எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 11, 2014

டெல்லி சலோ!

சீரியசா இருந்தது போதும்.  இப்போ நாங்க ஊருக்குப் போன விஷயத்துக்கு வருவோமா!  2012 ஆம் வருஷம் டெல்லிக்குப் போனப்போ ஒரு அவசரம், கவலை, பரபரப்பு என இருந்தது.  நல்ல வேளையாப் போன காரியம் நல்லபடியா முடிஞ்சு மைத்துனரும் சுகமாய் வீடு திரும்பினார்.  அதுக்கப்புறமாக் கொஞ்சம் சாவகாசமாய் ஓய்வு எடுத்துக்கும்படி வரச் சொல்லி மைத்துனர் பலமுறை அழைத்தும் எங்களால் போக முடியவில்லை.  நடுவில் மைத்துனரே இங்கு இரு முறை வரும்படி இருந்தது.  எங்களுக்கும் அடுத்தடுத்து உறவினர்கள்,நண்பர்கள்னு வருகை.  இந்த வருஷம் எப்படியானும் போகணும்னு 2013 இல் நினைச்சப்போப் போக முடியாமல் போச்சு.   அதோடு டிசம்பரில் இருந்து டெல்லிக் குளிர் வேறே பயமுறுத்தல்.  ஆனால் நான் எப்படியும் மார்ச் மாதத்துக்குள்ளாகப் போயிட்டு வரணும்னு நச்சரிக்கவே, பெப்ரவரி மாதம் 20 தேதிக்குக் கிளம்ப முடிவாயிற்று.

டிக்கெட்வாங்குதல் போன்ற இன்ன பிற சமாசாரங்களை மைத்துனரே செய்து முடித்துவிட்டு எங்களுக்குச் சுட்டியைக் கொடுக்கவே, இங்கே பிரின்ட் அவுட் மட்டும் எடுத்துக் கொண்டோம்.  தேவை இல்லை தான்.  ஆனால் செல்லில் பல சமயங்களிலும் கவனக் குறைவால் ரயில்வே அனுப்பும் செய்தியை அழித்துவிடும் வாய்ப்புகள் உண்டு.  ஆகையால் எதுக்கும் இருக்கட்டும்னு ப்ரின்ட் அவுட்டும் எடுத்தாச்சு.  20 ஆம் தேதி சென்னை பயணம். எழும்பூர் போனால் மெட்ரோ ரயில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்க நேரிடும் என அண்ணன் வீட்டில் எச்சரிக்கவே, மாம்பலத்திலேயே இறங்கி அம்பத்தூர் சென்றோம்.  என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்!  அம்பத்தூரில் ஒரு சில சிக்கலான பிரச்னைகளைக் கொண்ட தெருக்களைத் தவிர மற்றத் தெருக்கள் வழவழ வென்று இந்தக்கோடிக்கு அந்தக் கோடி நல்ல தார் சாலை அமைக்கப்பட்டிருந்தது.  இதிலே எங்க வீடு இருக்கும் தெருவும் ஒண்ணு.


தெருவைப் பார்க்கையிலேயே மயக்கமே வந்துடுச்சு!  அவ்வளவு சுத்தம்.  பெரும்பாலான புதுசாகப் போடப்பட்ட தெருக்களில் குடி இருப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக சுத்தத்தைக் கடைப்பிடிப்பது உண்மையிலேயே  பாராட்டத் தக்கது.  இப்படி ஒரு சுத்தமான சாலையை நாங்க இருக்கும்போது பார்க்கவே இல்லை. சொல்லப் போனால் விளக்குமாறும் , கையுமாக நானும் ரங்க்ஸும் தெருவைக் கூட்டி இருக்கோம். :))))  சென்னையின் மற்ற இடங்கள் வழக்கமான குப்பை மலையாகக் காட்சிஅளிக்க இங்கே சுத்தமாக இருப்பது ஆச்சரியமே!  ஃபோட்டோ எடுக்கலாம்னு நினைச்சா காமிராவையோ, செல்லையோ  கொண்டு போகலை.  எங்க வீட்டுக்குப் போக வேண்டாம்னு இருந்த என்னை, அங்கே குடி இருப்பவர்களின் வீட்டுப் பெண் கட்டாயமாய் வரணும்னு கட்டளை பிறப்பித்து விட்டார்.  ஆகவே தவிர்க்க முடியாமல் ரங்க்ஸோடு நானும் போனேன்.  சுற்றிலும் குடி இருப்புகளுக்கு நடுவே வீடு இருக்கும் இடமே தெரியாமல் கூனிக் குறுகிக் கிடந்தது. :(

