
இதன் பின்னரும் எதற்கும் கலங்காத ராவணன், சூரியன், சந்திரன் ஆகியோரையும் வெற்றி கொண்டான், பின்னர், இந்திரனை வெற்றி கொள்ள இந்திர லோகத்தை அடைந்தான். இந்திரன் கவலையுடனேயே மகாவிஷ்ணுவிடம் இவனை எப்படி வெல்வது எனக் கலந்து ஆலோசிக்கின்றான். மகாவிஷ்ணுவோ, நேரம் வரும்போது இவனைத் தானே முடிப்பதாய்க் கூறி விடுகின்றார். தேவர்கள் அனைவருமே ராவணனைப் பணிந்து ஒத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தப் பட்டனர். ஆனால் அவர்கள் எதிர்த்துப் போரிட்டனர். இதில் ராவணனின் பாட்டன் சுமாலி இறந்தான். இதைக்கண்டு கொதித்த மேகநாதன், யுத்த களத்தின் மத்தியில் நின்று கொண்டு தேவர்களைத் தாக்கினான். அவன் தாக்குதலுக்கு அஞ்சிய தேவர்கள் சிதறி ஓட, இந்திரன் மகன் ஜயந்தனோ கடலுக்கு அடியில் கொண்டு செல்லப் பட்டு மறைத்து வைக்கப் பட்டான். மேகநாதனைப் பின்னே தள்ளி, ராவணன், தானே இந்திரனை எதிர்க்க ஆரம்பிக்கின்றான், கும்பகர்ணன் துணையோடு.இந்திரனின் தாக்குதல் தாங்க முடியாமல் சிதறி ஓடிய ராட்சதர்களைக் கண்டு ராவணன் கோபத்தோடு இந்திரனைத் தாக்குகின்றான். இந்திரன், குபேரன், வருணன், எமன் ஆகியோரையும் அவர்களைச் சூழ்ந்து காக்கும் தேவர்களையும் கொல்ல எண்ணிய ராவணன் தன் தேரை தேவர்களின் படைக்கு உள்ளே செலுத்துகின்றான். இதன் காரணமாய் அவன் தனிமைப் படுத்தப் பட்டுத் தன் வீரர்களிடம் இருந்து பிரிந்தான். இதைக் கண்ட மேகநாதன் தன் மாயாசக்தியால் மறைந்துகொண்டு, கண்ணுக்குப் புலன் ஆகாத தனமையை அடைந்து, இந்திரனை நோக்கிப் பாய்ந்து சென்று அவனைச் சிறை எடுத்துவிட்டான்.

பின்னர் தன் தந்தையைப் பார்த்து, தான் இந்திரனைச் சிறை எடுத்து விட்டதாயும், ராட்சதர்கள் ஆகிய தங்கள் குலம் வென்று விட்டதாயும், இனி மூவுலகுக்கும் தன் தந்தையாகிய ராவணனே அரசன் எனவும் கூறித் தந்தையைத் திரும்பச் சொல்கின்றான். உடனேயே சிறை எடுத்த இந்திரனோடு அனைவரும் இலங்கை திரும்புகின்றனர். தேவர்கள் அனைவரும் பிரம்மா தலைமையில் இலங்கை சென்று ராவணனிடம் சமாதானமாய்ப் பேசுகின்றார்கள். மேகநாதனின் வீரத்தை மெச்சுகின்றார் பிரம்மா. ராவணனையும் மிஞ்சிய வீரன் எனப் போற்றுகின்றார் அவனை. இந்திரனை வென்றதால் அவன் இன்று முதல் "இந்திரஜித்" என அழைக்கப் படுவான் எனவும் கூறுகின்றார். அவனை யாராலும் வெல்ல முடியாது எனவும் சொல்லுகின்றார். உனக்கு இனிமேல் அச்சம் எதுவும் தேவை இல்லை. ஆகையால் இந்திரனை விட்டு விடு. என்று கேட்க, இந்திரஜித் பேசுகின்றான், தந்தைக்குப் பதிலாய். இந்திரனை நாங்கள் விடுவிப்பதாய் இருந்தால் நான் இறவாத வரம் வேண்டும் எனக் கேட்கின்றான். ஆனால் பிரம்மா மறுக்கின்றார். இந்த வரம் தவிர வேறு ஏதாவது கேள் எனச் சொல்கின்றார். அப்போது மேகநாதன் ஆகிய இந்திரஜித் கேட்கின்றான்:
"ஒவ்வொரு முறையும் எதிரிகளுடன் போர் நடக்கும்போது நான் செய்யும் யாகத்தால் எனக்கு ஒரு ரதம் அந்த வேள்வித் தீயில் இருந்து வரவேண்டும். அந்த ரதத்தில் அமர்ந்தே நான் போர் செய்வேன். அப்போது நான் எவராலும் வெல்லப் படாதவனாய் இருக்கவேண்டும். யாகம் செய்யாமல் நான் போர் செய்தால் மட்டுமே மரணம் சம்பவிக்க வேண்டும். மற்றவர்கள் போல் நான் யாகங்கள் செய்து இந்த வரம் கேட்கவில்லை. என் வீரத்தின் மேல் நம்பிக்கை வைத்தே கேட்கின்றேன்." என்று கேட்க, பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, இந்திரஜித் கோரிய வரத்தை அளிக்கின்றார். பின்னர் விடுவிக்கப் பட்ட இந்திரனை நோக்கிப் பிரம்மா, "அகல்யையை நீ விரும்பியதால், உனக்கு கெளதமர் அளித்த சாபத்தின் விளைவை நீ இதுவரை அனுபவித்தாய்!" என்று கூறிவிட்டுப் பாவத்திற்குப் பிராயச் சித்தம் செய்யச் சொல்ல, அவனும் மகாவிஷ்ணுவைத் துதித்து யாகங்கள் செய்கின்றான்.
