எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 29, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - திரிவக்கரையின் ஆசை!

மதுரா நகரெங்கும் பரபரப்பு. மக்களின் ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. தேவகியின் எட்டாவது பிள்ளை உயிரோடு இருக்கிறானாமே? நாளை வரப் போகிறானாம். அவனுக்கு அண்ணனும் ஒருத்தன் இருக்கிறானாம். பார்க்க ஒரு பயில்வான் போல் இருப்பானாம். இந்தக் கண்ணன், அதான் தேவகியின் எட்டாவது பிள்ளை ஏதேதோ அதிசயங்கள் எல்லாம் செய்கிறானாமே. பாற்கடலில் இருந்து எழுந்து வந்த அந்தப் பரந்தாமனை ஒத்து இருக்கின்றானாமே. ம்ம்ம்ம்? அந்தப் பரந்தாமனே இந்தப் பிள்ளையாக அவதாரம் செய்திருப்பதாய்ச் சொல்கின்றனர். எவ்வளவு தூரம் உண்மைனு தெரியலை. எல்லாம் நாளை தெரிந்துவிடும். காத்திருந்தவர்களுள் ஒருத்தி திரிவக்கரை என்னும் பெண்மணி. கம்சனின் அரண்மனையில் அனைவருக்காகவும் மலர்களையும், மலர்களிலிருந்து தயார் செய்யப் படும் வாசனைத் திரவியங்களையும் ராஜ வம்சத்தினருக்காகச் சிறப்பாகத் தயார் செய்வாள். இதற்கென ஒரு பெரிய குழுவே அவளுக்குக் கீழ் வேலை செய்கிறது. பல்வேறுவிதமான மூலிகைகளும், வாசனை மலர்களும் கொண்ட ஒரு பெரிய அழகான தோட்டத்தைப் பராமரித்து வந்தாள் திரிவக்கரை. திரிவக்கரை என்பது அவளின் உண்மையான பெயர் அல்ல.

பிறக்கும்போது எல்லாரையும் போல் சாதாரணப் பெண்ணாக, கொஞ்சம் அழகாகவே தான் இருந்தாள் திரிவக்கரை. பனிரண்டு வயதில் வந்த காய்ச்சல் ஒன்றில் பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்துவிட்டுப் பின், சுகமடைந்தபோது அவள் உடலின் மூட்டுக்கள் அங்கங்கே கோணிக் கொண்டு காட்சி அளித்தன. முதுகு கூனிவிட்டது. கூனை நிமிர்த்த முடியவில்லை. கால் மூட்டும் வளைந்துவிட்டது. அந்தக் கால வழக்கப் படி அவளுக்குப் பனிரண்டு வயதுக்கு முன்பே திருமணம் ஆகி இருந்தது. திருமணத்திற்குப் பின்னரே உடல்நிலை சீர்கெட்டது. உடல்நிலை சரியானதும் மனைவியின் கோணலான உடம்பைப் பார்த்த அவள் கணவன், கம்சனின் யானைப்படையில் பெரும்பதவி வகிப்பவன், அவளை ஏற்றுக் கொள்ள மறுக்கவே மனம் வெறுத்து, மனம் உடைந்து, உலகின் மீதே வெறுப்புற்றிருந்தாள் திரிவக்கரை. அவள் முகம் இன்னமும் அழகை இழக்கவில்லை. ஆனாலும் அவளுக்கு இல்லற வாழ்வையும், சந்தோஷத்தையும் இந்த உலகம் மறுத்துவிட்டது. மனதில் வாங்கிய பலத்த அடியோடு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே தன் இனிமையான பேச்சால் அனைவருக்கும் வாசனைத் திரவியங்களை அளிக்கும் பணியைச் செய்துவந்தாள். அவள் தாயிடமிருந்து வம்சாவழியாகப் பெற்ற இந்த வேலையே அவள் வயிற்றைக் கழுவவும் உதவி வந்தது. அரண்மனையின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லக் கூடிய உரிமையையும் பெற்றிருந்தாள். அரச வம்சத்தினரின் அனைத்து நபர்களின் அரண்மனைகளுக்கும், அவர்களின் பிரத்யேக அலங்கார அறைக்குள்ளும் செல்ல அவளால் முடியும். இத்தனை உடல் சீர்கேட்டிலும், உலகம் தன்னை மதிக்கவில்லை என்ற துன்பத்தையும் வெளிக்காட்டாமல் எப்போதும் சிரித்த முகத்துடனேயே ஏதாவது நகைச்சுவையாகப் பேசிக் கொண்டே தன் வாசனைத் திரவியங்களை அரண்மனை வாசிகளுக்கு அளிப்பாள்.

