தேவதத்தனைக் காரைக்கால் அம்மையாருக்கு வாழ்க்கை கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாய் ஓர் இரக்க உணர்வு அனைவருக்கும் இருந்து வருகின்றது. பெண்ணுக்குச் செய்த அநீதி என நினைக்கின்றனர். உண்மையில் காரைக்கால் அம்மையார் பற்றிய இந்தக் கருத்துகள் இன்று மட்டும் புதியதாய் ஏற்பட்டவையே அல்ல. எப்படி சிலப்பதிகாரத்தில் கண்ணகியா, மணிமேகலையா, பாண்டிமாதேவியா, யார் சிறந்தவர் கற்பில் என ஏற்பட்டுப் பட்டி மன்றங்கள் நடந்தனவோ, அவ்வாறே நான் பள்ளி மாணவியாக இருக்கும் நாளிலேயே, காரைக்கால் அம்மையார், திலகவதியார், பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி, மூவரில் யாருடைய பக்தியும், தியாகமும் சிறந்தது என நடந்துள்ளது. மூவரில் மங்கையர்க்கரசி அரசியோடு அல்லாமல் சகலவித செளகரியங்களும், வசதிகளும் வாய்க்கப் பெற்றவள். கணவன் சமணனாக இருந்தாலும், தன் மனைவியின் சிவ பக்தியில் குறுக்கிடவில்லை. கடைசியில் கணவனையும் தன் பக்கம் திருப்பினாள். மங்கையர்க்கரசியாரின் பக்தியில் குறை சொல்ல முடியாதெனினும் மற்ற இருவரோடு ஒப்பிடும்போது அவளைத் தள்ளியே ஆகவேண்டும் என்று என் கருத்து.
தனக்கு நிச்சயிக்கப் பட்ட கணவன் போரில் இறந்தான் என்பது தெரிந்ததும், வாழ்நாள் பூராத் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்த திலகவதியாரின் பக்தியும், தியாகமும் காரைக்கால் அம்மையாரின் பக்திக்கும், தியாகத்துக்கும் சற்றும் குறைந்தது அல்லவே. தன் தம்பியான மருள்நீக்கியார் சமணமதத்தைச் சேர்ந்து இருந்ததை நினைத்து மனம் வருந்தியதோடு அல்லாமல் தம்பி மனம் மாறவும் அவர் பாடுபட்டார். கடைசியில் மருள் நீக்கியார், மனம் மாறி சமணத்தில் இருந்து சிவனடியாராக மாறி திருநாவுக்கரசர் என்ற பெயரோடு கீர்த்தியுடன் வாழ்வதைக் கண்டு மகிழ்ந்தாள். ஆனால் காரைக்கால் அம்மையார் வீட்டிற்கு ஒரே பெண். செல்வப் பெண். தந்தை அவளைத் திருமணம் செய்து கொடுத்துப் பிரிந்து செல்வதை விரும்பவில்லை. ஆகவே கணவனுடன் வாழ்ந்த காலத்திலும் பிறந்த வீட்டிலே தான் வாழ்ந்து வந்தார். கணவன் தான் அவருக்காக இங்கே வந்தார். அவர் கணவன் வீடு செல்லவில்லை. முதல் தவறே அங்கே ஆரம்பம்.
கணவனும், மனைவியும் தனிக்குடித்தனமாய் இருந்திருந்தாலும் கணவனுக்கும் அங்கே மறைமுகமாகவாவது ஒரு பிடிப்பு இருந்திருக்கும். அதுவும் இல்லை. அதோடு அவரோடு வாழ்ந்திருந்தால் என்ன என்ற கேள்விக்கான விடைக்கு இப்போது வருகின்றேன். காதலித்தால் மட்டும் போதுமா? இங்கே திலகவதியார் மட்டுமே தன் கணவனிடம் காதலோடு இருந்திருக்கின்றார். அதற்கான எதிர்வினை அவர் கணவனிடம் இல்லை. காதலிக்கப் படவும் வேண்டுமே? திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் இருவரும் மனமொத்து இருந்தாலே தாம்பத்தியம் சிறக்கும். வெறும் பிள்ளை, குட்டி பெறும் இயந்திரமாய்ப் பெண்ணை நினைத்து ஆணும், கடமைக்காகப் பெண்ணும் வாழ்வது எவ்வகையில் உயர்வு? அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம் என்றே விலகிப் போனான் தேவதத்தன்.
