எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 08, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சனின் தந்திரம்!

இருபத்தைந்து வருஷங்களுக்கு மேலாக மதுராவையும் சுற்றுப் புறங்களையும் ஆட்சி
செய்து வந்த கம்சன் ஒருமுறை கூட இம்மாதிரி யாதவ குலப் பிரிவுகளின் தலைவர்களை அழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தியதில்லை. அவன் தந்தையான உக்ரசேனர் முக்கியமான காலகட்டங்களில் தங்கள் குலத் தலைவர்களோடு கலந்து ஆலோசிப்பது உண்டு. ஆனால் கம்சன் அனைத்துப் பிரிவுத் தலைவர்களையும் உதாசீனமே செய்துவந்தான். சிலரைக் கொன்றும் இருக்கிறான். இப்போது கம்சனிடமிருந்து அழைப்பு அதுவும் ஆலோசனைக் கூட்டத்துக்கு எனத் தெரிந்ததுமே அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த திகைப்பு. யாருக்கும் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவர்களுக்குள் பெரியவர்களையும், மூத்தவர்களையும் கலந்து ஆலோசித்தனர். அக்ரூரரையும், வசுதேவரையும் கூட அவ்வாறு சிலர் கலந்து ஆலோசித்தனர் . பல வருடங்கள் அஸ்வமேத யாகக் குதிரையோடு கம்சன் சென்றிருந்தபோது அவர்களில் பலரும் தங்களுக்குள்ள உரிமையையும், செல்வத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டிருந்தனர். சொல்லப் போனால் சிலர் கம்சனை விடப் பலத்தோடும், செல்வத்தோடும் இருந்தனர். ஆனால் அது கம்சனுக்குத் தெரியாவண்ணமும் பாதுகாத்துவந்தனர். இப்போது கம்சன் திரும்பிவிட்ட இவ்வேளையில், தங்கள் அதிகாரமும், செல்வமும், படைபலமும் தங்களிடமிருந்து எந்நாளில் பறிக்கப் படுமோ என்று ஒருவித பயங்கலந்த எதிர்பார்ப்புடனே இருந்தனர்.

தநுர் யாகம் என்ற பெயரில் கம்சனால் அறிவிக்கப் பட்டிருந்த வீரப் போட்டிகளில் பங்கு பெறும் அவர்களின் வீரர்கள் அனைவரும் மறைமுகமாய் வீழ்த்தப் பட்டு கம்சனின் புதிய வீரர்களால் பெருமளவில் கொல்லப் பட்டு வந்தனர். அதுவும் ப்ரத்யோதா என்னதான் பொல்லாதவனாய் இருந்தாலும் அவனும் ஒரு யாதவத் தலைவன். அவனால் காவல் செய்யப் பட்டு வந்த கம்சனின் மாளிகைக் காவலை இப்போது மகத நாட்டுத் தளபதி ஆன வ்ருத்ரிக்னன் ஏற்றிருக்கிறான். மாளிகை முழுதும் மகத வீரர்கள் இப்போது. ஏதோ சதிவேலை நடக்கிறது. கம்சன் மறைமுகமாய் ஏதோ சூழ்ச்சி செய்கின்றான். அனைத்துத் தலைவர்களும் இவ்வாறே நினைத்தனர். எவ்வளவு தூரம் கம்சன் போகின்றான் என்று பார்க்கலாம் என்றும் நினைத்தனர். ஆலோசனைக் கூட்டத்துக்குக் கம்சன் அழைத்த நேரத்துக்கு அனைவரும் வருகை தந்தனர். கிட்டத் தட்ட ஐம்பது தலைவர்கள் பூரண ஆயுதங்கள் தரித்து போர்க்கோலத்தோடேயே வருகை தந்தார்கள். மகதநாட்டு வீரர்களின் நடமாட்டத்தைக் கம்சனின் மாளிகையில் பார்த்ததுமே தங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதையும் அனனவரும் புரிந்து கொண்டனர். பல வருடங்களாக தனி மாளிகையில் சிறை வைக்கப் பட்டிருந்த அரசன் உக்ரசேனனும் கொஞ்சம் தர்மசங்கடத்தோடும், கவலையும் பயமும் ஆக்கிரமிக்க தன் மகன் ஆன கம்சன் அருகே வீற்றிருந்தான். உக்ரசேனன் வெளி மனிதர்களைப் பார்த்தே பல வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வெறுமையான பார்வையோடு சூன்யத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் உக்ரசேனன். கைகள் நடுங்க, உதவிக்குச் சிங்காதனத்தின் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

