எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 27, 2013

ஜோசியம் பார்க்கணுங்க ஜோசியம்!


சமீபத்தில் நண்பர் ஒருத்தர் பதிவில் ஜோசியம் குறித்து எழுதி இருந்தார்.  ஆபரேஷனுக்குத் தயாராக இருக்கும் நோயாளி ஒருவர் ஜாதகம் பார்ப்பது குறித்த கதை அது. அவர் அதை நகைச்சுவையாகவே எழுதி இருந்தார்.  ஆஸ்பத்திரியில் ஜோசியரை வைத்து நோயாளியின் ஜாதகத்தைப் பார்ப்பதாகவும் ஆபரேஷன் சக்சஸ் ஆகும் என்றாலே அட்மிஷன் என்றும் பொருள்படும்படியாகவும் கடைசியில் உண்மை ஜாதகம் சரிவராமல், பொய்யான ஜாதகத்தைக் கொடுத்து ஆபரேஷனுக்கு அட்மிஷன் வாங்குவதாகவும் கதை முடிந்திருக்கும். ஆனால் உண்மையிலேயே ஆயுர்வேத மருத்துவ முறையில் ஜாதகம் மிகவும் முக்கியம்.  ஒருத்தரின் தோஷங்களை அந்த ஜாதகத்தில் நடக்கும் கிரஹங்களின் போக்குவரத்தை வைத்துக் கணித்து இந்த கிரஹத்தின் காரணத்தால் இந்த தோஷம் எனக் கண்டு பிடித்து அதற்கேற்றாற்போல் மருந்து கொடுப்பார்கள்.  அல்லது ஆபரேஷன் போன்ற பெரிய விஷயங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.

விளையாட்டு இல்லை;  இதை நான் நேரிடையாகவே குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேதப் பல்கலைக் கழகத்தில் நடந்து வருவதை அறிந்திருக்கிறேன்.  சில ஆயுர்வேத மருத்துவர்கள் நோயாளியின் உடல்நிலையோடு அவர்களின் ஜாதகத்தையும் கொண்டுவரச் சொல்லி அதையும் பார்த்துவிட்டே மருந்து கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்கள். ஆகவே திருமணத்திலும் ஜாதகம் குழந்தை பிறப்புக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.  மற்ற எந்தப் பொருத்தங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நக்ஷத்திரப் பொருத்தமும், குழந்தை பிறக்குமா, பிறக்காதா என்பதும் முக்கியமாய்ப் பார்க்கப்பட்டது. அதிலும் போன பதிவில் சொன்ன மாதிரி பெண்ணாக இல்லை எனில் ஏமாற்றப்பட்டிருந்தால் என்ன செய்வது? அப்படிப் பட்ட ஏமாற்றங்கள் நிகழாமல் பெருமளவு ஜாதகங்கள் தடுத்து வந்ததாய்த் தெரிய வருகிறது.  பெண்ணிற்கு ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொடுக்கும் அளவுக்கு உடல்நலம் இருக்கிறதா என்பதை ஜாதகத்தைப் பார்த்தே கணிப்பார்களாம்.  அந்த நாட்களில் செயற்கை ரசாயனச் சேர்க்கை என்பது இல்லை என்பதாலோ என்னமோ ஆண்களில் மலட்டுத் தன்மை என்பது குறைவாகவே இருந்து வந்திருக்கிறது.  இதனால் தானோ என்னமோ பெண்ணிற்குக் குழந்தை பிறக்குமா என்பதை முக்கியமாய்த் தெரிந்து வைத்துக்கொள்ள ஜோசியத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.

