எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 04, 2024

தீபாவளிக் கொண்டாட்டம் முடிஞ்சது.

இந்த வருஷம் நவராத்திரிக்கு ஏதானும் எழுதணும்னு ஆரம்பிச்சுக் கடைசியில் ஒண்ணுமே எழுதலை. நேரம் சரியாகப் போய் விட்டது. அதோடு ஹோம்கேர் பெண்களுக்காகப் போட்டிருந்த கான்ட்ராக்டும் முடிஞ்சுடுத்து என்பதால் தாற்காலிகமாக மேல்கொண்டு கான்ட்ராக்டை நீட்டிக்கவில்லை. ஆகவே இப்போது பெண்கள் வருகையும் இல்லை. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கேன். மருத்துவமனை செல்லும்போது மட்டும் ஹோம்கேரிடம் கேட்டுக் கொண்டு யாரானும் ஒரு நர்சிங்க் உதவியாளரை அனுப்பச் சொல்லிக் கூட்டிப் போகிறேன். இந்த அழகில் நவராத்திரிக்கு வருபவர்களைக் கவனிச்சு அனுப்பினாலே போதும்னு ஆயிடுத்து. தினமும் அநேகமாகச் சுண்டல் என்னமோ பண்ணினேன், அவருக்கு நல்லதாச்சே. வருபவர்களுக்கு மட்டும் வெற்றிலை, பாக்கு வைச்சுக் கொடுத்தேன் கொலு என்னும் பெயரில் என் தம்பி எப்போவோ பாண்டிச்சேரியில் இருந்தப்போ வாங்கின டெரகோட்டா பிள்ளையார்களை வைச்சுட்டேன். அயோத்தி ராமரும்,பழைய கொலு பொம்மையில் ஒரு இசைக்கும் மிருகமும் மட்டும் கிடைச்சது. இன்னமும் எடுக்கிறேன்னு வேலை செய்யும  பெண் சொன்னார்தான்,. ஆனால் இடம் இல்லை. துவே தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்துட்டோம் இல்லையா? அந்த இடத்தில் வைச்சேன். சரஸ்வதி பூஜை அன்னிக்குப் படத்தை வைத்துச் சில புத்தகங்கள் மட்டும் வைத்தேன். ரங்க்ஸால் உட்கார்ந்து பூஜை எல்லாம் பண்ண முடியாதே. ஆகவே பூவைப் போட்டுட்டு தீபாராதனை மட்டும் காட்டினேன். ரவிக்கை, புடைவை வைக்க மறந்து விட்டது.  பூஜை தான் பண்ணலையேனு மனதை சமாதானம் செய்து கொண்டேன், வேறே வழி








நவராத்திரிக் கோலம்





பொம்மைகள்


 


சரஸ்வதி பூஜை



அடுத்து தீபாவளி வருதே! என்ன செய்யறது? காட்டன் புடைவைகள் 2,3 இருந்தது தான். ஆனால் அவை தினப்படிக்காக வாங்கினவை. தீபாவளிக்குனா நாங்க அநேகமா விஜயதசமி அன்னிக்குப் போய் வாங்குவதை வழக்கமாக வைச்சிருந்தோம், எனக்குக் காலில் பிரச்னை வந்ததில் இருந்தே அது முடியாமல் போச்சு. புடைவைக்காரர் வீட்டுக்கு வருவார்/அல்லது பக்கத்தில் இருக்கும் கடைக்கு முக்கி, முனகிக் கொண்டு நான் வர ரங்க்ஸ் அழைத்துப் போவார். பக்ஷணங்கள் செய்ய வேண்டாம்னு ஏற்கெனவே முடிவு பண்ணிட்டோம். ஏனெனில் என்னால் சாப்பாடு பண்ணும்போது நிற்பதே சிரமமாகப் போய் விட்டது. ஆகவே பக்ஷணங்கள் ஆர்டர் கொடுத்துட்டோம். எல்லாம் கால் கிலோ தான்.  வீட்டில் எண்ணெய் வைக்கணும்னு பஜ்ஜியும், மைசூர்ப்பாகும் மட்டும் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன். அதே போல் பண்ணிட்டு மருந்தும் கிளறிட்டேன்.


இந்தப்புடைவை விவகாரமும், ரங்க்ஸுக்கு வேஷ்டி எடுப்பதும் மட்டும் தான் பிரச்னை. ரங்க்ஸ் காதியில் தான் எடுத்துப்பார். ஸ்ரீரங்கத்திலேயே காதி பண்டார் இருப்பதால் எடுத்துடலாம். ஆனால் யார் போவது? அவராலும் முடியாது. என்னாலும் முடியாது. வேலை செய்யும் பெண்மணி கை கொடுத்தார். அவங்க வீட்டில் அவங்க கணவருக்கு அவர் தான் போய் எடுத்து வருவாராம். அதே காதி கடையில். ஆகவே நீங்க சொல்லுங்க நான் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து எடுத்து வந்துட்டார். அன்றே நான் கோ ஆப்டெக்ஸில் நெகமம் காட்டன் புடைவைகளைப் பார்த்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்தால் பேமென்ட் டிடெயில்ஸே வரலை. அப்புறம் யதேச்சையாகப் பெண்ணிடம் சொல்ல அவள் உடனே கோ ஆப்டெக்ஸ் வெப்சைட்டில் போய் அந்தப் புடைவையைத் தேர்ந்தெடுத்துப் பணத்தையும் கட்டி ஆர்டர் செய்து விட்டாள். நடுவில் ஒரு நாள் ஞாயிறு என்பதால் திங்களன்று புடைவை வரும் எனச் செய்தியும் வந்து விட்டது. அதே போல் திங்களன்று புடைவையும் வந்து விட்டது. 



ஆக தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயார். தீபாவளி அன்று காலை மூன்று மணிக்கே எழுந்து வாசலில் முதல் ஆளாகக் கோலமும் போட்டேன். 





சாமி இடமும் துடைத்துக் கோலம் போட்டுப் பலகையிலும் கோலம் போட்டு எண்ணெய் காய்ச்சி, சீயக்காய், மஞ்சள் பொடி கரைத்தும் எடுத்து வைச்சேன், வாங்கிய பக்ஷணங்களோடு என்னோட புடைவைகளையும், ரங்க்ஸோட வேட்டி, ஷர்ட், துண்டையும் வைச்சேன். நான் எப்போவும் ஒரே ஒரு புடைவையாக வைக்க மாட்டேன் என்பதால் காட்டன் புடைவைகளில் ஒன்றை எடுத்து வைச்சு இரண்டு புடைவையாக வைச்சேன். அந்த்க காட்டன் புடைவை தான் மேலே தெரியுது. நான் தீபாவளிக்கு எடுத்தது வலப்பக்கம் தட்டில் இருக்கு.  தலைக்கு நானே எண்ணெய் வைத்துக் கொண்டேன். வெற்றிலை, பாக்கு, ப்ழங்கள் வைச்சுப் பின்னர் குளிச்சுட்டு வந்ததும்ம் ரங்க்ஸ் வரும்வரை காத்திருந்துவிட்டுப் பின்னர் புடைவை வைச்சுக் கொடுத்தார் வாங்கிக் கட்டிக் கொண்டேன். ஆனால் அவர் பார்க்கலை. தூங்கிட்டார். முடியலை. சிறிது நேரத்திலேயே புடைவையை மாற்றிக் கொண்டு விட்டேன். ஆனால் அன்று மட்டும் காலை ஒன்பதரைக்கு ஒருதரம், மத்தியானம் சாப்பிட்டதும் ஒரு தரம், இரவு ஏழரை மணிக்கு எனத் தூங்கிக் கொண்டே இருந்தேன். அவ்வளவு அசதி. மறு நாளும் அப்படித் தான் அடிச்சுப் போட்டாப்போல் தூங்கினேன். இதான் இந்த வருஷ தீபாவளிக் கொண்டாட்டம்,.




















 

Friday, October 04, 2024

முங் தால் பராத்தா ரெடி! சாப்பிடலாம் வாங்க! :D

 நேத்திக்கு முதல் நாள் பாசிப்பருப்புச் சுண்டல் செய்தேன். நேற்று ஆயுர்வேத மருத்துவரிடம் போவதாக இருந்ததால் காலையிலிருந்து வயிற்றைக் காலியாகவே வைத்திருந்தேன். ஏனெனில் இப்போதெல்லாம் வயிற்றில் ஏதானும் போட்டால் உடனே கழிவறைக்குப் போகும்படி ஆகிறது. சாப்பிடுவது என்னமோ மோர் சாதம் மட்டும் தான். அதையும் பல நாட்கள் கரைத்துக் குடிக்கிறேன். இதுக்கே இந்தப் பாடு படுத்துகிறது வயிறு. என்னோட முதல் விரோதியே என் வயிறு தான். போகட்டும். நேற்றுச் சுண்டல் செய்கையில் மஞ்சள், குங்குமம் பாக்கெட்டைத் தேடிக் கொண்டிருந்ததால் சுண்டலைச் சரியான நேரத்தில் அடுப்பிலிருந்து எடுக்கலை. கொஞ்சம் குழைந்து போய் விட்டது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்மவர் உடனே எனக்கு வேண்டாம்னு அறிவிப்புச் செய்துட்டார். நான் விடுவேனா என்ன? தாளித்துக் கொட்டித் தேங்காயெல்லாம் சேர்த்துட்டு நிவேதனம் ஆனதும் சாப்பிட்டுப் பார்த்தால் நன்றாகத் தான் இருந்தது. வரவங்களுக்குக் கொடுக்கவும் கொடுத்தேன். அப்படியும் சுண்டல் மிச்சம். சரினு குளிர்சாதனப் பெட்டியில் ஒரு ஓரமாக எடுத்து வைத்தேன்.

இன்னிக்குக் காலம்பர காலை ஆகாரம் பண்ணி ஆகணுமே. சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைச்சுட்டு அந்தச் சுண்டலைக் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்துக் கொண்டேன். அலுமினியம் சட்டியை அடுப்பில் வைத்துக் கடுகு, சீரகம், சோம்பு தாளித்துக் கொண்டு பெருங்காயப் பொடியைச் சேர்த்துச் சுண்டலைக் கொட்டிக் கொஞ்சம் காரப்பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி சேர்த்து நன்கு கிளறினேன். உப்புக் கொஞ்சம் போலச் சேர்த்துட்டுச் சர்க்கரையும் கொஞ்சம் சேர்த்தேன். பச்சைக்கொத்துமல்லியைத் தண்டோடு பொடியாக நறுக்கிச் சேர்த்து நன்கு கிளறிய பின்னர் ஆற விட்டு உருண்டைகளாய்ப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு சாப்பாத்தியின் உள்ளேயும் வைத்து மூடிப் பின்னர் நன்கு பெரிதாக இட்டுக் கொண்டு அடுப்பில் சப்பாத்திக்கல்லில் போட்டு நெய் விட்டு நன்கு வேக விட்டு எடுத்துக் கொண்டேன். தால் பராத்தா தயார். 


PC: Google

இதையே மைதாமாவில் பிசைந்து கொண்டு இட்டு மூடி எண்ணெயில் பொரித்தெடுத்தால் மூங்தால் கசோடி தயார். காலை வேளையில் எண்ணெய் வேண்டாம் என்பதோடு மைதாமாவு பயன்பாடும் பெரிதாக இல்லை. கசோடியில் சில சமயம் பாசிப்பருப்புக் கலவையோடு பச்சையாகக் கொத்துமல்லி விதைகளை ஒன்றிரண்டாக நசுக்கிச் சேர்க்கலாம். உருளைக்கிழங்கையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு வேகவிட்டுச் சேர்க்கலாம். ராஜஸ்தான் கசோடி இல்லை, கசோடா. பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈதாக இருக்கும். உடைத்து நிறுத்துத் தான் தருவார்கள். 100 கிராம் கசோடா வாங்கினாலே தாராளமாக நான்கு நபர்கள் சாப்பிடலாம். காரம் தான் தலைக்கு ஏறும். அதுவும் நாங்க இருந்த நசிராபாத் கன்டோன்மென்டின் வெளியே பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே இந்தக் கடைகள் நடமாடும் வண்டிகளில் நிற்கும். எல்லாக் கடைகளும் கூட்டம் நிரம்பி வழியும். இத்தோடு சேர்த்துச் சாப்பிட மைதாமாவு ஜிலேபி. நெய்யிலேயே பொரித்திருப்பார்கள் என்பதோடு தித்திப்பும் வழியும். அந்தக் காரமும் இந்த இனிப்பும் ஒன்றுக்கொன்று ஒத்தும் போகும். இதையே காலை உணவாகக் கொள்பவர் பலர் உண்டு.

ஆக மொத்தம் சுண்டலும் வீணாகாமல், காலை ஆகாரமாகத் திப்பிசம் செய்து மாத்தியாச்சு. என் பெண் உனக்கு எப்படி அம்மா இப்படி எல்லாம் தோணுது? என்று கேட்பாள். இன்னிக்கு என்னமோ ஒண்ணும் கேட்டுக்கலை. ஹிஹி, நமக்குத் தான் இப்படி எல்லாம் தோணும். ஃபோட்டோ எடுக்கையில் ஆட்கள் வந்துட்டதால்  ஃபோட்டோ சரியாய் வரலை. கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் பராத்தா தயிர், எலுமிச்சை ஊறுகாயுடன் ஜூப்பரோ ஜூப்பரு!

Thursday, October 03, 2024

நவராத்திரிப் பதிவுகள்! தொடரலாம்!

 முன்னெல்லாம் நவராத்திரிப் பதிவுகள் ஒவ்வொரு வருஷமும் போட்டுக் கொண்டிருந்தேன். கொரோனாவுக்குப் பின்னர் எனக்கும் உடம்பு முடியாமல் காலில் பிரச்னை வந்து படுத்ததில் இம்மாதிரி ஆன்மிகம், பக்தி பற்றிப் பதிவுகள் போடுவதே குறைந்து விட்டது. கடைசியாக சஹானா இணைய இதழுக்காக, நவராத்திரிப் பதிவுகள், தீபாவளிப் பதிவுகள்னு எழுதிக் கொடுத்தேன்.அம்பிகையைப் பற்றி நிறைய விலாவரியாக எழுதி இருக்கேன். லலிதாம்பாள் சோபனத்தையும் சௌந்தரிய லஹரியையும் ஒப்பிட்டு எழுதினது எனக்கு மறக்க முடியாத ஒன்று. அது ஃப்ரீ தமிழ் ஈ புத்தகக்குழு மூலம் புத்தகமாக வந்திருக்கு. அதுக்கு நான் காப்புரிமை எல்லாம் வாங்கலைனாலும் திரும்பக் கிண்டிலில் போடலாமானு தெரியலை. என்னோட பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார் புத்தகமும் ஈ புத்தகமாக வந்தது அங்கே இப்போது காணக் கிடைப்பதில்லை. அதன் மூலம் என்னோட டெஸ்க் டாப்பில் இருந்ததால் அதைப் பென் ட்ரைவில் காபி செய்து வைச்ச நினைவு. ஆனால் அதைப் போட்டு மீட்டு எடுக்கத் தெரியலை. ஏற்கெனவே ஃப்ரீ தமிழ் ஈ புத்தகமாக வந்தவற்றைக் கிண்டிலில் போடலாமானும் தெரியலை. 


