
கைகேயியிடம் இருந்து விடைபெற்றதுமே ஸ்ரீராமர் தன் பரிவாரங்களையும், தன் தேரையும், தன் அரச மரியாதைக்குரிய சின்னங்களையும் துறந்து, அம்மாளிகையில் இருந்து கால்நடையாகவே தன் பெற்ற தாயான கோசலையின் மாளிகைக்குச் சென்றார். கூடவே கண்ணீருடன் லட்சுமணன் பின் தொடர்கின்றான். இங்கே கைகேயியின் மாளிகைப் பெண்டிரிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டிருந்தது. ராமர் கோசலையின் மாளிகையை அடைந்து அந்தப் புரம் வந்து சேர்ந்து தாயை வணங்கினார். பெற்ற மகனின் பட்டாபிஷேகத்துக்காக விரதம் இருந்த கோசலை தன் மகனை ஆசீர்வதித்தாள். உடனே ராமர் தாயிடம் கைகேயியின் மூலம் தனக்கு இடப்பட்ட கட்டளையைக் கூறித் தான் தண்டகாரண்யம் செல்லத் தயார் செய்யப் போவதாய்க் கூறவும், கோசலை மூர்ச்சை அடைந்து விட்டாள். மூர்ச்சை தெளிந்த அவளைச் சமாதானப் படுத்துகின்றார் ராமர். அதைக் கண்டு லட்சுமணன் கதறி அழுகின்றான். தசரதரைப் பற்றிப் பெண்ணாசையில் மனம் மயங்கியவர் என்றெல்லாம் சொல்கின்றான். ராமனை உடனேயே போர் தொடுக்குமாறு கூறுகின்றான். அயோத்தி மக்களே எதிர்த்தால் கூடத் தான் தனி ஒருவனாய்ப் போரிட்டு பரதனைத் தன் அம்புக்கு இரையாக்குவதாய்க் கூறுகின்றான், இளையவன் ஆன லட்சுமணன். பாரபட்சம் காட்டுபவன் ஆச்சார்யனாகவே இருந்தாலும், தவறான பாதையில் செல்பவனும் ஆச்சார்யனாகவே இருந்தாலும், தந்தையாகவே இருந்தாலும் எதிர்க்கத் தக்கவர்களே, அவர்களை அடக்கலாம் என்றே சாத்திரங்கள் சொல்லுவதாய்க் கூறுகின்றான். தசரதரைக் கொன்று ராமனை நாடாள வைப்பதாய்ச் சபதம் செய்கின்றான், கோசலையிடம். இதைக் கம்பர் எவ்வாறு கூறுகின்றார் என்று பார்க்கலாமா? ராமன் தன் மாளிகைக்குத் தன்னந்தனியே வரும்போதே கோசலை அறிந்ததாய்க் கம்பர் கூறுகின்றார்:
"குழைக்கின்ற கவரி இன்றி கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையான் மெளலி கவித்தனன் வரும் என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அண்ணாள் முன் ஒரு தமியன் சென்றான்."
"புனைந்திலன் மெளலி குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன் என் கொல் என்னும் ஐயத்தாள் நளின பாதம்
வனைந்த பொன் கழற்கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள்"
ராமன் தன்னந்தனியே வருவதைப் பார்த்துவிட்டுக் கோசலை சந்தேகத்துடன் ராமனைக் கேட்பதாய்ச் சொல்லும் கம்பர், கூடவே "தருமம் பின் இரங்கி ஏக" என்றும் சொல்லுவதில் இருந்து இது தர்மத்தை மீறிய ஒரு செயல் என்றும் சுட்டிக் காட்டுகின்றார். என்றாலும் ராமனின் தர்மம் அவனைக் கைவிடாமல் அவன் பின்னாலேயே வருகின்றதாம். இவ்வாறு பலவிதங்களில் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். தவிர, ராமன் பரதனின் பட்டாபிஷேகம் நடக்கவேண்டும் எனக் கைகேயி கேட்டதைச் சொன்னதும் கோசலை ராமனிடம், "நீ மூத்த மகனாய் இருந்தாலும் பரதன் உன்னைக் காட்டிலும், பல மடங்கு உத்தம குணங்கள் நிரம்பியவன்" என்று சொல்வதாயும் கூறுகின்றார்.
"முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின்
நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால்
குறைவு இலன் எனக் கூறினள் நால்வர்க்கும்
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்"
அத்தோடு நில்லாமல் மன்னனின் கட்டளை அதுவானால் மகனே அதை நிறைவேற்றுவது உன் கடமை எனவும் சொல்கின்றாளாம்.
"என்று பின்னரும் மன்னவன் ஏவியது
அன்று என்னாமை மகனே உனக்கு அறன்
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து
ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள்." கம்பர் மட்டுமே பெருந்தன்மையோடு இல்லாமல் அவர் தம் பாத்திரங்களும் போட்டி போட்டுக் கொண்டு பெருந்தன்மையாகவே நடக்கின்றார்கள். இது தமிழின் அழகா? காவியத்தின் அழகா? ஆனால் வால்மீகியோ ராமன் இல்லாமல் தான் வாழப் போகும் வாழ்க்கை பற்றியும் இளையாள் ஆன கைகேயி தன்னை எவ்வாறு நடத்துவாளோ எனக் கலங்கியதாகவும், லட்சுமணனின் உதவியால் ராமன் காட்டுக்குச் செல்லாமல், இங்கேயே காட்டு வாழ்க்கைக்கு உரிய நெறிமுறைகளோடு வாழலாம் எனவும், காட்டுக்கு ராமன் செல்ல தான் அனுமதிக்க முடியாது எனவும் தன் பேச்சை ராமன் கேட்கவில்லை எனில் தான் உயிரை விட்டு விடுவதாயும் அந்தப் பாவம் ராமனை வந்து சேரும் எனவும் ஒரு சாதாரணத் தாயானவள் தன் மைந்தனிடம் எவ்வாறு கூறுவாளோ அவ்வாறே சொல்கின்றார்.
கடும் முயற்சிக்குப் பின்னரே ராமர் தன் தாய், தன் சகோதரன் லட்சுமணன் இருவரையும் சமாதானம் செய்கின்றார். அப்படியும் கோபம் அடங்காத லட்சுமணன் திரும்பத் திரும்ப வாதாடுகின்றான், ராமனிடம். கோசலைக்கும் அவள் பத்தினி தர்மத்தை ராமர் எடுத்துச் சொல்கின்றார். கணவனை விட்டுப் பிரியாத பெண்ணே நல்ல மனைவி என்றும், தன் கணவனுக்குப் பணிவிடை செய்து வாழவில்லை எனில் அவள் மிகுந்த பாவியாகக் கருதப் படுவாள் எனவும் சொல்லி அவளைத் தேற்றப் பின்னர் அரை மனதுடனேயே கோசலை இணங்குகின்றாள் எனினும் துக்கம் அவளை வாட்டுகின்றது. தன்னைப் பிரிந்து பதினான்கு வருஷம் காட்டிலே வாழப் போகும் மகனுக்கு வேறு வழியில்லாமல் ஆசிகளும், வாழ்த்தும் சொல்லுகின்றாள். அவ்வளவில் ராமர் தன் மனைவியிடம் விடைபெற்று வரச் செல்லுகின்றார். அங்கே சீதையோ எனில் ராமன் வரவுக்குக் காத்திருந்தாள். ராமரைக் கண்டதுமே அவளுக்கு ஏதோ விபரீதம் எனப் புரிகின்றது. பின்னர் ராமர் அனைத்தையும் அவளுக்கு எடுத்துச் சொல்லித் தன் தாய் கோசலை, தசரதனின் மற்ற மனைவிமார், தசரதன், மற்றும் தன் தம்பிமார் அனைவரையும் சீதை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், பரதனுக்கு மன வருத்தம் ஏற்படுமாறு நடந்து கொள்ள வேண்டாம் எனவும் சொல்லி அவளைப் பிரிந்து தான் மட்டும் காடு செல்ல ஆயத்தம் ஆகும் வேளையில் சீதை ராமரைப் பார்த்துச் சொல்கின்றாள்: நீங்கள் காட்டுக்குச் செல்ல நான் மட்டும் இங்கே இருப்பது என்ன வகையில் நியாயம்? உங்கள் தாய்க்கு நீங்கள் சொன்ன விதிமுறைகள் எனக்கும் பொருந்துமல்லவா? மேலும் என் ஜாதகத்தைப் பார்த்த சிலர் எனக்குக் காட்டு வாழ்க்கை உண்டு எனவும் கூறி இருக்கின்றார்கள். ஆகவே நானும் வருவேன் எனக் கேட்க ராமர் மறுக்கின்றார். இப்போது சீதைக்கு வேறு வழியில்லாமல் ராமரைக் குத்திக் காட்டிப் பேசும் நிலை ஏற்படுகின்றது. அவள் வாதத்தைக் கேட்டு ராமரும் வேறு வழியின்றிச் சம்மதிக்கவே, லட்சுமணனும் ராமர், சீதையுடன் வனவாசத்திற்குத் தயார் ஆகின்றான்.
