எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 19, 2007

மஹிஷனை வதம் செய்தாள், அன்னை மஹா சக்தி!




மஹிஷாசுரன் தேவர்கள் அனைவரையும் வென்று விட்டான். வெற்றி பெற்ற மமதையில், அவன் பூவுலக மக்களையும், மற்ற உலக மக்களையும் மிகுந்த தொந்திரவுக்கு உள்ளாக்கினான். இந்த இடத்தில் அசுரர், தேவர் என்பது நம்மிடையே உள்ள துர்க்குணம், நற்குணம் இரண்டையும் குறிக்கும். துர்க்குணம் அதிகம் ஆகும்போது அவர்களை நாம்
அசுரர்கள் எனச்சொல்லுகிறோம். ஹிட்லர் ஒரு மனிதன் தான் என்றாலும், தன்னுடைய
அடக்குமுறையாலும், அப்பாவி மனிதர்களைத் தேவை இல்லாமல் அழித்ததாலும் கொடுங்கோலன் என்று சொல்வதில்லையா? அது போலத் தான். அசுரன் என்றாலே நீண்ட கோரைப் பற்களுடனும், பரட்டைத் தலையுடனும், பெரிய விழிகளுடனும் என்று நினைத்துக்
கொள்ள வேண்டாம். அவர்களின் கொடுமையை எடுத்துச் சொல்லும் விதமாய்
அவ்வாறு உருவகப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் சுய உருவை மாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தவர்கள் என்று சொல்வதும், வேறு வேறு விதமான வேஷங்கள் போட்டுக் கொண்டு ஏமாற்றும் திறமை உள்ளவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மஹிஷாசுரன் ஆண்களான தேவர்களையும், மற்ற தெய்வங்களையும் தவிரப் பெண் தெய்வங்களையோ, பெண்களையோ ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆகவே பெண்ணால்
என்ன செய்ய முடியும் என நினைத்துப் பெண்ணால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் என்ற வரத்தை வேண்டிப் பெற்றான். அவனின் கொடுங்கோன்மை அதிகம் ஆகவே தேவர்கள்
மும்மூர்த்திகளைச் சரணடைந்தனர். மும்மூர்த்திகளும், தங்கள் சக்திகளாலும், தேவர்கள் அனைவரும் தங்கள் சக்திகளாலும் ஒரு பெண்ணை உருவாக்கினர். ஆதாரசக்தியாகச் சிவன்
விளங்கினார்.

சிவசக்தி -திருமுகம்,
யமசக்தி -கேசங்கள்
அக்னி சக்தி- 3 கண்கள்
சந்தியா சக்தி -புருவங்கள்
குபேர சக்தி- மூக்கு
பிரம்ம சக்தி - பல் வரிசை
அருண சக்தி - 18 திருக்கரங்கள்
இந்திர சக்தி - இடை
சந்திர சக்தி - மார்புகள்
வசுக்கள் சக்தி - நகங்கள்
வருண சக்தி - துடை மற்றும் முழங்கால்கள்.

இவ்வாறு அனைத்து சக்திகளையும் கொண்டு தேவி உருவானாள். இந்த இடத்தில் விஞ்ஞான பூர்வமாய்ப் பார்த்தால் நம் வீட்டிலேயே புதிதாய் ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தையைச் சுமக்கிறவள் தாய். உயிர் கொடுத்தது தகப்பன் என்றாலும் பிறந்ததும் என்ன
சொல்கிறோம்? தாத்தா போல உயரம், கை, கால்கள், அத்தையின் நிறம், மாமாவின்
கை, கால் அமைப்பு, பாட்டி போலப் புருவங்கள், அப்பா போல உருண்டை முகம், அம்மா மாதிரித் தலை முடி என்றெல்லாம் வர்ணிக்கிறோம். குழந்தை என்னமோ ஒன்றுதான். இருந்தாலும் அவரவர் மனதிற்கு ஏற்றவர் போல் குழந்தை இருப்பதாய் வர்ணிக்கிறோம்.
இன்னும் சில வீடுகளில் தாயோ, தந்தையோ கறுப்பாக இருக்கும்போது குழந்தை மட்டும் சிவப்பாக இருப்பது உண்டு. மாறுதலாய்த் தாய், தந்தை நிறமாக இருந்தால் குழந்தை நிறம் கறுப்பாக இருப்பதும் உண்டு. என்ன காரணம் சொல்லுவோம்?. முன்னோர்களில் ஒருத்தர்
குழந்தைக்குக் கொள்ளு, எள்ளு தாத்தாவோ, பாட்டியோ அந்த நிறமாக இருந்தார்களாம், குழந்தை அதைக் கொண்டு விட்டது எனச் சொல்லுவதுண்டு அல்லவா?

