எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 23, 2014

காஃபி வித் கீதா! நான் காஃபிக்கு அடிமை அல்ல! படங்களுடன்!

அப்போல்லாம் இந்தியன் காஃபி போர்டு தான் காஃபிக் கொட்டை விநியோகம் செய்து வந்தது.  காஃபி பவுடர் அரைக்கும் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே ரேஷன் கார்டுக்குக் கொட்டை கொடுப்பாங்க.  குடும்ப அங்கத்தினருக்கு ஏற்பக் கொட்டை கொடுத்ததாக நினைவு. எங்களுக்கு மதுரை தானப்பமுதலி அக்ரஹாரத்தில் இருந்த நரசூஸ் காஃபி பவுடர் கடையிலே தான் கொடுத்துட்டு இருந்தாங்க.  கடைக்காரர் தெரிஞ்சவர் என்பதால் முன் கூட்டிச் சொல்லிட்டு அம்மா மெதுவாப் போய் வாங்கி வந்து கொட்டையை வீட்டிலேயே வறுத்து நரசூஸ் காஃபி பவுடர் கடையிலே திரிச்சு வாங்கி வருவாங்க.  அப்படி எல்லாம் செய்தும் ரெட்டுத் துணியில் வடிகட்டியதால் காஃபியின் சுவையே சுமாரிலும் சுமாராக இருக்கும்.

முதல் முதல்   எங்க குடும்பத்திலேயே (ஹையா, ஜாலி) ஃபில்டரில் காஃபி போட்டது நான் தான். ஒரு தரம் யாரோ வீட்டுக்கு வந்தப்போ அவங்க துணியில் வடிகட்டிய காஃபி குடிக்கமாட்டாங்கனு பக்கத்திலே பெரியப்பா வீட்டில் சின்ன ஃபில்டர் வாங்கி வந்து காஃபி போட்டுக் கொடுத்தேன்.  அந்தக் காஃபியில் மயங்கியே போனாங்க அவங்க. அதுக்கப்புறமாக் கல்யாணம் ஆகி வந்ததும் மாமியார் வீட்டிலே காஃபி வெள்ளமாக ஓடியதைப் பார்த்து அசந்து போயிருக்கேன். முக்கால் வாசிக் கல்யாணங்களில் காஃபியிலே தான் சம்பந்தி சண்டையே வரும்.  காஃபி நல்லா இல்லைனா கல்யாணக் காஃபி மாதிரி போட்டிருக்கேனு இப்போவும் ரங்க்ஸ் சொல்லுவார். எங்க கல்யாணத்திலேயும் காஃபியில் அதுமாதிரி சில, பல குறைகள் இருந்தது.  அதைக் கல்யாணம் ஆகிப் போய்த் தான் தெரிஞ்சுட்டேன்.
 
                              பாத்திரத்தில் காய்ந்து கொண்டிருக்கும் பால்


நல்ல காஃபிக்கு அடிப்படை நல்ல கொட்டை மட்டும் அல்ல.  நல்ல பாலும் கூட. அதுவே பசுவின் பாலாக இருந்தால் இன்னும் நல்லது.   எருமைப்பால் என்றால் பாலில் சரிக்குச் சரி நீர் சேர்க்கணும். முதலில் டிகாக்‌ஷன் இறங்கியதுமே காஃபி கலக்கக்  கூடாது.  மேலும் கொதிக்கும் வெந்நீர் விட்டு டிகாக்‌ஷனை முழுதும் இறக்கிக்கணும்.  டிகாக்‌ஷன் ஒத்தாற்போல் அதிகமாய் கெட்டியாய் இல்லாமலும், அதிகமாய் நீர்க்க இல்லாமலும் இருந்தால் காஃபி கலக்க சரியாய் இருக்கும்.  சர்க்கரை அவரவர் தேவைக்குப் போடணும். (எங்க மாமியார் வீட்டில் காஃபிக்குச் சர்க்கரை இப்போவும் கரண்டியில் தான்! ) நாங்க போடறதெல்லாம் அவங்களுக்குச் சிட்டிகைக் கணக்கு!  இப்படிச் சில அடிப்படைப் பாடங்களைக் கல்யாணம் ஆன  ஒரே மாசத்தில் தெரிந்து கொண்டேன். அதுக்கப்புறமாக் காஃபி கலப்பதில் நம்மளை மிஞ்ச யாருமில்லை என்னுமளவுக்கு நல்ல காஃபியாகக் கலந்து வந்தேன்.  ஆனாலும் சில, பல வருடங்களுக்கு நான் காஃபி கிட்டேயே போனதில்லை.

