தமிழ் மணம் நட்சத்திரமா இருந்துட்டுத் தமிழ் சேவை கொஞ்சமாவது செய்ய வேண்டாமா? நான் சொல்லப் போகும் விஷயம் தமிழ் சேவை இல்லைனு எல்லாரும் சொல்லப் போறாங்க. நல்லாத் தெரியும். சொல்லப் போவது வேற்று மொழியையும் கற்பது பற்றியே. இங்கே பலருக்கும் பள்ளியில் தமிழ் ஒரு மொழியாக மட்டுமே இருப்பதாகவும், அனைத்துப் பாடங்களையும் தமிழிலேயே கற்றுக் கொடுப்பதில்லை என்றும், அனைத்துப் பாடங்களையும் தாய்மொழியிலேயே கற்றால்தான் நல்லது என்றும் சொல்கின்றனர். எனக்குப் பள்ளி நாட்களில் ஐந்தாம் வகுப்பு வரையிலும் தமிழ் மொழிக் கல்வி தான். ஆறாம் வகுப்பில் இருந்தே ஆங்கிலமும், ஹிந்தியும் ஆரம்பம். ஒன்பதாம் வகுப்பில் இருந்தே கணக்குப் பாடங்கள் ஆங்கிலத்தில் அறிமுகம். அப்போவும் அறிவியல் என்னப்படும் சயின்ஸ் பாடம் தமிழில் தான் படிச்சேன். ஆனாலும் தமிழ் மொழி தவிர மற்ற மொழிகளையும் கூடவே கற்பதில் தவறில்லை. அதனால் இன்னும் விசாலமான அறிவே ஏற்படும் என்பதற்காக எழுதி இருக்கின்றேன்.
இப்போதைய அரசும் சரி, தமிழ்நாட்டு அரசுகளும் சரி சமச்சீர் கல்வி, சமச்சீர் கல்வி என்றே பேசுகின்றன. இப்போது கல்விக்கான மத்திய அமைச்சர் பல புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்யப் போவதாயும், மாணவர்களுக்குப் படிப்பின் சுமையையும், தேர்வுகளின் சுமையையும் குறைக்கப் போவதாகவும், அதற்காகப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்யப் போவதாகவும் தெரிவிச்சிருக்கார். இது எந்த அளவிற்கு மாணவர்களுக்குப் பயனாக இருக்கும் என்பதே கேள்விக்குறி. இதனால் பயனடையப் போவது நகரங்களில் உயர்கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவர்களாய் மட்டுமே இருக்கலாம். கிராமங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு இது பயனாகுமா புரியவில்லை. ஏற்கெனவே பொது அறிவு, மற்றும் ஆங்கில அறிவு போன்றவற்றிலும், கணக்கு, சயின்ஸ் பாடங்களைத் தமிழில் படித்துவிட்டுக் கல்லூரிக்கு வருவதாலும் அந்த மாணாக்கர்களால் மற்ற மாணாக்கர்களோடு போட்டி போடமுடியவில்லை. தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகின்றனர். மேலும் சமச்சீர் கல்வி என்றால் என்ன என்பதே இன்னும் விவாதத்தில் இருக்கு.
ஆகவே கிராமங்களின் மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் ஒரு கல்வித் திட்டத்தைக் கொண்டுவரவேண்டும். ஏற்கெனவே மத்திய அரசு இதற்காக எடுக்கும் முயற்சிகளுக்கு மாநில அரசுகள் சில எதிர்க்கின்றன என்பதையும் தினசரிகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வித் திட்டம் தேவை! அதற்கு மத்திய அரசின் NCERT பாடத் திட்டம் பெருமளவில் உதவும். மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துப் பாடங்களைக் கற்க இந்தப் பாடத்திட்டம் பெருமளவும் உதவுகின்றது என்பதை நான் கண்கூடாய்ப் பார்த்திருக்கிறேன். மேலும் கிராமங்களில் அரசுப்பள்ளிகள் என்னதான் பாடங்களைக் கற்பித்து வந்தாலும் முறையான பரிசோதனைச் சாலைகளோ, கணினி வழிப்பாடங்களோ கற்பிக்க இன்னும் முடியாமல் தான் இருக்கிறது. அரசால் இதில் தன்னிறைவு காணமுடியவில்லை.