பெண்ணின் மூலமே ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து அவள் மூலமே வளர்க்கப்பட்டு சமூகத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற காரணமாகவும் இருந்திருக்கலாம்.  இப்போது நேற்றைய ஒரு செய்தியில் 29 வயதுப் பெண் ஒருத்திக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது.  அவளுக்கு மாதாந்திரப் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கவே மருத்துவரிடம் போய்ப் பரிசோதனை செய்திருக்கிறாள்.  மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி தரும் தகவல்.  அந்தப் பெண்ணிற்கு மாதவிடாய் முடியும் தருவாயில் இருப்பதாக மருத்துவர் கூற அதிர்ந்து போனாள் அந்தப் பெண்.  இப்போதைய பணி நேர மாற்றங்கள், பெண்கள் செய்யும் பணிகள், மன அழுத்தங்கள், சற்றும் உடல்நலம் பேணாமல் வேலைக்காகக் கண்ட நேரம் கண் விழித்திருந்து சரியாக உணவு உண்ணாமை போன்ற பல காரணங்களால் ஒரு சில பெண்களுக்கு இப்போது நாற்பது வயதைக் கடக்கும் முன்னரே இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம்.  ஆகவே பெண்களின் உடல் நலமும், பூரண ஆரோக்கியமும், குழந்தைப் பிறப்புக்கு ஏற்றவளா என்ற தகுதியும் திருமண வாழ்க்கைக்கு மிக முக்கியம்.

இப்போதெல்லாம் குழந்தை பிறக்குமா என்று மட்டும் பார்ப்பதில்லை.  கூடவே Rh-, Rh+ பரிசோதனையும் செய்துவிடுகிறார்கள்.  எங்கள் வீட்டிலேயே என் பிரசவத்தில் ஏற்பட்ட அனுபவத்திற்குப் பின்னர் எங்கள் சித்தி பெண்கள், என் மன்னி போன்றோருக்குக் குழந்தை பிறக்கும் முன்னர் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.  இப்போதெல்லாம் திருமணத்தின் போதே பெண் பார்த்து நிச்சயம் செய்யும் முன்னரே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது.  எனக்குத் தெரிந்து பெண்ணுக்கு Rh- என்பதால் அந்தப் பெண்ணை நிராகரித்தவர்கள் உண்டு. விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் மனிதர்கள் சிந்தனை பின் நோக்கித்தான்.

22 comments:

  1. வணக்கம் அம்மா அருமையான கருத்தைத்தான் முன் வைத்துள்ளீர்கள்
    பல முறை நானும் இதை உறுதியாக நம்பியதுண்டு சில சமயங்களில்
    இந்த நம்பிக்கை வீணாகப் போனதும் உண்டு .ஜோசியம் என்பது நூற்றுக்கு
    நூறு வீதம் மெய்யான விடயம் அதையும் சரியான ஆட்களிடம் கொடுத்துப் பார்க்க வேண்டும் .வெறும் புளைபிற்க்காக ஜோசியம்
    சொல்பவர்களும் நிறைந்த உலகம் இது இங்கே நம்பிக்கை என்பதும் அவரவர் மன நிலையைப் பொறுத்தே தான் உள்ளது அதற்காக ஜோசியமே பொய்யென்றோ அல்லது அது
    தான் வாழ்க்கை என்றோ தீர்மானிப்பது தான் தவறு .அருமையான பகிர்வு இதற்க்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. பத்துப் பொருத்தம் இருக்கும் ஜாதகம் என்பார்கள். 6 இருந்தாலே போதும் என்பார்கள். ரஜ்ஜு, செவ்வாய் எல்லாம் பார்த்தும் பொருந்தாமல் போன கல்யாணங்கள் நீங்கள் சொல்லியிருப்பதுபோல பொய் ஜாதகங்கள் கொடுத்துப் பண்ணிக் கொண்டவையோ என்னவோ... இந்தக் காலத்தில் சில அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகள் செய்து திருமணம் செய்வதில் தவறே இல்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. வாங்க அம்பாளடியாள், உண்மையில் ஜாதகமோ, கிரஹங்களின் சேர்க்கையால் நம் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களோ எதுவும் பொய்யில்லை. ஆனால் அதைச் சரியானபடி எடுத்துச் சொல்லாமல் பணத்துக்காகச் சில போலி ஜோசியர்கள் கிளம்பி அப்பாவி மக்களை ஏமாற்றப் போய் ஜோசியமே பொய் என ஆகிவிட்டது. என் வாழ்க்கையிலேயே எனக்குச் சொன்ன ஜோசியங்கள் பலவும் பலித்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அதே சமயம் அதை மட்டுமே நம்பிக் கொண்டு இருக்காமல் என் சொந்த முயற்சியையும் கைவிட்டதில்லை. நன்றி உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  4. ஸ்ரீராம், நான் சொல்வது இந்தப் பத்துப் பொருத்தங்கள் குறித்தே அல்ல. இவை இல்லை எனினும் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் நக்ஷத்திரப் பொருத்தம் இருந்து அதற்கேற்ற முஹூர்த்தமும் அமைந்து ஒருவருக்கொருவர் மனப்பொருத்தமும் அமைந்துவிட்டால் திருமணத்துக்குத் தடையில்லை. அதே சமயம் குழந்தைப் பிறப்பு உண்டா என்பதைக் கண்டறிய வேண்டும். அவ்வளவே திருமணத்தில் ஜோசியத்தின் வேலை.

