எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 18, 2009

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்!!!

மகளிர் தினத்துக்காக வேறு ஒரு தளத்துக்கு நான் எழுதி அனுப்பிய ஒரு கட்டுரையின் மறு பதிவு இங்கே/ இப்போதும் இந்தப் பதிவின் விஷயங்கள் ஏதும் மாறாத காரணத்தால் இது தேவை என நினைக்கிறேன். அந்தத் தளத்தில் இதற்குப் பல ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் யாரும் பதிலே எழுதவில்லை. நம்ம வலைப்பதிவர்கள் முக்கியமாய் நெருங்கிய தோழிகள் என்ன சொல்லப் போறாங்களோ புரியலை. :))))))))))))))))

உலக மகளிர் தினம் வந்தாச்சு. நம்ம மகளிர் முன்னேற்றக் கழகத்துக்காரங்களுக்கெல்லாம் சொல்லவே வேண்டாம். என்னமோ இந்தியாவில் அனைத்துப் பெண்களும் கொடுமைப் படுத்தப் படறாப்பலேயும், அதைக் காக்க வந்த ரட்சகர்கள் தாங்கள் தான் என்பதாகவும் ஆரம்பிச்சுப் பேசுவாங்க. தொலைக்காட்சிகளில் நடிகைகள் மகளிர் உரிமைக்காகக் குரல் கொடுப்பாங்க. இன்னும் நம்ம ஜனாதிபதியும் சொல்லுவார். அரசியல் வாதிகள் மறக்காமல் மகளிருக்கென இட ஒதுக்கீடுக்காகப் போராடுவோம்னு சொல்லிட்டு அடுத்த பார்லிமெண்டிற்காகத் தேர்தல் வந்து இடம் பிடிச்சதும், மக்கள் சபையிலே அந்த மசோதாவைக் கொண்டுவருவதையே தள்ளியும் போடுவாங்க. இதிலே நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் காட்டுகின்ற ஒற்றுமையை, நாட்டின் முன்னேற்றத்துக்குக் காட்டுவாங்களாங்கறதே சந்தேகம் தான். அவ்வளவு ஒற்றுமையா இருப்பாங்க.

சில மாதங்கள் முன் கர்நாடகத்தில் “ராம் சேனா” என்ற அமைப்பு பப் கலாசாரத்தில் ஈடுபட்ட பெண்களைத் தாக்கியது பெருமளவில் சர்ச்சைக்குள்ளானது. அனைத்து ஊடகங்களும் இதைப் பெரிது படுத்தியதோடு அல்லாமல், கர்நாடகாவின் மாநில ஆட்சி செய்யும் கட்சிதான் இதற்குக் காரணம் என்றும் சொல்கின்றன. அப்போது மும்பையில் தாக்கரே நடத்தியதற்கு யாரைக் காரணம் சொல்லுவது என்பதைச் செளகரியமாய் மறந்துட்டாங்க. ராம்சேனா அமைப்பு தாங்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறுதான். அதற்கு அவர்களைக் கைது செய்யவேண்டியதும் முறையே. ஆனால் பெண்கள் இத்தகைய கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது தவறு என எந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை. நம் நாட்டை இப்போது ஆண்டு கொண்டிருக்கும் கட்சியான காங்கிரஸின் பிரமுகர் ரேணுகா செளதிரி ஒரு படி மேலே போய், அனைத்துப் பெண்களையும் “பப் பரோ” என்று அறை கூவல் விடுத்து பப் எனப் படும் மதுவிடுதிகளை நிரப்பப் போராட்டம் நடத்தினார். இது எத்தகைய அநியாயம் என்பதை அவர் உணரவில்லை.