அவன் அம்மையாரோடு வாழ்ந்திருந்தால்? ஒருவேளை அவனுக்கு மனைவியிடம் தன் காதலைத் தெரிவிக்க வேண்டிய நேரத்தில், அந்த அம்மையார் இறை பக்தியில் மூழ்கிப் போகலாம். அல்லது சிவத் தொண்டருக்குத் தொண்டு செய்ய விரும்பலாம். அதையும் தடுக்காமல் இருக்கவேண்டும். தடுத்துவிட்டு, நீ என்னை மட்டும் கவனி, இதெல்லாம் வேண்டாம், என்று சொன்னால் ஆணாதிக்கம் ஆகிவிடுமே. அப்போது அவனுக்கும், அவளுக்கும் ஒரு இடைவெளி உருவாகத் தான் செய்யும். நாள் ஆக, ஆக அந்த இடைவெளி பெரியதாகி நிரந்தரப் பிரிவுக்குத் தானே வழி வகுக்கும்.
காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுடன் இருந்தாலே மனம் சங்கமம் ஆகும். அம்மையாரின் மேல் காதலோ, அன்போ, பாசமோ இருந்திருந்தால் அது இவன் மனதிலும் எதிரொலிக்காதா? உறவோ, நட்போ, பாசமோ, காதலோ, நம்மிடம் அன்பு காட்டும் ஒருவரின் அன்பு நம் மனதிலும் பிரதிபலிக்கவேண்டும் அல்லவா? இங்கிலாந்தில் ராணி விக்டோரியா ஆட்சியின் போது ஒரு நாள், இரவு தன் மந்திரிகளோடு ஆலோசனை முடிந்து அந்த அம்மையார் படுக்க வந்தார். படுக்கை அறைக் கதவு தாளிட்டு இருந்தது. தன் கணவன் உள்ளே இருப்பதை உணர்ந்த அம்மையார் கதவைத் தட்ட அவர் உள்ளிருந்தே யார் எனக் கேட்கின்றார். முதல் முறை அம்மையார், "நான் தான் ராணி விக்டோரியா!" என்று சொல்கின்றார். கதவு திறக்கவில்லை. மீண்டும் கதவைத் தட்டிய அம்மையாருக்கு மூன்று முறைகள், "நான் ராணி விக்டோரியா வந்திருக்கின்றேன் எனச் சொல்லியும், கதவு திறக்கவே இல்லை. அப்போது தான் தன் தவறை உணர்ந்து கொண்ட விக்டோரியா ராணி, கடைசியில், "நான் உங்கள் மனைவி வந்திருக்கிறேன்!" எனச் சொன்னதும் கதவு திறந்தது எனச் சொல்லுவார்கள். இது பள்ளிப் பாடத்தில் படித்தது.
ஒரு அரசிக்கே இந்த நிலைமை ஏற்பட்டது என்றால் பக்தியில் உயர்ந்த யோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் உறவு கொள்ள எந்த ஆணுக்கும் தயக்கம் ஏற்படத் தானே செய்யும்??? மேலும் அன்போ, பாசமோ, காதலோ இயல்பாய் பூ மலருவது போலத் தானாக ஏற்பட வேண்டும் அல்லவா? வற்புறுத்தலுக்காக ஏற்படும் அன்பிலும், பாசத்திலும், காதலிலும் என்ன இன்பம் இருக்க முடியும்? சந்தேகமே! மீராபாய் கண்ணனையே நினைத்து வாழ்ந்து வந்தாள். குடும்ப வாழ்க்கையில் அவளால் ஈடுபடமுடியவில்லை. தவித்தாளே? கும்பராணாவும் அவள் மனதை மாற்றப் பலவகையிலும் முயன்று பார்த்தான் அல்லவோ? என்றாலும் முடிந்ததா?? மீராவின் மனம் கண்ணனைத் தவிர மற்றவரை ஏற்கவில்லையே? இங்கே மீரா கணவனுக்குத் தான் அளிக்க வேண்டிய இல்வாழ்வை மறுத்திருக்கின்றாள். ஆனால் அதில் தவறேதும் காண முடியாதல்லவா? நாம் அதைத் தவறு என்று சொல்வதும் இல்லை. மாறாகக் கும்பராணாவையே தவறாய் நினைக்கின்றோம். மீராவின் இஷ்டப் படி அவளை விடவில்லையே என நினைக்கின்றோம் அல்லவோ? பொதுவாகவே இது அவரவர் மனதைப் பொறுத்தது.
