எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 16, 2009

நந்தன் சரித்திரம் பற்றிய சில உண்மைகள் - 2

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்ப்பற்றோடு, சிவபக்தியும் நிரம்பப் பெற்றவர். பெரிய புராணத்தை உள்ளும், புறமும் நன்கு கற்றுத் தெளிந்தவர். தம் தமிழ்ப் புலமையாலேயே திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்வானாக இருந்து, பல தம்பிரான்களுக்கும், தமிழ் கற்பித்து, சைவ மடங்களின் ஆதீனத் தலைவர்களாக ஆக வழி காட்டியவர். இவருக்குக் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன் சரித்திரம்" பற்றிய தகவல்கள் கிடைத்தன. என்னதான் தமிழ் அபிமானியாக இருந்தாலும், கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன் சரித்திரம்" நன்கு இசைக் காப்பியம் ஆக எழுதப் பட்டிருந்தாலும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு இந்த விஷயத்தில் முழுச் சம்மதம் இல்லை. எங்கோ ஓரிரு இடங்களில் நிலச் சுவான் தாரர்கள், தங்கள் குடி, மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள் தான். இல்லை எனச் சொல்ல முடியாது. எளிய மக்களிடம் நமக்கும் அனுதாபம் உண்டு தான், ஆனால் கற்பனை என்ற பெயரில் காலம், காலத்துக்கும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காப்பியத்தில் -அதுவும் சைவத் திருமுறைகளிலேயே முதன்மைத் தகுதியில் வைத்துப் பாராட்டப் படும் பெரிய புராணத்தை- மாற்றி அமைத்துக் கவிதை பாடுவது என்பதை ஏற்கவே முடியாது என்பதே அப்பெரியவரின் தீர்மானமான கருத்து. தம் கருத்தை தம்முடைய உளம் நெருங்கிய மாணாக்கராக இருந்த மகா வித்வான் உ.வே.சாமிநாத ஐயரவர்களிடம் சொல்லி வருத்தப் பட்டார்.

ஆனால் பாரதியாருக்கோ சிறப்புப் பாயிரம் வாங்க வேண்டும், அதுவும், பிள்ளை அவர்களிடம் இருந்து என்ற எண்ணத்தில் மாற்றமே இல்லை. தினம் தினம் பிள்ளை அவர்களிடம் வந்து கேட்டபோதிலும் பிள்ளை அவர்களோ, தமக்கு சங்கீதத்தில் நாட்டம் இல்லை என்பதால் சங்கீதமும், தமிழும் அறிந்த வேறு யாரிடமாவது சென்று பாயிரம் வாங்கச் சொல்லித் திருப்பி அனுப்புவதுமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பாயிரமே தேவை இல்லை என்று சொல்லியும் திருப்பி அனுப்பினார். ஆனால் பாரதியார் விடவில்லை. ஒருநாள் மதியம் பிள்ளை அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு, சிரமப் பரிகாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் வந்தார் பாரதியார். பிள்ளை அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் செய்தி அவர் காதை எட்டியது. வரும்போது வரட்டும் என்று வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டார், கோபால கிருஷ்ண பாரதியார். உட்கார்ந்தவரால் சும்மா இருக்க முடியவில்லை.

தன்னை அறியாமல் "நந்தன் சரித்திரம்" கீர்த்தனைகளை முணுமுணுக்கத் தொடங்கினார். ஏற்கெனவேயே அரைத் தூக்கமாய் இருந்த பிள்ளை அவர்களின் காதில் பக்தியோடு சேர்ந்த இனிய இசை காதில் விழுந்ததும் எழுந்து உட்கார்ந்து விட்டார். கவிதைத் தொகுப்பில் உள்ள இலக்கணப் பிழைகளை ஏற்கெனவேயே கவனித்திருந்த பிள்ளை அவர்களுக்கு, இப்போது இசையுடன் கேட்ட அந்தப் பாடல்களில் உள்ள இலக்கணப் பிழைகள் பற்றிய நினைப்பே இல்லை. பாரதியார் மெதுவாக ஒவ்வொரு பாடலாய்ப் பாடிக் கொண்டே வந்து, "வருகலாமோ" என ஆரம்பித்தார். இந்த வருகலாமோ என்பதே ஓர் இலக்கணப் பிழை என்பதாக பிள்ளை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார். "வரலாமோ" என்று சொல்லுவதற்குப் பதிலாக இது என்ன "வருகலாமோ" என்று கேட்டிருந்தார். ஆனால் இப்போது அந்தப் பாடலின் உருக்கமும், இறைவனைக் கண்ணாரக் காண நந்தன் துடித்த துடிப்பும், தன்னோட ஈனமான பிறவியை நினைத்து ஏங்கிய ஏக்கமும், நடராஜரைத் தன் மனக்கண்ணால் கண்டு, நேரில் காண எப்போது வருவோம் என்று உருகி, உருகிப் பாடிய பாட்டையும் கேட்ட பிள்ளை அவர்களின் கண்ணில் இருந்து கண்ணீர் மழை பொழிந்தது.

