இரண்டு, (காரம் கொஞ்சம் குறைச்சே போட்டுக்குங்க)உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கணும். நைசா அரைக்கக் கூடாது.  பருப்பு ஒன்றிரண்டாக இருத்தல் நல்லது.  அப்புறமா அதை எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு. சின்னதாய் ஒரு பச்சை மிளகாயை நீள வாட்டில் நறுக்கி உள்ளே உள்ள விதையை எல்லாம் எடுத்துட்டுப் பொடியாக நறுக்கி வடைமாவில் சேர்க்கவும்.  இஞ்சி ஒரு அங்குலத் துண்டு தோல் சீவிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.  கருகப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். கொஞ்சம் போல் பாசிப்பருப்பு சுமார் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் களைந்து வடைமாவில் சேர்க்கலாம்.  வடை மொறு மொறுவென வரும்.  எண்ணெயைக் காய வைத்து வடைகளாகத் தட்டிச் சாப்பிடுங்க.  அப்புறமா போளி இதோ இங்கே சொல்லி இருக்கேன் பாருங்க.

http://tinyurl.com/c6src6k  இந்தச் சுட்டியிலே போய்ப்பாருங்க.  நம்மபேரிலே வந்திருக்கும். வேணும்னா அப்புறமாத் தனியாத் தரேன். 







இதுவே மாமியார் வீட்டில் சமையலில் மாறுதல் உண்டு.  அங்கே பாயசம் அநேகமாய்ப் பாசிப்பருப்புப் பாயசம் தான்.  தயிர்ப்பச்சடி, பாசிப்பருப்புக் கோசுமல்லி,(இது உப்புப் போட்டது), கடலைப்பருப்புக் கோசுமல்லி(இது சர்க்கரை சேர்த்தது) இரண்டும் கட்டாயம் இடம் பிடிக்கும்.  எங்க மதுரைப் பக்கம்  நாள், கிழமைக்குக் கோசுமல்லி செய்யும் வழக்கம் இல்லை.  மாமியார் வீட்டில் மாங்காய்ப் பச்சடிக்குப் பதிலாகப் புளியைக் கரைத்து உப்புச் சேர்த்துக் காரப்பொடி, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விட்டு அதிலே தான் வேப்பம்பூவை வறுத்துச் சேர்ப்பாங்க.  காய்கள் எது வேண்டுமானாலும் இருக்கும்.  முட்டைக்கோஸ், கொத்தவரை, அவரைனு கிடைக்கும் காயைச் செய்வாங்க.  இங்கே அநேகமாய் சாம்பார் தான்.  அரைத்துவிட்டாலே பிட்லைனு சொல்லுவாங்க.  வெண்டைக்காய் அரைத்து விட்ட சாம்பாரைப் பிட்லைனு சொல்வாங்க. மற்றபடி போளி, ஆமவடை உண்டு.  ஆமவடைன்னா இங்கே நிஜம்மாவே ஆமை ஓடு மாதிரி வடை கெட்டியாக இருக்கும்.  தனிக் கடலைப்பருப்பைக் கொஞ்ச நேரமே ஊற வைச்சு உப்புக் காரம் சேர்த்து அரைச்சுக் கெட்டியாக எடுத்து வடை தட்டுவாங்க.  வடையைக் கையால் கிள்ளிச் சாப்பிட முடியாது.  அதைப் பின்னர் வெந்நீரிலே ஊற வைச்சுச் சாப்பிடக் கொடுப்பாங்க அவங்க எல்லாருக்கும் அதனால் தான் பல்லெல்லாம் கெட்டியாக இருக்கும். :))) நம்மை மாதிரி இல்லை.

சரி இப்போத் தேங்காய்ப் பாயசம் செய்யும் விதம் பார்க்கலாமா?

பச்சரிசி அரிசி ஒரு சின்னக் கிண்ணம் எடுத்துக் களைந்து நெய்யில் பொரித்துக் கொண்டு குருணையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய் நடுத்தர அளவில் ஒன்று. உடைத்துத் துருவிக் கொள்ளவும்.  கால் கிலோவுக்குக் குறையாமல் வெல்லம்(பாகு) வேண்டும்.  கூடவே இருந்தாலும் நல்லாவே இருக்கும்.  ஏலக்காய்த் தூள், முந்திரிப்பருப்பு, வறுக்க நெய் அரைக்கிண்ணம்.

