இன்னமும் யாருக்கும் வாய் திறந்து பேசமுடியவில்லை. சும்மாத் தலையை மட்டுமே ஆட்டினார்கள். கம்சன் மேலும் தநுர் யாகத்தில் இடம் பெறப் போகும் வில்லின் சிறப்பை வர்ணித்தான். அந்தவில்லை யாராலும் தனியாய்த் தூக்கமுடியாது எனவும், சில மனிதர்களால் சேர்ந்தே தூக்கமுடியும் எனவும், யாராலும் வளைத்து நாண் ஏற்றி, அம்பைச் செலுத்த முடியாது எனவும் கூறினான். மேலும் மல்யுத்தப் போட்டியில் பிரசித்தி பெற்ற மல்லன் ஆன சாணூரனும், முஸ்திகனும் தயார் செய்யப் பட்டு வருவதாயும், அவர்களை வெல்ல இனிமேல் தான் யாரேனும் பிறக்கவேண்டும் எனவும் பெருமையுடன் கூறினான். அக்ரூரர் மெளனத்தை உடைத்துக் கொண்டு கம்சனைப் பாராட்டும் விதமாய்ப் பேச ஆரம்பித்தார். “யாதவத் தலைவர்கள் எவரும் தங்கள் கடமையில் இருந்தும், தர்மத்தில் இருந்தும் பின்வாங்க மாட்டார்கள்” என்று சொல்ல ஆரம்பித்த அக்ரூரரை இடைமறித்த கம்சன், அது தான் அறிந்ததே என்றான். அக்ரூரர் மேலும் கைகூப்பிக் கம்சனை வணங்கிய வண்ணம் பேசினார்: “ இளவரசே, இந்த அரிய சந்தர்ப்பத்தில் நம் மதிப்புக்குரிய மன்னரான உக்ரசேனரே நேரில் வந்திருந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுக்கவேண்டும் என அனைத்து யாதவத் தலைவர்கள் சார்பிலும் கேட்டுக் கொள்கின்றேன்.” என்றார்.
மன்னனையும் பார்த்து, “ நான் சொல்வது சரிதானே அரசே, தாங்கள் வருவீர்கள் அல்லவா?” என்று கேட்டார் அக்ரூரர்.
செய்வதறியாது தவித்த உக்ரசேனர் அக்ரூரரின் இந்த வேண்டுகோளினால் தனக்கு ஏற்படப் போகும் விளைவை முன்கூட்டியே அறிந்து கொண்டு தவித்தார். கம்சன் ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டே, “ஏன் இல்லை, மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய என் தந்தையும் கட்டாயமாய் வருவார். அவர் நம்முடைய தலைவர் அல்லவோ?” கம்சன் குரலில் மரியாதையோ, மதிப்போ காணப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். அங்கே கனத்த மெளனம் நிலவியது. கம்சன் வாயிலை நோக்க அங்கே இருந்த மகத இளவரசன் உடனே அறையை விட்டு வெளியேறினான். கண் இமைக்கும் நேரத்தில் கம்சனுக்குப் பாதுகாப்பாய் மகத நாட்டு வீரர்கள் அவனைச் சூழ்ந்து நின்று கொள்ள, ப்ரத்யோதாவின் பின்னேயும் சில வீரர்கள் நின்றனர். மகத இளவரசன் கம்சனின் பின்னே நின்றுகொண்டான். கிழவன் பஹூகாவிற்குப் பொறுக்க முடியவில்லை.
"நம்முடைய நாட்டு விஷயங்களைப் பற்றிப் பேசும் இந்த ரகசியக் கூட்டத்திற்கு வேற்று நாட்டு வீரர்களும், இளவரசனும் எதற்கு?” எனக் கடுமையாகக் கம்சனைப் பார்த்துக் கேட்டான்.
