எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 18, 2009

இதெல்லாம் என்ன வழக்கமோ???

திவா தன்னுடைய இந்தப் பதிவில்விவாஹம் திருமணத்தில் பொரி இடும் வழக்கம் எப்போ நுழைந்தது எனத் தெரியவில்லை என்று சொல்லி இருந்தார். குமரனும் அதற்கெனப் பல இலக்கிய நூல்களை ஆராய்ந்து பின்னூட்டம் எழுதி இருக்கின்றார். வைதீக முறைப்படி திருமணம் நடந்த ஆதாரங்கள் சிலப்பதிகாரத்தில் இருக்கின்றது ஆனால் பொரி இடுவது பற்றிய குறிப்பு இல்லை என்றும், ஆண்டாளின் வாரணமாயிரம் பாடல்களிலும், அம்மாதிரி எந்தக் குறிப்பும் இல்லை எனவும் சொல்லி இருக்கின்றார்.

// குமரன் (Kumaran) said...

இந்த லாஜ ஹோமத்தின் போது உடன்பிறந்தவன் (தம்பியோ அண்ணனோ உடன்பிறந்தார் முறை உள்ள ஒருவனோ) பொரியை எடுத்துப் பெண்ணின் குவிந்த கரத்தில் வைக்க வேண்டும் என்ற வழக்கம் எப்படி வந்தது? கோதை நாச்சியாரும் 'அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கைவைத்து பொரிமுகம் தட்டக் கனா கண்டேன்' என்று தான் சொல்கிறார். அவருடைய அண்ணன் தம்பிகளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

http://godhaitamil.blogspot.com/2005/12/84.html

நாச்சியாரும் தாலி கட்டுவதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஆனால் மங்கல நாணைப் பற்றி சிலப்பதிகாரம் சொல்கிறது. அந்தணர் முன் நின்று நடத்திய அந்த திருமணத்தில் மங்கல நாண் இருந்திருக்கிறது. அதனால் தாலி கட்டுவது வைதிக மரபா தமிழர் மரபா என்று தெளிவாகத் தெரியவில்லை. :-)//

ஆனால் எந்த வழக்கமும் காரணங்களோடு தானே செய்யப் படுகின்றது. காரணம் இல்லாமல் எந்தக் காரியமும் இல்லை அல்லவா?? எந்த இந்துத் திருமணங்களை எடுத்துக் கொண்டாலும் மாப்பிள்ளை காசி யாத்திரை என்று புறப்படுவதும், தாலி கட்டுவதும், பொரி இடுவதும், சப்தபதியும் இல்லாமல் முடிவதில்லை.

சிருஷ்டியின் ஆதாரம் பெண்தான். படைப்புகள் அனைத்தும் அவளிடமிருந்தே வருகின்றன. பெண்ணுக்கு மனவலிமையை அளிப்பது சந்திரன் தான் என்று நீதி நூல்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட பெண்ணால் தான் குடும்பம் கட்டிக் காக்கப் படுகின்றது என்பதும் உண்மை அல்லவா? அந்தப் பெண்ணால் தான் உறவுகள் சங்கிலித் தொடராக ஏற்படுகின்றன. திருமணத்தை எடுத்துக் கொண்டால் மாங்கல்ய தாரணத்தின் போது பெண்ணுக்குத் தாலி கட்டிக் கொள்ள மாப்பிள்ளையின் சகோதரி உதவுகின்றாள். இவ்வாறு அவள் பெண்ணோடு தன் உறவை பலப் படுத்திக் கொள்ளுகின்றாள். திருமணம் ஆகிப் புகுந்த வீட்டுக்குப் பெண் போகும் முன்பே உறவு இதன் மூலம் பலப்படுகின்றது. தாலி கட்டி முடிந்து வைதீகச் சடங்குகள் ஆரம்பித்ததும் நெல் பொரியை அக்னிக்கு இட்டுப் பிரார்த்தனை செய்கின்றார்கள் இருவருமே. பெண் குடும்பநலனை வேண்டி நெல்பொரியை அக்னியில் இட மணமகன் அதற்கு உதவுகின்றான். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பநலன் வேண்டிப் பிரார்த்தித்து வேள்வியைச் செய்யும் நேரம் அதற்கு உதவியாக நெல்பொரியை எடுத்துப் பெண்ணின் கையில் கொடுத்து உதவுவது பெண்ணின் சகோதரன். இந்த உதவியின் மூலம் தன் சகோதரியின் குடும்பநலனுக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் மணமகனோடு பெண்ணின் சகோதரனுக்கும் முதல் உறவு ஏற்படுகின்றது அல்லவா?

