எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 27, 2009

கண்ணன் வருவான்,கதை சொல்லுவான், - கம்சனின் கொடூரம்!

ம்ம்ம்ம் யாதவ குலத்திலேயே மூத்த தலைவன், அதிலும் நம் சொந்த யாதவக்கிளையான அந்தகக் குலத்தின் மூத்த தலைவன், வயதில் மூத்தவன், அனைவராலும் நன்கு மதிக்கப் படுபவன், இவனை நான் வரக்கூடாது என்றோ, சந்திக்கமுடியாது என்றோ சொல்வது சரியாய் இருக்காது. வேறு வழியில்லை. தன்னை நிதானித்துக் கொண்ட கம்சன், சிங்காதனத்தில் இருந்து இறங்கிச் சற்று முன்னால் சென்று கிழவரை வரவேற்கத் தயாரானான். இந்த வயதுக்கும் முதுகும், முதுகுத் தண்டும், விறைப்பாக நிமிர்ந்து இருக்க, கிழவன் பஹூகா தன் பிள்ளையின் தோள்களைப் பிடித்த வண்ணம் உள்ளே நுழைந்தான். “ஆஹா, வரவேண்டும், வரவேண்டும், சிறிய பாட்டனாருக்கு என் வணக்கங்கள்! தாங்கள் ஏன் சிரமப் படவேண்டும் பாட்டனாரே! சொல்லி அனுப்பி இருந்தால் நானே வந்திருப்பேனே!”

“யாரு இவங்க எல்லாம்?” கம்சன் சொன்னதுக்குப் பதில் சொல்லாமல் ப்ரத்யோதாவையும் வ்ருதிர்கனனையும் தன் நெற்றியில் கை வைத்த வண்ணம் கூர்ந்து பார்த்த கிழவன், “ஓ, இவர்களா? “ என்று கேட்டுக் கொண்டான். “அமருங்கள் பாட்டனாரே!” என்று ஆசனத்தைக் காட்டினான் கம்சன். “எனக்கு என்ன கட்டளை தங்களிடமிருந்து?” என்று உள்ளூரப் போலிப் பணிவுடன் கிழவனிடம் கேட்கவும் செய்தான். கிழவனின் தைரியமான கண்கள் கம்சனை ஏறிட்டன. “இதோ பார், கம்சா, கடைசியாக என்னுடைய புத்திமதியை நம் குல நன்மையை உத்தேசித்து உனக்குச் சொல்ல வந்துள்ளேன். இப்போது இருக்கும் யாதவகுலத்தலைவர்களிலேயே வயதிலும், அனுபவத்திலும் மூத்தவனாக நான் ஒருவனே இருக்கின்றேன். அதனால் இந்த உரிமையை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.” என்றார் பஹூகா. “ஆம்” என்ற ஒற்றைச் சொல்லோடு முடித்துக் கொண்டான் கம்சன்.

“அக்ரூரன் வசுதேவனின் பிள்ளையைக் கூட்டி வரச் சென்றிருப்பதாய் அறிகிறேன். நாளைக் காலைக்குள் அவர்கள் வந்துவிடுவார்களோ?”

“ஆம்” என்றான் கம்சன்.

“நீ பிறந்ததில் இருந்தே உன்னை நான் அறிவேன் கம்சா! நீ அந்தப் பிள்ளைகளை விட்டு வைக்க மாட்டாய், உன் வழியில் இருந்து அகற்றவே முயலுவாய்!”

“நான் ஏன் அந்தப்பிள்ளைகளிடம் விரோதம் பாராட்டவேண்டும்? எனக்கும் அவங்களுக்கும் நடுவே என்ன வந்தது?”

“கம்சா, நடிக்காதே! நாரதரின் தீர்க்க தரிசனத்தையும், அவர் தேவகியின் திருமண நாளன்று சொன்னதையும் நீ மறந்திருக்கவும் மாட்டாய். அதற்காகப்பயப்படவும் செய்கிறாய். அதை மறுக்கவோ, மறைக்கவோ செய்யாதே! என்னை ஏமாற்ற நீ நினைத்தால் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளுவாய்! நாரதர் சொன்னவை பொய்யாக வேண்டும், நீ அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்!”

