எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 13, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம்- 2


கண்ணன் தன் கைகளில் கொண்டு வந்திருந்த ஒரு புஷ்பமாலையை ராதையின் கழுத்தில் போட்டான். ராதை கண்ணனிடம், “கானா, நாம் உண்மையாக எப்போது திருமணம் செய்து கொள்வோம்?” என்றாள். “இதோ, நமக்குத் திருமணம் ஆகிவிட்டது. காந்தர்வ விவாஹம்” என்றான் கண்ணன் சிரித்துக் கொண்டே. “ அட, போ கானா, நீ என்ன பெரிய அரசகுமாரனா என்ன, காந்தர்வ விவாஹம் என்று சொல்ல?” கண்ணன் சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “ஒருவேளை, நான் அரசகுமாரனாய் இருந்திருந்தால்?” என்றான் அவளைப் பார்த்து. பெருமூச்சுவிட்டாள் ராதை. “நீ எப்போவுமே எனக்கு ஒரு அரசன் தான். என் ராஜா நீதான் கண்ணா. நீ எனக்குக் கோவிந்தனும் கூட. பசுக்களை மேய்க்கும் இடையனாக நீ எப்போதும் இங்கேயே என்னருகில் இருந்தால் அது போதும் எனக்கு.” கண்ணனின் புருவங்கள் நெரிந்தன. “ராதை, இதைக் கேள், நான் ஒரு மாடுகள் மேய்க்கும் இடையன் அல்ல. நான் ஒரு அரசகுமாரன். நீ ஒரு அரசகுமாரி. “ கண்ணன் உண்மையாகப் பேசுவது அவன் குரலில் தெரிந்தது. ராதையோ கண்ணனின் முகத்தையும், கண்களையும் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்தினாள். “””””””ம்ம்ம்ம்ம்ம்?? அப்படிப் பார்க்காதே, ராதை. நாளைக்காலை நான் மதுரா செல்கிறேன் என்பதும், எப்படியும் சில நாட்களுக்காவது என்னால் வரமுடியாது என்பதும் நீ அறிவாய் அல்லவா?” ராதை அவசரம் அவசரமாய் மறுத்தாள். இல்லை, இல்லை, என் கானா வந்துவிடுவான். “கானா, நீ திரும்பி வந்துவிடுவாய், எனக்காக, உன் ராதைக்காக. “

“ராதை, கேள், நான் உன்னை இங்கே தனிமையில் அழைத்துவந்ததன் உண்மையான காரணமே யாருக்குமே தெரியாத ஒரு ரகசியத்தைக் கூறுவதற்குத் தான். எப்படி இருந்தாலும் ஒரு நாள் அனைவருக்கும் தெரியத் தான் போகிறது. யாதவகுலம் அடிமைத் தளையில் மூழ்கிப் பலவருஷங்களுக்கு மேல் ஆகிறது. நாரதமுனிவரின் தீர்க்கதரிசனத்தின்படி, நான் ஒருவன் மட்டுமே அந்தத் தளையை உடைக்கப் போகின்றேன். “ ராதை நடுங்கினாள். கண்ணனை இறுகக் கட்டிக் கொண்டாள். “என்ன சொல்கிறாய் , கானா? நீ சொல்லுவதற்கெல்லாம் என்ன அர்த்தம்?”

“ராதை, நாரத முனிவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் தேவகனின் மகளும், யாதவ இளவரசியும் ஆன தேவகியின் எட்டாவது குழந்தை , அந்தப் பரவாசுதேவனின் அம்சமாய்ப் பிறந்து யாதவகுலத்துக்கே ஒரு பெருமையைக் கொண்டு வந்து அவர்களின் அடிமைத் தளையையும் உடைப்பான். கம்சனை இந்தக் குழந்தையே கொல்லுவான்.”

“ம்ம்ம்ம்., ஏதோ சொல்லுவாங்க, கேட்டிருக்கேன். “ ராதை கொஞ்சம் அலட்சியமாகவே பதில் சொன்னாள்.
“நான் அந்த எட்டாவது குழந்தை!” கண்ணன் அமைதியாகச் சொன்னான்.

