எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 14, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம் - 3

பூ மலருவதைக் கண்டிருக்கிறீர்களா? அதுவும் வாசமுள்ள மலர்கள்?? மல்லிகையோ, ரோஜாவோ, முல்லையோ, ஜாதியோ எதுவானாலும் முதலில் காம்பின் அருகே உள்ள ஒரு இதழ் மட்டுமே வெளிவரும். நறுமணத்தை உள்ளே சுமந்து கொண்டு பூக்கள் தவிக்கும் போல் தோன்றும். அந்த நறுமணமும் எப்போ வெளியே வருவோம்னு காத்திருக்குமோ? அதுக்கப்புறம் சிறிது நேரத்தில் எப்போ நடந்ததுனு நம்மால் கண்டு பிடிக்கவே முடியாத ஒரு தருணத்தில் அந்தப் பூவின் நறுமணத்தைத் தன்னுள்ளே தாங்கி இருந்தது முடியாமல் போக அதை வெளிப்படுத்தும் தருணம் வந்துவிட்டதோ என்னும்படியாக வாசத்தை எங்கும் பரப்பிக் கொண்டு அனைத்து இதழ்களும் மலர்ந்து சிரித்துக் கொண்டிருக்கும். எங்கும் நறுமணமும் பரவி இருக்கும்.

அது போல் கண்ணனின் காதலை வேண்டி தன் இதயக் கதவைச் சற்றே திறந்து வைத்திருந்த ராதை கண்ணன் உள்ளே நுழைந்துவிட்டான் என்பது தெரிந்ததும், அந்த அன்பின் ஆழத்தையும், அதன் வேகத்தையும் தாங்க முடியாமல் திணறினாள். ஆனால் இப்போதோ பிரிவின் சமயம் வந்துவிட்டதால் அந்த அன்புக்கு அணை போடவும் விரும்பினாள். முடிந்ததா அவளால்? பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடும் அவளோட அன்புக்கு அணை ஏது? அதன் வேகத்தைத் தாங்க முடியாமல் கண்ணன் அல்லவோ திணறினான்? அவள் இதயத்தின் உள்ளே சென்றவன் அங்கேயே நிரந்தரமாக ஆசனம் அமைத்தும் தங்கிவிட்டான் அன்றோ? இப்போது ராதையின் வார்த்தைகள் அனைத்தும் அந்த அன்பு வெள்ளத்தின் வேகமாய் வெளிவந்தன. இதுவரையில் கண்ணன் அறியாத இந்த ராதை, தன் வார்த்தைகளின் பிரயோகத்தால் இப்போது அவனைத் தன் அன்பு வெள்ளத்தில் மூழ்க வைத்துத் திக்குமுக்காட வைத்தாள். ராதையின் அன்பு எங்கும் பரவியது. இந்தச் சமயத்தை விட்டால் இனி ஒரு சமயம் வாய்க்காது என எண்ணினாளோ ராதை???

நிலத்தையே குனிந்து பார்த்துக் கொண்டு ஏதோ தேடுவது போல் இருந்த ராதை, கொஞ்சம் யோசனையுடனேயே கண்ணன் சொல்லுவதை மறுத்தாள். “ இல்லை கானா, நான் ஒரு இடைப்பெண். மிகவும் ஏழை! நான் உனக்குச் சமமாக ஒரு இளவரசியாக இருக்கச் சற்றும் தகுதியில்லாதவள். நீ மதுரா சென்றதும், உன்னை இந்த நாட்டின் பேரழகிகளான இளவரசிகளும், அரசகுமாரிகளும் மணக்கவும், உன்னை என்றும் வணங்கி உன்னுடன் இருக்கவும் போட்டி போடுவார்கள். மணிமகுடங்களை அளிப்பார்கள். அவர்களுக்கு நடுவில் இந்த ஏழையும் அசிங்கம் பிடிச்சவளும் ஆன கிராமத்து இடைப்பெண் எங்கனம் பொருந்தி வருவாள்?”

“ராதை, என் அருமை ராதை! நீ அந்த மணிமகுடத்தின் ரத்தினம் போல் ஜொலிப்பாய்!”

