எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 10, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ராதையின் துயரம்!

செய்தி காட்டுத் தீபோல் பரவியது விருந்தாவனத்தில். ஆண்,பெண், குழந்தைகள், முதியோர் அடங்கலாய் அனைத்து விருந்தாவனவாசிகளும் ஒருவரை பார்த்துக் கொள்ளும்போது கேட்பது இதுவே! “கம்சன் அழைப்பு அனுப்பி இருக்கிறானாமே? நந்தனுக்கு?? அதுவும் கிருஷ்ணனையும், பலராமனையும் அழைத்துவரச் சொல்லி இருக்கிறானாமே?? கப்பம் வேறே கொண்டுவரச் சொல்லி இருக்கிறான். அது சரி, அது நியாயம் தான். கம்சன் போன்றவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. ஆனால் ஏதுமறியா இந்தப் பாலகர்களை எதுக்கு அழைத்துவரச் சொல்லுகிறான்?? வேண்டுமானால் விருந்தாவன வாசிகள் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்ளலாமாம். “

ஆமாம், ஆமாம், அப்படித் தான் சொல்கிறார்கள். ஏதோ தநுர்யாகமாம். கம்சன் பனிரண்டு வருஷம் போர்க்களத்தில் இருந்து வெற்றி கண்டு திரும்பிதற்கு நடத்துகிறானாம். வீரப் போட்டிகளெல்லாம் இருக்காமே. அக்ரூரர் கூட வந்திருக்கிறாராம் அழைக்க.””

“என்ன அக்ரூரர் வந்திருக்கிறாரா? அப்படி எனில் நந்தனிடம் என்ன சொன்னாராம்?”

“தெரியலை, ஆனால் ஏதோ விஷயம் இருக்கு இதிலே. நந்தனோடு மட்டும் பேசலை அக்ரூரர். அவர் பேசும்போது கிருஷ்ணனும், பலராமனும் கூட இருந்திருக்கின்றனர். பேசிட்டு வெளியே வரும்போது நந்தன் முகம் பார்க்கச் சகிக்கவில்லையாமே!”

“அட, அது யசோதை படவேண்டிய கவலை அல்லவோ?” குறும்புக்கார இளைஞன் ஒருவன் சொன்னான்.

பேசினவன் கத்த ஆரம்பித்தான். “உங்களுக்கெல்லாம் எப்போ விளையாடணும்னு தெரியாதா? ஏதோ முக்கிய விஷயமாய்க் கம்சன் நந்தனை வரச் சொல்லி இருக்கான். இன்னிக்குச் செய்தி வந்ததும் நந்தன் தன் ஆட்களை அழைத்துப் பிரயாணத்துக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி இருக்கின்றார். ஆனால் நந்தனுக்குப் பிரயாணத்தில் அவ்வளவு விருப்பம் இல்லை போல் தெரிகிறது. மனதில் சந்தோஷமே இல்லாமல் கப்பம் கட்டுவதற்காக நெல்லையும், பொன், மணி திரவியங்களையும், பசுக்களையும் சேகரிக்கிறார். யசோதை அம்மா அழுத வண்ணமே இருக்கிறாள். “