அது போகட்டும். இப்போ நம்ம ரங்க்ஸுக்கு பிசியோதெரபி பயிற்சி கொடுப்பவர் வயதில் சிறியவராக இருந்தாலும் ஆன்மிகத்தில் முக்கியமாய் யோகத்தில் ஈடுபாடு உடையவர். அவருடன் பேசுகையில் நம் உடம்பின் சக்கரங்களதன் பயன்பாடுகளும், பற்றிப் பேசுவதோடு அல்லாமல் இந்த நவராத்திரியில் தேவி எப்படி அனைத்துச் சக்கரங்களுக்கும்  தொடர்பை ஏற்படுத்துகிறாள் என்பது பற்றியும் பேசினோம். தேவியின் சக்தியானது எவ்விதம் விரிந்து  அதன் மூலம் நாம் படைப்பின் அனைத்து அம்சங்களையும் இந்த நவராத்திரி மூலம் கொண்டாடுகிறோம் என்பது பற்றியும் சொன்னேன்.  முதலில் பித்ரு பக்ஷம் முடிவடைந்து  ஆண்களுக்கு எவ்வாறு உடல், மனம் சுத்தியாகிறதோ அவ்வாறே அடுத்த இந்தப் பத்து நாட்கள் பெண்களுக்கு  தேவி வழிபாட்டின் மூலம் ஏற்படுகிறது. உண்மையில் சாக்தர்கள் அம்பிகையின்  தசமஹா வித்யையும் இந்த நவராத்திரியில் முன்னெடுத்துக் கொண்டாடி தேவியை ஆராதிக்கின்றனர். 




நவசக்திகளையும்  ஒவ்வொரு நாள் வழிபடுவதன் மூலம் உடலின் ஏழு சக்கரங்களும் நன்கு செயல்பட ஆரம்பிக்கின்றன. முதல் நாள் சாக்தர்களுக்குப் பர்வத ராஜகுமாரியின் பிறப்பு எனக் கொள்வதால் மூலாதாரச் சக்கரமான குண்டலினியின் செயல்பாட்டில் துவங்குகிறது. பர்வதராஜகுமாரி ஈசனை மணக்க வேண்டி பிரமசாரிணியாகத் தவம் இருப்பது இரண்டாம் நாள் கொலுவில் வழிபடப்படும். இங்கு சுவாதிஷ்டானம் செயல்படுவதால்  அம்பிகையான ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர வேண்டித் தவம் இருப்பதைச் சுட்டிக் காட்டும்.இதை அடுத்து வரும் சந்திரகாந்தா எனும் சக்தியோ நம்முடைய மணிபூரக சக்ரத்தைச் செயல்பட வைப்பதன் மூலம் மனதை துர் எண்ணங்கள் இன்றி பக்தி ஒன்றே பிரதானமாகக் கொண்டு புனிதத்துடன்  செயல் பட வைக்கிறாள்.

என்றாலும்  அநித்தியமான மனித வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படும் கஷ்டங்களும் நோய் நொடிகளும் மனித மனதைப் பேதலிக்கத் தான் செய்கின்றன. அதற்கென உள்ள தேவி கூஷ்மாண்டா நம்முடைய அநாஹத சக்கரத்தைப் பிரதிபலிக்கச் செய்வதன் மூலம் தைரியத்தைக் கொடுத்து வியாதிகள், கஷ்டங்கள், நோய் நொடிகளில் இருந்து காத்து அருளுவாள்.  இதற்குள் நாம் நம் மனதினுள் தெய்வத்தை தியானிக்க ஆரம்பித்திருப்போம். மனம் ஒருமைப்பட வேண்டி தியானத்தில் அமிழ்ந்து போவோம். இங்கே தான்  ஸ்கந்த மாதா வந்து நம் விசுத்திச் சக்கரத்தைத் தூண்டுவதன் மூலம் நமக்கு நல்லதொரு வழியைக் காட்டி அருள்கிறாள். மனதில் மெல்ல மெல்ல அமைதி நிலவ ஆரம்பிக்கும். மனம் ஒருமுகப்படவும் ஆரம்பித்திருக்கும். அடுத்தது நமக்குத் தேவை ஆக்ஞை. ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டி விடும் காத்யாயனி தேவியின் சக்தியால் நாம் சஹஸ்ராரத்தில் மனம் ஒன்றி தவம் செய்து ப்ரப்ப்ரும்மத்தை அடைய வேண்டி தியானம் மேற்கொள்ளுவோம்.  சஹஸ்ராரத்தில் நாம் தியானம் செய்யும்போதோ மனமானது  பரிபூரணத்துவத்துடன் ஒன்றி இந்தத் தவத்தினால்  நமக்குப் பல சித்திகளையும் பெற்றுத் தரும்.

இதற்கு உதவும் தேவியே காலராத்ரி எனப்படும் தேவி. இவள் மூலம் நாம் சஹஸ்ராரத்தில் இருந்து மனம் ஒருமித்து தியானத்தில் ஈடுபட ஆரம்பிப்பதன் மூலம் அட்டமஹா சித்திகளையும் அடைகிறோம். மனதில் எந்தப் பொருளிடமும் பற்றுதல்கள் இருக்காது. மனம் அமைதியுடன் இருக்கும்.  அடுத்தநாளன்று மகாகௌரி எனப்படும் தேவியின் அவதாரத்திருநாள். நமக்கு எல்லாம் சரஸ்வதி ஆவாஹனம். இம்முறையில் சக்தி வழிபாடுகளைச் செய்தே பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் காளியைக் கண்டார். காளியின் அவதார தினமாகவும் இதைக் கொள்வது உண்டு. இந்த நாளின் வழிபாட்டினால் பழைய நினைவுகள் எல்லாம் மறைந்தும் மறந்தும் போகும். முன் ஜென்ம வாசனைகள் அறுபட்டு விடும் ஒன்பதாம் நாள் அன்று வழிபடும் சித்ராத்ரி தேவியின் மூலம் அட்டமஹா சித்திகளையும் பெறுவதால் அன்றைய தினம் இந்த தேவியை முன் வைத்துக் கொண்டாடுவார்கள். 


இவ்விதம் நாம் நவராத்திரியை ஒவ்வொரு நாளும் சக்தியின் ஒவ்வொரு அம்சத்தைக் கொண்டாடுவதன் மூலம் தேவியின் பரிபூரண அருளைப் பெற்று உலகில்  அமைதி நிலவவும், மனம் அமைதி பெறவும் கொண்டாடுகிறோம், தேவியின் மஹிஷ வதமும் கூட நம் மனமாகிய மஹிஷனின் கெட்ட குணங்களை அடியோடு வேரறுத்து மனதில் நல்லெண்ணங்கள் உற்பத்தி ஆவதைக் குறிப்பதே ஆகும். மஹிஷன் எங்கிருந்தோ வரவில்லை. நமக்குள்ளேயே இருக்கிறான். நமக்குள்ளே இருக்கும் மஹிஷனைக் கொல்லுவதே இந்தப் பத்து நாட்கள் தேவி வழிபாடு செய்வதன் நோக்கம்.  இதையே சாக்தர்கள் தசமஹா வித்யை எனப்படும் வழிபாட்டின் மூலம் கொண்டாடுகின்றனர். நாம் ஒவ்வொரு நாளும் ஒரு பெண் குழந்தையை அன்றைய தேவியாக மனதில் ஸ்வீகரித்து அந்தக் குழ்ந்தைக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து, ஆடை, ஆபரணங்கள், சாப்பாடு, பக்ஷணங்கள் எனக் கொடுத்து சந்தோஷப்படுத்தி நாமும் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போகிறோம். நவராத்திரியின் தாத்பரியமே தீமையை அழித்து உலகில் நன்மையையும் அமைதியையும் கொண்டு வருவதே ஆகும்.

 நான் பக்தியோ ஆன்மிகமோ கோயில்கள் பற்றியோ எழுதிப் பல நாட்கள்/வருடங்கள் ஆகிவிட்டன. ஆகையால் எழுத்து நடை முன்னே/பின்னே இருக்கும். பொறுத்துக் கொள்ளவும். தகவல்கள் உதவிக்கு நவராத்திரி பற்றி நான் எழுதின பதிவுகள், இன்னும் வாட்சப் மூலம் பெற்ற சில தகவல்கள் ஆகும்.

Tuesday, October 01, 2024

ஒரு வாய்க் காஃபி

மீள் பதிவு 148 ஆம் பதிவு. இன்னிக்கு சர்வதேசக் காஃபி தினமாமே அதான், இப்போத் தான் நேரம் கிடைச்சது மீள் பதிவைப் போட!


 ஹிஹிஹி, இந்த மாதிரித் தலைப்பு வச்சாத் தான் பார்க்க வருவாங்கன்னு வச்சிருக்கேன். ஆனால் காஃபி சம்மந்தமாவும் எழுதப் போறேன். ஆகவே தலைப்புக்கும் அதுக்கும் சம்மந்தம் வந்துடும், சரியா? முதலில் நான் ரசித்த ஒரு ஜோக்:


மனைவி கணவனிடம்: ஏங்க, எங்க அம்மா போட்டுத் தர காஃபியைக் குடிக்கவே மாட்டேங்கறீங்க?


கணவன்: எனக்குத் தண்ணியிலே கண்டம்னு ஜோசியர் எச்சரிக்கை பண்ணி இருக்கார், அதான்.


ஹிஹிஹி, கல்கியிலே இந்த வாரம் வந்தது. கொஞ்சம் மாறி இருக்கலாம். கல்கியை அதுக்குள்ளே தேடும்படியா எங்கோ வச்சுட்டேன். ஆனால் அர்த்தம் இது தான். ரொம்ப நல்லா சிரிக்க முடியுது. போனமுறை ஜோக் போட்டதைக் கைப்புள்ள தவிர யாருமே ரசிக்கல்லை. யாருக்கும் ஜோக் பிடிக்கலியா அல்லது வட இந்தியர்கள் சொல்றாப்பலே (கார்த்திக் மன்னிக்கவும்) தென்னிந்தியர்களுக்கு நகைச்சுவை குறைவான்னு தெரியலை. ஆனால் எங்க வீட்டிலே நகைச்சுவை மட்டும் இல்லை எல்லாச் சுவைக்கும் பஞ்சம் இல்லை. எங்க பிறந்த வீட்டிலே காஃபி எல்லாம் ரொம்பக் கட்டுப்பாட்டோட குடிப்பாங்க. காலை ஒரு தரம், மாலை ஒரு தரம். அதுவும் தம்ளர் எல்லாம் சின்னதாத் தான் இருக்கும். நான் கல்யாணம் ஆகி வந்த புதுசுலே (அப்போ நான் காஃபியே குடிக்க மாட்டேன், என் கணவராலே பழக்கம் ஆனது, இப்போவும் மனசிலே நிறுத்தணும்னு தோணினா நிறுத்திடுவேன்.) புகுந்த வீட்டுக்கு வந்தா முதலிலே அவங்க காஃபி குடிக்கிற தம்ளரைப் பார்த்தாலே பயமா இருந்தது. எனக்கும் அதுலே தான் போர்ன்விடா கொடுத்தாங்க. என்னாலே முடியலை. ஏதோ மாட்டுக்குக் கழனித் தண்ணி ஊத்தறாப்பலே அவங்க அவங்க நினைச்சப்போ காஃபி குடிச்சாங்களா? எனக்கு மயக்கமே வந்துடுச்சு. ஒரு சமயம் என் மாமியார் என் கிட்டே தனக்கு ஒரு வாய்க் காஃபி கலந்து எடுத்து வரும்படிச் சொல்ல நான் literally took it ஒரு சின்னத் தம்ளரிலே எடுத்துப் போய்க் கொடுக்க அவங்க விசித்திரமா என்னைப் பார்த்தாங்க. அப்புறம் பாருங்க, ஒரு வாய்ன்னா என்னன்னு நினைச்சே, ஒரு தம்ளராவது இருக்க வேண்டாமான்னு கேட்டாங்களா நான் அசந்து போயிட்டேன்.


என் கணவரோ அதுக்கு மேலே என்னைக் கூப்பிட்டு வகுப்பே எடுத்தார். ஒரு வாய்க்காஃபின்னா ஒரு தம்ளர். இது பெரிய வாய். கொஞ்சமாப் போதும்னா அது 1/2 தம்ளருக்குக்கொஞ்சம் கூட, அது சின்ன வாய்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதுக்கு அப்புறம் ஒரு வாய்க் காஃபின்னா நான் பெரிய வாயா? சின்ன வாயான்னு கேட்டு சந்தேக நிவர்த்தி பண்ணிக்கிட்டே கொடுக்கிறது வழக்கமாப் போச்சு. ஆனால் இன்னிக்குப் பாருங்க காலையிலே அவருக்குக் காஃபி கொடுத்துட்டு நான் யோகா பண்ணிட்டுக் குளிக்க ஏற்பாடு செய்யும்போது திடீர்னு எனக்கு ஒரு வாய்க் காஃபி கொடு, னு என் கணவர் கேட்க,யோகாவிலேயே கவனமாக இருந்த நான் மூச்சுப் பயிற்சியிலே இன்னும் என்ன பண்ணறது? மூச்சை நிறுத்தணும்னா எத்தனை நேரம் நிறுத்தறோம்னு தெரிய எண்ணிக்கை வேணும், எண்ணிக்கையிலே கவனம் இருந்தா மூச்சை நிறுத்தறது இயல்பா இருக்காது,னு யோசிச்சிட்டே காஃபி கொடுத்துட்டுக் குளிக்கப் போயிட்டேன். வந்து டிஃபன் கொடுத்துட்டு, காஃபி தான் இன்னிக்கு 2 தரம் குடிச்சாச்சே, மோர் கொடுக்கலாமானு யோசிச்சப்போ அவர் நீ 2-ம் தரம் காஃபி எங்கே கொடுத்தே, சும்மா காட்டிட்டுப் போயிட்டே? ஒரு வாய்னா அர்த்தம் சொல்லி இருக்கேன், இன்னும் புரியலியேங்கறார், என்னத்தைச் சொல்றது, ஒரு பெரிய வாயாக் காஃபியைக் கலந்து கொடுத்தேன், ஏற்கெனவே படிக்கிற நாளில் அவரோட சொந்தக்காரங்க வந்து என் கணவர் கிட்டே படிப்பு முடிச்சதும் மேலே என்ன செய்யப் போறேன்னு கேட்டதுக்கு, மேலே இப்போ ஒண்ணும் கூரை எல்லாம் மாத்த வேணாம் எல்லாம் நல்லாத் தானே இருக்குன்னு பதில் சொன்னவர் ஆச்சே, அதனாலே ஜாஸ்தி பேச்சுக் கொடுத்தா மாட்டிப்போம்னு தெரிஞ்சா விடு, ஜூட், வெற்றிகரமா வாபஸ்.