குருணையாக உடைத்த அரிசியைத் தேவையான நீர் மட்டும் விட்டு  நன்கு கரைய விடவும்.  குழைய வேகும்போது துருவிய தேங்காயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து வைத்துவிட்டு மிச்சத் துருவலை மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும்.  பால் எடுக்கவும் தனியாக வைக்கவும்.  இரண்டாம் முறையும் இதே போல் அரைத்துப் பால் எடுக்கவும்.  அந்தப் பாலை வேகும் அரிசியில் சேர்க்கவும்.  மூன்றாம் பால் எடுக்க வருதானு பார்க்கவும். வந்தால் எடுத்து அதையும் வேகும் அரிசியில் சேர்க்கவும்.  நன்கு சேர்ந்து வரும்போது வெல்லத்தூளைச் சேர்க்கவும்.  வெல்ல வாசனை போகக் கொதிக்க விடவும்.  நன்கு கொதித்து வந்ததும், தனியாக வைத்திருக்கும் முதல் பாலைச் சேர்க்கவும்.  நெய்யில் முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டுத் தனியாக வைத்திருக்கும் பச்சைத் தேங்காய்த் துருவலையும் ஒருமுறை நெய்யில் பிரட்டிவிட்டுப் பாயசத்தில் சேர்க்கவும்.  பால் எடுத்த சக்கைத் தேங்காய் பயன்படாது.  உங்களுக்குத் தேவையானால் அதையும் இந்தப் பாயசத்திலேயே சேர்க்கலாம்.  ஏலத்தூள் சேர்க்கவும்.  பாயசம் சூடாகச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.  அதோடு பாயசம் நீர்க்க இருக்கக் கூடாது.  கையால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் கெட்டியாக, அதே சமயம் சர்க்கரைப் பொங்கல் போல் ரொம்பக் கெட்டியாகவும் இருக்கக் கூடாது.

இந்தப் பாயசம் தான் தமிழ் வருஷப் பிறப்புக்கு ஸ்பெஷல் பாயசம்னு செய்துட்டு இருந்தேன்.  இப்போ ஒரு ஸ்பூன் பாயசம் வைச்சாலே பெரிய விஷயம். :)))))

இதைத் தவிர வீடு சுத்தம் செய்து, மாவிலைத் தோரணங்கள் கட்டி, கதவுகள், நிலைக்கதவு, வீட்டின் பயன்பாட்டுக்கான முக்கியப் பொருட்கள் எல்லாத்துக்கும் சந்தனம், குங்குமம் வைச்சு, கூரையில் கூரைப்பூ வைச்சு, பானகம், நீர் மோர், சுண்டல், வடைப்பருப்பு வைத்து பஞ்சாங்கத்தோடு ஸ்வாமிக்கு சமைத்தவற்றையும் வைத்து நிவேதனம் செய்வார்கள்.  பெரிய பெரிய கோலங்களாகப் போடப்பட்டிருக்கும்.  புதுத்துணி உடுத்தலும் உண்டு.  கேரளாவில் விஷுக்கனிக்குப் பட்டாசு வெடித்தலும் உண்டு.


போளிகளும் வடைகளும் நம்ம கைவண்ணம் தான்.  நம்ம வீட்டிலே நான் செய்தவையே.  அதனால் எல்லாரும் வந்து எடுத்துக்கோங்க. :)))))

Friday, April 12, 2013

அஞ்செலியையும் நான் தான் சாப்பிட்டேனாக்கும்! எ.ப்.போ.ப.

இதான் அஞ்செலியையும் சாப்பிட்டேன்னு சொல்லுதே, நிஜம்ம்ம்மாவா?

Thursday, April 11, 2013

http://aanmiga-payanam.blogspot.in/2013/04/blog-post.html





http://aanmiga-payanam.blogspot.in/2013/04/blog-post_10.html







http://aanmiga-payanam.blogspot.in/2013/04/blog-post_1273.html

Wednesday, April 10, 2013

மணிஜியின் சோகம் வேறு எவருக்கும் வர வேண்டாம்!

ஜி+இல் நான்கைந்து நாட்களாக மணிஜி (பதிவர்) என்பவரின் மனைவிக்காகப் பிரார்த்தனை செய்யச் சொல்லி இருந்தாங்க.  அனைவரின் பிரார்த்தனையும் மீறி அந்தப்பெண்மணியை இறைவன் அழைத்துக் கொண்டான். யார் இந்த மணிஜி என்றெல்லாம் தெரியாது.  பெயரை அவ்வளவாய்க் கேள்விப் பட்டதில்லை.  ஆனால் கடந்த ஒருவாரமாக ஜி+இல் இவருக்காக இவர் மனைவி உடல்நலம் குணமடையப் பிரார்த்தனைகள்.  ஆனால் இன்று சோகச் செய்தி! :(  அந்தப் பெண்மணி இறந்துவிட்டாராம். மனதைப் பிழிகிறது. சிறு தீ விபத்து அந்தப் பெண்ணிற்குப் பெரிய யமனாக வந்துவிட்டது.  பெண்கள் சமைக்கையில் கூடியவரையில் பருத்தி ஆடைகளையே அணிதல் நன்மை தரும்.  எரிவாயு அடுப்பில் சமைக்கும் பாத்திரத்தை வைத்துச் சாமான்களைப் போட்டுச் சமைக்க ஆரம்பித்தால் வேறு எங்கும் நகரக் கூடாது.