காந்தியால் வளர்க்கப் பட்ட ஒரு கட்சி, காந்தி எங்கள் தலைவர் எனக் கூறிக் கொள்ளும் ஒரு கட்சி, பெண்களை இழிவு படுத்தக் கூடாது, பெண்கள் அனைவரும் சமம், அவர்களின் நன்னடத்தையும், ஒழுக்கமும், தியாகமுமே முக்கியம் எனக் கூறிய தலைவரைப் பெற்ற ஒரு கட்சி இன்று இத்தனை தூரம் கீழ்த்தரமான போக்கைக் கடைப் பிடித்துப் பெண்களை இன்னும் இழிவு நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றது. பெண்கள் குடிப்பதையும், போதையில் ஆடுவதையும் காந்தி எப்போது ஆதரித்தார் என்பதை இவர்கள் சொல்லிவிட்டுப் பெண்களைக் கூப்பிட்டிருக்கலாமே? காந்தியும் ஒருபோதும் இவர்களை மன்னிக்க மாட்டார். ஏற்கெனவே ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தைப் போட்டு அவரைக் கேவலப் படுத்தியது போதாது என்று இப்போது பப்களைப் பெண்களால் நிரப்பும் கலாசாரத்தைக் காங்கிரஸ்காரர் ஒருவர் ஆரம்பித்து வைக்கின்றார்.

நம் கலாசாரம் சீரழிந்து, பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கமும் சீர்கெட்டு வருகின்றது. இவருக்கு உண்மையிலேயே பெண்கள் மீதும், பெண்களின் உரிமைகள் மீதும் நம்பிக்கை இருந்தால் பெண்களை உயர்நிலைக்குக் கொண்டு வர விரும்பினால், இதைக் கண்டித்திருக்கவேண்டும். அல்லது பெண்கள் பப் களுக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்றாவது சொல்லி இருக்கவேண்டும். நடப்பது எதிர்க்கட்சியின் ஆட்சி என்பதாலேயே அதற்கு எதிராக சமுதாயம் எப்படிப் போனால் என்ன? சமூகம் எப்படிச் சீரழிந்தால் என்ன? பெண்கள் குடித்துக் கெட்டலைந்தால் என்ன? அங்கே நடப்பது எதிர்க்கட்சியின் ஆட்சி. ஆகவே இப்படித் தான் பேசவேண்டும் என்று முடிவெடுத்துக் கண்மூடித்தனமாக இவர் பேசுவதை இவர் வீட்டினரே மன்னிக்க மாட்டார்கள். வெளிநாட்டுக் கம்பனிகளும், ஐடி வேலைகளும், அவுட் சோர்ஸிங் வேலைகளும் இன்றைக்கு இளம் பெண்களையும், இளைஞர்களையும் பல்வேறுவிதமான தவறான வழியில் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றது.


சமீபத்திய வேலைக்குறைப்பினால் பங்களூரில் வேலை இழந்த ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு அதுவரையிலும் பிட்ஸா, பர்கர் கொடுத்து வளர்த்து வந்ததாயும், இப்போது வேறு வழியில்லாமல் ரசம் சாதம் மட்டும் கொடுக்கவேண்டி இருந்ததாகவும் வருந்தி இருக்கின்றனர். ஒரு பத்திரிகைப் பேட்டியில் இது வந்தது. நம் நாட்டு உணவு அதுவும் தென்னிந்திய உணவான ரசம் சாதம் என்றால் மிகக் கேவலம் போல் அவர்கள் பேசி இருப்பது மனதை வேதனைப் படுத்தியது. பிட்ஸாவும் பர்கரும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பது கூட அவர்கள் அறிய மாட்டார்களா? இத்தனைக்கும் குழந்தைக்கு மூன்று வயதே ஆகின்றது. அந்தக் குழந்தைக்கு இப்போதே சீஸும், வெண்ணையும், மாவுப்பண்டமும் செரிக்குமா? அதன் உடல்நிலை வளர வளர எப்படி இருக்கும்? நாளைய சமுதாயத்துக்கு ஒரு ஆரோக்கியமான மகனோ, மகளோ தரவேண்டிய பெற்றோர் இத்தகைய உணவின் மூலம் உடல்நலக்குறைவோடல்லவா ஒரு மனிதனைத் தரவேண்டி இருக்கும்? பெண்கள் இத்தகைய கலாசாரத்தில் ஈடுபட்டால் அவர்கள் ஒழுக்கம் க்கெடாதா? மது மயக்கத்தில் தங்களை மறந்து அவர்கள் தவறு செய்ய நேரிடும் அல்லவா?