“ஹா, ஹா, ஹா, அந்த முட்டாள் முனி நாரதன் சொன்னதை அந்த முட்டாள் தனமான வார்த்தைகளை யார் நம்பறாங்க? நான் நம்பலை, அதுசரி, பாட்டனாரே? அது மட்டும் உண்மையாய் இருந்தால் , நான் எப்படி அதைப் பொய்யாக்கமுடியும்னு சொல்றீங்க?”

“குழந்தாய், செய்த, செய்யும், செய்யப்போகின்ற குற்றங்களுக்காக நீ வருந்தி மன்னிப்புக் கேள். வருந்தி மன்னிப்புக் கேட்கும் ஒருவன் இறந்தவனாகவும், அதன்பின்னர் அவன் வாழும் வாழ்க்கையைப் புனர் ஜென்மமாகவும் ஆன்றோர் கருதுவார்கள். இப்போது உனக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கடைசி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீ மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்டுவிடு. நடந்தவைகள் அனைத்துக்குமாய்! உனக்கு மன்னிப்பும் கிடைக்கும், நீ இறந்தவனாகி, மீண்டும் புனர்ஜென்மமும் பெறுவாய்! உனக்கான தண்டனையும் கிடைத்தாற்போலவும், நாரதரின் தீர்க்கதரிசனம் பலித்தாற்போலவும் ஆகிவிடும். மன்னிப்புக் கேள், குழந்தாய், மன்னிப்புக் கேள், அதைவிடச் சிறந்ததொரு பரிகாரமே இல்லை!”

“ஹாஆஆ, நான் எப்படி அதை உண்மை என நம்பமுடியும், என் அருமைப் பாட்டனாரே! மன்னிப்புக் கேட்ட பின்னரும் என்னைக் கொன்றுவிட்டால்?? அதுவும் நடக்கக்கூடியதே!”

இல்லையப்பா, இல்லை, அது எல்லாம் மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்கவில்லை எனில் நடக்கும் ஒன்று. அப்படி ஒருவேளை வசுதேவனின் பிள்ளை கிருஷ்ணன் அந்தப்பரம்பொருளே இல்லை என்றாலும், நீ மட்டும் மன்னிப்புக் கேட்டாயானால் உன் மக்களே உன்னைக் கைவிடமாட்டார்கள். உன்னிடம் அதீத அன்பு செலுத்துவார்கள். அப்படி இல்லாமல் வசுதேவனின் பிள்ளை அனைவரும் சொல்லுவதுபோல, அந்தப் பரந்தாமனே என்றாலும், சரி, நிச்சயம் அவனுடைய அருள் உன்னைக்காக்கும். நீயும் முன்னைவிடப் பலம் பொருந்தியவனாய் ஆகிவிடுவாய்.”

“எவ்வாறு நான் மன்னிப்புக்கேட்கவேண்டும், பாட்டானாரே?” பரிகாசமான தொனியில் கம்சன் கேட்டான்.

“ம்ம்ம்ம் நான் சொல்லுவதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்பது புரிகிறது. ஆனாலும் நான் இங்கே வந்ததின் காரணமே நல்வழியை, உண்மையான சிறந்த வழியை உனக்குக் காட்டவே. உன்னால் எவ்வளவு முடியுமோ அதைவிட மேலாக வசுதேவனையும், தேவகியையும் நீ துன்புறுத்திவிட்டாய். யாதவகுலத் தலைவர்களை ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கி கிட்டத் தட்ட அடிமைகளாக்கிவிட்டாய். கம்சா, நேர்மையான வேதம் அறிந்த நல்ல பிராமண ஆசாரியர்களை மதுராவின் பக்கமே நீ வரவிடுவதில்லை. மதுரா இன்று ஒரு நரகம் என்றால் மிகையாகாது.” கிழவன் சற்றே நிறுத்தினான்.

