எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 14, 2014

டெல்லி சலோ, "வாகா"ய் ஒரு எல்லை!

76 ஆம் வருடம் முதல்முறையாக டெல்லி சென்றோம்.  அப்போது டெல்லியை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டுக் குதுப்மினாரின் அருகிலுள்ள இரும்புத் தூணைப்பார்த்து வியந்ததோடு அல்லாமல் அதில் விக்கிரமாதித்தன் பெயர் வேறே இருந்ததில் வியந்திருக்கேன்.  அந்தத் தூண் விக்கிரமாதித்தன் நாட்டிய வெற்றித் தூண் என்றும் பாரதத்துக்கு வெளியே வாலிகர்கள் என்பவர்களை வென்று திரும்பியதற்காக விஷ்ணுபாதம் என்னும் குன்றில் இந்த வெற்றிச் சின்னம் அமைக்கப்பட்டது எனவும், பாரதத்துக்கு வெளியே சென்று வெற்றிக்கொடி நாட்டித் திரும்பியதால் அன்று முதல் விக்கிரமாதித்த சகாப்தம் ஆரம்பித்தது எனவும், அதன் பிறகு அவன் பேரனான சாலிவாஹனனும் அதே போல் வெளிநாடு சென்று வெற்றிக்கொடி நாட்டித் திரும்பியதால் அவன் பெயரில் சாலிவாஹன சகாப்தம் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் அந்தத் தூணிலேயே குறிப்பிட்டிருந்தாலும் பின்னாட்களில்  ஒரு புத்தகத்திலும் படித்துத் தெரிந்து கொண்டேன்.  இந்த சாலிவாஹன சகாப்தம் ஆரம்பித்து ஏறக்குறைய 1950 ஆண்டுகள் இருக்கலாம்.  அதன் பின்னர் எந்த மன்னனும் இப்படி அந்நிய நாட்டை வென்றதில்லை.  ஆகையால் அதன் பின்னர் எந்த சகாப்தங்களும் ஏற்படவும் இல்லை.  


ஆனால் குதுப்மினாரில் உள்ளது விக்கிரமாதித்தனின் வெற்றித் தூணே என்பதில் ஐயமில்லை.  நம் தொல்பொருள் துறையினரும் சரி, மத்திய, மாநில அரசுகளும் சரி ஒரு இந்திய மன்னனின் இத்தகைய வெற்றிக்கும் அவன் நாட்டிய வெற்றித் தூணுக்கும் இன்றளவும் முக்கியத்துவம் கொடுக்கவே இல்லை. சொல்லப் போனால் படித்தேனே தவிர எனக்கும் இவற்றில் அவ்வளவாக அக்கறை இல்லாமலே இருந்தது என்பது உண்மை தான்.  இணையத்திற்கு வந்த சில நாட்களிலேயே ஜெயஶ்ரீ சாரநாதன் அவர்களின் பதிவுகள் அறிமுகம் ஆகத் தொடர்ந்து படித்து வந்ததில் அவரும் இதை உறுதி செய்யும் விதமாக எழுதி இருந்தார். நம்முடைய பெருமையை நாமே அறிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என வருத்தமாக இருக்கிறது.

போகட்டும், என்றாவது ஒரு நாள் இதற்கு முக்கியம் வராமலா போகப் போகிறது?? மற்றபடி ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரி போன்ற இடங்களெல்லாம் போயாச்சு.  குருக்ஷேத்திரமும் போய் வந்தோம்.  பஞ்சாப் பக்கம் தான் போகவே இல்லை. ஆகவே இம்முறை அமிர்தசரஸ் சென்று பொற்கோயிலையும், வாகா எல்லையையும் தரிசிக்க ஆவல் கொண்டிருந்தோம்.  சென்னையிலிருக்கையிலேயே அமிர்தசரஸ் செல்லும் ஸ்வர்ண ஷதாப்தியில் டிக்கெட் வாங்கியாச்சு.  பெப்ரவரி 26 ஆம் தேதி காலை ஏழு இருபதுக்குச் செல்லும் வண்டியில் அமிர்தசரஸ் செல்லவும், மறுநாள் மாலை டெல்லி திரும்ப அமிர்தசரஸிலிருந்து நாலு இருபதுக்குக் கிளம்பும் ஸ்வர்ண ஷதாப்தியிலும் டிக்கெட் வாங்கி இருந்தோம்.

ரங்க்ஸின் பெரிய தம்பி சென்ட்ரல் வேர்ஹவுசிங்கில் வேலையாக இருப்பதால் வாகா பார்டரில் இருக்கும் அவங்க அலுவலகத்தின் மூலம் எங்களுக்கு விஐபி பாஸுக்கும் போகவர வண்டிக்கும் ஏற்பாடு செய்துவிட்டார்.  வண்டி ஸ்டேஷனுக்கே வந்து எங்களை அழைத்துச் செல்லும் எனக் கூறி அங்கேயே சர்க்யூட் ஹவுஸில் தங்குமிடமும் ஏற்பாடு செய்திருந்தார்.  நல்ல குளிரில் காலை நாலு மணிக்கு எழுந்து காஃபி மட்டும் சாப்பிட்டுவிட்டுக் குளித்து முடித்து நியூ டெல்லி ஸ்டேஷன் கிளம்பினோம்.  வட மாநிலங்களின் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் உட்கார வசதிகளே இல்லை. அங்கே உட்காரவும் கூடாது.  ஆங்காங்கே இருக்கும் ஓய்வறைகளில் தான் இடம் இருந்தால் உட்காரலாம். நடைமேடையில் ஒரு சின்னத் தூணருகே கூட உட்கார முடியாதபடிக்குக் கட்டி இருப்பார்கள். ரயில் வரும் நேரம் தான் நாம் நடைமேடைக்கு வந்து, அங்கே ஒளிரும் அறிவிப்புப் பலகைகள் மூலம் நம் பெட்டி எந்த இடம் வரும் என்பதைத் தெரிந்து கொண்டு  அங்கே சென்று நிற்கலாம்.  ஆகையால் ரயில் வரும்வரையிலும் நாங்களும் முதல்வகுப்பு ஓய்வறைக்குச் சென்று தங்கினோம்.