சுதந்திரம் என்ற பெயரில் எல்லை எதுவெனத் தெரியாமல் எல்லை தாண்டுபவர்களையே சமூகம் பாராட்டும்படியாக இன்றைய ஊடகங்களும், அரசும் அவற்றுக்குத் துணை போகின்றன. கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, அல்லது அவற்றை மீறி, தங்கள் இஷ்டத்துக்கு வாழ்வது தான் பெண்ணுரிமை என்றால் அந்த உரிமை எந்தப் பெண்ணுக்கும் கிட்டவே வேண்டாம். படிப்பினால் பெண்களுக்கு அறிவு வளரும், நிலை உயரும், ஞானம் உண்டாகும் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால் இன்றைய நாட்களில் பெண்கள் அதிகம் படித்து, அதிகம் சம்பாதிப்பதாலேயே இத்தகைய உரிமைகள் தங்களுக்கு ஏற்றது எனத் தவறாய்ப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறியும் தேவை என்பதைத் தவறாய்ப் புரிந்து கொண்டு, எப்படி வேணாலும் உடை அணிந்து நிமிர்ந்த நன்னடையோடு செல்லலாம் எனவும், நேர்கொண்ட பார்வை என்பதை பப்புக்குச் செல்லும்போதும் அனைவரையும் நேரேயே பார்த்துக் கொண்டு எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் இன்றிச் செல்லலாம் என்றும், நேர் கொண்ட பார்வை என்பதை, இதை எதிர்ப்பவர்களை எதிர்ப்பதே ஆகும் எனவும் தவறான புரிதலில் இருக்கின்றனர்.

சில ஆண்கள் பெண்கள் உடை அணிவதும் அவர்கள் உரிமை என்று சொல்லுகின்றனர். எப்படி வேண்டுமானாலும் உடை அணிந்து பெண்கள் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் என்பது அவர்கள் கருத்து. இது யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போன்றதே! சுதந்திரம் என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உடை அணிவதில் மட்டும் சுதந்திரம் கொடுப்பதும், ஒரு வகையில் ஆணாதிக்கமே. பெண்ணின் உடை விஷயத்தில் தலையிட எந்த ஆணுக்கும் உரிமை இல்லை. என்றாலும் அதற்கென வரையறையைப் பெண்ணே தனக்குத் தானே நியமித்துக் கொள்ளவேண்டும். சமூகத்தில் அனைவரும் மதிக்கும்படி, பார்த்தாலே மரியாதை வரும்படியான உடையே சிறந்தது.


எந்த உரிமையும் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் இருந்தாலே மதிப்பு. நம் குடியரசுத் தலைவி ஜீன்ஸும், டீ ஷர்டும் அணிந்து, வெளிநாட்டு உறவினர்களை உபசரிக்க முடியுமா? அவ்வளவு ஏன்? வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி பொதுக்கூட்டங்கள், மக்கள் சபை, மற்றப் பொது இடங்களில் கலந்து கொள்ளும்போது புடைவை அணிந்தே வருகின்றார். எப்போவாவது குளிர்காலத்தில் மட்டுமே சல்வார், குர்த்தா அணிந்து தோன்றக் காணலாம். பொதுக் கூட்டங்களிலும் புடைவை அணிந்தே வருகின்றார். மனதில் கட்டுப்பாடு இருந்தால், உடைக்கட்டுப்பாடு, செயல்களில் கட்டுப்பாடு, நல்லொழுக்கம் ஆகியவை தானே வரும். பெப்ஸி/கோகா கோலா, எதுனு தெரியலை, இவற்றின் தலைவியாக இருக்கும் இந்திரா நூயி யு.எஸ்.ஸில் கூடப் புடைவை அணிந்தே அலுவலகம் செல்வதாய்க் குறிப்பிட்டுள்ளார். திரைப்பட நடிகையாய் இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் அரைகுறை ஆடை அணிந்து வருவதை அனைவருமே விமரிசிக்காமல் இருப்பதும் இல்லை.