உக்ரசேனனுக்கு அடுத்து அமர்ந்திருந்த பஹூகா என்னும் யாதவத் தலைவனுக்குத் தொண்ணூறு வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ப்ரத்யோதாவின் தாத்தாவான அவன் உக்ரசேனனுக்கு மாமாவும் ஆவான். குடும்பத்தின் மூத்த தலைவன் பஹூகாவே. உண்மையின் தன் மாமனின் வரவை உக்ரசேனன் மட்டுமல்ல மற்றத் தலைவர்களும் எதிர்பார்க்கவே இல்லை. பஹூகா ஒரு சிவபக்தன். எந்நேரமும் சிவவழிபாடுகள் செய்வதில் ஆழ்ந்திருப்பவன். கம்சனை அவன் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. தான் உண்டு, தன் சிவ வழிபாடு உண்டு என்றே இவ்வளவு வருஷங்களாய் இருந்தான். இத்தனை வருஷங்களுக்குப் பின்னர் வருகை புரிந்திருக்கும் இந்த வயது முதிர்ந்த பஹூகாவின் உடல் ஒரு இரும்புக் கம்பியைப் போல் இன்னமும் விறைப்பாகவே இருக்கிறதே! வயதானதின் முதுமை சுருங்கிய முகத்தில் மட்டுமே தெரிகிறது. கண்களும் பளிச்சிடுகின்றனவே! அனைவரையும் தனித்தனியாக அடையாளம் கண்டு விசாரிக்கின்றானே! இத்தனையிலும் அனைத்துத் தலைவர்கள் மனதிலும் ஒரே எண்ணம் ஓடியது. ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது. எதற்கும் வராத பஹூகாவே இன்று வந்திருக்கின்றான் என்றால் காரணம் இல்லாமல் போகாது. என்னவாய் இருக்கும்????

பஹூகாவின் அருகே வசுதேவரும், கலக்கம் நிறைந்த முகத்தோடும், தர்மசங்கடத்தோடும் அமர்ந்திருந்தார். இந்த எதிர்பாராத கூட்டம் அவரை மிகவும் இம்சைப் படுத்தியது என்பதை அனைவரும் உணரும் வண்ணம் இருந்தார் வசுதேவர். கம்சனின் மறுபுறம் உக்ரசேனனின் தம்பியும், தேவகியின் தகப்பனும் ஆன தேவகனும், அக்ரூரரும் அமர்ந்திருந்தனர். அக்ரூரரைப் பார்த்தாலே அனைவரும் கை எடுத்துக் கும்பிட்டனர். பார்க்கவே ஒரு மஹான் போன்ற தோற்றத்தோடு காக்ஷி அளித்தார் அக்ரூரர். அனைவருமே அவரை ஒரு மரியாதையோடு பார்த்தனர். அக்ரூரரின் அருகே உறைந்து போன பார்வையோடு அமர்ந்திருப்பது யார்?? அட, நம்ம ப்ரத்யோதாவா அது??? ஒவ்வொருவரையும் பார்த்து மனசுக்குள்ளே அலசி எடைப் போட்டுக் கொண்டிருப்பான் போல. ஆனால் அவன் நிலைமை??? அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் அவனைக் கண்டால் பிடிக்காது. இப்போது அவன் எஜமான் ஆன கம்சனுமே அவனை நம்பவில்லை என்பது சர்வ நிச்சயம் ஆகிவிட்டது. அவனுடைய சகோதரர்களும் அங்கே வருகை தந்திருந்தனர். அனைவரும் கம்சனின் வருகைக்குக் காத்திருந்தார்கள். ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பை அனைவரிடமும் காணமுடிந்தது. கம்சன் வந்தான். அதுவும் எப்படி?? அனைவரும் ஆச்சரியப் படும் வண்ணம் சிரித்த முகத்துடனும், கூப்பிய கரங்களோடும் வந்த கம்சன் அனைத்துத் தலைவர்களையும் தனித்தனியாகப் பார்த்து நலம் விசாரித்தான்.