ஆனால் மத்திய அரசின் வீச்சு அதிகம், பெரியது. ஆகவே கிராமங்களில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் அறிவியல் பாடங்களைக் கற்க முறையான பரிசோதனைச் சாலைகளோ, கணினி கற்க தனியாகக் கணினியோ வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி NCERT பாடத் திட்டம் உள்ள நவோதயா பள்ளிகளைத் திறக்க மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுமதி கொடுக்கவேண்டும். தமிழ் வளராது, தமிழ் மொழி அழிந்துவிடும் என்றெல்லாம் மொழி உணர்வைச் சொல்லிக் கொண்டு இதைத் தடுத்தால் வருங்கால சமுதாயத்திற்குப் பெரும் பாதகம் செய்தவர்கள் ஆவோம். நம் தாய் மொழி அல்லாத வேறு மொழியைக் கற்றதினால் நமக்கு இன்னும் மொழி அறிவே அதிகம் ஆகும். தாய் மொழியின்மீது பற்றுக் குறையாது. என் சிநேகிதியின் அம்மா நல்லவர் என்று நான் சொல்லிவிட்டால் என் அம்மா கெட்டவங்கனு அர்த்தம் எடுத்துக்க முடியாதல்லவா? மொழியும் ஒரு தாய் தான். அவரவருக்கு அவரவர் தாய் மொழி தாயே ஆவாள்.
கொத்தனார் (ஹிஹிஹி, நம்ம இலவசம் தான்) சில மாதங்கள் முன்பு போட்ட பதிவில் இருந்து சில கருத்துகள் கீழே கொடுத்துள்ளேன். இன்று அனைவருமே சமச்சீர் கல்வியைப் பற்றிப் பேசிக் கொண்டுள்ளார்கள். சமச்சீர் கல்வி என்பது அனைவருக்கும் சென்று அடையவேண்டும் எனச் சொல்லுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கம் அல்லவோ? இப்போதைய அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாய் இருக்கின்றது. இப்போதே நமக்கு வேண்டியதை நாம் கேட்டுப் பெறவேண்டும் அல்லவா? நம் தமிழ்நாட்டில் பாடத்திட்டங்கள், மெட்ரிக் முறை, மாநில அரசுக் கல்வி முறை, மத்திய அரசுக் கல்வி முறை இது தவிர பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் உயர்தரப் பள்ளிகள் ஆன கான்வெண்டுகளின் கல்வி முறை எனக் கல்வித்திட்டங்களும், தேர்வு முறைகளும் முற்றிலும் மாறுபடுகின்றது.
இவை அனைத்தும் ஒரே கல்வி முறையைப் பின்பற்றினாலே சமச்சீர் கல்வி என்று சொல்லலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. என்னுடைய அனுபவத்தைப் பொறுத்த வரையில் மத்திய அரசுப் பாடத்திட்டம் குழந்தைகள் கல்வி கற்க மிகவும் ஏதுவாய் இருக்கின்றது. அவற்றில் மனப்பாடம் செய்யும் வேலை இல்லாமல் பாடங்களை நன்கு புரிந்து கொண்டு தானாகவே அவற்றில் ஈடுபாட்டுடன் விரும்பிப் படிக்கும் வண்ணமும், தானாக எழுதும் வண்ணமும் இருக்கின்றது. மனப்பாடம் செய்து அதைப் பரிட்சைத் தாளில் கக்கிவிட்டுப் போகும் முறை இல்லை. பாடங்கள் நன்கு மனதில் பதியும் வண்ணம் சொல்லிக் கொடுக்கப் படுகின்றது. சிறந்த கல்வி முறை எனப் பலராலும் பாராட்டப் பட்டிருக்கின்றது. மேலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க உலகத் தரத்தில் போட்டியிட்டு வெல்லும் திறமையையும் அளிக்கின்றது.
அத்தகையதொரு கல்வியைத் தரக் கூடியவையாக அனைத்துப் பள்ளிகளையும் மாற்ற முடியாவிட்டாலும், குறைந்த பக்ஷமாக கிராமத்துப் பிள்ளைகள் படிக்கவாவது இத்தகையதொரு கல்வித் திட்டத்தை முன் வைக்கலாம். அதற்கு ஒரே வழி நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பதே. அங்கே ஹிந்தி சொல்லிக் கொடுக்கின்றனர் என்ற ஒரே காரணத்துக்காக மொழிப்பற்று என்ற பெயரில் தமிழகத்தை மாற்றி மாற்றி ஆளும் அரசுகள் அனுமதிப்பதில்லை. ஆனால் இதன் மூலம் கிராமத்துப் பிள்ளைகளுக்கு எத்தகையதொரு அரிய சந்தர்ப்பம் இழக்க நேரிடுகின்றதை என்பதை வெகு சுலபமாய் அரசியல்வாதிகள் மறந்துவிடுகின்றனர். நவோதயா பள்ளிகளைக் கிராமங்களில் அனுமதிப்பதன் மூலம், உயர்தரக் கல்வி மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் கூட கிராமத்து மாணாக்கர்கள் போட்டியிடத் தகுதி பெறுவார்கள். பரிசோதனைக் கூடங்களில் அவர்களே சோதனைகளைச் செய்து பார்க்க வசதிகள் கிட்டும்.
ஆங்கில அறிவு மேம்படும். விஞ்ஞானப் பாடங்களும் கணினி பற்றிய பாடங்களும் முறையாகக் கற்றுத் தரப் படும். மேலும் மத்திய அரசின் வீச்சு மாநில அரசை விட அதிகம் என்பதால் இதற்காகச் செலவு செய்வதும் மத்திய அரசுக்கு எளிது. ஆனால் அரசியல்வாதிகளும், தமிழார்வலர்களும் சொல்லுவது ஹிந்தி இருக்கக் கூடாது என்பது. இப்போது மத்திய அமைச்சர்களாய் இருக்கும் தமிழ்நாட்டு மந்திரிகள் பலரும் ஹிந்தியில் தெளிவாகவும், இலக்கண சுத்தமாயும் பேசும் தகுதி படைத்தவர்கள். அதனால் தமிழர்கள் இல்லை என ஆகிவிடுமா? குறைந்த் பக்ஷமாய் எட்டாம் வகுப்பு வரையிலுமாவது ஹிந்தியை அனுமதித்துவிட்டுப் பின்னர் விருப்பம் இருப்பவர்கள் தொடரலாம் எனக் கொண்டு வரலாம். தமிழ் மொழி கற்பது கட்டாயம் என்றும் சொல்லலாம். மூன்று மொழிகள் கற்கவேண்டுமே எனச் சொல்லுபவர்களுக்கு என்னோட மறுமொழி என்னவெனில் சிறு குழந்தைகளுக்கு மொழி சுலபமாய் வந்துவிடும். வேற்று மொழியான ஆங்கிலத்தை எல்கேஜியில் இருந்து கற்கவில்லையா?
வேண்டுமானால் மூன்றாம் வகுப்பு வரையிலும் தமிழும், ஆங்கிலமும் தான் என்று வைத்துவிட்டுப் பின்னர் நாலாம் வகுப்பில் இருந்து ஹிந்தியைக் கொண்டு வரலாம். இதன் மூலம் ஆசிரியப் படிப்புப் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் பலருக்கும் வேலை வாய்ப்பும் கிடைக்கும். சம்பளம் மத்திய அரசே கொடுப்பதால், நமக்கும் சுமை ஏறாது. ஹிந்தியை மட்டும் எட்டாம் வகுப்பு வரை கற்றுக் கொடுத்துவிட்டு நிறுத்தலாம். இதன் மூலம் வெளி மாநிலங்கள் சென்று சம்பாதிக்க விரும்பும் மாணாக்கர்கள், அல்லது படிக்க விரும்பும் மாணாக்கர்கள் பயன் அடைவார்கள். அரசியல் நோக்கத்திற்காக ஹிந்தி கற்கும்போது வயிற்றுப் பிழைப்புக்காக ஹிந்தி கற்கலாமே? மற்ற மாநிலங்கள் இதன் மூலம் வெகுவாகப் பயனடைகின்றன. அவர்களின் இலக்கியமும் நமக்கு வருகின்றது. நம் இலக்கியமும், படைப்புகளும் அவர்களையும் சென்றடையவேண்டுமெனில் மொழிப் பரிமாற்றம் அவசியம். தமிழே இல்லாமல் படிப்பதை நிச்சயமாய் ஆமோதிக்க முடியாது.
குஜராத்திற்குச் சென்றால் தமிழரோ, தெலுங்கரோ, மலையாளியோ குஜராத்தியில் தான் படிக்கணும், படிக்க முடியும். எந்த விதமான ஆரவார சப்தமும் இல்லாமல் அங்கே நூறு வருஷங்களுக்கும் மேலாக குஜராத்தி மீடியத்தில் தான் கற்பிக்கப் படுகின்றது. கூடவே ஹிந்தி கற்றுக் கொள்பவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் படவில்லை. தக்ஷிண் பாரத் ஹிந்தி ப்ரசார சபாவின் தனிப்பட்ட தேர்வுகள் தவிர, பள்ளியிலும் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கின்றது. அரசுப் பள்ளிகள் தவிர மற்றப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தியும் இருக்கின்றது. நவோதயா பள்ளிகளில் முழுக்க முழுக்க ஹிந்தி, ஆங்கிலம் தான். மாநில மொழி கற்கவென்று உள்ளூர் மக்களில் மாநில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நவோதயா பள்ளிகளில் கற்பிக்கப் படுகின்றது. இந்த மாநில மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப் படுகின்றது. ஆங்கிலம் கற்கவும், ஆங்கிலத்தில் பேசவும் தனி வகுப்புகள் எடுக்கப் படுகின்றன. அங்கே இதன் மூலம் பெருமளவில் வீட்டில் இருந்தே சம்பாதிக்கவும் முடியும். கல்வியை வியாபாரம் ஆக்காமல் அதே சமயம் கல்வியைக் கற்றுக் கொடுத்துச் சம்பாதிக்கவும் முடியும் என்று காட்டுகின்றனர். ஆகவே உள்ளூர் மாணவர்கள் வெளிமாநிலத்தவர்கள் வந்தாலும் ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ, அல்லது உள்ளூர் மக்களுடன் தங்கள் தாய்மொழியிலே உரையாடவும், வெளிமாநிலத்திற்கு வேலை வாய்ப்புக்கெனச் செல்லவும் வசதியாய் இருக்கின்றது. நவோதயா பள்ளிகள் சிறப்பாக நடத்தப் படுகின்றன. மத்திய அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் இருப்பதால் சிறு சிறு குறைகளும் நிவர்த்தி செய்யப் படுகின்றன.
Objectives of Scheme
*
to provide good quality modern education to the talented children predominently from the rural areas, without regard to their family's socio-economic condition.
*
to ensure that all students of Jawahar Navodaya Vidyalayas attain a reasonable level of competence in three languages as envisaged in the Three Language Formula.
*
to serve, in each district, as focal points for improvements in quality of school education in general through sharing of experiences and facilities.
மேலே கொடுத்திருப்பது நவோதயா பள்ளிகள் நாடு முழுதும் திறந்திருப்பதன் நோக்கம். கிராமங்களில் இத்தகைய பள்ளிகளைக் கொண்டு வந்தால், அதன் மூலம் மருத்துவப் படிப்புக்கான பொதுத் தேர்வு, பொறியியல் துறை, மற்றும் சில மேலாண்மைப் பட்டப் படிப்புக்கான பொதுத் தேர்வு போன்றவற்றில் கிராமத்துப் பள்ளி மாணாக்கர்களும் அதிக அளவில் தேர்ச்சி பெற வாய்ப்பு ஏற்படுத்தித் தரும். இந்த என் சி இ ஆர் டி பாடத் திட்டத்தின் முக்கிய நோக்கமே மாணாக்கர்கள் பாடங்களைத் தாங்களாகவே புரிந்து கொண்டு தன்னிறைவு பெறுவதே.