வடநாட்டு உடையான சல்வார், குர்த்தாவிற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்ததே? அது மாதிரித் தான் ஜீன்ஸ், டீஷர்டுக்கும் இப்போது எதிர்ப்பு. பின்னால் சரியாகிவிடும் என்பதே பலரின் கணிப்பு. திரைப்படத்தில் கூடக் கதாநாயகி கல்லூரி மாணவியாகவும், கதாநாயகனின் காதலியாகவும் இருக்கும் வரையில் தான் வித விதமாகவும் கவர்ச்சியாகவும் உடை அணிந்து வருவாள். திரைப்படக் கதாநாயகியின் கழுத்தில் தாலி ஏறிவிட்டால் அவளைப் போன்ற அடக்கமாய் உடை உடுத்தும் பெண்ணைக் காண முடியாது. புடைவை, உச்சிப் பொட்டு,(அதுவரையிலும் நெற்றியில் ஒண்ணுமே இருக்காது.) தலையைச் சுற்றிக் குளித்த அடையாளமாகத் துண்டு கட்டிக் கொண்டு, கையில் ஒரு தீபாராதனைத் தட்டு, அல்லது சாம்பிராணித்தட்டு போன்றவற்றுடன் காலையில் வீட்டிலேயே முதல் ஆளாய் எழுந்து அனைத்து வேலைகளையும் கண்மூடித் திறக்கும் முன்னர் செய்பவளாய் மாறி விடுகின்றாள். அம்மாவுக்குக் கட்டுப் படாத அவளோட மைத்துனனோ இவள் ஒரு வார்த்தை சொன்னாலே அடிமையாகவும் மாறுவான். ம்ம்ம்ம்ம்ம் குறைந்த பக்ஷம் நம் பெண்கள் அப்படி எல்லாம் நடந்துக்காட்டியும், உடை அணிவதில் நாகரீகத்தைக் கடைப்பிடிக்கலாமே?

பெண்கள் தான் குடும்பத்தின் ஆணிவேர். இதைச் சொன்னால் வேர் வெளியே தெரியாம இருக்கிறாப்போல பெண்களையும் வெளியே தெரிய விடாம அடக்கறாங்கனு சொல்லுவாங்க. ஆனால் வேர்தான் ஒரு செடியையோ, மரத்தையோ தாங்கிப் பிடிக்கிறது. தண்ணீரையும் வேருக்குத் தான் ஊத்தணும். ஏன் செடியோட கிளைகளுக்கோ, இலைகளுக்கோ தண்ணீரை நேரடியாக விடக் கூடாதா? முடியாதல்லவா? அதிலும் பெண் ஆலமரம் போன்றவள். நன்றாக விழுது விட்டுப் படரும் குணம் உடையவள். வாழ்த்துச் சொல்லுவதே, "ஆல் போல் விழுதோடி, அருகு போல் வேரோடி" என்று தான் சொல்வது வழக்கம். வேர் போனால் மொத்தச் செடியும் போயிடுமே? அதுபோல பெண்ணுடைய பழக்கங்களால் அந்தக் குடும்பத்திற்கே பாதிப்பு உண்டாகும் அல்லவா? பெண்கள் தான் யோசிக்கணும். இங்கே யாரும், யாரையும் எப்போது கட்டிப் போட்டதில்லை. அடிமையாக நடத்தலை. ஒரு நியதிக்குக் கட்டுப் பட்டு அன்புக்கு அடிமையாகி நடக்கப் பெண்ணால் தான் முடியும்.

அப்பாடா, பெண்கள் உரிமை பற்றியும் பெண்கள் விடுதலை பற்றியும் பெண்ணீயம் பற்றியும் நான் எழுதறதே இல்லைனு சிலர் நினைச்சுட்டு இருந்தாங்க. இன்னிக்கு அதையும் தொட்டாச்சு. உண்மையான பெண் விடுதலை என்னனு புரிஞ்சுட்டுப் பேசணும் பெண்ணீயவாதிகள். ஆண்களுக்கு நிகராய் புகை பிடித்தலும், கவர்ச்சி என்ற பெயரில் உடை அணிவதோ, பப் சென்று அங்கே ஆண்களோடு சேர்ந்து குடிப்பதிலோ பெண் விடுதலை அடைவதில்லை. இந்தப் பெண்களை ஆதரிக்கும் ஆண்கள் எவரும் தங்கள் வீட்டுப் பெண்கள் இம்மாதிரி நடப்பதை விரும்ப மாட்டார்கள். புத்தியிலும், விவேகத்திலும், குழந்தைகளை ஒழுக்கத்தோடும், அறிவோடும் வளர்ப்பதிலும், குடும்பத்தை அரவணைத்துச் செல்லுவதிலுமே பெண் உயர்ந்து நிற்க முடியும். ஆனால் இதைத் தான் அடிமைத் தனம் என ஒரு சாரார் சொல்லி மூளைச் சலவை செய்கின்றனர். காலத்தின் கோலம் தான் இது. பெண்கள் சுயமாகச் சிந்தித்துத் தங்கள் குடும்பநலனுக்காகப் பாடுபட்டாலே ஒரு அருமையான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இன்னும் இரண்டு நாட்கள் விடறதா இல்லை பெண்களை!:)))))))))