ராதைக்கு அதிர்ச்சி. கண்ணனைக் கட்டி அணைத்திருந்த அவள் கைகள் தானாய்த் தளர்ந்தன. “என்ன???” அதிர்ச்சியும், பயமும் அவளை ஆட்டிப் படைக்கக் கண்ணனை விட்டு விலகினாள். “நீ, நீ, இளவரசனா?”

“ஆம் , என்னைப் பெற்ற தந்தை வசுதேவரால் நான் கோகுலத்துக்குக் கொண்டுவரப் பட்டேன். நான் பிறந்த அன்றே நந்தனின் கைகளில் என் தந்தையான வசுதேவரால் ஒப்படைக்கப் பட்டேன். ம்ம்ம்ம் மேலும் கேள். பலராமன், என் சகோதரன், உண்மையில் ரோஹிணியின் பிள்ளையே அல்ல. அவனும் என் தாய் தேவகியின் பிள்ளைதான். ஏழாவது பிள்ளை அவன். வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த எனக்கு மூத்த சகோதரன் அவன்.”

வசுதேவர்??? நம் மரியாதைக்குகந்த இளவரசர்??””” எனில் நீ??”””

கண்ணன் மெளனமாய்த் தலையை ஆட்டினான். கம்சனின் கைகளில் இருந்து தப்பவேண்டியே இருவரையும் இங்கே வளர்க்க நேர்ந்ததாகவும் சொன்னான். “இப்போது கம்சன் தநுர் யாகம் செய்யப் போவதாயும், அதற்கு வரவேண்டும் எனவும் எங்களை அழைத்துள்ளான். இவ்வாறு அழைத்து எங்களைக் கொல்லவேண்டும் என்பதே அவன் திட்டமாய் இருக்கலாம். “

ராதைக்கு அனைத்தையும் கேட்கக் கேட்க மயக்கமே வந்தது. மேலும் கம்சனின் கொடுமைகளைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால் கண்ணனுக்கு கம்சனால் ஏற்படப் போகும் தீங்கை நினைத்தும் கவலை கொண்டாள். அதை வெளிப்படையாய்க் கண்ணனிடம் சொல்லவும் சொன்னாள். கண்ணன் அவளுக்கு ஆறுதல் மொழிகள் சொன்னான், என்றாலும் சமாதானம் அடையாத ராதை, “கம்சன் உன்னைக் கொல்ல வந்தால் எப்படித் தப்பிப்பாய் கானா?” என்று கேட்டாள். கண்ணன் உறுதியோடும், தெளிவோடும் சொன்னான்:” கம்சனால் முடியாது. அனைவரும் சொல்லுகின்றனர், நான் தர்மத்தை நிலைநாட்டவே பிறந்திருப்பதாய். மேலும் கேள் ராதை, சில நாட்களாகவே என்னுள்ளும் மாற்றங்கள் என்னை அறியாமலே நிகழ்ந்து வருகின்றன. எனக்கும் நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது, நாம் செய்யவேண்டிய வேலைகளும், போகவேண்டிய தூரமும் நிறைய இருக்கின்றன என்றும், தர்மத்தை நான் பாதுகாப்பேன் என்றும் யதுகுலத்தின் மேன்மைக்குக் காரணம் ஆவேன் என்றும், கம்சனின் அடிமைத் தளையில் இருந்து யாதவர்களை விடுவிப்பேன் என்றும் நம்பிக்கை பிறந்துள்ளது.”

ராதைக்கு எதுவும் பேசத் தோன்றாமல் வாயை மூடி, மூடித் திறந்தாள். அவளுக்குத் துயரம் கட்டுக்கடங்காமல் போனது. பெரியதொரு விம்மலுடன் கண்ணனை அணைத்தவண்ணமே, “உன்னை அங்கே போகவிடாமல் தடுக்கக் கூடிய சக்தி ஏதேனும் இருக்கிறதா கானா?” என்று கேட்டாள். கிருஷ்ணனுக்கும் மனம் வேதனையாகவே இருந்தது. சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பின்னர்” இல்லை, ராதை இல்லை. அப்படி எந்த சக்தியும் இல்லை. நான் மதுரா சென்றே ஆகவேண்டும். அங்கே நடக்கப் போகும் நிகழ்வுகளுக்கு என்னை நான் தயார் செய்து கொண்டே ஆகவேண்டும். இது என்னுடைய தர்மம். என்னுள் நானே கேட்டுக் கொள்வதும் உண்டு, நம்மால் முடியுமா என. ஆனால் இப்போது சர்வ நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது, இது என்னால் மட்டும் தான் முடியக் கூடிய ஒன்றென.”

“ஆனால் கானா, என் நிலைமை?? என்னைப் பற்றி என்ன முடிவு செய்துள்ளாய்?” பெரும் கேவலுடன் கேட்ட ராதை கட்டுக்கு அடங்காமல் அழ ஆரம்பித்தாள். “ நீ இல்லாமல் என் வாழ்க்கை பாலைவனம் ஆகிவிடுமே கானா?? நான் ஊமையாகிவிடுவேனே! என்னால் பார்க்கவும் முடியுமா? கேட்கும் திறன் இருக்குமா என்னிடம்?? போகாதே, கானா, போகாதே, அந்தக் கம்சனால் உனக்குக் கேடு விளைந்துவிடும். ஏதோ நடக்கப் போகிறதோ என என் மனம் அஞ்சுகிறது கானா!”“ராதா, பயப்படாதே! என்னைப் பற்றியும் கவலை கொள்ளாதே! கம்சன் அழிந்து நம் யாதவ குலம் கொடியவனிடமிருந்து விடுதலை பெற்றுவிடும். நீ தனியாகவெல்லாம் இருக்கமாட்டாய் ராதை. நான் என் கடமை முடிந்ததும், திரும்பி வருவேன், அல்லது உன்னை அழைத்துக் கொள்ள முயல்கிறேன். என் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியே நீ தான், நீ இருப்பதுதான், இப்போது போல் எப்போதும் நீ ஒருத்தியே என் வாழ்வின் அனைத்து மகிழ்வுக்கும் காரணம் ஆவாய்!”

சற்று நேரம் பேசாமல் இருந்த ராதை தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் ஆரம்பித்தாள்:”கானா, நீ மதுரா சென்று கம்சனை வென்றுவிடுவாய், எனக்குத் தெரியும், நீ ஒரு கடவுளுக்கு ஒப்பானவன் என. அங்கே அனைவரும் உன்னைப் பெரிய சக்கரவர்த்தியாகவும் ஆக்குவார்கள். நீ மிக மிகப் பெரிய மனிதனாகிவிடுவாய். இவ்வுலகின் அனைத்து மக்களும் உன் அடி பணியக் காத்திருப்பார்கள் கானா. நீ ஒரு ஒப்பற்ற மாபெரும் சக்கரவர்த்தியாக நம் தேசத்து இளவரசர்களுக்கும், அரசர்களுக்கும் நடுவே காட்சி அளிப்பாய்!”

“ஆம் ராதை, அப்போதும் நீ தான் என் ராணி! என் வாழ்வின் பிரிக்கமுடியாத ,என்னை விட்டு இணை பிரியாத ஒரு தோழியாகவும் நீயே இருப்பாய்!”

4 comments:

 1. ராதை, கண்ணனுடன் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்பதுபோல், அவர்களை பார்ப்பது போல், மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது அம்மா, உங்கள் எழுத்து. மிக்க நன்றி.

  ReplyDelete
 2. நன்று. இராதையை பற்றிய என் சந்தோகம் தீர்ந்தது. இது என் மனதுள் நெடுனாள் கேள்வி. தங்கள் அடுத்த பதிவைப் படிக்க ஆவலாக உள்ளேன். நன்றி.

  ReplyDelete
 3. ம்ம்ம்..கூடவே வந்துக்கிட்டு இருக்கேன் ;)

  ReplyDelete
 4. கீதா, ராதாராணியின் துயரம் மனதை நெருடுகிறது.
  வேளுக்குடி சொல்வதிலிருந்து ராமனை விடக் கண்ணந்தான் அதிகமாகத் துன்பம் அனுபவித்திருக்கிறான். பாவம் எத்தனை சோதனை இந்தக் குழந்தைக்கு.

  ReplyDelete