**********************


இன்னிக்கு அவள் விகடனிலே ஒரு கல்லூரி மாணவி தன்னோட ரத்த குரூப் நெகட்டிவ் வகையைச் சேர்ந்ததுன்னும், அதனாலே பெண் பார்த்தவங்க வேண்டாம்னு சொல்லிட்டதாயும் வருத்தப்பட்டிருக்காங்க. இதைப் படிச்சதும் ரொம்பவே வருத்தமா இருக்கு. மருத்துவம் நிறையவே முன்னேற்றங்களைக் கண்டிருக்கு. எனக்கு முதல் பிரசவம் அப்போ என் பெண்ணிற்கு வந்த மஞ்சள் காமாலை மூலம் தான் எனக்கு "O" Rh Negative வகை ரத்த குரூப் எனத் தெரிய வந்தது. இத்தனைக்கும் எங்க வீட்டிலே எங்க சித்தப்பா ஒரு டாக்டர் தான். மதுரைக்கு அருகே சின்னமனூரில் டாக்டராக இருந்தார். எங்க அம்மாவோட தங்கை கணவர். (அந்த ஏரியாவிலே அவருக்குத் தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆருக்கு உள்ள செல்வாக்கு உண்டு.) இருந்தாலும் யாருக்கும் இது பத்தி அப்போ யோசிக்கத் தெரியலை. என் பெண்ணைத் தினமும் வெயிலில் போட்டு எடுத்ததும், அதுக்கு அப்புறம் 2-வது பிரசவத்தில் பையனுக்கு வயிற்றிலேயே 7-ம் மாசத்திலேயே மஞ்சள் காமாலை தாக்கி இருந்ததும், பிறக்கும்போதே மஞ்சள் காமாலையுடனும், enlargement liverஉடனும் பிறந்த அவனைக் காப்பாற்ற நாங்கள் பட்ட பாடு ஒரு வரலாறு. (ஹிஹிஹி, கார்த்திக், வரலாறு பத்தி எழுதிட்டேன், போதுமா?) அதுக்கு அப்புறம் எங்க வீட்டிலே எல்லாருக்கும் கல்யாணத்துக்கு முன்னாலே ரத்த குரூப் பார்க்க ஆரம்பிச்சாங்க, அல்லது குழந்தை உண்டானதும், ரத்த குரூப் பார்த்து வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சாங்க. சொந்தம் என்றால் தான் இப்படி இருக்கும்னு முன்னாலே சொல்லிட்டிருந்தது என்னோட விஷயத்திலே பொய்யாப் போச்சு. நானும் என் கணவரும் முன்னைப் பின்னே தெரியாதவங்கதான். எங்களுக்கு இப்படி நடக்கலியா? ஆகவே ரத்த குரூப் பாருங்க, ஆனால் இளைஞர்களே, இந்தச் சின்னக் காரணத்துக்காகப் பார்த்த பெண்ணை வேண்டாம்னு சொல்லாதீங்க, இப்போவெல்லாம் கருவில் குழந்தை உருவானதுமே அதுக்கான தற்காப்பு நடவடிக்கைகள் ஏராளமா இருக்கு, கவலை வேண்டாம்.

அவள் விகடனிலே ரசிச்ச ஒரு சிறு கவிதை:


ஒரு பெண்குழந்தை கேட்கிறது:

நான் பிறந்தப்போ

நெல்மணி கொடுக்க

முயற்சித்தாயாமே!

இப்போ கொடும்மா.,

பசிக்கிறது!"


இதுவும் ஒரு கல்லூரி மாணவி எழுதியது தான். ரொம்பப் பெரிசா எழுதறேன்னு எல்லாரும் சொல்றதாலே பம்பாய் பயணம் முடிஞ்சா நாளை தொடர்கிறேன்.

Sunday, September 29, 2024

அனுபவங்கள் பலவிதம்.!

 நம்ம ரங்க்ஸ் இப்போக் கொஞ்சம் கொஞ்சம் எழுந்து நடக்கிறார். பிசியோ தெரபிஸ்ட் தன்னால் முடிந்ததை முழு ஈடுபாட்டுடன் செய்வதால் இந்த அளவுக்குப் பலன் வந்திருக்கிறது. ஜூன், ஜூலையில் மருத்துவமனைக்குப் போனப்போ எல்லாம் ஆம்புலன்ஸில் தான் படுக்க வைத்து அழைத்துச் சென்றேன். வரும் நாட்களில்; கொஞ்சம் மாறும் என நம்பிக்கையுடன் இருக்கேன். ஆனால் இந்த ஹோம்கேர் ஆட்கள் தான் விதம் விதமாக வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் கழிவறைப் பயன்பாடு. மத்யமரில் ஓர் பெண்மணி இந்த ஹோம்கேர் ஆட்கள் பற்றி எழுதி இருந்தாலும் இதைச் சொன்னாங்களானு தெரியலை. என்னோட நிலை தர்மசங்கடமானது. சொல்லுவது தப்பா/சரியானும் தெரியலை. ஆனாலும் இது ஒரு தீராத பிரச்னை. அபார்ட்மென்ட் வளாகத்தில் கீழே கார் பார்க்கில்  2 அல்லது 3 பொதுக்கழிவறையும் மேலே மொட்டை மாடியில் இரண்டு பொதுக்கழிவறையும் இருக்கு. நம்ம வீட்டுக்கு வருபவர்கள் அனைவருமே பெண்களாக இருப்பதால் பகல் வேளை என்றால் கூட நான் எங்க கழிவறையையே பயன்படுத்திக்கலாம்னு சொல்லிக் கொண்டிருக்கேன். ஆனால் அதைச் சுத்தம் செய்வதில் தான் பெரிய பிரச்னையே இருக்கு. நான் கொஞ்சமும் தயங்காமல் போய்ச் சுத்தம் செய்துடுவேன். ஆனால் இரவில் வரும் பெண்மணி நாங்க பயன்படுத்துவதை நாங்க தான் சுத்தம் செய்யணும்னு சொல்லிட்டுச் செய்வாங்க. ஆனால் பகலில் வந்து கொண்டிருந்த பெண்மணிக்கு இது ஒத்து வரவில்லை.

உங்க வீட்டுக் கழிவறை. நீங்க தான் சுத்தம் செய்யணும்னு சொல்லாமல் சொல்லுவாங்க. ஆனால் அவங்க போனால் உள்ளே போய்க் கதவைச் சார்த்திக் கொண்டால் மணிக்கணக்காக ஆகிடும். தன்ணீரே ஃப்ளஷ் செய்யும் சப்தம் கேட்காது. அவங்களிடம் கேட்டால் நான் கழிவறையைப் பயன்படுத்தவே இல்லைனு சொல்லிடுவாங்க. அடுத்து இவர் போனால் துர்நாற்றத்துடன் கழிவுகளுடன் இருக்கும். இரண்டு, மூன்று முறை சுத்தம் செய்துட்டு உட்காரும் இடமெல்லாம் நீர் விட்டு அலம்பிட்டுப் போகணும். அப்படியும் இதை அந்த அம்மா கண்டுக்கவே மாட்டாங்க இரவு வரும் பெண்மணி தான் வாரம் இருமுறை சுத்தம் செய்து தருவாங்க.  ஹோம்கேர் ஆர்கனைசரிடம் இதை ஒரு பெரிய குற்றமாகச் சொல்லி நான் வேலை வாங்குவதாகவும் அவங்களை அழ வைப்பதாகவும் சொல்லி இருக்கார். ஆர்கனைசர் என்னைக் கேட்டப்போ அப்போ அவங்க பயன்பாட்டில் இருக்கும் கழிவறையை நான் சுத்தம் செய்து கொடுக்கணுமானு கேட்டதுக்கு அவங்களிடம் பதிலே இல்லை. பின்னர் நான் விளக்கிச் சொன்னேன். பொதுக்கழிவறை மொட்டை மாடியிலும், கார் பார்க்கிலும் இருப்பதால் இவங்க அவசரத்துக்குப் போய்வரக் கஷ்டமாக இருக்கும் என்பதாலும் இருட்டு நேரத்தில் பெண்கள் தனியாகச் செல்வதைத் தவிர்க்கவும் வேண்டி எங்க கழிவறையையே பயன்படுத்திக்கச் சொன்னதாகவும், அவங்க பயன்பாட்டில் இருக்கும்வரை அவங்க தான் சுத்தம் செய்யணும் என்றும் திட்டவட்டமாகச் சொன்னேன். ஆனால் அது எவ்வளவு தூரம் சரியாக வரப் போகிறதுனு புரியலை.இப்போத் திடீர்னு இந்த இருவரையும் மாற்றும்படி நேர்ந்து விட்டதால் ஹோமில் வேலை செய்யும் இளம் பெண்களையே அனுப்பறாங்க. இளம்பெண்கள். எல்லோரும் 20/25 வயதுக்குள். ஹோமில் ஒருத்தர் நாலைந்து முதியவர்களைக் கவனிப்பதால் இங்கே இவரை மட்டும் கவனிப்பதில் அவங்களுக்குப் பிரச்னை இல்லை. ஆனால் இதுவும் எத்தனை நாட்களுக்கோ எனத் தோன்றுகிறது. 

பலரும் இந்த வேலைக்குப் படித்து விட்டு முறையாகப் பயிற்சி எடுத்துக் கொண்டெல்லாம் வருவதில்லை. பணக்கஷ்டம் இருப்பவங்க இம்மாதிரி ஏதேனும் ஒரு ஹோம்கேரில் பெயரைப் பதிந்து கொள்கிறார்கள். ஹோம்கேர் ஆர்கனைசர்கள் எல்லோரும் நேரடியாக ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவங்க ஒரு பெண்மணியை இதை எல்லாம் கவனிக்கச் சொல்லி ஏற்பாடு செய்கிறார். அந்தப் பெண்ணோ தனக்கு யார் கமிஷன் கொடுக்கிறாங்களோ அவங்களைத் தேர்ந்தெடுப்பாங்க.ஆரம்பப் பள்ளிக்கல்வியைக் கூடத் தாண்டி இருக்க மாட்டாங்க.   அந்தப் பெண்மணி படிச்சே இருக்க மாட்டாங்க. ஒரு சிலர் நாலைந்து வகுப்புக்களும் இன்னும் சிலர் எட்டு வகுப்பும், சிலரே பத்தாம் வகுப்பும் படிச்சிருக்காங்க. பத்தாம் வகுப்புப் படிச்சிருந்தாலும் பெரும்பாலோருக்கும்  தமிழோ, ஆங்கிலமோ சரளமாக வரலை என்பதே உண்மை. சிலருக்கு நம்ம விலாசம் எழுதிக் கொடுத்தாலோ வாட்சப்பில் அனுப்பினாலோ படிக்கவே தெரியாது. வீட்டு வாசலிலோ அல்லது எதிரே உள்ள லான்ட்மார்க் கல்யாண மண்டப வாசலிலோ நின்று கொண்டு வீடு எங்கே இருக்குனு கேட்பாங்க. சில அதி புத்திசாலிகள் என்னைக் கீழே வந்து பார்த்து அவங்களை அழைத்துச் செல்லுமாறு கூப்பிடுவதும் உண்டு. இன்னும் சிலர் யாரையானும் அனுப்பி வைங்கனும் சொல்வாங்க. அவங்க கிட்டே எல்லாம் என்னால் வரமுடியாத நிலையையும், வீட்டில் யாரும் இல்லை என்பதையும் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அதோடு ஒரு வழியா வீட்டுக்கு வந்தாலும் அழைப்பு மணியை அழுத்திட்டுத் திறக்கும் வரை காத்திருக்கவெல்லாம் நேரம் இருக்காது. மணியிலேயே கையை வைத்துக் கொண்டு அழுத்திய வண்ணம் இருப்பாங்க. ஏன் இப்படிச் செய்யறீங்க, வர வேண்டாமானால் நான் கதவுகிட்டேயே நிற்கலை என்பது போலப்  .பேசுவாங்க

ஒரு விஷயத்தில் மட்டும் அநேகமாக எல்லோரும்  ஒற்றுமை/ அது அலைபேசியில் பேசிக்கொண்டே இருப்பது அல்லது அலைபேசியைத் தோள்பட்டைக்கும்/காதுக்கும் இடுக்கிக் கொண்டு பேசுவது அல்லது ஏதேனும் திரைப்படம், காமெடிக் காட்சிகள், பாடல் காட்சிகள் பார்ப்பது. மிகச் சிலர் மட்டும் எதுவும் அதிகம் பேசாமல் பார்க்காமல் இருப்பாங்க. சிலர் அறையின் பால்கனியைக் காற்றுக்காகத் திறந்து வைப்பதால் அங்கே போய் உட்கார்ந்து கொண்டு கதவைச் சார்த்திக் கொண்டு பேசிக் கொண்டிருப்பார்கள். கடவுள் அருளால் நல்ல வேளையாக இப்போ டயப்பர் மாற்றுவதோ கதீடர் மூலம் நிரம்பும் சிறுநீர்ப்பையைக் காலி செய்யும் வேலையோ இல்லை. முன்னெல்லாம் கவனித்துக் கொண்டே இருக்கணும். இல்லைனால் சிறுநீர்ப்பை நிரம்பி சிறுநீரெல்லாம் மீண்டும் ப்ளாடருக்கே போய் இன்ஃபெக்ஷன் ஆகி விடும்.வலியும் எரிச்சலும் உயிர் போகும்படி இருக்கும். ஒவ்வொரு முறையும் நர்சைக் கூப்பிட்டுச் சுத்தம் செய்து மருந்து போட்டுக் கதிட்டர் மாற்றி எல்லாம் பண்ணுவோம். அந்த நர்ஸ் இந்தப் பெண்களிடம் பல முறை சுத்தமாக வைச்சுக்கறதைப் பற்றிச் சொன்னாலும் கேட்பவர்கள் இல்லை. முடிந்தவரை காலை உடம்பு துடைக்கையிலும், மாலையும் நான் அவங்களில் யாராவது ஒருத்தரைக் கிட்டே இருந்து நானும் செய்து அவங்களையும் செய்ய வைப்பேன்.

இதை எழுதி 2 நாட்கள் ஆனாலும் போட யோசனை. இன்னிக்கு ஒரு வழியாப் போடலாம்னு முடிவு பண்ணிப் போட்டிருக்கேன்.

Wednesday, September 11, 2024

பாரதி கண்ட புதுமைப்பெண் திரௌபதி


 நாயகர் தாம் தம்மைத் தோற்ற பின் - என்னை

      நல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்

தாயத்திலே விலைப்பட்ட பின் - என்ன

      சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார்? - அவர்

தாயத்திலே விலைப்பட்டவர் - புவி

      தாங்கும் துருபதன் கன்னி நான் - நிலை

சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் - பின்பு

      தாரமுடைமை அவர்க்குண்டோ?



போச்சுது போச்சுது பாரத நாடு!

      போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!

ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்!

       அன்னை பாஞ்சாலி - பாண்டவர்களின் காதலி - துரியோதனனால், அவமதிக்கப்பட்ட பொழுது, பெண்ணாக மட்டுமல்ல, அடிமைத்தனத்தில் அவமதிக்கப்படும் நமது பாரத தேவியைப் போலவே காணப்படுகிறாள். இறுதியில் அவளது பெண்மை வெற்றி கொண்ட வேகத்தில் - சபதம் செய்யும் பொழுது, - பராசக்தியின் ஸ்வரூபமாகிறாள். இக்காவியப் பகுதியை பொறுக்கியெடுத்ததிலேயே, பாரதியின் ரசிகத்தன்மையும், நுட்பமான ஆராய்ச்சி சக்தியும் நன்கு வெளியாகிறதல்லவா? தன் கொள்கைக்கேற்ற ஒரு கதையை எடுத்துப் பட்டை தீட்டிப் புது வைரமாக்கியிருக்கிறார்".தனைத் தடுத்தல் அரிதோ!

நன்றி விக்கி பீடியா மூலம் தமிழ்ப்பல்கலைக்கழகத்துக் கட்டுரையின் வடிவம்.


Sunday, September 08, 2024

பிள்ளையார் உம்மாச்சியின் ஹாப்பி பர்த் டே!








