
"பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்றாள்."
கணவன் பிரிவினை விடக் காடு சுடுமோ எனக் கேட்ட சீதை உடனேயே உள்ளே சென்று மரவுரியை அணிந்து கொண்டு ராமனுக்கு முன்பே தயார் ஆகிவிட்டதாய்க் கம்பர் கூறும் இந்தக் காட்சி வால்மீகியில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. வால்மீகி சொல்வதைப் பார்ப்போம். கணவனின் துன்பத்தை அவனுடன் பகிர்ந்து கொள்வதே தனக்கும் இன்பம் எனச் சொன்ன சீதையைப் பார்த்து இராமன், உன் பிறந்த குலத்துக்கும், புகுந்த குலத்துக்கும் ஏற்ற முடிவையே எடுத்திருப்பதாய் அவளிடம் சொல்லிவிட்டு, அவள் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள், மற்ற செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டுத் தயாராக இருக்கும்படி கூறுகின்றார். இருவர் பேச்சையும் கேட்டு விம்மி அழுத லட்சுமணனைச் சமாதானம் செய்துவிட்டு அவனைத் தாய்மார்களைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளும்படிச் சொல்ல, அவனோ மறுக்கின்றான். பரதன் நன்கு பார்த்துக் கொள்வான் என்றும் அப்படி இல்லை எனில் தான் அவனை அழித்து விடுவேன் என்றும் சொல்லும் லட்சுமணன், தான் ராமனுடன் காட்டுக்கு வந்து, அவனுக்கு முன்னால் சென்று, அவனும் சீதையும் செல்லும் காட்டுப் பாதையைச் சீரமைத்துத் தருவதாயும், அவர்களுக்குக் காவல் இருப்பதாயும், உண்ணத் தகுந்த பொருட்களைத் தேடித் தருவதாயும் ஆகையால் தானும் கட்டாயம் வரப் போவதாயும் சொல்ல, ராமன் மனம் நெகிழ்ந்து இசைகின்றார். அவனிடம் ராமன் ஜனகரிடம் வருணன் ஒப்படைத்த இரு தெய்வீக விற்கள், மற்றும் துளைக்க முடியாத இரு கேடயங்கள், தீர்ந்து போகாத அம்புகள் தாங்கும் இரு அம்புராத் தூணிகள், ஒளி வீசும் இரு கத்திகள் ஆகியவற்றைக் குருவான வசிஷ்டரிடம் இருந்து பெற்று வருமாறு கூறுகின்றார். பின்னர் ராமரும் தன் செல்வங்களை எல்லாம் தானம் செய்யத் தொடங்கினார். பின்னர் ராமர், தன்னுடன் லட்சுமணனையும், சீதையையும் அழைத்துக் கொண்டு மன்னன் தசரதனிடம் விடைபெறச் சென்றார்.
நாட்டு மக்களுக்குத் துயரம் பொங்கியது. தெருவில் மக்கள் கூட்டமாய்க் கூடி நின்று கைகேயியைத் தூஷிக்கின்றனர். அனைவரும் ராமனையும், லட்சுமணனையும் நாமும் பின் தொடர்ந்து காட்டுக்கே சென்றோமானால் பிழைத்தோம். இல்லை எனில் கொடுங்கோல் அரசியான கைகேயியின் ஆட்சியில் நம்மால் வாழ முடியாது. காட்டில் நாம் ஸ்ரீராமனுடன் சந்தோஷமாய் வாழ்வோம். என்று பேசிக் கொள்கின்றனர். கைகேயியின் மாளிகைக்குச் சென்ற ராமர் சுமந்திரரிடம் தசரத மன்னனைத் தான் காண வந்திருப்பதாய்த் தெரிவிக்குமாறு சொல்ல, மன்னனால் அழைக்கப் பட்டு மூவரும் செல்கின்றனர். ராமனைக் கண்டதும் ஓடிச் சென்று தன்னிரு கைகளால் அணைக்க முயன்ற மன்னன் துக்கம் தாளாமல் கீழே விழ, சுமந்திரரால் எழுப்பி அமர்த்தப் பட்டான். விடை பெறும் வகையில் பேசிய