“ம்ம்ம்ம், மேலே!” என்றான் கம்சன் ஏளனம் பொங்க.

கிழவனின் குரல் ஒரு தீர்க்கதரிசியின் நிச்சயத்தோடும், அவன் கண்களில் புதிதாய்த் தோன்றிய ஒரு ஒளியோடும், மேலும் சொல்லுவான். குரலில் ஒரு நிச்சயமும், உண்மைத்தன்மையும் காணப்பட்டது. “இதோ பார் இளவரசனே, எங்களைப் பூட்டி வைத்திருக்கும் இந்த அடிமைத் தளையிலிருந்து அனைவரையும் நீ விடுவிக்குமாறு அனைத்து யாதவர்கள் சார்பிலும், எல்லாருக்கும் பெரியவன் என்ற காரணத்திலும் உனக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். வசுதேவனையும், தேவகியையும், பிழைத்திருக்கும் அவர்களின் இரு பிள்ளைகளையும் சர்வ சுதந்திரத்துடனும், பயமில்லாமலும் வாழவிடு. இங்கிருந்து கோபத்திலும், பயத்திலும் வேறு நாடுகளுக்கும், நகரங்களுக்கும் சென்று வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து யாதவர்களையும் சகல மரியாதையோடு திரும்ப அழை. மீண்டும் வீடுகளில் வேதம் முழங்கட்டும். அதற்கு ஏற்ற பிராம்மணர்களையும் முன்போல் பயமில்லாமல் வாழச் செய். உனக்குப் பாதுகாப்பு என நினைத்து நீ ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் இந்த வெளிநாட்டானை அவன் நாட்டுக்குத் திருப்பி அனுப்பு. இவனைக் கண்டாலே நம் நாட்டு மக்கள் பயத்தோடு வெறுக்கின்றனர். எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் தந்தை, இந்த நாட்டின் அரசன் உக்ரசேனரை சிறையிலிருந்து விடுவித்து முன்போல் சுதந்திரமாக நாட்டை ஆளச் செய்வாய். அவருக்கு அடுத்து எப்படி இருந்தாலும் நீ தானே நாட்டை ஆளப் போகின்றாய்? இதை எல்லாம் செய்தால் நீ உன் மக்களைச் சுதந்திரமாக வாழவைத்தவன் ஆவாய்!”

“ம்ம்ம்ம்ம்ம்??? இத்தனையும் நான் செய்தாகவேண்டும், என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ள?? இவை எல்லாம் என்னைப் புனிதப் படுத்திவிடுமா??? எனக்கு நானே பேதிமருந்து கொடுத்துக் கொண்டு என்னை நானே சுத்தப் படுத்திக் கொள்ளவேண்டும் என்கிறீர்கள்? அப்புறம் என்ன?? ம்ம்ம்ம்ம்??” கம்சன் மீண்டும் எகத்தாளமாய்க் கேள்வி கேட்டான்.

“அப்புறம் என்ன?? இறைவனின் மன்னிப்பு உனக்குக் கிடைக்கும். மக்கள் உன் மீது அன்பு செலுத்துவார்கள். உன் யாதவகுலமே உனக்குக் கடமைப் பட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் கிருஷ்ணன், உண்மையிலேயே அவன் கடவுளே என்றால் அவனின் பரிபூரண அருளுக்கு நீ பாத்திரன் ஆவாய்!”

“பாட்டனாரே, எனக்கு யோசிக்க அவகாசம் கொடுங்கள், நீங்கள் சொன்னதை எல்லாம் புரட்டிப் பார்த்து யோசிக்கிறேன். இப்போவே நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கமுடியாது. உங்க யோசனை என்னமோ நன்றாகவே இருக்கிறது. ஆனாலும் எனக்கு யோசிக்கணும்.” என்றான் கம்சன்.

