

கைலை மலை நோக்கிச் சென்ற தசக்ரீவனையும், அவனோடு வந்த ராட்சதர்களையும், எதிர்த்த யக்ஷர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகிப் போனார்கள். கோர தாண்டவம் புரிந்தான் தசக்ரீவன். அவன் எதிரே தோன்றினான் அண்ணனாகிய குபேரன் என்னும் வைஸ்ரவணன். தம்பியைப் பார்த்து குபேரன் சொல்லுகின்றான்:" மூடனே, மூர்க்கத் தனத்தால் அனைவரையும் அழிப்பதோடு அல்லாமல் உன்னையும் அழித்துக் கொள்ளாதே! விஷத்தை விஷம் என நினைக்காமல் பருகியவன் போல், பின்னர் அதன் விளைவுகளை அனுபவிப்பவன் போல், இப்போதைய உன் செயல்களின் விளைவுகளை நீயும் அனுபவிப்பாய். தாய், தந்தை, ஆச்சார்யர் ஆகியோரை நிந்திப்பவர்களுக்கு அதற்குரிய விளைவை அனுபவித்தே தீரவேண்டும். நீ விதைத்த இந்த வினையை நீயே அறுப்பாய்!" என எச்சரிக்குமாறு பேசக் குபேரனைத் தாக்கி வீழ்த்திவிட்டு அவன் புஷ்பக விமானத்தையும் அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்ட தசக்ரீவன் அடுத்துச் சென்ற இடம் கார்த்திகேயன் அவதரித்த சரவணப் பொய்கை ஆகும். அங்கே அவன் அபகரித்து வந்த புஷ்பக விமானம் மேற்கொண்டு நகராமல் தடைப்பட்டு நிற்க, தசக்ரீவனும் என்னவெனப் பார்த்தான்.
நந்தியெம்பெருமான் காட்சி அளித்தார். தசக்ரீவனைப் பார்த்து அவர், "மூடனே திரும்பிப் போ! ஈசனும், அன்னையும் வீற்றிருக்கும் இடம் இது! நில்லாதே! திரும்பிப் பார்க்காமல் போ!" என்று கூற நந்தியின் உருவத்தைப் பார்த்த தசக்ரீவன்," யார் அந்த ஈசன்? என்னைவிட மேலானவனா?" என்று கேட்டுக் கொண்டே நந்தியின் உருவத்தைப் பரிகாசம் செய்து சிரிக்கின்றான். கோபம் கொண்ட நந்தி தசக்ரீவனைப் பார்த்து, "உன்னைக் கொல்லும் வல்லமை படைத்தவனே நான்! எனினும் உன் தீச்செயல்களால் செயலிழந்து போன உன்னை நான் இப்போது கொல்வது முறையன்று. ஆகையால் என் போன்ற தேவர்களோ, மற்ற யட்ச, கன்னர, கந்தர்வர்களோ, பூதகணங்களோ உன்னைக் கொல்ல முடியாது என விடுகின்றேன். ஆனாலும் உனக்கு அழிவு நிச்சயம். என் உருவத்தை அழகில்லை எனக் கேலி செய்த நீ வானர இனம் ஆகிய குரங்குகளின் மூலம் குலத்தோடு நாசமடைவாய்! அந்தக் குரங்குகளும் சாதாரணக் குரங்குகளாய் இராமல், வீரமும், ஒளியும், நினைத்த உருவை அடையும் வல்லமையும் பெற்ற குரங்குகளாய் இருக்கும்." என்று சாபம் கொடுக்கின்றார்.