கம்சனோ அகந்தையுடன் சிரித்தான். “இந்தத் திறமையான வீரர்களின் துணையாலேயே நான் பல வெற்றிகளைக் கண்டேன். இந்தக் கொண்டாட்டத்தில் பங்கு கொள்ளவே இவர்கள் இங்கே வந்திருக்கின்றனர். அமருங்கள் தயவு செய்து.” என்றான். “அனைவரையும் சந்தியுங்கள், இவன் வ்ருத்ரிக்னன், மிகவும் திறன் வாய்ந்த படைவீரன். பனிரண்டு வருஷங்களாய் என்னுடன் இருக்கிறான்.” என்று மேலும் கூறினான்.
“நாங்கள் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அக்ரூரர் கம்சனைப் பார்த்துக் கேட்டார்.
“எதுவுமில்லை, இளவரசன் வசுதேவனைப் பற்றிய ஒரு விஷயம் தவிர வேறு எதுவுமில்லை.” கம்சன் மீண்டும் அகந்தைச் சிரிப்புச் சிரித்தான்.
“என்னைப் பற்றியா?” வசுதேவர் பயத்தோடு கேட்டார்.
கடினமான குரலில் கம்சன், “ஆம், உனக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் என்னிடம் கொடுக்கவேண்டும் எனச் சொல்லி இருந்தேனே உனக்கு? நினைவிருக்கிறதா? தருவதாய் நீயும் வாக்களித்தாய்? நினைவில் உள்ளதா? நான் உன்னை நம்பினேன், உன் வாக்குறுதியை நம்பினேன். நீ சொன்ன சொல்லைக் காப்பாற்றுவாய் என நினைத்தேன். ஆனால் நீயோ பொய் சொல்லிவிட்டாய். உனக்குப் பிறந்த எட்டாவது குழந்தையைத் திருட்டுத் தனமாய் கோகுலத்துக்கு மாட்டிடையத் தலைவன் ஆன நந்தனிடம் அனுப்பிவிட்டாய். எனக்குப் புரிந்துவிட்டது வசுதேவா, உன்னுடைய எட்டாவது மகன், அந்த மாட்டிடையன் நந்தனின் மகன் என்ற பெயரில் விருந்தாவனத்தில் வளர்ந்து வருகிறான். இப்படி ஒரு நம்பிக்கைத் துரோகம் நீ எனக்குச் செய்யலாமா? இது தான் நட்பின் இலக்கணமா? ஒரு க்ஷத்திரியனும், சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவனும் ஆனவனுக்கு இதுதான் தர்மமா? “
கம்சனின் அடுக்கடுக்கான கேள்விகளாலும் அவன் கடுமையான தொனியாலும் அந்த சபையில் யாருக்குமே எதுவுமே பேசத் தோன்றவில்லை. ஆனாலும் அவர்களுக்கு இது முற்றிலும் புதிய செய்தியே. உள்ளூரப் பன்னீர் தெளித்தாற்போல மனதுக்குள்ளே மகிழ்ச்சி அனைவருக்கும் வந்தது. ஆஹா, வசுதேவனின் எட்டாவது குழந்தை உயிரோடு இருக்கிறதா? நந்தனிடம் வளர்கின்றானா? அப்பாடி, ஒருவழியாய்க் கம்சனை அழிக்கப் போகின்றவன் உயிருடன் இருக்கின்றான். நாரதமுனிவரின் தீர்க்க தரிசனம் பொய்யாகவில்லை. வசுதேவரோ கோபத்துடன் புருவங்கள் நெரிய ஏதோ பதில் கொடுக்கப் போகும்போது வயதான அந்தகத் தலைவன் ஆன பஹூகா, அவரை அடக்கி, கம்சனைப் பார்த்து, “உக்ரசேனரின் மகன் ஆன நீ க்ஷத்திரிய தர்மத்தைப் பற்றி எங்களுக்குப் போதிக்கிறாய்? உனக்கு என்ன தகுதி அதற்கு?” என்று கேட்டார்.