ராமனைக் கண்ட மன்னன், "ராமா! நீ என்னைச் சிறை எடு! இந்த ராஜ்யம் உன்னுடையது! மன்னனாக முடி சூட்டிக் கொள்!" என்று கதறக் கைகேயியோ மீண்டும் மீண்டும் தன் கோரிக்கையை வற்புறுத்துகின்றாள். சுமந்திரர் கைகேயியை மனமாரத் திட்ட ஆரம்பித்தார். கேகய மன்னன் ஆன கைகேயியின் தந்தை பிராணிகள் பேசுவதைப் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர் என்றும், ஒருமுறை எறும்பு பேசுவதைக் கேட்டு அவர் சிரிக்கவும், கைகேயியின் தாயானவள், என்ன விஷயம் என்று கேட்க, அது ரகசியம் எனவும், அதை வெளியே சொன்னால் என் உயிர் போய்விடும் என்றும் கேகய மன்னன் சொல்ல, உன் உயிர் போனாலும் பரவாயில்லை, எனக்கு அந்த ரகசியம் சொல்லவேண்டும் எனக் கைகேயியின் தாய் வற்புறுத்தியதாகவும், கேகய மன்னனோ, வரம் தந்த குருவை என்ன செய்யலாம் எனக் கேட்க, உன் மனைவி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும், உன் வாக்கைக் காப்பாற்றுவாய்! ரகசியத்தை வெளியே சொல்லாதே! எனக் கூறியதும், கேகய மன்னன் தன் மனைவியைக் கைவிட்டதாயும், அந்தத் தாயின் குணமே கைகேயியிடம் இருப்பதாயும் சொல்லிக் கடுமையான வார்த்தைகளால் சாடுகின்றார். எனினும் கைகேயி மனம் மாறவே இல்லை.
ராமன் காட்டில் வாழச் சகல வசதிகளும் செய்து தரவேண்டும் எனத் தசரதர் கூறக் கோபம் கொண்ட கைகேயி, செல்வங்கள் இல்லாத ராஜ்யம் என் மகனுக்கு எதற்கு என்று கொடுமையாகக் கூற, சித்தார்த்தர் என்னும் மூத்த அமைச்சரும் கைகேயியைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றார்.அவர்களை சமாதானப் படுத்திய ராமர் மண்வெட்டி, கூடை, மரவுரி ஆகியவை இருந்தால் போதுமெனக் கூறவும் உடனேயே கைகேயி சற்றும் தாமதிக்காமல் சென்று அனைத்தையும் தயாராகக் கொண்டுவர, ராமனும், லட்சுமணனும் மரவுரியை அணிந்து கொள்ளப் பழக்கமில்லாத சீதை தடுமாற ராமர் தாமே அவளுக்கு அணிவிக்கின்றார். அந்தக் காட்சியைப் பார்த்து தசரதன் முதலான அனைவரும் கதறி அழ, குலகுருவான வசிஷ்டர் கோபம் மிகுந்தவராய்க் கைகேயியிடம், " ஏ, கெடுமதியால் நிறைந்த கைகேயியே! சீதை தான் நாட்டை ஆளப் போகின்றாள். கணவன் வெளிநாடோ, அல்லது போர் முதலான முக்கிய காரியங்களில் ஈடுபட்டிருந்தாலோ பட்ட மகிஷி பொறுப்பைச் சுமப்பாள். அவ்வாறு சீதை நாட்டை ஆள்வாள். அவள் காட்டுக்குச் செல்ல மாட்டாள். நீ பரதனையோ, சத்ருக்கனனையோ அறியவில்லை. இவர்கள் காட்டுக்குச் சென்றதை அறிந்தால் அவர்களும் அங்கேயே சென்றுவிடுவார்கள். இந்த அயோத்தி மாநகரே சென்று விடும். நீ ராமனைத் தானே காட்டுக்குப் போகச் சொன்னாய், சீதையைச் சொல்லவில்லையே?" என்று பலவாறாக எடுத்துச் சொல்லியும் வாய் திறவாமல் மெளனம் சாதிக்கின்றாள் கைகேயி. ராமரோ சற்றும் கலங்காமல் தன் தகப்பன் ஆன மன்னன் தசரதனிடம் தன் பிரிவால் மனம் நொந்து போயிருக்கும் தன் தாய் கோசலையைக் கைவிடாமல் பார்த்துக் கொள்ளும்படி