
தசரத மன்னனின் சபை. மன்னனின் மந்திரி பிரதானிகள் வீற்றிருக்கின்றனர். அரச குமாரர்களின் திருமணம் பற்றியப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளை. அப்போது வாயிலில் வந்தார் விசுவாமித்திர முனிவர். இவரும் ஒரு அரசனாக வாழ்ந்து விட்டுப் பின்னர் முனிவராக மாறியவரே. வசிஷ்டருடன் ஏற்பட்ட சொந்தப் பகையால் தாமும் ஒரு ரிஷியாக மாற உத்தேசித்துக் கடுந்தவங்கள் செய்து பின்னர் முதலில் ராஜரிஷி, பின்னர் பிரம்ம ரிஷி என்ற பதவியை அடைந்தவர். அவர் வாயிலில் காத்திருக்கும் செய்தி கேட்ட தசரத மன்னன் உடனேயே வாயிலுக்குச் சென்று அவரை எதிர்கொண்டு அழைத்து வந்தான். மன்னனிடம் விசுவாமித்திரர் ஏதோ கேட்க வந்திருப்பதை உணர்ந்த தசரதன் அவர் கேட்பதை உடனே தருவதாயும் வாக்களிக்கின்றான். முனிவர் தாம் யாகம் செய்வதாகவும் அதற்கு இடையூறாக மாரீசன், சுபாஹூ என்னும் இரு ராட்சதர்கள் பெரும் இடையூறு செய்வதாயும், மாமிசத்தையும், ரத்தத்தையும் யாககுண்டத்தில் போடுவதாயும், அவர்களைச் சபிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, ஆனால் அதனால் நான் செய்ய முனைந்திருக்கும் யாகத்தின் பலன் கிட்டாது. கோபம் சிறிதும் காட்டாமல் செய்யவேண்டிய யாகம் அது. ஆகவே உன்னுடைய மூத்த மகன் ஆன ராமனை என்னோடு அனுப்பி வைப்பாயாக, அவன் வந்து என் துயரத்தைத் தீர்ப்பான் என்று மிகுந்த நம்பிக்கையுடனேயே சொல்கின்றார்.
மன்னன் மனம் குலைந்து போக, அவன் துயரத்தைக் கண்ட முனிவர், "மன்னா, இதனால் உன் மகனுக்குத் தீங்கு நேராது என உறுதி அளிக்கின்றேன். மூவுலகும் போற்றும்படியான புகழை அவன் அடைவான். அந்த ராட்சதர்களுக்கு ராமன் கையில் தான் மரணம் என்பது உறுதி. அவன் ஒரு மாமனிதன் என்பதை அறிவாயாக! வசிஷ்டரும் இதனை அறிவார். பிரிவினால் கலங்காதே! ஜெயம் உண்டாகட்டும்!" என்று கூறியும் மன அமைதி அடையாத மன்னன் தன்னால் ராமனைப் பிரிந்து ஒரு கணம் கூட இருக்க முடியாது, என்று கதறுகின்றான். அப்படிப் பட்ட கொடிய ராட்சதர்கள் யார் எனக் கேட்கும் மன்னனிடம் விசுவாமித்திரர், புலஸ்திய ரிஷியின் வம்சத்தில் உதித்தவன் ராவணன் என்னும் ராட்சசன், இலங்கையை தன் சகோதரன் ஆகிய குபேரனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு ஆண்டு வருவதோடு தன் தவ வலிமையாலும், தேக வலிமையாலும் அனைவருக்கும் துன்பங்கள் கொடுக்கின்றான். ரிஷி, முனிவர்களின் தவத்துக்கு இடையூறு விளைவிப்பதே அவனுக்குத் தொழில். நேரடியாக முடியாத நேரங்களில் அவனால் ஏவப்படும் இந்த மாரீசனும் சுபாஹூவும் வேலையைச் செய்து முடிப்பார்கள். இருவரும் மிக்க வலிமை பொருந்தியதோடு அல்லாமல் வேண்டிய உருவையும் எடுப்பவர்கள் எனச் சொல்கின்றார்.
