எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 14, 2014

டெல்லி சலோ --3

போர்ட்டர் வேகமாகச் சென்றுவிடவே போர்ட்டரைத் தேடிக் கொண்டு சென்ற ரங்க்ஸ் ஒருவழியாக அவரைக் கண்டு பிடித்துவிட்டார்.  அவர் ஒரு டாக்சிக்கு அருகே நின்று கொண்டிருந்திருக்கிறார்.  ரங்க்ஸும் அங்கே வந்த டாக்சிக்காரர் கிட்டே குர்காவ் செல்ல பேரம் பேசி 700 ரூபாய்க்கு (மஹா கொள்ளை, நிஜாமுதீனில் இருந்து 20 கிலோ மீட்டருக்குள் தான்) ஒத்துக் கொண்டு விட்டார். போர்ட்டரை செட்டில் பண்ணி அனுப்பி விட்டார்.  அதன் பின்னரே என்னைத் தேடி இருக்கிறார்.  அதுக்குள்ளே டாக்சி டிரைவர் சாமான்களைத் தூக்கிச் சென்று டாக்சிக்குள் வைக்க, ரங்க்ஸுக்கு டாக்சி டிரைவரைத் தொடர்வதா, என்னைத் தேடுவதா என்ற குழப்பம் வர, நான் அப்போத் தான் நடைமேடையின் உயரமான படிகளின் கடைசிப் படியில் காலை வைத்துக் கீழே இறங்கினேன்.

உடனே என்னைக் கைகாட்டி அழைத்துவிட்டு டாக்சிக்காரரைத் தேடிச் செல்ல, எல்லா ரயில்வே ஸ்டேஷன்களிலும் போல் இங்கேயும் நடு நடுவே ஒன்றரை அடி உயர நடைமேடைகள் காணப்பட அவற்றைச் சுற்றி வந்து ரங்க்ஸ் இருக்குமிடம் போகவும் முடியாமல் ஒன்றரை அடி நடைமேடையின் மேல் ஏறவும் முடியாமல் நான் தவிக்க,  அம்மாதிரி இரு நடைமேடைகளுக்கு அந்தப் பக்கம் நின்றிருந்த நூற்றுக்கணக்கான டாக்சிகளுக்கு இடையில் எங்க சாமான்களைத் தூக்கிச் சென்ற டிரைவரை ஒரு கண்ணால் தேடிக் கொண்டும், மற்றொரு கண்ணால் நான் வருகிறேனா எனப் பார்த்துக் கொண்டு ரங்க்ஸ் செல்ல. அங்கே எந்த ஹிந்தி, தமிழ், தெலுங்கு படங்களிலும் பார்க்க முடியாத ஒரு அற்புதமான காட்சி அரங்கேறியது.  "நீ எங்கே, நான் அங்கே!" னு இரண்டு பேரும் பாடாத குறைதான்.

அங்கிருந்த சிலரின் உதவியோடு மெதுவாக ஒவ்வொரு நடைமேடையிலும் ஏறி நான் அந்தப்பக்கம் செல்ல அப்போது தான் டாக்சி டிரைவர் எங்களைப் பார்த்துக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.  அப்பாடா!  ஒருவழியாக அவரே எங்களைக் கூப்பிட்டு விட்டாரேனு ஆறுதல் அடைந்து  ரங்க்ஸின் உதவியுடன் நானும் டாக்சி இருக்கும் பக்கம் போய்ச் சேர்ந்தேன். அதற்குள்ளாகப் பெட்டிகளைப் பின்னால் டிக்கியில் அடுக்கிவிட்டதையும் காட்டினார் டிரைவர். பின்னர் குர்காவ் பயணம் ஆனோம்.  அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே வீட்டுக்குப் போயாச்சு.  ஆனால் பாருங்க, இந்த சூரியன் மேகப் போர்வையை விட்டு வெளியே வரமாட்டேன்னு ஒரே அடம்.


பனி மூடிய தெருக்களின் ஒரு பார்வை.  வண்டிக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக எடுத்த படம்.



