எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 04, 2008

கதை கதையாம் காரணமாம் - இராமாயணம் -பகுதி 8



பஞ்ச இந்திரியங்களையும் அடக்கிக் கொண்டு யாகத்துக்குத் தயாரானார் விசுவாமித்திரர். அப்போது ராம, லட்சுமணர்களை விசுவாமித்திரரின் சீடர்கள் அழைத்துத் தங்கள் குருவின் கட்டளையைச் சொன்னார்கள். இன்று முதல் குருவானவர் மெளன விரதம் அனுஷ்டிப்பதால், நீங்கள் இருவரும் இன்று முதல் ஆறு இரவுகள் எச்சரிக்கையாக இருந்து இந்த யாகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பதாய்ச் சொன்னார்கள். அது போலவே ராம, லட்சுமணர்கள் விழித்திருந்து இரவு, பகலாக யாகத்தைப் பாதுகாத்துக் கொண்டு எச்சரிக்கையுடன் இருந்தார்கள். அப்போது ஆறாம் நாள் வேள்வித் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த வேளையில் இடி போன்ற சப்தத்துடன் சுபாஹூவும், மாரீசனும் யாகத்தைத் தடுக்க மழை போல ரத்தத்தைப் பொழிந்தனர். கோபம் கொண்ட ராமர் தன் மானவ அஸ்திரத்தை மாரீசன் மேல் ஏவ அந்த அஸ்திரம் அவனைக் கொல்லாமல் வெகு தூரத்துக்கு அப்பால் கொண்டு போய்த் தள்ளியது. பின்னர் ஆக்னேய அஸ்திரத்தை சுபாஹுவின் மேல் ஏவ அது அவனைக் கீழே தள்ளி மாய்த்தது. இவ்விதம் மாரீசனுக்கும், சுபாஹுவிற்கும் உதவியாக வந்த ராட்சதர்களும், இவ்விரு இளைஞர்களாலும் கொல்லப் பட்டனர். வேள்வியும் சுபமாக முடிந்தது. இரு இளைஞர்களையும் விசுவாமித்திரர் மட்டுமில்லாமல், வந்திருந்த அனைத்து ரிஷி, முனிவர்களும் பாராட்டினார்கள். மேலும் அந்த ரிஷி, முனிவர்கள் விசுவாமித்திரரிடம் அவர்கள் அனைவரும் அப்போது மிதிலை நகரத்து மன்னனாகிய ஜனக மஹாராஜன் நடத்தப் போகும் யாகத்துக்குச் செல்லப் போவதாய்த் தெரிவித்து விட்டு விசுவாமித்திரரையும் அதற்கு அழைத்தனர்.

மேலும் அவர்கள் சொன்னதாவது, ஜனகர் வசம் ஒரு அற்புதமான தனுசு இருக்கிறதென்றும், அதை யாராலும் எடுத்து நாணேற்ற முடியவில்லை என்றும், அந்த வில்லில் நாணேற்ற தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் என அனைவரும் முயன்றும் ஒருவராலும் முடியவில்லை எனவும், ராமனை அழைத்து வந்தால் அந்த வில்லையும், கூடவே ஜனகரின் யாகத்திலும் பங்கேற்கலாம் என அழைக்கின்றனர். விசுவாமித்திரரும் சம்மதிக்கவே அனைவரும் மிதிலை நோக்கிப் பிரயாணப் படுகின்றார்கள். செல்லும் வழியில் விசுவாமித்திரன் தன்னுடைய வம்சத்தின் கதையையும், ஸ்கந்தன் என்னும் கார்த்திகேயன் எவ்வாறு சிவ, பார்வதியின் மகனாய்ப் பிறந்தான் என்பதையும் ராம, லட்சுமணர்களுக்குச் சொன்னார். பின்னர் பகீரதன் பெரும்பிரயத்தனத்துடனேயே பூமிக்குக் கொண்டு வந்த கங்கையைப் பற்றியும், பாற்கடல் அமிர்தத்துக்குக் கடையப் பட்டது பற்றியும் சொன்னார். (இந்த விபரங்கள் கம்பராமாயணத்தில் இல்லை.) அதன் பின்னர் அவர்கள் ஒரு அழகான ஊரான மிதிலையை அடையும் வழியில், மிக மிக ரம்மியமாகவும், நேர்த்தியான முறையில் அலங்கரிக்கப் பட்டதுமான ஒரு ஆசிரமத்தைக் கண்டனர். ஆனால் அந்த ஆசிரமம் மனித நடமாட்டமே இல்லாமல் இருந்ததைக் கண்டார் ஸ்ரீராமன். அந்த ஆசிரமம் அவ்வாறு மனித நடமாட்டமே இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம் என விசுவாமித்திரரைக் கேட்கின்றார். விசுவாமித்திரர் கடுமையானதொரு சாபம் முன்னொரு காலத்தில் விளைந்ததன் காரணமாய் இவ்விடம் இவ்வாறு உள்ளது என்று கூறிவிட்டுப் பின்னர் கெளதம மகரிஷியின் வரலாற்றைக் கூறினார். பிரம்மா படைத்த அற்புத அழகு வாய்ந்த அகலிகையை மணக்க தேவாதி தேவர்களும் போட்டி இட்டதையும், போட்டியில் ஜெயிக்க பிரம்மா அகலிகையை மணக்க விரும்புவோர் மும்முறை உலகைச் சுற்றி வரவேண்டும் என நிபந்தனை விதித்ததையும், இந்திரன் அவ்வாறு செல்லும் முன்னர், நாரதர் பிரம்மாவிடம் கெளதம ரிஷியே அகலிகை கரம் பற்றும் தகுதி வாய்ந்தவர் என எடுத்துச் சொன்னதையும், அதற்குக் காரணம் தன் ஆசிரமத்தில் கன்று போடும் தருவாயில் இருந்த பசுமாட்டைத் தரிசனம் செய்து வலம் வந்ததையும் தெரிவித்து விட்டுப் பின்னர் அவருக்கு அகலிகையை மணமுடிக்க ஏற்பாடு செய்து திருமணமும் முடிந்து விடுகின்றது.