பின்னர் கார்த்தவீர்யாஜுனனை எதிர்க்கப் போக அவன் ராவணனைச் சிறைப் பிடிக்கின்றான். பின்னர் புலஸ்திய மகரிஷியின் வேண்டுகோளின்படி கார்த்தவீர்யாஜுனன் ராவணனின் நட்பை ஏற்று அவனை விடுவிக்கின்றான். பின்னர் வாலியை எதிர்க்க, அவனும் ராவணனைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு ஆகாய மார்க்கமாய்ப் பறக்க ராவணனும், வாலியின் நட்பைக் கோரிப் பெற்று அவனுடன் நண்பனாய் இருந்தான். இத்தகைய ராவணனையும், இந்திரஜித்தையும் தான் நீ வென்றாய், ராமா!" என்று அகத்தியர் கூறி முடிக்கின்றார். இனி நாம் திரும்ப ஆரண்ய காண்டத்திற்குச் சென்று ராவணன் சூர்ப்பநகையின் தூண்டுதலால் ரதத்தில் ஏறி மாரீசனைக் காணப் போனதைப் பற்றிக் காண்போம். சூர்ப்பநகையால் தூண்டப் பட்ட ராவணன் தன் ரதத்தில் ஏறி, மாரீசன் தவம் செய்து கொண்டிருந்த இடம் நோக்கிச் சென்று அவனைப் பார்த்துத் தன் துன்பத்தை எடுத்துச் சொல்கின்றான். கர, தூஷணர்கள் ராமனால் கொல்லப் பட்டதையும், சூர்ப்பநகை அங்கபங்கம் செய்யப் பட்டு வந்ததையும் கூறுகின்றான். ஆகவே ராமனின் மனைவியைக் கடத்தப் போவதாயும் கூறி விட்டுப் பின்னர், மாரீசன் உதவியை நாடுகின்றான். ஆனால் மாரீசனோ மறுக்கின்றான் திட்டவட்டமாய். "ராவணா, ராமன் பலம் உனக்குத் தெரியாது. அவன் யாருக்கும் தீமையும் செய்யவில்லை, அகம்பாவியோ, கர்வியோ அல்ல. உன்னுடைய இந்தத் தீய எண்ணம் ராட்சத குலத்தையே அழித்து விடும். ஒரு மன்னனுக்கு இந்த மாதிரிக் கெட்ட எண்ணம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவன் அமைச்சர்கள் அவனைத் திருத்த வேண்டும். ராமனை எதிர்த்துக் கொண்டு, மரணத்தைச் சம்பாதித்துக் கொள்ளாதே, இந்த ராமன் சிறுவனாய் இருந்தபோதே, விசுவாமித்திரரால் அழைத்து வரப் பட்டான். அவன் அப்போது விட்ட ஒரு அம்பு என்னை இத்தனை தூரம் கடலில் தள்ளிக் கொண்டு சேர்த்து விட்டது. அவன் பலம் அறியாமல் பேசாதே! இந்த துர் எண்ணம் வேண்டாம்! இலங்கைக்குத் திரும்பு!" என்று சொல்கின்றான்.
திரும்பும் திசை எல்லாம் ராமன் தோன்றுவதாயும் கூறி மாரீசன் நடுங்குகின்றான். ஆனால் ராவணன் கேட்காமல் தான் சீதையை அபகரிக்கப் போவதாயும், அதற்கு வேண்டிய உதவி செய்வதே மாரீசன் வேலை என்றும் வேறு ஒன்றும் பேசத் தேவை இல்லை என்றும் கூறிவிட்டு, தான் சீதையை அபகரிக்க வசதியாக ராமனையும், லட்சுமணனையும் அப்புறப் படுத்த மாரீசன் ஒரு பொன்மானாக மாறி சீதையின் முன் தோன்றுமாறும் சீதை அதைப் பார்த்து ஆசைப் பட்டு ராமனை அந்த மானைப் பிடித்து வர அனுப்புவாள் என்றும், அப்போது மாரீசன் ராமன் குரலில், "ஓ, சீதா, ஓ, லட்சுமணா!" எனக் கதறினால் அதைக் கேட்டு பயந்துகொண்டு சீதை உடனே லட்சுமணனையும் அனுப்புவாள் எனவும், அப்போது தான் போய் அவளை அபகரித்து வந்துவிடுவதாயும் இதற்குத் தன் ராஜ்ஜியத்தில் பாதியைத் தருவதாயும் ராவணன் கூறுகின்றான். மாரீசனோ ராவணனைப் பார்த்துத் தான் ராமன் கையால் இறப்பது உறுதி எனவும், அதற்குத் தான் அஞ்ச வில்லை என்றும், என்றாலும் ராவணன் கதியை நினைத்தே கலங்குவதாயும் சொல்லிவிட்டு ராவணன் பேச்சுக்கு வேறு வழி இல்லாமல் இணங்குகின்றான்.