கம்சனுக்கு ஆச்சரியமாய்ப் போய்விட்டது. பஹூகா இப்படிப் பளிச்சென்று பேசுவான், கேள்விகள் கேட்பான் என அவன் எதிர்பார்க்கவில்லைதான். மேலும் பஹூகா போன்ற பெரியவர்கள் பேசும்போது மற்ற யாதவத் தலைவர்கள் என்னதான் பெரிய பதவிகளில் இருந்தாலும் மரியாதை நிமித்தம் திரும்பப் பேசவும் மாட்டார்கள். ஆனால் கம்சன் அப்படியா? தன்னைத் தானே சக்கரவர்த்தி என அறிவித்துக் கொள்பவன் ஆயிற்றே அவன்? ஆகவே அவன் பஹூகாவை இடைமறித்து, " ஏன் கூடாது?” என்று கேட்டான்.
பஹூகா சொன்னான்:” கேள், உக்ரசேனனின் மகனே, கேள், உன் தந்தை திடகாத்திரமாகவும், தெம்பாகவும் இருக்கும்போது அவரைச் சிறையில் அடைத்துவிட்டு நீ அரியணை ஏறியது க்ஷத்திரிய தர்மத்தைச் சேர்ந்ததா? உன் சித்தப்பன் மகளும், உனக்குத் தங்கை முறை ஆனவளும் ஆன தேவகியையும், வசுதேவனையும் அவர்கள் திருமண நாளன்றே சிறையில் அடைத்தாயே, அது எந்த க்ஷத்திரிய தர்மத்தைச் சேர்ந்தது? ம்ம்ம்ம்… எதற்குச் சிறையில் அடைத்தாய்? உன் தங்கையின் எட்டுக் குழந்தைகளையும் கொல்வதற்கு, அதுவும் பிறந்ததுமே கொல்லவேண்டியே சிறையில் அடைத்தாய்! கேள், கம்சா, நான் என்ன இன்னும் சில வருஷங்கள் உயிருடன் இருந்தால் அதிகம். என்றாலும் நான் சிறுவனாய் இருந்தபோதில் இருந்தே மரணத்துக்குப் பயந்ததில்லை. மரணத்தின் கடவுள் எனச் சொல்லப் படும் யமனைக் கண்டு அஞ்சியதில்லை. ஆனால் நீ???? எத்தனை வருஷங்களாக உன்னிடம் சொல்லக் காத்துக் கொண்டிருந்தேன் இந்த விஷயங்களை என்பதை நீ அறிவாயா? பொறுமையாய் கேட்டுக் கொள்! நீ செய்த இத்தகைய கொடுமைகளை இதுவரையிலும் யாருமே செய்ததில்லை! யாதவ குலத்துக்கே நீ பெரும் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டாய். “
பஹூகா சற்று மூச்சு வாங்க அவகாசம் எடுத்துக் கொண்டான். பின்னர் மேலும் தொடர்ந்தான். “வசுதேவனின் எட்டாவது குழந்தையைப் பற்றி நீ ஏன் இவ்வளவு ஏன் கவலைப்படுகிறாய்??அவன் எங்கே இருந்தால் அல்லது எப்படி இருந்தால் உனக்கு என்ன? ஏற்கெனவே வசுதேவனுக்கு உன்னால் ஏற்பட்ட தொல்லைகள் போதுமானது. மேன் மேலும் நீ அவனுக்குத் தொல்லை கொடுக்க நான் அநுமதிக்கமாட்டேன்." கோபம் மீதூறிய கிழவன் கண்களில் சிவப்பேறியது.
கம்சன் கோபத்தில் தன்னை இழந்தான். தன்னன மீறி, தன் வார்த்தையை மீறி யாதவகுலத்தில் ஒருவன் பேசுவதா? அதைத் தான் அநுமதிப்பதா? தன்னை அறியாமல் அவன் கைகள் வாளை எடுக்கச் சென்றன, அவன் கண்கள் ப்ரத்யோதாவையும் வ்ருதிக்னனையும் ஒரு நிமிஷம் பார்த்து ஏதோ சைகையில் பேசின. அக்ரூரருக்கு உள்ள நிலைமை நன்கு புரிந்தது. ப்ரத்யோதாவை அவரும் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் தன் மென்மையான அதே சமயம் உறுதியான குரலில் பேச ஆரம்பித்தார். “இளவரசே, உன் கோபம் உன் விவேகத்தை வென்றுவிட இடம் கொடுக்காதே. கோபம் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒப்பானது. உனக்கு என்ன வசுதேவனின் எட்டாம் குழந்தையைப் பற்றித் தெரியவேண்டும், அவ்வளவு தானே?”
