
ஏதோ ஓர் உணர்வு எனக்குள்ளே, என்னைத் தூண்டி விடுவது போல் இருக்கும், எப்போதும். நீ பிறந்ததன் காரணமே வேறே என எதுவோ என் காதுகளில் கூறுவது போல் கேட்கும். எனக்குள்ளே என்னை அறியாமல் சில மாற்றங்களும் ஏற்படத் தொடங்கின. ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாத சில விஷயங்களை நான் அநாயாசமாய்ச் செய்ய முடிந்தது. இது எப்படி என எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் உண்மையில் வசுதேவனுக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளை என்பதும், கம்சன் என் வாழ்க்கையில், நம் வாழ்க்கையில் விளைவித்து வரும் விளைவுகளையும் கேட்டதுக்கு மறுநாள், நான் வழக்கம்போல் கோவர்த்தன மலை மீது ஏறி அதன் உச்சியில் நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருந்தேன். சூரியன் தன் பொற்கதிர்களை பூமிக்கு அனுப்ப முயன்று கொண்டிருந்த அந்த வேளையில் என் கண் முன்னே விரிந்ததொரு காக்ஷி. அந்தக் காக்ஷியில் நான் ஒரு பாத்திரமாக இருந்து கொண்டே, அந்தக் காக்ஷியை வேறொரு நபராகவும் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தேன்.
“இந்தப் பூவுலகில் இப்போது மறைந்து கொண்டிருக்கும் தர்மம், சநாதன தர்மம் கொஞ்சம் கொஞ்சமாக நிலை பெறுவதையும், தீமைகள் அழியத் தொடங்குவதையும் கண்ணாரக் கண்டேன். அதே சமயம் மக்கள் யாவரும் தர்மத்தின் பாதையில் செல்லாதவர்களையும் தர்மத்தின் பாதையில் செலுத்த ஆரம்பிப்பதையும் என் கண்களால் கண்டேன். ஆனால், ஆனால், …” தயங்கினான் கண்ணன். “ கண்ணா, மேற்கொண்டு என்ன சொல், உன் வாயால் அவற்றைக் கேட்கவே நான் காத்திருக்கிறேன்.” என்றார் அக்ரூரர். “அந்த தர்மம் விண்ணையும், மண்ணையும் மட்டுமில்லாமல் இந்தப் பிரபஞ்சம் பூராவையும் தன் கரங்களால் அரவணைப்பதைக் கண்டேன் அக்ரூரரே! விண்ணுக்கும், மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கக் கண்டேன். இதுக்கெல்லாம் காரணகர்த்தா….. “ மீண்டும் தயங்கினான் கிருஷ்ணன். “அப்புறம்?” என்றார் அக்ரூரர். “அப்புறம் என்ன அந்தக் காக்ஷி சிறிது நேரத்திலேயே மறைந்து போனது.” என்றான் கண்ணன். “அவ்வளவு தானா??”
”ஆம், ஆனால் உண்மையில் அவை காக்ஷிகளாக எனக்குத் தெரியவில்லை. உண்மையான என் வாழ்க்கையை நான் வாழ்வதைப் போலவே இருந்தது. மேலும் அந்தச் சமயம் நான் வெறும் வசுதேவக் கிருஷ்ணனாகவோ, அல்லது கோகுலத்து கோவிந்தனாகவோ, விருந்தாவனத்துக் கண்ணனாகவோ இல்லை.”
“பின்??”
“என்னை நானே அந்தப் பர வாசுதேவனாக உணர்ந்தேன் அக்ரூரரே! இவை அனைத்துமே என்னிலிருந்தே தோன்றியதாகவும், என்னிலே அடங்குவதாகவும் உணர்ந்தேன். தர்மத்தின் பிறப்பிடமும், இருப்பிடமும், அடங்குமிடமும் நானே என உணர்ந்தேன்.” அக்ரூரர் இப்போது தன்னையும் அறியாமல் மரியாதை கலந்த பக்தியோடு, கண்ணனிடம் மிகவும் மெதுவாய்க் கிசுகிசுப்பான குரலில், “ பின்னர்?” என மீண்டும் கேட்டார். ‘நான் திரும்ப விருந்தாவனம் வந்தேன். எல்லாமே மாறுபட்டுத் தெரிந்தது எனக்கு. என் கோகுலத்து உறவுகள் அனைத்துமே என்னுள் அடங்கினவர்களாகவும், அவர்களின் செயலுக்கும், சொல்லுக்கும் நானே காரணகர்த்தா எனவும் தெரிந்து கொண்டேன். அவர்களை சாதாரண உறவு முறையுள்ளவர்களாக என்னால் பார்க்கமுடியவில்லை. அவர்களை விட நான் எவ்வளவோ பெரிய மனிதன் என்ற உணர்வு என்னை அறியாமல் ஏற்பட்டது. நீ இந்த விருந்தாவனத்து மக்களோடு வாழமட்டும் பிறக்கவில்லை என என் காதுகளில் எதுவோ வந்து சொல்லிக் கொண்டே இருந்தது. கர்காசாரியாரும் அதை உறுதி செய்தார். கம்சனின் அழிவு என் மூலம் தான் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் இவை அனைத்துமே என்னுடைய பிரமையோ என்ற எண்ணமும் என்னை விட்டுப் போகவில்லை. ஆகவே நான் காத்திருந்தேன்.”