குட்டிக்குஞ்சுலுவிடம் ஏற்கெனவே பிள்ளையார் சதுர்த்தி பற்றிச் சொல்லி யாச்சு என்பதோடு அவ அப்பாவும் சொல்லி இருக்கார். ஆகவே பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குக் காலையில் (அவங்க நேரம் காலை எட்டு மணி)கூப்பிட்டாங்க. நான் அப்போத் தான் பூஜை முடிச்சுட்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு போட்டுட்டு அதிரசம் ஒண்ணை எடுத்துத் தின்று பார்த்துக் கொண்டிருந்தேன். குஞ்சுலு வந்ததும் எனக்கு/தாத்தாவுக்கு எல்லாம் ஹாப்பி பிள்ளையார் சதுர்த்தி சொன்னது. பின்னர் பிள்ளையாரைக் காட்டச் சொல்லியது. எனக்குச்சரியா வரலை. உதவிக்கு வரும் பெண் மொபைலை அட்ஜஸ்ட் செய்து காட்டினார். குஞ்சுலு பார்த்துட்டு ஹாப்பி பர்த்டே பிள்ளையார் உம்மாச்சி எனப் பாட ஆரம்பித்தது. பாடி முடிச்சதும் நிவேதனங்களைக் காட்டினால். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுக்கு லட்சியமே இல்லை. எல்லாம் அம்பேரிக்க வாழ்க்கையினால் வந்த விளைவு. இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சம் கடலை மிட்டாயும் எள்ளுருண்டையும் சாப்பிட ஆரம்பிச்சிருக்கு. மற்றபடி முறுக்கு, தட்டை, ஓலை பக்கோடா எல்லாம் சாப்பிடும்.முன்னால் வீட்டில் பண்ணி வைத்துக் கொண்டு கொடுப்பேன். பின்னர் பிள்ளை கண்டிப்பாக வீட்டில் பண்ணுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே வாங்கி வைக்கிறேன். அதையும் மனசு இருந்தால் சாப்பிடும். 

எப்படியோ ஒரு வழியாப் பிள்ளையார் சதுர்த்தியும் ஆச்சு. எனக்குத் தான் அன்று ஒரே தடுமாற்றம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ரங்க்ஸைப் பார்த்துக்க வேண்டி வந்ததால் சாப்பிடும்போது பனிரண்டு மணி ஆயிடுச்சு. பாவம் ரங்க்ஸ்! பசி முத்திப் போச்சு. சரியாச் சப்பிடலை. கொழுக்கட்டை எல்லாம் நிவேதத்துக்குப் பண்ணிக் கொண்டு மிச்சத்தை மத்தியானமாப் பண்ணி விநியோகம் செய்தேன்.




 பூரணக் கொழுக்க்ட்டை அம்மா வீட்டில் ஐந்த் விதம் பண்ணுவாங்க. இங்கே தேங்காய்ப் பூரணமும் உளுந்துப் பூரணமும் தான். வ்டை, அதிரசம்,, பாய்சம் தான் கூடுதலாக. பச்சரிசியில் இட்லி செய்யணும். நன்றாக வந்திருந்தது. இன்னிக்குக் காலையில் கூட அதான் சாப்பிட்டோம். இந்த முறை மிச்சம் வடை மாவை வடையாகவே தட்டித் தயிரில் போட்டு விட்டேன். இன்னிக்கு மத்தியானமாத் தான் பண்ணினேன். இன்னும் சாப்பிடலை. நோ திப்பிசம்.

Friday, September 06, 2024

கண்ணான கண்ணே!

 பகலுக்கு வந்து கொண்டிருந்த பெண் ஆசிரமத்தில் வளர்ந்ததாகச் சொன்னார். வயது என்னமோ 30க்குள் தான். அதுக்குள் கல்யாணம் ஆகிப் பனிரண்டு வருஷங்களாம். 2 பெண் குழந்தைகள். வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பார். நான் கொஞ்சம் கண்டிப்பாகப் பேச்சைக் குறைனு சொல்லிட்டேன். அதோடு அவள் மற்றவங்களைக் குறிப்பாக இரவுக்கு வரும் பெண்மணியையும், எங்க வீட்டில் ஏழெட்டு வருஷங்களாக வேலை செய்யும் பெண்ணையும் பற்றிக் குற்றம் சொல்ல ஆரம்பித்தார். இரவில் வருபவர் அப்பாவைச் சரியாகத் துடைத்துச் சுத்தமாக வைச்சுக்கலை, நீங்க சொல்லணும் என்று என்னிடம் சொல்ல ஆரம்பித்தார். அவர் சுத்தமாகத் தான் செய்து வந்தார். ஏனெனில் நான் இவங்க எல்லாம் உடம்பு துடைத்து, டயபரை மாற்றிச் சுத்தம் செய்யும்போதெல்லாம் நான் கூடவே தான் இருப்பேன். அதே போல் எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணையும் சரியாகப் பெருக்கலை, துடைக்கலை, மூலை எல்லாம் குத்திவிட்டுப் பெருக்கித்துடைக்கச் சொல்லுங்க என்றெல்லாம் ஆரம்பிச்சார். எங்க வீட்டுக்கு வரும் ஃபிசியோதெரபிஸ்டிடம் காலில் விழுந்து சாப்பிட்டு 3 நாட்கள் ஆயிடுச்சு, அம்மா இன்னமும் (நான் தான்) சம்பளம் கொடுக்கலை, ஏதானும் உதவி பண்ணுங்கனு அழுது கெஞ்சி 500 ரூபாய் வாங்கிட்டார். அவங்க சம்பளமெல்லாம் என் மூலமே போகாது. எனக்கு மொத்தப் பேச்சு வார்த்தையும் ஹோம்கேர் ஆர்கனைசரிடம் தான். நான் ஒரு நாள் மிகக் கடுமையாக நீ உன் கணவரிடமே போய் அங்கே சேர்ந்து குடித்தனம் பண்ணுனு சொல்லிட்டேன். மறு நாளில் இருந்து வருவதில்லை. இப்போ வேறே ஒருத்தர் வருகிறார். என்னதான் காலை சீக்கிரம் வரச் சொன்னாலும் அவர் சௌகரியத்துக்குத் தான் வரார். மாலையும் சீக்கிரம் கிளம்பிடுவார். இரவு வரும் பெண்மணியிடம் கேட்டுக் கொண்டு அவங்களைக் கொஞ்சம் சீக்கிரமா வரச் சொல்லிச் சொல்லி இருக்கோம். ஏழேகாலுக்குள் வந்துடறார்  இதிலே ஒரு பெண் இரவு வரும் பெண்மணி குலதெய்வக் கோயிலுக்குப் போனதால் லீவில் மாற்றாக வந்தவர் பிடிவாதமாக இனிமேல் ராத்திரி நான் தான் வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டில் ஒவ்வொருத்தருக்காகத் தொலைபேசியில் அழைத்து இங்கே கட்டில், மெத்தை எல்லாம் போட்டிருக்காங்க, ஏசியும் ஓடுது. சௌகரையமா இருக்கு. நான் இனிமேல் இங்கே தான் இரவுக்கு இருக்கப் போறேன் என அறிவிப்புச் செய்து கொண்டிருந்தாங்க. அவங்களைக் காலை கிளப்ப ரொம்பப் பாடு பட்டேன். 

இதுக்கு நடுவில் போனவாரம் வியாழனன்று இரவு திடீர் எனக் கண்ணில் இடக்கண்ணில் ஏதோ குத்தல்/குடைச்சல். கண்ணை மூட முடியலை/திறக்கவும் முடியலை. எப்படியோ படுத்துத் தூக்கம்னு பெயர் பண்ணினேன். கண் மருத்துவரிடம் போனால் மணிக்கணக்காய் உட்கார்ந்திருக்கணும்னு தெரிந்த ஃபார்மசியில் கண்ணுக்குச் சொட்டு மருந்து கேட்டிருந்தேன். கூடவே 2 மாத்திரைகளையும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார் மெட்ராஸ் ஐயாக இருக்கலாம்னு அவர் சந்தேகம். அன்று கொஞ்சம் பரவாயில்லைனு இருந்த கண் மறுபடி ஞாயிறன்றிலிருந்து தொந்திரவு செய்யவே வேறே வழியில்லாமல் ஆயிரத்தெட்டுப் பாதுகாப்பு ஆலோசனைகளைக் கொடுத்துட்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு அப்புறமாச் சாப்பிட மாதுளை ஜூஸும் போட்டு வைச்சுக் கண்ணாஸ்பத்திரிக்குப் போனேன். மீட்டர் ஆட்டோனு பெயர். அந்தப் பையர் நம்ம வீட்டிலிருந்து தெற்கு வாசலுக்கு எழுபது ரூபாய் ஆகிவிட்டதாகவும் மீட்டர் அவ்வளவு காட்டுவதாகவும் பயங்கரமான பொய் சொன்னார். நான் பணத்தை எடுக்கையிலேயே அவர் மீட்டரிடம் ஏதோ பண்ணுவதைப் பார்த்துட்டேன். காட்டிக்காமல் 50 ரூபாய் தான் எப்போவும் கொடுப்பேன். அதான் கொடுப்பேன்னு சண்டை போட அவர் ஒத்துக்க மறுக்க உடனே உங்க சங்கத்தலைவரிடம் நான் பேசிக்கிறேன். நீ எழுபது ரூபாய் என்ன, 100 ரூபாயகவே வைச்சுக்கோனு 100 ரூபாயைக் கொடுத்துட்டுக் கீழே இறங்கினேன். பையருக்கு பயமோ என்னமோ 50 ரூபாயைத் திரும்பக் கொடுத்தார். என்றாலும் சங்கத் தலைவரிடம் புகார் அளித்தேன்.

மருத்துவமனை உள்ளே போய் வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்ததும் அந்தப் பெண்ணிடம் என்னைச் சீக்கிரம் அனுப்பும்படியும் மாமா படுத்திருக்கும் விஷயத்தையும் சொன்னேன்.அரை மணி நேரத்தில் அனுப்புவதாகச் சொல்லிட்டு ஒரு வழியாப் பனிரண்டரைக்கு அனுப்பினாள். டாக்டர் பார்த்ததுமே கீதா மேடம், தூங்கி எத்தனை நாட்கள் ஆச்சு? என்று தான் கேட்டார். எனக்குத் திகைப்பு. பின்னர் கண்களைப் பல முறைகள் சோதனை பண்ணிட்டுத் தூக்கம் இல்லாததால் கண்க்ள் காய்ந்து நீர்ச்சுரப்பு இல்லாமல் போய்விட்டது என்றும் எதுக்கும் ரெடினா டெஸ்ட் பண்ணிடுவோம், இப்போ உங்களால் முடியுமா? அதுக்கு நேரம் ஆகும் என்றும் சொன்னார். இன்னொரு நாள் வீட்டில் டெஸ்டுக்குச் சொல்லிட்டுத் தயார் நிலையில் வரேன்னு சொன்னேன். அவருக்கும் அதற்குள்ளாக ரங்க்ஸின் உடல்நிலை பற்றிச் சொல்லி விட்டேன். ஆகவே அவர் இப்போதைக்குக் கண் இரண்டிலும் சொட்டு மருந்து விட்டுக்கச் சொல்லிக் கொடுத்துட்டுப் பின்னர் ஒரு நாள்வந்து ரெடினா செக் அப் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கார். அதுக்குப் போகணும். பயமாகவும் இருக்கு. அதே சமயம் போயிடணும்னும் தோணுது.

Wednesday, September 04, 2024

ஏமாற்றங்கள் சகஜமாகி விட்டன!

 கிச்சாப்பயலுக்குப் பண்ணின வடை மாவு கொஞ்சம் மிச்சமாக இருந்தது. ரங்க்ஸ் இம்முறை வடை நல்லா இருக்கு, தயிர் வடை பண்ணுனு தான் சொன்னார். ஆனால் அத்தனை மாவும் இல்லை. குழந்தைகளும் கிளம்பிப் போயிட்டாங்க. நின்னுண்டு வடை பண்ணுவதில ஆர்வமெல்லாம் இல்லை. ஆகவே அத்துடன் ஒரு ஆழாக்கு அரிசியை இட்லி+பச்சரிசி தான், ஊற வைச்சு அரைச்சுச் சேர்த்துத் தோசையாக வார்த்தேன்.  மெத்து மெத்தான தோசைகள். அருமையா இருந்தது. இதுவும் ஒரு திப்பிசம் தானே! இப்படித் தான் கொஞ்ச நாட்கள் முன்னர் அடை மாவு மிஞ்சி இருந்தது. என்ன பண்ணலாம்னு மண்டை காய்ந்தது. அன்னிக்குனு அரிசி உப்புமா பண்ணவே அதுக்கு அரைச்சு விடத் தனியா ஊற வைக்கலை. இதையே போட்டுக் கலந்து விட்டேன். மீனாக்ஷி அம்மாள் புத்தகத்தில் வ்ந்திருக்கும் தவலை உப்புமா மாதிரி வாசனை அடித்துக் கொண்டு நன்றாக இருந்தது.  ரங்க்ஸோ உப்புமா வாசனையா இருக்கே இன்னிக்குனு சொன்னார்.  பழைய சாதம் மிஞ்சினால் கூட அதோடு அவலை ஊற வைத்துக்கலந்து கொண்டு தேங்காய் சேர்த்து அரைத்து நீர் தோசை மாதிரி மெலிசாகப் பண்ணிடலாம். ஒரே ஒரு time பண்ணினேன். அப்புறமாக் குட்டு வெளிப்பட்டு விட்டது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மக்கள் எப்படி எல்லாம்  .ஏமாத்தறாங்க!  நான் மட்டும் என்னமோ ஏமாறவே பிறந்திருக்கேன் போல. ஒரு பலி ஆடு மாதிரி மாட்டிக் கொண்டு பல சாயங்கள் முழிக்கிறேன். ரங்க்ஸ் முடியாமல் படுத்து அவரைப் பார்த்துக்கன்னே ஆள் போட்டாலும் போட்டோம். விதம் விதமான அனுபவங்கள். ஆரம்பத்தில் வந்த இருவரும் சாப்பாடு, தொலைபேசிப் பேச்சு இவற்றுக்கிடையில் ரங்க்ஸைப் பார்த்துக் கொண்டனர். நாம் ஒண்ணும் பேச முடியாது. இப்போ என்னாங்கறீங்கனு மிராட்டிக் கொண்டே 3 மாசம் இருந்தாங்க. சம்பளமும் அதிகம்.  ரங்க்ஸைக் க்ளீனாக வைச்சுண்டாங்களோ இல்லையோ தினம் ஒரு க்ள்வுஸ் டப்பா, வைப்ஸ் அடங்கிய பாக்கெட்டுகள் 2 அல்லது 3 செலவாகும். சில சமயம் அவங்க கை, கால், முகம் துடைத்துக் கொண்ட வைப்ஸாலேயே ரங்க்ஸுக்கும் துடைச்சுடுவாங்க. நாம கவனிச்சதாக் காட்டிக்கக் கூடாது. காட்டிக் கொண்டால் போச்சு. உடனேயே இனிமே நீங்களே பார்த்துக்குங்க, வைப்ஸே உபயோகிக்காமல் க்ளவுஸே உபயோகிக்காமல் வருவாங்கனு கிளம்பிடுவாங்க. ஒரு தரம் எனக்கும் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்துப் போங்கனு சொல்லிட்டேன். அம்புடுதேன். கிளம்பிட்டாங்க. அடுத்து வரவங்க வேறே வகை.

