அன்று விடிகாலையிலேயே நந்தன் தன் ஆட்களுடனும், கம்சனுக்கான கப்பப் பொருட்களுடனும், தன் வண்டிகளைத் தயார் செய்து மதுராவை நோக்கிய பிரயாணத்தை ஆரம்பித்துவிட்டான். அக்ரூரரும் தான் வந்த ரதத்தின் குதிரைகளைத் தயார் செய்து, அவற்றை ரதத்தில் பூட்டிக் கிளம்பத் தயாராக விருந்தாவனத்தின் வெளிநகரில் கண்ணன் வரவுக்காகக் காத்திருந்தார். விருந்தாவனத்திலோ, கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் விடைபெற்றுக் கொள்ளப்பல நண்பர்கள், பெரியோர்கள், சிறியோர்கள், ஒத்த வயதுடைய இளைஞர்கள், இளம்பெண்கள். ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டிருந்தனர் என்றாலும் விருந்தாவனத்து மக்களுக்கு அவர்களின் கண்ணின் கருமணியான கண்ணன் அங்கிருந்து செல்வதில் அவ்வளவு இஷ்டம் இல்லைதான். என்றாலும் கம்சனின் வார்த்தையை மீற முடியாதே! கண்ணனைப் பார்க்க அனைவரும் கூடிவிட்டனர். அவர்களோடு கூட விருந்தாவனத்து ஆவினங்களும் கூடிவிட்டன, கண்ணன் பிரிவைத் தாங்க முடியாமல். சற்றுத் தொலைவில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அக்ரூரருக்கோ ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். கிராம மக்கள் புடை சூழ வந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் தன் தலையில் சூடி இருந்த மயிலிறகால் கண்ணன் தனித்துத் தெரிந்தான். பலராமனோ எனில் அவனுடைய கட்டுமஸ்தான தேகத்தால் தனித்துக் காணப்பட்டான். இருவரும் அக்ரூரர் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகே வந்ததும், அக்ரூரரை நமஸ்கரித்துவிட்டுப் பின்னர் அந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் விம்மி விம்மி அழுது கொண்டிருந்த யசோதையை நோக்கினார்கள்.
இத்தனை வருஷங்களாய்த் தான் வளர்த்த தன் அருமை மகன் தன்னுடையவன் அல்ல என்னும் உண்மையையே யசோதையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதோடு அவனைக் கம்சன் அழைத்திருப்பதையும், அங்கே அவனுக்குக் காத்திருக்கும் நிகழ்வுகளையும் எண்ணும்போது யசோதையின் இதயம் வெடித்துச் சுக்குநூறாகிவிடும்போல் இருந்தது. கண்ணன் தன் தாயின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். இந்த நிமிஷம் வரையிலும் தான் வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த பிள்ளை என்ற நினைப்பே இல்லாமல் தன்னை ஒரு இடைப்பிள்ளை என்றே எண்ணி இருந்த கண்ணன் அந்த நினைப்பு மாறாமலேயே தன் தாயைத் தேற்றினான். யசோதையோ தன் உயிரே தன்னை விட்டுப் பிரிகிறதே என்ற துக்கத்துடன் கண்ணனை இரு கரங்களாலும் தூக்கி அவனைக் கட்டி அணைத்துவிட்டு பலராமனையும் ஆசீர்வதித்தாள். அதோ! அது யார்? மணப்பெண்ணின் உடையில் இத்தனை அழகோடும் யெளவனத்தோடும்? ஆனால் முகம் மகிழ்வாய்த் தெரியவே இல்லையே. உலகத்து சோகமெல்லாம் அந்த முகத்தில் குடி கொண்டிருக்கிறதே! ஆஹா, இவள் நம் ராதை தான். திருமண உடையில் காட்சி கொடுக்கிறாளே. ஆம், கண்ணன் வாக்களித்திருந்தபடி அவளைத் திருமணம் செய்து கொண்டிருந்தான். உடனேயே மதுரா செல்லவும் தயாராகிவிட்டான். அங்கே பெரியோர் பலரும் இருப்பதால் புது மணப்பெண்ணுக்கே உரிய இயல்பான நாணமும், மரியாதையும் வெளிப்படையாகத் துலங்கத் தன் முகத்தை முந்தானையின் ஒரு பகுதியால் மூடிக் கொண்டிருந்தாள் ராதை. மேகங்கள் சூழ்ந்த வான மண்டலத்தில் அவ்வப்போது வெளிக்கிளம்பும் சூரியனைப் போலவும், அவனின் ஒளிவீசும் கிரணங்களைப் போலவும், துக்க மேகம் சூழ்ந்த அவள் முகத்தின் இரு கண்களில் இருந்து “பளிச், பளிச்” என ஒரு ஒளி,அதிலிருந்து ஒரு தீவிரச் செய்தி கண்ணனுக்குப் போய்க் கொண்டே இருந்தது. வைத்த கண் வாங்காமல் சில சமயம் கண்ணனையே பார்த்தவண்ணமும் இருந்தாள் ராதை. கண்ணன் புரிந்து கொண்டானா? ஆம், புரிந்து கொண்டவனாகவே காணப்பட்டான் கண்ணனும். அவ்வப்போது அவனும் ராதை இருக்குமிடம் நோக்கி ஒரு சிறு புன்னகையாலும், ஒரு சிறு கண் சிமிட்டலாலும், தலை அசைப்பாலும் தன் பதிலை அவளுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தான். இந்த உலகிலேயே நீ தான் எனக்கு முக்கியம் வேறு யாருமில்லை எனத் தெளிவாய்ச் சொல்லிற்று ராதையின் கண்களும், முகமும். கண்ணனும் அதைப் புரிந்து கொண்டாற்போலவே பதிலும் கொடுத்தான். அனைவரும் கூடி இருக்கும் இந்த மக்கள் கூட்டத்தில் தாங்கள் இருவர் மட்டும் தனித்து உரையாடுவதோ, அல்லது ராதையிடம் கண்ணன் தனித்துப் பேசி விடைபெறுதலோ சாத்தியமில்லை என்பதையும் இருவரும் உணர்ந்திருந்தனர்.
எதுவும் ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். நேரம் ஆகிவிட்டது. அக்ரூரர் அவசரப் படுத்தினார். அனைவர் கண்களும் குளமென நிரம்பி வழிய, கண்ணன் அரை மனதோடு வேகமாய்த் திரும்பி ரதத்தில் ஏறிக் கொண்டிருந்த பலராமனைப் பின் தொடர்ந்து தானும் ஏறிக் கொண்டான். அக்ரூரர் தன் சாட்டையைச் சொடுக்கினார். ராதைக்குத் தன் உயிரை யாரோ சொடுக்குவது போல் பட்டது. குதிரைகள் ஓட ஆரம்பித்தன. தன் உயிரும், உடலும், பார்வையும், நினைவும், உறக்கமும், விழிப்பும், கனவும், நனவும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் அனைத்தும் தன்னிடமிருந்து விலகி வேறாக நின்று தன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவது தெரிந்தது ராதைக்கு. ஓடிக் கொண்டிருந்த ரதத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராதைக்கு நிற்க முடியாமல் தன் அருகில் இருந்த யசோதா அம்மாவின் கரங்களைப் பிடித்துக் கொண்டாள். நடப்பது என்னவென யசோதை நிதானிப்பதற்குள்ளாக, ராதை வாயிலிருந்து, “க்றீச்” என இயலாமையுடன் கூடிய ஒரு நெஞ்சைப் பிளக்கும் சப்தம் வந்தது. அடுத்த கணம் ராதை மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள்.
அனைத்தையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அக்ரூரருக்குக் கண்ணனின் இந்தக் காதலால் கண்ணன் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டது என்றே சொல்லலாம். இந்தப் பையன் விளையாட்டுப் பிள்ளை, தலையில் மயில் பீலியைச் சூடிக் கொண்டு தலை மயிர் முகமெங்கும் வழிய, இத்தனை அழகோடும், வனப்பான தேகத்தோடும், அனைவரையும் கவரும் வண்ணமான இயல்போடும் கூடிய இந்த இளைஞனுக்காகவா இத்தனை நாட்கள் காத்திருந்தோம்? கிருஷ்ணன் செய்த ஒவ்வொரு அற்புதச் செயல்களையும் பற்றிக் கேள்விப்பட்டபோதெல்லாம் நினைத்த அவருடைய ரக்ஷகன் கிருஷ்ணன் இவன் தானா? அனைவராலும் சொல்லப் பட்ட பெரிதும் பாராட்டப் பட்ட அந்த வீரச் செயல்களை எல்லாம் செய்தது இவனா? அல்லது இதோ பலவானாக நிற்கின்றானே இவன் அண்ணன இவன் செய்ததோ ? இல்லாட்டி விருந்தாவனத்து மக்களின் அதீதக் கற்பனையோ? ம்ம்ம்ம்ம்???