                   
                        காஃபிக்குக் காத்திருக்கும் டபரா, டம்ளர்,  மதுரைப்பக்கம்   
                        வட்டை, டம்ளர் என்றே சொல்வோம்.  இதிலே முன்னாடி 
                        பித்தளை டபரா செட், வெண்கல டபரா செட் இருந்தன. அதிலே
                        ஒருமுறை  குடிச்சுப்பாருங்க. அந்தச் சுவை தனியாத் தெரியும்.                           :)))))))))                         

எங்கே போனாலும் போர்ன்விடா டப்பாவைத் தூக்கிட்டுப் போவேன். பாலை வாங்கி அதிலே போர்ன்விடா போட்டுச் சாப்பிடுவேன். எங்க பையர் பிறந்தப்போ இதுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வந்தது.  அப்போ என்ன காரணமோ போர்ன்விடா சரியாக் கிடைக்கலை.  ஹார்லிக்ஸ் சாப்பிட்டால் அது முழு உணவாகி விடுகிறது.  ஆகவே அரை தம்ளர் காஃபினு குடிக்க ஆரம்பிச்சுப் பின்னர் இப்போக் காலை எழுந்ததும் நல்ல காஃபி, பின்னர் கனிவு கொடுக்கும் இனிய டிஃபன் என்று பாடும் அளவுக்குக் காஃபிக்கு அடிமையாகி விட்டேன். என்றாலும் சில நாட்கள் என்னை நானே சோதனை செய்துக்கக் காஃபி குடிக்காமலோ, அல்லது நேரம் கழிச்சுக் குடிச்சோ பார்ப்பது உண்டு. இப்போல்லாம் அந்தச் சோதனையை விட்டாச்சு.  வேணும்னா குடிக்கலாம்; இல்லைனா விடலாம்  என்ற அளவுக்கு மனப்பக்குவம் வந்துவிட்டதால் காஃபிக்கு அடிமை இல்லை.

                        நுரை பொங்கும் காஃபி.  ஒரு சிலருக்குக் காஃபியில் அதிகமான
                        டிகாக்‌ஷன் வேணும். ஆனால் இது சந்தனம் கரைத்தாற்போல்
                        இருக்கும். இதான் ஒரிஜினலாக் காஃபி இருக்க வேண்டிய  
                        சுவைனு காஃபிப் பிரியர்களின் ஏகோபித்த கருத்து.

எங்க குழந்தைங்களுக்குக் காஃபி, டீ போன்றவை பதினைந்து வயது வரை கொடுத்தது இல்லை. அப்புறமும் மாலை ஒரு வேளை மட்டும் தேநீர் கொடுப்போம். இப்போ எங்க பையர் தேநீர்க் குடியர்.  பொண்ணு காஃபிக் குடியள். இந்த இந்தியன் காஃபி போர்டு ஆங்காங்கே இந்தியா காஃபி ஹவுஸ் என்னும் பெயரில் காஃபிக் கடைகளை ஒரு காலத்தில் நிறுவி இருந்தது.  குறிப்பிட்ட நேரங்களில் டிஃபனும் கிடைக்கும். தி.நகரில் பர்கிட் ரோட் முனையில் இருந்த இந்தியா  காஃபி ஹவுஸ் தோசை வெகு பிரபலமானது.  அப்போது எல்லாம் ஒரு கப் காஃபி பதின்மூன்று பைசாக்கள். கப்பும் பெரிதாகவே இருக்கும்.  ஒரு கப் தேநீர் பத்து பைசா. ஒரு கப் வாங்கி இருவர் பகிர்ந்துக்கலாம். ஹாஃப் கப்பும் உண்டு. அரைக் கப் காஃபி பத்துப் பைசா என்பதால் மூன்று பைசாவைப் பார்க்காமல் முழுக்கப்பாகவே வாங்குவது உண்டு.

