எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 26, 2014

இரண்டாம் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்!

 ஒரு இளைஞனின் கற்பனை அதுவும் கல்யாணம் ஆகாத இளைஞனின் கற்பனை எவ்வளவு தூரத்துக்குப் போகும் என்பது தான் கதையின் முக்கியக் கரு. ஆண், பெண்ணின் ஈர்ப்புச் சக்தி இயல்பான ஒன்று. சிறு வயதில் இருந்தே ஒருவரை ஒருவர் ஈர்க்கின்றனர்.  பருவ வயது வந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.  ஆணுக்குத் தான் முற்றிலும் அறியாத ஒரு பெண் மனைவியாக வரப் போகிறாள் என நினைக்கையிலேயே மனம் ஒரு வகையான பதட்டத்தில் ஆழ்கிறது. அதோடு கற்பனையில் அந்தப் பெண்ணைக் குறித்துப் பற்பல கனவுகள் காண்பான்.  பெண்ணைக் குறித்தும், அவள் அழகைக் குறித்தும் எதிர்பார்ப்புகள், கற்பனைகள் இருக்கும்.  உண்மையிலேயே தான் கனவில் கண்ட அந்தப் பெண் தன் பக்கத்தில் இருந்தால் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற கற்பனையிலும் ஆழ்ந்து போவான்.  இப்படிப் பட்ட எண்ணங்களோடு கூடிய ஒரு ஆண்மகன் தான் கனவு காண்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் பேருந்தில் கண்டதொரு கனவே இங்கே கதையாகப் பரிமளித்துள்ளது.

அலுவலகத்தின் விடுமுறை நாளில், மின் வெட்டு தினத்தில் வீட்டில் இருக்கும் வெப்பமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க நினைக்கும் கதாநாயகன் பொழுது போக்கச் செல்ல நினைப்பது ஒரு தொடர் பேருந்தில் பயணம். .அந்தப் பேருந்தும் நகரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட தொடர் பேருந்து.  ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பொழுதுபோக்கும் ஆச்சு;  தொடர் பேருந்தில் பயணம் செய்தாப்போலவும் ஆகிவிட்டது.  மனித மனத்தின் சராசரி ஆசைகள் பேருந்திலோ, ரயிலிலோ ஜன்னலோரம் அமர்வது.  இங்கே அது இவன் கேட்காமலே கிடைக்கிறது.  செல்லும் தூரம் வரை சுகமான காற்றும் வீசுகிறது. கூடவே  மல்லிகை மணமும் கமழ, மனம் பெண்களை எதிர்பார்க்கப்பக்கத்தில் வந்து அமர்கிறாள் ஓர் அழகி.  பாலக்காட்டு ராணி. அமுதா என்ற இனிமையான பெயரைச்சொல்லும் போதே நாக்கும், மனமும் இனிக்கிறது.

அவளோ உதவி நாடுகிறாள்.  செல்ல வேண்டிய பயிற்சி நிலையம் செல்ல வழி கேட்கிறாள். இங்கேயும் சாதாரணமாக எல்லா ஆண்களும் சொல்வது போலவே தானே கூட வந்து வழிகாட்டி அழைத்துச் செல்வதாக ஒப்புக் கொள்கிறான் கதாநாயகன்.  இதோடு கற்பனை முடிந்ததா என்றால் இல்லை.  இவள் எத்தனை நாட்கள் இருப்பாள் எனக் கணக்குப் போட்டுப்பார்த்து அதற்குள் இவளையும் தன் பக்கம் கவர்ந்திழுக்க வேண்டும் என்ற நீண்ட காலத் திட்டம் ஒன்றும் மனதுள் தோன்றுகிறது.  உடனே மனதில் காதலும் தோன்றுகிறது. இதென்ன கண்டதும் காதலா என்றெல்லாம் கேட்காதீர்கள்.  இது எதிர்பாலினம் ஒன்றை ஒன்று ஈர்ப்பதின் விளைவு தான்.  அது மட்டுமே.  ஆனால் நம் கதாநாயகர் சொப்பன உலகில் மிதக்கிறாரே!  அது அவருக்கே தெரியவில்லை. இப்படி எல்லாம் கனவு கண்டு கொண்டு அவளிடம் செல்போன் நம்பர் கூட வாங்கிக் கொள்கிறார் சொப்பனத்திலேயே. நல்லவேளையாக தன்னுடைய செல்போனை எடுத்துக் கீழே போட்டு உடைக்கலை.  அந்த அமுதாவுக்காக ஆட்டோவுக்குச் செலவு செய்து பயிற்சி நிலையம் கூட்டிச் செல்லவும், அவளுக்குத் தங்குமிடம் பார்த்துக் கொடுக்கவும் கூடத் தயாராகிவிடுகிறான்.  எல்லாம் திருச்சி  சுப்ரமண்யபுரம் டோல் கேட்டில் இருந்து துவாக்குடி போகும் நேரத்துக்குள்ளாக.