“எதற்காக, மகனே, எதற்குக் காத்திருந்தாய்?” அக்ரூரர் கேட்டார். “நான் எதுவும் செய்யக் கூடியவன் என்பது எனக்கு உறுதி பட்டு விட்டது எனினும் அதற்கு ஒரு அடையாளம், அல்லது குறிப்பிட்ட சைகை எதுவானும் எனக்குத் தெரியவேண்டும். நான் என்னைப் பற்றி நினைப்பது சரிதான் என்பதை உறுதி செய்யும் ஒரு குறியீடு, அது தெரியவேண்டும் எனக்கு. அப்போது தான் நான் என் வேலைகளில் முன்னேற முடியும்.என் நோக்கமும், நான் பிறந்ததின் அர்த்தமும் சரிவர நிறைவேற்றப் படும். அதை உறுதி செய்யும் விதமாகவே நான் இந்திரவிழாவைப் பயன் படுத்திக் கொண்டேன். அந்த விழாவை இந்திரனுக்காக எடுக்க விடாமல் என் மக்களைச் சமாதானம் செய்து, இந்திரனைக் கண்டு பயந்த அவர்களை கோவர்தன மலைக்கு விழா எடுக்க வைத்தேன். அப்போது எனக்குக் கிடைத்தது அந்த நல்ல சகுனக்குறியீடு. என் வேண்டுதலுக்குக் கட்டுப் பட்டு கோவர்தன மலையானது இரண்டு முழங்களுக்கு மேல் உயர்ந்தது. “
பக்தியோடு பயமும் கலந்தவண்ணம் கண்ணனைப் பார்த்தார் அக்ரூரர். அவருக்கு அப்போது கண்ணனைச் சுற்றி இந்த அகில உலகமும் சுழல்வது கண்களில் காண முடிந்தது. சூரிய, சந்திரர், நக்ஷத்திரங்கள், பூமி, ஆகாயம் எல்லாமே அவனோடு சேர்ந்து சுழல்வது போலவும், கண்ணனின் குரலோ, எல்லையில்லாத, முடிவற்ற அந்தப் பரம்பொருளின் குரல் போலவும் ஆழ்ந்து எங்கோ தூரத்தில் இருந்து கேட்பது போலும் கேட்டது. அக்ரூரர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சங்கு, சக்ரங்களோடு, விண்ணுக்கும், மண்ணுக்குமாய் அந்தக் கிருஷ்ணன் விஸ்வரூபம் எடுத்து நிற்பது போல் உணர்ந்தார். அவரை அறியாமல் அவர் கைகள் கூப்பின.

“வாசுதேவா, அவ்வளவு தான்!’இந்தக் குரலை நான் தூக்கத்தில் கேட்டேனா? விழித்துக் கொண்டே கேட்டேனா??” அக்ரூரருக்கு ஒண்ணுமே புரியலை. “மாமா, அதோ பாருங்கள் ஒரு பெரிய மரமும், அதன் நிழலும். எவ்வளவு பெரிய மரம்?? அதன் நிழல் எப்படிப் படர்ந்திருக்கிறது??யமுனைக்கரையில் இந்த மரமும், அதன் நிழலும் எத்தனை சுகம்?? நாம் இங்கே சற்றே தங்கி இளைப்பாறிச் செல்லலாமா? யமுனையில் குளிக்கவேண்டும்போல் எனக்கு ஆசையாய் உள்ளது.” சிறு குழந்தை போல் குதூகலித்துச் சொன்னான் கிருஷ்ணன். “நீ விரும்பிய வண்ணமே செய்யலாம், குழந்தாய்!” என்றார் அக்ரூரர். பலராமன் தான் ரதத்திலேயே தூங்கப் போவதாகவும், குளிக்க வரவில்லை என்றும் சொல்லிவிட்டு, கம்சனை எதிர்கொள்ளும் அளவுக்கு பலத்தைச் சேகரித்துக் கொள்ளப் போவதாயும் சொன்னான். கண்ணனும் அதை ஆமோதித்தான். அக்ரூரர் யமுனையில் இறங்கிக் குளிக்க ஆரம்பித்தார். என்ன இது?? அவரோடு குளிப்பது அந்த வாசுதேவனோ அல்லவோ?? கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தார் அக்ரூரர். மீண்டும் மீண்டும் அவருக்குத் தன்னுடன் குளிப்பது அந்தப் பரவாசுதேவனாகவே தெரிந்தது. அவனோடு சேர்ந்த அனைத்து மனிதர்களும், அவர்களில் கிருஷ்ணனும் தெரிகின்றானே?? கடவுளே என்ன இது? நான் பைத்தியம் ஆகிவிட்டேனா? மீண்டும் தலையை உலுக்கிக் கொண்டு பார்த்தார் அக்ரூரர். கிருஷ்ணன் நீராடிக் கொண்டிருந்தான். அவரைப் பார்த்துச் சிரித்தான். கடவுளே இந்தச் சிரிப்பு??? உன்னுடைய விதியே என் கையில் என்று என்னைப் பார்த்துச் சொல்லுகிறதே!
அட்டகாசமாக கொண்டு போறிங்க தலைவி ;))
ReplyDeleteநன்றாக உள்ளது கண்ணனின் தரிசனக் காட்சி, தங்கள் விவரிக்கும் விதமும் அருமை. அவர் ஒவ்வேர் முறை நீரில் மூழ்கும்போது எல்லாம் தோன்றியதாம் அதுக்காக அவர் பலமுறை குளித்தாரம். மீண்டும் மீண்டும் அவர் குளித்த சம்பவத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள். நன்றி.
ReplyDelete