ஹோம்கேர் மூலமா வந்தாங்க. முதலில் இருந்தவங்களை நேரடியாகப் பேசிச் சம்பளமும் அதிகம் கொடுத்துத் தாஜா பண்ணி வைச்சுக் கொண்டிருந்தார் பையர். ஆனால் அவங்களுக்கு எங்க ரெண்டு பேரையும் பிடிக்கலை. முக்கியமாய் ரங்க்ஸை இஷ்டத்துக்கு மிரட்டினாங்க. நான் பார்க்கையில் ஒரு மாதிரி இல்லைனா வேறே மாதிரினு இருந்தாங்க. அதுக்காகவே நேரம் கிடைச்சால் ரங்க்ஸ் பக்கத்தை விட்டு நகராமல் இருந்தேன். இப்போ ஹோம்கேர் மூலமா வரதாலே ஒரு கண்டிப்பு இருக்கும். லீவ் போட்டால் வேறே ஆள் மாத்தி அனுப்புவாங்கனு நினைச்சோம். எல்லாம் சரி தான். ஆனால் ராத்திரி வர பெண்மணிக்குப் பகலில் வரவங்களைத் தெரியாது. பகலில் வரும் பெண்ணிற்கு ராத்திரி யார்னு தெரியாது. அப்படி இருந்தும் ரெண்டு பேரும் போட்டி. பகலில் வர பெண் சரியா ஆறுமணின்னா கன் டைம் ஆறுக்குக் கிளம்பிடுவாங்க. ராத்திரி வரவங்களோ என்னோட நேரம் ராத்திரி எட்டு மணி தான்னு சொல்லிட்டு எட்டு/எட்டேகாலுக்குள்ளே வருவாங்க. இந்த இடைப்பட்ட நேரத்திலே தான்  ரங்க்ஸ்  பாத்ரூம் வந்தால் போகணும். அப்போல்லாம் கதீட்டர் இருந்ததால் படுக்க யில் தான் எல்லாம். பணம் கொடுத்து 2 ஆள் வைச்சும் சுத்தம் செய்தது என்னமோ நான் தான். அந்த முடியாத நிலையிலும் ரங்க்ஸுக்குக் கோபம் வரும். பகலில் வரும் பெண்ணைக் கொஞ்சம் ஏழு மணி வரை இருனு சொன்னால் குழந்தைங்க தனியா இருக்காங்கனு கிளம்பிடுவா. ராத்திரி வரவங்க எட்டு மணிக்கு வேணால் வரேன்னு சொல்லிட்டு எட்டு மணிக்கு வருவாங்க. காலை ஏழரைக்குக் கிளம்பிடுவாங்க. காலை ஏழரையிலிருந்து ஒன்பது/ஒன்பதே கால் வரை இரவு மாலை ஆறு மணியிலிருந்து எட்டேகால் வரை ரங்க்ஸை நான் தான் பார்த்துக்கணும்.

பிரச்னை என்னன்னா அவரைச் சுத்தம் செய்வதிலோ, மாற்று உடைகள் அணிவிப்பதிலேயோ இருக்காது. கட்டிலில் படுக்கை இறங்கி விடும். அதைக் கூடச் சரி பண்ணிடலாம். அவரைத் தூக்கி மேலே போடணும். அது என்னால் முடியாது. இந்தப் பெண்கள் எல்லாம் இதில் கை தேர்ந்தவார்களாக இருந்ததால் அவங்க வரும்வரை அவர் கால்களைக் கட்டிலுக்கு வெளியே நீட்டிக் கொண்டு படுத்திருப்பார். அதான் ரொம்பக் கஷ்டமா இருக்கும். தூக்கம் வந்தால் தூங்க முடியாது. அடுத்து கதீடரில் யூரோ பாக் மாத்துவாது. பலரும் அதைச் சரியாக் கவனிக்க மாட்டாங்க. நாம அதில் ஒரு கண் வைச்சுக்கொண்டு அவங்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கணும். குறைந்த பக்ஷமாக இரண்டு மணிக்கொரு தரம் பையைச் சுத்தம் செய்து விடவேண்டும்.  இதுக்காக நள்ளிரவு 12 மணிக்கு, பின்னர் 2 மணி, காலை நாலு, நாலரை மணினு வந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். இல்லைனா பை நிரம்பி யூரின் எல்லாம் திரும்ப ப்ளாடருக்கே போயிடும். ஒரு முறை அப்படியும் ஆகி இன்ஃபெக்ஷன் ஆகி ரொம்பச் சிரமப் பட்டார். ஆகவே இதில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டி இருக்கு.

Wednesday, August 28, 2024

குட்டிக் குட்டிக் கிச்சாப்பயல் வந்துட்டுப் போனான்!

 வீட்டில் சார்ட் பேப்பர்களின் துண்டுகள் இல்லை. ஆங்காங்கே வண்ண, வண்ணக் கறைகள் இல்லை. கிண்ணங்களில் தண்ணீருடன் பிரஷ் எதுவும் இல்லை. கை கழுவும் வாஷ்பேசினில் வண்ணக் கறைகளோ தண்ணீர் தேங்கியோ இல்லை. எல்லாம் சுத்தமாக இருக்கு. சாப்பாடு மேஜையில் எதுவும் இல்லாமல் இடம் நிறைய இருக்கு. மணிக்கணக்காக உட்கார்ந்து சாப்பிடும் நபரைக் காணோம். அவரின் அழுகையும், சாப்பிட மாட்டேன் என்னும் பிடிவாதமும் இல்லை. மொத்தத்தில் வீட்டில் சப்தமே இல்லை. நிசப்தம். எங்கோ ஓர் குழந்தை அழுதால் குஞ்சுலுவோனு நினைக்கும் மனம். பின்னர் அவள் தான் ஊருக்குப் போயிட்டாளே என்பது நினைவில் வரும். காலையில் திரும்பத் திரும்ப வந்து கட்டிக் கொண்டது இன்னமும் உணர்வில் தோய்ந்திருக்கு. படிக்க அடம் பிடிக்கும்/சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தை. கவலைப்படும் பெற்றோர்கள். ஊருக்குப் போய்விட்டது. 

இந்த வருஷமும் லிட்டில் கிருஷ்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவியா பாட்டி? எனக் கேட்டுக் கொண்டது. வாசலில் கோலம் போட்டுக் காலடிகள் வைச்சாச்சு என அவ அப்பா சொன்னதும் ஓடி வந்து பார்த்துக் கொண்டது. அக்கம்பக்கம் வீடுகளிலும் போடுவதைப் பார்த்தது. பூத் தொடுத்துக் கொண்டிருக்கையில் மாலையைத் தூக்கிப் பார்த்தது. பின்னர் சாயங்காலம் வாங்கிய பக்ஷணங்களோடு வீட்டில் பண்ணின பால் பாயசத்தையும், வடையையும் கூடவே தயிர், வெண்ணெய், பால், புதுசாய்க் காய்ச்சிய நெய், அவல், வெல்லம், தேங்காய், பழங்கள் எல்லாம் வைச்சு நிவேதனம் பண்ணி தீபாராதனை காட்டினேன். என்னவோ தெரியலை. அதனிடம் வழக்கமான உற்சாகம் தெரியலை. ஸ்ரீராம் சொன்னாப் போல் குழந்தை பெரிய பெண்ணாக ஆகிக் கொண்டு வருகிறாளோ? குழந்தைத் தனம் இன்னமும் இருக்கு. ஆனால் சந்தேகங்கள் கேட்கும். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்கும். நானாகச் சொன்னேன். ஜெயிலில் பிறந்தான் குட்டிக் கிருஷ்ணன் என. அவன் சகோதரி யோகமாயா பற்றிச் சொல்லிவிட்டு, நீ தான் யோக மாயா என்றேன்.  சிரித்துக் கொண்டாள், புரியலைனு நினைக்கிறேன். மொத்தத்தில் இந்த வருஷக் கிருஷ்ண ஜயந்தியை ஒப்பேத்தியாச்சு. கீழே படங்கள். இனி செப்டெம்பர் ஐந்தாம் தேதி எங்க ஆவணி அவிட்டமும், ஏழாம் தேதி நம்ம நண்பரின் விழாவும் வருது. எப்படிச் செய்ய்ப் போகிறேன்னு தான் புரியலை.







Wednesday, August 21, 2024

ஓட்டம் காட்டும் நாட்கள்! ஓடமுடியாமல் தவிக்கும் நான்!

 நேற்று காயத்ரி ஜபத்துக்கு எழுந்து வீல்சேரில் உட்கார்ந்த வண்ணம் அரை மணி நேரம் ஜபம் செய்தார் நம்ம ரங்க்ஸ். உதவியுடன் தானே நடந்து கழிவறை செல்கிறார். அவ்வப்போது தலை சுற்றல் எனச் சொல்லுவதாலும், தலை சுற்றல் இருப்பதாலும் தனியே விட பயம். மேலும் மருத்துவரும் கீழே விழாமல் பார்த்துக்கச் சொல்லி இருக்கார். சாப்பாடு மட்டும் இன்னமும் முன்னேற்றம் காண வில்லை. மருந்து வகைகள் ஓரளவுக்குக் குறைச்சிருக்காங்க. கதீட்டரை எடுத்தாச்சு, 

தொலைக்காட்சிப்பெட்டியைப் போடுவதே இல்லை. சென்ற நவம்பர் 29 ஆம் தேதியிலிருந்து எப்போவானும் போட்டது தான். ஸ்ரீராமர் பிரதிஷ்டை பார்க்கப் போட்டப்போ தொலைக்காட்சிப் பெட்டி கொலாப்ஸ் ஆகி விட்டது. சுமார் எட்டுமாதங்களாகப் போடாமல் இருப்பதால் கேபிள் இணைப்பையே துண்டித்து விடலாம் என நினைக்கிறோம். தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் ஒண்ணும் வித்தியாசம் தெரியலை. மேலும் உட்கார்ந்து பார்க்க நேரமே கிடைப்பதில்லை.

இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி 2000 ஆம் ஆண்டில் நம்ம ரங்ஸ் ஊட்டி அரவங்காடு ஃபாக்டரிக்கு மாற்றல் ஆகிப் போனப்போ வாங்கினது இதுவும் எல்ஜி கிரைண்டரும் ஒரே சமயம் வாங்கினோம். வீட்டில் பெரிய கிரைண்டர் தான் வாங்கி வைச்சிருந்தொம், அது சென்னையில் மட்டுமில்லாமல் ராஜஸ்தான், குஜராத் என எல்லா இடங்களுக்கும் கூடவே வந்தது. திரும்பவும் அம்பத்தூர் வந்தப்போ அதிகம் மனிதர்கள் இல்லாததாலும் குழவி ரொம்பப் பெரிசாக இருந்ததாலும், அப்போத் தான் தரைத்தளம் முழுவதும் டைல்ஸ் பதிச்சிருந்ததாலும் பழைய கிரைண்டரைக் கொடுத்துட்டு எல்ஜி அல்ட்ரா கிரைண்டர் சின்னது தான் வாங்கினோம், நேற்று வரை நன்றாகவே அரைத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது, தொலைக்காட்சிப் பெட்டியும் ஃபிலிப்ஸ் என்பதால் கலர் க்ளாரிடி, ஒலி, ஒளி எல்லாமே சிறப்பாக இருக்கும். இப்போவும் அதை மெகானிக் வந்து பார்த்துச் சின்னச் சின்னக் கோளாறுகளைச் சரி பண்ணினால் போதும். முன்னர் ஐசி போனப்போப் பார்த்த மெகானிக் வியந்து போனார். இதைப் போல் தொலைக்காட்சி உழைச்சதைப் பார்த்ததே இல்லைனும் சொன்னார். இப்போ 25  வருடங்கள் ஆகியும் கிரைண்டரும் சரி, தொலைக்காட்சிப் பெட்டியும் சரி, நன்றாகவே இருக்கிறது.

பையர் ஸ்மார்ட் டிவி வாங்கி அப்பா படுக்கும் அறையில் மாட்டுவதாகச் சொல்கிறார் வேண்டவே வேண்டாம்னு கெஞ்சிட்டு இருக்கோம். ஒரே சத்தமாக இருக்கும் என்பதோடு யாரும் அவ்வளவு ஆர்வமாகத் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதில்லை. ஆகவே எதுவுமே வேண்டாம்னு சொல்லிக் கொண்டு இருக்கோம். அவ்வப்போது முகநூலில் வரும் கச்சேரிகளைப் போடுவேன். ஸ்லோகங்கள், உபன்யாசங்கள் போடுவது உண்டு. அதுக்கும் மேல் என்ன இருக்கு? எப்படியோ நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வரும் நாட்கள் நன்மை பயப்பனவாக அமையட்டும் என்று பிரார்த்திப்பது தவிர வேறே நினைப்பு இல்லை.

 

Sunday, July 21, 2024

குரு பூர்ணிமாவும் மாவிளக்கும்

 தினம் தினம் ஏதேனும் ஒரு வேலைக்காகக் கணினியை வைத்துக் கொண்டு அமர்கிறேன். முடிஞ்சப்போ சில/பல பதிவுகளையும் படிப்பேன். ஏனோ எழுதணும்னு தோன்றுவதில்லை. ஸ்ரீராம் சொன்னாப்போல் எழுதினால் எனக்குக் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் தான். ஆனாலும் மனசு என்னமோ பதியவே இல்லை. சென்ற மாதம் நம்ம ரங்க்ஸை மருத்துவரிடம் கூட்டிச் சென்ற பின்னர் 2 மாசம் கழிச்சுத் தான் வரச் சொல்லி இருக்காங்க. இம்முறை இத்தனை மாதங்கள் கழித்து ரத்தப் பரிசோதனை முடிவுகள் கொஞ்சம் சாதகமாக வந்துள்ளது, ஓரளவு எழுந்து உட்கார்ந்து கொள்கிறார்... ஆனால் நடப்பது என்பது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது. இரு பக்கமும் உதவிக்கு ஆள் இருந்தால் கொஞ்சம் நடந்து வருகிறார். இன்னமும் தனியாக நிற்கவோ நடக்கவோ முடியலை.

