
வெறுமை, தனிமை! நீண்ட தூக்கத்தில் இருந்து விழித்தாற்போல் அல்லது இனிய கனவொன்றைக் கண்டாற்போல் எண்ணம். மூன்று மாதங்கள் போனது தெரியவில்லை. வந்த புதுசில் நேரமாற்றத்தாலும், இடம் மாற்றத்தாலும், புதிதாய்ப் பார்ப்பதாலும் அழுது கொண்டிருந்தது. ஆனாலும் அது ஒரு பத்து நாளைக்குத் தான். அந்தப் பத்து நாளைக்குப் பின்னர் ஆரம்பிச்சு அது அடிச்ச கொட்டம் இருக்கே! காலம்பர எழுந்ததும், நேரே சமையலறைக்கு வந்துடும் தேடிண்டு. அன்னிக்குக் குடிக்கவேண்டிய ஜூனியர் ஹார்லிக்ஸைக் குடிச்சுட்டு, சமையலறையில் அதன் உயரத்துக்குக் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுக்கும். எட்டாவிட்டால் வீல் என்று ஒரு கத்தல், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தால் எம்பி எதையாவது எடுத்துக் கொண்டிருக்கும்.
போய் வாங்கினால் சமர்த்தாய்க் கொடுத்துடும், உடனேயே அடுத்த விஷமம் ஆரம்பிக்கும். ஸ்பூன் ஸ்டாண்டை எவ்வளவு தள்ளி வச்சாலும் எம்பி எடுத்துடும். ஒரு ஸ்பூனை எடுத்துக் கொண்டு அதிலே கையில் கிடைக்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம் எதையாவது எடுத்து அந்த ஸ்பூனில் வச்சு ஆடாமல், அசையாமல் எடுத்துப் போய் ஸ்வாமி அலமாரியில் ஸ்வாமிக்கு நைவேத்தியம் நடக்கும். அதுக்கு அப்புறம் வஜ்ராசனம் போஸில் உட்கார்ந்து ஸ்வாமியோடு பேச்சு, நடு நடுவில் கோலத்தை அழித்தல், இல்லைனா மறுபடி எழுந்து வந்து மிக்ஸியில் அரைக்கும்போது கலக்க வைத்திருக்கும் ப்ளாஸ்டிக் கரண்டியை எடுத்துக் கொண்டு, உ.கி. வெங்காயம் அல்லது எலுமிச்சம்பழம் பந்தாக மாறும். பந்தை அடிக்கிறாப்போல் அடிக்கும். எப்போவும் பிசியாக ஏதேனும் வேலை எனக்குச் சரியாக செய்யும். வேலை செய்யும் பெண் தேய்த்து வைக்கும் பாத்திரங்களை ஒன்றொன்றாய் எடுத்து வந்து தரும். எல்லாரையும் சாப்பிடக் கூப்பிடும். சின்னச் சின்னக் கால்களால் ஓடி,ஓடி ஒவ்வொருவரையும் கூப்பிடுவதும், ஸ்வாமிக்கு வைத்த பழைய பூக்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் சின்னக் கைகளால் எடுத்துக் குப்பை வாளியில் போடுவதும், லொங்கு லொங்குனு ஓடும், அதைப் பார்த்தால் என் கண்ணில் ரத்தம் வரும். ஆனால் அதை உட்காரச் சொன்னால் உட்காராது.
மைக்ரோவேவ் அடுப்பு வைக்கும் ஸ்டாண்டின் அடியில் போய் உட்கார்ந்து நான் ஸ்டிக் தவாவில் கண்ணாடி துடைக்கும் துணியைப் போட்டுச் சப்பாத்தி பண்ணியாகும். சப்பாத்தினு சொல்லவராது. சொதாப்பி தான். சொதாப்பி பண்ணு, சாப்பிடு, சாப்பிடு, மம்மம் இந்தானு என் வாயிலே வந்து திணிக்கும். சில சமயம் அது சாப்பிடும்போதும் தட்டிலிருந்து சாப்பாட்டை எடுத்து என் வாயில் ஊட்டுவதும் உண்டு. பீச்சுக்குக் கூட்டிப் போனப்போ அவ்வளவு தண்ணீரைப் பார்த்துட்டு, "கமகம்??" என்று ஆச்சரியத்துடன் பார்த்துப் பார்த்து சந்தோஷம் அடைந்தது. செயற்கை அருவியைப் பூங்காவில் பார்த்தும், "கமகம்?" என ஆச்சரியப் பட்டது. கொஞ்ச நேரம் நான் நின்னால் போதும், " ஐ ஃபிஃப்" ஐ ஃபிஃப்" என்று தொணதொணத்துத் தூக்கச் சொல்லும். ஐ ஃபிஃப் என்றால் பிக் மீ அப் என்று அர்த்தம்.
