எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 21, 2013

மாமியாரு, மாமனாரை மதிக்கணும்!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஶ்ரீராமநவமிப் பிரசாதத்துக்கு ஏகக் கூட்டம் வந்திருக்கு! :))) இதுவே மத்தப் பதிவுகளுக்கு இத்தனை வரதில்லை! :P :P

இந்த முறை சென்னைப் பயணத்தின் போது கல்யாணத்துக்குக் காத்திருக்கும் முதிர் கன்னர்கள் சிலரின் பெற்றோரிடம் பேச நேர்ந்தது.  முதிர்கன்னர்கள் கல்யாணத்துக்குத் தயாராய் இருக்கும் அளவுக்குப் பெண் வீட்டினர் ஆர்வம் காட்டுவதில்லையாம்.  "நீங்க ஜாதகம் அனுப்புங்க;  நாங்க பார்க்கிறோம்." என்ற அளவிலேயே பேசறாங்களாம்.  ஜாதகம் அனுப்பிட்டுக் கேட்டால், பையர்களின் வேலைத் தகுதி, வாங்கற சம்பளம், சொந்தமாய் வீடு வாங்கியாச்சா?  அல்லது வாங்கும் வசதி இருக்கா?  கல்யாணத்துக்கு அப்புறமும் எங்க பொண்ணு வேலைக்குப் போவா.  உடனே எல்லாம் குழந்தை பெத்துக்கச் சொல்லக் கூடாது.  குறைந்தது ஐந்து வருஷங்களாவது ஆகும்.  அப்படிக் குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கும், எங்க பொண்ணுக்கும் சேர்த்து நீங்க தான் செய்யணும். "

"எங்க பெண்ணின் சம்பாத்தியத்தில் இருந்து இத்தனை பங்கு எங்களைச் சேர வேண்டியது.  மாசா மாசம் கரெக்டா வந்துடணும்.  அக்ரிமென்டாகப் போட்டுக் கொண்டாலும் சரி.  பெண்ணை வேலை செய்யலையே என்றெல்லாம் கேட்கக் கூடாது.  செல்லமா வளர்த்திருக்கோம். கோபம் வரும்.  முன் கோபம் ஜாஸ்தி.  நீங்க தான் அனுசரிச்சுக்கணும்.  அவ கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்து செலவும் செய்து படிக்க வைச்சிருக்கோம். அதனால் குற்றம், குறை சொல்லக் கூடாது. அவ்வப்போது நாங்களும் வந்து தங்கிப்போம்.  ஆனால் சமையல் வேலை எல்லாம் எங்களால் பார்த்துக்க முடியாது.  நீங்க தான் எங்களுக்கும் சேர்த்துச் செய்து போடணும். "  இது ஒரு பக்கம் நடந்து வருகிறது.  ஆச்சரியமா இருக்கா?  ஆனால் இது உண்மை.  ஏனெனில் பிள்ளை வீட்டுக்காரங்க அனைவரும் எனக்கு நெருங்கிய சொந்தம்.  ஒரு சில பெண்களின் ஜாதகங்களை அவங்களுக்கு வாங்கிக் கொடுத்த விதத்தில் இம்மாதிரிக் கேள்விகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன்.  இதிலே பிள்ளை தொழில் நுட்ப வல்லுநராக இருக்கணும் என்ற எதிர்பார்ப்பே அதிகம்.  வெளிநாட்டு மோகம் குறைஞ்சிருந்தாலும், பெண்களூருக்குக் கூடப்போக மாட்டோம் எனச் சொல்லும் பெண்களையும், அவர்களின் பெற்றோரையும் பார்த்துவிட்டேன்.  இங்கேயே ஸ்ரீரங்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தப்போ அவங்க அப்பா, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கத்துக்குள்ளாக உங்க பையர் வேலை பார்த்துக் கொண்டு வந்தால் எங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை.  சென்னையே எங்களுக்குத்  தொலைவு என்று சொல்லி மறுத்துவிட்டார்.