கிழவன் கண்கள் திடீரென ஒளிவீசியது. அவனுக்கு வயது தொண்ணூறு ஆகிவிட்டது என்பதை நம்பமுடியாமல் அவன் திடீரென இளைஞனோ என எண்ணும்படிக் காட்சி அளித்தான். கம்பீரமாய்த் தலையைத் தூக்கிக் கம்சனைப் பார்த்து, “நான் அறிவேன், நீ எந்தப் பேச்சையும் கேட்கமாட்டாய். உனக்குப் புத்திமதி சொல்லுவது வீண் என்பதை நன்கு அறிவேன். ஆனாலும் உனக்கு நான் கடைசி எச்சரிக்கை ஒன்று கொடுக்கிறேன். தொடர்ந்து பல வருடங்களாக யாதவர்களுக்கு நீ ஒரு சாட்டையைப் போல் திகழ்ந்து உன் செய்கைகளாலும், பேச்சாலும் அவர்களைத் துன்புறுத்தி வருகிறாய். ஆனால், கேள், கம்சா, கிருஷ்ண வாசுதேவனை உன்னால் வெல்ல முடியாது. அவனை அழிக்கலாம் என மனப்பால் குடிக்காதே. இந்த உலகின் கடைசி யாதவன் இருக்கும் வரையில் கிருஷ்ணவாசுதேவன் அவனைக் காக்க இருப்பான். இருந்தே தீருவான். யாதவர்களுக்கு அவனே கடைசி நம்பிக்கை, ஏன் உனக்கும் கூட அவனே கடைசி நம்பிக்கை, அவன் உன்னை மன்னித்தால் உண்டு, ஆனால் அதைப் புரிந்து நடந்து கொள்பவனாய் நீ இல்லை, பரிதாபம்தான்!”

“ஆஹா, பாட்டனாரே, என்னைப்பயமுறுத்துகிறாப்போல் இருக்கிறதே! எனக்கு எது நல்லதோ அதை நான் செய்தேன், செய்கிறேன், செய்வேன்.”

"எல்லாம் வல்ல சங்கரனும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் மஹாதேவனும் ஆன அந்த ஈசனின் கடுங்கோபத்தில் நீ விழாமல் இருக்கவேண்டும், உன்னை நீ மாற்றிக் கொண்டால் ஈசனின் கடுங்கோபத்தில் இருந்து தப்பிக்கலாம்.”

“ஹா...ஹா....ஹா....., எனக்கு எந்தக் கடவுளரிடமும் பயம் என்பதே இல்லை!” கம்சன் உடனடியாகப் பதில் சொன்னான்.

"இத்தனை திமிரோடும்,கடவுளிடம் கூடப்பயமின்றியும் இருக்கும் மனிதனுக்குத் துன்பமே விளையும். அவனால் ஆட்சி செய்யப் படும் மக்களும் துன்பமே அனுபவிப்பார்கள், மக்கள் எத்தனை நல்லவர்களாய் இருந்தாலும். அரசன் நல்லவனாய் இருந்தாலே அவர்களுக்கும் நன்மைகள் கிட்டும் “

“ஓஹோஹோ! இருங்க பாட்டனாரே, இருங்க,” கம்சன் சடாரெனத் திரும்பி வ்ருதிர்கனனைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தான். அவனும் அதைப் புரிந்து கொண்டாற்போல் கம்சனை வணங்கிவிட்டு அறையை விட்டு அகன்றான். “பாட்டனாரே, நீங்கள் சொல்லுவதே சரி!” இன்னும் பரிகாசம் மாறாக் குரலிலேயே கம்சன் பேசினான். “கிருஷ்ணனை நான் ஒன்றும் செய்யப் போவதில்லை, உங்களுக்கு என் வாக்குறுதியைக் கொடுக்கிறேன். ப்ரத்யோதா, நீயும் பார்ப்பாய்! அதற்கான ஏற்பாடுகளை நீயே செய்!”