23 comments:

  1. கீதாம்மா,

    //மனதில் கட்டுப்பாடு இருந்தால், உடைக்கட்டுப்பாடு, செயல்களில் கட்டுப்பாடு, நல்லொழுக்கம் ஆகியவை தானே வரும்// என்று சொல்லிவிட்டு சோனியா/புடவை பற்றி பேசுகிறீர்கள். உடைக்கட்டுப்பாடு இருப்பதால், சோனியா காந்தி அவர்களுக்கு மனக் கட்டுப்பாடு இருப்பதாக நிரூபிக்கிறீர்களா? இந்திரா நூயி தினமும் புடவையை அலுவலகத்துக்கு அணிவதில்லை; ஆனால், மிசெல் ஓபாமாவும் புடவை அணிவதில்லை. பெண்களைப் பற்றிய பதிவில் பெண்களுக்கு ஏன் கட்டுப்பாடு பற்றி போதனை?

    எனக்கு நீங்கள் "எதிர்பார்க்கும் உடைக்கட்டுப்பாடு" இல்லாவிடில் என் நல்லொழுக்கத்தைச் சந்தேகிப்பீர்களா?

    //சமீபத்திய வேலைக்குறைப்பினால் பங்களூரில் ...பர்கர்.. ரசம்சாதம்... // இதுக்கும் பெண்களின் பதிவுக்கும் என்ன தொடர்பு?

    //இந்தப் பெண்களை ஆதரிக்கும் ஆண்கள் எவரும் தங்கள் வீட்டுப் பெண்கள் இம்மாதிரி நடப்பதை விரும்ப மாட்டார்கள்.// அப்படியா? உங்களுக்கு தெரியுமா? :( பப்புக்கு வரும் ஜோடிகளில் கணவன்/மனைவியும் உண்டு.

    //நேர்கொண்ட பார்வை என்பதை பப்புக்குச் செல்லும்போதும் அனைவரையும் நேரேயே பார்த்துக் கொண்டு எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் இன்றிச் செல்லலாம் என்றும், நேர் கொண்ட பார்வை என்பதை, இதை எதிர்ப்பவர்களை எதிர்ப்பதே ஆகும் எனவும் தவறான புரிதலில் இருக்கின்றனர்// நான் பப்புக்குப் போயிருக்கிறேன் இந்தியாவில். என் கணவரோடேயே இங்கே போயிருக்கிறேன். என்னுடன் இந்தியாவில் பப்புக்கு வந்த தோழிகள் என்னைப் போலவே இன்று குடும்பத் தலைவிகளாகவும், பொறியியல் வல்லுனர்/தொழிலதிபர்களாகவும் இருக்கிறோம்.

    யாரோ சில பெண்களைப் பற்றி உங்களின் தவறான புரிதலுக்காக ஒரு பதிவை விரயம் செய்து விட்டீர்கள். இந்தியப் பெண்களைப் பற்றி எழுத எவ்வளவோ இருக்கு. நீங்கள் பண்பாட்டுக் காவலர் ஆக இருக்க வேண்டியதில்லை.

    //ஒரு நியதிக்குக் கட்டுப் பட்டு அன்புக்கு அடிமையாகி நடக்கப் பெண்ணால் தான் முடியும்.// ஆணாலும் முடியும். அன்பு இருவழிப்பாதை. நியதியும்.

