மன்னன் தசரதன், தன் மகனாகிய ராமனுக்கு முடிசூட்டும் எண்ணத்தை நகரெங்கும் பறையறிவிக்கச் செய்ததாய்க் கம்பர் கூறுகின்றார். வள்ளுவன் பறையறிவித்ததைக் கேட்ட நகர மாந்தர் அனைவரும்:
"ஆர்த்தனர் களித்தனர் ஆடிப் பாடினர்
வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம்மயிர்
போர்த்தனர் மன்னனைப்புகழ்ந்து வாழ்த்தினர்
தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க்கு எல்லாம்" என்று இவ்விதம் நகரமாந்தர் ஆடிப் பாடியதோடு மட்டுமில்லாமல், மன்னன் தசரதனையும் வாழ்த்திப் பாடிய வண்ணம் ஒருவருக்கு ஒருவர் பரிசில்களையும் அளித்து மகிழ்ந்திருந்த வேளையில், மந்தரை ஆகிய கூனி வெளியே வந்து அரண்மனைப் பணிப்பெண்ணினால் விஷயம் அறிந்து கொண்டு மிக்க கோபம் அடைந்ததாய் வால்மீகி தெரிவிக்கின்றார். ஆனால் கம்பரோ, கூனிக்கும், ஸ்ரீராமனுக்கும் ஏற்கெனவேயே முன்னால் இருந்த பகையை முன்னிறுத்திக்கூனி இப்போது பழி தீர்க்க முற்பட்டதாய்ச் சொல்கின்றார்.
"தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில் மேல்
"தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில் மேல்
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்
பண்டைநாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்தே உள்ளுவாள்" என ஸ்ரீராமனின் குழந்தைப் பருவத்தில் ராமனின் கைவில்லில் இருந்து வெளிப்பட்ட களிமண் உருண்டையால் தான் அடி வாங்கிக் கொண்ட பழைய சம்பவத்தை மனதில் இறுத்தி இன்னும் அதிகக் கோபத்துடனேயே கைகேயியின் அந்தப்புரத்தை வந்தடைந்தாள். பஞ்சணையில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கைகேயியை எழுப்பி ஸ்ரீராமனின் பட்டாபிஷேக வைபவம் பற்றிக் கூனி சொல்லவும் உள்ளம் உண்மையிலே மகிழ்ச்சியில் ஆழ, கைகேயி கூனிக்கு ஆபரணம் பரிசளித்ததாய் வால்மீகியும், கம்பரும் கூறுகின்றனர். ராமனையும் தன் சொந்தப் பிள்ளை போலவே கைகேயி எண்ணிக் கொண்டிருந்ததால் அவளுக்குக் கிஞ்சித்தும் வருத்தமே எழவில்லை. சந்தோஷமே அடைந்தாள்.
ஆனால் வெகுண்ட கூனியோ அம்மாலையைத் தூக்கி எறிந்துவிட்டுக் கைகேயிக்குப் போதிக்க ஆரம்பிக்கின்றாள். அவள் இவ்வாறு ராமனுக்கு விரோதம் காட்டுவதில் காரணம் ஏதும் இருப்பதாயும், அவள் சுபாவமாகவே தீமை செய்யும் இயல்பினாள் என்றும் வால்மீகி கூறும் வேளையில், கம்பரோ பழைய பகைமையை நிலை நிறுத்துகின்றார். ராமன் அரசாள ஆரம்பித்தால் அதனால் கெளசலையின் கை ஓங்கும், கைகேயியின் நிலை தாழ்ந்து விடும் எனவும், அவள் மகன் பரதன் ஒரு வேலைக்காரனைப் போல் நடத்தப் படுவான் எனவும் சொல்கின்றாள். ஆனால் முதலில் அவற்றை மறுத்த கைகேயி, கூனி திரும்பத் திரும்பக் கத்தவும் அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறத் தொடங்குகிறது. அதைப் புரிந்து கொண்ட கூனியும், உடனேயே,"கைகேயி, உன் மகன் பரதனை உடனே வரவழை! மன்னன் வந்தால் அவனிடம் பேசாதே! உன் மகன் பரதனுக்குத் தான் பட்டம் என்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொள். உன்னிடம் மிக்க பிரியம் வைத்திருக்கும் மன்னன் கட்டாயம் ஒப்புக் கொள்வான். அதே சமயம் ராமனைப் பக்கத்தில் இருக்கவும் விடாதே! யானையைச் சிங்கம் எவ்வாறு அழிக்க நினைக்குமோ, அவ்வாறே உன் மகனை ராமன் அழித்துவிடுவான். நீ முன்னொரு காலத்தில் உனக்கும், மன்னனுக்கும் நிகழ்ந்த அந்தரங்கச் சம்பவம் ஒன்று பற்றி என்னிடம் கூறி இருக்கின்றாய் அல்லவா? உன் நினைவில் இருக்கின்றதா?" என்று கேட்கவும் கைகேயி அவளைப் பார்த்து,"நீயே கூறு!" எனப் பணிக்கின்றாள். கம்பர் இதைத் "தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர்