ஒரு மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் கோர்த்துக் கட்டியதின் மூலம் பெண்ணுக்கும், பையனுக்கும் மாமனார், மாமியார், நாத்தனார், மச்சினர்கள், சம்பந்திகள், சகலர்கள் என ஏற்படுகின்றனர் அல்லவா? அதை நிரந்தரமாக நிலை நிறுத்தச் செய்யப் படும் வேள்வியில் பெண்ணும், பையனும் ஈடுபடும்போது அதற்கு உதவியாக நெல்பொரியை எடுத்துக் கொடுத்து உதவுவது பெண்ணின் சகோதரன். ஆகாயத்தில் பிரகாசிக்கும் சூரியனுக்குச் சமமானது நெல்பொரி என்று சொல்லுவது உண்டு. அந்த நெல்பொரியை அக்னியில் இட்டு தன் கணவனின் நீண்ட ஆயுளுக்கும், அவரிடம் ஒப்படைக்கப் பட்ட என்னையும், அவரையும் காக்கவேண்டிய பொறுப்பும், கடமையும் அந்த அக்னிக்கு இருப்பதாய் மந்திரங்கள் சொல்லி முதல்முறை நெல்பொரியை மணமகள் இடுவாள். பின் அக்னியை வலம் வந்து இரண்டாம் முறையாகச் செல்வத்தை வேண்டி மணமகன் மந்திரங்கள் சொல்ல இரண்டாம் முறையும் நெல்பொரியை சகோதரன் எடுத்துக் கொடுக்க இருவருமாய் அக்னியில் இடுவார்கள். பின் இரண்டாம் முறையும் அக்னியை வலம் வருவார்கள்.

மூன்றாம் முறை நெல்பொரியை அக்னியில் இடும் சமயம் இருவருக்கும் ஆரோக்கியம், சுகம், உணவு, அளிப்பதோடு மட்டுமல்லாமல் இருவரின் மன ஒற்றுமைக்கும் பிரார்த்தித்துக் கொண்டு நெல்பொரியை இடுவார்கள். பின்னர் மூன்றாம் முறையும் அக்னியை வலம் வருதல் நடக்கும். அதாவது வள்ளுவர் சொன்ன அறம், பொருள், இன்பம் மூன்றையும் வேத மந்திரங்கள் சொல்லி வேண்டி மும்முறையும் பிரார்த்தித்துக் கொள்ளுவதே நெல்பொரி இடுவதன் தாத்பரியம். இல்லறத்தை நல்லறமாக்கச் செய்யும் முயற்சியில் இருவரும் ஈடுபடுவதற்குப் பெண்ணின் குடும்பமும் உதவுகின்றது என்ற அர்த்தமே இதன் முக்கியத்துவத்தில் குறிக்கப் படுகின்றது. நெல்பொரியில் சூரியனின் அருள் இருப்பதால் அவன் மறு உருவமாக அதை நினைத்து பிரார்த்திக்கின்றனர். இதுவே பொரி இடுவதன் அர்த்தமும், சகோதரன் உதவி செய்வதன் அர்த்தமும். இது குறித்துப் படித்த புத்தகத்தைப் பலநாட்களாய்த் தேடிக் கொண்டிருந்தேன். வேறே ஏதோ தேடும்போது இன்று இது கிடைத்தது. அதே போல் திருமணம் முடிந்ததும் நடக்கும் பிரவேச ஹோமத்திலும் மாலை மாற்றல், ஊஞ்சல் போன்றவை உண்டு. அது பற்றியும் திவா எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை லெளகீகம் என்பதாலோ என்னவோ???