வேண்ட, மன்னன் தசரதன் பொக்கிஷத்தில் இருந்து விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை எடுத்து வந்து சீதைக்கு அளிக்கும்படி சுமந்திரரிடம் கட்டளை இட, அவ்வாறே சுமந்திரரும் அளிக்கின்றார். பின்னர், பெரியோர்கள் அனைவரும் தனக்குச் சொன்ன புத்திமதிகளைக் கேட்டுக் கொண்ட சீதை தான் அவ்வாறே நடந்து கொள்வதாய் உறுதி அளித்ததும் சுமந்திரர், பதினான்கு வருடம் இந்த நிமிடத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. கிளம்பலாம் என உத்தரவிட, மன்னன் ஆணையின் பேரில் தயாராக வைக்கப் பட்டிருந்த ரதம் அங்கே வர, சுமந்திரம் தேரோட்டியின் ஸ்தானத்தில் அமர்ந்தார். ராமன், சீதையுடனும், லட்சுமணனுடனும் தேரில் ஏறி அமர, அயோத்தியின் மக்களின் கூக்குரல்களுக்கு இடையில் தேர் கிளம்பியது. மக்கள் வழியில் தேரை நிறுத்தி ராமனைப் பார்த்துப் புலம்புகின்றார்கள். ஒரு பெருங்கூட்டம் தேரைப் பின் தொடர்ந்தது.
சுமந்திரர் கைகேயியைக் கடிந்ததாய்க் கம்பர் சொல்லவில்லை எனினும் வசிஷ்டர் கடிந்து கொண்டதாய் அவரும் சொல்கின்றார். ஆனால் சற்று முன்பின்னாக வருகின்றது இது. தாயிடம் விடைபெற்று ராமன் சென்றதுமேயே கோசலை கைகேயியின் மாளிகையை அடைந்ததாயும் அவள் அழுகுரல் கேட்டு அங்கே வந்த வசிஷ்டர் விஷயங்களைத் தெரிந்து கொண்டு கைகேயியை இவ்வாறு கடிந்து கொண்டதாயும் கம்பர் கூறுகின்றார். அதன் பின்னர் பல பாடல்களுக்குப் பின்னரே ராமர், சீதை வனவாசம் புகுதல் நடைபெறுகின்றது. கம்பர் கூறுவது:
"கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும்
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும்
ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல்
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான்."
கணவன் நிலையை எண்ணாமலும், உலகமக்கள் சொல்லும் பழிச்சொல்லை எண்ணாமலும், பிறர் சொல்லும் நல்லுரையைக் கேட்காமலும் இருக்கும் கைகேயியே உனக்கு இனி எதைச் சொல்வது எனக் கேட்கும் வசிஷ்டர் மேலும்:
"கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்னப் புகல்வாய்
பெண்ணோ தீயோ மயாப் பேயோ கொடியாய் நீ இம்
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான்."
உன் கணவன் இறக்கப் போவதைக் கூட எண்ணாமல், புண்ணுக்குள் புகும் நெருப்பைப் போல், நஞ்சைப் போல், தாட்சண்யம் இல்லாமல் பேசும் நீ ஒரு பெண்ணா? இல்லை பேயா? ஊழிக் காலத் தீயா? கொடியவளே? நீ இவ்வுலகில் வாழத் தகுதி அற்றவளே!" என்று கடும் சொற்களைச் சொல்லுகின்றார்.
படங்கள் மிக அழகாக உள்ளது.இதுவரை இந்த படங்களை நான் பார்த்தது இல்லை.மேலும் ராமகிருஷ்ணமடத்தின் சிறுவர்ராமாயண புத்தகத்திலும் படங்கள் நன்றாக இருக்கும்.
ReplyDeleteகைகேயியின் தாய் தந்தையர் பற்றிய பகுதி இதுவரை நான் அறியாதது. சுவையாக இருக்கிறது அந்தக் கதை. :-)
ReplyDelete