மாயையும் அவர் பெற்ற நல்வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத்தாலும்"
"அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்
இரக்கம் இன்மை அன்றோ இன்று இவ் உலகங்கள் இராமன்
பரக்கும் தொல் புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே!" கைகேயி செய்த இந்தக் கொடுஞ்செயல் கூட ஸ்ரீராமனுக்கு நன்மையாகவும், ராமனது புகழை இன்றளவும் உலகெங்கும் பேசவும் காரணமாக அமைந்தது எனவும் சொல்கின்றார் கம்பர்.
இந்நிலையில் மந்தரை அவளிடம் முன்னொரு காலம் தசரதன் தேவாசுர யுத்தத்தின் போது தேவர்களுக்கு உதவி செய்யச் சென்ற வேளையில் கைகேயியும் உடன் சென்றதை நினைவு படுத்துகின்றாள். அப்போது மன்னன் போரில் ஒரு கட்டத்தில் மூர்ச்சை அடைய, உடன் சென்ற கைகேயில் மிக்கத் துணிவுடன் மன்னனைப் போர்க்களத்தில் இருந்து அப்புறப்படுத்திக் காப்பாற்றி, மூர்ச்சை தெளிவிக்கின்றாள். மூர்ச்சை தெளிந்த மன்னன் மனம் மகிழ்ந்து கைகேயியிடம் இருவரங்கள் தருவதாயும் என்ன வேண்டுமோ கேள் அளிக்கிறேன் எனக் கூறக் கைகேயி அச்சமயம் எதுவும் தேவை இல்லை எனவும் தேவைப் படும்போது கேட்டு வாங்கிக் கொள்ளுவதாயும் சொல்கின்றாள். இதை நினைவு படுத்திய மந்தரை கைகேயியிடம் இந்த இரு வரங்களையும், பயன் படுத்திக் கொள்ளுமாறு கூறுகின்றாள். ராமனுக்குப் பட்டாபிஷேகத்துக்குப் பதிலாகப் பதினான்கு வருடம் வனவாசம், பரதனுக்குப் பட்டாபிஷேகம் என்ற இரு வரங்களைக் கேட்கச் சொல்கின்றாள். பரதனுக்குப் பட்டம் என்றால், ராமன் ஏன் காட்டுக்குப் போகவேண்டும் என்றதற்கு அவள் நாட்டு மக்கள் அனைவரும் ராமனிடம் மிக்க பிரியம் உள்ளவர்கள், அவன் இங்கே இருக்கும் வரையில் பரதனுக்குப் பட்டம் கட்ட முடியாது. மேலும் ராமன் பதினான்கு வருடம் காட்டில் இருந்து திரும்புவதற்குள், பரதன் ஆட்சியில் நிலைபெற்றுவிடுவான், பின்னர் உன் மகனே அரசன், ராமன் அவனுக்குக் கீழ் அடங்கி நிற்க வேண்டியவனே எனக் கூனி சொல்கின்றாள். கைகேயியின் மனம் மகிழ்வதைக் கம்பர் இவ்வாறு சொல்கின்றார்:
"உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உறத் தழுவி
நிரைத்த மாமணி ஆரமும் நிதியமும் நீட்டி
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய்
தரைக்கு நாயகன் தாய் இனி நீ எனத் தணியா" என் ஒரே மகனுக்குக் கடல் சூழ்ந்த இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தைப் பெற்றுத் தந்த நீயே அவன் தாய் என்று சொல்கின்றாளாம் கைகேயி. பின்னர் கூனியின் யோசனைப் படி அவள் கிழிந்த ஆடையை உடுத்திக் கொண்டு, தலையை விரித்துப் போட்டுக் கொண்டு, தன் ஆபரணங்களை எல்லாம் தரையில் வாரி வீசிவிட்டுத் தரையில் படுக்கின்றாள் மிக்க கோபத்தோடு பெருமூச்சு விட்டுக் கொண்டு. மன்னன் தசரதன் இது எதுவும் அறியாதவனாய், முதலில் கெளசலையின் மாளிகைக்குச் சென்று விஷயத்தைத் தெரிவித்து விட்டுப் பின்னர் சுமித்திரைக்கும் சொல்லிவிட்டுக் கடைசியாக மிகுந்த ஆவலுடனும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், கைகேயியின் மாளிகையை அடைகின்றான். அவனுக்கு வாயிலிலேயே அரசி மிக்க கோபத்துடன் இருக்கும் நிலைமை தெரிவிக்கப் படுகின்றது. மனம் பதட்டம் அடைந்த தசரதன் அந்தப் புரத்துக்கு வருகிறான்.