இந்த ஷதாப்தி ரயில்களின் பயணம்   தென் மாநிலங்களில் செய்வதை விட வட மாநிலங்களில் செய்வது கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது.  அங்கே இன்னமும் உணவு தரமாகவும், காஃபி,  தேநீர் போன்றவையும் தரமாகவும் இருப்பதோடு மெனுவில் உள்ளதைச் சரியாகவும் தருகின்றனர்.  அதுவே பெண்களூருக்குச் சென்னையிலிருந்து செல்லும் ஷதாப்தியில் அப்படித் தருவதில்லை.  சென்னையிலிருந்து புது டெல்லி செல்லும் ராஜ்தானியின் உணவுத் தரம் மிக மோசம். கவனிப்பும் இல்லை.  மெனுவில் உள்ளபடி தருவதும் இல்லை.  பத்ரிநாத் செல்கையில்  ஹரித்வார் வரை செல்ல புதுடெல்லி-டேராடூன் ஷதாப்தியில் சென்றோம்.  அருமையான உணவு. கவனிப்பும் இருந்தது. அதே போல் இங்கே ஸ்வர்ண ஷதாப்தியிலும் நல்ல உணவு, நல்ல கவனிப்பு. மதியம் ஒரு மணிக்கு அமிர்தசரஸ் போய்ச் சேர்ந்தோம். எங்களை அழைத்துச் செல்ல வந்தவரின் மொபைல் எண்ணை வைத்து அவரைக் கண்டு பிடித்து ஸ்டேஷன் அருகிலேயே இருந்த சர்க்யூட் ஹவுஸுக்குப் போனோம்.

அங்கே அறைச் சாவி கொடுத்ததும், (:))))))அதிகமில்லை வாடகை, ஒரு நாளைக்கு 1,200 ரூபாய்கள் தான்!) வாடகையைக் கேட்டு மயக்கமே வந்தது என்றாலும் எங்கேனு போய்த் தேடுவது?  அதோடு வாகா எல்லைக்கு இன்று தான் பாஸ் கொடுத்திருக்காங்க.  மூணு மணிக்கெல்லாம் அங்கே செல்லக் கிளம்ப வேண்டுமே!  சாமான்களை அறையில் வைத்துவிட்டுக் கொஞ்சமாக உணவு உண்டுவிட்டு வாகா எல்லையை நோக்கி விரைந்தோம்.



வாகா செல்லும் வழி 




வாகா எல்லையில் பீட்டிங் ரிட்ரீட் காண விரையும் மக்கள்




இந்த இடத்தில் இருந்து தான் செக்யூரிடி செக் அப் முடிந்து மக்கள் உள்ளே சென்று பார்க்க வேண்டும்.

விபரங்களும் படங்களும் தொடரும்.

12 comments:

  1. விக்கிரமாதித்தனின் வெற்றித் தூண் பற்றிய தகவலுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  2. அட வாகா எல்லை போயிருந்தீங்களா...

    நல்லது.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறீர்கள். படங்கள் போதாது!

    ReplyDelete
  4. வாங்க டிடி, இப்படி எத்தனையோ இடங்களில் இருட்டடிப்பு! :(

    ReplyDelete
  5. வாங்க வெங்கட், பல வருடக் கனவு வாகா செல்வது. :))))

    ReplyDelete
  6. ஶ்ரீராம், படங்களும் விபரங்களும் தொடரும்னு போட்டிருக்கேனே, பார்க்கலை??

    ReplyDelete
  7. வாகா எல்லையை வாகாய் தரிசித்து அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. கண்டுகொண்டோம். நன்றி.

    ReplyDelete

  9. நாங்கள் 1978-ல் டெல்லி சென்றபோது குடுப் மினார் அருகே இருக்கும் இரும்புத்தூணில் சாய்ந்துகொண்டு பின்பக்கமாகத் தூணைகட்டியிருக்கிறோம் . குதுப் மினாரில் மூன்று அடுக்குகள் வரை ஏறிச் சென்றிருக்கிறோம். ஆனால் அண்மையில்2006ல் என்று நினைக்கிறேன் . இரும்புத்தூண் சுற்றி தடுப்பு போடப் பட்டிருந்தது. குதுப்மினார் மேலே செல்ல அனுமதி இல்லை. அம்ரிதசரஸ் சென்றிருக்கிறேன் வாகா எல்லை வரை செல்ல அழைப்பு இருந்தும் போக முடியவில்லை.

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார், குதுப்மினாரில் என்னை ஏற அனுமதிக்கவில்லை. என் கணவர் மட்டும் ஏறிப் போய்ப் பார்த்தார். தூணின் முக்கியத்துவம் அப்போக் கொஞ்சம் கம்மியாத் தான் இருந்தது. போகப் போகவே புரிந்தது.

    ReplyDelete
  11. தளிர் சுரேஷ்,

    மாதேவி,

    நன்றிங்க.

    ReplyDelete
  12. இப்பதான் இந்தப்பதிவையே பார்த்தேன்!

    ReplyDelete