சாபத்துக்கும் அஞ்சாத தசக்ரீவன் ஆணவம் தலைக்கேற, " நான் வந்துவிட்ட பிறகும், அதை உணராமல், என்னை வரவேற்க வராமல், இருந்த இடத்திலேயே இருக்கும் அந்த ஈசனின் ஆணவத்தை ஒழிக்கின்றேன்." என்று நந்தியிடம் கூறிவிட்டு, கைலாய மலைக்குக் கீழ் தனது கையைக் கொடுத்து அதைத் தூக்க ஆரம்பித்தான். அண்டசராசரமும் நடுங்கியது. கைலை குலுங்கவும், ஏழுலகமும் குலுங்கிற்று. கங்கையின் வேகம் பூமியில் இறங்கினால் பூமி தாங்காது என அதைத் தலையில் தாங்கிய ஈசன் பார்த்தார். உமை அம்மை சற்றே நடுங்கினாள். தன் கால் கட்டை விரலைக் கீழே அழுத்தினார் ஈசன். கைலை மலை அடியில் தசக்ரீவன் நசுங்கினான். வலி தாங்க முடியவில்லை, அவனால், பெரும் கூச்சல் போட்டான். அந்தக் கூச்சலினால் மீண்டும் ஏழுலகும் நடுங்கியது. அத்தகைய பேய்க் கூச்சல் போட்டான் தசக்ரீவன். ஊழிக்காலத்தின் இடியோசையோ என அனைவரும் நடுங்க, தசக்ரீவன் கூச்சல் போடுகின்றான். கூட வந்த அனைவரும் செய்வதறியாது திகைக்க, சிலர் மட்டும் அறிவு வந்தவராய், தசக்ரீவனிடம் அந்த ஈசனை வேண்டிக் கொள் எனச் சொல்ல, பிறந்தது ஒரு இனிய நாதம், சாம கானம் இசைத்தான், தசக்ரீவன். சிவனை பல துதிகளிலும் துதிக்க ஆரம்பித்தான். கடைசியில் அவனின் சாமகானத்தில் மயங்கிய மகேஸ்வரர், அவனைப் பார்த்து, " உன் வீரத்தை நான் மெச்சுகின்றேன். ராவணா! இன்று முதல் நீ ராவணன் என அழைக்கப் படுவாய். மூவுலகும் அண்ட சராசரமும் நடுங்கும் அளவுக்கு நீ ஒலி எழுப்பியதால் இந்தப் பெயர் பெற்றாய்!" எனக் கூறுகின்றார். ராவண=ஓலமிடுவது, கதறுவது, பெருங்கூச்சல் போடுவது என்று அர்த்தம் வரும். ஆகவே அவனுக்கு அன்று முதல் ராவணன் என்ற பெயரும் ஏற்பட்டது, ஏற்கெனவே நீண்ட ஆயுளை வரமாய்ப் பெற்றிருந்ததால், தசக்ரீவன் ஈசனிடம், அதை உறுதி செய்யும் வண்ணம், ஒரு ஆயுதம் கொடுத்தால் போதும் எனச் சொல்லவே, "சந்திரஹாசம்" என்னும் சிறப்பான கத்தியை அவனுக்குக் கொடுத்து அனுப்பி வைக்கின்றார் ஈசன்.
*******************************************************************************
சிதம்பரம் திருப்புகழ் பாடல் எண் 466 (மதவெங்கரி)
நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய
நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
நவதுங் கரத்ந முந்து ...... திரடோ ளுஞ்
அருணகிரிநாதர் தம் சிதம்பரம் திருப்புகழில் கைலையை ராவணன் தூக்கியது பற்றி மேற்கண்ட பாடலில் தெரிவிக்கின்றார். நதியும்=கங்கை நதியையும், திருக்கரந்தை=விபூதிப் பச்சை? வில்வம்? மதியும்= பிறைச்சந்திரனும் சடைக்கணிந்த= சடையில் தரித்த நடனம் ஆடும் இறைவன் வீற்றிருந்த கைலை மலையை, நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் = தன் வன்மை மிகுந்த தோளால் பிடுங்கி எடுத்துத் தன் உள்ளங்கையில் எடுத்தானாம் ராவணன். இவ்விதம் அகங்காரத்தின் பால் வீழ்ந்து பட்டு, அந்த ஈசன் குடி இருக்கும் இடத்தையே ராவணன் பிடுங்கியும் கூட அந்த ஈசன் அவனுக்கு அவனுடைய பாபங்களை அபகரித்துக் கொண்டு நல்லதையே செய்தாராம், அதுவும் எவ்வாறு? இதோ கீழ்க்கண்ட பாடல் தெரிவிக்கின்றதே!
காஞ்சீபுரம் திருப்புகழில் அருணையார் சொல்லுவது என்னவென்றால்: அடியோடு பற்றிப் பொற்கைலையை உள்ளங்கையில் எடுத்த ராவணனுக்கு ஈசன் சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தார் என்று, "தசமுகன் கைக்குக் கட்கமளிக்கும் பெரியோனும்" என்று பாடுகின்றார்.
காஞ்சீபுரம் திருப்புகழ் 312-ம் பாடல் ( கனக்ரவுஞ்சத்திற்)
அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்
றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்
றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் ...... டவனீடுந்
தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்
சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்
தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந்
"கையை கிழித்து நரம்புகளை வீணை தந்தி போல மீட்டி" ன்னு ஏதோ கேள்வி பட்டது போல இருக்கே! அது சரிதானா?
ReplyDeleteஏதோ வால்மிகியைத்தான் ஆதாரமா கொண்டு எழுதறதா சொன்ன நினைவு, ஆனா மேற்கோள்களில் திருப்புகழும், கம்பருந்தான் அதிகம் தென்படறாங்க....:)
ReplyDelete