அதன் பின்னரும் எண்பதுகள் வரையிலும் காஃபி போர்டே காஃபிக் கொட்டை விநியோகம் செய்து வந்தது.  அதன் பின்னர் காஃபி போர்டையே அரசாங்கம் கலைத்து விட்டது என எண்ணுகிறேன்.  காஃபி போர்ட் இருந்த சமயம் உயர் ரகக் கொட்டைகள் நம்மை மாதிரி சாமானியருக்கெல்லாம் கிடைத்து வந்தது. அப்போதெல்லாம் எங்களுக்குக் காப்பிக் கொட்டைகள் என்னோட அப்பா வாங்கி ராஜஸ்தானுக்குப் பார்சலில் அனுப்புவார்.  அல்லது யாரானும் ஊர்ப்பக்கம் போனால் அவங்க கிட்டே கொடுத்து அனுப்புவார்.  ஒருமுறை கூர்க் கார ஜவான் ஒருத்தர் சொந்த ஊருக்கு லீவில் போக அவரிடம் சொல்லி மொத்தமாக ஐந்து கிலோவுக்கு மேல் காப்பிக் கொட்டைகள் வரவழைத்து இருக்கோம். அங்கே எல்லாம்"ஏ" காஃபிக் கொட்டைகள் தான் அதிகம். பீபரி அதிகம் கிடைக்காது.  மதுரைப்பக்கம் காஃபி எஸ்டேட்டில் பீபரிக் கொட்டைகள் கிடைக்கும்.  இரண்டையும் வாங்கி சரிக்குச் சரி கலந்து வறுத்துக் கொண்டு, வீட்டிலேயே இருந்த காரைக்குடி காஃபிக் கொட்டை மிஷினில் ஒவ்வொரு வேளையும் அரைத்துப் பின்னர் அதிலே தான் காஃபி போடுவேன்.  அந்த மிஷின் எனக்கு மட்டுமே சொன்னபடி கேட்கும்.  மத்தவங்க அரைச்சால் கொட்டை அப்படியே ஒன்றிரண்டாக உடைந்து விழும். இல்லைனா ரவை மாதிரி விழும். துரோகி மிஷின்.  இப்போத் தான் 2012 ஆம் வருஷம் ஶ்ரீரங்கம் வரச்சே அந்த மிஷினை எடைக்குப் போட்டோம். :(

ஹிஹிஹி, அவசரக் குடுக்கையா பப்ளிஷ் ஆகி இருக்கு.  டிடி கமென்டும் போட்டுட்டார்.  மத்தவங்க யாரையும் எனக்கு உதவியா அரைச்சுக் கொடுக்க விடாத மிஷின் துரோகி இல்லாமல் பின்னே என்னவாம்?  நாங்கல்லாம் ரூம் போட்டு உட்கார்ந்து ஜிந்திச்சு எழுதுவோம் இல்ல! :))))

இந்தக் காஃபி குடிக்கிறதும் ஒரு கலை. ஒரேயடியா ஆத்திட்டு மடமடனு குடிக்கக் கூடாது. ஆற வைச்சும் குடிக்கக் கூடாது.  கோல்ட் காஃபியெல்லாம் இருக்கு தான்.  அதெல்லாம் இரண்டாம் பக்ஷம் தான். காஃபியைக் கலந்து அளவா சர்க்கரை போட்டு, (நினைவிருக்கட்டும், சர்க்கரை கொஞ்சம் குறைச்சலா இருந்தால் தான் காஃபிக்கு சுவை) ஒரு வாய் வாயிலே விட்டுக் கொண்டு அதை உடனே விழுங்காமல் வாயிலேயே வைத்து நாக்கால் அதன் சுவையை அறிந்துகொள்கையில் அதன் மணம் மூக்கைப் போய்த் தாக்கும். அப்போ விழுங்கணும். :))) கடைசிச் சொட்டுக் காஃபி வரை சூடு ஆறாமலும் பார்த்துக்கணும்.  கடைசிச் சொட்டுக் காஃபியிலே காஃபி சூடு ஆறிப் போயிருந்தா என்ன நல்ல காஃபி குடிச்சாலும் காஃபி குடிச்சாப்போலேயே இருக்காது! காலம்பர காஃபி குடிக்கிறச்சே படம் எடுக்க மறந்துட்டேன்.  இரண்டாம் முறை காஃபி கலக்கறச்சே கட்டாயமாப் படம் எடுத்துச் சேர்க்கிறேன்.

25 comments:

 1. காஃபி சாப்பிடவே ஒருநாள் வீட்டிற்கு வருகிறேன்... ஹா... ஹா...