    ReplyDelete
  5. கீதா,
    ஜாதகங்கள் பொய்யாகச் சிருஷ்டிக்கப்படும் காலம் இது.
    நம்னிக்கையின் அடிப்படையில் ஜாதகப் பொருத்தம் பார்த்து அனைத்தும் பொருந்தி லட்சலட்சமாகத் திருமணம் செய்து இப்போது ஒரு வார வாழ்க்கையில் வீட்டுக்கு வந்துவிட்ட பெண்கள் கதைகள் நிறைய.சில சாமர்த்தியக் காரப் பெண்கள் மீண்டும் திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். வேற வேற மாநிலத்தைச் சேர்ந்தவர்களோடு திருமணம்.
    இரத்தப் பரிசோதனை மட்டும் மிக முக்கியம் என்று நம்புகிறேன்.
    வேறு வியாதிகள் இல்லாமல் இருக்கணும் இல்லையா.
    அதையும் மீறி நல்ல குடும்பம் அமைய வேண்டும்.
    மருத்துவத்திற்கு ஜோசியம் இன்றி அமையாதது. என் தந்தை நல்ல ஜோசியரிடம் காண்பித்தே தம்பியின் அறுவை சிகித்சைக்கு நாள் குறித்தார்.
    அவர் உண்மையான பூஜை புனஸ்காரங்கள் செய்யும் நல்ல ஜோசியர். புத்திசாலியும் கூட.

    ReplyDelete

  6. ஜோசியம் பலவகைப் படும். கிரக நிலைகள் நட்சத்திரப் பொருத்தங்கள் போன்றவற்றைக் காட்டி ஆருடம் சொல்லும் ஜோசியம் ஒரு வகை. கைரேகை ஜோசியம்,எண்கணக்கு ஜோசியம், முகம் பார்த்துச் சொல்லும் ஜோசியம். கிளி ஜோசியம் போன்ற எல்லாமே மனிதனின் அறியாமையைப் பயன் படுதும் கலைகளே . நாளை நடப்பதை அறிவதானால் வாழ்வின் சுவையே போய்விடாதா.மக்களின் gullibility-ல் ஆதாயம் தேடுவதே ஜோசியம். cheiro வின் palmistry படித்தேன். ஒரு ஜோசியக்காரர் என் கையைப் பார்த்து எனக்கு நாள் குறித்துவிட்டார். அது எப்படி என்று தெரிய கைரேகை ஜோசியம் படித்தேன். பரிசோதிக்க என் நண்பர் ஒருவரின் மனைவி கை பார்த்து சில விஷயங்களை அனுமானமாகச் சொல்லப் போய், அவற்றில் சில உண்மைகளாகப் போக பலரும் என் முன் கை காட்டி நிற்க நான் உண்மையைப் போட்டுடைத்து தப்பி வந்தது பெரிய கதை. இது எல்லாவற்றிலும் முன் நிற்பது இந்த நாடி ஜோசியம். மக்களே சிந்தியுங்கள். மாயவலையில் விழாதீர்கள் என்றுதான் நான் சொல்ல முடியும்.