அனைவர் மனதிலும் வெறுமை சூழ்ந்துகொண்டது. கவலையிலும், குழப்பத்திலும் கனத்திருந்த மனதோடு அனைவரும் தூங்காமல் மேற்கொண்டு என்ன நடக்கும் என்பது பற்றிய பேச்சில் ஆழ்ந்தனர். அன்றைக்கு முழுநிலவு வானில் ஜகஜ்ஜோதியாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. யமுனை ஆற்றின் வெண்ணிற மணலோடு போட்டி போட்டுக் கொண்டு நிலவின் பிரகாசம் வெள்ளிமயமாய் ஜொலித்தது. நீலக்கடல் தன் நீல நிறத்தைக் கருநீலமாய் மாற்றிக் கொண்டிருந்தது. பூமித்தாயானவள் கருநீலப் பட்டில் வெள்ளி ஜரிகை இழையோட, புடைவையில் அங்கங்கே வெள்ளி நக்ஷத்திரங்கள் பளிச்சிட, பச்சை வண்ண ஜாக்கெட் அணிந்து காட்சி அளித்தாற்போன்ற தோற்றம். யாருக்கும் இந்த அதி அற்புதமான இயற்கையின் தோற்றத்தில் மனம் செல்லவில்லை. நிலவொளி வீணாகிக் கொண்டிருந்ததோ என்னும் எண்ணம் எழுந்தது சிலருக்கு. அப்போது அந்த நிலவொளியை நிரப்புவது போல், அங்கங்கே கிசுகிசுவெனப் பேசிக் கொண்டிருந்த சில குரல்களையும் மீறிக் கொண்டு, ஒரு புல்லாங்குழலின் இனிய கீதம் கேட்டது. நம் கண்ணனைத் தவிர வேறு யார் இப்படிப் புல்லாங்குழல் ஊதமுடியும்? அனைவரும் துள்ளிக் குதித்தனர். உண்மையில் விருந்தாவனமே துள்ளிக் குதித்தது என்னலாம்.

அந்த இனிய இசையில், இளைஞர்களும், இளம்பெண்களும் மட்டுமில்லை, மொத்த கோபர்களும், கோபிகளுமே தங்களை இழந்தனர். அனைவரும் அவரவர் இருந்த கோலத்திலேயே யமுனைக்கரைக்குக் கண்ணன் இருக்குமிடம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். “ராஸ்” ஆடுவதற்கான அணிகலன்களைப் பற்றியோ, உடையைப் பற்றியோ கவலைப்படும் நேரம் இதுவல்ல. இப்போது நம் கண்ணன் நம்மைவிட்டுப் போகப் போகிறான். இந்த இரவே கடைசி இரவாகிவிடுமோ?? ஒருவராலும் பதில் சொல்லமுடியாத கேள்வியாக இருந்தது இதுவே. ஆகவே கண்ணனின் ஒவ்வொரு செயலிலும் பங்குபெறத் துடிக்கும் உள்ளத்தோடு அனைவரும் யமுனைக்கரை நோக்கிச் சென்றனர். ராதையும் கேட்டாள். ஏற்கெனவே கண்ணன் மதுரா செல்லப் போகின்றான். கம்சனின் அழைப்பு வந்திருக்கிறது என்று தெரிந்து தன் இதயத்தைத் தானே தின்று கொண்டிருந்தாள் ராதை. ஒவ்வொரு கணமும் செய்வதறியாது துடித்த அவள் காதுகளில் கண்ணனின் இனிய புல்லாங்குழல் கீதம் கேட்டது. ஆஹா, என் கானா, கானா, நாளை விடிவதற்குள்ளாகக் கிளம்பிவிடுவானோ? அடுத்த கணம் ராதை துள்ளி எழுந்தாள். எழுந்த வேகத்தில் அவள் கைவளைகள் நொறுங்கிவிடும்போல் சப்தித்தன. தலை மயிர் பறக்க, மேலாடை காற்றில் வீச ராதை யமுனைக்கரையை நோக்கி ஓடினாள்.