ஒரு சிலர் காஃபி போட்டுக்கொண்டோ, சமைத்துக் கொண்டோ கணினியில் அமர்ந்து வேலை செய்வது, தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பது, திரைப்படம் பார்ப்பது எனச் செய்கின்றனர்.  மிக மிக ஆபத்தான வேலை அது.  உங்கள் சமையலுக்கு மிஞ்சிப் போனால் ஒரு மணி நேரம் ஆகும்.  அந்த ஒரு மணி நேரத்தை முழு மனதோடு சமையலுக்காக மட்டுமே செலவிடுங்கள்.  வீட்டில் வேறு யாரும் இல்லாமல் தொலைபேசி அழைப்போ, அல்லது வேறு யாரும் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்தினாலோ அடுப்பைத் தணித்துவிட்டுச் செல்லுங்கள்.  முக்கியமான விஷயம் எனத் தெரிய வந்தால் உடனடியாக அடுப்பை அணையுங்கள். பதட்டப்படாமல் நிதானமாக யோசியுங்கள்.  சமைத்துக் கொண்டே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவது, சின்னக் குழந்தையைக் குளிப்பாட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

ஜன்னல் கதவுகள் திறந்திருக்கட்டும். வீட்டில் வேறு யாரும் இல்லை எனில் வாசல் கதவையும் எளிதில் திறக்கிறாப்போல்  வையுங்கள்.  சாதம் சமைக்கையில் கஞ்சி வடிக்கும் வழக்கம் உண்டென்றால் கூடுதல் கவனம் தேவை.  அதுவும் இப்போதெல்லாம் பெண்கள் தலையை விரித்துப் போட்டுக்கொள்வது தான் நாகரிகமாய்க் கருதப் படுகிறது.  அநேகமாய்ச் சமைக்கையில் எந்தப் பெண்ணும் தலையை விரித்துப் போட்டிருக்க மாட்டாள் என நம்புகிறேன்.  என்றாலும் அதிலும் கூடுதல்கவனம் தேவை.  முன்பக்கம் விழும் மயிரில் நெருப்புப் பிடிக்க வாய்ப்பு உண்டு.  குனிந்து நிமிர்ந்து வேலை செய்கையில் கவனம் தேவை.  சமையலை ஒரு கலையாக எண்ணி அதை முழுவதும் முடித்துவிட்டே அடுத்த வேலை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இங்கொரு கண்ணும், அங்கொரு கண்ணுமாக இருக்க வேண்டாம்.  ஆபத்தானது.  இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே துயரச் செய்திகள் தான்.

இனி வரும் நாட்கள் நல்லவையாக இருக்கட்டும்.  மணிஜி அவர்கள் இந்த மீளாத்துயரத்திலிருந்து மீண்டு வாழ்க்கையைப் புதிதாக வாழ இறைவன் அருள் புரிவானாக. 

Tuesday, April 09, 2013

உனக்கும், எனக்கும் தான் பொருத்தம், அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்!


என்ன ஆச்சரியமா இருக்கா?  உண்மையில் அப்படித்தான். பெண்ணுக்கு மணமகனையும், ஆணுக்கு மணமகளையும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.  பெண்ணுக்குக் குழந்தை பிறக்குமா என்பதையும் உறுதி செய்து கொள்ளச் சொல்கிறது சாஸ்திரம்.  இதை ஆயுர்வேதம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்கிறது.  பல பெண்களையும் பார்த்திருந்தாலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணுக்குத் தக்க மணமகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்ல அந்தப் பெண்ணிற்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்க வேண்டும். நம் இந்து மதம் என்று இன்றைய நாட்களில் அழைக்கப்படும் சநாதன தர்மத்தின் திருமண முறையில் பிரிவு என்பது அவ்வளவாக இல்லை. தம்பதியர் மன ஒற்றுமையோடு வாழுவதையே வலியுறுத்தும்.  திருமண மந்திரங்களும் அதற்காகவே ஓதப்படுகின்றன என்பதோடு மன ஒற்றுமையை உறுதியாக்கும் சக்தியும் கொண்டது.  இன்றைய அவசர யுகத்தில் செய்யப்படும் சுருக்கமான திருமணங்களைக் குறித்துச் சொல்லவில்லை.  ஒரு காலத்தில் முறைப்படி மந்திரங்களைப் பூரணமாக ஓதுவதோடு அதன் அர்த்தங்களையும் பெண்ணும், பிள்ளையும் புரிந்து வைத்துக் கொண்டு கேட்பார்கள்.  மணமகனும் அதன் பொருளைப் புரிந்து கொண்டே திரும்பச் சொல்வார்.