"என்ன, ராவணனா? என்னால் கூட ஜெயிக்க முடியாதவனாயிற்றே? அவனை எதிர்த்து நிற்கும் சக்தி எனக்கே இல்லை, அப்படி இருக்க சிறுவனாகிய ராமனால் என்ன செய்ய முடியும்? அவனை விட்டு விடுங்கள்!" என்று கெஞ்சுகின்றான். முனிவர் கோபம் கொண்டு சொன்ன சொல்லை மீறும் உனக்கு இதனால் திருப்தி ஆனால் சரி, நான் செல்கின்றேன், எனக் கோபத்துடன் திரும்ப ஆரம்பிக்கவே அண்டசராசரமும் அவர் கோபத்தால் நடுங்கியது. வசிஷ்டர் மன்னனுக்கு அறிவுரைகள் சொல்லி மனதை மாற்றி, விசுவாமித்திரருடன் அனுப்பி வைக்கின்றார். அனைவராலும் ஆசீர்வதிக்கப் பட்டு வசிஷ்டரால் காப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு விசுவாமித்திரருடன் காட்டுக்குச் செல்லும் ராமனை லட்சுமணனும் பின் தொடருகின்றான். லட்சுமணனை விசுவாமித்திரர் கூப்பிடவில்லை எனினும், வால்மீகி சொல்வது லட்சுமணனுடன் சேர்ந்து ராமன் செல்கின்றான் என்பதே! இருவரும் விசுவாமித்திரரைப் பின் தொடர்ந்து செல்வதை வால்மீகி ஈசனைப் பின் தொடரும் கந்தன் போலவும், பிரம்மனைப் பின் தொடரும் அஸ்வினி தேவர்கள் போலவும் என வர்ணிக்கின்றார். சரயூ நதியின் தென்கரைக்கு வந்த விசுவாமித்திரர் ராமருக்குத் தன் தவத்தினால் பெறப்பட்ட பசி, தாகத்தைப் போக்கும் மந்திரங்கள் ஆன "பலை, அதிபலை" போன்றவற்றை உபதேசிக்கின்றார். பின்னர் காலை எழுந்திருக்கும் ராமனை "கெளசல்யா சுப்ரஜா ராமா! பூர்வாஸந்த்யா ப்ரவர்த்ததே!" என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தால் எழுப்புகின்றார். (தற்சமயம் வேங்கடேச சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகமாக இது விளங்குகின்றது)
பின்னர் அங்கிருந்து கிளம்பி ஸரயு நதியும், த்ரிபதகை நதியும் கலக்கும் இடத்தில் அமைந்திருந்த விசுவாமித்திரரின் ஆசிரமத்துக்குச் சென்று மற்ற முனிவர்களைச் சந்திக்கின்றார்கள். ஆசி பெற்றுக் கொள்கின்றனர். முனிவர்களுக்கு இரு அரசகுமாரர்களும் தாங்கள் செய்யவேண்டிய முறையான மரியாதைகளையும் செய்கின்றனர். பின்னர் மறுநாள் காலை, தாடகை என்னும் அரக்கி வசிக்கும் காட்டிற்குக் கூட்டிச் செல்கின்றார். சுந்தன் என்னும் ராட்சசனைக் கணவனாய்க் கொண்ட இவள் மகனே மாரீசன் என்றும், இந்த வனம் செழிப்போடும் வளத்தோடும் இருந்து வந்ததாயும் இப்போது அதைத் தாடகியும் அவள் மக்களும் நாசம் செய்வதாயும் சொன்னார். இவள் பூர்வாசிரமத்தில் யக்ஷப் பெண்ணாகவே இருந்ததாயும் அகஸ்தியரின் சாபத்தால் ராட்சசியாக மாறியதாகவும் தெரிவிக்கின்றார். அந்தத் தாடகையை ஒரு பெண் என்று தயங்காமல் வதம் செய்யவேண்டும் எனவும் சொல்கின்றார். தாடகை வருவதைக் கம்பர் எப்படி வர்ணிக்கின்றார் என்று பார்த்தோமானல் அவளைப் பற்றிப் புரியும்.
"சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள் நெளித்த குழிவேலைச்
சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக நிலக்கிரிகள் பின் தொடர வந்தாள்" (கம்பராமாயணம் பால காண்டம் 369-ம் பாடல்)
"இறைக்கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும்
பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயள்
மறைக்கடை அரக்கி வடவைக் கனல் இரண்டு ஆய்
நிறைக்கடல் முளைத்தென நெருப்பு எழ விழித்தாள்"(கம்ப ராமாயணம் பால காண்டம் 370-ம் பாடல்)
மலைகளை உள்ளே இருக்கும் பரல்களால் ஆன சிலம்புகளை அணிந்த கால்களினால் பூமியை அதிரும்படியாய் மிதித்துக் கொண்டு, அதனால் பூமியில் ஏற்படும் குழிகளில் நீர் பாயவும், எமனும் நடுங்கும்படியாகவும், எதற்கும் அசையாதிருக்கும் மலைகளும், அவள் வரும் வேகத்தால் இடம் பெயரும்படியாகவும் அங்கு வருகின்றாளாம் தாடகை.