என்றாலும் தேவேந்திரனின் ஆசை தணியவில்லை. எவ்வாறேனும் அகலிகையை அடையவேண்டும் என்பதே அவன் ஆசை. ஆசிரமத்தில் ஒரு நாள் கெளதமர் இல்லாத வேளையில் அவருடைய உருவத்தை எடுத்துக் கொண்டு வந்து, அவளை அடைய முற்பட்டான். அகலிகை பார்த்த மாத்திரத்திலேயே இவன் தன் கணவன் அல்ல எனப் புரிந்து கொண்டாலும் தன் அழகின் மீது இருந்த கர்வத்தால், அவனுக்கு உடன்படுகின்றாள். வெளியே சென்றிருந்த கெளதமர் திரும்பி வருவதற்குள் அங்கிருந்து மறைய முற்பட்ட இந்திரன் முன்னர் நெற்றிக்கண்ணைத் திறந்து கொண்டு வந்த ஈசனைப் போல் தோன்றிய கெளதமர் இந்திரனுக்கும், அகலிகைக்கும் சாபம் கொடுக்கின்றார். இந்திரன் தன் ஆண்மையை இழக்குமாறும், அகலிகை உண்ண உணவின்றி, காற்றையே உணவாய்க் கொண்டு, புழுதியில் புரண்டு, எவர் கண்களுக்கும் தெரியாததோர் பிறவியாகத் தூசியிலும் தூசியாக ஒரு அணுவாக இங்கேயே நெடுங்காலம் கிடந்த பின்னர், தூயவனும், நன்னடத்தையின் நாயகனும் ஆன ராமன் இங்கே வருவான். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்று சொல்லிச் செல்வார். அந்த அகலிகைதான் இப்போது உன் பாதம் இந்த ஆசிரமத்தில் படக் காத்திருக்கின்றாள். என்று விசுவாமித்திரர் கூறுகின்றார். ராமனும் அந்த ஆசிரமத்தின் உள்ளே பிரவேசித்ததும், அஹல்யை தன் பழைய உருவை அடைந்தாள். ராமரை வணங்கி நின்ற அவளை அப்போது தன் மனோவலிமையால் அங்கே வந்து சேர்ந்த கெளதமரும் மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றார். ராமனும், லட்சுமணனும் விசுவாமித்திரருடன் மிதிலை நோக்கிச் செல்கின்றனர்.

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. சின்ன வயசில்,பாட்டி வீட்டில் “பூலோகநாதர்”கோவில், கதா காலஷேபம் கேட்ட ஞாபகம் இருக்கு:)

    ReplyDelete
  3. // ராமர் தன் மானவ அஸ்திரத்தை மாரீசன் மேல் ஏவ அந்த அஸ்திரம் அவனைக் கொல்லாமல் வெகு தூரத்துக்கு அப்பால் கொண்டு போய்த் தள்ளியது. பின்னர் ஆக்னேய அஸ்திரத்தை சுபாஹுவின் மேல் ஏவ //

    இவ்ளோ உண்ணிப்பாக நான் கதை கேட்டதே இல்லை இப்போது தான் முதல் முறை அறிகிறேன். நன்றி

    இந்த பதிவில் இருக்கும் படம் மிக மிக அபூர்வமான படம்!

    இப்படம் தான் சௌராஷ்ட்ரா இராமாயணத்தின் அட்டை படம்.

    ReplyDelete
  4. முருகக் கடவுள் பற்றிய குறிப்பு வால்மீகி ராமாயணத்தில் இருக்குதுங்களா?

    ReplyDelete