இதுக்கு நடுவில் ஆரம்ப காலத்தில் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் திடீரெனப் போய்விட்டார்கள். அவங்களுக்குச் சம்பளம் இன்னும் அதிகம் தருவதாகச் சொல்லி முன்னால் வேலை செய்தவங்க கூப்பிட்டாங்களாம். அங்கே போயிட்டாங்க. வேறே பெண்கள் வருகின்றனர். இவர்களில் பகல் நேரத்துக்கு வரும் பெண் பரவாயில்லை. இரவு தான் சரியான ஆளாகக் கிடைக்கவில்லை இன்னமும். கேட்டிருக்கோம். கிடைக்கணும். இதெல்லாம் எழுதியே சில நாட்கள் ஆகிவிட்டன. இந்த மாதிரி சேவை செய்யும் பெண்களை ஏஜென்சி மூலம் எடுப்பதில் உள்ள சிரமங்களையும், முக்கியமாய் நமக்கும் நோயாளிக்கும் ஏற்படும் இன்னல்களையும் எழுதப் போனால் அடி விழும் எனக்கு. உனக்கு உதவி செய்ய வந்தவங்களைக் குத்தம் சொல்லலாமானு கேட்பாங்க எல்லோரும். மத்யமர் குழுமத்தில் ஒரு பெண்மணி இதை அக்கு வேறு ஆணி வேறாக அலசிப் பிழிந்து காயப் போட்டிருந்தார். சுப்புத் தாத்தாவும் அவர் அனுபவத்தைச் சொல்லி இருந்தார். அதான் நிஜம். :( ஒத்துண்டே ஆகணும். :


இப்போது ஆடி மாதம் பிறந்ததுமே பண்டிகைகள் வரிசை கட்டிக்கொள்ளுமே என்னும் நினைப்புத் தான், ஒரு வழியாக ஆடி வெள்ளிக்கிழமை அன்னிக்கு நெய்க்கொழுக்கட்டை பண்ணி நிவேதனம் செய்து பிள்ளையாரைச் சரிக்கட்டினேன். மாவிளக்குப் போட ஊருக்குப் போக முடியாதே! ஆகவே இன்னிக்குப் பௌர்ணமி என்பதாலும் விசேஷமான குரு பூர்ணிமா என்பதாலும் ரங்க்ஸ் இன்னிக்கே போடச் சொல்லிட்டார். காலை எழுந்து கொண்டு வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு இன்றைய சமையல் பொறுப்பையும் வைச்சுண்டு இருந்ததால் அதையும் முடித்துக் கொண்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு மாவிளக்குக்கு மாவு அரைக்கவே பதினோரு மணி ஆயிடுத்து. அதன் பின்னர் வெல்லம் சேர்த்துக் கலந்து இரு உருண்டைகளாக உருட்டிக் கோலம் போட்ட இடத்தில் நுனி இலையைப் போட்டு எல்லாவற்றையும் வைத்துச் சந்தனம், குங்குமம் இட்டுப் பூ வைத்து வெற்றிலை, பாக்கு, பழம்,மஞ்சள் வைத்துப் பூவால் அலங்கரித்து மாரியம்மன் படத்தையும் வைச்சு மாவிளக்கு ஏற்றி இன்னிக்குச் செய்ய வேண்டியதையும் செய்தாச்சு. தப்போ/தவறோ அம்மன் பொறுப்புத் தான், எனக்கு இல்லை பொறுப்பு.


வழக்கம்போல் விவரணையுடன் குஞ்சுலுவுக்கு அனுப்பி வைச்சேன். அது இங்கே மடிப்பாக்கம் தாத்தா வீட்டில் தான் இருக்கு. அவள் அப்பா மட்டும் இங்கே வந்திருக்கார். உடம்பு சரியில்லை என்பதால் தூங்கிக்கொண்டே இருக்கார். குஞ்சுலு படங்களைப் பார்த்துட்டு நைஸ் பாட்டி என்று மட்டும் சொல்லி இருக்கு.





Thursday, June 06, 2024

தேர்தல் முடிவுகள்

 தேர்தல் முடிவுகள் அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி உள்ளது. மோதிக்கு வெற்றியா எனில் தனிப்பட்ட முறையில் வெற்றி தான்,. ஆனால் பொதுவில் பார்த்தால் இம்முறை அவர் பிரசாரம் சரியில்லை, தனிமனிதத் தாக்குதல்கள் இருந்தன. பேச்சில் கொஞ்சம் கர்வம் தலைதூக்கி இருந்ததோ? அதோடு இல்லாமல் அயோத்தியில் பல பழமை வாய்ந்த ஆகம முறைப்படியான கோயில்கள் இடிக்கப்பட்டதில் மக்களுக்கு அதிருப்தி. மேலும் இம்முறை எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உ.பியின் அகிலேஷும், ராகுலும் நன்றாக உழைத்தனர். போதாததற்கு சோனியாவின் உணர்வு பூர்வமான பேச்சும் சேர்ந்து கொண்டது.

ராஜிவ் காந்தியைப் பற்றியும் இந்திரா காந்தியைப் பற்றியும் பேசியதை மக்கள்   ரசிக்கவில்லை. ஆக இந்த வெற்றியானது கஷ்டப்பட்டுப் பெற்ற வெற்றியே அன்றி மோதிக்காக வந்தது இல்லை. அதோடு இல்லாமல் நிதிஷ்குமாரையோ, சந்திரபாபு நாயுடுவையோ எவ்வளவுக்கு நம்பலாம்? சந்தேகமே! இப்போதே நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அரசல், புரசலாகச் செய்திகள் வருகின்றன. ஒரே ஆறுதல் நிதிஷ்குமார் பிரதமர் ஆவதற்கு இந்தியா கூட்டணியில் அனைவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதும் அங்கே பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களும் தான்.

 எல்லாவற்றையும் மீறிக் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒரு வருடம் ஓடினாலே பெரிய விஷயம். என் டி ஏ கூட்டணியும் கூட இரு வருஷங்கள் தாக்குப் பிடித்தால் பெரிய விஷயம். கூடிய விரைவில் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டி இருக்குமோனு தோணுது. இப்போதைய தேர்தலில் பாஜக அதிக அளவில் மாபெரும் வெற்றி பெறாததுக்குக் காரணம் தேர்தல்கள் விட்டு விட்டு நடந்தவையும் ஒரு காரணம். ஒரு வாரத்துக்குள்ளாக அனைத்துப் பகுதிகளுக்கும் தேர்தல் நடந்திருந்தால் கருத்துக் கணிப்புகள் பலித்திருக்கும். இப்போது இடைவெளி நிறைய இருந்ததால் மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கலாம். ஆனாலும் தமிழ்நாட்டைப் பற்றி ஒண்ணும் சொல்வதற்கில்லை. யானைக் கதை தான்.

Tuesday, May 07, 2024

அவ்வப்போது எட்டிப்பார்க்கிறேன்!

 நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஏதோ அதோடு சேர்ந்து நானும் தினம் தினம் தூங்கி, விழித்து, நம்ம ரங்க்ஸைக் கவனித்துக் கொண்டு பொழுது ஓட்டமாய் ஓடுகிறது. இரவு படுக்கையில், அப்பாடா, காலை நீட்டிப் படுக்கலாம் என்று தோன்றும். தூக்கம் வராது. சுமார் பனிரண்டு வரை புரண்டு புரண்டு படுப்பதோடு சரி. ரங்க்ஸுக்குப் பசித்தால் அவர் படுத்திருக்கும் அறையிலிருந்து என்னைக் கூப்பிட ஒரு மணி அமேசான் மூலம் வாங்கி உள்ளது. நான் படுக்கும் எங்கள் படுக்கை அறையில் அதைப் ப்ளகில் சொருகி இருக்கோம். அவர் அறையிலிருந்து பட்டனை அழைத்தால் சங்கீத அழைப்பு வரும். உடனே எழுந்து போய் என்ன எனக் கேட்டுவிட்டு வேண்டியதைச் செய்துவிட்டு வருவேன். இரவு காவல் இருக்கும் பெண் இருந்தாலும் குடிக்க ஏதேனும் வேண்டும் எனில் என்னைத் தானே அழைக்கணும். என்றாலும் நானும் அங்கே படுக்காதது அவருக்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கு. சில சமயம் என்னை விட்டுட்டு எல்லோரும் எங்கே போனீங்க என்பார். அல்லது நான் மட்டும் தான் இந்த ஆஸ்பத்திரியில் இருக்கேனா? மத்தவங்க இல்லையா என்பார்! ஏன் என்னைப் பார்க்க யாருமே வரலை என்பார். ரொம்பக் கஷ்டமாக இருக்கும். அழுகை வரும். என்றாலும் அவர் எதிரே காட்டிக்காமல் வீட்டில் தான் இருக்கீங்க என்பேன். அரை மனதாக அப்படியா என்பார். உடனேயே சரி, நீ போய்த் தூங்கு என்பார்.


எங்கே போய்த் தூங்கணும் என்றால் கொஞ்சம் யோசிச்சுட்டு, நம்ம ரூமில் தான். நான் இப்போ கெஸ்ட் ரூமில் தானே இருக்கேன் எனச் சரியாகச் சொல்லுவார். நேத்திக்கு என் தம்பி தொலைபேசியப்போ நான் குளித்துக் கொண்டிருந்தேன். அவனிடம் நான் நீங்கல்லாம் வந்தால் தங்குவீங்களே, அந்த ரூமில் படுத்துண்டு இருக்கேன். அக்கா எங்க பாத்ரூமில் குளிக்கிறா எனச் சரியாகச் சொல்லி இருக்கார். சில சமயங்கள் தடுமாற்றம். இதெல்லாம் பரவாயில்லை என்பது போல் இந்த கதீட்டர் பிரச்னை. அடிக்கடி, இன்ஃபெக்ஷன் ஆகிறது. இன்னமும் அவரால் பத்து நிமிஷம் சேர்ந்தாற்போல் உட்கார முடியலை என்பதால் கதீட்டர் இருக்கணும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அடிக்கடி இன்ஃபெக்ஷன் ஆவதைப் பார்த்தால் கழட்டி எறியணும் போல் இருக்கு. :(


காலை நேரம் பார்த்துக்க ஒரு பெண்ணும், இரவு நேரம் பார்த்துக்க ஒரு பெண்ணும் (இருவருமே உறவு) வருகிறார்கள். ஒத்துப் போகிறதா எனில் ஒண்ணும் சொல்ல முடியாது. சில விஷயங்களைப் பொது வெளியில் எழுதவோ சொல்லவோ முடியாது. வாயை மூடிக்கணும். அவ்வளவே. அல்லது; எனக்குச் சகிப்புத் தன்மை குறைச்சல்னு வைச்சுக்கலாம். தினம் தினம் பிசியோதெரபியும் நடக்கிறது, சீக்கிரம் எழுந்து நடமாட மாட்டாரானு இருக்கு. அறுவை சிகிச்சை நிபுணர் பயாப்சி பண்ணிப் பார்க்கணும் என்கிறார். அதுக்கு ஒத்துக்கோங்க என்கிறார். ரங்க்ஸுக்கும் இஷ்டம் இல்லை. எனக்கும் இல்லை. தெரிந்த பல மருத்துவர்களிடமும் அவங்க கருத்தைக் கேட்டாச்சு. வேண்டாம்னே சொல்றாங்க. என்னோட உபிசவான தி.வாவும் அதையே சொல்லுகிறார்.இனி வரும் நாட்கள் எப்படியோ தெரியாது. நல்லபடியாகக் கழியணும்னு எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கிறேன். 

இந்த அழகில் ஸ்ரீராம் வீட்டுக் கல்யாணத்தையாவது நெல்லை தயவில் வீடியோவில் பார்த்தேன். நெல்லைக்கு நன்றி நினைவாக அனுப்பி வைத்ததுக்கு. ஆனால் தி/கீதாவின் பிள்ளை கல்யாணம், நெல்லையின் பெண் கல்யாணம் நடந்தப்போ நான் மருத்துவமனையில் மருத்துவர்களோடு ஆலோசனைகளில் மூழ்கி இருந்ததால் சுத்தமாய் நினைவில் இல்லை சொல்லவே வெட்கமாக இருந்தாலும் அதான் உண்மை. பின்னால் நினைவு வந்து விசாரித்தேன். இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் இணையமே மறந்துடுமோ என்னமோ! :(

Thursday, March 14, 2024

பெரிய வணிகக் கடைகளும் வெட்டி ஆராய்ச்சிகளும்!

 தெரியாத்தனமா ஜியோ மார்ட்டில் பழம் வாங்க ஆர்டர் கொடுக்கும்படி ஆச்சு. நம்ம ரங்க்ஸுக்கு மாத்திரைகள் சாப்பிடும்போது தொண்டையில் மாட்டிக்கும். அதை உள்ளே தள்ள வாழைப்பழம் தேவைப்படும் சோதனையாக நான்கு நாட்களாக வாழைப்பழமே கிடைக்காமல் யாரைக் கேட்டாலும் காயாக இருக்குனே சொல்லவே ஜியோவில் ஏலக்கியும் ரொபஸ்டாவும் செவ்வாழையும் ஆர்டர் பண்ணினேன், பணம் 138 ரூபாய்க்குள் தான் வந்தது, ஜிபே பண்ணிடலாம்னு பார்த்தால் உங்க வீடு இந்த உலகில் இருக்கும் லொகேஷனை ஷேர் பண்ணுனு கேட்டது. சரினு சொல்லவே இது இல்லைனு ஒரே மறுப்பு, சரினு போட்டால் அதையும் ஒத்துக்கலை, மறுபடி அடியில் இருந்து ஆரம்பிச்சு வந்தால் ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ பழங்களே ஸ்டாக் இல்லையாம். எல்லாம் வித்துப் போச்சாம். இது என்னடா புதுசா இருக்கேனு மறுபடி போனால் ஜியோ வராமல் ஸ்மார்ட் பஜாரோ பிக்பஜாரோ ஏதோ ஒண்ணு வந்தது. இம்முறையும் 200 ரூபாய்க்குக் கீழே வந்தது. அப்போ பில்லை எடிட் செய்தால் தானாக இரண்டு இளநீரும் அதில் சேர்ந்து 228 காட்டியது, ஆனமட்டும் முயன்று அதை நீக்கப் பார்த்தால் போகவே இல்லை.

பேமென்டுக்கு போயிடுச்சு. தொலையட்டும் இளநீர் தானே ஆளுக்கு ஒண்ணாக் குடிச்சுத் தொலைக்கலாம்னு பேமென்ட் பண்ணிட்டு அன்னிக்குப் பூராப் பார்த்தால் ஒண்ணுமே வரலை. க்ர்ர்ர்ர்ர்னு எனக்கு நானே சொல்லிட்டு அவங்க மெசேஜைப் பார்த்தால் ட்ராக்கிங் லிங்க் இருந்தது. என்னோட மொபைலோ அதை ட்ராக் செய்யாதே ஏதோ புறம்போக்குப் போலத் தெரியுதுனு சொல்லுது. இருந்தாலும் தைரியமாப் போய்ப் பார்த்தால் 12 ஆம் தேதி ஆர்டரை 14 ஆம் தேதி தான் அனுப்புவாங்களாம். சரியாப் போச்சுனு நினைச்சேன். உள்ளூர் அண்ணாச்சி கடையிலேயே பார்த்த உடனே வாங்கிடலாமேனு நினைச்சேன். இனி ஒண்ணும் செய்ய முடியாதுனு காத்திருந்தேன். ரொம்பப் பெருமையா நேத்திச் சாயங்காலம் ஒரு பையர் வந்து ஓடிபி கேட்டுக்கொண்டு பழங்களைக் கொடுத்தார். ஏன் இவ்வளவு தாமதம் எனக் கேட்டதுக்கு பதில் இல்லை. அதில் என்னமோ பத்து ரூபாய் திருப்பிக் கொடுக்கிறாங்களாம். ஏன்னு புரியலை. அக்கவுன்டில் கிரெடிட் ஆகும்னு மெசேஜ் வந்தது. 