வழக்கம் போல் வேப்பமரம் அடர்ந்து, படர்ந்து தெருவுக்கே நிழலை அளிக்க, அருகே அசோகா மரமும் காணப்பட்டது.  வேப்பமரத்துக் குயில்களையோ, குருவிகளையோ காணமுடியலை. :( காக்கைகள் ஒரு சில சோகமாக அமர்ந்து கொண்டிருந்தன.  அணில்களின்  கீச்சிடலையும் காணோம். :(  ஒரு மல்லிகைச் செடி இல்லை.  விருட்சி மரமாக வளர்ந்திருந்தது அடியோடு வெட்டப்பட்டு விட்டது.  நாரத்தை மரமும், மாமரங்களும் வெட்டப்பட்டு விட்டன.  அடுக்கு அரளி, தங்க அரளி, சந்தனமுல்லை போன்ற செடி, கொடிகளும் காண முடியவில்லை.  தோட்டத்தில் கோரைப் புற்கள் தாறுமாறாக வளர்ந்து  கிடக்க ஒரு சில சிறியா, பெரியா நங்கைச் செடிகள் மட்டும் காணப்பட்டன.  பாக்கு மரம் நாங்க இருக்கிறச்சேயே பட்டுப்போய் விட்டது.  மேலண்டைப் பகுதியில் எப்போதும் இருக்கும் நான்கு தென்னை மரங்களும், அவற்றின் அடியில் குப்பையோடும் கூளங்களோடும் காணப்பட, வடமேற்கே பலாமரம் நன்றாக வளர்ந்திருந்தது.  சப்போட்டா மரமும் பரவாயில்லை.  நெல்லி, வில்வம் போன்றவை எல்லாம் அழிந்து விட்டன போலும்.  மற்றபடி வீடே குறுகிப் போயிட்ட மாதிரி காணப்பட அதிக நேரம் அங்கே செலவழிக்க எனக்கு மனசு இல்லை.  சீக்கிரம் திரும்பணும்னு நினைச்சுக் குடித்தனக்காரங்க கிட்டே சொல்லிட்டுக் கிளம்பிட்டேன்.

மனம் முழுக்க சொல்லத் தெரியாத பாரத்தைச் சுமந்து கொண்டு திரும்பினேன். ரங்க்ஸ் எப்போதும் போல அங்கே எல்லாவற்றையும் தோண்டித் துருவிவிட்டுத் திரும்பினார்.  அன்று ஒரு சில உறவினர்களைப் பார்த்த பின்னர் மறுநாள் வங்கி வேலைகளை முடித்துக் கொண்டு அன்றிரவு தமிழ்நாடு துரித வண்டியில் டெல்லி பயணம் ஆனோம்.

14 comments:

 1. இப்படி அவஸ்தை படறத்துக்கு அங்கே திருப்பி குடி போகாதா பட்சத்தில் பேசாம டிஸ்போஸ் பண்ணறது நல்லது.

  ReplyDelete
 2. டெல்லி சலோ!

  அரசியல் கோஷம் போல ஒலிக்கிறது..!