அப்போது தான் பேருந்து பயணம் முடிந்து நிற்கிறது போலும்.  இவருக்கு வியர்க்கிறது.  தன் காதலில் வெற்றி கிட்டுமா என்னும் கலக்கத்தில் இருப்பவரைத் தட்டி எழுப்புவது பேருந்தின் நடத்துநர்.  இறங்க வேண்டிய இடம் வந்தாகிவிட்டது என எழுப்புகிறார்.  அப்போது தான் நம் கதாநாயகருக்குத்தான் கண்டது இனிமையான கனவு எனப் புரிந்து நிகழ்காலத்துக்கு வருகிறார்.  ஆனால் பாருங்க, அவர் மனதில் அமுதாவின் பெயரே ஓடிக் கொண்டிருக்கிறதா!  அப்போப் பேருந்தில் போடப்படும் பாடலும், "அமுதைப் பொழியும் நிலவா"க அமைய சோகப் பெருமூச்சு விடும் கதாநாயகனின் சோகத்தை அதிகப்படும் வகையில் அடுத்த இரண்டாவது நிறுத்தத்தில் ஒரு பெண்மணி ஏறி கதாநாயகர் அருகே அமர்கிறாள்.அமர்வதோடு கதாநாயகரைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தலையையும் நீட்டுகிறாள்.ஹாஹாஹா, இங்கே தான் இருக்கு நம் எழுத்தாளரின் நகைச்சுவையான கேலி.

வந்தவள் ஒரு காய்கறி விற்கும்கிழவி. கட்டி அணைத்தாற்போல் ஜன்னல் வழி தலையை நீட்டியது வெற்றிலைச் சாறைத் துப்ப.  இது போதாதா நம் கதாநாயகரின் அசடு வழிதலுக்கு.  பத்தாக் குறையாக அந்தக் கிழவியை "அமுதாம்மா" என இன்னொரு கிழவி கூப்பிடவே. ஆஹா,நிஜமான இளம் அமுதாவுக்கு பதில் இப்படி ஒரு கிழட்டு அமுதா பக்கம் அமர்ந்து பயணம் செய்யும்படி ஆயிற்றே எனத் தன் தலைவிதியை நொந்து கொண்டு பயணம் செய்கிறான் கதாநாயகன்.

திருமணம் ஆகாத ஆணின் மனதில் தோன்றும் ஆசைகளும், சபலங்களும், இளம்பெண்ணிடம் பேசத் துடிக்கும் முனைப்பும், அவளுக்கு உதவிகள் செய்வதன் மூலம் தான் நல்லவன் எனக்காட்டிக் கொள்ளத் துடிக்கும் துடிப்பும் இந்தக் கதையில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்.  எப்படியேனும் இந்தப்பெண் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் மீதூற அவன் நினைப்பதெல்லாம் படிக்கையில் நமக்கு நிஜம் போலவே தோன்றுகிறது.  கடைசியில் தான் ஆசிரியர் இவை அனைத்தும் கனவு எனப் புதிரை உடைக்கிறார். அதன் பின்னர் கதாநாயகனின் ஏமாற்றமும், சராசரிப் பெண்களே பேருந்தில் ஏறும் நிலைமையும், அதிலும் ஒரு கிழவி வந்து பக்கம் அமர்வதை வேறு வழியில்லாமல் சகிக்க வேண்டி இருப்பதையும் மறைமுகமாகச் சொல்லி விடுகிறார்.

இது நம் பக்கத்து விட்டுக் கிச்சாவோ, கோபுவோ, ரமணியோ, சுந்தரோ தாங்கள் பட்ட சொந்த அனுபவத்தை நம்மிடம் சொல்வது போல் அமைந்து விட்டது இன்னும் சிறப்பு.  இப்படி ஒருத்தரை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கோமே என்ற நினைப்பு நம்மிடம் வந்தே தீரும். ஏனெனில் அது வேறு யாருமல்ல.  நம் வீட்டிலேயே இருக்கும் நம் வீட்டுக் கல்யாணமாகாத பிரமசாரிப் பிள்ளைகளே.


தொடர்ந்து ஊக்குவித்து வரும் வைகோ சாருக்கு நன்றி. இனி வரும் போட்டிகளிலாவது எங்கள் ப்ளாக் ஶ்ரீராம், ஜீவி சார், வெங்கட் நாகராஜ், ஆதி வெங்கட், கோமதி அரசு, வல்லி சிம்ஹன் ஆகியோர் பங்கு பெறும்படி வைகோ சார் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

14 comments:

  1. நல்ல விமர்சனம். வாழ்த்துகளும், பாராட்டுகளும். இந்தக் கதை வெளியானபோது அதற்கு என் பின்னூட்டம் என்ன என்று பார்க்க ஆவல்!

    ReplyDelete
  2. ஈதைத்தான் பார்க்கச் சொன்னீர்களா கீதா. எனக்குப் படிக்கத்தான் தெரியும். விமரிசனம் பண்ணும் அளவுக்கு மேல்மாடி சுறுசுறுப்பா இருக்கான்னு பார்க்கிறேன்.எந்தக் கதையை விமரிசனம் செய்யணும்மா.