அதே நியதிதான் இங்கேயும். மனிதக் குழந்தைக்கே இப்படி இருக்கும்போது அனைத்திலும்
நிறைந்திருக்கும் சக்தியானவள், இவ்வாறு அனைத்து ஜீவராசிகளின் சக்தியைத் தான் வாங்கிக் கொண்டதில் என்ன தப்பு? தான் கொடுத்து வைத்த தன்னுடைய சக்தியையே
திரும்ப வாங்கிக் கொள்கிறாள். ஜோதி சொரூபமான அன்னை பலப் பல மாய வடிவங்கள் எடுத்த மஹிஷனைக் கடைசியில் சிம்ஹ வாஹினியாக வந்து சம்ஹாரம் செய்கிறாள். நடு மூன்று நாட்கள் இந்த அன்னையை நினைத்தே மஹாலட்சுமியாக வழிபடுகிறோம்.

மஹிஷனை வதம் செய்கிற இந்தத் தேவியை வதம் செய்து முடித்ததும் தேவர்கள் சும்மா ஒன்றும் உட்காரவில்லை. பலவித துதிகளால் அவளை மகிழ்வித்தார்கள். எப்படி என்றால்

"உலகனைத்துக்கும் காரணம் நீ: முக்குண வடிவினள் நீ: எல்லோருக்கும் புகலிடம் நீ:
இவ்வுலகே உன்னுடைய அம்சம்: மூலப்ரக்ருதி நீ: சப்த வடிவினள் நீ:
பரிசுத்தமான ரிக்வேத வடிவும் நீ: யஜுர் வேதவடிவும் நீ: பாடுவதற்கினிய
பதங்களுடன் கூடிய சாமவேத வடிவும் நீ: மருத்துவத்துகெல்லாம் வழிகாட்டும்
அதர்வண வேத வடிவும் நீ: வேத வடிவே நீ: உலகனைத்துக்கும் துன்பத்தைப்
போக்கும் தேவி நீயே: புத்தி வடிவானவளும் நீயே! துர்க்கா தேவியும் நீயே! விஷ்ணுவின் இதயகமலவாசினியும் நீயே!"

என்றெல்லாம் அவளைத் துதித்தார்கள். இது தேவி மஹாத்மியத்தில் உள்ள மத்திம சரித்திரத்தில், மஹிஷன் வதத்துக்குப் பின்னர் வரும் நாலாவது அத்தியாத்தில் "தேவி ஸ்துதி" என்றவாறு இடம் பெறுகிறது. அடுத்து சும்ப, நிசும்ப வதமும் சரஸ்வதி ஆவாஹனமும், பூஜையும். எல்லாரும் வந்து இருந்து நடத்திக் கொடுங்க.

2 comments:

  1. பதிவு நல்லா இருக்கு. எந்த புக்குல விவரம் எல்லாம் சேகரிச்சீங்க? :)


    //சரஸ்வதி ஆவாஹனமும், பூஜையும். எல்லாரும் வந்து இருந்து நடத்திக் கொடுங்க.
    //

    குடுத்ருவோம். ரெண்டு ஏர் டிக்கட் ப்ளீஸ். கிங்க் பிஷர் போதும், அதுல தான் வசதியா இருக்காம். :p

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள்...

    கிங் பிஷர் எந்த வசதிய சொல்லுறீங்க அம்பி... கண்ணுக்கு ரொம்ப நல்லாவே குளூமை தரும் வசதி அங்க ரொம்பவே சூப்பரா இருக்கு... ஹி..ஹி

    ReplyDelete