6 comments:

  1. அருமையான விளக்கங்கள் கீதா.


    ஆண்டாள் ,வாரணமாயிரத்தில் பொரி முகம் சொல்லி இருக்கிறாள். ஒரு வேளை தம்பி என்று ஒருவன் இல்லாததால் அவள் கனவில் அதற்கு இடமில்லையோ என்று நினைத்தேன்.

    நன்றி.

    ReplyDelete
  2. //அதே போல் திருமணம் முடிந்ததும் நடக்கும் பிரவேச ஹோமத்திலும் மாலை மாற்றல், ஊஞ்சல் போன்றவை உண்டு. அது பற்றியும் திவா எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை லெளகீகம் என்பதாலோ என்னவோ??? //
    ஆமாம். அதேதான் காரணம்.
    என் அண்ணா கல்யாணத்தில் சம்பந்தி வீட்டில் இருந்து வந்து "இன்ன இடத்தில் ஒரு கரண்டி வெச்சு இருக்கேன். அதை திருடிண்டு போகணும். அதான் எங்க சம்பிரதாயம்ன்னு சொல்லி...." ஹிஹிஹி! நிறைய விஷயங்கள் புகுந்து போச்சு! எல்லாத்துக்கும் சாஸ்திரக்காரர் "பெண்கள் சொல்லியதையும் செய்க"ன்னு ஒரே போடா போட்டுட்டு போயிட்டார்!

    ReplyDelete
  3. @திவா,
    திருட்டுப் பாத்திரம் இப்போவும் வழக்கத்திலே உண்டு. :)))))))))))

    ReplyDelete
  4. நன்றி வல்லி.

    ReplyDelete
  5. வழக்கங்கள் எல்லாம் அர்த்தப் பின்னணியில் இருந்தது இருக்கட்டும். அதையெல்லாம் அர்த்தம் தெரியாமலேயே செய்ய வைப்பது அபத்தம் இல்லையா?

    ReplyDelete
  6. ரத்னேஷ், ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னர் இதை எல்லாம் அர்த்தம் தெரிஞ்சு செய்யறவங்க குறைஞ்சுட்டாங்க. ஆனால் இப்போ நம் திருமணங்களில் பத்திரிகை அடிக்கும்போதோ, அல்லது திருமணத்தன்றோ ஒரு சிறு சொற்பொழிவு கொடுக்கிறாங்க, ஒவ்வொரு சம்பிரதாயமும் எதுக்கு, ஏன் என்பதற்கு. அதன் பிறகே மாங்கல்யதாரணம் என்னும் தாலி கட்டுதல் நடைபெறுகிறது. உபநயனத்திலும் சொற்பொழிவு நடக்கின்றது. எங்க பையரோட உபநயனத்தில் நாங்க இதுக்காகவே நன்கு விஷயம் தெரிஞ்ச ஒருத்தரை மாயவரத்தில் இருந்து வரவழைச்சு இந்த சம்பிரதாயங்கள், வழக்கங்கள் பற்றிப் பேச வைத்தோம். உபநயனம் ஆரம்பிக்கும் முன்னால் ஏன் என்றும், நடந்து முடிந்த பின்னால் அதைப் பற்றியும் விரிவாக விளக்கம் கொடுத்தார். இப்போதும் பலர் வீட்டு விசேஷங்களில் தொடர்கிறது. தெரியாதவங்க தெரிஞ்சுக்கிறதுக்காகவே இம்மாதிரிப் பதிவுகளே. நன்றி.

    ReplyDelete