எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 19, 2009

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால்!

பெண் என்பவள் ஆதாரசக்தி. வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது. பெண் தான் கர்ப்பம் தரிக்கின்றாள். குழந்தையைப் பெற்று எடுத்து வளர்க்கின்றாள். அத்தகையதொரு மாபெரும் சக்தியை நம் இதிகாசங்களோ, புராணங்களோ இழித்துப் பேசி இருக்கின்றது என்ற கூற்றே தவறு அல்லது தவறான புரிதல் என்று சொல்லலாம். ஆண் சார்புடையவன். பெண்ணின் துணை இல்லாமல் ஒரு ஆணால் வாழ்க்கை நடத்த முடியாது. ஆனால் ஆணின் துணை இல்லாமல் பெண்ணால் வாழ முடியும். இன்னும் சொல்லப் போனால் திருமணமே செய்து கொள்ளாமல் பெண் தனித்து வாழ்வாள். ஆனால் ஆண் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் கூட எந்த விதத்திலாவது ஏதாவது ஒரு உறவின் முறைப் பெண்ணை ஏதோ ஒரு சமயம் நாட வேண்டி உள்ளது என்பதே உண்மை. கணவனை இழந்த பெண்களோ, அல்லது சிறு வயதிலேயே கணவன் விட்டு விட்டுச் சென்றாலோ பெண்கள் அஞ்சுவதில்லை. தன் மக்களைத் தாங்களே எப்பாடு பட்டாவது தாங்கி வளர்க்கின்றார்கள். அதே ஒரு ஆணால் தன்னந்தனியாக மனனவியோ, அல்லது வேறு ஒரு பெண்ணின் துணையோ இல்லாமல் தன் மக்களை வளர்க்க முடியாது என்பதும் உண்மை. கணவனை இழந்த பெண்களை விடவும், மனைவியை இழந்த ஆண்களே மனதளவில் மிகவும் பாதிக்கப் படுவது, ஆய்வில் மட்டுமில்லாமல் கண் கூடாகவும் தெரியும் ஒரு உணமை.

பெண் தன் சக்தியை முழுமையாகக் காட்டினால் ஆண்களால் தாங்க முடியாது என்பதே உண்மை. ஆனால் பெருமளவும் பெண்களின் சக்தி சரியான முறையில் பிரயோகம் செய்யப் படுவதும் இல்லை. தவறான உள் நோக்கத்துடனேயே பிரயோகம் செய்யப் படுகின்றது. வியாபார நோக்கில் இன்றைய நாட்களில் பெரும்பாலும் தன் சக்தியைப் பெண் விரயம் ஆக்குகின்றாள். ஒரு போகப் பொருளாகத் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டு விட்டாள். தன்னிடம் உள்ள ஆத்ம சக்தியைப் பெரும்பாலான பெண்கள் உணரவே இல்லை. ஆத்ம சக்தியைப் பிரயோகிக்கும் பெண்ணைக் கண்டால் ஆண் அஞ்சி நடுங்குவான். அந்தப் பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்று வாழ முடியாது அவனால். அஞ்சி ஓடுவான்.பெண்ணின் அளப்பரிய சக்தியைத் தாங்க முடியாமலேயே இது நடக்கின்றது. ஆனால் அதே ஒரு பெண்ணாக இருந்தால் தன் கணவனின் ஆத்மசக்தியைத் தனக்கும் சேர்த்துத் துணையாக்கிக் கொண்டு, தன்னை அதோடு பிணைத்துக் கொண்டு, பிணைத்தது தெரியாமலேயே தன் இல்லறத்தை நல்லறமாக்கிக் கொள்ளுவது மட்டுமில்லாமல், தன் குலத்தையே தழைக்கச் செய்வாள். உண்மையில் பெண்கள் ஆண்களை விடப் பலம் படைத்தவர்கள் மனோரீதியாக. இதை இங்கே எழுதியதன் மூலம் நான் ஆண்களை மட்டம் தட்டியதாய் சிலர் நினைக்கலாம். என்றாலும் இன்றைய அறிவியல் ஆய்வுகளும் இதை நிரூபிக்கின்றன என்பது பல தினசரிகளிலும், இன்னும் பல புத்தகங்களிலும் கட்டுரைகளாக வந்திருக்கின்றது பல உதாரணங்களோடு.


முதலில் சொன்னதற்கு உதாரணம் புனிதவதியார். கணவன் கொடுத்த மாம்பழத்தை சிவனடியார்க்குப் படைத்த அவர், பின்னர் இறை அருளால் மற்றொரு மாம்பழத்தை வரவழைக்கக் கண்ட கணவன், அவரிடம் பயந்து ஒதுங்கினான். ஏனெனில் அவரின் இறைத் தன்மையைக் கண்டு அவன் பயந்தான். பவளமல்லிப் பூவைத் தலையில் சூட முடியுமா??? இறைவனுக்கே படைக்கப் பட்டவை அல்லவா அவை??? தானே மலர்ந்து, தானே உதிரும் அந்தப் பூவைப் பொறுக்கி இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்க முடியும் அல்லவா?? அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும்.

ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை. பிறப்பால் மட்டுமின்றி அவர்களின் புனிதத்தன்மை ஏதோ ஒரு காலகட்டத்தில் வெளிப்பட, அவர்கள் பிறந்ததின் நோக்கம் புலப்பட, சாதாரண வாழ்வு வாழ அவர்கள் படைக்கப் படவில்லை என்பது புலனாகின்றது. இதைப் போய்த் தவறு என்று சொல்லி, புனிதம் என்று பெண்ணை ஒதுக்கிய ஆணாதிக்கம் என்று பேசுபவர்கள் புனிதத்தின் அர்த்தத்தையே புரிந்து கொள்ளாதவர்கள். அந்தப் பெண் படைக்கப் பட்ட நோக்கம் தெரிய வந்ததுமே இல்வாழ்வு அவளுக்கு மறுக்கப் பட்டது. என்றாலும் முதலில் கலங்கிய அந்த அம்மையார் பின்னர் தெளிந்தார் அல்லவா? தன் வாழ்வின் நோக்கம் புரிந்து கொண்டார் அல்லவா?? இது பெண்ணை அடிமையாகவே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் புரிந்து கொள்ளப்படுகின்றது. உண்மையில் வழிபட வேண்டிய ஒருத்தியைத் தான் மனைவியாக்கிக் கொண்டு விட்டதால் மனம் பதறியே ஒதுங்குகின்றனர். இதனாலேயே நம் தமிழ் மூதாட்டியான ஒளவையும் இதைப் புரிந்து கொண்டு, அதனாலேயே திருமணத்திற்கு முன்பே, மூப்பை வேண்டிப் பெற்றாளோ??? ஒருவேளை காரைக்கால் அம்மையாருக்கும் அத்தகையதொரு பக்குவம் சிறு வயதிலேயே வாய்க்கப் பெற்றிருக்கலாம். ஆனாலும் ஈசனே உமையிடம், "இவர் நம் அம்மை!" என்று கூறி இருக்கின்றார். அத்தகையதொரு பெருமை காரைக்கால் அம்மையாருக்குக் கிட்டியுள்ளது. இல்வாழ்வு வாழ்ந்து சாதாரணப் பெண்மணிகளைப் போல் குழந்தை, குட்டிகளைப் பெற்றுக் கொண்டு இருந்திருந்தால் அனைவரையும் போல் தான் இவர் பெயரும் வெளியே தெரியாமல் இருந்திருக்கும். இப்படி ஒரு அரிய செயலை, வாலிபப் பருவத்திலேயே பேய்க்கோலத்தை விரும்பி ஏற்றுக் கொண்டதால் அல்லவோ அம்மையாரின் பெயர் இன்றளவும் போற்றப் படுகின்றது?? அந்தப் பேய்க்கோலமும் தன்னைப் பிறரிடம் இருந்து காத்துக்கொள்ளவே என்கின்ற போது அம்மையாரின் காலத்திலேயே இளம்பெண்களுக்குப் பாதுகாப்புக் கம்மியாகவே இருந்திருக்கின்றது என்பதும் புலனாகின்றது.

என்னோட இந்தக் கருத்தில் இப்போவும் மாற்றம் இல்லை. ஏனென்றால் இது தான் உண்மை, சத்தியம், அம்மையாருக்கு வேண்டுமானால் உலக வழக்கை ஒட்டி கணவனுடன் சேர்ந்து இருத்தல் தான் முறை என்ன எண்ணம் இருந்திருக்கலாம், அதில் தவறும் இல்லை, அதே சமயம் அம்மையாரினுள்ளே இருக்கும் ஆத்மஜோதியைத் தரிசனம் செய்ததுக்குப் பின்னும் அவரைச் சாதாரணப் பெண்போல் நடத்த எந்தக் கணவனாலும் முடியாது தான். அவன் புரிந்து கொண்டான். அதனாலேயே அதே ஊரிலே கூட வாழ்க்கை நடத்தாமல் வேறே ஊருக்குப் போனான். கல்யாணமும் செய்து கொண்டான். குழந்தையும் பெற்றுக் கொண்டு, அம்மையாரின் பெயரையே வைத்தான் அந்தக் குழந்தைக்கும். சாதாரணமாய் முதல் குழந்தைக்குக் குடும்பத்தின் மூத்தவர்கள் பெயரோ, குலதெய்வம் பெயரோதான் வைப்பது வழக்கம். அம்மையாரைத் தெய்வமெனக் கருதியதால் அம்மையாரின் பெயரையே வைத்தான். தாயாக வணங்க வேண்டிய பெண்ணைத் தாரமாக நினைத்து வாழ்ந்திருக்கின்றோமே என்ற அச்சம் கொண்டிருக்கின்றான். ஆனால் அம்மையாரின் பயமும், எதிர்பார்ப்பும் சகஜமே. ஏனெனில் ஒரு பெண் தனித்திருப்பது என்பதை எந்தக் காலத்திலும் யாரும் ஒப்புக் கொள்வதில்லை அல்லவா? அவர் தன்னைத் தான் உணரக் காலம், நேரம் வரவில்லை, எத்தனை பேருக்குத் தாங்கள் பிறந்ததின் அர்த்தம் அந்தப் பிறவியிலேயே தெரிய வருகின்றது?? கணவன் கைவிட்டதுமே இவருக்குப் புரிந்து கொள்ள முடிந்திருக்கின்றது. இதை விதி என்று சொல்வதை விட இறைவன் அவர் மனம் பக்குவம் அடைகின்றதா? இல்வாழ்வா? ஈசன் திருவடியா? எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார் என்பதற்கு வைத்த சோதனையாகவே கொள்ளவேண்டும்.