*************************************************************************************
ஆதி காவியம் என அழைக்கப் படும் இந்தக் காவியத்தின் விதியின் அரங்கேற்றம் ஆரம்பம் ஆகும் நேரமிது. இதை ராமர் ஒரு அவதார புருஷர் என்றால் ஏன் தடுக்கவில்லை? சாமானிய மக்களால் இன்றும் கேட்கப் படும் ஒரு கேள்வி. ஏனெனில் ராமர் தன்னைக் கடைசிவரையிலும் ஒரு அவதார புருஷனாகவே உணரவில்லை. அவன் சொல்லால், செயலால், நினைப்பால், தன் நடத்தையால் தான் ஒரு சாமானிய மனிதன் என்றே நினைத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது வால்மீகி ராமாயணமெங்கும். அவனுடைய பிறப்பின் நோக்கமே இராவண வதம் என்றாலும் அதற்கும் ஒரு காரணத்தையும், காரியத்தையும் கற்பிக்காமல் சும்மா வெறுமே ராம, ராவண யுத்தம் நடைபெறுவதில்லை. இதற்கு அனுகூலமாகக் கதையில் அங்கங்கே வரும் கடவுளரும், முனிவர்களும், அவர்கள் கொடுக்கும் வரங்களும், பெறப்படும் சாபங்களும், அவற்றின் பலன்களும் துணை போகின்றன. எந்தக் காரியமும் ஒரு தகுந்த காரணமில்லாமல் நடக்கக் கூடாது என்பதில் விதி மட்டுமின்றி ராமாயணக் கதா பாத்திரங்களும், அந்தக் காரணங்களையும், காரியங்களையும் நோக்கியே மெதுவாக நகர்த்தப் படுகின்றனர். ஆனாலும் கதைப் படி அவர்கள் அதை உணரவில்லை. எனில் உணர்ந்திருந்தால்? ராமன் தான் ஒரு அவதார புருஷன் எனத் தெரிந்து கொண்டிருந்தால்? கதையின் போக்கே மாறி இருக்காது? தன் மனசாட்சியை மறைத்துத் தான் ஒரு அவதாரம் என்பதைக் கடைசி வரை உணராத ஒரு நேர்மையான அரசனின் வாழ்வில் நேர்ந்த துயரங்கள் நடைபெறாமால் போயிருக்கும் சாத்தியங்கள் உண்டல்லவா? ஒரு பேருண்மைக்குள்ளே தன் காவியத் திறனைப் பொதிந்து வைத்துக் கவி காவியத்தினுள் மறைந்திருக்கும் ஸ்ரீராமனின் தெய்வீகத் தன்மையை அவனுக்கே உணர்த்த முயலுகின்றாரோ?
//நானும் வருவேன் எனக் கேட்க ராமர் மறுக்கின்றார். இப்போது சீதைக்கு வேறு வழியில்லாமல் ராமரைக் குத்திக் காட்டிப் பேசும் நிலை ஏற்படுகின்றது. //
ReplyDeleteஅப்படி என்ன குத்தி காட்டி பேசினாங்க சீதை? சுவாரஸ்யமா இருக்கும் போலத் தெரியுது. கொஞ்சம் விளக்கலாமே.