
நவராத்திரி பற்றிப் பலரும் எழுதியாச்சு, நான் புதிசா என்ன சொல்றது? பொதுவாய் எல்லாருமே அம்மாவிடம் இருந்து தான் பிறக்கிறோம். நம் பிறவிக்குத் தாயாக இருப்பவள் எப்படி ஒரு பெண்ணோ, அது போல சகல ஜீவராசிகளையும் பிறப்பித்தவள் தான் அந்த
"ஆதி பராசக்தி, ஜகன்மாதா" ஆவாள். அவளுடைய கருணையை நம்மால் அளந்து பார்க்க முடியாது. அளவிட முடியாத கருணை கொண்ட அவளின் சக்தியும் அளவிடமுடியாதது. அவள் சக்தியைப் போற்றும் விதமாய்த் தான் "நவராத்திரி" மூன்று தேவியரையும் நினைவு கூரும் விதத்தில் கொண்டாடப் படுகிறது. நம் போன்ற சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதற்காகவே, அதை உணர்த்தும் விதமாய் இந்தப் பண்டிகை நாட்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப் படுகிறது. அதற்காக மற்ற நாட்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை எனவும், ஆணாதிக்கம் எனவும் அர்த்தம் ஆகாது. பெண்ணின் சக்தியை நினைவு கூரவும், அது இல்லை எனில் இவ்வுலக மாந்தருக்கு வாழ்வாதாரம் இல்லை என்பதையும் நினைவு கூரவே இந்தப் பண்டிகை.
புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் நடு இரவு எனச்சொல்லுவதுண்டு. மிகவும் அமைதியாக இருந்து முன்னோர்களை வழிபடுவதற்கும், தெய்வ வழிபாட்டுக்கும் ஏற்ற மாதம் இது தான். கடும் வெயிலும் சரி, மழைக்காலமும் சரி நமக்கு உடலில் பல்வேறு விதமான வியாதிகளையே உண்டாக்கும். இந்தக் காலங்களை யமனின் கோரைப் பற்கள் எனச் சொல்லுவதுண்டு. ஆகவே இந்த உபாதைகளில் இருந்து விடுபடவும், மனம் இறைவனிடம் ஆழ்ந்து போகவும் ஏற்பட்டதே மஹாலயம் என்று சொல்லப் படும் மஹாலயக் காலத்தில் செய்யப் படும் கர்மாக்களும் அதன் பின்னர் வரும் 10 நாட்கள் முழுக்க முழுக்க படைத்துக் காத்த இறைவிக்கு நன்றி செலுத்தும் விதமாயும் கொண்டாடப் படுகிறது.
நவராத்திரியில் முதல் மூன்று நாட்களில் தேவியைத் "துர்க்கை"யாகவும், அடுத்த மூன்று நாட்கள் "மஹாலட்சுமி"யாகவும், கடைசி மூன்று நாட்கள் "சரஸ்வதி"யாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுகிறோம். கோபம் கொண்ட மனம் கொஞ்சம் கொஞ்சமாக சாந்தம் அடைந்து ஞானவழிக்குத் திரும்புவதையும் இது குறிக்கிறது. துர்கை கோபக் காரி, அடுத்த மஹாலட்சுமி கொஞ்சம் சாந்தம் என்றாலும் அவளும், தேவை எனில் கோபம் கொள்ளுபவள் மட்டுமில்லாமல், அவள் நம்மை விட்டு விலகியும் போய் விடுவாள். அடுத்து சரஸ்வதியைத் தஞ்சம் அடைந்தால் நமக்கு அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் பிறக்கும் என்பதற்கும் இந்த வழிபாட்டு முறை என்றாலும், தேவி பாகவதம் சொல்லும் படி மது,கைடப சம்ஹாரத்தைத் துர்கையும், மஹிஷனை மஹாலட்சுமியும், சும்ப, நிசும்பர்களைச் சரஸ்வதியும் சம்ஹாரம் செய்ததாகக் கூறுகிறது. இது எல்லாவற்றையும் செய்தவள் "தேவி" ஒருவளே என்றாலும் அவளின் அந்த அந்தக் கோலத்தையும், அவளின் சக்தி வெளிப்பாட்டையும் வைத்து வெவ்வேறு பெயர்களில் வணங்குகிறோம். இது பற்றி இன்னும் தொடரும், எண்ணங்களுடன்.
சுண்டல் நானே சாப்பிட்டுக்கறேன். :P
ReplyDeleteதேவிபாகவதம் எழுதுங்களேன் தனியாக...
ReplyDeleteபுதிதாக பிளாக் உலகத்தில் நுழைந்திருக்கிறேன் ...கொஞ்சம் என் ஏடு வள்ளுவத்தைப் புரட்டிப் பாருங்களேன்.கொஞ்சம் வேதாந்தம் கொஞ்சம் நக்கல் ,கொஞ்சம் ஆன்மீகம் என்று காணலாம்.
ReplyDelete