இப்போக் கொஞ்சம் அவசரமாய் நாம கம்சனின் அரண்மனைக்குள்ளே போகணும். ஒரு நடக்கக் கூடாத விபரீதம் நடக்கப் போகிறது, அதுவும் கண்ணன் வரும் முன்னால், அவனுக்கு எச்சரிக்கும் விதமாயோ?? என்னனு தெரியலை, போய்ப் பார்த்துடுவோமே! கண்ணனும், அக்ரூரரும் பலராமனோடு நுழைவதற்கு முன்னாலே நாம போய்ப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம். வாங்க, வாங்க சீக்கிரம் அதுக்குள்ளே கண்ணன் வந்துடப் போறான். கம்சனின் அரண்மனையில் எட்டிப் பார்ப்போமா???
இதோ கம்சன், அவன் அரண்மனையில். என்னவோ தீவிர சிந்தனையில் இருக்கிறான். ஆனால் இது என்ன?? ஏதோ தவிப்பில் இருப்பவனாய்க் காணப்படுகிறானோ? ஆமாம், ஆமாம், கம்சனுக்குள்ளே ஏதோ இனம் புரியாத தவிப்பு. சங்கடம். மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தனின் மாப்பிள்ளையான கம்சனுக்கு, என்ன சங்கடம்?? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவன் ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறான். அண்டை நாட்டு அரசர்களெல்லாம் கம்சன் தங்கள் நாட்டின் மீது படை எடுக்காமல் இருக்கணுமே என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பயந்து நடுங்குகின்றனர். மகதநாட்டுப் படை வீரர்களின் தேர்ந்த திறமைசாலிகளான வீரர்கள் மூவாயிரம் பேருக்கும் மேலே கம்சனின் அரண்மனையைக் காவல் காக்கின்றார்கள். இன்னும் என்ன?? அவன் சார்ந்த அந்தக வம்சத்தின் அனைத்துத் தலைவர்களும், ஒரு சிலரைத் தவிர, ஹும், அவங்க எல்லாம் தேவகிக்கு ஏதோ உறவு முறை, அதான், மற்ற அனைத்துத் தலைவர்களும் கம்சனுக்கு விஸ்வாசமானவர்களாகவே இருக்கின்றனர். ஏன், கொஞ்சம் அசட்டுத் தனமாக நடக்கும் தன் தளபதியான ப்ரத்யோதா கூட இதுவரை விசுவாசமானவனாகவே இருக்கிறான்.
யாதவர்களின் பிரிவுகளை மேலும் பிரித்தாயிற்று. இப்போது அவர்களுக்குள் ஒற்றுமை என்பதே இல்லை. அவர்களுக்கு ஆலோசனைகள் கூறும் பிராமணர்களோ, இப்போது அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றனர். அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. நான் யார் என்பதைக் காட்டும்படியாக வலுவான ஒரு அடி கொடுத்தால் போதும், அனைவரும் நிரந்தரமாய் அடங்கிக் கிடப்பார்கள். என்ன செய்யலாம்???? ம்ஹும், ம்ஹும், என்னதான் இது எல்லாம் எனக்கு ஆறுதலையும், சமாதானத்தையும் கொடுத்தாலும், என்னை உறுத்தும் விஷயம் ஒன்று உள்ளதே. இந்த தேவகியின் எட்டாவது குழந்தை உயிரோடு வளர்ந்து பதினாறு வயது பாலகனாக இருக்கிறானே! ம்ம்ம்ம்ம்??? இங்கேயும் வரப் போகிறான். அவனை அனைவரும் மிகவும் கெட்டிக் காரன் என்றும் சாமர்த்தியசாலி என்றும் எப்படிப் பட்ட மனிதர்களையும் கவர்ந்துவிடுவான் என்றும் சொல்லுகின்றார்கள். ஆனால் என்ன? அவன் ஒரு இடைப்பிள்ளைதானே? ஹாஹாஹா! அவன் ஒரு இடையனால் வளர்க்கப் பட்டவன். ஹாஹா, அவன் ஒரு இடையனே தான்.