கோபம் வந்தால் சின்னச் சுட்டுவிரலைச் சுட்டிக் காட்டி "அச்சு" என்று சொல்லிவிட்டு யூ யூ யூ ஐ, ஐ ஐ என்று சொல்லும். அதுக்கு மேலே சொல்லத் தெரியாது. தான் தப்புப் பண்ணிட்டோம்னு தெரிஞ்சால் ஐ ஸோ சாரி, ஐ டிட் மீன் து, ஐ தாமஸ், என்று மன்னிப்புக் கேட்கும். உட்காரணும்னால் சங்க் சங்க், சங்கா என்று சொல்லும். படுக்கிறதுக்கு அழகா லை டவுன் தான். சொன்னதும் படுத்துக்கணும். மேலே ஏறிக் குதிக்கும். இன்னும் சில நாட்களுக்கு யாரேனும் வந்தால் கூட உட்காருனு சொல்லாமல், சங்க், சங்க், சங்கா என்று சொல்லுவோம் போல! இத்தனை நாள் நாங்க சாப்பிட்டதும் மம்மம் தான்,எது குடிச்சாலும் குடிச்சதும் கமகம் தான். தனக்கு ஏதேனும் வேணும்னால் பேபி வாண்ட், யெஸ்ஸ், கம் னு சொல்லிக் கூப்பிட்டுப் பொருளைக் காட்டி எடுத்துத் தரச் சொல்லும். இப்போ???
வேலையே இல்லை போல இருக்கு. அடுத்த முறை வரச்சே பெரிசா ஆயிடும். இதெல்லாம் நினைவிலேயே இருக்காது. நாங்க தான் நினைப்பு வச்சுட்டு இருக்கணும், அதையே நினைச்சுட்டு இருப்போம். அது எங்களையே நினைச்சுக்குமோ என்னமோ தெரியலை. பாரதியின் இந்தக் கவிதை தான் நினைப்பிலே வந்துட்டே இருக்கு. பாரதியும் நல்லா அனுபவிச்சுட்டே எழுதி இருக்கார்.
"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக்களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே -உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
பிள்ளைக்கனியமுதே- கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளங்குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆவி தழுவதடீ!
உச்சி தனை முகந்தால் கருவம்
ஓங்கி வளருதடீ
மெச்சியுனை யூரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ
கன்னத்தில் முத்தமிட்டால் -உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தமாகுதடீ!
சற்றுன் முகஞ்சிவந்தால் மனது
சஞ்சலமாகுதடீ
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ
உன் கண்ணில் நீ வழிந்தால் என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடீ
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ
சொல்லு மழலையிலே கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே எனது
மூர்க்கந்தவிர்த்திடுவாய்
இன்பக் கதைகளெல்லாம் உன்னைப் போல்
ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே உனை நேர்
ஆகுமோர் தெய்வமுண்டோ??
மார்பில் அணிவதற்கே உன்னைப் போல்
வைர மணிகளுண்டோ??
சீர் பெற்று வாழ்வதற்கே உன்னைப் போல்
செல்வம் பிறிதுமுண்டோ??
நானும், இந்த என் இனிய நினைவுகளுமாக இனி பொழுது கழியும். அடுத்த முறை அதைப் பார்க்கும்போது சொன்னால் புரிஞ்சுக்குமோ??
தெரியலை! இதே மாதிரி அதுவும் என்னை நினைச்சுக்குமா???
அதுவும் தெரியலை! :((((