இன்னிக்கு மத்தியானம் நோன்பு எல்லாம் ஆகி ரங்க்ஸுக்கும் சாப்பாடு கொடுத்துட்டு ஒன்றரை மணி அளவில் அப்பாடானு படுத்தால் உடனே ஃபோன். ஜியோவிலிருந்து ஒருத்தர் கீதா மேடம்னு கூப்பிடவே, சொல்லுங்கனு சொன்னேன். ஏன் 218 ரூபாய்க்குப் பொருள் வாங்கினீங்க? இது யார் சொல்லி ஆர்டர் கொடுத்தீங்க? நீங்களாக் கொடுத்தீங்களா? யாரானும் சொன்னாங்களானு எல்லாம் ஆராய்ச்சியை ஆரம்பிச்சார். எனக்கு வந்த கடுப்பில் நான் ஆர்டர் செய்தவை எனக்கு நேத்திக்கே வந்தாச்சு. அத்தோடு ஆளை விடுங்கனு சொல்லிட்டுத் தொலைபேசியை அணைச்சுட்டு மறுபடியும் படுத்துட்டேன். சரிதானே? என்னோட தேவை வாழைப்பழங்கள் மட்டும். அவங்க கிட்டே ஆயிரம் பொருட்கள் இருந்தால் எல்லாத்தையுமா வாங்க முடியும்? தேவையான வாழைப்பழங்களை மட்டும் யாரையும் கேட்டுக்காமல் நானாக ஆரடர் செய்தேன். இதுக்குப் போய் எம்புட்டு ஆராய்ச்சி? என்னவோ போங்க. இந்த பிக் பாஸ்கெட், பிக் பஜார், ஜியோ மார்ட், டி மார்ட் இதெல்லாமே ஏனோ எனக்கு அவ்வளவு உகந்ததாய்த் தெரியலை, நேத்திக்குப் பாருங்க காஃபி பவுடர் வேணும்னு எப்போவும் வாங்கற கடையிலே வாட்சப் மூலம் செய்தி கொடுத்ததும் சாயங்காலமே வந்துடுத்து.இதல்லவோ வியாபாரம்!
















குகுவுக்காக எடுத்த படங்கள். அதுக்கு வாய்/ஸ் மெசேஜுடன் படங்கள் போயாச்சு. ஸ்கூலுக்குப் போயிருக்கும். ஆகவே வந்து தான் பார்க்கும், பதிலும் கொடுக்கும்.

ராமருக்குக் கீழே உள்ள முதல் படம் சரடு கட்டிக்கும் முன்னர் எடுத்தது, அடுத்த படம் நிவேதனம் முடிஞ்சு என்னோட இலையிலிருந்து பிரசாதத்தை நம்ம ரங்க்ஸுக்காக எடுத்து ஒரு தட்டில் வைச்சிருக்கேன். இன்னிக்கு இதான் முக்கியம். நாம் நிவேதனம் செய்து ஒரு வாய் போட்டுக்கொண்டு கணவருக்கும் அதே இலையில் இருந்தே கொடுக்கணும் என்பாங்க எங்க ஊர்ப்பக்கம். நானும் வருஷக்கணக்காய் அப்படித் தான் செய்து வரேன்,.


Saturday, March 02, 2024

என்னவோ நேரம்! இன்னும் சரியாகலை! :(

 நானும் அடிக்கடி வரதில்லையா! யாருக்கும் நினைப்பு இருக்காது. நம்மவர் சென்ற மாதம் 10 ஆம் தேதியன்று இரவில் கீழே விழுந்து செக்யூரிடி ஆட்களை வரவழைத்துத் தூக்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் விட்டோம். பாதம் தரையில் பாவவே இல்லை. கவலையாகவே இருந்தது. இருந்தாலும் காட்டிக்காமல் சமையலறையை ஒழிக்காமல் அப்படியே மூடி வைச்சுட்டு வந்து நானும்படுத்து விட்டேன். சிறிது நேரத்தில் கழிவறை போகணும்னு சொல்லவே எழுப்பி விட்டுக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றேன். அப்போவே ஏதோ குதிக்கிறாப்போல் தான் நடந்தார். திரும்பி வரும்போது ஒரேயடியாய்த் தள்ளி விட்டது உடம்பை. நல்லவேளையாய்க் கட்டிலில் தான் விழுந்தார். உடனேயே ஏதோ பிரச்னை எனத் தெரியவே சர்க்கரை அளவைப் பார்த்தேன் 176 இருந்தது. சர்க்கரை இல்லை. பின்னே என்ன காரணம்? தாமதம் செய்யாமல் உடனே ஆம்புலன்ஸைக் கூப்பிட்டு விட்டு மருத்துவமனியிலும் எமர்ஜென்சியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லவும் வாங்க, ஆனால் உடனே இடம் கிடைப்பது கஷ்டம். ஒரு விபத்து நடந்து அதில் மாட்டிக் கொண்டவர்கள் வந்திருக்காங்க. ஆனாலும் உடனே கவனிப்போம் எனச் சொல்லவே, வந்தது வரட்டும்னு ஆம்புலன்சில் அவரை ஏற்றிவிட்டு நானும் முன்னால் ஏறிக் கொண்டேன்.

மருத்துவமனை போயாச்சு. உடனே ஸ்ட்ரெச்சர் வரலை. கொஞ்சம் தாமதம் ஆனது. அதுக்குள்ளே ஆம்புலன்ஸ் ட்ரைவர் ட்யூடி டாக்டரிடம் போய்ச் சொல்லவே அவர் வந்து பார்த்துவிட்டு உடனே ஸ்ட்ரெச்சர்  வரவழைத்து உள்ளே அழைத்துச் சென்றார்கள். திடீர்னு அவருக்கு நம்பர் ஒன் போகாமல் தொந்திரவு பண்ண ஆரம்பிக்கவே வலியில் புலம்பினார். டாக்டர் ட்யூபெல்லாம் போடக் கூடாது, அவராகப் போகணும்னு சொல்லிட்டார் நம்பர் ஒன் போனப்புறமாத் தான் வந்திருக்கும் காரணத்துக்கான மருத்துவம் ஆரம்பிப்பாங்க போல. எனக்குக் கொஞ்சம் கோபம் வரவே இன்னும் எத்தனை நேரம் கவனிக்காமல் இருப்பீங்க எனக் கேட்கவே அவர் முதலில் நம்பர் ஒன் போகட்டும் என்றார்கள். ரொம்ப சிரமத்திற்குப் பின்னர் நம்பர் ஒன் போகவே உடனே ரத்தப் பரிசோதனை. கடவுளே அவருக்கு ரத்தம் எடுப்பவே கஷ்டம். குத்திக் குத்திப் புண்ணாக்கிடுவாங்க. ஒவ்வொரு இடமாஅப் பார்த்து ஒரு வ்ழியா ரத்தம் எடுத்து சோடிஉம் குறைச்சல்னு சொல்லிட்டு அதற்கான சிகிச்சையை ஆரம்பிச்சுட்டு, இவரைப் பார்க்கும் மருத்துவருக்கும், சிறுநீரக மருத்துவருக்கும் தகவல் அனுப்பி வைச்சாங்க. 

பின்னர் ஒரு வழியாக் காலை நாலு மணி அளவில் உள் நோயாளியாகச் சேர்க்கப்பட்டு அறைக்கு வந்தோம். தூக்கமா? இரண்டு பேருக்கும் தூக்கமே இல்லை. பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மட்டும் தகவல் சொல்லி இருந்தேன். வேறே யாருக்கும் சொல்லவில்லை. பையர் வரட்டுமா எனக் கேட்க, வேண்டாம், நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன். பின்னர் காலை விடிஞ்சதும் செவிலியர் வந்து ஏற்கெனவே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மருந்துகளைக் கேட்டாங்க. ஆஹா! தப்புப் பண்ணிட்டோமேனு நினைச்சேன். அது தேவை இல்லைனு நினைச்சு வீட்டிலேயே வைச்சிருந்தேன். அதை எடுத்து வரணும்னு சொல்லிட்டாங்க. இவரைப் பார்த்துக்க ஆளே இல்லையே! அவசரம் அவசரமாக அவரிடம் சொல்லிட்டு, ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாக வாக்குக் கொடுத்துட்டு செவிலியர், வார்ட் பாய் ஆகியோரிடமும் சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். எப்போவும் போல் ரெட் டாக்சிக்குக் காத்திருக்காமல் ஆட்டோவிலேயே போயிட்டேன். பைசா ஜாஸ்தி தான். ஆனால் அவசரத்துக்கு என்ன செய்ய? விட்டுக்குப் போனதும் மருந்துகள், மற்றும் தேவையானவற்றைச் சேகரித்துக் கொண்டு பையில் வைச்சுட்டு, குளித்து விட்டு உடனே கிளம்பிட்டேன். செக்யூரிடி மூலம் ஆட்டோ வரவழைத்துக் கொண்டு முக்கால் மணி நேரத்தில் திரும்ப மருத்துவமனை போயிட்டேன். நல்லவேளையாக் காலை ஆகாரம் வரலை. போனதும் காலை ஆகாரத்துக்கு முன் கொடுக்க வேண்டிய மாத்திரைகளை அவங்க அப்போப் புதுசாக் கொடுத்த மாத்திரைகளோடு சேர்த்துக் கொடுத்துவிட்டு அப்பாடானு உட்கார்ந்தேன்.

கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு மும்பையில் இருக்கும் மைத்துனரை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். அவர் வரட்டுமானு கேட்டதுக்கு வேண்டாம் தகவலுக்காகத்க் தான் சொன்னேன் என்று சொல்லி விட்டேன். ஆனாலும் அவர் அன்றிரவு விமானத்தில் கிளம்பி வந்தார். அன்று முழுவதும் உட்கார்ந்திருந்ததாலும் முதல் நாள் இரவிலும் உட்கார்ந்திருந்ததாலும் உடம்பு கெஞ்சியது. என்றாலும் சமாளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். இரவு பனிரண்டு மணி அளவில் மைத்துனர் விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருப்பதாகவும் என்னைக் கீழே வரும்படியும் சொன்னார். அவர் வந்த வண்டியிலேயே என்னைக் கொண்டு விட்டு விட்டுத் திரும்ப அவர் மருத்துவமனை வருவதாகப் பேசிக் கொண்டிருந்தோம். ஆகவே சுமார் பனிரண்டரை மணி அளவில் நான் வீட்டுக்கு வர அவர் மருத்துவமனை போனால். மறுநாள் காலை வீட்டு வேலை செய்யும் பெண்ணை வரச் சொல்லி வீடு சுத்தம் செய்து பாத்திரங்களைக் கழுவி வைச்சுட்டு எட்டரைக்கெல்லாம் மறுபடி மருத்துவமனை போய் இரவு தூங்காமல் இருந்த மைத்துனரை விடுவித்தேன்.  அவர் வீட்டுக்குப் போய் விட்டார். அன்றே சிறுநீரக மருத்துவரும் வந்து பார்த்துட்டு பயப்பட வேண்டாம் சோடியம் லெவல் 130க்கு மேல் வந்தால் டிஸ்சார்ஜ் பண்ணலாம் என்று சொன்னார்.

Monday, February 19, 2024

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி

 



உ.வே.சா. சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராய் இருந்தார். ஆனாலும், அவர் தந்தையவர்கள் உ.வே.சா. விளையாடுவதை விரும்பியதில்லை. எப்பொழும் படித்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பினார். தமது சிறிய தந்தையாரிடம் இயற்கையாகவே இசையில் ஆர்வமுள்ள உ.வே.சா. இசை பயின்றாா்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வது அக்காலத்தில் மிகவும் பெருமைப்படும் செயல். உ.வே.சா.விற்குச் சிறுவயதில் ஆங்கில எழுத்துகள் மட்டும் கற்கும் வாய்ப்பு கிட்டியது. சடகோபஐயங்காரே தமக்குத் தமிழில் ஆர்வம் உண்டாகும் வண்ணம் முதன்முதலில் கற்பித்தாா் என்று உ.வே.சா. தெரிவிக்கின்றார்கள். அரியலூரில் தம் குடும்பம் மிக்க வறுமையில் வாழ்ந்து வந்ததையும் பதிவு செய்கின்றார்.கல்வி, கேள்வி இல்லாதவரும் அக்காலத்தில் கல்வி அறிவுடையவர்களைக் கண்டால் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து ஆதரிப்பதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.


உ.வே.சா.வின் தந்தை இவருக்கு நல்ல கல்வி கற்பித்துச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதில் தீவிர ஆர்வமும் கவலையும் கொண்டிருந்தார். பல தமிழ் நூல்களை அவருக்கு முறையாகக் கற்பித்தார். சிதம்பரம்பிள்ளை என்னும் தமது தந்தையின் நண்பரிடம் திருவிளையாடற்புராணம் நூலைக் கற்றார். அக்காலத்தில் கற்பது என்பது தற்போது முறையாகப் பள்ளியிலமர்ந்து பாடம் வாரியாக அல்லாமல் இது போன்று தமிழ் நூல்களை நன்கு கற்பதே போலும். உ.வே.சா. தமது வாழ்நாள் முழுவதும் இது போன்றே தமிழ் நூல்களை ஐயம் தீர்ந்தபடி கற்றுத் தேர்ந்தார்கள். நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும் சமகாலத்தில் இயற்றிய பிள்ளைத்தமிழ், கோவை முதலிய இலக்கியங்களையும் இது போன்றே தமிழறிஞா்களிடம் பாடம் கேட்டும் புலமையடைந்தார். சிறுவயது முதலேயே நன்னூலை நன்கு கற்றிருந்ததால் இவருக்கு இது மிகவும் உதவியாக இருந்துள்ளது. எந்தப் புலவரிடம் பாடம் கேட்கச் சென்றாலும், இவரது நன்னூல் புலமை கைகொடுத்து உதவியது.


உ.வே.சா. கவிதை எழுதும் கலையையும் பயின்று வந்தார். அவர் முதலில் செய்யுள் இயற்றிய போது பிறர் கருத்தை வைத்துச் செய்யுள் இயற்றினார். அவர், தந்தை அவருக்கு இது முறையாகாது என்றும் அவருடைய பாட்டில் அவர் அனுபவம் இருப்பதுதான் உசிதம் என்று கூறியதைப் பின்பு நன்கு உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். உ.வே.சா. தமது தந்தையாருடன் சென்று இராமயண விரிவுரையில் உதவி செய்துள்ளார். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதன் மூலம் இவர் தந்தைக்கு நல்ல வருமானமும் கிடைத்தது.


உ.வே.சாவிற்குத் திருமணம் முடித்துவிட வேண்டுமென்று அவர் தந்தையார் விரும்பினார். இளம்வயதில் மணமுடிப்பது அக்காலப்பழக்கம். பதினாறு வயதில் மணம் முடியாமலிருந்தால் அது பெருங்குறை என்று கருதியது அந்தக்காலம். காலமாற்றத்தின் பலனாக அக்காலத்தில் சிறந்தது என்று நினைத்தது தற்பொழுது நகைப்புக்குரியது ஆகிறது. அது போல் அக்காலத்தில் நகைப்புக்குரியது, தற்பொழுது சிறந்தது ஆகின்றது என்றும் குறிப்பிடுகின்றார். அப்பொழுது கூட உ.வே.சா. தமிழை நிறைவாகக் கற்றுக் கொள்ளவில்லை என்ற மனக்குறைதான் பெரிதாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். உ.வே.சாவிற்குப் பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. மணபெண் வயது எட்டு. பொருட்செலவிற்குப் பெரும்பாலும் கிராமத்தினர் உதவி செய்து திருமணத்தை நடத்தினர். திருமணத்திற்கு முன்னும் பின்னும் உ.வே.சாவின் சிந்தனை எல்லாம் “தமிழ்தான் எனக்குச் செல்வம் அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு . . .அன்றும்சரி இன்றும்சரி இந்த நிலைமை மாறவே இல்லை” என்னும் அவருடைய சொற்கள் தமிழ் கற்கவேண்டும் என்பதிலும், தமிழ் மீது அவர் கொண்ட பற்றின் வெளிப்பாடும் ஆகும். இறுதிவரை அவர் வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் ஒரே சிந்தனையைத் தவிர, அவர் வேறு எதிலும் நாட்டம் கொண்டதற்கான சாயலே கிடையாது.