கம்சனின் இந்தப் பணிவு உண்மையானதாய்த் தெரியவில்லை அனைவருக்கும். இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்றே நினைத்தனர்.

“முகத்தின் இனிய நகாஅ அகத்தினா
வஞ்சரை அஞ்சப்படும்”

என வள்ளுவன் சொல்லி இருப்பதை இங்கே நினைவு கூரலாம். ஆகவே அனைவருக்கும் அச்சமாகவே இருந்தது. அது மட்டுமா? கம்சன் தன் கைகளையும் கூப்பிக் கொண்டு தன் அப்பாவான உக்ரசேனரையும், சிறிய பாட்டனாரான வயது முதிர்ந்த பஹூகாவையும் பார்த்து, வணங்கினான். அனைவரையும் தநுர் யாகத்தின் கொண்டாட்டங்களில் பங்கு பெறுமாறும் கேட்டுக் கொண்டான். மதுராவை ஒரு பிரசித்தி பெற்ற ராஜ்ஜியமாகத் தான் மாற்றி இருப்பதாகவும், மேன்மேலும் மதுராவுக்குச் சிறப்பு சேர்க்க ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாயும், அதற்கான ஒரு முன்னேற்பாடே தநுர் யாகம் எனவும் அந்த யாகத்தில் அனைவரும் பங்கேற்குமாறும் அதை வெற்றி அடையச் செய்யுமாறும் கூறினான். யாரும் பேசவே இல்லை. யாருக்கும் கம்சனின் இந்தத் திடீர் இன்சொல்லும், பணிவுக்கான காரணமும் பிடிபடவே இல்லை. ஏழுநாள் கொண்டாங்களுக்கு ஏற்பாடு செய்திருப்பதாயும், நடன நிகழ்ச்சிகள், பாடல் நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள், மல்யுத்தப் போட்டிகள், ரதப் போட்டிகள் என அனைத்துத் தரப்பு வீர விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்திருப்பதாகவும், அனைத்துத் தலைவர்களும் தங்கள் வீரர்களையும், குடும்பங்களையும் அதில் பங்குபெறச் செய்யவேண்டும் எனவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

7 comments:

 1. ரொம்ப நல்ல விஷயம் பண்றீங்க கீதா..நறைய பேர் விஷயம் தெரியாமலே இதுதான் அதுதான் எண்டு பீலா விடுகிறார்கள்..ரொம்ப நல்லா தெளிவா எழுதிருக்கீங்க..மேலும் படிக்க ஆவலாக உள்ளேன்..  அன்புடன்,

  அம்மு.

  ReplyDelete
 2. அடுத்து போட்டிகளா!!!நன்றாக கொண்டு போறிங்க தலைவி ;)

  ReplyDelete
 3. வாங்க அம்மு, நீங்களும் படித்துவருவதற்கு ரொம்ப நன்றிம்மா.

  ReplyDelete
 4. வாங்க கோபி, போட்டிக்கு முன்னால் சில ஏற்பாடுகள் செய்யணுமில்ல??? :))))))

  ReplyDelete
 5. நான் இன்னைக்கிதான் இந்த கட்டுரையை பார்த்தேன், விரைவில் அனைத்து கட்டுரைகளையும் படித்துவிடுகின்றேன். நல்ல விசயம் தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 6. இது கே எம் முன்ஷியொட ஸ்டோரீஸ் ஆ? நான் படிச்சதே இல்லை. நிறைய முந்தி படிச்சு இருக்காத இன்ஃபோர்மேஷன்.
  நான் நாரத முனி கம்சன் கிட்ட வந்து க்ருஷ்ணன் பலராமன் பத்தி சொல்லி கம்சன் அவாளைகொல்ல உத்தேசித்து அக்ருரரை தூதுவிட்டு கூடிண்டு வர வைக்கறதா படிச்சிருக்கேன்.

  ஜராசந்தன் கம்சன் மாமனார் தானே?இல்லையா?

  ReplyDelete
 7. ஆமாம், ஜெயஸ்ரீ, ஜராசந்தன் கம்சனின் மாமனார் தான். முன்ஷி அவர்கள் எழுதினதை ஒட்டியே எழுதி வருகிறேன். நன்றிம்மா.

  ReplyDelete