    "நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடி பெண்ணின் குணங்களாம்". நாங்களும் பெண்மைத் தெய்வங்கள் தாம். நாங்கள் சம்பிரதாயங்களில் ஊறி வந்த பெண்மணிகளைப் பற்றி என்றுமே தவறாக எண்ணியதோ, பேசியதோ கிடையாது. ஆனால், எங்கள் அத்தை, சித்திகளாக இருக்கும் இந்த சம்பிரதாயப் பெண்மணிகள், எங்களை நன்கு அறிந்துணர்ந்து இன்றைக்கும் நேசிக்கும் தாய் போல் என்றுமே இருப்பதில்லை.

    ReplyDelete
  2. மிக நல்ல பதிவு!
    நேர் கொண்ட பார்வைன்னா என்னன்னு சொல்லி இருக்கலாம்.

    ReplyDelete
  3. ஆண்கள் கெட்டு போற அளவுக்கு தானும் கெட்டு போகணும், அதுக்கு ரைட்ஸ் இருக்கு என்கிறாங்களா?

    ReplyDelete
  4. //இது யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போன்றதே! //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
    எங்க ஆனையை பத்தி ஒண்ணும் சொல்லாதீங்க!
    அது தன் தலையிலே மண்னை வாரி போடுக்குதுன்னா அதுக்கு காரணம் இருக்கு!

    ReplyDelete
  5. நல்ல சிந்தனை கீதாம்மா...இதை நான் சொல்லியிருந்தால்...ஹிஹிஹி :)

    ReplyDelete
  6. //பெண்களைப் பற்றிய பதிவில் பெண்களுக்கு ஏன் கட்டுப்பாடு பற்றி போதனை?//

    பெண்கள் பற்றிய பதிவில் உடையில் கொஞ்சமும் நாகரீகம் காட்டாத பெண்களைப் பற்றிய தவறான உணர்வுகள் ஏற்படுவதை யாராலும் மறுக்க முடியாது. அதனாலேயே போதனை. நாகரீக உடையையும் நேர்த்தியாகவும், அழகாகவும் அணிந்தால் பிரச்னை இல்லை அல்லவா?? இந்திரா நூயியையும், சோனியாவையும் உதாரணத்திற்கே சொல்லி உள்ளேன். அவங்க மனக்கட்டுப்பாடு பத்தி நான் எப்படி நிரூபிக்கமுடியும்??? பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், பொது இடங்களில் கண்ணியமாய் ஆடை அணிந்து வருவதைப் பற்றி மட்டுமே சொல்கிறேன். புரிந்து கொள்ளுதலில் தவறு இல்லை. நான் சொல்லி இருப்பதிலேயே தவறு இருக்கலாம். :)))))))

    ReplyDelete
  7. //எனக்கு நீங்கள் "எதிர்பார்க்கும் உடைக்கட்டுப்பாடு" இல்லாவிடில் என் நல்லொழுக்கத்தைச் சந்தேகிப்பீர்களா?//

    இது உங்களுக்கே கொஞ்சம் 3மச், 4 மச்சாய்த் தெரியலை??? :))))))

    ReplyDelete
  8. //சமீபத்திய வேலைக்குறைப்பினால் பங்களூரில் ...பர்கர்.. ரசம்சாதம்... // இதுக்கும் பெண்களின் பதிவுக்கும் என்ன தொடர்பு? //

    நிச்சயமாய்த் தொடர்பு இருக்கிறது. அம்மாவும், அப்பாவும் வேலைக்குப் போயிடறதாலே இந்த மாதிரியான உணவைச் சாப்பிட்டுப் பழக்கப் படும் குழந்தைகள், பின்னால் ஒரு கஷ்டம் என்று வரும்போது தாய், தந்தையால் இப்போ வாங்கித் தர முடியாது என்பதைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிரமமே சொல்ல வைத்தது. நேரிலேயே பார்த்தேன், பார்க்கிறேன். ஆரம்பத்திலேயே குழந்தைகளை நம் உணவுக்கும் பழக்கம் செய்யலாமே?? அதுவும் இந்தியாவில்??? நான் சொல்லி இருப்பது இந்தியாவுக்கு மட்டுமே. இங்கே தான் குடும்பம் என்னும் அமைப்பு சிதற ஆரம்பித்துள்ளது. அந்தக் கவலையே! :(((((((((((((((

    ReplyDelete
  9. பப்புக்கு வரும் ஜோடிகளில் கணவன்/மனைவியும் உண்டு. //

    நீங்க சொல்லவே வேண்டாம், நான் இதை எழுதிய தளத்தில் ஒருத்தர் தன்னோட மனைவி, மற்றும் வயது வந்த பெண்களோட தான் பப்புக்குப் போவதாக எழுதி இருந்தார். என்னோட சண்டை தான்! இது ஒண்ணும் ஆரோக்கியமான ஒரு நடத்தை என்று சொல்ல முடியாது.