இப்போ கீழே முனைவர் குழந்தைசாமி அவர்களின் கேள்வி பதிலில் தமிழ்மொழி கற்பது பற்றிய இரு கேள்வி-பதில்கள்:-
முனைவர் வா செ குழந்தைசாமிஅவர்களுடனான நேர்காணல் அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!
கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?
பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.
(கீதா)இதுக்கு என்னோட கருத்து: எங்கோ ஒரு சிலர் தமிழ் படிக்காததால் தீங்கு நேரிடாது எனக் கூறுகின்றார் முனைவர். தமிழ் படிக்காததால் எவ்வாறு தீங்கு நேரிடாதோ அவ்வாறே தமிழ்நாட்டுக் கிராமங்களின் விருப்பப் படும் மாணாக்கர்களும் தமிழ் தவிர மற்றொரு மொழி கற்பதும் தவறாகாது. தீங்கும் நேராது. சொல்லப் போனால் மனமும் விசாலம் அடையும். குறுகிய மனப்பான்மை ஏற்படாது. மொழிப்பற்று என்ற பெயரில் மற்ற மொழிகளையும் வேற்று மொழி பேசுவோரையும் அலட்சியம் செய்யும் எண்ணமும், மொழி வெறி ஏற்படாமலும் இருக்கும். தேசீய உணர்வு மேலோங்குவதோடு, சகிப்புத் தன்மையும் அதிகரிக்கும். இன்றைய தேவை அதீத சகிப்புத் தன்மையே.
மேலும் நம் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள முக்கியச் சிறப்பு என்னவெனில் மற்ற நாடுகளிலிருந்து இங்கே வந்தவர்கள் யாரானாலும் அவர்களைத் தங்கள் நாகரீகம், பழக்கவழக்கங்களிலிருந்தும், மொழியிலிருந்து சற்றும் மாற்றாமல், எவ்வாறு குளிர்சாதனப் பெட்டி பல்வேறு விதமான பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கின்றதோ அவ்வாறே, தெலுங்கர், மராட்டியர், கன்னடர், செளராஷ்டிரர் என அனைவரையும் அவர்களின் சொந்த மொழியையும், வழக்கங்களையும், கலாசாரத்தையும் விடாமல் பாதுகாத்துக் கொடுத்து வந்திருக்கின்றது. இதற்கு தியாகராஜ ஸ்வாமிகளின் தெலுங்குக் கிருதிகளும், நடனகோபால நாயகி ஸ்வாமிகளின் செளராஷ்டிரக் கீர்த்தனைகளையும் உதாரணமாகச் சொல்லலாம். இப்படிப் பட்ட ஒரு மொழியானது மற்ற மொழிகளை இயல்பாகவே அரவணைத்துச் செல்லும்போது தமிழன் மற்ற மொழிகளைக் கற்பதில் என்ன தவறு ஏற்படமுடியும்?