ஆம்” கம்சன் மறுமொழி சொன்னான்.
அக்ரூரர் பேச ஆரம்பித்தார். “தேவகியின் எட்டாவது குழந்தை ஒரு ஆண்குழந்தை. அவன் விருந்தாவனத்தில் இருக்கிறானா என்பது உனக்குத் தெரியவேண்டும் அல்லவா? கேள், ஆம் அவன் விருந்தாவனத்தில் தான் வளர்ந்து வருகிறான். உன்னை யாராவது இவ்விஷயத்தில் ஏமாற்றி இருந்தார்கள் என நீ எண்ணினால் அது நான் மட்டுமே. வேறு யாரும் இல்லை. நான் தான் நந்தனின் பெண் குழந்தையையும், தேவகியின் ஆண் குழந்தையையும் இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்தேன்."
“என்ன, நீங்கள் ஏற்பாடு செய்தீர்களா? ஏன், எதற்கு?” கம்சன் கேட்டான்.
அவன் எவ்வளவு முயன்றும் கோபத்தை அவனால் மறைக்கமுடியவில்லை. அக்ரூரர் சொன்னார், “நீ தேவகியின் அனைத்துக் குழந்தைகளையும் கொன்று கொண்டிருந்தாய், உன்னுடைய இந்த மூர்க்கத் தனமான, மற்றும் பாவகரமான காரியத்தில் இருந்து உன்னைக் காக்கவேண்டியே இவ்விதம் செய்தேன்." சற்றே ஏளனம் கலந்த புன்னகை அக்ரூரரிடம் தென்பட்டது. “உன்னை உன்னிடமிருந்தே காக்கவேண்டியே செய்தேன்.”
கம்சன் கேட்டான், "ஆஹா! அதுவும் அப்படியா?? எனில், நந்தனின் மகன் கிருஷ்ணன் தான் தேவகியின் எட்டாவது குழந்தை என்பதும் உண்மையா?”
“ஆம்”
கம்சனுக்குள்ளே அவனையும் அறியாமல் ஒரு பீதி பரவியது. முதுகுத் தண்டு சில்லிட்டது. கடைசியில் அவனை அழிக்கப் போகின்றவன் பிறந்து வளர்ந்து காத்திருக்கிறான். எந்நேரமும் வந்துவிடுவான். எப்படி, என்று, எந்த ஆயுதத்தால் கொல்லப் போகின்றான்? உண்மையாகவே கொன்றுவிடுவானோ? அல்லது எல்லாரும் மிகைப்படச் சிந்திக்கின்றார்களா? என்ன இருந்தாலும் நமக்கும் ஒரு பகைவன் இருக்கிறான் என்றால் அவனை அழித்தால் ஒழிய நிம்மதி இல்லை. மிகவும் சிரமப் பட்டு தன் கலக்கத்தை மறைத்துக் கொண்டான் கம்சன். அக்ரூரரைப் பார்த்து சிரித்தான். “அக்ரூரா, நான் என்ன அவ்வளவு மோசமானவனா என்ன?? அதெல்லாம் கடந்த காலக் கதையப்பா. நான் அனைத்தையும் இப்போது மறந்தே விட்டேன். நீயும் மறந்துவிடு நண்பா. சரி, அதைவிடு, தேவகியின் பிள்ளை உயிருடன் இருக்கிறான் என்றால் நான் அவனை இங்கே வந்து இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்.”