பையரின், பெண்ணின் நக்ஷத்திரத்திற்குப் பொருத்தம் பார்க்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.  ஏனெனில் அதற்கேற்றவாறு தகுதியான முஹூர்த்த நாளைப் பார்க்க வேண்டும்.  அதே சமயம் இருவரின் ஜாதகத்திலும் பொருத்தம் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  தகுதி வாய்ந்த நாளைப் பார்ப்பது வான சாஸ்திரத்தில் அடங்குகிறது.  ஆகவே நல்ல வேளையின் நல்ல காலத்தின் ஒத்துழைப்புத் திருமணத்துக்குத் தேவை.  அதை மட்டும் இருவரின் நக்ஷத்திரப் பொருத்தத்தின் மூலம் அறிந்தால் போதும்.  ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாம்;  அதற்கு அவ்வளவு முக்கியமில்லை என்கிறது தர்ம சாஸ்திரம். நல்ல காலத்தின் பங்கு பல விஷயங்களிலும் இருக்கும் குறைகளை மூடிக் கொண்டு செல்லும்.  மணமக்களுக்கும் நல்ல முஹூர்த்த காலத்துக்கும் சுமுகமான தொடர்பு இருக்க வேண்டும்.  அதை உறுதி செய்ய இருவரின் நக்ஷத்திரங்களும் உதவும்.  ஆகவே நக்ஷத்திரப் பொருத்தம் இருந்தாலே போதும் என தர்ம சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.  களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எனப்படும் பெரிய பெரிய தோஷங்கள் எல்லாம் திருமணத்தில் ஓதப்படும் முக்கியமான மந்திரங்களின் சக்தியால் அகன்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.

இதற்கேற்றாற்போல் நாம் நிறையத் திருமணங்களைப் பார்த்திருப்போம்.  எங்க வீட்டிலேயே என் பெரிய நாத்தனார் அத்தை பையரையே திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தமே பார்க்கவில்லை.  அதே போல் என் மாமனார், மாமியாரும் உறவு என்பதால் பொருத்தமே பார்க்கவில்லை.  இதைத் தவிரவும் என் மாமன்மார் இரண்டு பேருக்கு ஜாதகப் பொருத்தமே இல்லை.  ஆனால் திருமணம் ஆகிக் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்ந்தனர்.  பெண்ணுக்கு மூல நக்ஷத்திரம் என்றால் நிர்மூலம் என்றொரு சொலவடை உண்டு.  உண்மையில் அது நிர்மலம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.  இன்னும் சிலர் ஆணுக்கு மூல நக்ஷத்திரமாக இருந்தாலும் பெண்ணின் அம்மா உயிருடன் இருக்கையில் அவங்களுக்குப் பாதகம் எனச் சொல்கின்றனர்.  மூல நக்ஷத்திரத்துப் பெண்ணும் சரி, மூல நக்ஷத்திரத்துப் பையரும் சரி, மாமியார், மாமனார் இருக்கும் இடங்களில் திருமணம் நடந்து அந்த மாமியார் , மாமனார் 80 வயது வரை இருக்கும் பேறு பெற்றதையும் பார்த்திருப்போம்.  எங்க வீட்டில் பார்த்திருக்கோம்.  பூராடம் நூலாடாது என்பார்கள்.  அப்படிப் பட்ட பூராட நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்கள் சுமங்கலியாக இறந்து போயும் (அதுவும் 75 வயசில்) பார்த்திருக்கிறேன்.

ஜாதகங்களுக்கும், ஜாதகப் பொருத்தத்துக்கும் இன்று நாம் அளிக்கும் முன்னுரிமை அந்தக் காலங்களில் இல்லை.  சாஸ்திரங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர்.  தெய்வத்திடம் பூப் போட்டுப் பார்த்தல், இதிகாசப் புராணப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து அதில் வரும் பக்கங்களுக்கு ஏற்ப முடிவு செய்தல் எனப் பல திருமணங்களும் நடந்திருக்கின்றன. தர்ம சாஸ்திரமே நமக்காக ஏற்பட்டது தான்.
ஜாதகங்களில் இருக்கும் பலன் சொல்லும் பகுதியை நன்கு செயல்படுத்தினால் குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும்.  அந்தப் பலன் சொல்லும் பகுதியும் ரிஷிகளீன் உபதேசம் என்று பெரியோர் சொல்கின்றனர்.   குடும்ப வாழ்க்கையில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் பெறுவதில் ஏற்படும் இடையூறுகளைக் களையவே ஜாதக பலன்கள் உதவி இருக்கின்றன.  ஆயுள், ஆரோக்கியம், மகப்பேறு, ஆண் குழந்தைப் பேறு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள உதவுமே அன்றித் திருமண வாழ்க்கைக்கு அல்ல. ஜாதகங்கள் பார்ப்பது என்னும் பழக்கம் இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டி ஆரம்பித்திருக்கலாம்.  அது இன்றைய நாட்களில் ஒரு கட்டாயமான சடங்காக மாறியுள்ளது.  பல நற்பலன்களையும் பல கெடுபலன்களையும் அளிக்கிறது.


கருத்து உதவி: திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் உரை சங்கரா தொலைக்காட்சி, சக்திவிகடன் , மற்றும் வீட்டில் பெரியோர்கள் பலரிடம் பேசியதில் கிடைத்த விபரங்கள்.