கேள்வி: தென்றல் வாசகர்களுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
பதில்: பொதுவாக, இந்தியாவிலுள்ள பள்ளிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் உள்ளவர்கள் நிதி திரட்டி கணிப்பொறிகள் இதர தளவாடங்களை வாங்கி அனுப்பிவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இது நல்ல பணிதான். இருந்தாலும் ஒன்று சொல்வேன். இந்தியா ஒரு மாபெரும் நாடு. இதன் பிரச்சனைகளை உங்களால் தீர்த்து வைக்க முடியாது. அதற்குப் பதிலாக வசதிமிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள், மொரிஷியஸ், பிஜி, ரீயூனியன், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் தம் அடையாளத்தை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைப் பற்றி எண்ணி ஏற்றது செய்ய உதவுவதே சாலச் சிறந்தது. (எனத் தொடங்கி ஒரு நீண்ட பதிலை தந்துள்ளார்)இந்த இரண்டு கருத்துக்களை எடுத்துக் கொண்டோமானால் ஒன்றில் உடன்படுகிறேன், மற்றொன்றில் வேறுபடுகிறேன். முதலாவது கருத்தின் சாரத்தை நான் அப்படியே ஒப்புக் கொள்கிறேன். சொல்லி இருக்கும் காரணங்களிலும் முறையிலும் சற்றே வேறுபடுகிறேன்
(கீதா)என்னோட கருத்து:- ஏன் தீர்க்க முடியாது??? புரியவில்லை. வெளிநாட்டு வாழ் குஜராத்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மாநிலத்தை மட்டுமில்லாமல் தங்களுடைய பூர்வீகக் கிராமத்தையும் மேம்படுத்தப் பலவிதங்களிலும் நிதி உதவி செய்கின்றனர். பள்ளிகள், கல்லூரிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு என அறக்கட்டளைகள் அமைத்தும், சாலை மேம்பாடு, குடிநீர் வசதி,நீண்டகால மின் திட்டங்கள் போன்றவற்றுக்கு நிதி உதவியும் செய்கின்றனர். பெண்குழந்தைகளுக்குக் கடந்த நூறு வருஷங்களாக இலவசப் படிப்பை அளித்து வருகின்றனர். அனைத்தும் குஜராத்தி மொழியிலேயே கற்பிக்கப் பட்டாலும் மாணவர்கள் மற்ற மொழிகள் கற்பதில் தடை ஏதும் இல்லை. அஹமதாபாதில் தமிழ் கற்பிக்கும் பள்ளிகள் இருக்கின்றன. அவை தமிழை ஒரு மொழியாகவே கற்பித்தாலும் மாணாக்கர்கள் அதை விரும்பிப் படிக்கும் வண்ணம் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றனர். ஹிந்தி அங்கே ஆட்சி மொழி இல்லை என்றாலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் ஹிந்தியும் ஆங்கிலமும் ஏற்கப் படுகின்றன. ஆகையால் நம் அரசும், மொழி வல்லுநர்களும், பாடத்திட்டங்களைத் தயாரிக்கும் ஆசிரியப் பெருமக்களும் இணைந்து நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் வரவிட்டாலே மாணவ சமுதாயத்திற்குப் பெரும் தொண்டு செய்தவர்கள் ஆவார்கள்.
கல்வியிலே எவ்வளவுக்கு எவ்வளவு தனியார் தன்னார்வலர் பங்கு இருக்குமோ அவ்வளோ நல்லதுன்னு தோணுது. அரசு எடுக்கிற எந்த காரியம் உருப்பட்டது?
ReplyDeleteபசங்க பாடத்தை புரிஞ்சுக்கிறாங்களா என்கிறது முக்கியம். அதை எந்த மொழியிலே சொல்லிக்கொடுத்தாலும் சரிதான்.
ஆமா, காணாம போயிருந்த கொத்தனார் திருப்பி வந்துட்டாரா?
கொத்தனார் காணாம எல்லாம் போகலை, ஐபோனில் தமிழுக்கு வழிசெய்யச் சொல்லிட்டு இருக்கார், எப்போப் பார்த்தாலும். இது நான் அவர் போட்ட பதிவிலே இருந்ததை சேமிச்சு வச்சிருந்தேன். அது தான் இது!
ReplyDeleteஉண்மைத்தமிழனுக்குப் போட்டியா?
ReplyDeleteபதிவு ரொம்ம்ம்ம்ப பெரிசா இருக்கு..............
Good write-up mam. Thax for the mssg.
ReplyDeleteவாங்க மனசு, அவ்வளவு பெரிசாவா இருக்குங்கறீங்க??? உ.த. ஒண்ணும் நினைச்சுக்க மாட்டார், :))))))))))
ReplyDeleteவாங்க பித்தன், ரொம்ப நன்றி பாராட்டுக்கு.
ReplyDeleteஅருமை
ReplyDeleteநல்ல கருத்துக்கள் எல்லாரையும் போய் அடைய பன்மொழித் திட்டம் வேண்டும். இது நாம் படிக்கும் போது கிடைத்தது.
ReplyDeleteஇப்போதும் நீங்கள் சொல்வது போல நவோதயா பள்ளிகள் வந்தால் நல்லதுதான்.