“உத்தரவு அரசே!” கம்சனின் இந்தப் பரிகாசச் சிரிப்பின் பின்னால் பல விஷயங்கள் மறைந்திருக்கிறதை ப்ரத்யோதா புரிந்து கொண்டான். “ உன் வார்த்தைகளை நீ காப்பாற்றுவாய் என நினைக்கிறேன் குழந்தாய்,” என்று சொல்லிக் கொண்டே எழுந்தான் தொண்ணூறு வயதான அந்தகத் தலைவன் பஹூகா. ப்ரத்யோதாவும் அவனுடன் செல்லத் திரும்பியபோது கம்சன் ப்ரத்யோதாவை மட்டும் அழைத்தான்.

“ப்ரத்யோதா, கிழவருக்குக் கொடுத்த என்னுடைய வாக்குறுதி நினைவிலிருக்கட்டும். நான் கிருஷ்ணனை எந்தத் தொந்திரவும் செய்யமாட்டேன். ஆனால் அதற்காக அவனை என் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்திவிடாதே. அந்தத் தவற்றை மட்டும் செய்துவிடாதே. “ ஒரு மாதிரியான பரிகாசம் மீதேறிப் போன குரலில் சிரித்தான் கம்சன். “தங்கள் உத்தரவுப்படியே அரசே!.” மிகவும் பிரயத்தனப்பட்டுக் கோபத்தை அடக்கியதால் ப்ரத்யோதாவின் குரல் கம்மியது. கம்சனை நமஸ்கரித்து வணங்கிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான் ப்ரத்யோதா. அவன் காதுகளில் ஆஹா, இது என்ன சப்தம், வாட்கள், வாட்களோடு மோதுகின்றதோ? யாருக்கு என்ன?? ஏதோ ஆபத்து! உடனே போய் உதவணும். ப்ரத்யோதா ஓடினான்.

அறைக்கு வெளியே நடைபாதையில் சென்று கொண்டிருந்த ப்ரத்யோதா வேகமாய்ச் செல்லும்போது அவன் கண்களுக்கு முன்னால் கொஞ்ச தூரத்தில் ஒரு வாள் வீழ்த்தப்பட்டுக் கீழே விழுவதும், ஒரு தலைவனுக்குரியவரின் கிரீடம் ரத்தத்தில் தோய்ந்து தூக்கி வீசப்பட்டதும் தென்பட்டது. முன்னால் நடப்பவர்களின் காலடிச் சப்தங்களைத் தொடர்ந்த ப்ரத்யோதா அங்கே பாதை ஒரு இருட்டான முடுக்கில் திரும்பவே வேகமாய்த் திரும்பினான். ப்ரத்யோதாவின் கண்களில் இரு உடல்களைத் தூக்கிச் செல்லும் மகத வீரர்கள் தென்பட்டனர். ப்ரத்யோதாவுக்கு உலகமே சுழன்றது. தன்னைத் தானே கட்டுப் படுத்திக் கொள்ளமுடியாத ப்ரத்யோதா அருகிலிருந்த ஒரு தூணைப் பிடித்துச் சமாளித்துக் கொண்டான். கிட்டத் தட்ட அரை மணிக்கு மேல் மயக்க நிலையிலேயே இருந்த அவன் கண்விழித்துப்பார்த்து கண்களில் கண்ணீர் பொங்க தன் உதடுகளைத் தானே ரத்தம் வரும் வரையில் கடித்த வண்ணம் தீவிர சிந்தனையில் இருந்தான். மெல்ல மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

5 comments:

  1. ரொம்ப INTERESTING MRS SHIVAM. இந்த பேரெல்லாம் கேட்டதே இல்லை. நன்னா போறது

    ReplyDelete
  2. வினாச காலே விபரீத புத்தி என்பது போல கம்சனின் நடத்தை இருக்கின்றது. கம்சனின் கதை முடியும் நேரம் நெருங்குவதை அறிய முடிகின்றது. இந்த நடையில் நீங்கள் என் இராமனின் இராமயனத்தை எழுதினால் நன்றாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  3. வந்துக்கிட்டே இருக்கேன் ;)

    ReplyDelete