இந்தப் பையன் கிருஷ்ணன், இந்த விருந்தாவனத்துப் பெண்களின் கண்மணி என்றும் சொல்கின்றனர். அனைத்துப் பெண்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளான் இவன் இந்த ச்சிறு வயதிலேயே. ம்ம்ம்ம்ம்??? மேலும் இவன் இந்தப் பெண்களோடு கூடி யமுனைக்கரையில் “ராஸ்” எனப்படும் நாட்டியத்தை ஆடிப் பாடுவானாம். புல்லாங்குழல் இசைப்பானாமே! ஆனால் நேற்று இரவு திடீரென இந்தக் கிராமத்து இடைப்பெண் ஒருத்தியை உடனேயே திருமணம் செய்து கொள்ளவேண்டும் எனப் பிடிவாதம் பிடித்துத் திருமணமும் செய்து கொண்டுவிட்டானே? பெண்களிடம் அதிக மோகம் கொண்டவனோ? இவன் எப்படிக் கம்சனை எதிர்கொள்ளப் போகிறான்? கர்காசாரியார் அவ்வளவு உயர்வாய்ச் சொன்னாரே, இவனைப் பற்றி. அவர் ஒருவேளை தன் மாணாக்கன் என்பதால் மிகைப்படுத்திச் சொல்லி இருப்பாரோ? இவனைப் பார்த்தால் நாரதர் சொன்ன தீர்க்க தரிசனத்தில் உள்ள நம் ரக்ஷகன் அடையாளங்கள் எதுவும் காணப்படவே இல்லை. இவனைப் பார்த்தால் ஒரு அருளாளன் போலவும் தென்படவே இல்லை. ம்ம்ம்ம் என்றாலும் இளைஞன். வசீகரமானவன். அதுதான் சொல்லிக் கொள்ளும்படியான ஒன்று.
கண்ணன் அக்ரூரரைப் பார்த்துச் சிரித்தான். அக்ரூரருக்குத் தூக்கிப் போட்டது. என்ன இவன்? சிரிப்பு இப்படி இருக்கிறது? அவன் உதடுகளால் மட்டும் சிரிக்கவில்லை. கண்களும் சிரிக்கின்றன. இது என்ன ஆச்சரியம் அவன் கன்னங்களும் சிரிப்பால் குழைந்து ஒளிவிடுகின்றன. ஆஹா, அவன் உடலே சிரிப்பால் ஒரு தீபத்தை ஏற்றியது போல் காட்சி அளிக்கிறதே. அக்ரூரரால் திரும்பிச் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. அவரும் சிரித்தார். கண்ணன் கேட்டான், “ மாமா, என் தகப்பன் நந்தன் எப்போது மதுரா வந்தடைவார்? நமக்கு முன்னேயே போய்விடுவாரா?”
“அவங்க மதியத்துக்குள் போவார்கள். நாம் சில நாழிகைகளில் சென்றுவிடலாம். அருமையான குதிரைகள் நம்முடையவை. வேகமாய்ச் செல்லும் திறன் கொண்டவை.” என்றார் அக்ரூரர். மிகவும் கஷ்டத்துடன் தன்னுடைய பெரிய உடலை உள்ளே நுழைத்துக் கொண்டு, கால்களை ரதத்தின் வெளியே தொங்கப் போட்டிருந்த பலராமன் குதிரைகள் ஓடும் டிக் டாக் டிக் டாக் சப்தத்தைத் தான் மிகவும் ரசிப்பதாய்ச் சொன்னான். அக்ரூரரை இன்னும் வேகமாய் ரதத்தைச் செலுத்தச் சொன்னான். அக்ரூரர் அண்ணனுக்கும், தம்பிக்கும் உள்ள வித்தியாசங்களை எண்ணி வியந்தார். அண்ணனோ வயதுக்கு மீறி வளர்ந்திருந்தாலும் ஒரு சிறு குழந்தை போல் குதிரைகள் ரதம் ஓட்டுவதையும், அவற்றின் வேகத்தையும் ரசித்துச் சிரிக்கிறான். ஆனால் அவனை விடச் சின்னவனான தம்பியோ தன்னை உணர்ந்தவனாய், தனக்குள் கட்டுப்பாடு விதித்துக் கொண்டவனாய், இந்த அனுபவம் தனக்கு ஒன்றும் புதியதல்ல, என்னும் பாணியில் அமர்ந்திருக்கிறான். “மாமா, தந்தை அங்கே போய்ச் சேரும் முன்னர் நாம் செல்வது சரியாய் இருக்குமா?” கண்ணன் கேட்டான் அக்ரூரரை. “ம்ம்ம்ம்ம்ம் நீங்கள் மிகவும் வேண்டிக் கொண்டதால் உங்களோடு வந்தேன். இல்லை எனில் தந்தையோடு மாட்டு வண்டிகளிலோ அல்லது நடந்தோ செல்வதையே நான் விரும்புவேன்.” என்றான் கண்ணன் மேலும். அக்ரூரருக்கு ஒரே வியப்பு. தன் தகப்பன் நந்தன் இல்லை எனத் தெரிந்தும் இன்னும் நந்தனையே தந்தை எனச் சொந்தம் கொண்டாடும், கண்ணனை நினைத்து வியந்தார். அதுவும் பரிபூரண மனதோடு சொல்லும் வார்த்தைகள் என்பதையும் அக்ரூரரால் உணரமுடிந்தது. கண்ணனைப் பார்த்து, “மதுராபுரி முழுதும் உனக்காகவே காத்திருக்கிறது. உன் வரவை எண்ணியே அனைத்து மக்களும் தவம் கிடக்கிறார்கள். அவர்களுக்குப் பொறுமை போய்விட்டது. வசுதேவரும், தேவகியும் உன்னை எப்போது காண்போம் என ஆவலோடு இருக்கின்றனர்.” என்றார்.