வல்லி சிம்ஹனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்



சக பதிவரும் என் அருமைச் சகோதரியும் ஆன திருமதி ரேவதி நரசிம்மன் என்னும் வல்லி சிம்ஹனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், வணக்கங்கள். அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கவும் பிரார்த்தனைகள்.

படம் நன்றி: கூகிளார்.

Sunday, April 07, 2013

மயிலே, மயிலேன்னா இறகு போடுமா? போட்டியோ போட்டி! :))))))))


THURSDAY, MARCH 21, 2013

மயிலே, மயிலேன்னா இறகு போடுமா?


திருவானைக்காவல் கோயில் கோபுரத்தில் உட்கார்ந்திருந்த மயிலைக் காமிராவில் சார்ஜ் இல்லாததால் செல்லினேன்.  வந்த வரை போட்டிருக்கேன். தொ.நு.நி. குற்றம், குறை தவிர்க்க! :))))))



Saturday, April 06, 2013

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாணமாலை!


பெண் பார்த்தாயிற்று; பெண்ணைப் பிடிக்கவும் பிடித்துவிட்டது.  அடுத்து உடனே நிச்சயம் தான் செய்ய வேண்டும்.  இதைப்பையன் வீட்டில் செய்தால் லக்னப் பத்திரிகை வாசிப்பது என்றும், பெண் வீட்டில் செய்தால் நிச்சயம் என்றும் சொல்வார்கள்.  பிராமணர் அல்லாத மற்ற இனத்தவரிலேயும் பெண் வீட்டில் செய்வதைப் பரிசம் போடுதல் என்பார்கள்.  பரிசம் போடுகையில் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்த ரகப் புடைவை, நகை என வைக்கின்றார்கள் என்பதில் போட்டியும் உண்டு.

பிராமணர்களில் பையருக்குப் பெண் வீட்டில் நிச்சயத்தன்று புதிய வேஷ்டி, அங்கவஸ்திரம் மட்டுமே முன்பெல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள்.  இப்போதெல்லாம் நாகரிகம் பெருத்துப் போக ஆரம்பித்துப் பெண்ணும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்ததும், பையருக்கு வேஷ்டி தவிர, பான்ட், ஷர்ட், மோதிரம், கைக்கடிகாரம், சங்கிலி அல்லது ப்ரேஸ்லெட் போன்றவற்றில் ஏதேனும் ஒரு ஆபரணத்தை நிச்சயத்தன்றே கொடுக்கின்றனர். பெண்ணுக்கும் பிள்ளை வீட்டில் விலை உயர்ந்த நிச்சயதார்த்தப் புடைவை வாங்குகின்றனர்.  இதற்கான ரவிக்கை தைப்பதற்கென அநேகம் பிள்ளை வீட்டில் பெண்ணிடம் முன்னரே கொடுத்துத் தைத்துக் கொள்ளச் சொல்வது நடக்கிறது.  இதைத் தவிரத் தனியாக நகை போடுபவர்களும் உண்டு.  அநேகமாய் இப்போதெல்லாம் இப்படி ஜவுளி எடுக்கையில் இருவீட்டாரும், பெண்ணும், பிள்ளையும் கலந்து சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர்.  இன்னும் முன்னேற்றம் கண்டவர்களில் பெண்ணும், பிள்ளையும் மட்டுமே தனியாகச் சென்று அவரவர் விருப்பம் போல் எடுத்தும் வருகின்றனர்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் மும்பையில் பிறந்து வளர்ந்து படித்தவர். மும்பைப் பையர் தவிர வேறு எவரையும் கல்யாணம் செய்துக்க மாட்டேன் என்ற கொள்கைப் பிடிப்புக் கொண்டவர்.  அதோடு வெளிநாடு செல்லவும் மாட்டேன் என மறுப்பார். வெளிநாட்டில் வேலை செய்ப்வர்களைத் திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பார்.  அவருக்கு ஒரு பையருடன் கல்யாணம் நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டன.  அந்தப் பையர் அப்போது மும்பையில் தான் இருந்திருக்கிறார்.  நிச்சயதார்த்தத்துக்கு ஒரு வாரம் இருக்கையில் திடீரென அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.  அங்கே குறைந்தது ஆறு மாதம் முதல் ஒருவருஷம் வரை இருக்க வேண்டும்.  தாற்காலிகமாகத் தான் செல்ல வேண்டும். ஆகவே தொலைபேசிப் பெண்ணிடம் தகவல் தெரிவித்துக் கூட அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போவதாகவும், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்குமாறும் கூறி இருக்கிறார்.  அந்தப் பெண்ணிற்கு இது அதிர்ச்சித் தகவல்.  உடனே நிச்சயத்திற்கு எடுத்த புடைவையையும், அதற்காகப் பொருத்தம் பார்த்துத் தைத்து வைத்திருந்த ரவிக்கையையும் பிள்ளை வீட்டிற்குத் திருப்பி விட்டார்.  அந்த நிச்சயதார்த்தமே வேண்டாம் எனச் சொல்லி விட்டார். ஏனெனில் அங்கே போனபின்னர் மனம் மாறிவிட்டால் என்ன செய்யறதுனு அவருக்குக் கவலை, பயம்.  அதன் பின்னர் அந்தப் பெண்ணிற்கு மும்பையிலேயே வேலை பார்க்கும் இன்னொரு பையருடன் ஒரு வருஷம் கழித்துத் திருமணம் நடந்தது.  இது இப்போது தான் நான்கைந்து வருடங்கள் முன்னர் நடந்தது.