தனது உண்மைப்பெயரான மாலினி என்பதையே கிட்டத் தட்ட அவள் மறந்துவிட்டாளோ என்னும்படி இந்தத் திரிவக்கரை என்னும் பெயராலேயே அவளைச் சிறு குழந்தைகள் கூட அழைத்தனர். அவளை முகத்துக்கு நேரேயே கூனி என்றும், திரிவக்கரை என்றும் அழைப்பவர் பலர் உண்டு. என்றாலும் அவள் வரையில் எதையும் பொருட்படுத்தியதில்லை. அவள் தன்னைத் தானே கேலியும் செய்துகொள்வாள். கம்சனின் அந்தப் புரத்திற்குள் சுதந்திரமாய் நுழையும் உரிமை அவளுக்குண்டு. எந்தக் கேலிக்கும், கிண்டலுக்கும் சிரிக்காத கம்சன் திரிவக்கரை தன்னைத் தானே கேலி செய்து கொள்வதைக் கண்டு மனம் விட்டுச் சிரிப்பான். ஆனாலும் தன்னுடைய அழகான முகத்திலும், தன்னுடைய கால்கள் நேராக இருந்திருந்தாலோ, உடல் கூனாமல் சரியாக இருந்தாலோ, இந்த அரண்மனை ராஜகுமாரிகளை விடவும் தான் அழகாய் இருந்திருப்போம் என்ற உண்மையும் அவள் மனதில் படிந்திருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? விதி இப்படி அவளை மாற்றிவிட்டதே? ஆனாலும் அவள் மனம் தளரவில்லை. தனிமையில் இருக்கும்போதெல்லாம் தான் சரியாக, நேராகத் தன் உடல் இருப்பது போல் உணர்ந்தாள். தான் அன்றாடம் வணங்கும் கடவுளான மஹாதேவ சங்கரனின் கிருபையால் தான் உடல் நிமிர்ந்து மிகவும் அழகாய் விளங்குவதாய்க் கற்பனை செய்து கொள்வாள். தன் உடலின் ஒவ்வொரு மூட்டும் அழகாயும், நன்கு வளர்ச்சி பெற்றும், நிமிர்ந்து நேராயும், வனப்போடும் காட்சி கொடுப்பதாயும், அழகான இளம்பெண்ணாகத் தான் தோன்றுகிறாப்போலவும் நினைத்துக் கொள்வாள்.