”பதினாறு வருடங்கள் காத்திருந்த என்னைப் பெற்ற என் தாய், தந்தையருக்கு, இந்த சில நாழிகைகள் காத்திருக்க முடியாதா? ஆனால் மாமா, என் தந்தையான நந்தன் மாட்டு வண்டியிலோ அல்லது நடந்தோ மதுராவை நோக்கி வரும் வேளையில் நான் மட்டும் ரதத்தில் மதுராவினுள் நுழைய நான் சிறிதும் விரும்பவில்லை.” தீர்மானமாக இருந்தது கண்ணன் குரல். “குழந்தாய், விருந்தாவனத்தை நினையாதே. மற” என்றார் அக்ரூரர். “ நீ இப்போது ஒரு இளவரசன். வசுதேவனின் மகன் என்பதை மட்டும் நினை.” வெட்கம் மீதூறச் சிரித்த கண்ணன், “இல்லை, மாமா, நான் விருந்தாவனத்து இடைக்குலத் தலைவன் ஆன நந்தனின் மகன் என்பதை ஒருபோதும் மறக்கவே மாட்டேன்.”
அக்ரூரரின் மனதில் மீண்டும் கவலை சூழ்ந்தது. இப்படிப்பட்ட ஒரு பையனுக்காகவா நாம் அனைவரும் காத்திருந்தோம்? யாதவ குலத்து அனைத்து அபிலாஷைகளையும் இவனால் பூர்த்தி செய்யமுடியுமா? அனைவருக்கும் இவன் காவலனாக இருப்பானா? யதுவின் உயர்ந்த வம்சாவளியில் பிறந்தவன் என்பதை இவன் உணர்வானா?
இதை அறியாதவன் போலவே கண்ணன், “நாம் செல்லும் வழியில் அப்பா வருவதற்காகச் சற்றுத் தாமதிப்போம். அவரும் அவருடைய ஆட்களும் வந்ததும், அனைவரும் சேர்ந்தே மதுராவுக்குள் செல்லலாம்.” என்றான். பலராமன் உடனேயே, “ நீ எப்போதுமே இப்படித் தான் கண்ணா! அசட்டுப் பிடிவாதம் பிடிப்பாய்! நாம் உடனே மதுரா செல்வதும், அங்கே உள்ள மக்கள், கடைகள், மாளிகைகள் என அனைத்தையும் தந்தை வருவதற்குள் பார்க்கலாமே!” அனைவருக்கும் முன்னால் மதுரா செல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், பலராமன் கண்ணன் சொல்வதிலும் ஏதோ நியாயம் இருப்பது போலவும் உணர்ந்தான். அக்ரூரரோ, “ நான் இப்போது சொல்வதைக் கவனியுங்கள். மதுராவுக்கு வேடிக்கை பார்க்க நீங்கள் இருவரும் வரவில்லை. கம்சனால் அழைக்கப் பட்டு வருகிறீர்கள். இங்கே உங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நான் அறியேன். கம்சன் ஒரு வலையை உங்களுக்காக விரித்துள்ளான், நான் தெரிந்தோ, தெரியாமலோ அதை நோக்கி உங்களைச் செலுத்துகிறேன்.” என்றார் மனம் நிறைய வருத்தத்துடன்.
நன்றாக சொல்லியுள்ளிர்கள். கண்ணனின் பிரிவை அழகாய் சுருக்கி கூறியுள்ளிர்கள். நன்றி. அடுத்த பதிவுக்காக ஆவலாய் காத்துள்ளேன்.
ReplyDelete\\
ReplyDeleteபித்தனின் வாக்கு said...
நன்றாக சொல்லியுள்ளிர்கள். கண்ணனின் பிரிவை அழகாய் சுருக்கி கூறியுள்ளிர்கள். நன்றி. அடுத்த பதிவுக்காக ஆவலாய் காத்துள்ளேன்.
\\\
ரீப்பிட்டே ;))