    ReplyDelete
  10. //இந்தியப் பெண்களைப் பற்றி எழுத எவ்வளவோ இருக்கு. நீங்கள் பண்பாட்டுக் காவலர் ஆக இருக்க வேண்டியதில்லை.//

    கட்டாயமாய் நான் பண்பாட்டுக் காவலர் இல்லைதான். நான் அப்படிச் சொல்லிக்கவும் இல்லை. நீங்கள் பப்புக்குப் போறீங்க என்பது எனக்குத் தெரிஞ்சிருந்தாலும் என்னோட இந்தக் கருத்தை எழுதி இருப்பேன். ஆனால் உங்கள் மனம் புண்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இது உங்களைக் குறித்தான பதிவு அல்ல. பொதுவான ஒரு பதிவே.

    ReplyDelete
  11. //நாங்கள் சம்பிரதாயங்களில் ஊறி வந்த பெண்மணிகளைப் பற்றி என்றுமே தவறாக எண்ணியதோ, பேசியதோ கிடையாது. ஆனால், எங்கள் அத்தை, சித்திகளாக இருக்கும் இந்த சம்பிரதாயப் பெண்மணிகள், எங்களை நன்கு அறிந்துணர்ந்து இன்றைக்கும் நேசிக்கும் தாய் போல் என்றுமே இருப்பதில்லை.//

    தாய் என்றைக்கும் தாய் தான். தன் குழந்தைகளை வெறுக்கவே மாட்டாள். அதுக்காக பப் கலாசாரத்தை ஆதரிக்கணும்னு எதிர்பார்த்தால், என் பெண்ணாகவே இருந்தாலும் ஆதரிக்கவே மாட்டேன். உங்கள் கருத்துகளுக்கு நன்றி, மனம் புண்பட்டிருப்பதற்கு மன்னிப்பு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. @திவா, நன்றி.

    ஆனை எதுக்கு மண்ணை வாரிப் போட்டுக்கறது?? எழுதி இருக்கலாம் இல்லை?

    ReplyDelete
  13. வாங்க மெளலி, நன்றி.

    ReplyDelete
  14. இப்பத்தான் யானையை பத்தி ஒரு பதிவு போட்டு இந்தப் பக்கம் பார்த்தா ரெண்டு யானை சொந்தகாரங்க மண்ணை வாரிப் போட்டுக்கிறதை பத்தி பேசிகிட்டு இருக்காங்க.

    ////இங்கே யாரும், யாரையும் எப்போது கட்டிப் போட்டதில்லை. அடிமையாக நடத்தலை. ஒரு நியதிக்குக் கட்டுப் பட்டு அன்புக்கு அடிமையாகி நடக்கப் பெண்ணால் தான் முடியும். //

    பெண் சக்தி யானையின் சக்தி போன்றது. அது (அன்புக்கு) அடங்கி வேலை செஞ்சா சமுதாயம் என்கிற தேரைk கட்டி அழகா இழுக்கலாம். தறிகெட்டுப்போனா கரும்புக் காட்டை அழிக்கலாம் :))

    அன்பான வார்த்தைகளாலே நன்றாகச் சொல்லியிருக்கீங்க. நன்றி

    ReplyDelete
  15. நன்றி, கபீரன்பரே, மலையின் மேலிருந்து விழும் அருவியின் வேகம் எல்லாராலும் தாங்க முடியுமா??? அதையும் கட்டுக்குள் கொண்டு வந்தால் தான்! அது போலவே பெண்ணும்! அன்பெனும் கட்டு!

    ReplyDelete
  16. முத்திரைப் பதிவு.ஆளாளுக்கு திசை திருப்பி விளக்கமும் வியாக்கியானமும் செய்ய வாய்ப்பு இருக்கும் பதிவு.

    "இதில என்ன இருக்கு?" என்கிற அலட்சியம் வந்து விட்டால் . . . இன்றைய பெருநகரத்துப் பெண்கள் மாதிரி தான் ஆகி விடும் நம் மொத்த கலாச்சாரமும்.

    அடுத்தவரை, பண்பாட்டுக் காவலராக ஆகவேண்டாம் என்று சொல்கிற வாதமே, ஒருவிதமான ஒப்புதல் வாக்கு மூலம் தான் என்றே கருதுகிறேன்.

    ReplyDelete
  17. உண்மைதான் ரத்னேஷ், இம்மாதிரி விஷயங்களைப் பேசினாலே இப்படிக் கேள்விகள் எழுவதும் சகஜமே! அதனால் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை.பொதுவாக இதற்கு எதிர்ப்பையே எதிர்பார்த்தேன், எதிர்பார்க்கிறேன். அதனாலும் ஒண்ணும் இல்லை. பெண்கள் பற்றிய பதிவில் போதனை செய்யாமல் வேறே பதிவிலா செய்ய முடியும்??? குடும்பக் கட்டமைப்பு ஓரளவாவது சிதறாமல் இருப்பதாலேயே நம்முடைய பொருளாதாரமும் கட்டிக் காக்கப் படுகின்றது.

    ReplyDelete
  18. இந்த பதிவை திங்கட் கிழமை போட்ருந்தா தீவாளி கொண்டாடி கச்சேரி களை கட்டி இருக்கும். :))

    சனி கிழமை எல்லா கடையுமே ஈ அடிக்கும். :p

    பதிவை பத்தி நான் ஒன்னும் சொல்றதா இல்லை. :)))

    ReplyDelete
  19. அம்பி, கணேசன் துபாய் போயாச்சா?? அதானா சொல்றதுக்கு ஒண்ணும் இல்லைனு ஜகா வாங்கறீங்க??? பாவம் கணேசன் எழுதினதுக்கெல்லாம் நீங்க பேர் வாங்கினீங்க! :P:P:P:P:P:P:P

    ReplyDelete
  20. சுவாரஸ்யம். கீதா.

    ReplyDelete
  21. எவ்வளவோ எழுதலாம். ஆனால் சுருக்கமாக ஒனறைமட்டும் குறிப்பிடலாம் என தோன்றுகிறது.

    ‘கட்டுப்பாடுகள் பெண்களுக்குத் தேவை” அதை யார் போடுவது?

    கட்டுப்பாடுகள் எந்த வயதுப் பெண்களுக்கு? 25 வயதா? 30? 40? அல்லது 50க்கு மேல்?

    இவர்களையெல்லாம் குழந்தைகளைப்போல் நடாத்தலாமா? இவர்களுக்கு சுதந்திரமாக தான் செயவது சரியா இல்லையா என்று தெரியாதா?

    உங்களை 5ம் வகுப்புச்சிறுமியைபோல் ஒரு ஆண் மிரட்டினாலோ, அடக்கினாலோ (அதாவது அவன் போடும் கட்டுப்பாடுகளை வைத்து) நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

    இப்படி வயது வந்த பெண்களை ஆண்கள் கட்டுப்படுத்துகிறார்கள் இச்சமூகத்தில்.

    இதே போல், ஆண்களை பெண்கள் ஏன் கட்டுப்படுத்தவில்லை?

    ஏன் பெண்கள் ஆணகளுக்கு அடிபணிந்து கட்டுப்படவேண்டும்?

    ReplyDelete
  22. வாங்க வல்லி, நன்றி. இதை நான் எழுதிப் பல மாதங்கள் ஆகின்றன. எழுதிய தளத்தில் பலரும் எதிர்த்தார்கள். பெண்கள் பின்னூட்டமே இடவில்லை! :))))))) நீங்களும், கெபியும் வந்து பின்னூட்டம் இட்டதுக்கு நன்றி.

    ReplyDelete
  23. வாங்க வேந்தரே, பெண்கள் அடிமையாக இருந்து ஆண்களைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றோ தங்கள் அதிகாரத்தைக் காட்டிக் கட்டுப் படுத்தவேண்டும் என்றோ சொல்லவில்லை. அன்பால் அடிமையாக்கலாம். அந்த நயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வளவே!

    ReplyDelete