பின்னூட்டங்களுக்குப் பதில் அளிக்க முடியாமையாலோ என்னமோ யாரும் பின்னூட்டம் கொடுப்பதில்லை, ராமாயணத் தொடருக்கு. என்றாலும் ஒரு சிலர் படித்து வருகிறார்கள் என்பதும் தெரியும், அப்படியே யாரும் படிக்காவிட்டாலும், எனக்குள்ளேயே ஒரு அலசல் என்ற அளவிலாவது இருக்கும். எனவே தொடரை முடித்துவிட்டுத் தான் மறுவேலை வச்சுக்கணும். சந்தேகங்களுக்கு மட்டுமே விரிவான விளக்கம் கொடுக்கிறதாகவும் ஒரு எண்ணம் இருக்கு. ஏனெனில் ஏற்கெனவேயே ஏற்றுக் கொண்ட சில கடமைகளை முடிக்கவும் நேரம் வேண்டும். பின்னூட்டங்களுக்குப் பதில் இல்லைனு யாரும் தப்பாய் நினைக்கவேண்டாம். இப்போ படிக்கிற சிலருக்குச் சந்தேகங்கள் வருகிறது. வால்மீகி காலத்திலேயே ராமாயணம் எழுதப் பட்டுவிட்டதா? அல்லது வால்மீகி சொல்லி, வேறு யாரேனும் எழுதினார்களா அல்லது வெறும் பாடலாகவே கற்பிக்கப் பட்டதா என! அயோத்யா காண்டம் ஆரம்பிக்கும் வேளையில் என்ன இதுனு நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான ஒருவர் இந்தக் கேள்வியை இன்று எழுப்பி உள்ளார். வேறு சிலருக்கும் இருக்கலாம் என்பதாலேயே இந்த விளக்கம் கொடுத்துவிட்டுப் பின்னர் ஆரம்பிக்கிறேன்.
ராமரின் சரித்திரம் இந்த ராமாயணம் இயற்றிய வால்மீகியால் மட்டுமில்லாமல் பலராலும், அந்த ராமாயணப் பாத்திரங்களாலேயே பல சந்தர்ப்பங்களிலும் சொல்லப் படுகிறது. வால்மீகியும் ஒரு பாத்திரம் தான், ஆனால் முதலில் அவரும் அதை அறியவில்லை என்றே சொல்லலாம். சீதை கானகத்துக்கு வரும் முன்னரே அவர் அவள் அங்கே வரப் போவதை அறிந்திருந்தார். ராமரின் வாழ்க்கைச் சரித்திரம் அவ்வளவில் அவருக்குத் தெரிய வந்திருந்தது. சீதை வால்மீகி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்து, ராமாயணமும் வால்மீகியால் இயற்றப் பட்டுப் பின்னர் அதை வால்மீகி ராமரின் பிள்ளைகளுக்கே சொல்லியும் கொடுக்கின்றார் வாய்மொழியாகவே. எழுதப் படவில்லை. முதன் முதலில் ராமாயணம் அரங்கேற்றம் செய்தவர்கள் லவ, குசர்கள் தான். வாய்மொழியாகவே பாடப் பட்டது. "குசிலவா" என்றால் வடமொழியில் பாட்டுப் பாடிக்கொண்டே ஊர் ஊராய்ப் போகின்றவர்கள் என அர்த்தம் வரும். நம் தமிழ் நாட்டில் உள்ள பாணன், பாடினிகளைப் போல் என்றும் வைத்துக் கொள்ளலாம். வால்மீகியின் காலம் கி.மு. 750 முதல் 500 வரையிலும் இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அதை வைத்துப் பார்க்கும்போது ராமாயணம் சுவடிகளில் எழுதப் பட்ட காலம் கிட்டத் தட்ட 11-ம் நூற்றாண்டாக இருக்கலாம். பரோடாவின் எம்.எஸ். பல்கலைக் கழகத்தில் கிடைக்கும் ராமாயண ஓலைச் சுவடிகள் தான் இந்தியாவிலேயே மிக மிகப் பழமையான சுவடிகள் எனவும் சொல்லப் படுகிறது.