இப்படி நினைத்து, நினைத்து அவள் மனதில் கடவுளின் கிருபையால் தான் சரியாகிக் கொண்டே இருக்கிறோம் என்ற உணர்வு நன்கு படிந்திருந்தது. நான்கு நாளைக்கு முன்னால் அரண்மனையில் தேவகியின் எட்டாவது பிள்ளை உயிரோடு இருப்பதாகவும், அவன் மதுராவுக்கு வரப் போகிறான் எனவும் பேசிக் கொண்டனர். ஆஹா, அவன் மதுராவுக்கு வரட்டும். ஏதேதோ அற்புதங்களை நிகழ்த்துகிறானாமே? அவன் மட்டும் என்னை மூன்று கோணல் உள்ள பெண் என அழைக்கும் இந்த மனிதர்களுக்கு முன்னால் என்னை ஒரு அழகி என்றும், கோணலே இல்லாத நேராக நிமிர்ந்து இருக்கும் பெண் என்றும் காட்ட மாட்டானா? அப்படிக் காட்டினால்?? அடடா? என்ன ஆநந்தம்? என்ன ஆநந்தம்?? இந்த மனிதர்கள் அனைவரும் உண்மையில் குருடர்கள் என்றே சொல்லணும். இல்லாவிட்டால் இவ்வளவு அழகாயும், உடல்கட்டாயும் இருக்கும் என்னைப் போய்த் திரிவக்கரை என அழைப்பார்களா? கண்களில் கண்ணீர் ததும்ப திரிவக்கரைத் தன்னை அழகி என எல்லாரையும் கண்ணன் சொல்ல வைப்பான் என்ற நம்பிக்கையோடு மீண்டும், மீண்டும் அந்த மஹாதேவனைப் பிரார்த்தித்தாள். ஆனால் அரண்மனையின் இளவரசிகள் கம்சனால் அந்தக் கண்ணன் படப்போகும் பாட்டை நினைத்து மகிழ்ச்சியோடு பேசிக் கொள்கின்றனரே? அப்படியும் நடக்குமோ? மதுராவில் கம்சனுக்கு விசுவாசமாய் இருக்கும் சிலர் மட்டுமே இந்தக் கண்ணன் அழிக்கப் படவேண்டியவன் என நினைக்கலாம். பெருவாரியான யாதவர்கள் தங்களைக் காக்கவே கிருஷ்ணன் வருகிறான் என்ற ஆவலுடனேயே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அரண்மனைவாசிகள் பேசிக் கொள்வதை அங்கே செல்லும்போதெல்லாம் கேட்டுக் கொள்வாள் திரிவக்கரை. தன் கண்ணையும், செவியையும் நன்கு திறந்து வைத்துக் கொண்டு கம்சனின் அரண்மனைவாசிகள் பேசுவதையும் கேட்டுக் கொண்டாள். நந்தனின் பிள்ளையாக வளர்ந்த தேவகியின் எட்டாவது பிள்ளையைப் பற்றிப் பலரும் பலதரப்பட்ட கதைகள் பேசுவதையும் கேட்டாள். கோவர்தன மலையையே தூக்கிவிட்டானாமே? நாரதர் ஏற்கெனவே சொன்ன மாதிரி கம்சனை அவன் தான் கொல்லுவானோ? இவங்க சொல்லுவது எல்லாம் உண்மை என்றால் நந்தனின் மகனாய் வளர்ந்த அந்தக் கண்ணன் ஒரு கடவுள் மட்டுமில்லை, அவனே கம்சனுக்கு எதிரியும் கூட. நாட்கள் நெருங்க, நெருங்கத் திரிவக்கரையால் தூங்கக் கூட முடியவில்லை.


ஆனாலும் அவள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முன்னை விட அதிகமாய்ச் சிரித்தாள், சிரிக்க வைத்தாள். ஆனாலும் நிற்கும்போதும், நடக்கும்போதும், பேசும்போதும், சிரிக்கும்போதும் அவளுள் ஏதோ ஒன்று அவளிடம், “உன் ஆண்டவன் வந்துவிட்டான். இனி உன் பிரார்த்தனைகள் செவிசாய்க்கப் படும். உன் எண்ணம் ஈடேறும்” என ஏதோ காதுகளில் வந்து சொன்னாப்போல் அவளுள் ஒரு பூரிப்பு. தன்னிடம் இருந்த மிகச் சிறந்த ஆடைகளை இந்தத் தருணத்தில் அணியவேண்டும் என எடுத்து வைத்துக் கொண்டாள். கண்ணனுக்கு அளிக்கவென வில உயர்ந்த வாசனைத் திரவியங்களையும் தயார் செய்து கொண்டாள். அப்போது ஒருநாள் மாலையில் அவளுக்குச் செய்தி கிடைத்தது கண்ணன் மதுராவிற்கு வந்துவிட்டான் என்றும், அவனும் அவன் அண்ணன் பலராமனும் விருஷ்ணிகுலத் தலைவன் ஆன அக்ரூரரோடு தங்கி இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது. அன்று அரண்மனையில் பல விசித்திரமான நிகழ்வுகளையும் அவள் கண்டாள். அரண்மனைக்குள் பலரும் வந்து போனார்கள். அவர்களில் முக்கியமாய் அக்ரூரர், ப்ரத்யோதா, விருதிர்கனன், ஆகா என்னும் கம்சனின் நம்பிக்கைக்குரிய வீரன். இவர்கள் தனித்தனியாகக் கம்சனைச் சந்தித்ததோடு அல்லாமல் வ்ருதிர்கனனோடும், ஆகாவுடனும் கம்சன் நிறைய நேரம் ஆலோசனைகள் செய்தான். இவர்களில் அக்ரூரரைக் கண்டால் திரிவக்கரைக்குப் பிடிக்காது. அவள் கொடுக்கும் வாசனைத் திரவியத்தை அவர் மறுப்பார். மகத வீரனையும் பிடிக்காது, அவளுடைய வாசனைத் திரவியத்தை அவன் குறை சொல்லுவான். இத்தனைக்கும் ஒரு மலரின் வாசனைத் திரவியத்துக்கும், மற்ற மலரின் வாசனை திரவியத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவன் அறிய மாட்டான்.

அப்போது, அப்போது தான் அவள் மேலும் கேள்விப்பட்டாள், படை வீரர்கள் அனைவருக்கும் ஆயுதங்களைத் தாராளமாய்க் கம்சன் கொடுக்கச் சொல்லி உத்திரவிட்டிருப்பதாய். கம்சனின் ராணிகளும், ஜராசந்தனின் பெண்களும், மகத இளவரசிகளும் ஆன இரு சகோதரிகளும் கூட இனம் தெரியாத உத்வேகத்துடன் காட்சி அளித்தனர். அவர்கள் பேசியதில் இருந்து கிழவன் பஹூகாவும் அவனுடைய மகனையும் காணவில்லை என்றும், அதனால் யாதவத் தலைவர்கள் அனைவரும் மிகவும் கவலையுடனும், மன அழுத்ததுடனும் இருப்பதாகவும் காதில் விழுந்தது. மாளிகைக்குள் கம்சனைக் காண வந்தவர்கள் திரும்பவில்லையாம். கொல்லப் பட்டிருக்கக் கூடும் என்பதே அனைவரின் எண்ணமும் என்றும் புரிந்தது அவளுக்கு. ஆஹா, நந்தனின் மகன் மதுராவுக்குள் வந்திருப்பதற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் உள்ளது. திரிவக்கரை அன்றைய இரவைப் பரபரப்போடு கழித்தாள்.

மறுநாள் சீக்கிரமாய் எழுந்து குளித்துத் தயாராகித் தன்னை அலங்கரித்துக் கொண்டு கம்சனுக்கும், ராணிகளுக்கும் தேவையான வாசனாதி திரவியங்களை அளித்துவிட்டு மற்றவர்களுக்குத் தனக்குக் கீழ் வேலை செய்பவர்களை விட்டுக் கவனிக்கச் சொன்னாள். அவள் தன்னுடைய வாசனைத் திரவியங்கள் அடங்கிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு அக்ரூரரின் மாளிகையை நோக்கி நடந்தாள்.

6 comments:

  1. கண்ணனின் வருகைக்கு மதுரா வாசிகளைப் போல நானும் காத்துருக்கின்றேன். நல்ல பதிவு.

    ReplyDelete
  2. சின்ன வயசுல படிக்கும் போது எனக்கு க்ருஷ்ண புராணத்துல ரொம்ப பிடிச்சசம்பவங்களில் கூன பெண் சம்பவமும் ஒன்று.இந்த சம்பவம் சாமான்யர்களோட HOPE, FAITH க்கு எடுத்துக்காட்டுனு எனக்கு தோனும்.தெய்வத்துக்கு மதம் இனம் பணம், அழகு, திறமை இது ஒண்ணும் பொருட்டு இல்லை. கல்மிஷம் இல்லாத மனசும் பக்தியும் நம்பிக்கையும் தான் பொருட்டு. மனசுல ஒரு இனம் புரியாத GRATEFULNESS வரும் .

    ReplyDelete
  3. ஆகா..இது என்ன மீண்டும் ஒரு காதல் கதை வரும் போல!! ;))

    ReplyDelete
  4. வாங்க பித்தனின் வாக்கு, கண்ணன் மதுராவுக்குள் இதோ வந்துட்டான், அடுத்த பதிவிலே/ :D

    ReplyDelete
  5. வாங்க ஜெயஸ்ரீ, உங்கள் பின்னூட்டங்கள் பல கதைகளைச் சொல்கின்றன. அருமை!

    ReplyDelete
  6. கோபி, நீங்க நினைக்கிறாப்போல் எல்லாம் இல்லைப்பா, இதோ அடுத்தது பாருங்க! :)))))))))

    ReplyDelete