  சொன்ன பேச்சைக் கேட்டாலும் துரோகியா...?

  ReplyDelete
 2. காபி மகாத்மியம் மண்க்கிறது..

  நாங்கள் கோவையின் கண்ணன் காபி தூள் உபயோகிப்போம் ..

  அன்னபூரணா காபிக்கு செல்லமாக
  - விஷம் - என்று பெயர் வைத்திருக்கிறோம்..!

  ReplyDelete
 3. Coffee Board இன்னும் இருக்கிறது.... தில்லியில் இன்னும் India Coffee House நடத்தும் உணவகம் கன்னாட் ப்ளேஸ் பகுதியில் இருக்கிறது.

  நெய்வேலி India Coffee House-ல் பலமுறை காஃபி குடித்திருக்கிறேன் நண்பர்களுடன்!

  ReplyDelete
 4. வாங்க டிடி, படம் போட்டதும் பார்த்தீங்களா?

  ReplyDelete
 5. வாங்க ராஜராஜேஸ்வரி, அன்னபூர்ணா காஃபி அவ்வளவு மோசமா?

  ReplyDelete
 6. வாங்க வெங்கட், காஃபிபோர்ட் இருக்கா? ஆனால் இங்கே வர காஃபிக் கொட்டை எல்லாம் காஃபி போர்ட் மூலம் வரது இல்லை. அதை எல்லாம் ஏற்றுமதி செய்துடறாங்கனு நினைக்கிறேன். தரம் குறைந்த காஃபிக் கொட்டைகளே இப்போ வருது. :(

  ReplyDelete
 7. காபிக் கொட்டை வாங்கி அரைத்த காலம் மலையேறிவிட்டது! மதுரையில் இந்தியா காபி கடையில் பொடி வாங்கியிருக்கிறோம். நரசுஸ்தான் பெரும்பாலும். அப்புறம் கொஞ்ச நாள் லியோ. அதில் எரிப்பு வாடை இருப்பதாக ஃபீல் செய்ததால் இந்தியா காபி. இப்போதெல்லாம் மரியாதையே இல்லாமல் 'காஃபி டே'தான்!

  ReplyDelete
 8. நான் ஒரு பதிவு எழுதி வைத்து டிராப்டில் ஒரு மாதமாய்த் தூங்குகிறது. உங்கள் பதிவின் சில பகுதிகள் படிக்கும்போது அதை வெளியிட்டு விடலாம் என்று தோன்றுகிறது!!!

  ReplyDelete
 9. திக் பாலில் காபி சாப்பிடுவதில் எனக்கு(ம்) இஷ்டமில்லை. நல்ல காபி என்பது பாலைப் பொறுத்து மட்டுமோ, டிகக்ஷனைப் பொறுத்து மட்டுமோ அமைவதில்லை. இரண்டையும் பொறுத்து கூடவே நம் நேரத்தையும் பொறுத்தே அமைகிறது! பாயசம் சாப்பிடுவதில் எனக்கும் இஷ்டமில்லை. காஃபிக்கழகு கசப்பு!

  ReplyDelete

 10. ப்ளாண்டேஷன் மற்றும் பீபெரி கொட்டை இரண்டையும் சம அளவில் கலந்து வறுத்து வீட்டில் கை க்ரைண்டரில் அரைத்துகாஃபி ஃபில்டரில் ஊற்றிக் காஃபி குடித்த காலம் போய் விட்டது. இப்போது இங்கு கிடைக்கும் கோதாஸ் காஃபி ( 15% சிக்கரி கலந்தது)தான் உபயோகிக்கிறோம். அளவு ஒரு தடவைக்கு 75 மி.லி தான். கேரளத்தில் காப்பி காய்ச்சுவார்கள். பெரிய டம்ளரில் 200 மிலி குறையாது காப்பி குடிப்பதைக் கண்டிருக்கிறேன் பித்தளை டபரா தம்ளரில் காஃபி கொடுத்து அசல் கும்பகோணம் டிகிரி காஃபி என்று சென்னை மயிலாப்பூரில் விற்கிறார்கள்

  ReplyDelete
 11. நான் அடிமைதான் காபிக்கு. இப்பவும் 4.45க்குக் காப்பி சாப்பிட்டுவிட்டு உங்களுக்க்குப் பதில் போடறேன். இந்தியா காஃபி ஹௌஸ் போர்ட் பார்த்தால் என் கால்கள் நின்றுவிடும். திருப்பதி போனால் பெருமாள் ஒருதரம் காஃபி ஒருதரம்னு நானும் தம்பியும் போவோம். அப்போ ஒரு கிலோ 36ரூபாய்க்கு கிடைத்தது. சென்னையில் கும்பகோணம் டிகிரி காபிக்கு நானும் இவரும் பழகிவிட்டோம். இங்கே நெஸ்கஃபே டோஸ்ட் மாஸ்டர்.