“இல்லை, கானா இல்லை! “ ராதை கொஞ்சம் யோசனையுடனும், கொஞ்சம் ஆவலுடனும், ஏதோ ஒரு காட்சியைப் பார்ப்பது போலவும் நதி ஓடுவதைப் பார்த்துக் கொண்டே பேசினாள்.” நீ அங்கே சென்றதும் கிரீடம் அணிந்து கொண்டு அரச உடை தரித்துக் கொண்டு காட்சி அளிப்பாய். போர்ப் பயிற்சி அளிக்கப் பட்டு ஆயுதங்களும் தரித்துக் கொண்டு யுத்தத்துக்கும் செல்லுவாய் அன்றோ? பெரிய ராஜாக்களோடும், சக்கரவர்த்திகளோடும், நல்லவர்களாய் இருக்கும் அரசர்களோடும், வீராதி வீரர்களோடும் பழகக் கூடியதொரு சந்தர்ப்பம் உனக்குக் காத்திருக்கிறது. யுத்தகளத்தில், அனைவரோடும் கூடி, சண்டை செய்யும் சமயம்………. இல்லை, கானா, இல்லை, நான் உனக்குப் பெரும் சுமையாக ஆகிவிடுவேன். நான் உன் இதயத்துடிப்பின் இனிமையான சங்கீதமாக இல்லாமல் அது வேகமாய்த் துடித்துத் தன் நிராசையை வெளிக்காட்டக் காரணமாக அமைந்துவிடுவேனோ? உன்னுடன் சரிபாதியாக இருக்க மாட்டேன், மாறாக நான் மட்டும் தனித்துத் தெரிவேனோ? உன்னுடன் இங்கே ராஸ் ஆடும் தோழியாக இருக்காமல், நீ போர்க்களம் செல்லும்போது செய்வதறியாமல் திகைப்பேனோ?”

கண்ணன் வாய்மூடி மெளனமாய் இருந்தான். “மன்னித்துக்கொள் கானா, நான் உனக்கு மேன்மேலும் துன்பத்தையும், வலியையுமே தருகிறேனோ?” திடீரென ராதையின் குரலில் ஓர் உறுதியும், அமைதியும், நிச்சயத் தன்மையும் தென்பட்டது. “நான் உன்னுடன் மதுரா வரமுடியாது கானா. நான் அதை நன்கு அறிந்து கொண்டுவிட்டேன். என் கானா, என் கானா, “ ராதையின் குரல் தழுதழுத்தது. “என் கானா, அவன் வாழ்வது என் கண்களில், நான் பார்ப்பது அவன் கண்களாலே, நான் மூச்சு விடுவது அவன் மூச்சே, நான் உண்பது, உடுத்துவது, உறங்குவது அனைத்தும் அவனுக்காகவே. அவன் எப்படி இருப்பான் தெரியுமா? அவன் தலையில் மயில் பீலியைச் சூடிக் கொண்டு, இடுப்பில் ஒரு வஸ்திரத்தை உடுத்திக் கொண்டு, மாடுகளை மேய்க்கும் குச்சியைக் கையில் வைத்த வண்ணம் இடுப்பில் புல்லாங்குழலைச் சொருகிக் கொண்டு, நிரந்தரமான ஒரு புன்னகை முகத்தில் ஒளிவிட, புல்லாங்குழலை எடுத்து இசைத்துக் கொண்டு, என்னை, “ராதே, அடி ராதே!” என அழைத்தவண்ணம் மாடுகளைக் காட்டுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துப் போவான். எனக்கு அந்தக் கானாவைத் தான் தெரியும் கண்ணா! தலையில் கிரீடம் சூட்டிக் கொண்டு அரச உடை தரித்த கண்ணன் யாரோ? என்னால் அவனை அந்தக் கோலத்தில் பார்க்கவே முடியாதெனத் தோன்றுகிறது. முடியாது கானா, முடியாது, என் கானாவை விட்டு என்னால் பிரிய முடியாது. நீ சொல்லும் மற்றொரு கானாவிடம், அவன் கானாவா? அல்ல! கண்ணனிடம் சொல்லிவிடு! என்னால் மதுராவுக்கு வரமுடியாது.” கண்ணனை அணைத்துக் கொண்ட ராதை சத்தம் போட்டுப் பெருங்குரலில் துடிதுடித்து அழ ஆரம்பித்தாள்.

“கானா, எனக்குத் தெரியும், நீ மீண்டும் விருந்தாவனம் வரவே முடியாது . அப்படியே வந்தாலும், அது என் கானா இல்லை. நான் பார்த்து ஆனந்தித்துக் காதலித்து, இதோ இப்போது சொல்கிறாயே, காந்தர்வ விவாஹம் என. அப்படி என்னை மணந்து கொண்ட கானாவை நான் இனி பார்க்கவே முடியாது. ஒருகாலும் முடியாது. எந்தக் கானாவுக்காக நான் வாழ்ந்தேனோ அவன் இனிமேல் வரமாட்டான். என்னை இங்கேயே இப்படியே இருக்கவிடு கண்ணா!” தூக்கத்தில் பேசுபவள் போலப் பேசினாள் ராதை. வாழ்நாளின் பேச்சுக்களை எல்லாம் அன்று ஒருநாளிலேயே பேசித் தீர்த்துவிட நிச்சயித்துவிட்டாளோ? "கண்ணா!" என அழைத்ததன் மூலம் அவனைத் தூரத்தில் நிறுத்துகிறாளோ?