6 comments:

  1. இரண்டு பதிவுகளுக்கும் ஒரே தலைப்பா இருந்ததால, வந்து பாக்கல.

    //அதே ஒரு ஆணால் தன்னந்தனியாக மனனவியோ, அல்லது வேறு ஒரு பெண்ணின் துணையோ இல்லாமல் தன் மக்களை வளர்க்க முடியாது என்பதும் உண்மை. // இந்திய சமூகக் கட்டமைப்பில, ஆமாம், ஆண்கள் அப்படித் தான் வளர்க்கப்படுகிறார்கள்.

    //இது பெண்ணை அடிமையாகவே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் புரிந்து கொள்ளப்படுகின்றது// இது மாறணும், மாறிட்டு இருக்கு. மாற்றத்தை அரவணைக்கும் / ஏற்படுத்தும் / நிகழ வைக்கும் வினையூக்கிகளாகவும் பெண்களே இருக்கணும். இது தான் விவாதத்தில இருந்தது (நேத்தைக்கு).

    புனிதவதி அம்மையாரின் பெயரையே தன் குழந்தைக்கும் அந்த கணவன் வைத்தான் என்பது தெரியாத செய்தி.

    எனக்கு இந்த பதிவு பிடிச்சிருக்கு. நன்றி.

    ReplyDelete
  2. //பெண் தன் சக்தியை முழுமையாகக் காட்டினால் ஆண்களால் தாங்க முடியாது என்பதே உண்மை.

    வியாபார நோக்கில் இன்றைய நாட்களில் பெரும்பாலும் தன் சக்தியைப் பெண் விரயம் ஆக்குகின்றாள். ஒரு போகப் பொருளாகத் தன்னைத் தானே ஆக்கிக் கொண்டு விட்டாள். தன்னிடம் உள்ள ஆத்ம சக்தியைப் பெரும்பாலான பெண்கள் உணரவே இல்லை. ஆத்ம சக்தியைப் பிரயோகிக்கும் பெண்ணைக் கண்டால் ஆண் அஞ்சி நடுங்குவான். அந்தப் பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணையாக//

    உண்மை! சத்தியமான உண்மை! சம உரிமை, சம உரிமை என்று தற்காலத்தில் அது கோர்ட்டில் தான் நிலைநிறுத்தப் படுகிறது, விவாகரத்துக்களின் மூலம்...சிறிய கருத்து பேதங்களுக்கும், தீர்வாக அதையே கொள்கிறார்கள்.பொருளாதார சுதந்திரத்தைத் தவறாக கையாளுவதற்கு பெற்றோர்களும் உடந்தையாகிப் போகிறார்கள் என்பது..வருத்தத்தோடு ஒத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

    இந்த 3 இடுகைகளிலும் உள்ள உங்கள் கருத்துக்கள் சமுதாயத்தை நோக்கிய உங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்துகிறது...என் மனதிலும் இருந்தவைகள் தான். உங்கள் எழுத்துக்களில் ஒரு தேர்ந்த சிற்பியை போல் செதுக்கி இருக்கிறீர்கள். விமர்சனதிற்கு அஞ்ச வேண்டியதில்லை. நாம் பெண் விடுதலைக்கு எதிரிகள் இல்லை.ஆனால் எதில் என்பது தான் வித்தியாசம்.

    உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறேன்.ஆனால் இது தான் முதல் பின்னூட்டம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாங்க கெபி, இரண்டு பதிவுகள் இல்லை, மூன்று பதிவுகள் ஒரே தலைப்பில் 1,2,3 என்று குறிப்பிட மறந்திருக்கேன். :D உங்களுக்கு இந்தப் பதிவு பிடிக்கும்னு நினைச்சேன். நன்றிம்மா.

    ReplyDelete
  4. வாங்க நளினா, முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி. கருத்துகளை ஏற்றுக் கொண்டதற்கும், சரியான புரிதலுக்கும் மீண்டும் நன்றிம்மா.

    ReplyDelete