இப்போ இன்னொரு பக்கத்தையும் பாருங்க.  இதுவும் தெரிஞ்சவங்க தான்.  உறவு தான்.  மூன்று வருஷம் முன்னாடி பெண்ணுக்குக் கல்யாணம் செய்தாங்க.  பிள்ளை வீட்டுக்காரங்களும் எனக்குத் தெரிஞ்சவங்களே. தெரிஞ்சவங்கன்னா ரொம்பவே தெரிஞ்சவங்க.  அவங்க பிள்ளையும் இஞ்சினியர்.  பெண்ணும் ஐடியில் அல்லது இஞ்சினியராக இருக்கிறார்.  நல்ல சம்பாத்தியம்.  பெண்ணுக்கு வேலைக்குப்போக வசதியாக மாம்பலத்தில் வீடு.  காலையில் அந்தப் பெண் தான் எழுந்து எல்லா வேலைகளையும் கவனிச்சுட்டு, மாமியார், மாமனாருக்கு சமைச்சு வைச்சுட்டுப் போகணும்.  மதியம் கையில் கொண்டு போகும் சாப்பாடு தான்.  சாயந்திரம் வீட்டுக்கு வருகையிலேயே ஏழு மணி ஆகிடும்.  மாமியார் சாயந்திரத்துக்குத் தேவையான சமையலைச் செய்து பிள்ளைக்குப் போட்டுவிட்டுத் தானும் சாப்பிட்டு விட்டு சுத்தமாகச் சமையலறையை ஒழிச்சு வைச்சுடுவாங்க.  இன்னிக்கும் அப்படித் தான் நடக்கிறது.  அந்தப் பெண் வந்தால் இருக்கிற கொஞ்சம் சாதத்திலும், (அநேகமா வைக்கிறதில்லை.  ஒவ்வொரு நாட்கள் இருக்குமாம்) தண்ணீரை விட்டு வைச்சுடுவாங்க. சாப்பாடு இல்லையானு அந்தப் பெண் கேட்டால், "உன் இஷ்டத்துக்கு வந்தால் இங்கே சாப்பாடு பண்ணி வைக்க நான் என்ன வேலைக்காரியானு பதில் வருமாம்.  இதிலே மாமனாரின் தூண்டுதல் காரணமாகச் சமைத்த பாத்திரங்கள், காப்பி குடித்த பாத்திரங்கள்னு எல்லாம் தொட்டி முற்றம் நிறைய இருக்கும்.  பசியோடு வரும் பெண் என்னத்தைச் சாப்பிடுவது?

அந்தப் பெண்ணின் பெற்றோர் வீடு அருகேயே இரண்டு தெரு தள்ளி இருப்பதால் அங்கே போய்ச் சொல்லிக் கிடைச்சதைச் சாப்பிட்டு வருவாளாம். நாளாவட்டத்தில் குழந்தையும் பிறந்தாச்சு.  குழந்தையை மாமியாரோ, மாமனாரோ தூக்குவது கூடக் கிடையாது. அந்தப் பெண் தானே பெற்றுக் கொண்டாள்.  ஆகவே அவள் தான் பொறுப்பு.  மீண்டும் பெற்றோர் தான் உதவிக்கு.  காலை அந்தப் பெண் வேலைக்குப் போகும் சமயம் பெண்ணின் தந்தை வந்து குழந்தையைத் தூக்கிச் செல்வார்.  மாலை வேலையிலிருந்து திரும்புகையில் அம்மா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுக் குழந்தையை எடுத்துக் கொண்டு வருவாள் அந்தப் பெண்.  அந்தப் பெண்ணின் கணவனோ தன் பெற்றோரைத் தட்டிக் கேட்பதும் இல்லை.  பெண்ணின் பக்கம் பரிந்தும் பேசுவது இல்லை.  நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக.  இப்போவும் இந்தக் காலத்திலேயும் இப்படியும் அக்கிரமம் நடக்கிறது. ஒவ்வொருத்தர் பிள்ளைக்குக் குழந்தை பிறக்குமா, நாம கையிலே எடுத்துக் கொஞ்சுவோமானு காத்திருக்க, இங்கே நேர்மாறாகக் கிடைத்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை. :(