இன்று முடியாவிட்டால் அப்புறம் சந்தர்ப்பமே வாய்க்காது என்பதைப் புரிந்துகொண்டவள் போல் ராதை மேலும் தொடர்ந்து பேசினாள். “நான் இங்கேயே இருந்து உன் தாய்க்கும், தந்தைக்கும் பணிவிடைகள் செய்வேன்.” அவள் பார்வை எங்கோ தொலைதூரத்தைப் பார்ப்பது போல் காணப்பட்டது. "ஒவ்வொரு நாளும், நான் காட்டில் சுற்றுவேன், உன்னுடன் சுற்றிய இடங்களுக்கு எல்லாம் செல்வேன். யமுனைக்கரையில் பெளர்ணமி நிலவில், இரவு நேரத்தில் உன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். உன்னுடைய புல்லாங்குழலின் இனிய கீதத்தைக் கேட்கும் ஆவலுடன் அமர்ந்திருப்பேன். இதோ, இந்தப்புதர்களின் அடர்ந்த மறைவில் நீ என்னிடம் அன்பு செலுத்தியதையும், நான் என் சகலத்தையும் உனக்கு அர்ப்பணித்ததையும் நினைத்து நினைத்து மகிழ்ந்திருப்பேன். கண்ணா, நீ பேச என்னருகில் இல்லை எனினும், உனக்காக இந்தச் செடி, கொடிகளும், இந்தப்புதரும், இந்த யமுனை நதியும், இந்தக் காடும், நீ மேய்த்த ஆவினங்களும் என்னிடம் பேசும். உன்னைக் காணோமே என என்னிடம் கேட்கும். நான் துயர் அடைந்ததைக் கண்டு அவையும் துயர் அடையும். எனக்கு ஆறுதல் சொல்லும். குயிலானது உன் கீதத்தோடு போட்டி போட்டுத் தோல்வி அடையுமே. அது வேண்டுமானால் ஒருவேளை கண்ணன் இல்லை, போட்டிக்குக் கீதம் இசைக்க என நினைக்குமோ?? இல்லை, இல்லை, என் கானா! என் கானா, உன் இனிய கீதம் போட்டிக்கு இல்லாமல் குயிலும் தன் பாடலை மறந்துவிடுமோ?” கண்களில் இருந்து கண்ணீர் வழிய ராதை தொடர்ந்து பேசினாள். கண்ணனால் அவளை நிறுத்த முடியவில்லை.

“கண்ணா, ஒருவேளை எப்போவாவது நான் மதுரா வந்தேனானால் அங்கே யாரைப் பார்ப்பேன் என்று நீ நினைக்கிறாய்? என் கானாவையா? ம்ஹும் இல்லை கானா இல்லை. என் கானா அங்கே இருக்கமாட்டான். கிருஷ்ணன், கண்ணன் என்னும் பெயரில் ஒரு யாதவ இளவரசன் இருப்பான். அவனில் நான் உன்னைக் காணமுடியாதே! அவன் யாரோ ஒருவன் அன்றோ? அவனிடம் நான் எவ்வாறு என்னை ஒப்புக் கொடுக்க முடியும்? ஆனால் கானா, இங்கேயே விருந்தாவனத்திலேயே இருந்தேனானால், அது உன்னோடு இருக்கும் சுகத்தை, அமைதியை, நிம்மதியை எனக்குக் கொடுக்கும். இதோ, இந்த மரம் உன் இருப்பை எனக்குச் சொல்லும், ஆவினங்கள் சொல்லும் என் கானா என்னோடு இருப்பதை! குயிலானது நீ தான் வந்துவிட்டாயோ எனக் கூவிக் காட்டும். காற்றானது புழுதியை வாரி இறைத்துக் கொண்டு வீசும்போது, என் கானாவிடமிருந்து எனக்குச் செய்தியைக் கொண்டு வரும். என் கானா இங்கே தான் இருக்கிறான். இந்த மண் அவன் காலடி பட்ட மண் என, இந்தக் காற்று அவன் உடலில் பட்ட காற்று என வாயு தேவன் கூறுவான், இந்த நீர் அவன் அருந்திய நீர் என யமுனை கூறுவாள். ஒருவேளை கானா, அவை நீ இருந்தப்போ எப்படிப் பாடுகின்றனவோ அவ்வாறே எனக்காகவும் பாட ஆரம்பிக்குமோ?? ஆம், ஆம், பாடும், பாடும் எனக்காக. இந்த ராதைக்காக. “ ராதை கொஞ்சம் மூச்சுவிட நிறுத்தினாள்.

கண்ணன் தூரத்தில் எங்கோ சூன்யத்தைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். பின்னர் விண்ணில் தன் எதிர்காலம் தெரிவதைப் போல் சற்று நேரம் விண்ணையே பார்த்த வண்ணம் இருந்தான். அங்கே அவனுக்கு என்ன தெரிந்ததோ, மீண்டும் பேசும்போது அவன் குரல் தெளிவாய்க் காணப்பட்டது. “ஆம், ராதை நீ சொல்லுவது உண்மைதான். நீ எனக்கு வேண்டும் என்பதும், எப்போதும் என் அருகே இருக்கவேண்டும் என நான் விரும்புவதும் உண்மைதான். ஆனால், ஆனால், என் எதிர்காலம், நீ சொல்வதைப் போல் தான் மாறிவிடுமோ? நான் இப்போது இருப்பதைப் போன்ற ஒரு சுதந்திர இடைச் சிறுவனாக இருக்கமாட்டேனே. நான் நினைப்பதை நினைத்த வண்ணம் செய்ய முடியாதே! நீ என் சந்தோஷம், என் ஜீவன், என் கண்ணின் கருமணி, என் பார்வை, நானே நீ. நீயே நான். ஆனால் அங்கே வந்தால் இந்த அழகிய பூப்போன்ற நீ, உன் சுகந்தம் அனைத்தும் மறைந்து, மறந்துவிடுமோ? இங்கே இருப்பது போன்ற சுதந்திரமோ, அல்லது வேறு எதுவுமோ அங்கே உனக்குக் கிட்டாதுதான். ஆம், ராதை, ஆம், நீ இந்தச் சூரியனின் கதிர்களாலும், நிலவொளியாலும் குளிப்பாட்டப் பட்டு, இந்த யமுனையின் கரைகளில் ஆடிப் பாடி சந்தோஷமாய் உன் வாழ்க்கையைக் கழிக்கவேண்டியவள். “

“மேலும் ராதை, நீ என்னுடன் வந்துவிட்டாலும், இந்த விருந்தாவனம் தன் அழகை இழந்துவிடும். இதன் செளந்தரியமே போய்விடும். நீ இங்கே இருப்பதால் இது ஒரு தெய்வீகக் கோயில் போல் உள்ளது. என் மேலுள்ள உன் காதல் இதைச் சிறப்பாக ஆக்கி உள்ளது. நீ இந்த விருந்தாவனத்தின் செளந்தரிய தேவதை ஆவாய். இந்த விருந்தாவனத்தின் காதல் தேவதை ஆவாய். நீ இங்கேயே இருக்கப் போவதாய்ச் செய்த முடிவினால் இந்த விருந்தாவனத்து மக்களுக்கு மட்டுமல்லாமல், எனக்கும் ஒரு புதிய உலகைக் காட்டிவிட்டாய். இந்த உலகம் உள்ளளவும் மக்கள் உன்னையும், உன் காதலையும், அதற்காக நீ செய்த இந்த மகத்தான தியாகத்தையும் மறக்கவே மாட்டார்கள்.” கண்ணன் ராதையைத் தன் இரு கரங்களாலும் எடுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். தன்னைக் கட்டுப்படுத்த முடியாத ராதை விம்மி, விம்மி அழுதாள். கண்ணன் கண்களிலும் நீர். என்றாலும் அவனால் அழமுடியவில்லை. இப்போதே பொன்னாலாகிய தளை தன்னைக் கட்டிவிட்டதோ என்ற உணர்வு அவனுக்குள்ளே. “கானா, என் கானா, நான் என் அனைத்தையும் உனக்குக் கொடுத்துவிட்டேன். ஆனால் நான் உன்னிடம் எதையும் கேட்கவில்லை. என்றாலும் கானா, ஒரு உதவி எனக்குச் செய்வாயா? சிறு உதவி. நீ மதுரா செல்லும்போது உன்னுடைய அந்தப் புல்லாங்குழலை என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்வாயா? நீ ஒரு இளவரசன். யாதவ குலத் தலைவர்களில் ஒருவன். நான் ஒரு இடைச்சிறுமி. ஏழை. என்னைப் பார்த்து அனைவரும் எள்ளி நகையாடுவார்களே. அவர்களுக்கு உன்னுடைய இந்தப் புல்லாங்குழலைக் காட்டி, என் கானா என்னுடன் தான் இருக்கிறான் எனச் சொல்லிக் கொள்வேனே!” என்றாள். கண்ணனால் இப்போது தன்னைக் கட்டுப் படுத்த முடியவில்லை. பொங்கும் கண்ணீரோடு ராதையை இறுக அணைத்துக் கொண்டு, “புரிகிறது, ராதை, நாம் இப்போதே குரு சாந்தீபனியிடம் செல்வோம். அவர் முன்னே உன்னை நான் அக்னி சாட்சியாகத் திருமணம் செய்து கொள்கிறேன். இந்தப் புல்லாங்குழலை உன்னிடம் கொடுக்கிறேன். நீயும், இந்தப் புல்லாங்குழலுடன் வாழ்க்கை நடத்தலாம், நான் எப்போதும் உன்னிடமே இருக்கிற மாதிரி இது உன்னோடேயே இருக்கும். இனி இந்தப் புல்லாங்குழல் ராதைக்காக மட்டுமே இசைக்கும். கண்ணன் இனி புல்லாங்குழலை இசைக்கமாட்டான். அதுவே நீ, நீயே அது. நீங்கள் இருவருமே ஒன்றாகிவிட்டீர்கள்.”

கண்ணனின் புல்லாங்குழல் அதற்குப் பின்னர் இனிய கீதம் இசைத்ததா? இல்லை! :(

5 comments:

  1. நன்றாக உள்ளது, இராதையின் துயரை நினைக்கும் போது விழிகளில் ஈரம் எட்டிப் பார்க்கின்றது. கண்ணனுடன் இராதை மதுரா செல்ல மறுக்கும் காரணங்கள், இராமனுடன் அனுமன் வைகுண்டம் செல்ல மறுத்த காரணங்களைப் போல உள்ளது. இருவரின் ஆத்மார்த்தமான காதலை நினைக்கும்போது காதலின் புனிதம் தெரிகின்றது. நன்றி.

    ReplyDelete
  2. ராதா புலம்பற மாதிரி சீதையும் சுந்தரகாண்டத்துல ஆஞ்சனெய ஸ்வாமியை பாக்கரதுக்கு முன்னாடி, ராமன் இப்படி பண்ணீருப்பாரோ அப்படி பண்ணி இருப்பாரோன்னு புலம்பற மாதிரி வரும் இல்லை? இந்த ஜீவனுக்குத்தான் எவ்வளவு INSECURITY !!அந்த பரந்தாமனே விட்டுட்டான்னா வேற எங்க போஹன்னு!! அவன் வேற ஒங்கயும் இல்லை தனக்குள்ளயே தான் இருக்கான்னு அறிவுக்கு தெரிந்தாலும் உணரணுமே!! எப்பவோ?

    ReplyDelete
  3. ராதையின் காதலும் சோகமும் நெஞ்சைப் பிழிகிறது அம்மா :(

    ReplyDelete
  4. ம்ம்ம்..பாவம் ராதை..;(

    ReplyDelete
  5. உண்மை காதலுக்கு பிரிவு கிடையாது..
    ..அதே போல வாழ்வின் நிதர்சனம் உணர்பவர்களுக்கு வலி கிடையாது..

    நீங்கள் முழுமையான அன்போடு இருந்தால்.. கண்ணன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் அவரோட இருக்கிறீர்கள்..இருப்பீர்கள்..!

    நீங்கள் புத்திசாலியான அன்போடு இருந்தால்.. கண்ணனை உங்களுக்குள் மட்டும் சுமக்காமல் உலகையே கண்ணனாய் சுமந்து நீங்கள் செய்யும் எந்த செயலையும் அவனுக்கே அர்ப்பணித்து இன்ப, துன்பங்களை கடந்த பெருவாழ்வு வாழ்வீர்கள்..

    இன்னொரு ரகம் இருக்கிறது..

    நீங்கள் வாழ்வில் பிரிவு நிச்சயமான ஒன்று என்ற நிதர்சனத்தை உணரும் போது.. இவ்வளவு கண்ணீரும் அழுகையும் தேவைப்படாது..அதே போல் அன்பு மேலும் மெருகேறும்..

    இதில் நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது உங்கள் இயல்பை பொருத்தது..!!

    ReplyDelete