கம்சன் தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். ஒரு இடையன் என்னதான் சாமர்த்தியசாலியாய் இருந்தாலும், அவன் என்னதான் மாயாஜாலங்கள் புரிந்தாலும் அதெல்லாம் அந்த விருந்தாவனத்துக்குள்ளே. அவங்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் அதிசயமாய்த் தெரியும். இந்தக் கம்சனுக்கு இல்லை. ஆனால், ஆனால், இந்த வசுதேவரும், தேவகியும், மற்றச் சில யாதவத் தலைவர்களும் அவனை என்னமோ காக்க வந்த தேவன், சாட்சாத் பரந்தாமன் என எண்ணுகின்றனரே? யார் அவன்? அந்தப் பர வாசுதேவனோ??? பரந்தாமன் என அழைக்கப் படும் வாசுதேவனின் அவதாரம் என எண்ணுகின்றனரோ? ஹா, வாசுதேவனாவது? அவதரிப்பதாவது? என்னமோ அந்த நாரதன் பிதற்றினான் என்று இவர்களெல்லாம் கூத்தடிக்கின்றனரோ? ஆனால் அந்த கர்காசாரியான் இதை நம்புகிறான் என்கின்றார்களே? ஹூம், ஹூம், அந்த கர்கன், ஆசாரியனா அவன்? அவனைக் கேட்டால் தனக்கு இது பற்றி எல்லாம் எதுவுமே தெரியாது என்று எண்ணும்படியாக அல்லவோ நடந்து கொள்கின்றான்? அவனுக்குத் தெரியாமலா இருக்கும்? மக்கள் அனைவரும் கர்காசாரியார் அனைத்தும் அறிந்தவர் எனப் பேசிக் கொள்கின்றார்களாமே? யாரை ஏமாற்றுகிறான் அந்தக் கிழப் பிராம்மணன்???
என்ன முயன்றும், அந்தக் கண்ணன் என்னும் கிருஷ்ணன், யாதவகுலத்தைக் காக்கவந்த பரந்தாமன் என்னும் எண்ணத்தை என்னால் மக்களிடமிருந்து போக்க முடியவில்லையே? அனைவரும் அப்படியே அல்லவோ நினைக்கின்றனர்?? ம்ம்ம்ம்ம்?? என்னைச் சுற்றி ஏதேனும் சதிவலை பின்னப் பட்டிருக்கிறதோ? அல்லது இப்போது சதி நடக்கிறதோ? என்னை அறியாமல் நான் அதில் விழுந்துவிட்டேனோ? சேச்சே, அதெல்லாம் இல்லை, என்னை ஒடுக்க யாராலும் முடியாது. அதுசரி, அந்த அக்ரூரன் என்ன சொல்லிக் கண்ணனை மதுராவுக்கு அழைத்து இருப்பான்? இத்தனை நேரம் விருந்தாவனம் போயிருப்பான் அல்லவோ? கண்ணனை நான் அழைத்ததைச் சொல்லி இருப்பானா? என்ன பதில் கிடைத்திருக்கும் அவனுக்கு?ம்ம்ம் எப்படியும் அக்ரூரன் நாளை அவர்களை அழைத்து வந்துவிடுவான். எப்படி இருப்பார்கள் இரு இளைஞர்களும்?? சிறு பையன்கள் தானே! என்ன பயம் அவர்களிடம்??? இரவு முழுதும் தூக்கமின்றிக் கழிந்தது கம்சனுக்கு. அவனால் ஒரு இடத்தில் உட்காரவும் முடியவில்லை, படுக்கவும் முடியவில்லை, நடந்தான், அதுவும் முடியவில்லை. தவித்துக் கொண்டிருந்தான் கம்சன். சற்று யோசித்துவிட்டு தான் மகதத்திலிருந்து திரும்பி வரும்போது கூடவே அழைத்து வந்த நர்த்தகியின் வீட்டுக்குச் சென்று ஆடல், பாடல்களில் மனதைத் திசை திருப்பினான் கம்சன்.
ஆடிக் கொண்டிருந்த அந்த நாட்டியக் காரியும் கம்சனிடம் கேட்ட கேள்வி தான் அவனால் தாங்க முடியவில்லை. அந்த நாட்டியக் காரி கேட்டாள், “ அரசே, தேவகியின் எட்டாவது குழந்தை உயிரோடு இருக்கிறானாமே? நாளை இங்கே வருகிறானாமே? அந்தப் பிள்ளைதான் பரவாசுதேவனின் அம்சமாமே? செயற்கரிய செயல்களை அநாயாசமாய்ச் செய்கின்றானாமே?” இது தான் அவளும் கேட்டாள். கோபம் பொங்கியது கம்சனுக்கு. எந்த நினப்பை மாற்றி வேறு நினைவுகளில் ஆறுதல் தேடி வந்த இடத்திலும் அவன் நினைவா? கோபத்துடன் அந்தப் பெண்ணை அடித்துக் கீழே தள்ளிவிட்டுத் தன் மாளிகையை நோக்கிப் பெருநடை நடந்து சென்றான் கம்சன். ஆஹா, இது தெரிந்த இவளுக்கு அந்தப் பையன் தான் கம்சனைக் கொல்லப் போகிறான் என்ற செய்தியும் அல்லவோ தெரிந்திருக்கும்? என் மாளிகையே அறிந்துள்ளதா இவ்விஷயத்தை? என்ன அவமானம்? என்ன அவமானம்? தன் மாளிகையினுள் நுழைந்த கம்சன் அவசரமாகப் ப்ரத்யோதாவையும் வ்ருதிர்கனனையும் வரச் சொன்னான். இருவரும் வந்தனர். இருவரையும் பார்த்த கம்சன் கோபத்தில் குதித்தான். எப்படித் தெரிந்தது அரண்மனை வாசிகளுக்கு? தேவகியின் எட்டாவது பிள்ளை விருந்தாவனத்தில் இருப்பதும், நாளை வருகிறான் என்பதும் எப்படி அறிந்தனர் அனைவரும்?? ப்ரத்யோதா தயக்கத்துடன் சொன்னான்:”இளவரசே, தாங்களே யாதவகுலத் தலைவர்கள் அனைவருடனும் ஏற்பட்ட சந்திப்பின்போது அனைவர் முன்பும் அக்ரூரரை அங்கே சென்று கண்ணனை அழைத்துவரும்படிப் பணித்தீர்கள். தங்கள் திருவாயாலேயே அனைவரும் கேட்க நேர்ந்தது. தாங்கள் சொன்ன இந்த விஷயம் அரண்மனைக்குள் பரவாமல் எப்படி இருக்கும்?” ப்ரத்யோதா தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணமே பதில் தந்தான்.