இதை என்னவென்று சொல்ல முடியும்?  நம் முன்னோர்கள் இப்படிஎல்லாம் வரலாம்;  அதன் மூலம் மனதில் பாதிப்பு ஏற்படலாம் என்றே யோசித்துத் திருமணம் வரை பெண்ணும், பிள்ளையும் பார்த்துக் கொள்ளக் கூடாது என ஏற்பாடுகள் செய்தனரோ?  நிச்சயதார்த்தம் ஆன பிறகும் கூட எனக்குத் தெரிந்து ஒரு பிள்ளை வீட்டில் பெண் வீட்டில் போய் சீர் வகைகள் அதிகமாய்க் கேட்க, பெண் வீட்டினர், கோபம் கொன்டு நிச்சயதார்த்தப் பொருட்களைத் திரும்ப அனுப்ப, பிள்ளை வீட்டினரும், பிள்ளைக்குச் செய்த சீர் வரிசைகள், பட்சணங்கள், பழங்கள், பாத்திரங்கள் என அனைத்தையும் திருப்பினார்கள்.  இதுவும் பார்த்தேன்;  கேட்டேன்; வேதனை அடைந்தேன். இன்னொரு இடத்தில் கல்யாணத் தேதி குறித்துக்கல்யாணப் பத்திரிகை விநியோகமும் செய்ய ஆரம்பித்த பின்னர், அந்தப் பெண்ணை வேண்டாம் எனப் பிள்ளை வீட்டில் சொல்லிவிட்டுப் பெரிய பணக்கார இடத்தில் பெண் கிடைத்தது என அதே முஹூர்த்தத்தில் கல்யாணம் செய்து கொண்டதும் உண்டு.  பெண் வீட்டிலும் அவசரம் அவசரமாக ஏற்கெனவே  முதலில் வந்து பார்த்துவிட்டு சாதாரண வேலை என இவர்கள் வேண்டாம் என நினைத்திருந்த பையரைத் தேடிப் பிடித்து அழைத்து அதே முஹூர்த்தத்தில் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் தரப்பில் சந்தோஷம் அடைந்தனர்.

"இன்னாருக்கு இன்னார் என்று
எழுதி வைத்தான் இறைவன் அன்று"
என்ற வார்த்தைகள் உண்மை தான் அல்லவா?

இதை எல்லாம் மீறித் தான் இன்று பல திருமணங்கள் நிச்சயம் ஆகி நடக்கின்றன.  பெரும்பாலும் அனைவரும் பொருத்தம் பார்க்கின்றனர்.  ஆனால் நம் சாஸ்திரமோ ஜோசியத்தையும், பொருத்தத்தையும் வலியுறுத்தவே இல்லை.  அதைக் குறித்துப் பின்னர் பார்ப்போமா?

Friday, April 05, 2013

எங்களுக்கு தாகம் எடுக்காதே!


இதுங்க ரெண்டுக்கும் தாகமே எடுக்காது தான்.  ஆனால் கீழே உள்ள ரெண்டு பேரும் அதைப்பார்த்து என்னமோ பேசிக்குதுங்க. என்னவா இருக்கும்?
அட? அதுங்க தண்ணியிலேயே குடி இருக்கும் இனத்தைச் சேர்ந்தது.  நாம அப்படீல்லை. தாகம் எடுத்தால் தான் குடிக்கலாம்னு ஒண்ணு இன்னொண்ணைச் சமாதானம் பண்ணுது.  இப்போ தாகம் எடுக்குதே எப்படிப்பறந்து கீழே போறது?  கட்டி இருக்காங்களே?னு இன்னொண்ணு மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கறது!

Thursday, April 04, 2013

இன்னிக்கும் படம் காட்டறேன் பாருங்க

கண்ணாடி இன்னும் வரலை;  அநேகமா நாளைக்குக் கிடைக்கலாம்.  அது வரைக்கும் எழுத முடியலை.  ஆகவே (ஃபில்ம்) காட்டலாமேனு ஒரு எண்ணம்.   என் கணவரோட பிறந்த வீடு பார்த்தீங்க இல்லையா?  அந்த வீட்டுக் கூடத்தில் இருக்கும் ஸ்வாமி அலமாரி.  எடிட் பண்ணிட்டுப் போட்டிருக்கேன்.  ஹிஹி, ஆளுங்களை மட்டும் தான் நீக்கினேன்.  மத்தப்படி வேறே லைட்டிங்கில் எல்லாம் கை வைக்கலை.



இப்போ இருக்கிறவங்களும் சாமி அலமாரியாத் தான் பயன்படுத்தறாங்க. :)))

அடுத்தது 2011 ஜூனில் நடந்த எங்க ஊர் பரவாக்கரைப் பெருமாள் கோயில் கும்பாபிஷேஹத்தில் கலசத்தில் நீர் ஊற்றும் பட்டாசாரியார்.  இந்தப் படம் நான் எடுக்கலை.  யார் எடுத்ததுனு புரிஞ்சிருக்கும். :)))) மேலே ஏறுவது என்றால் சாரத்தில் ஏறணும்.  என்னோட காலை வைச்சுண்டு எல்லாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நான் ஏறலை.  ரங்க்ஸ்தான் எடுத்தார்.

ஹிஹிஹி, படம் மாறிப் போயிருக்கு. கும்பத்திற்கு அபிஷேஹம் பண்ணும் படத்துக்குப் பதிலா இது வந்திருக்கு. :)))) விடுங்க. அப்புறமாப் பார்த்துக்கலாம்.  இப்போப் போறேன்.  மின்சாரம் போகப் போகுது. :)))))

Wednesday, April 03, 2013

பிறந்த வீட்டுப் பாசம் எல்லாருக்கும் உண்டு!

உங்க பூர்விக வீட்டை மட்டும் போட்டியே, எங்க வீட்டையும் போடுனு நம்ம ரங்க்ஸ் சொல்லலை;  என்றாலும் போட்டுட்டேன்.  ஏற்கெனவே போட்ட நினைப்பும் இருக்கு.  வாசலில் பெரிய திண்ணை.  படம் இருக்கு; ஹிஹிஹி,மனிதர்களும் இருக்காங்க.  அவங்க கிட்டே அநுமதி வாங்காததால் அதைப் போட முடியலை.  இன்னொரு சமயம் போறச்சே வாசல்லே யாரும் இல்லாத சமயமாப் பார்த்துப் படம் எடுத்துடறேன். ரேழி தாண்டி உள்ளே நுழைஞ்சதும் முற்றம் முற்றத்தைச் சுற்றிக் கூடம்.

கூடத்தின் ஒரு சிறு பகுதி.  முதலில் தெரியும் அறைக்கு அடுத்துத் தூணுக்கு அருகே இருக்கும் அறையில் தான் நம்ம ரங்க்ஸ் பிறந்தார். இந்த வீடு அடுத்தடுத்து குடியிருப்பவர்களால் பராமரிக்கப் படுவதால் கொஞ்சம் இல்லை, நிறையவே பார்க்கும்படி இருக்கிறது. கூடத்திலேயே ஸ்வாமி அலமாரியும் உண்டு.  அதெல்லாமும் இருக்கு;  ஆனால் போட முடியாது. பார்த்து எடிட் பண்ணிப் போடறேன்.

Monday, April 01, 2013

ஏப்ரல் ஃபூல், ஏப்ரல் ஃபூல்.

ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி,

என்றும் ஃபூல் என்றொரு ஜாதி!

இன்னிக்கு பிஎஸ் என் எல் எல்லாரையும் ஏப்ரல் முட்டாளாக்கிடுச்சு.  அதே சமயம் மின் வாரியமும்.  காலம்பர இருந்து மொத்தமா இரண்டரை மணி நேரமே மின்சாரம் போயிருக்கு.  ஆஹானு நினைச்சுட்டு ஜாலியாக் கணினியிலே உட்கார்ந்தால், நோ இணையம்.  ஹா,ஹா என்னனு நினைச்சேனு பிஎஸ் என்னெலோட அட்டஹாசச் சிரிப்பு.

ஒரு மணி நேரம் காத்துட்டு இருந்தும் வரலை.  வெறுத்துப் போய் புகார் கொடுக்க விழைந்தால் தானியங்கிப் புகார் கொடுக்கிறதுக்குள்ளே வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.  வந்த ஒன்றிரண்டு லான்ட்லைன் தொலைபேசி அழைப்பும் பாதியிலே நின்று போக நேரே ஸ்ரீரங்கம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அழைத்தால் , மேடம், இது தேசியப் பிரச்னை;  உங்களுக்கு மட்டும் இல்லை!" னு சொல்லி சமாதானம் செய்தாங்க. அப்புறமாத் தொலைக்காட்சியைப் பார்த்தால் அங்கேயும் கிட்டத்தட்ட இந்த சைபர் அட்டாக்கினால் பதினைந்து நாடுகளின் இணைய இணைப்பு சேதமாகி இருப்பதாகவும், விரைவில் சரியாகும் என்றும் சொல்றாங்க.