    ReplyDelete
  7. வல்லி, நீங்க சொல்வது உண்மையே. ஜாதகங்களைப் பொய்யாகச் சிருஷ்டித்துப் பொருந்துகிற மாதிரிச் செய்வதை நானும் அறிந்திருக்கிறேன். ஆனால் திருமண வாழ்க்கைக்கு ஜாதகப் பொருத்தம் அவசியம் இல்லை என்றே சாஸ்திரம் கூறுகிறது. அதே சாஸ்திரம் பெண்ணுக்குக் குழந்தை பெற்றுக் கொடுக்கும் தகுதி இருக்கானும் ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளச் சொல்கிறது. :)))))

    ReplyDelete
  8. பத்துப் பொருத்தம் நிறைந்தவர்கள் வாழ்க்கையில் எப்போதும், சண்டையும், சச்சரவுமாக இருந்தே பார்த்திருக்கேன். அதே சமயம் ஜாதகப் பொருத்தமே பார்க்காமல் திருமணம் செய்து கொண்டவர்கள் சந்தோஷமாக இருந்தும் பார்த்திருக்கிறேன். என்றாலும் ஜோசியம் என்பது ஒரு கலை. முக்கியமாய்க் கற்றுக் கொள்ள வேண்டியது, கணிதம் சார்ந்தது. கணக்கில் சிறிது பிசகினாலும் எல்லாமும் பிசகும். கவனம் கூடுதலாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  9. //கிரக நிலைகள் நட்சத்திரப் பொருத்தங்கள் போன்றவற்றைக் காட்டி ஆருடம் சொல்லும் ஜோசியம் ஒரு வகை. கைரேகை ஜோசியம்,எண்கணக்கு ஜோசியம், முகம் பார்த்துச் சொல்லும் ஜோசியம். கிளி ஜோசியம் போன்ற எல்லாமே மனிதனின் அறியாமையைப் பயன் படுதும் கலைகளே //


    வாங்க ஜிஎம்பி சார், கைரேகை பார்த்துச் சொல்வதிலும் கெட்டிக்காரர்கள் இருக்கின்றனர். என் வாழ்க்கையில் இருவரைப் பார்த்திருக்கிறேன். :))))

    அறியாமையைப் பயன்படுத்தி இப்போதெல்லாம் சொல்வதால் ஒட்டுமொத்தமாக ஜோசியமே பொய் எனக் கூற முடியாது. நல்ல ஜோசியர் சரியாகச் சொல்லுவார். தயவு, தாக்ஷண்ணியம் பார்க்க மாட்டார். பரிகாரம் செய்தால் சரியாயிடும் என்றெல்லாம் ஆசை காட்டி மோசம் செய்ய மாட்டார்.

    அடுத்து நாடி ஜோசியம். இப்போது சொல்வது உண்மையான நாடி ஜோசியமே அல்ல. உண்மையான நாடி ஜோசியத்தையும் கேட்டிருக்கேன். அதை உள்ளது உள்ளபடி சொல்லியும் கேட்டிருக்கேன். இப்போது பணத்துக்காகச் சொல்லிப் பத்தாயிரம், இருபதாயிரம்னு பரிகாரத்துக்காகப் பணம் பிடுங்குவது நாடி ஜோசியமே அல்ல.

    ReplyDelete
  10. Geetha Mam- what about the groom undergoing medical tests before finalising the wedding? Shouldn't he be tested too- for any possible problems? In Aug 2012- health minister- Ghulam Nabi Azad has made a statement about increasing infertility among Indian men.

    ReplyDelete
  11. வாங்க மாதங்கி, ஆண்களும் இப்போப்பார்த்துக்கறதாகவே கேள்விப் படறேன். நீங்க சொல்லும் infertility இப்போ சமீபமாகப் பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது என்பதும் சொல்கிறார்கள். ஆகவே வரும் காலங்களில் இருவருமே மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு தான் கல்யாணம் செய்துக்கும்படியாய் இருக்கும். நம்ம பெரியவங்க சின்ன வயசுக் கல்யாணத்தை விஷயம் தெரியாமல் ஆதரிக்கவில்லை. அதிக பட்சமாக இருபத்தி இரண்டு வயசுக்குள்ளாகப் பெண்களும் இருபத்தி ஐந்து வயதுக்குள்ளாக ஆண்களும் திருமணம் செய்து கொண்டு விடுவதே நல்லது.

    ReplyDelete
  12. இவ்வளவுக்கு பிறகும் ஜோசியம் பார்ப்பதை பரிந்துரைக்கிறீர்களா. ?

    ReplyDelete
  13. பணியிடப் பிரச்சினைகளினால் உடல் உபாதைகள் ஏற்படுவது கொடுமை. ஆண்களுக்கே இப்படி என்றால் பெண்களுக்கு பாதிப்புகள் என்பது இன்னும் அதிகம் வரவே செய்யும்.

    ஒரு சந்தேகம்.
    ஜாதகம் வேறு. ஜோசியம் வேறு அல்லவா?

    ReplyDelete
  14. அதுதான் சரி. கீதா. இரத்தப் பொருத்தம் இருவருக்கும் பார்த்துவிடுவதே நல்லது.நல்ல ஜோசியர் கண்ணில் படுவதுதான் கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  15. //இவ்வளவுக்கு பிறகும் ஜோசியம் பார்ப்பதை பரிந்துரைக்கிறீர்களா. ?//

    ஐயா, ஜோதிடம் பொய்யல்ல. ஆகவே நான் அதைப் பரிந்துரைக்கவில்லை எனினும் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். இதற்கு என்னால் எத்தனையோ உதாரணம் காட்ட முடியும். நமக்கு நம்பிக்கை இல்லை எனில் அந்த விஷயம் பொய்யென அர்த்தம் இல்லை. :)))))))

    ReplyDelete
  16. வாங்க கடைசி பெஞ்ச், ஜாதகம், நாம் பிறந்த நேரம், அந்த நேரத்து கிரஹச் சேர்க்கை, நக்ஷத்திரங்களின் போக்குவரத்து போன்றவற்றைத் துல்லியமாய்க் கணக்கிட்டு எழுதுவது. அந்த ஜாதகத்தைப் பார்த்துப் பலன் கூறுவதே ஜோசியம். ஒரு நாட்டில் கொடும்புயல், அரசர்கள் அல்லது ஆள்பவர்கள் மரணம்/கொலையாவது, சுநாமி வருமா, வராதா என்பதையும் ஜோசியம் மூலமே தெரிந்து கொள்ளலாம். உண்மையான ஜோசியர் இப்படியான இயற்கைப் பேரழிவுகளை முன் கூட்டியே தெரிவிப்பார். எவ்விதத்திலானும் சொல்லுவார்.

    ReplyDelete
  17. வாங்க வல்லி, நல்ல ஜோசியர்கள் தங்களை விளம்பரப் படுத்திக்க மாட்டாங்க. :))))

    ReplyDelete
  18. மனப் பொருத்தம் தவிர எதையும் எங்கள் வீட்டில் பார்ப்பதில்லை... யோசிப்பது கூட இல்லை...

    ReplyDelete
  19. அதனால் என்ன.. தத்து எடுக்கலாமே? இதை ஒரு பிரச்சினையாப் பாத்தாத் தானே பிரச்சினை? நம்ம ஊர்ல பொம்பளைங்களை கீழே தள்ள ஏதாவது ஒரு காரணத்தைப் பாத்துட்டே இருப்பாங்க.

    ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதே வரியில இன்னொண்ணையும் சொல்லணும். இன்னி வரைக்கும் என்னால் நம்ப முடியாத விஷயம். பதினஞ்சு வருசம் இருக்கும். ஊர் பேர் தெரியாத அயல்தேசத்துல பொதுவான மொழி கூட இல்லாத ஒரு இடத்துல - ஒரு கிழவி 98 வயசாவது இருக்கும் - எனக்கு சொன்ன ஜோசியம் என்னால் நம்பவே முடியவில்லை. கைரேகை பாத்தாங்க. அப்புறம் நாடி பிடிச்சாங்க. எல்லாத்துக்கும் மேலே என் தலையை (அப்போ முடி இருக்கும்) பிரிச்சு பிரிச்சு மசாஜ் செய்யுற மாதிரிப் பாத்தாங்க. கால் விரல்களைக் கொஞ்சம் நேரம் ஒண்ணொண்ணா பாத்தாங்க. நோ ஜாதகம். நோ விவரம். என் பெயர் பிறந்த நாள் கூடக் கேட்கவில்லை. இரண்டு தகவல் சொன்னாங்க. இரண்டாவது தகவல் எனக்குத் தேவையில்லைனா விட்டுறலாம்னு சொன்னாங்க. இல்லே, தேவைனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

    முதல் தகவல் சொன்ன இடத்துல சொன்ன டயத்துல நடந்துச்சு.

    ReplyDelete
  20. வாங்க டிடி, தாமதமாக வந்தாலும் அருமையான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  21. அப்பாதுரை, வெறும் குழந்தை மட்டும் தான் என்றால் கட்டாயமாய்த் தத்து எடுத்துக்கலாம் தான். ஆனால் அந்தப் பெண்ணின் மனோநிலை எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. யாரும் கீழே தள்ளாமலேயே இயற்கைத் தன்னைக் கீழே தள்ளிவிட்டதை நினைத்து நினைத்து மனநோயாளி ஆகாமல் இருந்தாலே பெரிய விஷயம் தான். இன்றைய தினசரியிலே கூட ஒரு பெரிய நடிகை முப்பது வயதுக்கும் மேல் ஆகித் திருமணம் வேண்டாம் என்றவர் இப்போது உடல்ரீதியான பிரச்னைகள் என்பதால் உடனடியாகத் திருமணம் செய்து கொண்டுவிடத் துடிக்கிறாராம். இத்தனை வருடங்கள் அவரை யார் தடுத்தது?

    ReplyDelete
  22. 29 வயதுப் பெண் ஒருத்திக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அவளுக்கு மாதாந்திரப் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கவே மருத்துவரிடம் போய்ப் பரிசோதனை செய்திருக்கிறாள். மருத்துவப் பரிசோதனையில் அதிர்ச்சி தரும் தகவல். அந்தப் பெண்ணிற்கு மாதவிடாய் முடியும் தருவாயில் இருப்பதாக மருத்துவர் கூற அதிர்ந்து போனாள் அந்தப் பெண். இப்போதைய பணி நேர மாற்றங்கள், பெண்கள் செய்யும் பணிகள், மன அழுத்தங்கள், சற்றும் உடல்நலம் பேணாமல் வேலைக்காகக் கண்ட நேரம் கண் விழித்திருந்து சரியாக உணவு உண்ணாமை போன்ற பல காரணங்களால் ஒரு சில பெண்களுக்கு இப்போது நாற்பது வயதைக் கடக்கும் முன்னரே இம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். //

    நீங்கள் சொல்வது உண்மைதான்.
    விஜய் தொலைக்காட்சியில் இதை ஆதாரபூர்வமாக கணக்கிட்டு சொன்னார்கள். இதை கேட்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.
    முன்னோர்கள் எல்லாம் இளமையில் திருமணம் ஏன் செய்ய சொன்னார்கள் என்று தெரிகிறது. மடிக்கணினி வேறு ஆண்களுக்கு மலட்டு தன்மையை உண்டாக்குகிறது என்கிறார்கள்.

    ReplyDelete