டெல்லி செல்கையில் ரயில் பாதையின்  ஒரு காட்சி காலை ஏழு மணிக்கு.



காலை எட்டு மணிக்கும் இழுத்துப் போர்த்துக் கொண்டு வெளிவராமல் அடம் பிடிக்கும் சூரியன்!

இம்முறை டெல்லி செல்லும் முன்னரே மைத்துனருக்கு மும்பை மாற்றல் ஆகிவிட்ட செய்தி கிடைத்திருந்தது.  டெல்லி பயணத்தையே ரத்து செய்ய நினைத்தோம்.  ஆனால் பின்னர் போயிட்டு வந்துடலாம்னு போனோம். அதுக்கு ஒரு முக்கியக் காரணம் இது வரை பார்க்காத இரு இடங்களை இம்முறை எப்படியானும் பார்க்கணும்னு தான்.  அவற்றைக் குறித்து இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

10 comments:

  1. தில்லியில் இருக்கும் அத்தனை ரயில் நிலையங்களிலும் ப்ரீ-பெய்ட் வசதி உண்டு..... வெளியே இருக்கும் கார்வாலாக்கள் அதிகமாகவே கேட்பார்கள்...... மேரு என்ற பெயரில் கால் டேக்சிகளும் உண்டு.

    காலைக் குளிர் இந்த முறை சற்று அதிகம் தான்! :)

    ReplyDelete
  2. என்னது ஒரு KM-க்கு 35 ரூபாயா...!?!

    அற்புதமான காட்சி மனதில் ஓடியது...! ஹிஹி...

    ReplyDelete
  3. வாங்க வெங்கட், ப்ரீ-பெய்ட் வசதியிலும் போயிருக்கோம். அப்போல்லாம் வயதும் கொஞ்சம், சாமான்களும் கொஞ்சம்! :))) நாங்களே தூக்கிக் கொண்டு போயிடுவோம். இப்போ இரண்டுமே ஜாஸ்தி ஆயிடுச்சு. அதனால் ப்ரீ-பெய்டைத் தேடவில்லை. விமானப் பயணத்தில் தான் வெளியே வரச்சேயே ப்ரீ-பெய்ட் இருக்கு. ஆகையால் வசதியாக இருக்கும். :))))

    ReplyDelete
  4. ஆமாம் டிடி, ஆனால் மைத்துனர் முன்னாடியே கூறிவிட்டார். குறைந்த பக்ஷமாக 700 ரூபாய் வரை கேட்பாங்கனு, ஆகவே ஒத்துக் கொண்டோம். இது பரவாயில்லை. நாங்க குர்காவில் இருந்து புது டெல்லி ரயில் நிலையம் வர 900 ரூபாய் கொடுத்தோம். அதுவும் இதே தூரம் தான் 20 கிமீட்டருக்குள்ளாக! :((((

    ReplyDelete
  5. நடைமேடைகளைத் தாண்டுவதே பெரிய பிரச்னை போல!

    ReplyDelete
  6. @ஶ்ரீராம்,

    எழும்பூர் ஸ்டேஷன் வாசல்லே பார்த்திருக்கீங்க தானே? இங்கே அது போல் இன்னும் நீளமாய், உயரமாய்! போதுண்டா சாமினு இருந்தது. :))))

    ReplyDelete
  7. "நீ எங்கே, நான் அங்கே!" ஹா..ஹா....அற்புதம்.

    ReplyDelete
  8. சுவாரஸ்யமான பகிர்வு! தொடர்கிறேன்!

    ReplyDelete
  9. வாங்க மாதேவி, எங்கே உங்களை அப்புறமாக் காணவே இல்லை? ரொம்ப பிசி போல!

    ReplyDelete
  10. நன்றி சுரேஷ், நீங்க கதை எழுதி இருப்பதாக இன்னிக்குத் தான் தெரிஞ்சுண்டேன். எப்படியும் நாளைக்குள் வந்து படிக்கிறேன்.:)

    ReplyDelete