“ஏன் அவன் இங்கே வரவேண்டும் என விரும்புகிறாய்?” அக்ரூரர் கேட்டார்.
“ அவன் வரட்டும், வந்து இந்த தநுர் யாகத்தில் கலந்து கொள்ளட்டும். அவனுடைய திறமையையும், சாதனைகளையும் பற்றிக் கதை, கதையாய்ச் சொல்லுகின்றனர். நான் அனைத்தையும் கேட்டிருக்கிறேன். என்னுடைய தநுர்யாக வில்லை அவனால் எடுக்கவாவது முடிகிறதா என நான் பார்க்கவேண்டும். மல்யுத்தம் தெரியுமாமே அவனுக்கு? இங்கே மல்யுத்தத்திலும் பங்கு பெறட்டும் அவனும். ம்ம்ம்ம்ம்ம் அனைத்து மக்களும் சொல்லுவது போல் அவன் அவ்வளவு சிறந்தவனாகவும், அதிசயமானவனாயும் இருந்தால் இந்த மல்யுத்தத்தில் ஜெயிப்பதோ, தநுர்யாகத்தின் வில்லைக் கையாளுவதோ அவனுக்குச் சிரமமாய் இருக்காது.”
“இதில் ஏதோ சூது இருக்கிறது என நினைக்கிறேன் இளவரசே!” என்று உடனேயே பஹூகா சொல்ல, “என்ன சூது? எதுவும் இல்லை!” எனக் கம்சன் மறுத்தான். “நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். நீங்கள் தந்தையே?” எனத் தன் தந்தை உக்ரசேனரைப் பார்த்துக் கேட்டான் கம்சன். மற்றத் தலைவர்களுக்குக் கம்சனின் இந்த அசாதாரணமான நன்னடத்தையில் சந்தேகமாகவே இருந்தாலும் அக்ரூரரின் செயல்களிலும் சொற்களிலும், அவர் கம்சனைக் கையாளும் விதத்திலும் நம்பிக்கை வைத்துப் பேசாமல் இருந்தனர். “அந்த சர்வேஸ்வரன் அனைவருக்கும் நன்மையே செய்வான்.” என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டான் உக்ரசேனன்.
அக்ரூரரைப் பார்த்துக் கம்சன், “ அக்ரூரரே, நீ எனக்கு ஒரு உதவி செய்யவேண்டுமே, அந்தக் கிருஷ்ணனை இங்கே அழைத்துவா, அப்படியே அந்த ரோஹிணிக்கு ஒரு மகன் இருக்கிறானாமே, பலராமன் என்ற பெயரில். அவனும் வரட்டும். அவனும் கிருஷ்ணனும் இணை பிரியாமல் இருப்பார்களாமே? இருவரும் வந்து தநுர்யாகத்தில் பங்கெடுக்கட்டும். அப்படியே நந்தனையும் அவனுடைய வீரர்களையும் வந்து யாகத்தில் பங்கு கொள்ளச் சொல். ஆ, மறந்தே விட்டேனே, இந்த வருஷக் கப்பம் நந்தன் இன்னும் கொடுக்கவில்லை. அதையும் நினைவூட்டு. என்ன வசுதேவா, நான் சொல்வது சரிதானே?”
அக்ரூரர் இடைமறித்து, “இளவரசே, நான் நேரே விருந்தாவனம் சென்று, அவர்கள் இருவரையும் இங்கே அழைத்து வருகிறேன்.” என்றார்.
மிக அருமையாக உள்ளது தங்களின் கதை சொல்லும் பாங்கு. நல்ல நடை, முடிக்கும் போது வருத்தமாக உள்ளது, அடுத்து எப்போது வரும் என்று. நன்றாக எழுதியுள்ளீர்கள். அட அடா அதுக்குள்ள முடித்து விட்டிர்களே என எண்ணத் தோன்றுகின்றது.
ReplyDeleteநன்றி பித்தரே, தங்கள் அருமையான வாக்கு எனக்கு மகிழ்வாய் உள்ளது.
ReplyDelete