************************************************************************************
ராமன் ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலும் அவன் இளவரசன். என்றாலும் அவனுடைய நேர்மையும், உறுதியும், வீரமும் எவ்வாறு போற்றப் படுகின்றதோ அதற்குச் சற்றும் குறைவில்லாத வீரமும், உறுதியும், நேர்மையும் படைத்தவனாகவே தசரதச் சக்கரவர்த்தியும் இருந்தான் எனினும் பெண்ணாசை அவனை ஆட்டிப் படைக்கின்றது. பொதுவாகவே அரச குலத்தினர் முதலில் திருமணம் செய்து கொள்ளும் பட்ட மகிஷிக்குக் குழந்தை பிறக்கவில்லை எனில் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது இயல்பே. என்றாலும் தசரதன் மூன்று முறை திருமணம் செய்து கொள்வதோடு அல்லாமல் இளைய மனைவியான கைகேயியிடம் மிக்க அன்பு காட்டுகின்றான். தன் எல்லைகளை உணர்ந்தவனாகவும், தர்மத்தை மீறாதவனாகவும், ஒரு உதாரண புருஷனாகவும், ராமன் விளங்க, அவன் தகப்பனோ என்றால் ஆசை, கோபம், காமம் அதனால் விளையும் துக்கம் இவற்றால் பீடிக்கப் பட்டுத் தன் உயிரையும் இழக்கும் நிலைக்கு வந்து விடுகின்றான். மகன் ஆன ராமனோ இவை அனைத்தையும் வென்று தனக்கு நிகரில்லை எனத் தலை நிமிர்ந்து நிற்கின்றான். ஆனால் அவனும் சாதாரண மனிதனாய்ச் செய்யும் தவறுகள்? இருக்கின்றன. இரண்டு மாபெரும் தவறுகள். ஏன் செய்தான்? அது நியாயமா? தர்மம் என்பது இது தானா?
//ன் நினைவில் இருக்கின்றதா?" என்று கேட்கவும் கைகேயி அவளைப் பார்த்து,"நீயே கூறு!" எனப் பணிக்கின்றாள்//
ReplyDeleteஒருவேளை கைகேயிக்கு ”லாங்”டேர்ம் மெம்மரிலாஸ் இருந்திருக்குமோ?
கீதா அக்கா திட்டப்டாது சீரியஸ் பதிவுல கும்மி அடிக்கறதுக்கு. நான் சின்னப்புள்ள தானே:P
ReplyDelete@கீதா மேடம் முழுவது படித்துவிட்டு ராம நவமியன்று மொத்த பின்னுட்டம் போடலாம் என்று இருக்கிறேன்
ReplyDeleteமந்தரையின் முதுகில் உண்டை வில் தெறித்ததை ஆழ்வார்களும் நிறைய பேசுகிறார்கள் அம்மா. குறிப்பாக நம்மாழ்வார் பேசுவதைப் படித்திருக்கிறேன். ஆழ்வார்கள் மந்தரையைக் கூனி என்றும் சொல்லப் படித்திருக்கிறேன். ஆனால் வால்மீகியோ கம்பரோ மந்தரையைக் கூனி என்று சொல்கிறார்களா?
ReplyDelete