அனைவரும் யமுனைக்கரையில் கூடிவிட்டனர். அனைவருமே ஒற்றுமையாகத் தாளம் போட்டுக் கொண்டு ஆடவும் ஆரம்பித்தனர். கொலுசு அணிந்தவர்கள் காலில் அவை சப்திக்க, சலங்கைகள் பேச ஆரம்பிக்க, ஆண்களில் சிலர் தாளவாத்தியத்தை இசைக்க, அனைவரும் வட்டமாகக் கூடிக் கொண்டு ஆட ஆரம்பித்தனர். நட்ட நடுவில் கண்ணன், அவன் அருகே ராதை! சுற்றிலும் அனைவரும் தா, தை, தா, தை எனத் தாளம் தப்பாமல் ஆடினார்கள். கண்ணனின் முகத்தைவிட்டு ராதையின் கண்கள் அகலவே இல்லை. இனம் புரியாத சந்தோஷத்தை உள்ளுக்குள்ளே அனுபவிப்பவளாக அரைக்கண் மூடிக் கொண்டு ராதை ஆடினாள். அவள் கண்களுக்குள்ளாக விருந்தாவனமும் சுழன்று சுழன்று ஆடியது. யமுனைக்கரை, யமுனை நதி, ஆகாயம், பூமி அனைத்தும் சுழன்று ஆடியது. நிலவு மட்டும் ஆடாமல், அசையாமல் இந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டு சிரித்து அனுபவிப்பது போலவும், யமுனை நதி தன் மெல்லிய ஓசையால் இனிய இசையை இசைப்பது போலவும் தோன்றியது அவளுக்கு. விண்ணுலகில் இருந்து தேவாதி தேவர்களும், கின்னரர்களும், கந்தர்வர்களும் தங்கள் நடனத்தைப் பார்ப்பதாகவும் நிலவின் தண்மையான ஒளிக்கதிர்களை பூமிக்கு அனுப்பித் தங்களை ஆசீர்வதிப்பதாகவும் தோன்றியது அவளுக்கு. ஆடிய சில கோபியர் களைப்பில் அப்படியே கீழே அமர, மற்றவர்கள் சிலருக்கு மயக்கம் வந்தது. அனைவரும் அங்கேயே அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க எண்ணியபோது கண்ணனின் புல்லாங்குழல் இசை தூரத்தில் இருந்து கேட்டது.

சற்றே திரும்பி அனைவரும் பார்க்க, கண்ணன், ராதையை அணைத்தவண்ணம் காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அனைவர் மனதிலும் துயரம் சூழ்ந்தது. நாளை??? ஆனால் அங்கே தனிமையை நாடிச் சென்ற கண்ணனுக்கோ, ராதைக்கோ இந்தத் துயரம் எழவே இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர். ராதையின் மனதில் இனம் புரியாத கலவரமும், அதே சமயம் சிலிர்ப்பாகவும் உணர்ந்தாள். “ராதை,” கண்ணன் அழைத்தான் அவளை. “இன்றைய இரவு ஒரு முக்கியமான இரவு.” என்றான் கண்ணன். “ஆம்” ராதையின் குரல் மிகவும் தீனமாய்க் கேட்டது. “நீ அழகாயும், ஓர் அரிய அற்புதமாயும் இருக்கிறாய், ராதை!” கண்ணன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். ராதை, “கானா, நீ எப்போவுமே என்னிடம் இதே அன்போடு இருப்பாயா?” என்று கேட்டாள். “இருப்பேன், ராதை, இந்த உலகில் சூரிய, சந்திரர் உள்ளவரையில் இதே அன்போடு இருப்பேன்.” என்றான் கண்ணன். “என்னை மறக்கமாட்டாயே?”
“எப்படி முடியும்? நீ இல்லாமல் எனக்கு ஏது சந்தோஷம் என்பது?” இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்தனர்.

6 comments:

  1. ஜீவாத்மா பரமாத்மா. ரொம்ப உருக்கமா இருக்கு கீதா..

    ReplyDelete
  2. அருமை. இராமனைப் பிரிந்த அயேத்தியா வாசிகளைப் போல பிருந்தாவனத்திலும் சேகம் குடிகொண்டிருந்து எனலாம். எனக்கு ஒரு சந்தோகம். இதுக்கு அப்புறம் ராதையும் கண்ணனும் சந்திக்க வில்லையா?

    ReplyDelete
  3. வாங்க வல்லி. ஜீவாத்மா தான் பரமாத்வாவோட ஐக்கியம் ஆயிடுமே! :)

    ReplyDelete
  4. வாங்க பித்தரே, இல்லை, இதுக்கப்புறம் ராதையும், கண்ணனும் சந்திக்கவில்லை. மேலும் ராதையைப் பற்றிப் படிக்க இந்தச் சுட்டிக்குச் செல்லுங்களேன்.ராதை

    ReplyDelete
  5. வாங்க கோபி, அட??? :))))))

    ReplyDelete