வேதங்களை "எழுதாக்கிளவி" என்று சொல்லுவதுண்டு. வேதங்கள் எவ்வாறு வாய்மொழியாகக் கற்பிக்கப் பட்டதோ அவ்வாறே, ராமாயணமும் வாய்மொழியாகவே சொல்லப் பட்டு வந்தது. ஏனெனில் வடமொழியின் உச்சரிப்புக்குச் சப்தம் தேவை. சப்தம் சரியாக இருக்க வேண்டும், உச்சரிப்பு முறையாக இருக்கவேண்டும், மாறுபட்ட ஒரு உச்சரிப்புக் கூட அர்த்தத்தை மாற்றிவிடும், ஆகவே முறையான உச்சரிப்புக்காகவே இவை முதலில் வாய்மொழியாகச் சொல்லப் பட்டுப் பின்னர் வந்த சம்ஸ்கிருத பண்டிதர்களால் எழுதப் பட்டது என ஆசிரியை கூறுகின்றார். அதுவும் ராமாயணம் எழுதப் பட்டு, அதாவது வால்மீகியால் சொல்லப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே எழுதப் பட்டது. கிட்டத் தட்ட கி.பி 8-ம் நூற்றாண்டில் இருந்து 12-ம் நூற்றாண்டுகளுக்குள் எழுதப் பட்டிருக்கவேண்டும் என்பதாய்ச் சொல்கின்றார். அதனால் கூடச் சில வார்த்தைகள் அந்தக் கால நாகரீகத்துக்கும், சொல் வழக்குக்கும் ஏற்ப மாற்றப் பட்டிருக்கலாம் என்பதும் அவர் கூற்று. என்றாலும் பலரும் சொல்லுவதைப் போல் உத்தர காண்டம் வால்மீகியால் பாடப் படவில்லை என்பதை ஆசிரியை ஏற்கவில்லை. ஏனெனில் முதன் முதல் ராமாயணப் பாடல்கள் ஆரம்பிக்கும்போதே உத்தரகாண்டத்தில் ஆரம்பிப்பதோடு அல்லாமல், லவ,குசர்கள் தங்கள் தாயான சீதை ராமரால் மூன்றாம் முறையாகவும் நிராகரிக்கப் பட்டுப் பின்னர் பூமியில் மறைந்து போவதையும், பார்த்துக் கொண்டே, அதைப் பற்றியும் பாடுகின்றனர், மேலும் லட்சுமணனை ராமர் பிரிதல், ராமரின் மறைவு என அதுவரையிலும் பாடி முடிக்கின்றனர்.
முழுக்க முழுக்கப் பின்னோக்கியே சொல்லப் பட்ட இந்தக் காவியமானது அதன் போக்கில் நிகழ்காலம், இறந்த காலம் ஆவதையும், எதிர்காலத்தைப் பற்றி நிகழ்காலத்தில் சொல்லப் படுவதையும், பார்க்கும்போது காலம் பற்றிய குழப்பம் நேரிடும் அனைவருக்குமே. அதனாலும் விளையும் சந்தேகமே இது. ஆனால் ராமாயணக் கதா பாத்திரங்களில் சிலருக்குப் பின்னால் நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் இருந்ததை உணர்ந்து கொண்டால் குழப்பம் தீரும். தங்கள் தந்தை எதிரே பாடுகின்றோம் என்ற உணர்ச்சியே இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் அது பற்றிய எந்த விபரமும் தெரியாமலேயே குசனும், லவனும் பாடுகின்றனர். அதுவும் எப்படி? சீதையைப் பிரிந்த ராமரின் சோகத்தைப் பிழிந்து எடுக்கின்றனர், தங்கள் இனிமையான குரல்வளத்தினால், பின்னர் தங்கத்தால் ஆன சீதையை வைத்துக் கொண்டு ராமர் அசுவமேத யாகம் செய்யப் போவதையும் பாடுகின்றனர். இங்கே நிகழ்காலம் ஆன குச, லவர்கள், இறந்த காலம் ஆகப் போகின்ற ராமனின் உணர்வுகளோடு மோதுகின்றனர். ராமாயணம் பாட ஆரம்பித்த வால்மீகிக்கு எவ்வாறு நடந்ததும், நடக்கப் போவதும், நடந்து கொண்டிருப்பதும் தெரிய வருகிறதோ அவ்வாறே, நாமும் அனைத்தும் தெரிந்து கொண்டே இந்தக் கதையைக் கேட்கின்றோம். இன்னும் சொல்லப் போனால் ராமாயண காலத்துக்கே போய் ராமருடன் கதை கேட்கும் அயோத்தி மாந்தர்களில் ஒருவராகவே உணருகின்றோம். அதுவும் எப்படி, இன்னும் நமக்குத் திறக்கப்படாத, சரிவரத் தெரியாத ராமரின் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுடனேயே. வால்மீகியின் கவிதைத் திறனுக்கு வெற்றி மட்டுமில்லாமல், முடிவு தெரிந்த ஒரு கதையைத் திரும்பத் திரும்பக் கேட்கும் நாமும் உணருகின்றோம், இப்படி ஒரு காவிய நாயகன் நிஜத்தில் நம்மிடையே இருந்தான் என்பதை. அவன் இல்லை எனவும், இந்தக் கதை ஒரு கற்பனை என்பதும் நாம் வால்மீகி என்னும் மகாகவிக்குச் செய்யும் ஒரு துரோகம் என மொழி பெயர்த்த ஆசிரியை ஆர்ஷியா சத்தாரின் கூற்று. இனி அயோத்தியா காண்டத்துக்குப் போகலாமா?
பின்னூட்டம் இடுவதில்லை, என்ன எழுதுவது?னு தெரியலை. அதான். அனுமார் மாதிரி சைலன்டா படிச்சுட்டு தான் வரோம். :))
ReplyDeleteநீங்க ஊருல இல்லாத போதும், பதிவுகள் பப்ளிஷ் ஆன மந்திரம் என்ன? :))
எல்லாம் மதுரையில் கோவில் கொண்டிருக்கும் மீனாட்சி செயல். இல்லையா? :p
ReplyDeleteதுக்ளக் சோ - எழுதிய மகாபாரதம் - ஒலிப்பதிவு - பாட்காஸ்ட்
உங்களது ராமாயணம் தொடருக்கு எனது நன்றிகள்.
TamilNenjam