  ReplyDelete
 12. வாங்க ஶ்ரீராம், காஃபிக் கொட்டை வறுத்தது இப்போவும் நரசூஸில் வாங்கித் தான் பொடி அரைத்து வாங்குகிறோம். :))) காஃபி டே எப்போவானும்! :)சிகரி சேர்க்காத சுத்தமான காஃபி தான்.

  ReplyDelete
 13. வாங்க வல்லி, நேரம் மாற்றிட்டாங்க போல! ஒரு மணி நேரம் குறைஞ்சு போச்சா? :))))

  காஃபி இங்கே இனிமே தான்(மாலை காஃபி)

  ReplyDelete
 14. போடுங்க ஶ்ரீராம், அதையும் படிச்சு வைக்கலாம். :)

  ReplyDelete
 15. காஃபிக்கழகு கசப்பு என்பது சரி! :)

  ReplyDelete
 16. வாங்க ஜிஎம்பி சார், கும்பகோணம் டிக்ரி காஃபி என்று கொடுப்பதை நாங்களும் குடிச்சுப் பார்த்தோம்! ம்ஹூம், காஃபியா அது! சிகரி போட்டுத் தான் கொடுக்கிறாங்க. ப்யூர் காஃபியே இல்லை! இங்கே ஶ்ரீரங்கத்திலும் குடிச்சுப் பார்த்தோம். அப்படி ஒண்ணும் உசத்தியாத் தெரியலை! :)))

  கும்பகோணம் டிக்ரி காஃபிப் பிரியர்கள் மன்னிக்க!

  ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சுவை இல்லையா? எங்களுக்கு இந்தச் சுவை பிடிக்கலை. அம்புடே!

  ReplyDelete
 17. பெங்களூரில் எப்படியோ தெரியலை, மங்களூரில் ஜனதா டீலக்ஸ் என்னும் ஹோட்டலில் சுத்தமான ப்யூர் காஃபி நல்லாக் கொடுக்கிறாங்க ஜிஎம்பிசார். ஒரு காஃபி குடிச்சுட்டு மறுபடியும் கேட்டு வாங்கிக் குடிச்சோம். அதே போல் நேபாள் போகையில் விமானத்தில் கொடுத்த காஃபியும் அருமையா இருந்தது. :)))))

  ReplyDelete
 18. பதிவே காபி போல மணக்கிறது! காபி கலக்கும் முறை விரிவாக பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 19. வாங்க சுரேஷ், வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 20. நான் காபி பிரியை.எனக்கு நல்லகாபி வாசனை வந்தால் ரசித்துக் குடிப்பேன்.
  ஆனால் எந்தக் காபி பொடி வாங்கினாலும் இரண்டு நாட்களுக்கு மேல் ஏனோ காபியி வாசனியே இலாது போலிருக்கும்.என்னவர் சொல்வது, உன் மூக்கிற்கு வாசனை பழகி விட்டது . அதான் வாசனை தெரியவில்லை . என்று. ஆனாலும் உங்கள் காபி மகிமை நன்றாகவே உள்ளது.

  ReplyDelete
 21. நரசூஸ் காஃபி வாங்கிப் பாருங்க ராஜலக்ஷ்மி. அல்லது காஃபி டேயிலும் வாங்கலாம். காஃபி டே கொஞ்சம் பொடி போட்டால் போதும். டிகாக்‌ஷன் ரொம்பத் திக்காக இறங்குகிறது. அதோடு அரைகிலோவுக்குக் குறைச்சுத் தரதில்லை. அதனால் நாங்க எப்போவுமே நரசூஸ் தான். சென்னையில் இருந்தவரை டாடா கூர்க் ப்ளான்டேஷன் ஏ+ப்ளான்டேஷன் பீபரி இரண்டும் கலந்து அரைச்சு வாங்குவோம். நோ சிகரி. காஃபியின் சுவை, மணம் கெடுவதே இந்த சிகரியால் தான். :(