மேலும் நல்வழிகள் பற்றிய சிந்தனைகளே அற்றவளாயும், கோபத்தால் துடிக்கின்ற புருவங்களுடனும், இரு கோரப் பற்கள் வாயில் வெளியே பிறைச் சந்திரர் போல் தெரிகின்றதாயும், வாயைத் திறந்தால் எங்கே போய் முடியும் எனத் தெரியாத சுரங்கம் போலவும் , கடலில் தோன்றித் தெரியும் வடவாமுகாக்கினி போன்ற நெருப்பு விழிகளையும் கொண்டு வருகின்றாளாம் தாடகை.
இப்படிப் பட்ட தாடகையைத் தான் மிக்க தயக்கத்துடனேயே ராமர் தன் பாணங்களால் அவளுடன் பெருத்த யுத்தம் செய்த பின்னர் ஒரே பாணத்தினால் வதம் செய்தார். பின்னர் விசுவாமித்திரரும் தன் யாகத்தை முறைப்படி ஆரம்பிக்கும் விரதம் மேற்கொண்டார்.
**************************************************************************************
மன்னனும் பெரும் வீரனும் ஆன தசரதன் பல நற்குணங்கள் பெற்றிருந்தும் அவன் ஆசை, பாசம், காதல், கோபம், காமம், அதனால் விளையும் துக்கம் போன்றவை நிரம்பியவனாகவே காணப்படுகின்றான். தன் மூத்த மகனை அவன் பிரிய மறுத்ததுக்கும், விசுவாமித்திரருடன் அனுப்ப மறுத்ததுக்கும் காரணம் உண்டு. இளைஞனாய் இருந்த காலத்தில் தசரதன் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த சமயம் மாலை நேரமாகி விடுகின்றது. அப்போது இருட்டில் ஒரு நீர்த்துறைக்கு அருகே காட்டு மிருகம் என நினைத்துக் குறி தவறாமல் அம்பெய்யும் தன் திறமையால் அம்பெய்ய, அம்பு பட்டதோ ஒரு மனிதன் மீது. பதறிப்போன தசரதன் அங்கேபோய்ப் பார்க்க அம்பினால் வீழ்ந்து கிடப்பதோ ஒரு முனிகுமாரன். "ஸ்ரவணகுமாரன்"என்னும் பெயர் உள்ள அந்தப் பையன், கண் தெரியாத, வயதான தன் பெற்றோர்களைக் காப்பாற்றி வந்தான். அவர்களின் தாகம் தீர்க்கவே தண்ணீர்த் துறைக்கு அவ்வேளையில் நீர் எடுக்க வந்ததாயும், தசரதனின் அம்பால் வீழ்ந்து விட்டதையும் தெரிவித்துத் தன் பெற்றோர் தாகத்துடன் இருப்பார்கள் எனவும் போய் அவர்களின் தாகத்தைத் தீர்த்து விடு எனவும் சொல்லிவிட்டு இறக்கின்றான். அவன் பெற்றோர்களை மிகுந்த தயக்கத்துடனும், பயத்துடனும் சென்று சந்திக்கும் தசரதனைத் தன் மகன் இல்லை எனவும், தன் மகனைக் கொன்றவன் அவனே எனவும் அறிந்து கொள்ளும் அந்தத் தம்பதிகள் தசரதனும் அவ்வாறே புத்ர சோகத்தால் இறக்கவேண்டும் எனச் சாபம் கொடுத்துவிட்டு இறந்து விடுகின்றனர். அதை நினைத்தே இப்போது விசுவாமித்திரரிடம் தன் மகனை அனுப்பத் தசரதன் தயங்கினாலும், பின்னால் ஒரு நாள் அது நடந்தே தீருகின்றது. இது தான் விதி, என்றும் காரண காரியம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதையும் புரிய வைக்கின்றது. ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்ட ஒன்று, அதனதன் காலத்தில் சற்றும் வழுவாமல் அப்படியே நடக்கின்றது. அதற்குச் சாட்சி அந்தக் காலம் என்ற ஒன்றே ஆகும்.
பிரம்மனைப் பின் தொடரும் அஸ்வினி தேவர்கள் பொருத்தமான உவமையாக இருக்கிறது; சிவனைப் பின் தொடரும் கந்தன் என்று சொல்லாமல் பின் தொடரும் சிவகுமாரர்கள் என்று சொல்லியிருபபாரோ வால்மீகி? :-)
ReplyDeleteஸ்ரவணர் என்று சமணரைக் குறிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஸ்ரவணர்--> ஸ்ரமணர் --> சமணர். ஒரு வேளை இந்த முனிகுமாரன் சமண முனிகுமாரனோ?
ஸ்ரவணன் என்றால் கேள்வியில் (கேள்வி ஞானத்தில்) சிறந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம்.