அஹல்யை செய்தது என்னமோ மாபெரும் தவறு. ஆனால் அதற்கு ராமர் மன்னித்து அருள் புரிவதும், அவளைத் திரும்ப கெளதமர் ஏற்றுக் கொண்டதும், சரியா என்ற தர்ம சங்கடமான கேள்வி எழும். அஹல்யை தவறுதான் செய்தாள். துளசி ராமாயணத்தில் இந்த விஷயமே வரலைனு நினைக்கிறேன். கம்பர் இவளை ஒரு கல்லாக மாறினாள் என்று சொல்கின்றார். ஆனால் வால்மீகி ராமாயணப் படி இந்தக் கல் எல்லாம் ஒன்றும் கிடையாது. யார் கண்ணிலும் படாமல், உணவே இல்லாமல், தூசியைப் போல் மறைந்து இருக்கத் தான் சாபமே. அந்தத் தண்டனையும் பல நூற்றாண்டுகளுக்கு நீடிப்பதாய்த் தெரிகின்றது. ஆகையால் இது அவளுக்கு இன்னொரு பிறவியே அல்லவா? அந்தக் காரணம் தொட்டும், மன்னிப்பது தேவர் குணம் என்பதாலும் ஸ்ரீராமனின் அருள் கிட்டியதாலும் அவளுக்குப் பெரும் பேறு கிட்டுகின்றது. மேலும் கம்பர், கெளதமர் இந்திரனுக்குக் கொடுத்ததாய்ச் சொல்லும் சாபமே வேறு, அகலிகையும் கல்லாக மாறியதாய்ச் சொல்கின்றார். மனிதர்களாய்ப் பிறந்த அனைவருமே ஒரு சமயம் செய்யும் தவறுகளையும், என்றாலும் அவற்றுக்கும் விமோசனம் இருப்பதையுமே இது சுட்டிக் காட்டுவதோடு தவறு செய்த பெண்ணை மன்னித்து ஏற்றுக் கொள்ளவும் வைக்கின்றது. இனி மிதிலையில் என்ன நடக்கின்றது?
மிதிலையை வந்தடைந்த ராம, லட்சுமணர்கள் விசுவாமித்திரருடன் யாக சாலையை அடைகின்றார்கள். ஜனக மகாராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்று, உபசரித்து விட்டுப் பின்னர் இந்த இரு இளைஞர்களின் வரலாறு என்ன என விசுவாமித்திரரைக் கேட்க அவரும், ராம, லட்சுமணர்களின் வம்சத்தைப் பற்றியும், தான் உதவிக்கு அழைத்து வந்ததையும், அவர்கள் செய்த உதவியையும், வரும் வழியில் அகலிகைக்கு அவர்கள் செய்த உதவியையும் கூறினார். உடனேயே அங்கிருந்த சதானந்தர் என்னும் அகலிகை- கெளதமரின் புத்திரன் மனமகிழ்ந்து விசுவாமித்திரரின் வரலாற்றை ராம, லட்சுமணர்கள் மற்றும் மற்ற சபையோர் அறியும் படி எடுத்து உரைத்தார். கெளசிக தேசத்து மன்னனாகிய விசுவாமித்திரர், வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்த வேளையில் வசிஷ்டரின் பசுவாகிய சபலை வந்த அரச பரிவாரத்தை உபசரித்ததையும் பார்த்து, அந்தப் பசுவைக் கேட்டதையும், வசிஷ்டர் மறுக்கவே, கோபத்துடன் போர் புரிந்ததையும் அனைத்துப் போர் முறைகளையும் அந்தப் பசுவின் துணை கொண்டே வசிஷ்டர் முறியடித்ததையும், அதைக் கண்டு அரச பதவியைத் துறந்து கடும் தவங்கள் பல செய்து, தேவர்களின் சூழ்ச்சியினால் பல முறை தவ வலிமை இழந்தும் மீண்டும், மீண்டும் விடாமல் தவம் செய்து வசிஷ்டர் வாயாலேயே பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினதையும் எடுத்துச் சொல்கின்றார். பின்னர் மறுநாள் விசுவாமித்திரர் ஜனகரிடம் சிவ தனுசுவைக் காட்டச் சொல்கின்றார். அதற்கு முன்னர் அதன் வரலாற்றைக் கூறுகின்றார் ஜனகர். தட்ச யாகத்தின் போது சிவனுக்கு நேர்ந்த அவமதிப்பைக் கண்டு பொறுக்காத சதியானவள் நெருப்பில் வீழ்ந்ததும் கோபம் கொண்ட ஈசன் தன் வில்லினால் அந்த யாகத்துக்குச் சென்ற தேவர்கள் அனைவரையும் கொல்ல யத்தனித்த வேளையில் தேவர்கள் மனம் உருகிச் சிவனை வேண்டிக் கொள்ள, மனம் மாறிய பரமேசன் அந்த வில்லைத் தேவர்களிடமே கொடுத்து விடுகின்றார். தேவர்கள் அந்த வில்லை ஜனகரின் மூதாதையரில் ஒருவரான தேவராதன் என்பவருக்கு அளிக்கின்றனர்.