    ReplyDelete
  3. வைகோ ஐயா அறிவித்த தொடர் ஊக்கப் பரிசுகளையும் தவற விட்டாதீர்கள் அம்மா...

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம். அவரது தளத்திலும் வாசித்தேன்.

    அவரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். எழுத தான் முடியவில்லை! :(

    ReplyDelete
  5. வாங்க ஶ்ரீராம், எனக்குக் கதை எப்போது வெளியானதுனு தெரியாது! :))))) உங்க விமரிசனத்துக்கு என்ன குறைச்சல்! நல்லாவே எழுதி இருப்பீங்க. இப்போத்தான் வரதில்லைனு வைச்சிருக்கீங்க போல! :))))

    ReplyDelete
  6. வாங்க வல்லி, இந்த வெள்ளிக்கிழமை வைகோ சார் அவரோட பதிவிலே போடுவார். VGK 11 ஆம் எண்ணிலே வெளியாகப் போகும் அந்தக் கதைக்கு உங்களால் இயன்றால் விமரிசனம் எழுதி விஜிகே 11 னு தலைப்பிலே அவருக்கு அனுப்பி வைக்கணும். முடிஞ்சா எழுதுங்க. :))))

    ReplyDelete
  7. வாங்க டிடி, என்னவோ குருட்டு அதிர்ஷ்டம்னு நான் நினைச்சுட்டு இருக்கேன். நீங்க வேறே! :)))

    ReplyDelete
  8. எழுதுங்க வெங்கட், நீங்க, ஶ்ரீராம், ஜீவி சாரெல்லாம் எழுத ஆரம்பிச்சா நானெல்லாம் ஓரங்கட்டப்பட்டுடுவேன். இருந்தாலும் நீங்களும் பரிசுகளை வெல்லலாம். இன்னும் 30 கதைகள் இருக்கின்றனவே! முயற்சி செய்ங்க. :)))

    ReplyDelete
  9. அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    என்னை விமர்சனம் செய்ய அழைத்தமைக்கு நன்றி.
    ஆனால் என்னால் இயலுமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  10. // உங்க விமரிசனத்துக்கு என்ன குறைச்சல்! நல்லாவே எழுதி இருப்பீங்க. இப்போத்தான் வரதில்லைனு வைச்சிருக்கீங்க போல! :))))//

    அப்படியில்லை. ரெண்டு மூணு வரி கமெண்ட்தான் எழுத வருகிறது. விமர்சனங்கள் என்று பாரா பாராவாய் எழுத வரவில்லை! :)))

    ReplyDelete
  11. வாங்க கோமதி அரசு, நான் மட்டும் அழைக்கவில்லை, வைகோ சாரும் அழைத்திருக்கிறார். வருகிற வெள்ளியன்று பதினொன்றாம் சிறுகதை வெளியிடுகையில் நீங்கள் கலந்து கொள்ளலாம். முன் கூட்டிய வாழ்த்துகள்.:)))

    ReplyDelete
  12. @ஶ்ரீராம், இதானே வேண்டாம்ங்கறது! விமரிசனப் பதிவுகளே போட்டுவிட்டு! ரா.ல.வின் கவிதைத் தொகுதியையும், ஆதித்த கரிகாலன் கொலை மர்மத்தையும் விமரிசிக்கவில்லையா நீங்க? அதை விட இது ஒண்ணுமே இல்லை.

    நானும் முதல்லே உங்களைப் போலத் தான் சுருக்கமாக எழுதினேன். ஒரு இரண்டு, மூன்று பதிவுகள் வரையிலும் அப்படி! அப்புறமா வர விமரிசனங்களைப் படிச்சதுமாப் புரிஞ்சது. :))))

    ReplyDelete

  13. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    ReplyDelete
  14. கீதாம்மா.. உங்கள் அழைப்புக்கு நன்றி. நல்ல விமரிசனங்கள் வர வேண்டும் என்கிற உங்கள் அக்கறையும் ஆவலும் உயர்வானது. sportsman spirit.

    நான் இப்பொழுது மிக முக்கியமான பணியொன்றில் ஈடுபட்டிருக்கிறேன்.
    அந்தப் பணி செம்மையாக முடிவு பெறும் பொழுது நிச்சயம் தங்களுக்கு தெரிவிக்காமலிருக்க மாட்டேன்.
    செய்து முடித்த பிறகு பெருமை கொள்வது தானே நியாயம்?.. அதனால் தான்.

    இந்த ஆண்டு சில புத்தகங்களை வெளிக்கொணர வேண்டும் என்கிற எண்ணச்சுமை வேறு அழுத்திக் கொண்டிருக்கிறது.

    இதனாலேயே பதிவுகள் பக்கம் வருவதை தவிர்த்திருக்கிறேன். இருந்தாலும் வழக்கம் போல எழுதுவதில் பிறரை உற்சாகப்படுத்தும் பணியில் பின்வாங்கவே மாட்டேன்.

    புரிந்து கொள்வீர்கள் என்கிற நம்பிக்கை உண்டு. அழைப்பு விடுத்த கோபு சாருக்கும் உங்களுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete