ப்ரத்யோதாவைப் பார்த்த தேவகி நடுங்கினாள் என்றால், ப்ரத்யோதாவின் நிலைமை அதை விட மோசமாய் இருந்தது. அவனுக்கும் மயக்கமே வந்துவிடும்போல் ஆகிவிட்டது. ஆஹா, இவள் அதே இளவரசி, இவள் கல்யாணம் நடந்த அன்று, வீதியில் ஊர்வலம் நடத்தவேண்டி ஏற்பாடுகள் செய்யப் பட்டு இவளும், இவளை மணந்த வசுதேவனும் ரதத்தில் அமர்ந்திருந்தனர். நாம் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கும்போது தானே கம்சன் ரதத்தில் இருந்து இவளைக் கீழே தள்ளினான்?? ம்ம்ம்ம்ம்ம் நான் அப்போது இதைப் பார்த்துக் கொண்டு கையாலாகாமல் சும்மாத் தானே இருந்தேன். அது மட்டுமா? இவள் வயிற்றில் பிறந்த குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்லப் பட்டபோது கூட நான் கம்சன் அருகே தானே இருந்தேன். அப்போதும் வாய் மூடி ஊமையாக!!! சேசே, சேச்சே, எத்தனை கேவலமான மனிதனாய் இருந்திருக்கிறேன். எல்லாம் எதற்காக? இந்த ஒரு சாண் வயிற்றுக்காக அன்றோ?, அவன் வீசி எறியும் காசுக்கும் அல்லவோ? கம்சனின் கொடூரத்திற்குத் துணை போனேனே! இப்போ மட்டும் என்ன வாழ்ந்தது??? மீண்டும் தேவகியின் மகன் ஒருவனைக் கொல்லவேண்டி கம்சன் செய்யும் ஏற்பாடுகளுக்குத் துணை போக அன்றோ நம்மை அனுப்புகின்றான்? இவள் முகத்தை நான் எங்கனம் நிமிர்ந்து பார்த்துப் பேசுவேன்? ப்ரத்யோதாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது என்றால் அவனையே பார்த்தவண்ணம் திகைப்பும், பயமுமாய் இருந்த தேவகிக்கோ சர்வாங்கமும் நடுங்கிக் கொண்டிருந்தது.
மிகவும் கஷ்டப் பட்டு தன் கைகளைக் கூப்பியவண்ணம் ப்ரத்யோதா அவளைத் தலை குனிந்து வணங்கினான். அக்ரூரர் அவளிடம், “தேவகி, நான் ப்ரத்யோதாவிடம் பேசி அனுப்பிவிட்டு, உன்னிடம் வருகிறேன்.” என்று சொல்ல, தேவகியும், “சரி” என்று சொல்லிவிட்டு உடனேயே சென்றுவிட்டாள். ப்ரத்யோதா அங்கேயே அமர்ந்தான். அவனால் பேசமுடியவில்லை. துயரமும், துக்கமும் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்த தேவகியின் ஒவ்வொரு அங்கமும் அவனுக்கு அவள் துக்கத்தின் ஆழத்தைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. ம்ம்ம்ம்ம்…. இந்த தேவகி ஒரு பைத்தியம் போல ஏதோ ஒரு குழந்தை பொம்மையை வைத்துக் கொண்டு அதற்குப் பாலூட்டித் தாலாட்டிப் பாடல்கள் பாடி, அலங்காரங்கள் செய்வாளாமே! பாவம் அவள் குழந்தையைப் பிரிந்ததால் இப்படி ஒரு நிலைமை/…….. என்ன, என்ன?? திடீரெனப் ப்ரத்யோதாவுக்குப் பொறி தட்டியது. ஆஹா, இந்த தேவகி அந்தக் குழந்தைப் பொம்மைக்குத் தாலாட்டவில்லை. பாலூட்டவில்லை, அலங்கரிக்கவில்லை. தான் உயிரோடு தூக்கிக் கொடுத்த தன் அருமைக் குழந்தைக்கு, நந்தனிடம் வளர்கின்றான் என்பது தெரிந்தே எல்லாம் செய்திருக்கின்றாள். ஒரு தேவ அர்ப்பணம் போல் செய்து வந்திருக்கின்றாள். ம்ம்ம்ம்ம் இப்போது நாம் செய்யவேண்டியதுஎன்ன?? அந்தப் பையனுக்கு இப்போது பதினாறு வயது எனச் சொல்லுகின்றனரே? அவனைக் கம்சன் கொல்ல நாம் உதவப் போகின்றோமா??