அதிலிருந்து அந்த வில் ஜனகரின் குடும்பத்திலேயே இருந்து வருகின்றது. இது இவ்வாறிருக்க ஜனகர் மேலும் தொடர்கின்றார்:“முன்பொரு முறை யாகம் செய்வதற்காக நிலத்தை நான் உழுது கொண்டிருந்த சமயம் அந்த நிலத்தில் இருந்து ஒரு பெண் தோன்றினாள். எந்தக் கர்ப்பத்திலும் வசிக்காமலேயே பிறந்த அந்தப் பெண்ணை என் பெண்ணாக நான் ஏற்றுக் கொண்டேன் அவளுக்குத் திருமணப் பருவம் வந்து விட்டது. ஆகவே இந்த சிவ தனுசை எவர் கையில் எடுத்து நாணேற்றுகின்றார்களோ அவர்களுக்கே என் பெண்ணாகிய இந்தச் சீதையை மணமுடித்துத் தரப் போவதாய் அறிவித்துள்ளேன். இந்த ராமர், இந்த வில்லை எடுத்து நாணேற்றுகின்றாரா எனப் பார்க்கலாம். இதுவரையிலும் பல தேசத்து மன்னர்களும், தேவாதி தேவர்களும், வந்து இந்த வில்லை நாணேற்ற முயன்று பார்த்து விட்டார்கள். எவராலும் முடியவில்லை.மனித சக்திக்கு அப்பாற்பட்டதான இந்த வில்லில் நாணேற்றுவது ராமனால் முடியுமா என்பது சந்தேகமே, ராஜகுமாரர்கள் இந்த வில்லைப் பார்க்கட்டும்” என்று சொல்லவே நூற்றுக் கணக்கான வீரர்கள் வில் வைக்கப் பட்டிருந்த பெட்டியை இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தனர்.
விசுவாமித்திரரும், ஜனகரும் சம்மதம் தெரிவிக்க மிகச் சாதாரணமாக ஒரு விளையாட்டுப் போல் அந்த வில்லைக் கையில் எடுத்த ராமர் அதன் நாணை ஏற்றும் போது வில் பலத்த சத்தத்துடன் முறிந்து விழுந்தது. எட்டுத் திசைகளும், மலைகளும், நெருப்பைக் கக்கும் எரிமலைகளும், ஆறுகளும், சமுத்திரங்களும் ஒரு க்ஷணம் தங்கள் போக்கை நிறுத்திக் கொண்டதாய்த் தோன்றியது. பின்னர் சுதாரித்துக் கொண்ட ஜனகர் மிகுந்த சந்தோஷத்துடன் ராமருக்குத் தன் பெண்ணாகிய சீதைத் தர இசைகின்றார். உடனேயே ஜனகரின் மந்திரி பிரதானிகளால் அயோத்திக்குச் செய்தி சொல்ல ஆட்கள் தயார் செய்யப் பட்டனர். அயோத்திக்குச் சென்ற அவர்கள் தசரதனிடம் விஷயத்தைச் சொல்ல தசரதனும் மனம் மகிழ்ச்சியுடனேயே அதை ஏற்றுக் கொண்டு அயோத்தியில் இருந்து தன் பரிவாரங்கள் புடை சூழ மிதிலை புறப்படுகின்றான். ஜனகரைக் கண்டு பேசுகின்றான். தன் குல குருவான வசிஷ்டரை முன்னிறுத்திக் கொண்டு தசரதன் பேசும் போது ஜனகரும் தன்னுடன் தன் பரிவாரங்கள் மட்டுமின்றித் தன் தம்பியான குசத்வஜனையும் உடன் அழைத்துக் கொள்கின்றார். பின்னர் தசரதனிடம் ராமனுக்கு, சீதையையும், லட்சுமணனுக்கு த் தன் வயிற்றில் பிறந்த பெண்ணான ஊர்மிளையையும் திருமணம் செய்து தருவதாய்ச் சொல்கின்றார். இதைக் கேட்ட விசுவாமித்திரர் உடனேயே ஜனகரிடம் உன் தம்பியின் மகள்களான மாண்டவியையும், ச்ருதகீர்த்தியையும் முறையே பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் திருமணம் செய்விக்கும்படிச் சொல்லத் தன் தம்பியையும் கலந்து ஆலோசித்த ஜனகர் அதற்குச் சம்மதம் தெரிவிக்கின்றார். பின்னர் நான்கு திருமணங்கள் இந்த ஏற்பாட்டின்படி நடக்கின்றது. திருமணம் நடைபெறும் வரை ராமனோ, சீதையோ ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை என்பதே வால்மீகி சொல்வது. ஆனால் கம்பரோ என்றால் “மிதிலைக் காட்சிப் படலம்” 519-ம் செய்யுளில் இவ்வாறு கூறுகின்றார்.கம்பர் கூற்றுப் படி ராமன் கன்னிமாடத்தில் இருக்கும் சீதையைக் கண்டு அவள் யாரெனத் தெரியாமலேயே காதல் கொள்ளுகின்றான். சீதையும் அவ்வாறே காதல் கொள்கின்றாள்.
“எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன
வீக்கிய கனை கழல் வீரன் செங்கணும்
தாக்கு அணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே!”
மனதால் எண்ணிப் பார்க்கவும் முடியாத பேரழகே பெண்ணாய் உருவெடுத்த சீதையைக் கன்னிமாடத்தில் நிற்கும்போது கண்ட ராமனின் விழிகளோடு சீதையின் விழிகளும் மோத, இருவரும் ஒருவரை ஒருவர் விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டதோடல்லாமல் இருவரது அறிவும் ஒரு நிலையிலும் இல்லை. கூர்மையான வேல் போன்ற கண்களை உடைய சீதையின் பார்வையானது ராமனின் தோள்களில் தைக்கின்றது. மிக மிக ஆழமாய்த் தைத்தது. அதே போல் ராமனின் பார்வையும் சீதையின் மார்பில் பட்டுப் பதிந்தது. சீதை வால்மீகி ராமாயணத்திலும் சரி, மற்ற ராமாயணங்களிலும் சரி, ராமனைத் தவிர மற்றவரை நினைத்தது கூட இல்லை. ஒரு பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாகாவே சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றாள், அதற்காகத் தான் எந்தவிதத் தியாகமும் செய்யத் தயாராகவே இருப்பதாயும் தெரிவிக்கின்றாள். தியாகமும் செய்கின்றாள். முதலில் கணவனுக்கு வந்த ராஜ்ய பதவியைத் துறந்து காட்டுக்குச் செல்லும்போது அவனுடனேயெ செல்கின்ற போதும் சரி, பின்னர் வந்த நாட்களில் கணவனின் அடி ஒற்றி நடந்த போதும் சரி, ராவணனால் பலாத்காரமாய்த் தூக்கிச் செல்லப் பட்ட போதும் சரி, பின்னர் அங்கே ராமஸ்மரணையோடே இருந்த போதும் சரி, பின்னர் ராமனால் ராவணன் வதம் செய்து வந்தபின்னர், ராமனால் அக்னிப்ரவேசம் செய்யும் படிப் பணிக்கப் பட்டபோதும் பின்னர் ராமன் அவளைத் துறந்த போதும் ஒரு கணமும் அவள் தன் கணவனைக் குறை கூறவில்லை. தூற்றவில்லை. கணவன் சொல்வதைச் செய்வதே தன்னுடைய தர்மம், என்றும் அதுவே கணவனுக்குச் செய்யும் உதவி எனவும் எண்ணினாள். ஆனால் சீதையும் ராமனை எதிர்த்து வாதாடியும் இருக்கின்றாளே? கொஞ்சம் பொறுத்தால் தெரியும்.
//ஆனால் வால்மீகி ராமாயணப் படி இந்தக் கல் எல்லாம் ஒன்றும் கிடையாது. யார் கண்ணிலும் படாமல், உணவே இல்லாமல், தூசியைப் போல் மறைந்து இருக்கத் தான் சாபமே. //
ReplyDeleteஎனக்கு இது புதிய தகவல். நன்றி!!;-)
பி.கு.: ஆனாலும் ரொம்பவும் கிறுக்குத்தனமா கேட்கிறேனேன்னு நினைக்காதீங்க! தொலைக்காட்சித்(ஹிந்தி) தொடராக வந்த பொழுதும், கல்லாக இருப்பது போல் காட்டியதாகத்தான் ஞாபகம். அவர்கள் இங்கே வந்து, நமது கம்பரை ரெஃபர் பண்ணியிருக்க நியாயமில்லை. துளசிதாசரிலும் கிடையாதென்கிறீர்கள். அப்புறம் எப்படி கல்லைக் காட்டினார்கள்?!?!
(Just to improve my knowledge!);-)