ஒரு சிலருக்குத் தவறாய்த் தோன்றுவது மற்றவருக்குச் சரியாத் தோணும். நாணயத்தின் இருபக்கமும் தலை இருப்பது இல்லை, அல்லது பூவும் இருப்பது இல்லை. தலையும், பூவும் மாறி, மாறித் தானே இருக்கு? அது தானே சுவை?? நாமும் பூ விழுமா? தலை விழுமா என்ற எதிர்பார்ப்போடே இருக்கின்றோம் அல்லவோ? அது போலத் தான் வாழ்க்கையும். ரொம்பவே நுணுக்கமான ஒன்று. சில விஷயங்கள் சொல்லிப் புரியாது. அந்த சூழ்நிலையில் இருந்து பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். அதைப் புரிஞ்சுண்டாலே போதும்!
கீதா அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteநாணயத்தின் இரு பக்கங்களையும் நிறைய நபர்கள் பார்க்க மறக்கிறார்கள் மறுக்கிறார்கள்.
மீரா கதையும் , திலக்வதியார் கதையும் அவ்வழியே.
நல்லதொரு கருத்துக் கணிப்புகளாக இந்த வாரம் அமைந்தது. வாழ்த்துகள்.
நன்றி வல்லி, தொடர்ந்து படிச்சுப் பின்னூட்டம் இட்டு ஊக்கம் கொடுத்ததுக்கும், பாராட்டுகளுக்கும்.
ReplyDelete//தேவதத்தனைக் காரைக்கால் அம்மையாருக்கு வாழ்க்கை கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாய் ஓர் இரக்க உணர்வு அனைவருக்கும் இருந்து வருகின்றது//
ReplyDelete:)))
அவன்(ர்) பேரு தேவ தத்தன் இல்லை!
பரம தத்தன்! :)
அதைப் புரிஞ்சு கிட்டாலே போதும்! :)
இப்ப தான் ஒவ்வொரு பதிவாப் படிச்சேன் கீதாம்மா!
ReplyDeleteபிறந்தநாள் அதுவுமாச் சீக்கிரம் எழுந்துக்கிட்டேனா? காலை மூனு மணிக்கெல்லாம்! எல்லா நட்சத்திரப் பதிவும் ஒவ்வொன்னாப் படிச்சி முடிச்சிட்டேன்! :)
அப்பறம் ஒரு மின்னஞ்சல் ஆச்சும் அனுப்பறது இல்லையா நட்சத்திர வாரம் பற்றி?
இன்னிக்குத் தான் தெரியவே தெரியும்! :(
திரட்டி பக்கமும் அடிக்கடி வருவதில்லை!
இப்படியா உங்களை மிஸ் பண்ணுவது? :(
நட்சத்திர வாரத்தில் உரையாடி இருந்தா பிச்சிக்கிட்டுப் போயிருக்குமே! :))
நல்லதோர் பதிவு. இறைவனின் லீலைகளை யாரே அறிவார்? பதிவில் நீங்கள் குறிப்பிட்டு உள்ள நபர்கள் இருந்த சூழ்நிலையை உணராமல், பட்டிமன்றங்கள் நடத்துவது, தீர்ப்பு சொல்வது என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக நிறைய தமாஷான கார்யங்கள் செய்து கொண்டிருக்கிறோம். பதிவின் முடிவில் "சில விஷயங்கள் சொல்லிப் புரியாது. அந்த சூழ்நிலையில் இருந்து பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்." என்று மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDelete