எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 29, 2008

கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி -30



தசக்ரீவன் ராவணன் ஆனதை நேற்றுப் பார்த்தோம், அவன் கை நரம்புகளால் ஆன வீணையை இசைத்தானா என்பது பற்றி திரு திவா கேட்டிருக்கின்றார். அது பற்றிய தகவல் எதுவும் வால்மீகி ராமாயணத்தில் இல்லை. கம்பர் எழுதி இருக்காரானு பார்க்கணும்! :D இனி மேற்கொண்டு ராவணனின் திக்விஜயம் ஆரம்பம் ஆகின்றது. ராவணனின் கர்வமும், அவன் மேற்கொண்ட திக்விஜயமும், அதில் கிடைத்த சாபங்களும், கதையில் சிலரின் பிறப்புக்களுக்கும் காரணமாகவும், காரியமாகவும் அமைந்தது என்பது புரியவரும். பூமியின் பல பகுதிகளுக்கும் சென்று திக்விஜயம் செய்த ராவணன், மனிதர்களையும், குறிப்பாக க்ஷத்திரியர்களையும் துன்புறுத்தி வந்தான். பூமியின் பல பாகங்களிலும் சஞ்சாரம் செய்து வந்த அவன் ஒரு முறை இமயமலைச் சாரலில் உலாவந்த போது, ஒரு பேரழகுப் பெண்ணொருத்தி, கடுந்தவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டான். இத்தனை செளந்தர்யவதியான பெண், ஏன் தவக்கோலத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என யோசித்த அவன், அதை அந்தப் பெண்ணிடமே கேட்டான். நடக்கப்போவதை அறியாத அந்தப் பெண்ணும், "பெரும் தவங்கள் பல செய்து பிரம்மரிஷியான என் தகப்பனார் குசத்வஜனுக்கு நான் மகள். வேதங்களே உருவெடுத்த பெண்ணாக நான் பிறந்திருக்கின்றேன் என என் தந்தை எனக்கு "வேதவதி" என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்த மகா விஷ்ணுவே தனக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் எனவும் விரும்பினார். ஆகவே என் அழகைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள வந்த ரிஷிகள், கந்தவர்கள் ஆகியோருக்கு என் தந்தை என்னைத் திருமணம் செய்து கொடுக்கவில்லை. அதிலே ஒருவன் என் தந்தையைக் கொன்றுவிட, என் தந்தையோடு என் தாயும் உடன்கட்டை ஏறிவிட்டாள். ஆகவே நான் தனியள் ஆகிவிட்டேன். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இனி என் கடமை என எண்ணி, அந்த நாராயணனையே மனதில் நிறுத்தித் தவம் செய்து வருகின்றேன். என் தவத்தின் பலனால், இனி நடக்கப் போகும் மூவுலக நிகழ்ச்சிகளும் எனக்குத் தெரியவருகின்றது. விஸ்ரவஸின் மகனே! சென்றுவா! பேசியது போதும்!" எனச் சொல்கின்றாள்.

ஆனால் அதைக் கேட்காத ராவணன், "இந்த இளம் வயதில் எந்த சுகத்தையும் அனுபவிக்காமல் நீ தவம் மேற்கொண்டது எப்படி? வா, நாம் திருமணம் செய்து கொள்வோம், இலங்கையின் அரசன் ஆன நான் உன்னைச் சகல செளகரியங்களோடும் வைத்திருப்பேன், யார், அந்த விஷ்ணு? யார் அந்த நாராயணன்? எங்கே இருந்து வந்து உன்னைக் காப்பாற்றுவான்?" என ஏளனமாய்க் கேட்கின்றான். வேதவதி, "சாட்சாத் சர்வேஸ்வரன் ஆன, மூவுலகையும் ஆளுகின்றவனைப் பற்றி நீ தான் இப்படி முட்டாள் தனமாய்ப் பேசுகின்றாய்" எனக் கோபமாய்ச் செல்ல, வேதவதியின் கூந்தலைப் பிடித்துத் தன் பக்கம் அவளை இழுக்கின்றான் ராவணன். தன் கையையே ஒரு கத்தி போல் உபயோகித்து, ராவணன் தொட்ட தன் கூந்தலை அறுத்து எடுக்கின்றாள் வேதவதி. தொடர்ந்து, " நீ என்னையும், என் புனிதத் தன்மையையும் அவமதித்த பின்னர் நான் உயிர் வாழ விரும்பவில்லை. தீ மூட்டி உன் கண்ணெதிரேயே தீயில் குதித்து இறக்கப் போகின்றேன். ஆனால் நான் மீண்டும் பிறப்பேன். கர்ப்பத்தில் இருந்து உதிக்காமலேயே பிறப்பேன், உன் அழிவுக்கு நான் தான் காரணமும் ஆவேன். நான் செய்த தவங்களின் மீதும், நற்செயல்களின் மீதும் ஆணை!" என்று சபதம் செய்து விட்டுத் தீயில் புகுந்தாள். விண்ணில் இருந்து பூமாரி பொழிந்தது.

ராவணன் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே இருந்த ஒரு தாமரை மலரில் ஒரு அழகிய பெண் தோன்றினாள். ராவணன் அந்தப் பெண்ணின் கரத்தைப் பிடித்து பலாத்காரமாய் இழுத்து இலங்கைக்குக் கொண்டு செல்கின்றான். அங்கே ஜோதிட வல்லுனர்களும், சாமுத்ரிகா லட்சணம் தெரிந்தவர்களும், "இந்தப் பெண்ணின் லட்சணங்களைப் பார்த்தால் இவள் உன் அழிவுக்குக் காரணம் ஆவாள் எனத் தெரியவருகின்றது. ஆகவே இவளை விட்டு விடு!" எனச் சொல்ல, அந்தப் பெண்ணைக் கடலில் தூக்கி எறிந்தான் ராவணன். அந்தச் சமயம் மிதிலையில் ஜனகர் யாக சாலையை உழுது செப்பனிட்டுக் கொண்டிருந்தார். கடலில் தூக்கி எறியப் பட்ட பெண், நிலத்தில் இருந்து தோன்றி ஜனக மன்னனை அடைந்தாள். அந்தப் பெண் தான் நீ திருமணம் செய்து கொண்ட சீதை!" என்று அகத்தியர் ராமரிடம் கூறுகின்றார். அகத்தியர் மேலும் சொல்லுவார்: இதன் பின்னரும் ராவணனின் திக்விஜயம் நிற்கவில்லை. தொடந்து திக்விஜயம் செய்து கொண்டிருந்தான். பல மன்னர்கள் அவன் வீரத்தையும், பலத்தையும் பற்றிக் கேள்விப் பட்டுத் தாங்களாகவே சரண் அடைந்தனர். அயோத்தியின் மன்னன் ஆகிய அனரண்யன் என்பவன் பணிய மறுத்துச் சண்டை போடுகின்றான். ராவணனால் நாசம் செய்யப் பட்ட மன்னன் படைகள் தோல்வியைத் தழுவி, மன்னனும், மரணத்தின் வாயிலை எட்டுகின்றான். அப்போது அனரண்யன், " ஒழுங்காகவும், நேர்மையாகவும், தர்மத்தில் இருந்து பிறழாமலும், குடிமக்களைப் பாதுகாத்தும் ஆட்சி புரிந்து வந்த என்னை நீ தோற்கடித்ததாய் எண்ணாதே! நான் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறேன் என்பது உண்மையானால் என் குலத்தில் பிறக்கப் போகும் ஒருவனாலேயே உனக்கு அழிவு ஏற்படும். இது உறுதி!" எனச் சொல்லி விட்டு இறக்கின்றான்.

பின்னர் மனிதர்களை மட்டுமே யுத்தத்தில் தோற்கடிப்பதால் என்ன பயன் என யோசித்த ராவணன், சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது, அதைத் தூண்டும் விதமாய் நாரதர் அங்கே வந்து, எமனோடு போரிட்டு வென்றாயானால் நீ வீரம் செறிந்தவன் என்று சொல்ல ராவணனும் தயார் ஆகின்றான் எமனோடு போரிட. எமனும் போருக்கு வந்தான். உலகையே அழிக்கக் கூடிய காலதண்டத்தை ஏந்தி வந்த எமன் அதைப் பிரயோகித்து ராவணனை அழிக்க முற்பட, பிரம்மா அவனிடம் காலதண்டத்தைப் பிரயோகித்து ராவணனை எமன் அழித்தால், அவனுக்குத் தான் அளித்த வரம் பொய்யாகிவிடும், மாறாகக் காலதண்டத்தினாலும் ராவணன் அழியவில்லை எனில் கால தண்டம் வல்லமை அற்றது என்றாகிவிடும், ஆகவே பொறுமை காப்பாய், ராவணன் அழிவு இப்போதல்ல," என்று கூற எமனும் சமாதானம் அடைந்து சென்று விடுகின்றான். ராவணனோ எமனையும் தான் வென்றதாய் நினைத்து மகிழ்ச்சியோடு கூத்தாடுகின்றான். பின்னர், நாகர்கள், மற்ற தேவர்கள், வருணன், என அனைவரையும் போருக்கு அழைத்துத் தோற்கடிக்கின்றான். எவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் சண்டைக்கு இழுத்து வென்ற ராவணன் தான் வென்றவர்களுடைய பெண்களைத் தன் புஷ்பக விமானத்தில் ஏற்றி, அவர்கள் கதறக் கதற இலங்கைக்குக் கொண்டு சேர்த்தான். அந்தப் பெண்கள் அனைவரும் ராவனனின் அழிவு ஒரு பெண்ணாலேயே நிகழ வேண்டும் எனச் சபித்தனர். அப்போது அங்கே கதறிக் கொண்டு வந்த சூர்ப்பனகை, காலகேயர்களை நீ அழித்த போது என் கணவனையும் சேர்த்துக் கொன்று விட்டாயே எனக் கதறுகின்றாள். அவளைச் சமாதானப் படுத்தி ராவணன், அவளைக் கர, தூஷணர்கள் பாதுகாப்பில் தண்டக வனத்தில் இருக்கும்படி வைக்கின்றான்.

இதனிடையில் மேகநாதன் சடாமுடி தரித்து, மரவுரி அணிந்து விரதமிருந்து யாகங்கள், பூஜைகள் செய்வதைக் கண்டு விட்டு ராவணன் என்னவென வினவ, மேகநாதன் தன் தவங்களாலும், யாகங்களாலும் விஷ்ணுவையும், ஈசனையும் மகிழ்வித்துப் பல வரங்களைப் பெற்றதோடல்லாமல், ஈசன் ஒரு சக்தி வாய்ந்த ரதத்தையும், சக்தி வாய்ந்த வில், அழிவை உண்டாக்கும் அஸ்திரங்கள், அம்புகள் நிறைந்துள்ள அம்புறாத் தூணி, மறைந்திருந்து எதிரிகளைத் தாக்கும் வல்லமை போன்றவற்றைக் கொடுத்திருப்பதாயும் அறிகின்றான். கோபம் கொண்ட ராவணன், தேவர்களும், இந்திரனும் எனக்கு அடிமையாக இருக்க இங்கே என் மகன் அவர்களை வணங்குவதா? போனது போகட்டும் இதை இத்தோடு விட்டு விட்டு என்னோடு வருவாய் எனக் கூறி மகனை உடன் அழைத்துச் சென்று விடுகின்றான். பின்னர் ஒரு சமயம் ரம்பையைச் சந்தித்த ராவணன் அவள் அழகால் கவரப் பட்டு அவளை அடைய விரும்ப அவளோ, குபேரன் மகன் ஆன நலகூபரன் மனைவி நான். ஆகவே தங்கள் மருமகள் ஆகின்றேன். என்னை மன்னிக்கவும் எனக் கூறி வேண்டுகின்றாள். ஆனாலும் ராவணன் பலாத்காரமாய் அவளை அடையவே, கோபமும், வருத்தமும் கொண்ட ரம்பை, தன் கணவன் நலகூபரனிடம் முறையிட அவன், தண்ணீரைக் கையில் எடுத்துக் கொண்டு, பெரும் கோபத்துடன், முறைப்படியான மந்திரங்களைக் கூறி, ராவணன் இனி ஒரு முறை விரும்பாத பெண்ணை மானபங்கப் படுத்தினால் அவன் தலை சுக்குநூறாகட்டும்!" எனச் சபிக்கின்றான்.

2 comments:

  1. கீதா,வெகு அழகான படம். எங்கப்பா கிடைச்சது.
    மேலும் மேலும் வியக்க வைக்கிறது உங்கள் கற்றறியும் திறன்.!!

    இலகுவாக எழுத்து செல்கிறது.
    ராவணன் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே இருந்த ஒரு தாமரை மலரில் ஒரு அழகிய பெண் தோன்றினாள். //ராவணன் அந்தப் பெண்ணின் கரத்தைப் பிடித்து பலாத்காரமாய் இழுத்து இலங்கைக்குக் கொண்டு செல்கின்றான். அங்கே ஜோதிட வல்லுனர்களும், சாமுத்ரிகா லட்சணம் தெரிந்தவர்களும், "இந்தப் பெண்ணின் லட்சணங்களைப் பார்த்தால் இவள் உன் அழிவுக்குக் காரணம் ஆவாள் //

    நினைக்கவே நடுக்கமாக இருக்கிறதே கீதா.

    இத்தனைக்கும் அது திரேதாயுகம்!
    முடிந்த வரை படித்துவிடுகிறேன். மிக்க நன்றிம்மா.

    ReplyDelete
  2. ராவணனுக்கு தலை சுக்கு நூறாக வெடிக்கும் சாபம் எதனாலன்னு தெரிந்தது...நன்றி. :)

    படங்களூம் சூப்பர்.....

    ஆனா என்ன ரொம்ப பெரிய பதிவு...கொஞ்சம் சின்னதா போடக்கூடாதா?

    ReplyDelete