பாரதியாரைக் கூப்பிட்டு அனுப்பினார். "தங்கள் இசைக்காப்பியத்தைக் கேட்டேன். தாங்கள் இவ்வளவு சிவபக்தி உள்ளவர் என இப்போதே அறிந்தேன். சிவபக்திச் செம்மல் ஆன நீங்கள், மற்றவரையும் அவ்வாறே சிவபக்தியில் நெக்குருகப் பண்ணுவதையும் உளமார அனுபவித்துத் தெரிந்து கொண்டேன். ஆகவே உங்கள் இசைக் காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் தருகிறேன்," என்று சொல்லி அனுப்பி அதே போல் சிறப்புப் பாயிரமும் எழுதிக் கொடுத்தார். ஆனால் அதே சமயத்தில் பாரதியார் நந்தன் கதையில் ஒரு வேதியரை நுழைத்துக் கதையை மாற்றி எழுதி நந்தன் சரித்திரத்தை இன்னும் உருக வைத்திருப்பதைக் குறித்து, ஒருவிதமான பாராட்டுச் சொல்லோ, அவர் அம்மாதிரி எழுதிப் பெரிய புராணத்தை மாற்றி இருப்பது குறித்து, அவதூறுச் சொல்லோ இல்லாமலேயே அந்தச் சிறப்புப் பாயிரம் அமைந்தது.

மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்களே.

ஆதாரம்:உ.வே.சா. அவர்களின் நினைவு மஞ்சரி, மற்றும் தெய்வத்தின் குரல். பேராசிரியரும், மிகச் சிறந்த தமிழபிமானியும் ஆனவரும், பெரிய புராணத்தை ஆய்வு செய்து இந்த விஷயத்தை உறுதி செய்தவரும் ஆன அமரர் திரு அ.ச.ஞானசம்மந்தன் அவர்களும் ஒருமுறை இதைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.



இன்னும் முடிக்கலை, மிச்சம் எழுதணும். எப்போனு தெரியலை! :)))))))

நந்தனாரை வேதியர் தடுத்தாரா? ஏற்கெனவேயே இது பற்றிப் போட்ட பதிவை இங்கே காணலாம்.

6 comments:

  1. பெரியவங்க தப்பு பண்ணா அது பெரிய தப்பா ஆயிடுது!

    ReplyDelete
  2. //இன்னும் முடிக்கலை, மிச்சம் எழுதணும். எப்போனு தெரியலை! :)))))))//

    கிறுக்குங்க!

    ReplyDelete
  3. மேடம்! இருந்தாலும் நீங்க குமுதம் பத்திரிகை பாணிக்கு இப்படி மாறக் கூடாது! "நந்தன் சரித்திரம் பற்றிய உண்மைகள் என்றால் நந்தனார் கதையில் மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட உண்மைகளைச் சொல்லப் போகிறீர்கள் என்று வந்தால், இப்படி, "நந்தன் சரித்திரம்" என்கிற நூலைப் பற்றிய சில உண்மைகளைப் பற்றி தொடர் வால்யூமா பதிவு எழுதிட்டிருக்கீங்க!

    அந்தப் புத்தகத்தின் பின்னணி என்கிற கோணத்தில் பதிவு நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. வாங்க திவா, நன்றி.

    ReplyDelete
  5. ஐந்திணை, கிறுக்குனு சொன்னதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  6. ரத்னேஷ், முதலிலேயே சிறப்புப் பாயிரம் பத்தித் தான் என்று தான் ஆரம்பிச்சு எழுதி இருக்கேன். உங்களோட கற்பனைகளுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்???

    ReplyDelete