ஒரு பக்கம் பெண் வீட்டுக்காரங்களின் நிபந்தனைகள், இன்னொரு பக்கம் பெண்ணைக் கொடுத்து விட்டுத் தவிக்கும் பெற்றோர். அப்பாவிப் பெண்களின் நிலைமை மாறாமல் இருப்பது தான் மிச்சம்.  எங்கே போகிறோம்?  இது தர்ம பூமி, கர்ம பூமி என்றெல்லாம் சொல்வது எதுக்காக?  இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்து நடப்பதற்கா? என்ன நாடு இது?  என்ன மனிதர்கள் இவங்க? எப்போ மாறும் இதெல்லாம்?  நினைக்க நினைக்கக் கொதிக்கிறது!  அந்தப் பெண்ணின் தங்கை திருமணம் செய்து கொள்ளவே மறுக்கிறார்.  அக்காவுக்கு வந்தாப்போல் எனக்கும் அமைந்து விட்டால் என்ன செய்யறது என பயம். :(((  இதெல்லாத்துக்கும் விடிவு எப்போ?  ஆங்காங்கே ஒரு சில பெண்களும், மாமியார்களும் அத்தி பூத்தாற்போல் ஒத்துப் போகிறதும் நடக்கிறது.  என்றாலும் மருமகள் வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் செய்யணும்;  வீட்டிலும் எல்லா வேலையும் செய்யணும்.  நான் மருந்துக்குக் கூட உதவ மாட்டேன் என்பது எந்த விதத்தில் நியாயம்? 

31 comments:

  1. "நீங்க ஜாதகம் அனுப்புங்க; நாங்க பார்க்கிறோம்." என்ற அளவிலேயே பேசறாங்களாம். ஜாதகம் அனுப்பிட்டுக் கேட்டால், பையர்களின் வேலைத் தகுதி, வாங்கற சம்பளம், சொந்தமாய் வீடு வாங்கியாச்சா? அல்லது வாங்கும் வசதி இருக்கா? கல்யாணத்துக்கு அப்புறமும் எங்க பொண்ணு வேலைக்குப் போவா. உடனே எல்லாம் குழந்தை பெத்துக்கச் சொல்லக் கூடாது. குறைந்தது ஐந்து வருஷங்களாவது ஆகும். அப்படிக் குழந்தை பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கும், எங்க பொண்ணுக்கும் சேர்த்து நீங்க தான் செய்யணும். "//

    முதிர்கன்னி வீட்டார் சொல்வது கேட்க கஷ்டமாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. "உன் இஷ்டத்துக்கு வந்தால் இங்கே சாப்பாடு பண்ணி வைக்க நான் என்ன வேலைக்காரியானு பதில் வருமாம். இதிலே மாமனாரின் தூண்டுதல் காரணமாகச் சமைத்த பாத்திரங்கள், காப்பி குடித்த பாத்திரங்கள்னு எல்லாம் தொட்டி முற்றம் நிறைய இருக்கும். பசியோடு வரும் பெண் என்னத்தைச் சாப்பிடுவது?//

    இதை கேட்கும் போது கஷ்டமாய் இருக்கிறது 7 மணிக்கு எல்லோரும் சாப்பிட்டு பாத்திரங்களை ஒழித்துப்போடுவதா! இப்படியும் மனிதர்களா?

    ReplyDelete
  3. பல வீடுகளில் கஷ்டம் தான். என்னத்த சொல்ல!

    ReplyDelete
  4. சில் வீடுகளில் மகள் வேலைக்கு போகிறாள் குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உதவிக்கு பெண்ணின் அம்மா, அப்பா இருவரும் வந்து குழந்தையை ஆளாக்கி விட்ட பின் இப்போது அவர்கள் தேவை இல்லாமல் இருப்பது போல் குடும்பத்தினர் நடத்துகிறார்கள் என்று புலம்புவதும் நடக்கிறது.

    மாமனார், மாமியார் வீட்டு வேலைகளில் உதவிக் கொண்டு குழந்தைகளை பார்த்துக் கொண்டு சந்தோஷமாய் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.



    ReplyDelete
  5. இந்தக்காலத்தில் எல்லாமே சிரமம் தான்... கேள்விகள் கேட்பதை தவிர...

    ReplyDelete
  6. படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்த நிலைமை இருபது வருஷம் முன்னாலயே எங்கள் பக்கத்துவீட்டுக்கு வந்த மருமகளுக்கு நடக்க,அவள் சாமர்த்தியமாக வட அமெரிக்காவில் வேலை வாங்கிக் கொண்டு கணவனையும் வந்தால் வா. இல்லாட்டா எப்ப முடியற்தோ அப்பப் பார்த்துக்கலாம்னு சொல்லிவிட்டது. கர்நாடகக் காரர்கள். இவர்களுக்கு இருப்பது ஒரே பிள்ளை.அவனும் போன வருஷம் கிளம்பிவிட்டான். காலம் எவ்வளவோ மாறிவிட்டது.

    ஆனாலும் நீங்கள் சொன்ன பிள்ளையின் அம்மா இப்படிக் கடுமையா இருக்கவேண்டாம்:(
    அவர்கள் பெண் என்றால் விட்டுக் கொடுப்பார்களா.

    எங்கள் பெண்ணும் பார்த்த வேலையைவிட்டுவிட்டாள். இரண்டு பசங்களைஒழுங்காக வளர்த்து ஆளாக்கினால் போதுனு தோன்றிவிட்டது.

    ReplyDelete
  7. '...நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக...'

    ~ 'வாய் மூடி' ஆமாம். ஆனால், இது நடுநிலை அல்லவே. ஈசான்ய மூலை, அந்தத் தண்ட ச்சோறு.

    ReplyDelete
  8. '...நடுநிலை வகிக்கிறானாம் வாய்மூடியாக...'

    ~ 'வாய் மூடி' ஆமாம். ஆனால், இது நடுநிலை அல்லவே. ஈசான்ய மூலை, அந்தத் தண்ட ச்சோறு.

    ReplyDelete
  9. அந்தப் பெண் இதையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. பெண்ணுக்கு சுயமரியாதை இல்லையென்றால் யார் என்ன சொன்னாலும் செய்தாலும் கஷ்டத்தில் தான் உழல்வார்கள். நிறையப் பார்த்துவிட்டேன். தைரியமும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் வேண்டும். this really annoys me. இந்தக் காலத்தில் இப்படியா! தன்னுடைய குழந்தைக்கு எவ்வளவு poor role model ஆக இருக்கிறாள் இந்தப் பெண்!
    அவளைத் திருமணம் செய்துகொண்டவன் ஆண் தானா? அறிவில்லாத மிருகமா?

    ReplyDelete
  10. வீட்டுக்கு வீடு வாசற்படி. பிரச்சினைகளின் பரிமாணம்தான் வேறு.

    ReplyDelete
  11. அப்பாதுரை, என்ன ஆச்சரியம்? கிட்டத்தட்ட உஙகளோட கருத்தோட ஒத்துப் போகவேண்டிய நிலைமை எனக்கும்! ஹிஹிஹி, இதே கருத்தில் தான் ஜி+இல் லக்ஷ்மி பாலகிருஷ்ணனுக்கும் பதில் கொடுத்திருக்கேன். இங்கே வந்தால் நீங்களும் அதையே சொல்றீங்க! என்னமோ போங்க, எப்படி உங்க கருத்தோட ஒத்துப் போகிறேன்னு எனக்குக் கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்காக்கும்! :))))))

    ReplyDelete
  12. இதான் லக்ஷ்மி பாலகிருஷ்ணனுக்கு நான் சொன்னது:

    லக்ஷ்மி, நீங்க சொல்லும் காரணம் தான் பெற்றோருக்கும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே நல்லவங்களா, கெட்டவங்களானு எப்படிக் கண்டு பிடிக்கிறது? அவங்க பெண்ணுக்குத் தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுத்து வளர்த்திருந்தால், இம்மாதிரியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளலாமே? அது தான் வேணும். என்னோட மறைமுகக் கருத்து அது தான். அந்தப் பெண் தன்னோட உரிமைக்காகப் போராடி ஜெயிக்கணும். படித்து வேலைக்குப் போய் 20,000-க்கு மேல் சம்பாதிக்கும் பெண்ணுக்கு மனோ தைரியம் வேண்டாமா? அநியாயத்தை எதிர்க்க வேண்டாமா? மாமியாராக இருந்தாலும் என்னோட சுயமரியாதையை மதிக்கலைனா நானும் ஒதுக்கிடுவேன். அப்படினு கொஞ்ச நாட்கள் இருந்தால், தானே வழிக்கு வருவாங்க. இந்த நடவடிக்கை பலனை அளிப்பதையும் பார்த்திருக்கிறேன். :))))))))
    Collapse this comment

    ReplyDelete
  13. வாங்க கோமதி அரசு, பெண் வீட்டார் சொல்வது கஷ்டம்னு நாம பிள்ளையைப் பெற்றுவிட்டு நினைத்தாலும் அவங்களுக்கு அவங்க பெண்ணைப் பத்தின கவலையும் இருக்கு!:))))) அவங்க தரப்பிலே அது நியாயமாவும் தெரியுது. :))))

    ReplyDelete
  14. //இதை கேட்கும் போது கஷ்டமாய் இருக்கிறது 7 மணிக்கு எல்லோரும் சாப்பிட்டு பாத்திரங்களை ஒழித்துப்போடுவதா! இப்படியும் மனிதர்களா?//

    அவள் வருவதற்குள்ளாக எல்லாம் அவசரம் அவசரமாச் செய்துடுவாங்களாம். இதை அவங்களே பெருமையா இன்னொரு நண்பர் வீட்டில் பகிர்ந்துப்பாங்களாம். அந்த நண்பர் சொல்லித் தான் எனக்குத் தெரிய வந்தது. அந்தப்பெண்ணுக்குத் தான் தைரியம் வந்து முதல்லே புருஷனை உலுக்கணும். நீயெல்லாம் என்னடா ஆம்பளைனு கேட்கணும். எதுக்குக் கல்யாணம் பண்ணிண்டே? நீ சாப்பிடறச்சே பெண்டாட்டி நினைவே வரலையா உனக்குனு கேட்கணும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  15. இத்தனைக்கும் அந்த அம்மாவும் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தவரே!:(

    ReplyDelete
  16. வாங்க வெங்கட், கணவன், மனைவி இருவரும் ஒத்துப்பேசிக்கணும். அதே போல் மாமியார்க்காரி மருமகளை அவமானம் செய்ய நினைத்தால் மாமனார் எடுத்துச் சொல்லணும். மாமனார் தப்பாகப்பேசினால் மாமியார் புரிய வைக்கணும். இங்கே இரண்டுமே மோசம்! என்ன சொல்ல முடியும்! :((((

    ReplyDelete
  17. டிடி, கரெக்டாப் பாயின்டைப் பிடிச்சுட்டீங்க.:)))

    ReplyDelete
  18. வாங்க வல்லி, நீங்க சொல்லும் அந்தப் பெண் செய்ததைத் தான் இவளும் செய்யணும் என்பது என்னோட எதிர்பார்ப்பு. பார்க்கலாம். நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  19. வாங்க "இ"சார், தண்டச்சோறே தான். வேறென்ன சொல்ல! :(

    ReplyDelete
  20. வாங்க கடைசி பெஞ்ச், எல்லாம் நாம் எதிர்கொள்ளும் விதத்தைப் பொறுத்து அமையும்.

    ReplyDelete
  21. அப்பாதுரை, உங்களுக்கு பதில் சொல்லிட்டேன். :))) அந்தப்பையர் என் மனைவியை அவமதிப்பது என்னையே அவமானம் செய்வது போல் என்பதைச் சொல்லவோ, உணர்த்தவோ வேண்டாமா? அவளைத் துன்புறுத்தினால் எனக்கு சந்தோஷம் வருமானு கேட்க வேண்டாமா? என்ன ஆம்பிளைனு எரிச்சலா வருது! :((((

    ReplyDelete
  22. என்ன இப்படி சொல்லிட்டீங்க..?க்ரேட்டு மைன்டுசு திங்கு அலைக்குனு சொல்வாங்க.

    ReplyDelete
  23. //என்ன ஆம்பிளைனு எரிச்சலா வருது!

    what an idiot! still, அந்தக் கணவன் கேட்கிறானோ இல்லையோ இந்தப் பெண் நிச்சயம் கேட்க வேண்டும். தன் மதிப்பைக் காத்துக் கொள்ள எதற்கு இன்னொருத்தரை எதிர்பார்க்க வேண்டும்? இன்னிக்கு புருஷன் நாளைக்குப் பிள்ளைனு அடுத்தவரை நம்பியே இருப்பது சரியல்ல.

    நீங்க சொல்லியிருப்பது போல.. பெண்களுக்கு சின்ன வயசிலிருந்தே கௌரவம் மதிப்பு சுயமரியாதை பத்தி நிறைய சொல்லணும். எனக்கென்னவோ இந்தப் பெண் வீட்டில் பெற்றோர்கள் அப்படியெல்லாம் நடந்திருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

    இவர்கள் என்றில்லை, நிறைய பேர் வீட்டில் இப்படித்தான். "எங்கப்பாம்மா என்னை எதுவுமே சொல்லாம அதிந்து கூடப் பேசாம வளத்தாங்க.. இங்கே இவங்க குடும்பத்துல காச்சு மூச்சுனு கத்துறாங்க.. பயமா இருக்கு"னு நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். செல்லமாக வளர்ப்பதனால் பிள்ளைகள் சுயமரியாதை பற்றியும் அடுத்தவரை மதிப்பது பற்றியும் அறிவார்கள் என்பது தவறான assumption. அதுவும் பெண் குழந்தை என்றால், "நாளைக்கு இன்னொருத்தர் வீட்டுக்குப் போறவ.. அதனால இப்பல்லேந்து வேலை செஞ்சுப் பழகு"னு நிறைய பேர் வீட்டுல சொல்லி வளத்தாங்க. my family included. very sad.

    குழந்தை பிறந்த பிறகு தாய் என்கிற பார்வையில் தனக்கென்று இருக்கும் அத்தனையையும் விட்டுக்கொடுக்கும் சுபாவம் இயல்பாகவே வரும் நம் நாட்டுப் பெண்களுக்கு சுயமரியாதை, மதிப்பு போன்றவை பற்றிச் சிறு வயதிலிருந்தே நிறையச் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  24. generalize பண்ண விரும்பவில்லை. ராட்சச மனைவி, மாமியார் மாமனாரை நடுத்தெருவில் நிற்க வைத்து தட்டில் சோறு போட்ட மனைவிகளையும் பார்த்திருக்கிறேன்.
    தன்மானம், சுயமரியாதை பொதுவில் வைப்போம். பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாக வைப்போம்.

    ReplyDelete
  25. //என்ன இப்படி சொல்லிட்டீங்க..?க்ரேட்டு மைன்டுசு திங்கு அலைக்குனு சொல்வாங்க.//

    ஹிஹிஹி, அப்பாதுரை, ஓகே, ஓகே!

    ReplyDelete
  26. //generalize பண்ண விரும்பவில்லை. ராட்சச மனைவி, மாமியார் மாமனாரை நடுத்தெருவில் நிற்க வைத்து தட்டில் சோறு போட்ட மனைவிகளையும் பார்த்திருக்கிறேன். //

    இப்போவும் இது நடந்து வருகிறது. இங்கே ஸ்ரீரங்கத்திலேயே இம்மாதிரிப் பல செய்திகள். :(((((( மாமியார், மாமனாரை விரட்டிவிட்டுக் குற்ற உணர்ச்சி சிறிது கூட இல்லாமல் வாழும் மருமகள்களைப் பார்த்து மனம் நொந்து கொண்டிருக்கிறேன்.:(((((

    ReplyDelete
  27. யு.எஸ்ஸில் வாழும் பெண்கள் கொஞ்சம் பரவாயில்லை ரகம்னு சொல்லணும்னு ஆசை. ஆனால் ஒரு சில பெண்கள் தாயையே வேலைக்காரியாக நடத்தும், நடத்திய சம்பவங்கள் காதிலே விழுந்து தூக்கி வாரிப்போட வைக்கிறது. இது குறித்து நிறையத் தனி மடல்கள் வந்தன. :(((((

    ReplyDelete
  28. சரியாச் சொன்னீங்க.. தாய் தந்தையை, குறிப்பாக தாயை, சம்பளமற்ற வேலைக்காரராக மாற்றும் வழக்கம் இந்தத் தலைமுறையில் தான் ஆரம்பமாகியிருக்கிறது. போகப் போக மோசமாகும். பிறகு தெளியும். (என் அம்மா யுஎஸ் பக்கமே தலை வைத்துப் படுப்பதில்லை. என்ன காரணம்னு நினைக்கறீங்க?)

    ReplyDelete
  29. மனைவி சாப்பிட்டாளா இல்லையா என பார்க்காமல் இருக்கும் ஆம்பிளையை என்ன செய்யலாம்.:(

    ReplyDelete
  30. மாமியாருக்குத்தான் புத்தி கெட்டுவிட்டது என்றால் மனைவி சாப்பிட்டாளா இல்லையா என பார்க்காமல் இருக்கும் கணவனை என்ன செய்யலாம்.:(

    ReplyDelete
  31. மனைவி சாப்பிட்டாளா இல்லையா என பார்க்காமல் இருக்கும் ஆம்பிளையை என்ன செய்யலாம்.:(

    ReplyDelete