  ReplyDelete
 3. வாங்க வா.தி. என் பதிவுகளையும் படிக்கிறதுக்கு நன்னி ஹை! :)))))

  ReplyDelete
 4. வாங்க ராஜராஜேஸ்வரி, மேடம், டெல்லி சலோ என்பது ஒரு மந்திரச் சொல். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நம் ஐ என் ஏ படை வீரர்களுக்கு மஹான் நேதாஜியால் சொல்லப்பட்டது. டெல்லி சலோ என்பது ஒன்றே அவர்களின் தாரக மந்திரம். எனக்குப் பிடித்ததும் கூட. சின்ன வயதில் இந்த வார்த்தையை வைத்து ஒரு விளையாட்டுக் கூட உண்டு.

  உலக வரைபடத்தில் ஜப்பானில் இருந்து பர்மா வழியாக டெல்லி வரும் பாதையும், அதில் கட்டங்களும், வெட்டுக்களும் உண்டு. ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி வெட்டுப் படாமல் டெல்லி செங்கோட்டை வரையப்பட்டிருக்கும் கடைசி இலக்கை அடைய வேண்டும். இந்த விளையாட்டை எத்தனை முறை விளையாடி இருப்பேன் என்று கணக்கே இல்லை. :))))

  என்னைப் பொறுத்த வரை இது தாரக மந்திரம்! :))))))

  ReplyDelete
 5. நீங்க அம்பத்தூரா? நம் வீட்டு தோட்ட செடிகள் பராமரிப்பின்றி போவதை வளர்த்தவர்கள் காணும்போது மனம் பதைக்கத்தான் செய்யும்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 6. இப்படி தாறுமாறாக இருந்தால் மனம் மிகவும் வருத்தப்படத்தான் செய்யும் அம்மா...

  ReplyDelete
 7. "தளிர்" சுரேஷ், உங்க பெயரில் "தளிர்" ஐப் பார்த்ததுமே மனசுக்கு ஆறுதலா இருக்கு! :))))

  ReplyDelete
 8. வாங்க டிடி, மாமரம் நாங்க இருக்கிறச்சே பக்கத்து, எதிர் அபார்ட்மென்ட் கட்டறவங்க போட்ட சிமென்டினால் வீணாப் போயிருந்தது! :(( வெட்டறதைத் தவிர வேறே வழியில்லை. :( நல்ல பாதிரி மரம்.

  ReplyDelete
 9. வீட்டைப் பார்த்ததில் சந்தோஷமும் வருத்தமும் 50-50 யா!

  ReplyDelete

 10. வீடு இன்னும் உங்கள் சொந்தம்தானே. அதாவது நீங்கள் இன்னும் அந்த வீட்டு லாண்ட் லேடி தானே.

  ReplyDelete
 11. வாங்க ஶ்ரீராம், ஆமாம். :))) தெரு சுத்தமாக இருப்பதில் சந்தோஷம். ஆனால் கொசுக்கள் குறையவே இல்லை. கூடவே அதுங்களும் நடந்து வருதுங்க. :(

  ReplyDelete
 12. வாங்க ஜிஎம்பிசார், வீட்டை வாடகைக்குத் தான் விட்டிருக்கோம். அதான் போய்ப் பார்த்தோம். :)))))

  ReplyDelete
 13. நமது வீட்டினை பார்க்கும் போது மகிழ்ச்சியும் சோகமும் சேர்ந்து கிடைக்கிறது....

  என்னது அம்பத்தூரில் நல்ல ரோடு போட்டு இருக்காங்களா? பரவாயில்லையே.... நான் சென்ற முறை சென்றபோது கூட ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது......

  ReplyDelete
 14. வீட்டைப் பார்த்ததில் சந்தோஷமும் மரங்களைப்பார்த்ததில் வருத்தமும் வருவது எனது அனுபவத்திலும்உண்டு.

  மனதைதேத்திக்கொள்ளவேண்டியதுதான்

  ReplyDelete