  ReplyDelete
 22. எங்க ஊர் கோத்தாஸ் காப்பி குடித்ததில்லையா, கீதா? எங்கள் வீட்டிற்கு வாருங்கள், சுடச்சுட கமகமக்கும் காப்பி கொடுக்கிறேன்.
  கொஞ்சம் நறநறவென்றுதான் இருக்கும் பொடி. ஆனால் அந்த மணம் அலாதி!
  ஒருகாலத்தில் அதிக சர்க்கரை போட்டுத்தான் குடிப்பேன். இந்த ஊருக்கு வந்து காபியின் அளவு, சர்க்கரையின் அளவு இரண்டையும் குறைத்துவிட்டேன்.
  பெங்களூரிலும் எல்லா இடங்களிலும் காப்பி பிரமாதமாக இருக்கும்.

  ReplyDelete
 23. வாங்க ரஞ்சனி, நீங்க சொல்றாப்போல் காஃபி பவுடர் காஃபி டேயில் கொடுக்கிறாங்க. ரொம்பத் திக்கான டிகாக்‌ஷன்.

  ReplyDelete
 24. டிகாக்‌ஷன் ஒத்தாற்போல் அதிகமாய் கெட்டியாய் இல்லாமலும், அதிகமாய் நீர்க்க இல்லாமலும் இருந்தால் காஃபி கலக்க சரியாய் இருக்கும். //

  அதே அதே...நானும் முன்னர் எல்லாம் காலை எழுந்தவுடன் காபி என்று அடிமையாய் இருந்தேன் இப்போதெல்லாம் கொஞ்சம் தாமதமானாலும் மனம் ஏற்றுக் கொள்ளும் அளவு பக்குவம் வந்துவிட்டது அறவே விடும் அளவு பக்குவம் வரலைனாலும்...

  கடைசில சொல்லிருக்கீங்க பாருங்க காஃபி எப்படிக் குடிக்கணும் என்று அதுதான். நான் எல்லாம் மெதுவா ரசித்துக் குடிப்பேன். சர்க்கரையும் குறைவாகத்தான் அதிகம் போட்டால் காபி சுவை தெரியாது...ஆனால் நானே சர்க்கரை என்பதால் இப்போது சர்க்கரையே இல்லாமல் குடிப்பது அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது!.

  இங்கு பங்களூரீல் பொதுவாகவே எல்லா இடங்களிலும் காஃபி நன்றாக இருக்கிறது. இங்கு வந்தும் காஃபி டே அல்லது வீட்டருகிலேயே இருக்கும் கூர்க் காஃபி. அரைத்து தருவாங்க. இனி கோத்தாஸ் வாங்கணும்.

  முன்னால் அப்பா வழிப்பாட்டி வீட்டில் காஃபி கொட்டை வறுத்து அரைக்கும் மெஷின் இருந்தது அதி தான் அரைப்போம். அப்புறம் பாட்டிக்கு வயசானதும் அதைக் கொடுத்துவிட்டாங்க. எனக்கு இப்போது தோன்றுகிறது அந்த மெஷினை நான் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம் என்று. ஆனால் இப்போது காஃபி க்ரைண்டர் நெறு ட்ரை மிக்சி அம்வேரிக்காவில் கிடைக்கிறதே சிறிய மிக்ஸி ட்ரை மிக்ஸி அதைத்தான் வைத்திருக்கிறேன் என்றாலும் அதில் இப்போது காஃபி அரைப்பதில்லை. ஏலம், கிராம்பு எல்லாம் பொடி செய்து கொள்வதற்குப் பயன்படுத்துகிறேன்.

  கீதா

  ReplyDelete
 25. எந்த இடுகையிலும், 'கல்சட்டி', 'உருளி'ன்னு பெருமை பேசி அதில்தான் இன்னமும் செய்வதாகச் சொல்லவேண்டியது. பித்தளை டபரா செட்டை பாதுகாத்து அதனை இன்னமும் உபயோகிக்கத் தெரியலையே... இல்லைனா கல்யாணத்துக்கு வெள்ளி டபரா செட்டாவது கொடுத்திருப்பாங்களே... ஏந்தான் எவர்சில்வர் உபயோகிக்கறீங்களோ...ஹாஹா

  ReplyDelete