தம் தந்தையின் நண்பராகிய கும்பகோணம் வக்கில் வேங்கிடராவ், உ.வே.சா. தமிழ் கற்பதனாலும் இசைப் பயிற்சியினாலும் பெரிய பயனில்லை; ஆங்கிலம் கற்றுக் கொடுங்கள், தாம் உதவி செய்வதாகவும் தமது நண்பர்கள் முலம் உதவி செய்வதாகவும் கூறியபொழுது அவர்பால் உ.வே.சா. அவர்களுக்குக் கோபமுண்டாயிற்று; தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும் பதிவு செய்கிறார்.

Sunday, February 18, 2024

என்ன செய்யலாம்? தெரிந்தவர்கள் உதவலாம்!

 முந்தாநாள் மெடிகல் ஃபார்மசியில் மருந்துகள் வாங்கப் பட்டியலைச் சொல்லிக் கொண்டிருந்தேன், முடிந்ததும் அந்தப்பெண் அவ்வளவு தானா மேடம்? வேறே ஏதும் இருக்கானு கேட்டாங்க. ஆமாம், ஒரு டெட்டால் பாட்டிலும் சேர்த்துப் போடுங்க என்றேன். டெட்டாயில் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்) தானே மேடம்? எத்தனை லிட்டர்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது டெட்டாயில் இல்லை, டெட்டால் என்றேன். அதான் மேடம் நானும் சொல்றேன், டெட்டாயில் அரை லிட்டர் போடவா? 

ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

முந்தாநாளே நடந்த இன்னொரு விஷயம். சிலிண்டர் தீர்ந்து விட்டதால் ரீஃபில் பதிவு செய்தேன், வழக்கம் போல் வாடசப் மூலம் என்னுடைய மொபைல் நம்பரில் தான் செய்தேன், எல்லாம் சரியாக வந்தது. ஆனால் எனக்குச்செய்தி எஸ் எம் எஸ் மூலம் வரவே இல்லை. சரினு மறுபடி செய்தால் ஏற்கெனவே பதிவு செய்தாச்சு, சிலிண்டரும் வந்துடும்னு வாட்சப்பில் வந்தது. இந்த டி.ஏ.சி. நம்பர்னு ஒண்ணு வரணுமே! அது வரவே இல்லை. என்னாச்சுனு தெரியலையேனு குழப்பம், நேத்திக்கு சிலிண்டரும் வந்தது,. வழக்கமாய் வருபவர் தான். சிலிண்டரைப் பொருத்திப் பார்த்துட்டுப் பணம் கொடுக்கையில் டிஏசி நம்பர் கேட்க நான் வரவே இல்லை என்றேன், அவருக்கு திடீர்னு எனக்கு மொபைல் பார்க்கத் தெரியலைனு ஜந்தேகம். மொபைலைக் கொண்டானு சொன்னார். காட்டினேன். பிஎஸ் என் எல் ரீசார்ஜ் மெசேஜ் தான் இருந்தது, (அதுவும் ஒரு தனிக்கதை. பின்னால் பார்ப்போம்.) ஏன் வரலைனு கேட்டேன். உடனே அந்த மனிதர் உங்க காஸ் ஏஜென்சிக்குத் தொலைபேசிக் கேளுங்க. அவங்க தான் அனுப்பணும். அனுப்பாமல் விட்டிருக்காங்க என்றார்.

உடனே தொலைபேசினேன். முதலில் ஒரு பெண் எடுத்தார். அவரிடம் விபரங்கள் சொல்லிக் கேட்டால் நான் புதுசுனு வேறே ஒருத்தரிடம் சொல்ல அந்த ஒருத்தர் எடுத்தார் அவரிடம் விபரங்கள் கன்ஸ்யூமர் நம்பர் எல்லாம் சொல்லவே பெயர், விலாசம் சரியாகச் சொல்லிட்டு உங்க மொபைல் நம்பர்னு ஆரம்பிச்சு 988 நு ஆரம்பிக்கும் ஏதோ நம்பரைச் சொல்லவே இல்லையே இது என்னோட நம்பரே இல்லைனேன். உடனே அவர் மீண்டும் பார்த்துட்டு, நவம்பரில் நீங்க சொல்லும் நம்பரில் இருந்து பதிவு செய்திருக்கீங்க. இப்போ இந்த நம்பரில் பதிவு செய்திருக்கீங்கனு சொல்லவும் கோபத்துடன் இந்த மாதிரி ஒரு நம்பருடன் எங்களிடம் எந்தத் தொலைபேசி/அலைபேசி கிடையாது, இந்த ஒரே நம்பர் தான் எங்க நம்பர்னு சொன்னால் அவ்ர் ஒத்துக்கவே இல்லை. நாங்க கொடுத்த செய்து அந்த 988 இல் இருந்து ஆரம்பிக்கும் நம்பருக்குப் போயிருக்கும் ;என்று முடிக்கப் பார்த்தார். நான் விடலை. இதே நம்பரில் இருந்து தான் வாட்சப்பில் சிலிண்டர் புக் செய்தேன். அந்த வாட்சப் செய்திகளை உங்களுக்கு ஃபார்வார்ட் செய்யறேன் என்று சொல்லவே அவர் ஒரு சவாலாக அனுப்புங்க பார்ப்போம்னு ஒரு அலைபேசி எண்ணைக் கொடுத்தார்.

அது அலுவலக எண்ணாம். நானும் அந்த எண்ணிற்கு எனக்கு வந்த வாட்சப் செய்திகளை ஃபார்வார்ட் செய்து விட்டு மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். ரொம்ப நேரம் யாருமே எடுக்கலை. பின்னர் ஒரு பெண் எடுத்து என்ன எனக் கேட்கவும் விபரங்களைச் சொன்னேன். ரொம்பப் பணிவாக, சரி மேடம், நாங்க என்னனு பார்க்கிறோம் மேடம்னு சொல்லிட்டு ஃபோனை வைச்சுட்டார். மறுபடி சிலிண்டர் போடுபவரைக் கூப்பிட்டு விபரங்களைச் சொன்னால் ஏஜென்சிக்காரங்க தான் தப்பான தொலைபேசி எண்ணை இணைச்சிருக்கணும் எனவும் இது அவங்க தப்பு அதனால் அப்படியே விடுங்க, நீங்க பத்து வருஷத்துக்கு மேலாகத் தெரிஞ்சவங்க என்பதால் நானும் சிலிண்டரைக் கொடுத்துட்டேன். பின்னால் பார்த்துக்கலாம் என்று சொன்னார். ர்ங்க்ஸிடம் இதை ஒரு மாதிரி விபரமாகச் சொல்லி என்ன செய்யனு கேட்டால் பேசாமல் இருப்போம் என்றார், இதுக்கு என்ன செய்யலாம்? ஐ.ஓ.சி.யிடம் புகார் கொடுக்கணுமா? ஏஜென்சியில் நம்பரை மாத்தணும்னால் நேரே வரணும் என்றார்கள். எனக்கோ/அவருக்கோ நேரில் போகும் நிலையில் இல்லை. என்னதான் சும்மா இருந்தாலும் மனதில் இது ஓடிக் கொண்டே இருக்கு.


Friday, February 02, 2024

கோலத்தில் கொண்டாடிய பண்டிகை!


 பால்கனியில் கனுப்பிடி வைச்சேன். மொட்டை மாடிக்கு இப்போல்லாம் ஏற முடியாததால் இங்கேயே வைச்சுடுவேன். நான் மட்டும் தான் என்பதால் ஒற்றை இலை போடாமல் இரண்டு இலைகள் போட்டு இரண்டிலும் வைப்பேன். கூட யாரேனும் இருந்தால் எனக்குத் தனி இலை, அவங்களுக்குத் தனி இலைனு இரண்டு ஆயிடும். ஆனால் யாருமே இல்லையே!



கனுவன்று போட்ட கோலம்.


 
பொங்கலன்று போட்ட கோலம்.



இந்த வருஷம் பூஜை பண்ண முடியலை என்பதால் பால்கனியில் சூரியக் கோலம் போட்டு எல்லாம் எடுத்து வைச்சுப் பண்ணாமல் பொங்கல், அன்னம், அவிசு, காய்கள், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள் கொத்து, கரும்பு ஆகியவ்ற்றை சுவாமிக்கு எதிரே வைத்து முடிஞ்ச மட்டும் கொண்டு வைத்துக் கொண்டு நிவேதனம் மட்டும் பண்ணினேன். அதுக்குள்ளேயும் அவருக்குப் பசி அதிகமாகி விட்டது. நேரம் ஆயிடுச்சே! :( பின்னர் சாப்பிடும்போது சாப்பாடு இறங்கலை . கஷ்டமாக இருந்தது. படம் எடுக்க முடியலை. ஒரேயடியாகப் பரத்தி இருந்ததால் மற்றவற்றை எடுத்து வைச்சுட்டு முக்கியமான பொங்கல், அவிசு மட்டும் படம் எடுத்துப் போட்டிருக்கேன்.


போகி அன்று போட்ட கோலம்

குட்டிக் குஞ்சுலுவிடம் பொங்கல் தினங்களை இந்தியாவின் தாங்க்ஸ் கிவிங் டே எனச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தேன். முதல்நாள் என்ன செய்வோம்,என்பதை வீடு சுத்தம் செய்து பண்டிகை நாளுக்காகத் தயார் செய்வோம் என்றும்  இரண்டாம் நாளான பொங்கலன்று சூரிய, சந்திரர்க்கும் மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிப்போம் என்றும் சொல்லிவிட்டு மூன்றாம் நாளன்று மாடு, கன்று, பறவைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் அவங்களுக்கும் இயற்கையைப் பேணி வருவதற்கான நன்றியைச் சொல்லுவோம் என்றும் சொன்னேன். அதோடு சகோதரர்களுக்காகச் சகோதரிகள் பிரார்த்தனை செய்து கொள்ளுவார்கள் என்றும் சொன்னேன். எல்லாமே வாய்ஸ் மெசேஜ் அதான். அதுவும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது. ஊருக்குப் போகும் அவசரத்தில்.

Sunday, January 07, 2024

என்ன தான் நடந்தது?

 நான் தான் முடியாமல் அடிக்கடி படுத்துப்பேன் என்பதால் எனக்கு முடியலைனால் யாரும் அதைத் தீவிரமாக எடுத்துக்கறதில்லை. ஆனால் இம்முறை நம்ம ரங்க்ஸ் படுத்து விட்டார். நவம்பர் 25ம் தேதிக்கு முன்னாடி இருந்தே முடியலை, முடியலைனு சொல்லிட்டு இருந்தார். மருத்துவரிடம் போகச் சொன்னால் போகமாட்டேன் என அடம். அன்னிக்கு சனிக்கிழமை காலம்பர மறுநாள் கார்த்திகைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரச் சென்றபோது மார்க்கெட்டில் வண்டியைப் போட்டுக் கொண்டு விழுந்திருக்கார். சொல்லவே இல்லை. எங்கே எப்படி அடிபட்டதுனு தெரியலை. வீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டு விட்டார். குளிக்கலை. உம்மாச்சிங்களுக்குப் பூக்கள் எடுத்து வைக்கலை. என்னனு கேட்டால் முடியலை தொந்திரவு பண்ணாதே என்றார். சரினு விட்டுட்டேன். பதினோரு மணிக்கு எழுந்தவர் குளிக்கக் கிளம்ப நான் வற்புறுத்தி மருத்துவரிடம் அனுப்பி வைத்தேன். அங்கேயும் வண்டியில் போயிருக்கார். வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்த முடியாலை பின்னர் மருந்துக்கடைக்காரர் பார்த்துட்டு உதவி செய்து மருத்துவரிடம் அனுப்பி வைத்தால் 102க்கு மேல் ஜூரம் இருந்திருக்கு. மருந்தை ஐவியில் செலுத்தி எச்சரிக்கை செய்து ஒரு சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்திருக்கார். வீட்டுக்கு வந்து ரசம் சாதம் சாப்பிட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டு படுத்தவர் சாயந்திரம் தான் எழுந்தார். இப்போ ஒண்ணும் இல்லைனும் சொன்னார். 

மறுநாள் கார்த்திகைக்கு வேன்டிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டு நடு நடுவே இவரையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். கார்த்திகை அன்னிக்குக் காலம்பர இருந்து எழுந்துக்கவே இல்லை. ஆனால் என்னிடம் நீ தனியா எப்படி எல்லாவிளக்கையும் ஏத்திக் கொண்டு வைக்கப் போறேனு மட்டும் கேட்டார். எல்லா விளக்குகளையும் ஏற்றவில்லை. கொஞ்சமாத்தான் ஏத்தப் போறேன்னு சொல்லிட்டுக் கார்த்திகைப் பண்டிகையையும் கொண்டாடி முடிச்சாசு. 

திங்களன்று பரிசோதனை முடிவுகளுடன் மருத்துவரைப் பார்க்கலாம் என்றால் அவர் வேறொரு மருத்துவரைச் சொல்ல சரினு அவரைப் பார்க்க இருவரும் போனோம். அப்போக் கூட என்னை வர வேண்டாம், நான் மட்டும் போறேன்னு தான் சொன்னார். நான் பிடிவாதமாகக் கூடவே சென்றேன்.முதல் நாளில் இருந்தே தலையில் குத்துவலி மண்டையை உடைக்கிறாப்போல் இருக்குனு சொல்லிட்டு இருந்தார். இந்த மருத்துவர் பார்த்துட்டு ஒரு ஊசி போட்டு அனுப்பினார். சாயந்திரம் கொஞ்சம் சரியாப் போனாப்போல் இருந்தது திடீரென அதிகமாக ஒரே கத்தல், புலம்பல். இரவு நரகமாக இருந்தது. அதுக்குள்ளே இது நரம்பு சம்பந்தமான பிரச்னை என்பதால் அதற்கேற்ற ஒரு மருத்துவ மனை நியூரோ ஒன் என்னும் பெயரில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இருப்பதாகவும் அவங்களைத் தொடர்பு கொள்ளும்படியும் நம்ம ரங்க்ஸே சொல்ல அவங்களைத் தொடர்பு கொண்டுப் பேசினேன். உடனே வரச் சொன்னாங்க. ஆனால் நம்மவரோ அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் மறுத்து விட்டார். இருந்த மாத்திரைகளை வைத்துக் கொண்டு வலியைக் கொஞ்சம் குறைக்க முயற்சி செய்தோம். ஆனால் அன்றிரவு முதல் நாளை விட மோசமாக ஆகி விட்டது. நடு இரவில் திடீரெனப் படுக்கையில் ஆளைக் காணோம். திகிலுடன் தேடினால் குரல் மட்டும் வருது, ஆள் எங்கேனு தெரியலை. அப்புறம் பார்த்தால் பொதுக் கழிவறை ஒண்ணு உண்டு. அதில் விளக்கே போடாமல் கம்மோடில் போய் உட்கார்ந்திருந்தார். மெல்ல மெல்ல பேசிப் பாதி தூக்கி, பாதி இழுத்துக் கொண்டு வந்து படுக்கையில் சேர்த்தேன். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து விடிந்ததும் முதலில் அந்த மருத்துவமனைக்குத் தொலைபேசி மருத்துவரைப் பார்க்க நேரம் குறித்துக் கொண்டேன். பத்தரைக்கு மேல் தான் வருவாராம்.

மனடில் கவலை/பயம். பையர், பெண், என் மைத்துனர் ஆகியோருக்குத் தகவல் கொடுத்துட்டு எதிர் வீட்டு மாமா உதவியுடன் மருத்துவமனை கிளம்பினேன்.