அக்ரூரர் ப்ரத்யோதாவின் தனிப்பட்ட யோசனைகளைப் புரிந்து கொண்டவர் போல அவனை நேரிலேயே வசுதேவரிடம் வந்து கம்சனின் அழைப்பைக் கொடுக்கச் சொன்னார். ஆனால் ப்ரத்யோதாவோ வசுதேவரைப்பார்த்துப் பேசும் அளவுக்குத் தனக்குத் திராணி இல்லை என மறுத்தான். அக்ரூரர் ஒரு புன்னகையோடு, “ப்ரத்யோதா, நீ வசுதேவனிடம் வந்தால் ஒருவேளை தேவகி வைத்து வழிபடும் அந்தக் குழந்தைப் பொம்மையைக் காணலாம்.” என்று சொல்ல, ப்ரத்யோதா மீண்டும் உறுதியோடு மறுத்தான். தேவகியை நிமிர்ந்து பார்க்கக் கூட தன்னால் முடியாது என்று சொன்னான். அவளுக்குத் தான் துரோகம் செய்துவிட்டதாகவும் சொல்ல, அக்ரூரர், தேவகிக்கு உயர்ந்த மனம் என்றும், அந்த மனம் அவனை மன்னித்துவிடும் என்றும் கூறுகின்றார். ஏற்கெனவேயே அவள் ப்ரத்யோதாவை மன்னித்திருப்பாள் என்றும் கூறுகின்றார். எனினும் ப்ரத்யோதா மறுக்கின்றான். அங்கிருந்து கிளம்ப ஆயத்தம் ஆக, அக்ரூரர் அவனை, கொஞ்சம் தாமதித்துவிட்டு, ப்ரத்யோதா தன்னைத் தானே ஆசுவாசம் செய்து கொண்டு போகச் சொல்கின்றார். “கடவுள் தன்னுடைய இருப்பை எவ்விதமேனும் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சரியான சமயத்தில் தெரிவிப்பார். அந்தச் சமயம் உனக்கு இப்போது வாய்த்துள்ளது.” என்றும் அவனைத் தேற்றினார். ப்ரத்யோதா அவரை நமஸ்கரித்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றான்.
அவனிடம் அக்ரூரர், தனது சாந்தமான குரலில், “கடவுள் உன் கதவைத் தட்டும்போது அவருக்காக உன் கதவைத் திறந்தே வை. மூடாதே. அவரை நன்கு பரிசுத்தமான இதயத்தோடு வரவேற்று பக்தி செலுத்து. நம்மால் முடிந்தது அது ஒன்றே. கடவுளை நாம் அறிய முடிவதும் இவ்வாறே.” என்று சொல்லுகின்றார். கண்களில் கண்ணீர் பொங்க ப்ரத்யோதா, “அக்ரூரரே, கடவுள் என்னிடம் வருவாரா? நான் அதற்குத் தகுந்தவனா? ஒருகாலும் நடக்காத ஒன்று.” என்று பெருமூச்சுடன் சொல்லிவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு அக்ரூரரிடம் கிசுகிசுப்பான குரலில், “வசுதேவனின் எட்டாவது குழந்தைதான் நந்தனிடம் விருந்தாவனத்தில் வளர்கின்றானா?” என்று கேட்டான். இப்போது அக்ரூரருக்குக் கொஞ்சம் சந்தேகமும், நிறைய பயமும் ஏற்படவே, அவர், அவனிடம், “யார் சொன்னது உனக்கு?” என்று கேட்டார். இந்த ரகசியம் வெளியே தெரிந்துவிட்டதா என எண்ணி அவர் கலக்கமும் அடைந்தார். ப்ரத்யோதா சொன்னான்:”ப்ரலம்பன் சாகும் தருவாயில் கம்சனிடம் சொல்லிவிட்டுச் செத்தான். நான் அப்போது அங்கே காவல் இருந்தேன்.” என்றான். அக்ரூரரின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்றது. ஆனால் அவருக்கோ அது பலயுகங்கள் மாதிரித் தோன்றியது. வெளுத்த, கலவர முகத்துடன் அவர் ப்ரத்யோதாவைப் பார்க்க, அதைவிடப் பயத்துடன் தன்னை சுற்றிப் பார்த்து ஒருவரும் இல்லை என நிச்சயப் படுத்திக் கொண்ட ப்ரத்யோதா, அக்ரூரரிடம், “ பயப்படாதீர்கள் அக்ரூரரே! கவலை வேண்டாம். ப்ரலம்பன் அந்தக் குழந்தை தான் வாசுதேவகிருஷ்ணன் என்ற பரவாசுதேவன் ஆவான் என்றும், தர்மத்தை நிலைநாட்டவே அவன் பிறந்திருப்பதாகவும் சொன்னார். நம்மை எல்லாரையுமே அவன் தான் காப்பாற்றப் போகின்றான் என்றும் சொன்னார். நான் கேட்டேன்.” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, வெகுவேகமாய் அக்ரூரரின் இருப்பிடத்தை விட்டுச் சென்றான்.
ஜராசந்தனின் பூர்வீகம் பற்றிய குறிப்புகள் இன்றைய பதிவில் போட மறந்துட்டேன். சீக்கிரம் போடுகிறேன். நன்றி.
//“கடவுள் தன்னுடைய இருப்பை எவ்விதமேனும் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சரியான சமயத்தில் தெரிவிப்பார். அந்தச் சமயம் உனக்கு இப்போது வாய்த்துள்ளது.”//
ReplyDeleteகண்களை பனிக்க வைத்த வாசகம் அம்மா. நம்பிக்கையே வாழ்க்கை.
வாங்க கவிநயா, ரொம்ப நன்றிம்மா.
ReplyDelete