"சரி, சரி, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் என்ன ஆனாலும் சரி, அந்தக் கண்ணனை என் அரண்மனைக்குள் நுழையவே விடாதே. அவன் என் எதிரிலேயே வரக்கூடாது. நினைவிருக்கட்டும். அதற்கு முன்னாலேயே அவன் மதுராவினுள் நுழைந்ததுமே அவனை ஒரு வழியா ஒழித்துவிடு. ப்ரத்யோதா, நான் சொல்வது புரிந்ததா? இதனால் என்ன நடந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தநுர்யாகம் செய்யப் போகும் வில்லின் அருகே கூட அவன் வரக்கூடாது. வரவிடக் கூடாது. இது நினைவில் இருக்கட்டும். என்ன, நான் சொல்லுகிறேன், நீ ஏதோ நினைத்துக் கொண்டிருக்கிறாயே? ப்ரத்யோதா சிலநாட்களாக நீ நீயாக இல்லை, ஏதோ மாறிவிட்டாய் என நினைக்கிறேன்."
ப்ரத்யோதா நடுங்கினான். "இல்லை அரசே, இல்லை, அப்படி எல்லாம் இல்லை, தாங்கள் சொன்னபடியே நடக்கும்." என்றான் நடுங்கிய குரலில். மேலும் "நான் நன்றாகவே இருக்கிறேன், எப்போதும்போலவே இருக்கிறேன் அரசே. இந்தக் கொண்டாட்டங்களின் விளைவாக ஏற்பட்ட அதிகப் படி வேலைப்பளுவின் காரணத்தினால் கொஞ்சம் அசதி! எனக்கும் வயதாகிவிட்டதல்லவா?" என்றான் ப்ரத்யோதா.
"சரி, சரி, ப்ரத்யோதா, ஒற்றர்களை நியமித்து அனைத்து யாதவத் தலைவர்களையும் கண்காணிக்கச் சொல்லு. ப்ரத்யோதா! உன் சகோதர்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் தானே? அதையும் உறுதி செய்து கொள். வ்ருதிர்கனா, ஒவ்வொரு யாதவத் தலைவனின் ஒவ்வொரு சிறு அசைவையும் உன் வீரர்களைக் கண்காணிக்கச் சொல். அவங்க யாரையும் நம்பமுடியாது. திடீர்னு மாறிடுவாங்க. எல்லாருக்கும் நான் செத்து ஒழியணும்னு ஒரே ஆசை! ஹாஹாஹாஹாஹா!” கம்சன் பெருங்குரலெடுத்துச் சிரித்தான். “ஆனால் நான் தைரியமாகவும், தெம்பாகவும், பூரண ஆரோக்கியத்துடனும் இருக்கிறேன். நன்றாய் வாழ்ந்து காட்டி அவர்கள் எண்ணத்தை முறியடிக்கிறேன்.” என்றான் கம்சன். அப்போது ஒரு சேவகன் அங்கே வந்து பஹூகா, அந்தகத் தலைவர்களின் மூத்தவன் தொண்ணூறு வயது நிரம்பியவன், ப்ரத்யோதாவின் சிறிய தாத்தா அங்கே வந்திருப்பதாயும், ஏதோ முக்கியவிஷயம் பேசவேண்டும் என்று சொன்னதாகவும் சொன்னான். இந்த வேளையில் இந்தக்கிழவன் இங்கே, எதற்கு வருகிறான்? புருவங்கள் நெரியக் கம்சன் யோசித்தான்.
மிகவும் அருமை. கம்சனின் படைத்தலைவர்கள் பெயர் எல்லாம் தங்களின் பதிவின் மூலமாகத்தான் அறிகின்றேன். நன்றி. கம்சனின் மாளிகைக்கு அழைத்துச் சென்ற பாங்கு அருமை.
ReplyDelete