நவோதயா பள்ளித் திட்டம் குறித்த முழு விவரமும் எனக்குத் தெரியாது; அருமையான திட்டமாக இருந்து இந்தி இருப்பது மட்டும் தான் அது தமிழக கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கெடுக்கிறது என்றால் சம்பந்தப் பட்டவர்கள் மேலே பேசி இந்தியை மட்டும் எடுத்து விட்டு மீதித் திட்டத்தை வேறு பெயரில் தமிழகத்தில் அமலாக்கம் செய்யலாமே.
ReplyDeleteஉங்கள் கோணத்தில் நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் இந்தியைப் பாடத் திட்டத்தில் வைப்பதால் . . என்று நீங்கள் சொல்லி இருக்கும் காரணங்களுக்கு நான் முற்றிலும் முரண்படுபவன்.
இந்தி வேண்டியதில்லை என்று ஆர்ப்பாட்டமில்லாமல் சில மாநிலங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்கள் பாலாறு அணைக்கட்டு போல் வெளித் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஏழு வருடங்களுக்கு முன் நான் பார்த்த ராஜமுந்திரிக்கும் இப்போதைய ராஜ முந்திரிக்கும் நிறைய வித்தியாசத்தை மொழிக் கோணத்தில் பார்க்கிறேன். BSNL, RTO அலுவலக விண்ணப்பங்களிலும் விளம்பரக் காகிதங்களிலும் ஆங்கிலம் கூட இல்லாத அளவுக்கு நூறுசதம் தெலுங்கு ஆக்கிரமித்துள்ளது. மக்கள் பேசுகிற பேச்சில் இந்தி மிகக் குறைவாக இருக்கிறது. எனக்கு குஜராத்திலோ அஸ்ஸாமிலோ ஏற்படாத மொழிப்பிரச்னை இங்கே மிகவும் இருக்கிறது. தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு இந்தி எந்த வகையிலும் வளமான ஒரு மொழி அல்ல; தேவை ஏற்படும் போது மூன்று மாதங்களுக்குள் பேசப்பழகிக் கொள்ள முடியாத மொழியும் அல்ல. அதனை மழலைப் பருவத்திலேயே புகட்டி குழந்தைகளின் பாடச் சுமையை அதிகரிக்க வேண்டியதில்ல. மாறாக இப்போது முக்கியத்துவம் குறைந்து வரும் வரலாறு பூகோளம் மற்ரும் தவிர்க்கப்பட்டு வரும் பொருளாதார அடிப்படை கணக்கியல் அடிப்படைகள் ஆகியவற்றைச் சொல்லித் தர முயலலாம்; பொருளாதாரமே பிரதானமாக ஆகி வரும் எதிர்காலத்தை அவன் எதிர்கொள்ள வசதி செய்து கொடுத்ததாக இருக்கும்.
//இந்தி வேண்டியதில்லை என்று ஆர்ப்பாட்டமில்லாமல் சில மாநிலங்கள் செய்து கொண்டிருக்கும் செயல்கள் பாலாறு அணைக்கட்டு போல் வெளித் தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றன.//
ReplyDeleteம்ம்ம்ம்ம்?? ஆந்திரா பத்தி அதிகமாத் தெரியலை. ஆனால் அங்கே அரசே மும்மொழித் திட்டப் பாடத் திட்டம் கொண்டு வந்திருக்கிறதாக தினசரிகள் சொல்கின்றன. கர்நாடகாவில் சின்னஞ்சிறு கிராமத்தில் கூட நவோதயா பள்ளியின் உதவியால் ஹிந்தி பேசக் கூடிய மக்கள் இருக்கின்றனர். என்னைப் பொறுத்த மட்டில் ஹிந்தி தெரிந்து கொள்வது தவறு இல்லை என்றே சொல்லுவேன். நாங்கள் கோயில்களுக்குக் குழுவாக யாத்திரை செல்லும்போது மொழி புரியாத காரணத்தால் பலரும் கஷ்டப் பட்டதையும், அரசாங்கத்தின் தவறால் ஒரு தலைமுறைக்கே பல விஷயங்கள் தெரியாமல், புரியாமல் இருப்பதைப் பற்றியும் புலம்பக் கேட்டிருக்கேன்.