இப்போ மூணு மணிக்கப்புறமாத் தான் இணையம் வந்தது.  உங்களுக்கு???  கடைசியிலே இணையம் ஏப்ரல் முட்டாளாக்கி விட்டது. :))))))

கண்ணுக்குத் தெரியாதா?

கண்ணைப் பத்தி எழுதறச்சேயே நினைச்சேன், இதையும் எழுதணும்னு.  பதிவு ரொம்பப் பெரிசாயிடும்னு எழுதலை. கண்ணைக் காட்டப் போறச்சே அந்த மருத்துவர் குறித்து சாமானிய மக்கள் என்ன நினைக்கிறாங்கனு கேட்டால் மட்டும் போதாது.ஏனெனில் சாமானிய மக்கள் பெரும்பாலும் விளம்பரங்களைப் பார்த்துட்டே போறாங்க.  நான்கு வருடங்கள் முன்னால் என்னோட வழக்கமான கண் மருத்துவர் வரச் சில மாதங்கள் ஆகும்னு தெரிஞ்சு, சும்மா பவர் தானேனு வேறொருத்தர் கிட்டே போனேன்.  அவங்களை என் கணவரோட அலுவலக நண்பர் ரொம்பவே சிபாரிசு செய்திருந்தார். வீட்டுக்கும் கிட்டக்க.  சரினு அவங்க கிட்டே போனால், எல்லாச் செக்கப்பும் முடிஞ்சு காடராக்ட் வர ஆரம்பிச்சிருக்கு; ஆறு மாசத்திலே ஆபரேஷனு சொல்லிட்டாங்க. எனக்கோ திக், திக், திக்.

சரினு அவங்க கிட்டே சொல்லிட்டுத் தாற்காலிகமானு அவங்க கொடுத்த கண்ணாடியைப் போட்டால் நல்லாவே கண் தெரியுது.  காடராக்ட் காரங்க கிட்டே காடராக்ட் வந்தால் என்னென்ன செய்யும்னு கேட்டு ஒரு சர்வே நடத்தினேன்.   அவங்க சொன்ன எதுவும் எனக்கு இல்லை.  சில நாட்களில் இந்த மருத்துவர் கிட்டேயே சந்தேகம் வந்துடுச்சு.  ஆறு மாதங்கள் கழிச்சு வழக்கமான செக்கப்புக்காக என்னோட பழைய கண் மருத்துவர் கிட்டேயே போனேன்.  அவரிடம் அவர் இல்லாதப்போ வேறொருத்தர் கிட்டே போனதைச் சொல்லி, அவர் இம்மாதிரிச் சொல்கிறாரேனு கேட்டேன்.  சிரித்த மருத்துவர் எல்லா சோதனைகளையும் முடிச்சுட்டு, "உங்களுக்கு பவர் ஒண்ணுதான் பிரச்னை.  கண்ணாடி போட்டாலே போதும்.  இத்தனை பேர் வராங்களே, யார், யாருக்கு காடராக்ட் பண்ணணுமோ அவங்களுக்குத் தான் பண்ண முடியும்.  சும்மாவானும் உங்க கண்ணைத் தோண்டுவோமானு கடுமையாவே சொன்னார். அதுக்கப்புறமா அவர் கொடுத்த கண்ணாடி உதவியில் ஒரு வருஷத்துக்கும் மேல் ஓடியது.

சென்னையில் இருக்கும் ஒரு கண் மருத்துவமனையில் இப்படித்தான் எல்லாருக்கும் ஆபரேஷன்னு சொல்லிடறாங்க. என்னோட நாத்தனார் போயிட்டு ஆபரேஷன் செலவு மட்டுமே ஐம்பதாயிரத்துக்கும் மேல் போய், அவங்களுக்கு வைச்ச லென்ஸும் சரியில்லையாம். அவங்க கண்ணுக்குப் பொருந்தலையாம்.  அதுக்காக ஸ்பெஷல் கண்ணாடினு சொல்லி அந்த மருத்துவமனையில் கண்ணாடிக்கு வேறே பத்தாயிரத்துக்கு வாங்கினாங்க.   கண்ணாடியையும் வெளியே வாங்கிக்கக் கூடாதாம். அங்கே தான் வாங்கணுமாம்.  நிஜம்மாவே ஆபரேஷன் பண்ணினாங்களானு எனக்கு சந்தேகம் இன்னிவரை தீரலை.  ரேவதி நரசிம்மனுக்கும், அட நம்ம வல்லிதாங்க, இந்தக் கண் ஆபரேஷனால் பிரச்னை தான் ஆகி இருக்கு.  ஆகவே கண்ணைக் காட்டும் முன்னர் நல்லா யோசிச்சுக் காட்டுங்க.  ஒருத்தருக்கு இரண்டு பேர் கிட்டே காட்டி, இரண்டு பேரின் கருத்தும் ஒத்துவருதானும் பார்த்துக்குங்க.  சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு கண் மருத்துவமனை சிறப்பான சேவையை உலகத்தரத்துக்கு அளிக்கிறது.